SY11

SY11

சரி © 11

வேலை முடிந்து யோகியை அழைத்துப் பேசிய சித்துவுக்கு, யோகி அறைக்கு வர தாமதமாகும் என தெரிய வந்தது.

 

அதனால், அறைக்குச் செல்லாமல், வழியில் அவர்கள் வழக்கம்போல் தேநீர் பருகும் கடையில் நின்று மாலை செய்தித்தாள்களைப் புரட்டிக்கொண்டு தேநீர் அருந்திக்கொண்டிருந்தான்.

 

இரண்டு நாட்களாக, தோழிகள் யாரும் அவர்களை தொடர்புகொள்ளாதது இருவருக்கும் மனதில் கவலையை வரவழைத்திருந்தது. அன்று நடந்த நிகழ்வினால் ஏதும் பயந்திருப்பார்களோ என்றுகூட எண்ணத் தோன்றிற்று.

 

சென்ற முறை தாய் பாமாவுடன் பேசும்போது, அவர்கள் சென்று வந்த திருமணத்தில் பலபேர் சித்துவின் கல்யாணத்தைப் பற்றிக் கேட்டார்கள் என்று அவர் கூறியது திடீரென அவன் நினைவலைகளில் வந்து போயிற்று.

 

அப்பொழுது அந்த வழியோ, யாஷிகா டூவீலரில் போவதைப் பார்த்தான். அவள் எங்கே செல்கிறாள்? ஒருவேளை தங்கியிருக்கும் அறைக்குத்தான் என்றால் அதைப் பற்றித் தெரிந்துகொள்வோமே என்ற உந்துதல் அவனுள் ஏற்பட, தன் வாகனத்தை எடுத்துக்கொண்டு அவளைப் பின்தொடர்ந்தான்.

 

சிறிது தூரம் சென்ற யாஷிகா, சாலையின் எதிர் வரிசையில் இருந்த தன் விடுதியை அடைய எண்ணி, திரும்புவதற்காக பின்னால் வரும் வாகனங்களைப் பார்க்க, தன் பின்புறக் கண்ணாடியைப் பார்த்தாள்.

 

அதில், சிறிய இடைவெளியில் சித்து வருவதை பார்த்தவுடன், தன் வண்டியின் வேகத்தை குறைக்காமல், சம்யுவின் வீட்டிற்கு வண்டியை செலுத்தினாள் யாஷிகா. சித்து இதை அறியாமல் அவளைப் பின்தொடர்ந்தான்.

 

சம்யுக்தாவின் வீட்டிற்கு வந்தவுடன், வண்டியை வெளியில் நிறுத்துவிட்டு, உள்ளே சென்று சம்யுக்தாவைத் தேடினாள். தம்பி திலீபன்தான் ஹாலில் அமர்ந்து தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

 

ஹாய் தம்புடு, ஹவ் ஆர் யூ?, யாஷிகா.

 

ஹலோக்கா, சண்டே பீச்ல ஒரே கொண்டாட்டமா?, திலீப்.

 

அய்யோ, எல்லாத்தையுமே சொல்லிட்டாளோ!என்று எண்ணிக்கொண்டு, அவனையே ஆழமாகப் பார்த்து, என்ன சொன்னா ஒங்கக்கா?, என்று கேட்டாள்.

 

அதற்குள், அறையின் கதவு திறக்கப்பட்டு, சம்யுக்தா வெளிப்பட்டாள். அவள் கண்களில், அந்த நேரத்தில் யாஷிகாவை எதிர்பார்க்காதது அப்பட்டமாகத் தெரிந்தது.

 

ஹாய்டீ, எப்டிகீற? இன்னா மேட்ரு?, என்றாள் சென்னை மொழியில், ஜாலியாக.

 

ஒன்னுமில்ல, லேசா தலைவலி. அதான் அம்மா கையால ஒரு டீ சாப்டு போகலாம்னு வந்தேன். அம்மா எங்க?, யாஷிகா.

 

இன்னேரத்துல டீயா?, சந்தேகமாகக் கேட்டாள் சம்யு.

 

இல்லை என்பதுபோல் செய்கையால் கூறியவள், வண்டிவேற கொஞ்சம் மக்கர் பண்ணுது. இரு பாத்துட்டு வறேன், என்று கூறிக்கொண்டே வெளியில் நடந்தாள்.

 

அவளை பின்தொடர்ந்தாள் சம்யுக்தா. வெளியில் வந்ததும் யாஷிகா இரு திசையிலும் யதேச்சையாக பார்ப்பதுபோல் பார்த்துக்கொண்டே வண்டியை நோக்கி நடந்தாள்.

 

ஏய், என்னடி செய்ற! ஒரே அல்லா இருக்கு, சம்யு.

 

ஒன்னோட அல்லுதான் வந்துருக்காரு, படக்குன்னு பாக்காத, பதட்டமாயிருவாரு, என்றவாறு சம்யுக்தாவை வண்டிக்கு அருகில் அழைத்து வந்து இந்தா பாத்துக்கோங்க ஒங்காள என்பதுபோல் சற்று தொலைவில் நின்றிருந்த சித்துவைப் பார்த்தாள்.

 

சித்துவும், சம்யுவும் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்துக்கொண்டனர். ஆனால் சம்யு பதறினாள், ஏன்டீ வீட்டுக்கே கூட்டிகிட்டு வந்து…”, என்று கூறிக்கொண்டே, தொலைவில் நின்ற சித்துவைப் பார்த்து புன்னகைத்தாள்.

 

யாஷிகா கைப்பையில் இருந்த அலைபேசியை எடுத்து, சித்துவை அழைத்தாள், என்ன! வீட்டப் பாத்தாச்சா? அடுத்தகட்ட நடவடிக்கையா, குடும்பத்தோட, தாம்பாளம் எல்லாம் எடுத்துகிட்டு கிளம்பி வந்துற வேண்டியதுதான!, என்று இடைவெளி விடாமல் பேசினாள்.

 

வந்துட்டாப் போச்சு, என்று மறுமுனையில் ஒத்துக்கொண்டான் சித்து. பார்வை மட்டும் சம்யுக்தாவை விட்டு அகலவில்லை.

 

கிளம்பலாமே!

 

போகனுமா? ஒடனே போய்றனுமா?

 

சரி, நீங்க நில்லுங்க நாங்க போறோம், என்று சம்யுக்தாவை வீட்டிற்கு உள்ளே இழுத்தாள் யாஷிகா. ஆனால், அவளால் இழுக்க முடியவில்லை. ஸ்திரமாக நின்றாள் சம்யுக்தா.

 

அலைபேசியை மீண்டும் கைப்பைக்குள் வைத்துவிட்டு, இரு கைகளாலும் சம்யுக்தாவை இழுத்துக் கொண்டு, வீட்டிற்கு உள்ளே வந்தாள் யாஷிகா.

 

எதிரில் தாயார் அனுசியா வந்துவிட்டார். என்ன யாஷிகா, ஏதோ தலைவலின்னு சொன்னியாமே?, என்றாள்.

 

ஆமாம்மா. இப்ப சரியாயிருச்சு, என்று சம்யுக்தாவைப் பார்த்தாள்.

 

கொன்றுவேன், உள்ள வாடி, என்று அதட்டிய சம்யு, இப்போது தன் பங்குக்கு யாஷிகாவை இழுத்துக்கொண்டு அறைக்குச் சென்றாள்.

 

வழியில், அம்மா, அவளுக்கு டீ வேண்டாம். நல்லா டின்னர் ரெடி பண்ணுங்க, என்று தாயாருக்கு உத்தரவு பிறப்பித்துச் சென்றாள்.

 

என்னடா இதுக, ஒன்னு டீங்குது, ஒன்னு டின்னருங்குது! ஒன்னுமே புரியலையே?, தாயின் புலம்பலை யாரும் கேட்கவில்லை.

 

அறையினுள் சம்யுக்தா, என்னடீ, திடீர்னு இப்டி ஒரு சர்ப்ரைஸ் கொடுத்துட்டு, நீயே ஒடனே கட் பண்ணிட்டியே! என்று யாஷிகாவிடம் பொய்யாக கோபித்துக்கொண்டாள்.

 

கட் பண்ணலன்னா, வெளில வந்த அம்மாட்ட நா இல்ல மாட்டிருப்பேன்!, யாஷிகா.

 

ஆமால்ல! சரி, என்ன விசயமா வந்தாராம்?, சம்யு.

 

அவரெங்க ஒன்னப் பாக்க வந்தாரு!, என்று பேச்சில் இடைவெளிவிட்டு சம்யுவையே பார்த்தாள் யாஷிகா.

 

அப்ப, இங்க யாரப் பாக்க வந்தாராம்?

 

என்னப் பாக்கத்தான்!

 

ஏய், வெளையாடாத. ஒழுங்கா கட் பண்ணாம கோர்வையா சொல்லு. என் செல்லம்ல!, என்று கொஞ்சினாள் சம்யு.

 

நா டூட்டி முடிஞ்சி ஹாஸ்டலுக்குத்தான்டீ வந்துகிட்டு இருந்தேன். ரிவர் வியூவ்ல பாத்தா ஒன்னோட ஆளு! என்ன நெனச்சு என்ன ஃபாலோப் பண்ணாரோ தெரியல. ஆனா, எனக்கு திடீர்னு ஒரு ஐடியா தோனுச்சு. அப்டியே கூட்டிட்டு வந்து ஒங்க வீட்டக் காமிச்சிட்டா, எனக்கும் ஒரு வேல முடிஞ்சிரும்ல. நா இருக்குற ஹாஸ்டலயும் அவர்கிட்ட இருந்து மறச்சிடலாம்ல! அதுக்குத்தான், என்றாள் நீளமாக.

 

நீங்க மறச்சிட்டாலும்! இந்தா இப்பவே ஃபோனப் போட்டு சொல்றேன். லேண்ட்மார்க்கோட ஒன்னோட அட்ரச அனுப்பறேன்

 

அனுப்பேன்டீ! யாருக்கு பயம்? அவருக்கு ஒன்னயக் காமிக்கலாமேன்னுதான் இழுத்துகிட்டு வந்தேன். மத்தபடி நீ நெனக்கிற அளவுக்கு எனக்கொன்னும் பயமில்ல

 

ஓ! அப்படியா, சரிடீ, சாரிடீ! என்று சரண்டர் ஆனாள் சம்யு.

 

சரி கிளம்பறேன். நேரமாச்சு, ஹாஸ்டல் வாடர்ன் கத்த ஆரம்பிச்சுரும்

 

சாப்டு போகலாம்டீ. அம்மாட்ட சொல்லிட்டேன்

 

வா, போய் அம்மாட்ட ரெண்டு வார்த்த பேசிட்டு, அப்படியே என்ன நெலவரம்னு பாத்துட்டு, அதுக்கேத்த மாதிரி சீன முடிப்போம், என்று யாஷிகா சம்யுக்தாவை அழைத்துக்கொண்டு, ஹாலைக் கடந்து அடுப்படிக்குச் சென்றாள்.

 

தாயார் அடுப்படியில் இரவு உணவு தயாரிப்பதில் மும்முரமாக இருந்தார். இவர்களைக் கண்டதும், மலர்ந்த முகத்துடன், டிபன் ரெடியாயிடும், சாப்டு யோயிரு யாஷிகா, என்றார் அனு.

 

இருக்கட்டும்மா, இன்னொரு நாளைக்கு வந்து விருந்தே சாப்டுக்கிறேன், என்று கூறிக்கொண்டே சம்யுக்தாவைப் பார்த்தாள் யாஷிகா.

 

விருந்து வைக்கும்போது உன்னக் கூப்புடாமயா? அப்பப் பாத்துக்கலாம், இப்ப இருக்கறத சாப்பிட்டு கிளம்பு, அனு.

 

இல்லம்மா, நேரமாச்சுன்னா வாடர்ன் திட்டுவாங்க, யாஷிகா.

 

நா வேணா ஃபோனப் போட்டு சொல்றேன், சரியா? இரு உங்கிட்ட கொஞ்சம் பேசனும், அனு.

 

ஆச்சரியத்தில் இரண்டு தோழிகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

 

இந்த பச்ச மண்ணுகிட்ட என்ன பேசப்போறீங்க மம்மி?, என்று சந்தேகமாய் கேட்டாள் சம்யுக்தா.

 

இதுவா பச்ச மண்ணு!, அனு.

 

என்னம்மா சொல்லுங்க, யாஷிக.

 

நானுந்தான் கவனிச்சுகிட்டு வரேன், இப்பல்லாம் அடிக்கடி ரூமுக்குள்ள போய் கதவடச்சுக்கிட்டு ரொம்ப நேரம் டிஸ்கஸ் பண்றீங்க! அன்னக்கி நா டீக் குடுக்க வரும்போதுகூட மூனுபேரும் தரையில ஒக்காந்துகிட்டு, அய்யோ! அந்த முழியே சரியில்ல. அப்படி என்ன பேசி முடிக்கிறீங்க?

 

அது, நாங்க பீச்சுக்கு போறதப் பத்தி தானம்மா டிஸ்கஸ் பண்ணிட்டிருந்தோம், யாஷிகா.

 

சரி அத விடு. இப்ப உள்ள வந்த, தல வலிக்கிது, டீ வேணும்னு சொன்னவ, வெளில போய்ட்டு வந்து, தலவலி போயே போச்சு, இட்ஸ் கான், அப்டிங்கற!, அனு.

 

அம்மா, இப்பத்தாம்மா, தல வலிக்குதும்மா, ஏதாவது குடுங்க, எத வேணாலும் குடுங்க. சாப்டு போய்ட்டே இருக்கேன். ஆனா, கேள்வியா கேக்காதீங்க! என்று ஆரம்பித்த இடத்திற்கே வந்தாள் யாஷிகா.

 

பக்கவாட்டில் நின்ற சம்யுக்தாவைப் பார்த்து, இது எனக்கு வேணும், வேணும்டீ என்று நினைத்துக்கொண்டாள்.

 

அதற்குமேல் அனுசியாவும் ஒன்றும் கேட்கவில்லை. ஆனால், இவர்களை இப்படியே விடக் கூடாது என்பதில் மட்டும் கவனமாக இருந்தார்.

©©¨©©

 

அறைக்குச் சென்றவுடன் முதல் வேலையாக, சித்து சம்யுக்தாவை தொடர்புகொண்டு பேசினான். சம்யு அலைபேசியை எடுத்ததும், எதிர் பாக்கலீல்ல, நா வருவேன்னு எதிர் பாக்கலீல்ல?, என்றான்.

 

சூர்யா மாதிரி இல்ல! வீணா ட்ரைப் பண்ணி நேரத்த வேஸ்ட் பண்ணாதீங்க என்று எதிர்முனையில் சம்யு அவசரமாக பேசினாள்.

 

ஏன் சம்யு, இவ்ளோ அவசரமா பேசுற? லாஸ்ட் சண்டே பாத்தது, பேசுனது. அப்பறம் பாக்கவோ, பேசவோ இல்லையே!, சித்து.

 

ஆமா, இப்பல்லாம் அம்மா என்ன தனியாவே விட மாட்டேன்றாங்க. ரூம்ல இருந்தாக் கூட ஏதாவது வந்து கேட்டுட்டு கதவ சாத்தாம, தெறந்தே வச்சுட்டு போறாங்க

 

டவுட் வந்துருச்சு சம்யு

 

அதான், எனக்கும் தோனுது

 

இப்ப என்ன பண்ணலாம்?

 

இப்ப என்ன பண்ணனும்?

 

பேசுறதுல எனக்கு ஒன்னும் பிரச்சினையில்ல. நீ வேணா பாத்ரூம்ல இருந்துகிட்டு பேசலாமே?

 

அதெல்லாம் எதுக்கு சித்து. பேசுனாத்தான் நம்ம அன்பு வளருமா என்ன? நாம கொஞ்ச நாள் அடக்கி வாசிப்போம். நீங்க ஒங்க ஜாப்ல கான்சன்ட்ரேட் பண்ணுங்க. நீங்க எப்ப கல்யாணம்னு சொன்னாலும் நான் ரெடி. மொதல்ல ஒங்க பக்கம் எல்லாத்தையும் சரிபண்ணுங்க. என் பக்கம், எனக்கு கல்யாணம் அது, இதுன்னு, எந்த கம்பல்ஷனும் இல்லாம நா பாத்துக்கறேன். ஓக்கேவா?

 

நீ சொல்றதெல்லாம் சரிதான். ஆனா, பாக்காம, பேசாம, எப்படி?

 

டெய்லி ஒங்கம்மாவ பாத்துகிட்டு, பேசிகிட்டு இருக்கீங்களா?

 

இல்ல, ஆனா அது வந்து…”

 

இல்லன்னா, அப்ப ஒங்களுக்கு அம்மா மேல அன்பு இல்லையா? இல்ல அந்த அன்புதான் தேஞ்சுட்டே வருதா? ஆனா, லவ் பண்ணா மட்டும், ஒரு நாளைக்கு பத்து தடவ கூட பேசுறாங்க. ஏன்?

 

அதான ஏன்?

 

ஒங்களுக்குத் தெரியாததா என்ன? அம்மா பழசு, ஆனா காதலியோ, காதலனோ புதுசு. ஒருத்தருக்கொருத்தர் இம்ப்ரஸ் பண்ணிட்டே இருக்கணும்னு நினைக்கறாங்க. பேசுனாத்தான் அன்பு நெலச்சுருக்கும், வளரும்னு தப்புத் தப்பா யோசிக்கிறாங்க! ஆனா உண்மையான அன்புக்கு அதெல்லாம் தேவையில்ல சித்து

 

புரியுது, காதல்கோட்டை அஜீத் மாதிரி என்னைய இருக்கச் சொல்ற

 

நாமதான் ஏற்கனவே, பாத்தாச்சு, பேசியாச்சு. ஏன், நல்லா பழகியாச்சு! அப்பறம் என்ன? அடுத்து என்ன செய்யனுமோ அதநோக்கி காய நகத்தனும். அதுக்கு நாள் கணக்கோ, மாதக்கணக்கோ ஆகலாம். ஆனா, வருஷக் கணக்கா ஆக்கீறாதீங்க. அதுக்காகத்தான் இவ்ளோ நேரம் நீளமா பேசிகிட்டு இருக்கேன்

 

ஷ்யூர் சம்யு. ஐல் டு மை லெவல் பெஸ்ட்

 

இந்த ரெஸியூம் சென்ட்டன்ஸெல்லாம் வேண்டாம்! சீக்கிரமா ஆக வேண்டியத பாப்போம். ஓக்கே?

 

ஓக்கே!

 

ஓக்கே, பை! அம்மா வந்துறப் போறாங்க, நா வைக்கிறேன்

 

ஓக்கே, பை, என்று சித்து உற்சாகமாக அலைபேசியை வைத்தாலும், உள்ளுக்குள் உற்சாகம் குறைந்தே காணப்பட்டான்.

©©¨©©

 

சித்து-சம்யு உரையாடலுக்கு பின்பு, தோழர்களுடன் தோழிகள் தொடர்புகொள்வதில்லை. நட்பில் மந்த நிலை நீடித்தால் நன்றாயிருக்காது என யூகித்த யோகி, ஒருநாள் மாலை வேளையில், தன் பணிகளை முடித்துவிட்டு, அறைக்குக் கிளம்பும் முன்பு, ரிதுவை அலைபேசியில் அழைத்தான். 

 

ஹாய் ரிது, ஹவ் ஆர் யூ, யோகி.

 

ஹாய் யோகி, என்ன ரொம்ப பிஸியா? சித்துவும் கால் பண்றதில்லைன்னு கேள்விப்பட்டேன், என்றாள் சகஜமாக.

 

ஒங்க ஃப்ரண்ட் ஒன்னுமே சொல்லலயா?

 

என்ன, எதப்பத்தி?

 

அவங்கதான கால் பண்ணி பேசுனாத்தான் காதலான்னு கேட்டு கன்ஃப்யூஸ் பண்ணி வச்சுருக்காங்க!

 

யாரு, சம்யுவச் சொல்றிங்களா? அது அவங்களுக்கு இடையில உள்ள அன்டர்ஸ்டான்டிங். அதுனால நமக்கென்ன!

 

அதுனாலதான் நாங்க கால் பண்றதில்ல. நாங்க கால் பண்ணாததால நீங்களும் பண்றதில்ல. அதுனால நாங்க பிஸி மாதிரி உங்களுக்குத் தெரியுது. ஆக்ச்சுவலா நா கொஞ்சம் பிஸிதான்! தெரியுமா?, யோகியும் தன் பங்குக்கு படபடவென பேசினான்.

 

பிஸியா இருக்கறது நல்ல விசயம் தான! சரி அப்டி பிஸியா நீங்க என்ன பண்றீங்கன்னு நா தெரிஞ்சுக்கலாமா?

 

எங்க பாஸ் எனக்குன்னு ஒரு புது ப்ராஜெக்ட் கொடுத்து அதுல மட்டும் கான்சன்ட்ரேட் பண்ணுன்னு சொல்லிருக்கார். அவருக்கு இது புது பிஸினஸ். அதுனால என்னையே ஃபுல்லா ஸ்டடி பண்ணச் சொல்லி, என்னை மட்டுமே முழுசா நம்பி ஆரம்பிக்கப் போறாராம்

 

ஓ! வெரி நைஸ்!

 

நைஸ், பட் சில நேரங்கள்ல எனக்கு டென்சனா இருக்கு, தெரியுமா?

 

நோ ஒரி யோகி! எல்லாமே நல்லபடியா நடக்கும்

 

இந்தமாதிரி நல்ல வார்த்த கேக்குறதுக்குத்தான, ஒருத்தருக்கொருத்தர் கான்ட்டாக்ட்ல இருக்கறதே, என்று யோகி பேச்சின் ஊடே கருத்தைப் புகுத்தினான்.

 

சரி, ஒங்க டென்ஷனக் கொரைக்க, ஒரு கெட்டுகதர் அரேஞ்ச் பண்ணலாமா?, ரிது.

 

ஓ! பண்ணலாமே. இதுக்குத்தான ரிதுக்கு கால் பண்ணதே, யோகி உற்சாகமானான்.

 

என்ன இது, ரிதுன்னு இலக்கணம் விளையாடுது

 

யு ஆர் த ரீசன்

 

இஸ் இட்!

 

யா, அப்சலியூட்லி

 

ஓக்கே, ஐல் அரேஞ்ச் த பார்ட்டி, திஸ் டைம், எனி கொரீஸ்?, என்று ரிது தானே வழிய வந்து, விருந்து வைப்பதாக ஒத்துக்கொண்டாள். 

 

டபுள் ஓக்கே! சித்துட்ட கன்வேப் பண்ணிறவா, இல்ல நீங்க சொல்றீங்களா?

 

அதுக்குத்தான் வேற ஆள் இருக்குல்ல!

 

சரி, எங்க, எப்போ மீட் பண்ணலாம்?, யோகி சுருக்கமாக கேட்டான்.

 

கமிங் சண்டே ஈவினிங், வென்யூ சஸ்பென்ஸ், ரிது.

 

அட்லீஸ்ட், எனி லேண்ட்மார்க், ப்ளீஸ், என்று அவர்கள் கூடும் இடத்திற்கு ஏதாவது அடையாளமாவது கேட்டான் யோகி.

 

நம்ம ஆக்ஸிடென்ட் ஜோன் ஞாபகம் இருக்கா?, என்று ரிது கேட்டு ஆச்சரியப்படுத்தினாள்.

 

அய்யோ! மறக்க முடியுமா? ஆனா அங்க எப்படி?, யோகி.

 

ஏன், பயமா இருக்கா?, ரிது.

 

இல்லையே! இல்லவே இல்ல!

 

அப்ப அங்க வாங்க, அதுக்கப்பறம் கால் பண்ணுங்க, ரிது முடிவாகச் சொன்னாள்.

 

முதல் அத்தியாயம் நினைவில் இல்லாதவர்கள், அதில் ஆரம்ப வரிகள் சிலவற்றை படித்துக்கொள்ள வேண்டும்.

 

அத்தியாயம் மாறுகிறது!

©©|©©

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!