SY14

சரி © 14

மதுரையில், தன் வீட்டிற்கு வந்த சித்தார்த் அழைப்பு மணியை அழுத்தினான். அவன் எதிர்பார்த்தது போலவே தாய் பாமாதான் கதவைத் திறந்தார். ஆனால், வழக்கத்திற்கு மாறாக பின்னணியில் பலர் தங்கள் வேலைகளில் மும்முரமாக இருந்தனர்.

 

வாடா சித்து! என்ன பாக்குற! எல்லாம் நம்ம ரிலேட்டிவ்தான். உள்ள வா, என்று கதவை அகலத் திறந்து அவனுக்கும் வழிவிட்டாள்.

 

என்ன விசேசம்மா! வீட்டுக்கு வந்தமாதிரி இல்லையே! ஊருக்குப் போன மாதிரி இல்ல இருக்கு, என்று கூறி வீட்டிற்குள் மெல்ல அடி எடுத்து வைத்தான்.

 

எல்லாம் நல்ல விசேசம்தான்! மொதல்ல ரிலாக்ஸ் ஆயிட்டு வாடா, பாமா.

 

இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே அனைவரும் அருகில் வந்துவிட்டனர். சித்துவின் பெரியப்பா மகள் ரித்திக்கா, அவளின் இரண்டு பொடிப் பையன்கள் ராக்கி, மாதேஷ், பெரியம்மா ரமணி, அம்மாவின் தங்கை (சித்தி) ருக்மணி.

 

அந்த பெரிய வரவேற்பறையில், பெரியப்பா சிவநேசன், சித்துவின் அப்பா மார்தாண்டத்துடன், பெரிய ஊஞ்சலில் அமர்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தார். அவர்கள் அருகில் சென்றால்தான் பேசுவார்கள்.

 

ரித்திகாவின் பொடிசுகள் இரண்டும் மாமா என்று காலைக் கட்டிக்கொண்டன. அனைவரும் புன்னகையுடன் அவனை வரவேற்றது போலவே, அவனும் அனைவரையும் பார்த்து சம்பிரதாயமாக புன்னகைத்து வரவேற்பு வார்த்தைகளை பரிமாறிக்கொண்டான்.

 

தந்தையையும், பெரியப்பாவையும் அருகில் சென்று ஒரு வணக்கத்தை வைத்துவிட்டு திரும்பினான். அவர்களும் சித்துவை அதிக கேள்விகள் கேட்டு கஷ்டப்படுத்தாமல் விட்டுவிட்டனர்.

 

திரும்பியவுடன் மீண்டும் இரண்டு வாண்டுகளும் ஆளுக்கொரு பக்கமா பிடித்துக்கொண்டு வாங்க மாமா கடைக்குப் போகலாம், என்று இளுத்தன.

 

சித்துவின் தாய் பாமா, இடையில் புகுந்து சித்துவை அவர்களிடமிருந்து பிரித்து, கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டுபோய், அவனுக்கான தனி அறையில் விட்டாள்.

 

குழப்பத்துடன் குளித்து முடித்து, உடை மாற்றி, புத்துணர்வுடன், அறையைவிட்டு வெளியேறி, வரவேற்பறையின் நடுவே நின்றான். பாமா தன் தங்கை ருக்மணியுடன் அமர்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தார்.

 

என்னம்மா, அக்கா, புள்ளைங்க, எல்லாரும் வந்துருக்காங்கன்னு ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம்ல? ஒன்னுமே வாங்கிட்டு வரலியேமா!, என்று சித்தார்த் தன் தாயிடம் செல்லமாக கோபித்துக்கொண்டான்.

 

அதெல்லாம் வாங்கிக் குடுக்கலாம்டா! நீ வா சாப்பிட என்று அவனை அழைத்தாள்.

 

எப்ப வந்தாங்க? என்ன விசேசம், சித்து.

 

நைட்தான்டா வந்தாங்க. எல்லாம் ஒன்னோட கல்யாண விசயம்தான். நீ சாப்பிட்டு, நல்லா ரெஸ்ட் எடு, சாயங்காலம் போய் ஒனக்கு பொண்ணு பாக்கப் போறோம்

 

அம்மா!, என்று அலறிவிட்டான் சித்து. இந்த அறையே அதிர்ந்தது.

 

அவனைச் சுற்றி ஆங்காங்கே வெவ்வேறு வேலைகளில் இருந்த அனைவரும் அவனையே பார்த்தனர். குறிப்பாக தந்தை மார்தாண்டம் உன்னிப்பாக அவனைக் கவனித்தார். அவர் பார்ப்பதை உணர்ந்த சித்து, அன்னையை தன் அறைக்குள் தள்ளிக் கொண்டு சென்றான்.

 

என்னடா! இப்புடிக் கத்தற! ஒம்பேச்சக் கேட்டு, நல்ல விசயத்த நாங்க எவ்வளவு நாளைக்குத்தான் தள்ளிப் போட்டுகிட்டே போறது?, தாயும் அதட்டினாள்.

 

அம்மா, அப்ப நா சொன்னதெல்லாம் வேற! ஆனா இப்ப சொல்லப்போறது வேறம்மா, என்னப் பெத்த தாயே, ப்ளீஸ் கொஞ்சம் கேளுங்களேன்!, என்று ஆரம்பத்திலேயே கெஞ்சலோடும், கொஞ்சலோடும் ஆரம்பித்தான்.

 

சித்தார்த் ஏதோ விவரமாக, விபரீதமாக பேசப் போகிறான் என்று உணர்ந்த பாமா, தன்னையறியாமல் அறைக்கதவை சாத்தினார்.

 

சம்யுக்தாவின் விசயத்தைப் பற்றி அவரிடம் கூறி, தனக்கு ஒரு நல்ல துணையாக அவளையே மணமுடிக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டான். ஆனால், தாங்கள் ஏற்பாடு செய்துகொண்டிருக்கும் பதிவுத் திருமணம் பற்றி மட்டும் கூறவில்லை.

 

ஆங்காங்கே இடைமறித்து சில கேள்விகள் கேட்டு அனைத்தையும் கேட்டறிந்த தாய் பாமா, என்னடா இப்புடி ஒரு குண்டத் தூக்கிப் போடுற? நாங்க ஒனக்கு ஒவ்வொரு ஊர்லயும் இருக்கறதுல நல்ல பொண்ணாப் பாத்து, அதுல ஒன்ன செலக்ட் பண்ணி, அத இன்னக்கி போய் பாத்துட்டு வரலாம்னு, சொந்தத்தையெல்லாம் வரச் சொல்லிருக்கோம். நீ என்னடான்ன எங்கயோ இருக்கறவள பாத்துட்டேன், புடிச்சிட்டேன்னு வந்து நிக்கிற?, சற்று அதட்டலாகக் கேட்டார் பாமா.

 

அம்மா, நீங்கதாம்மா எங்கள சேத்து வைக்கணும். ஒங்களத்தாம்மா எங்கள சேத்துவைக்கிற குலதெய்வம்னு சொல்லிருக்கேன், என்று கெஞ்சினான்.

 

அதற்குமேல் அவனிடம் பேசி பிரயோஜனம் இல்லை என்று உணர்ந்த பாமா, என்ன நீ நம்புறது வேஸ்டு! அப்பாட்ட மொதல்ல சொல்றேன். அவர் அனேகமா பெரியப்பாட்ட கன்சல்ட் பண்ணுவார்னு நெனக்கிறேன்

 

அம்மா! ஒங்களப் போய் வேஸ்டுன்னு சொல்லலாமா! யூ ஆர் மை ட்ரஸ்ட், சித்து.

 

ட்ரஸ்டோ, வேஸ்ட்டோ! இப்போதைக்கு இன்டர்வல் விடு. நா சாப்பாட்டுக்கப்பறம் இதப் பத்தி அப்பாட்ட பேசறேன். மத்ததெல்லாம் அப்பறம் பாக்கலாம், என்று கூறிய பாமா சித்துவின் பதிலை எதிர்பார்க்காமல், அறைக் கதவைத் திறந்து வெளியேறினார்.

©©|©©

 

அதே நேரத்தில் யோகி தன் வீட்டில், தாயார் சரண்யா செய்து வைத்திருந்த, சப்பாத்தி மற்றும் குருமாவை ருசித்து, ரசித்து சாப்பிட்டு முடித்திருந்தான். சித்து, யோகி இருவரும் முந்தைய தின இரவே சென்னையிலிருந்து புறப்பட்டு காலையில் மதுரை வந்து சேர்ந்திருந்தனர்.

 

எவ்வளவு பெரிய ஹோட்டல்ல சாப்டாலும், நம்ம வீட்டுல செஞ்சு சாப்பிடுற மதிரி திருப்தியா, ருசியா இல்லைலமா!

 

அதானப்பா நீயும், சித்துவும் ஹோட்டல்ல சாப்பிட வசதி, வருமானம் இருந்தும் ரூம்லையே சமைச்சு சாப்பிடுறீங்க! சரி இன்னும் எத்தனை நாளைக்குத்தான் நீங்களே இந்த வேலையெல்லாம் பாத்துகிட்டு, தனியாவே இருக்கப் போறீங்க?, தாய் முக்கியமான பேச்சுக்கு வருவது யோகிக்கு நன்கு புரிந்தது.

 

கவலையே படாதீங்கம்மா! நம்ம சித்துவுக்கு கிட்டத்தட்ட கல்யாணம் முடிஞ்ச மாதிரிதான், யோகி.

 

என்னப்பா சொல்ற அவனுக்கு கல்யாணம் முடிஞ்சிருச்சா?, சரண்யா.

 

அதில்லமா, அவனுக்கு பொண்ணெல்லாம் பாத்தாச்சு. பொண்ணுக்கும் அவன புடிச்சப்போய், கல்யாணம் வரைக்கும் வந்தாச்சு. அதச் சொன்னேன்

 

ஓ! அப்படியா சேதி. சரி எப்பக் கல்யாணம், பொண்ணு எந்த ஊரு? சித்து அம்மா ஒரு வார்த்த கூட சொல்லலையே! அன்னக்கி, ஊருக்குப் போய்ட்டு வரும்போது கூட பாத்து பேசிக்கிட்டிருந்தேனே!, சரண்யா.

 

இன்னும் கொஞ்ச நேரத்துல ஃபோன் வரும் பாருங்க, என்று யோகி கூறிக்கொண்டிருக்கும்போதே, அவன் அலைபேசி அழைத்தது.

 

இந்தா வந்திருச்சில்ல, என்று எடுத்தான்.

 

மச்சி சாப்டியா!, சித்து.

 

ஆச்சு, அங்க என்ன நிலவரம்?, யோகி.

 

அய்யோ! நிலவரம் கலவரமாகாம இருந்தா சரிதான்னு தோனுது மச்சி

 

என்னடா சொல்ற? இந்நேரம் ஒங்கம்மா எங்கம்மாவுக்கு ஃபோன் பண்ணி விசயத்த சொல்லுவாங்கன்னு பாத்தேன்

 

ஒங்கம்மா, எங்கம்மாவா! ஊருலருந்து பெரியம்மா, சின்னம்மால்லாம் வந்திருக்காங்க மச்சி

 

வந்தா என்னடா? அம்மாவ கூட்டிட்டுப் போய் பக்குவமா எடுத்துச் சொல்ல வேண்டியதுதான

 

சொல்லியாச்சு மச்சி! அம்மாவே அக்செப்ட் பண்ற மாதிரி தெரியல. அவங்க ஈவினிங், வேற பொண்ணு பாக்க என்ன ரெடி ஆகுன்னு சொன்னாங்க. நா டக்குனு டென்ஷல கத்திட்டேன். அப்பறம் சமாளிச்சு, தாய உள்ள கூட்டிட்டுப் போய் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லியாச்சு. அம்மா அப்பாட்ட இன்னும் சொல்லல. அவர் என்ன சொல்லுவார்னு தெரியல மச்சி, சித்து வருத்தத்துடன் கூறினான்.

 

இதெல்லாம் எதிர்பார்த்துதான்டா இருக்கணும். இது ஒரு சின்ன தடை, அவ்ளோதான்! நீந்தான் அது மேல ஏறி படிக்கல்லா மாத்திக்காட்டனும் மச்சி

 

சரி, அதவுடு! ரெஜிஸ்டர் ஆஃபீஸ்கு எப்ப போவோம். அங்க ஏற்பாடெல்லாம் முடிக்க எவ்ளோ நேரமாகும்?

 

நீ சாப்டியா மச்சி?, யோகி.

 

இல்ல! ஆனா, எனக்கு இனிமாவே கொடுத்த மாதிரி இருக்கு!, சித்து.

 

என்னடா சொல்ற?

 

ஆமா மச்சி. ஈவினிங் பொண்ணுபாக்க ஊரே கூடிருக்கு. ஹாலுக்குப் போகவே பயமா இருக்கு! அதான் தாய்க்கெழவி சத்தம்போட்டுட்டு போனதுல இருந்து ரூமுக்குள்ளயே உக்காந்திருக்கேன்

 

ஒன்னும் பிரச்சனையில்ல மச்சி! அம்மா யார்கிட்டயும், எதுவும் சொல்லிருக்க மாட்டாங்க. எதுவும் நடக்காத மாதிரி நீ சாப்டு, கிளம்பு, நா வண்டி எடுத்துட்டு வறேன், யோகி பேசியது சித்துவுக்கு சற்று ஆறுதலாக இருந்தது.

 

ட்ரைப் பண்றேன் மச்சி! பை, என்று சித்து சுரத்தை இல்லாமல் சொல்லிவிட்டு அலைபேசியை அணைத்தான்.

 

பை டா மச்சி, என்று கூறி அலைபேசியை கீழே வைத்துவிட்டு அம்மா சரண்யாவைப் பார்த்தான். அவர்களை அருகில் காணவில்லை.

 

ஆனால், அடுப்படியில் இருந்து சத்தம் வந்தது. என்னப்பா எங்கம்மா, ஒங்கம்மான்னு ஆரம்பிச்சு என்னென்னவோ பேசிகிட்டீங்க? என்னாச்சு அங்க?

 

இனிமேத்தாம்மா ஆகனும். நா, இப்ப ஆக வேண்டியத பாக்கறேன். வெளில போறேன். எதுவும் வாங்கணுமா?, என்று தாய்க்கு பிடிகொடுக்காமல் பேசியவன் உடைகளை மாற்றி வெளியில் கிளம்பினான்.

 

வரும்போது, மதியம் சாப்பிட ஒனக்கு புடிச்ச மாதிரி ஏதாவது வாங்கிட்டு வாப்பா. நீ வந்ததுக்கப்பறமா சமைக்கறேன். சூடா சாப்பிடலாம்ல!, என்றார் சரண்யா.

 

நீங்க எனக்காக காத்துகிட்டு இருக்க வேணாம்மா. லேட் ஆனாலும் ஆகும். ஒன்னு செய்றேன், சீக்கிரம் வர முடியலைனா, ஒரு பதினோரு மணிக்கு ஃபோன் பண்றேன். சரியா சரண்யா, என்றான் செல்லமாக.

 

பெத்தத் தாய பேரச் சொல்ற! பிச்சுப்புடுவேன், என்று  பொய்யாக கோபித்துக் கொண்டார் தாய்.

 

அப்ப மத்த தாய பேர் சொல்லிக் கூப்டலாமா? அடிக்க மாட்டாங்க?, யோகி பேசிக்கொண்டே வெளியில் வந்து, தன் தந்தையின் இருசக்கர வாகனத்தை எடுத்தான். தந்தையின் ஞாபகமாக அவர்கள் வீட்டில் இன்றும் ஓடிக்கொண்டிருப்பது, உயிரற்ற அது ஒன்றுதான்.

©©|©©

 

சாப்பிட்டவுடன் ஓய்வெடுக்காமல் வெளியில் கிளம்பும் சித்துவைப் பார்த்து, தாய் பாமா கோபமாகக் கேட்டார், ஏன்டா ரெஸ்ட் எடுக்கலயா? நைட்டெல்லாம் தூங்காம வண்டில வந்தது அலுப்பா இல்ல?

 

இருக்கு. அதவிட முக்கியமான வேலை ஒன்ன முடிச்சிட்டு வந்து, அப்பறம் ரெஸ்ட் எடுத்துக்கிறேன், சித்து.

 

தொரைக்கு அப்படி என்ன வேலை? எதையுமே சொல்லக் கூடாதுன்ற முடிவுல இருக்கீங்களோ?, பாமா.

 

அம்மா, இப்ப நா வெளில போறதே, என்னைப் பத்தி நீங்க எல்லாரும் பொறணி பேசறதுக்கு ஒரு கேப் குடுக்கத்தான். போய்ட்டு வறேன், சித்து.

 

ஓ! நீங்க எங்களுக்கே கேப் குடுக்கற அளவுக்கு வளந்திட்டீங்களோ? நாங்களும் குடுக்குறோம்டா கேப்பு!

 

நீங்க பேசுறத பாத்த வச்சிருவீங்க போலயே ஆப்பு!

 

ரெடி பண்றேன்டா போய்ட்டு வா

 

ப்ளீஸ்மா! புரிஞ்சிக்கோங்க. இப்படியே பேசிகிட்டிருந்தா ஈவினிங்கே கிளம்பி சென்னைக்கு போயிருவேன், என்று சித்துவும் கோபித்துக்கொண்டான்.

 

நீ கிளம்பி போயிட்டா பாத்துருக்க பொண்ண அப்பாவுக்கா கட்டி வைக்க முடியும்?, பாமா.

 

ஐ! நல்ல ஐடியாவா இருக்கே!, சித்து.

 

ஒத படுவ படவா!, என்று தாய் செல்லமாக அடிக்க கையை ஓங்கிய வேளையில், யோகி வாசலில் வந்து வண்டியின் ஒலி எழுப்பினான்.

 

வாடா, நீயுந்தானா அவனோட சேந்த கூட்டுக் களவாணி?, பாமா.

 

நா அவனோட சேந்திருக்கேன். அவ்ளோதாம்மா. மற்றபடி சாரு எல்லாமே ஸோலோ பெர்ஃபார்மன்ஸ்தான்!, என்று யோகியும் தன் பங்குக்குக் போட்டுக்கொடுப்பதுபோல் பேசினான்.

 

இவனுக்கு அம்புட்டு தைரியம் கெடையாதே! ஒரு வேலை அந்தப்பக்கம் கொஞ்சம் ஸ்ட்ராங்கோ?, பாமா திடீரென சம்யுக்தாவின் சிந்தனைக்கு வந்ததை, நண்பர்கள் இருவரும் தங்களுக்கு சாதகமாக மாற்ற முயற்சித்தனர்.

 

அப்டியெல்லாம் ஸ்ட்ராங் ஒன்னுமில்லமா! வேணா பாருங்களேன், என்று யோகி கிடைத்த இடைவெளியில் கிடா வெட்டினான்.

 

சம்யுக்தாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவர்கள் அனைவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன் அலைபேசியில் இருந்து எடுத்துக் காட்டினான்.

 

என்னாடா இது! ஜோடிப் பொருத்தமே சரியில்லயேடா, வயசான மாதிரில்ல தெரியுது!, என்று வேண்டுமென்றே, அந்த படத்தில் சித்துவிற்கு அருகில் நின்ற, சம்யுக்தாவின் தாயாரை குறிப்பிட்டுச் சொன்னார் பாமா.

 

அய்யோ! அம்மா! அது அவ அம்மாம்மா! பக்கத்துல பாருங்க,  என்று குதித்தான் சித்து.

 

நோ டென்ஷன் பேபி! நீ மட்டும் எங்கள எவ்ளோ டென்ஷன் பண்ணி வச்சிருக்க? இதெல்லாம் சாம்பிள்தான் மவனே. மெயின் பிச்சர் இனிமேதான்டா இருக்கு. நீ போய்ட்டு வா, என்று வழியைக் காண்பித்து விடைகொடுக்கும் பாணியில் பேசினார் பாமா.

 

எங்கம்மா யாரையுமே காணம்? சித்து ரிலேட்டிவ்ஸ் வந்திருக்கறதாச் சொன்னான்?, யோகி.

 

பெரிசுகள் ரெண்டும் ரூமுக்குள்ள எனக்காக வெயிட்டிங். நா பேசனும்னு சொன்னவொடனே, சீரியசா ரூமுக்குள்ள போய் உக்காந்திருக்காங்க. மற்றதெல்லாத்தையும் மாடிக்கு அனுப்பிட்டேன். இவரு என்ன குதி குதிக்கப் போறாரோ தெரியலையே! இவன அனுப்பிட்டு ரமணியையும், ருக்குவையும் கூப்டலாம்னு இருக்கேன். நீ அந்த ஃபோட்டோவ என்னோட வாட்ஸ்ஆப்புக்கு அனுப்பு

 

இதவுட நல்ல பிச்சரா சித்து வச்சிருக்கான், ஜோடியா அனுப்பச் சொல்லவா?, யோகி.

 

அடப்பாவிகளா! கொன்னுபுடுவேன், என்றவர், சித்துவிடம் திரும்பி, எங்க தனியா இருக்கற மாதிரி ஒன்னு இருந்தா காமிடா, என்றார்.

 

அழகிய புகைப்படத்தைப் பார்த்ததும், அன்னையின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பின் ஒளி வீசியது. இதையே அனுப்புடா, என்று கூறிவிட்டு, தன் தங்கை ருக்மிணியையும், சித்துவின் பெரியம்மாவான ரமணியையும் அழைக்க மாடிக்குச் சென்றார் பாமா.

©©|©©

 

சார்பதிவாளர் அலுவலகம் சென்ற இரு நண்பர்களும், ஏற்கனவே அங்கு வரச் சொல்லியிருந்த தங்கள் நண்பர்களுடன் கலந்துரையாடிவிட்டு, அங்கே மேலும் சில பெரியவர்களையும் போய்ப் பார்த்தனர்.

 

சித்து கையில் இருந்த பணத்தை, வந்திருந்த நண்பர்களில் ஒருவனிடம் கொடுத்து, பதிவு திருமணத்திற்கு பொறுப்பாக செலவு செய்யுமாறு கொடுத்துவிட்டு யோகியுடன் வீடு திரும்பினான்.

 

வேலை சீக்கிரமே முடிந்து வீடு திரும்பியதால், வரும் வழியில், மதிய உணவிற்கு சமைக்க, யோகி ஆட்டுக் கறி வாங்கினான்.

 

அதைப் பார்த்த சித்து, நீ மட்டன் வாங்குற! வீட்டுக்குப் போனா என்னையே கைமாப் பண்ணப் போறானுங்க!, என்றான் தனக்குத்தானே கிண்டல் செய்துகொள்வதுபோல்.

 

நோ சித்து! இதெல்லாம் சின்னச் சின்ன பிரச்சனை. நீ சம்யுவ நெனச்சுப் பாத்தியா! அவங்க வீட்ல எவ்வளவு பெரிய பிரச்சனை வெடிக்கும்னு, யோகி.

 

என்னாட பிரச்சனையே பெரும் பிரச்சனையா இருக்கும் போலயே மச்சி!, என்று சித்து பேசிக்கொண்டே பக்கத்தில் இருந்த கடையில் ரித்திகாவின் பிள்ளைகளுக்கு தேவையான சிற்றுண்டிகளை வாங்கிக்கொண்டான்.

 

நீ வீட்டுக்குப் போ. அம்மா எல்லாத்தையும் சுமுகமா முடிச்சி வச்சிருப்பாங்க. சரியா? எப்பவுமே பாசிட்டிவா திங் பண்ணிட்டே போனா பாசிட்டிவா நடந்துரும் மச்சி!, என்று சித்துவை அவன் வீட்டில் இறக்கிவிட்டு, தன் வீடு நோக்கி சென்றான் யோகி.

 

தயக்கத்தோடு சித்து வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினான். வாடா மாப்பிள்ள பையா! எங்க ஒன்னோட தோழனக் காணம்?, என்று ரித்திக்கா கலாய்க்கும் குரலில் வரவேற்றாள் சித்துவை. வழக்கம்போல் பொடியன்கள் இருவரும் ஓடி வந்து சித்துவின் காலைக் கட்டிக்கொண்டனர்.

 

ஏய்! கத்தாத ரித்து! அப்பா வந்துறப் போறாரு, என்று பயந்தவாறு தன் தந்தையின் அறையை பார்த்தவாறே, கையில் வைத்திருந்தவற்றை காலைக் கட்டிக்கொண்டு நின்ற ராக்கி, மாதேஷ் கையில் கொடுத்தான்.

 

வந்தா என்ன?, ரித்திக்கா.

 

என்னாச்சு ரித்து? அப்பா ஏதும் கத்தினாரா?, சித்து.

 

கத்தாம பின்ன என்ன பண்ணுவாங்க? ஆனா, என்னோட நாத்தனார் அம்சமா, நல்லாருக்காடா!, என்றாள் ரித்திகா சரளமாக.

 

என்ன! நாத்தனாரா? அப்ப முடிவே பண்ணிட்டீங்களா?

 

அதெல்லாம் அம்மாவோட பிடிவாதம்தான்டா. ஒரே புடியா நின்னுட்டாங்க. சும்மா சொல்லக் கூடாது, வரப்போற மருமகளுக்காக இப்பவே இவ்ளோ பேசறாங்களே! நல்ல மாமியார் அவாடு குடுக்க ஏற்பாடு பண்ணு, ரித்திகா.

 

இதைக்கேட்டதும் சித்துவிற்கு உச்சி முதல் பாதம் வரை மெய் சிலிர்த்தது. கையில் கிடைத்த பொடியன்கள் இருவரையும், இரண்டு கைகளில் தூக்கி நான்கைந்து சுற்றி சுற்றி இறக்கி விட்டான்.

 

என்னடா, மாமா திடீர்னு நம்மள இப்புடி சுத்துல விட்டுட்டாரு!, ராக்கி.

 

ஆமாடா, நாகூட கையில வச்சிருந்த பிஸ்கட்ட எங்க போட்டேன்னே தெரியல! , மாதேஷ்.

 

அடப் போடா நானே இப்ப எங்க இருக்கேன்னே தெரியல!, ராக்கி.

©©|©©

 

ஞாயிற்றுக் கிழமை மாலை சித்துவும், யோகியும் தங்களின் விருப்பமான திரையரங்கில் மாலை நேரக் காட்சியை கண்டு மகிழ்ந்தனர். அதன்பின், இரவே சித்து சென்னைக்கு கிளம்பிவிட்டான். ஆனால், யோகி பதிவு திருமணம் சம்மந்தமான வேலைகளை கவனிப்பதற்காக மதுரையிலேயே தங்கிவிட்டான்.

 

சித்துவின் வீட்டில், கல்யாண விசயத்தில் சித்துவின் விருப்பத்திற்கு சம்மதித்ததோடு ஒரு சிறிய இன்ப அதிர்ச்சியையும் தரப்போவதாக கூறி அனுப்பிவிட்டார்கள் அவனது வீட்டார். எல்லாம் அவன் தாயார் பாமா மற்றும் அக்கா ரித்திகாவின் ஏற்பாடாம்.

 

அது எப்படி முடியுமோ என்ற சிறு பயத்துடனேயே சென்னைக்கு கிளம்பியிருந்தான் சித்து. ஆனால் தானும், சம்யுக்தாவும்தான் முதலிலேயே பதிவுத் திருமணம் செய்துகொள்ளப் போகிறோமே! அதனால் தங்களை யாராலும் பிரிக்க முடியாது என்று உறுதியான மனநிறைவுடன் பயணத்தை மேற்கொண்டான்.

 

சிறிய பறவை
சிறகை விரிக்க துடிக்கிறதே!
சிறகை விரித்து
நிலவை உரச நினைக்கிறதே!

 

பேரூந்தில் அந்தப் பாடல் அவனுக்காகவே ஒலிப்பதாக எண்ணி மகிழ்ச்சியான கனவில் சிறகை விரித்து பறக்கத் தொடங்கினான்.

©©|©©

 

சென்னை வந்தவுடன் முதல் வேலையாக தன் முதலாளி ராஜசிம்மனை தொடர்புகொண்டு பேசினான் யோகிதாஸ்.

 

வணக்கம் சார்! நா லாஸ்ட் வீக், உங்க வீட்டுக்கு வந்திருந்தேன் சார், யோகி.

 

ம், தெரியும், சொல்லுங்க யோகி! நீங்க ஊர்லருந்து வந்திட்டீங்களா? வேலையெல்லாம் முடிஞ்சதா?, சம்பிரதாயமாக கேட்டார் ராஜு.

 

எஸ் சார்! முடிஞ்சிது. நா இன்னக்கி டூட்டி ஜாயின் பண்ணிறேன், யோகி.

 

நோ ப்ராப்ளம், கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு வாங்க. காலைலதான வந்திருப்பீங்க?

 

எஸ் சார்

 

நா ஆஃப்டர்நூன்தான் மால் வருவேன். அப்ப நீங்க வந்தாக்கூடப் போதும் யோகி

 

ஓக்கே சார்!

 

ரொம்ப அவசரமா ஏதோ சொல்லனும்னு வந்தீங்களாமே? நேர்லதான் சொல்லனுமா, இல்ல ஃபோன்ல பேசலாமா? எனி இஸ்யூஸ் எபவுட் கம்பெனி?

 

நோ இஸ்யூஸ் இன் கம்பெனி சார். இட்ஸ் எபவுட் அவர் நியூ ப்ராஜெக்ட் சார்

 

ஓ! என்னது?

 

நாம க்ரவுண்ட் ஃப்ளோர் மட்டும்தான சார் ரென்ட்டல் பேசிஸ்ல கேட்ருக்கோம்! ஆனா அவங்க மாடி போர்சன் வேக்கன்ட் ஆயிருச்சு, அதயும் சேர்த்து அக்ரிமென்ட் பண்ணிக்க சொல்றாங்க சார்

 

ஏற்கனவே அங்க என்ன பண்ணிட்டிருந்தாங்க?

 

ஏதோ ஒரு கம்ப்யூட்டர் சென்டர் இருந்துச்சாம் சார்

 

அப்ப சரி. நோ இஸ்யூஸ்! நீங்க ப்ரொசீட் பண்ணுங்க

 

ரெண்டு ஃப்ளோரையுமே அக்ரீமென் போட்டுக்கலாமா சார்?

 

ம், ஓக்கே! ஒய் நாட்?

 

பட் நமக்கு அவ்ளோ ரெக்கொயர்மென்ட் இல்லையே சார்

 

இல்லாதத ஏற்படுத்துவோம்! என்ன செய்யலாம்னு நீங்களும் யோசிங்க, என்று ராஜு அந்த பிரச்சனைக்கு ஒரு முற்றிப்புள்ளி வைத்தார்.

©©|©©

 

ரிது, கிளம்பு நாம இப்ப அவசரமா வெளில போகனும், திலோத்தமை ரிதுவந்திகாவை அவசரப்படுத்தினாள்.

 

என்னம்மா ஆச்சர்யமா இருக்கு! நா கூப்பிட்டாக்கூட வரமாட்டீங்க, இன்னிக்கு நீங்க என்னய அவசரப் படுத்துறீங்க?, என்று ரிது உண்மையிலேயே சந்தேகமாய் கேட்டாள்.

 

சொன்னாக் கேளு! ஒரு நல்ல விசயத்துக்குத்தான்! திலோ.

 

எங்கன்னாவது சொல்லுங்கம்மா, அதுக்கு ஏத்த மாதிரி ட்ரஸ் பண்ணாத்தான நல்லாருக்கும், ரிது.

 

அதுவும் சரிதான்! சரி உண்மையச் சொல்லிறேன். சம்யுவ பொண்ணுபாக்க வராங்களாம். அவ அம்மா நம்மளயும் வரச் சொல்லி, ஃபோன் பண்ணிருக்காங்க. போதுமா? போவமா?, என்று அவளை அவசரப் படுத்தினாள் தாய்.

 

பொண்ணு பாக்கவா!, என்று இழுத்தாள் ரிது.

 

ஏன் இழுக்கற? பொண்ண பொண்ணு பாக்கத்தான வருவாங்க!, திலோ.

 

ஒன்னுமில்ல, போகலாமே!, என்று எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் கிளம்பினாள் தோழியின் இல்லத்திற்கு.

 

மனதிற்குள் கேள்விகள் எழுந்தவண்ணம் வண்டியை ஓட்டினாள் ரிது. சம்யுவிற்கு தெரியுமா? கால் பண்ணா எடுக்கலயே? அப்ப சித்து? சித்துவுக்குச் சொல்லி ஒன்னும் ஆகப் போறதில்ல. இதை எப்படி சம்யுவிற்கு சொல்வது?

 

ஏய் வண்டியப் பாத்து ஒழுங்கா ஓட்டிடீ, என்ன யோசன?, திலோ லேசாக அதட்டினாள்.

 

இல்லம்மா யாஷிகாவுக்கு சொல்லிட்டாங்களா? அவளும் வருவாளா?, என்று ரிது சமாளித்தாள்.

 

வரவேண்டிய எல்லாரும் வருவாங்க! நீ ஒன்னும் கன்ஃபியூஸ் ஆகாத!

 

வரவேண்டிய எல்லாரும் வந்தா, நா ஏம்மா கன்ஃபியூஸ் ஆகப் போறேன்!, என்று ரிதுவினால் மனதுள் மட்டுமே கேட்டுக்கொள்ள முடிந்தது.

 

வர வேண்டிய எல்லோருமே வருவார்களா?

©©|©©