SY15
SY15
சரி © 15
ரிதுவந்திகாவின் மனம் என்ன நினைக்கும் என்று திலோத்தமைக்கு நன்கு தெரியும். ஆனாலும் ஏதும் தெரியாததுபோல் பேசாமல் வந்தார். மனதுக்குள் சித்துவையும் அவன் குடும்பத்தைப் பற்றியும் தான் தவறாக எண்ணிவிட்டோமோ என்றுகூட எண்ணத் தோன்றியது அவருக்கு.
சம்யுக்தாவின் தாயார் அனுசியாதான் அனைத்தையும் திலோத்தமைக்குக் கூறியிருந்தார். அந்த அலைபேசி உரையாடலில் அறிந்த அனைத்தையும் அசைபோட்டவாறு, திலோ ரிதுவின் அருகில் அமர்ந்திருந்தார்…
· · ·
சித்து தனது வீட்டில், மணம் முடித்தால் சம்யுவைத்தான் முடிப்பேன் என்று அடம்பிடித்ததால், அவன் தாய் பாமா, தந்தை மார்தாண்டத்தை மன்றாடிச் சம்மதிக்க வைத்தார்.
சித்துவிடம் சம்யுவின் குடும்பம், அவள் தந்தையின் வேலை, தற்போது அவர் தங்கியிருக்கும் இடம் அனைத்தையும் ஒன்றுவிடாமல் கேட்டுக்கொண்டு, அவனை மதுரையைவிட்டு சென்னைக்கு அனுப்பிவிட்டனர்.
அவன் சென்றவுடன் மறுநாளே சித்துவின் தந்தை, தன் அண்ணன் சிவநேசனை அழைத்துக்கொண்டு, சம்யுவின் தந்தை, திருவாடானையில் அலுவல் சம்பந்தமாக தங்கியிருக்கும் இடத்திற்கே நேரில் சென்றனர்.
சம்யுவின் தந்தை தாமோதரன், இருவரையும் புதிதாகப் பார்த்ததில் சற்றுக் குழம்பிப் போனார். ஆனால், அவர்களின் பேச்சு, மற்றும் நடத்தைகளை கவனித்தவர், சிறிது மனம் இறங்கியவராக பேசினார். சித்துவின் புகைப்படம் ஒன்றையும் காட்டினர்.
அத்துடன் விடவில்லை, சென்றிருந்த சகோதரர்கள். அவரை தங்கள் இல்லத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். சம்யுவின் தந்தையும், அன்று மதுரையில் ஒரு அலுவல் இருப்பதாகக் கூறி அவர்களுடனேயே கிளம்பிவிட்டார்.
திருவாடானையில் இருந்து, அலுவலகக் காரிலேயே மூவரும் மதுரை கோரிப்பாளையம் வரை வந்து சேர்ந்தனர். சம்யுவின் தந்தை, வந்தவர்களின் முகவரியை நன்றாகக் கேட்டுத் தெரிந்துகொண்டு, அவர்களை கோரிப்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டார். மாலை வீட்டிற்கு வருவதாகக் கூறி, அலுவலக வேலையைப் பார்ப்பதற்கு சென்றுவிட்டார்.
அவர் கூறியதுபோல் வேலை முடித்து, அன்று மாலையே சித்துவின் இல்லத்திற்கு வந்தார். ஊரிலிருந்து வந்திருந்த அனைவரும் இன்னும் தங்கள் ஊர்களுக்குச் செல்லாமல் இருந்ததால், அந்த குடும்ப சூழல் சம்யுவின் தந்தைக்கு மன நிறைவைத் தந்தது.
சித்துவின் தாயார் பாமா, மதுரைக்கே உரிய பாசையில்‘அண்ணே’ என்று அழைத்து உபசரித்து கூடுதல் மகிழ்ச்சியைக் கொடுத்தது தாமோதரனுக்கு. தன் மனைவி அனுசியாவையும் கேட்டு முடிவு செய்வதாகக் கூறி அங்கிருந்து கிளம்பினார்.
பின்பு அனுசியாவும், பாமாவும் வெகு நேரம் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தனர். அதன் வெளிப்பாடுதான் இந்த பெண் பார்க்கும் படலம்.
பெரியோர்கள் அனைவரும் சேர்ந்து, ஏற்பாடு செய்த இந்த நிகழ்வினைப் பற்றி நம் ‘சரியா யோசி’க்குத் தெரியாது. ஆனால், திலோத்தமைக்கு மட்டும் அனைத்தையும் கூறி வரச்சொல்லியிருந்தார் அனு.
· · ·
ரிதுவந்திகாவும், தாய் திலோத்தமையும் சம்யுக்தாவின் வீட்டை அடைந்தனர்.
“அம்மா, அம்மா எந்திரிங்க! என்னைச் சொல்லிட்டு நீங்க ஓரேடியா யோசிச்சுக்கிட்டே வரீங்க!”, என்று ரிது, திலோவை எண்ண அலைகளிலிருந்து தட்டி எழுப்பினாள்.
இவர்களின் காரைக் கண்டதும், உள்ளிருந்து சம்யுக்தா ஓடி வந்தாள். கண்கள் கலங்கியிருந்தன. சாதாரண ஆடையில், ஏதும் அலங்காரம் இன்றி இருந்தாள்.
“என்ன சம்யு! ஒனக்கு ஃபோன் பண்ணிட்டே இருந்தேன். ஏன் எடுக்கல? ஆஃபீஸ் போகலயா?”, ரிது கேட்டுக் கொண்டே அவளைப் பார்த்தாள்.
“மதியமே லீவு கேட்டுட்டு வரச்சொல்லீட்டாங்டீ”, என்ற சம்யுவின் குரலில் சுரத்தையில்லை.
“யாஷிகா வரலையா? சொல்லியாச்சா?”, ரிது.
“அவளுக்கு அம்மா ஃபோன் பண்றேன்னு சொல்லிருக்காங்க”, சம்யு.
“உள்ள வாங்க!”, பின்னாலிருந்து சம்யுவின் தாயார் அனுசியாவின் குரல் வந்தது.
“என்ன இப்படி ஒரு திடீர் அரேஞ்மென்ட்? எதிர்பார்க்கவே இல்ல!”, திலோத்தமை கையில் சில பொருட்களுடன், அனுசியாவை நோக்கி உள்ளே வந்தார்.
“எல்லாம் நம்ம கையிலயா இருக்கு?”, என்று சம்யுவை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டார் அனு.
“ஆமா, எல்லாமே ‘பெரிய ஆளுங்க’ ஏற்பாடுபடித்தானே நடக்குது”, திலோ.
“உக்காருங்க, குடிக்க ஏதாவது கொண்டு வாரேன்”, அனு.
“இல்ல, வேண்டாம். கொஞ்ச நேரம் ஆகட்டும்”, என்று திலோ அனுவின் பின்னே அடுப்படியை நோக்கி நடந்தார்.
அதே நேரத்தில் சம்யுவும், ரிதுவும் இவர்கள் காதில் விழாதவாறு பேசிக்கொண்டும், சைகை செய்துகொண்டும், சம்யுவின் அறையை அடைந்து, கதவை அடைத்தனர்.
“என்னவாம், சம்யு உம்முன்னு இருக்காளே!”, திலோ.
“இன்னும் ஒன்னும் சொல்லல! அவுங்கப்பா இப்ப வந்துருவாரு. அவராவது மககிட்ட சொல்ராறா, இல்ல சர்ப்ரைஸ் குடுக்குராறான்னு பாப்போம்”, அனு.
தன் அறைக்குப் போன சம்யுக்தா வெளியில் வந்து, “அம்மா, யாஷிகாவுக்கு சொல்லிட்டீங்களா?”, என்றாள்.
அதுவரை, பல பேருக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்று கூறி தாய் அனுசியா, சம்யுக்தாவின் அலைபேசியை வாங்கி வைத்திருந்தார். இப்போது மகள் வந்து கேட்டவுடன், ஞாபகம் வந்தவராய் எடுத்துக் கொடுத்துவிட்டு, “இந்தா, நீயே சொல்லிரு” என்றார்.
அலைபேசியை வாங்கிய சம்யு, அங்கேயே நின்றுகொண்டு, யாஷிகாவின் எண்ணை எடுத்து அவளை அழைத்தாள்.
“ஹாய், என்னடீ இந்நேரத்துல!”, என்றாள் யாஷிகா.
“ஆமா, ஒனக்கு வேலை எப்ப முடியும்?”, சம்யு.
“தெரியலயே”, யாஷிகா.
“முடிஞ்சா சீக்கிரமா வீட்டுக்கு வா”
“என்ன, ஏதும் சீரியசா?”
“ஆமா, ரொம்ப!”, என்று உடைந்த குரலில் கூறினாள் சம்யு.
“ஏய்! சஸ்பென்ஸ் வைக்காம சொல்லுடி!”, என்று அதட்டினாள் யாஷிகா.
“நீ இப்ப வருவியா மாட்டியா?”, சம்யுவும் பதிலுக்கு அதட்டினாள்.
“சரி இரு, இப்பவே எங்க கம்பெனில கேட்டுட்டு வரேன். ரிதுட்ட சொல்லிட்டியா, அவ வராளா?”
“அவ ஏற்கனவே இங்கதான் இருக்கா. உனக்குதான் அம்மா சொல்றேன்னு சொல்லிட்டு லேட் பண்ணிட்டாங்க. அதான் நானே இப்ப சொல்றேன்”
அவள் இப்படிக் கூறியவுடன், யாஷிகாவால் ஓரளவுக்கு அனுமானிக்க முடிந்தது.
“ஒன்ன பொண்ணு பாக்க அப்பா ஏற்பாடு பண்ணிட்டாரா?”, யாஷிகா.
“ஆமா, இதுக்கு மேல எதுவும் கேக்காத. நா ஃபோன வக்கிறேன்”, என்று சம்யு சற்று அழும் தொனியில் அலைபேசியைத் துண்டித்து, முன்பு இருந்ததுபோல் தாய் அனுசியாவிடமே கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டாள்.
அதுவரை அறையில் காத்திருந்த ரிது, “என்னடீ, அவ வராளா?”, என்றாள் ஆர்வமாக.
“ஆமா! அவ வந்து என்ன செய்ய?”, சம்யு.
“ஏய்! இப்ப என்ன நடந்து போச்சுன்னு இப்படி ஃபீல் பண்ற? ஒன்னப் பாக்க வர்றவங்ககிட்டயே புடிக்கலைன்னு சொல்லிட்டாப் போச்சு”, ரிது.
“அதெப்படி சொல்ல முடியும்? அப்பால்ல ஏற்பாடு பண்றாரு! வர்றவங்க முன்னாடி போய் நிக்கவே எனக்குப் பிடிக்கல ரிது”
“கொஞ்சம் பொறு சம்யு. இப்பதான் யோகிட்டப் பேசினேன். அவர், ரெஜிஸ்டர் மேரேஜுக்கு பக்காவா எல்லாம் ரெடி பண்ணிட்டாராம். நீங்க போக வேண்டியது மட்டும்தான் பாக்கியாம்!”
“என்னடீ சொல்ற! எப்பப் பேசுன? என்னதான் ஏற்பாடு பண்ணாலும், அத முடிச்சப்பறம்தான வீட்ல சொல்ல முடியும்!”
“ஆமாடீ! அதுனாலதான் சொல்றேன், இப்பவே மொகத்தத் தூக்கி வச்சுகிட்டு நீயே காட்டிக் குடுத்துறாத”
“இப்ப நா என்ன செய்ய? ஒரே கன்ஃபியூசனா, டென்ஷனா இருக்கு ரிது”
“வர்ற மாப்பிள்ளையப் பத்தி நல்லா விசாரிச்சுட்டு, அப்பறம் சொல்றோம்னு சொல்லச் சொல்லு”
“நீ வேற! இந்த மாப்பிள்ளைதான் நம்ம மகளுக்குன்னு ஆண்டவன் எழுதி வச்சிருக்கான்னு அப்பா சொன்னாராம்! அம்மா க்ராஸ் இச்சிங்ல (புல்லரிச்சு) எங்கிட்ட வந்து சொன்னாங்க”
“எது எப்படியோ சம்யு. இந்த சிட்டிவேஷன்ல நீ கொஞ்சம் பொறுமையாத்தான் இருக்கணும். இந்த ஒரு நாள மட்டும் நீ எப்படியாவது டென்ஷன் ஆகாம, மத்தவங்களையும் டென்ஷன் ஆக்கிறாம கடத்திருடீ, ப்ளீஸ்! மத்ததெல்லாம் யோகி பாத்துப்பாருன்ற நம்பிக்கை எனக்கிருக்கு”
“சரி, சரி, பாத்துக்கறேன். ஆனா, எனக்கு சித்து மேல இருக்கற நம்பிக்கையவிட யோகி மேல ஒனக்கு ரொம்ப நம்பிக்கை இருக்குபோல!”, என்று கூறிய சம்யு உற்று நோக்கினாள் உண்மைத் தோழியின் கண்களை.
சம்யுவிடமிருந்து, இந்த சூழ்நிலையில் இப்படி ஒரு கேள்வி வரும் என்று எதிர்பாராத ரிது, உண்மையை மறைக்க முயற்சித்துத் தோற்றுப் போனாள்.
ஆனாலும் சமாளிப்பதற்காக, “நம்பறதுல என்ன இருக்கு? அவர் எங்கப்பாவோட ஆளு. அதுனால நம்பறேன்!”, என்று அப்போதைக்குக் மறைக்கப் பார்த்தாள் ரிது.
“ஒங்கப்பாவோட ஆளா! இல்ல ஒன்னோட ஆளா?”, என்று தெளிவாக கேட்டாள் சம்யு.
“ஏய், சம்யு! போதும்டீ இதுக்குமேல இப்போக் கேக்காத. மொதல்ல ஒன்னோட வேலையப் பாப்போம்”, என்று கூறிய ரிது கையில் கொண்டு வந்திருந்த பூவை சம்யு தலையில் வைத்தாள். மணப்பெண் அலங்காரம் ஆரம்பமானது.
அவள் ஆரம்பித்து சிறிது நேரத்தில், குளிர்ந்த மோர் கொண்டுவந்த சம்யுவின் தாய், அவர்கள் இருவரும் எந்த சலனமும் இல்லாமல், சம்யுவின் அலங்கார வேலையில் மும்முரமாக இருப்பதைக் கண்டு ஆச்சரியத்துடன் அகன்றார்.
வெளியில் அமர்ந்திருந்த திலோத்தமையிடம் வந்தவர், “ஒரு ரியாக்ஷனையும் காணமே!”, என்றார் அனுசியா.
“எல்லாம், நா பெத்தது வந்திருக்குல்ல! அது எதாவது சொல்லி ஆஃப் பண்ணி வச்சிருக்கும்”, திலோ.
“இருக்கும், இருக்கும். ஏன்னா… நீங்க வர்ற வரைக்கும் கண்ணக் கசக்கிட்டுதான இருந்தா!”
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே யாஷிகா வீட்டை அடைந்தாள். வெளியில் யாரும் இல்லை, ரிதுவின் காரைத் தவிர. அதுவரை யாரும் பெண் பார்க்க வந்திருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் உள்ளே நுழைந்தாள்.
“வாம்மா யாஷிகா”என மகிழ்ச்சியுடன் அழைத்தார் அனு.
“வாடீ வா, ரெண்டும் உள்ளதான் இருக்குதுக, போ!”, என அனுப்பினார் திலோ.
சூட்டைத் தணிக்க யாஷிகாவின் கையில் குளிர்ந்த மோரைக் கொடுத்தார் அனு.
வெளியில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. சம்யுக்தாவின் தந்தை தாமோதரன்தான் வந்திறங்கினார். ஓட்டுநரிடம் ஏதோ கூறி, காரை அனுப்பிவைத்துவிட்டு திரும்பினார்.
அதற்குள் பக்கத்தில் வந்து நின்றுவிட்டார் அனுசியா. கணவரின் கையில் வைத்திருந்த பைகளில் ஒன்றை வாங்கிக் கொண்டு அவருடன் நடந்தார்.
ஏதிரில் திலோவைக் கண்டதும் சம்பிரதாயமாக வரவேற்று, சில வார்த்தைகள் பேசிவிட்டு தன் அறைக்குள் புகுந்துகொண்டார் தாமோதரன்.
“என்னங்க, எல்லாரும் எப்ப வருவாங்க?” என்று அறையின் உள்ளே இருக்கும் தன் கணவருக்குக் கேட்க வேண்டும் என்பதற்காக சத்தமாகக் கேட்டார் அனு.
“ஏழு மணியாகுமாம். இப்பத்தான் ஃபோன் வந்துச்சு”, என்றார்.
“அவ்ளோ நேரமாகுமா? முன்னாடியே சொல்லிருக்கக் கூடாதா? இப்பத்தான மணி மூன்றரையாகுது!”, அனு.
உள்ளிருந்து ஒரு சத்தமும் வரவில்லை. தாமோதரன் தன்னை புத்துணர்வூட்ட குளியலறைக்குச் சென்றுவிட்டார் என்று புரிந்துகொண்ட அனு அதற்குமேல் ஒன்றும் கேட்கவில்லை.
சம்யுவின் அறையில் இருந்தவர்களுக்கும், இவர்களின் பேச்சு தெளிவாக கேட்டது.
©©|©©
தன் நண்பன் சித்தார்த்திற்கு விசயத்தை சொல்லலாம் என்று யோகிதாஸ் அலைபேசியில் அவனை தொடர்பு கொண்டான்.
எதிர்முனையில் மணி அடித்துக்கொண்டே இருந்தது. சிறிது நேரத்தில் ஒரு குறுஞ்செய்தி யோகியின் அலைபேசிக்கு வந்தது. “Sorry, I have a meeting now. Call you soon”
அதே நேரத்தில் யோகியின் முதலாளி ராஜசிம்மனிடமிருந்து அழைப்பு வந்தது, “எங்க இருக்கீங்க யோகி?”
“குட் ஈவினிங்க சார்! நா டி-நகர்ல இருக்கேன் சார்”, யோகி.
“அங்க வேலையெல்லாம் எப்படிப் போய்கிட்டு இருக்கு?”, ராஜு.
“ஃபிப்ட்டி பர்சன்ட் கம்ப்ளீட் சார்”, யோகி.
“சரி அதப் பாருங்க. நா மாலுக்கு வந்தேன். இங்க சில வேலைய முடிச்சிட்டு போக நேரமாகும். நீங்க அங்க வேலைய முடிச்சிட்டா அப்டியே மாலுக்கு வந்திருங்க”
“எஸ் சார்!”
சீக்கிரம் சித்துவை தொடர்புகொண்டு இந்த விசயத்தைப் பற்றி கூற வேண்டும் என்று நினைத்த யோகிக்கு, முதலாளியின் திடீர் அழைப்பு அவனது எண்ணத்தில், செயலில் சற்று தொய்வை ஏற்படுத்தியது.
ஆனால், சற்று நேரத்திற்கெல்லாம் சித்துவிடமிருந்து அழைப்பு வந்தது யோகிக்கு. யோகி தன்னிடம் ரிது கூறிய விபரங்களை சித்துவிடம் கூறினான்.
“என்ன மச்சி சொல்ற! இன்னைக்கா, இப்பவா?”, சித்து.
“ஆமா மச்சி! சரி, நீ இப்ப என்ன செய்யலாம்னு நெனக்கிற?”, யோகி.
“நா கிளம்பி சம்யு வீட்டுக்கே போயிறவா?”, சித்து.
“போயி?”
“அங்க என்ன நடக்குதுன்னாவது தெரிஞ்சிக்கலாம்ல?”
“தெரிஞ்சு என்னப் பண்ணப்போற? எதுக்கு வந்தன்னு கேட்டா என்ன சொல்லுவ?”
“இல்ல, சம்யு வீட்டுக்குப் போகல, வீட்டுக்கு பக்கத்துல நின்னு என்ன நடக்குதுன்னு வாட்ச் பண்றேனே! ப்ளீஸ் மச்சி, ஐ கான்ட் கன்ட்ரோல் மீ!”
“சரி, கொஞ்சம் பொறு! நானும் வறேன்”
“வர லேட்டாகுமா மச்சி?”, என்று சித்து சற்றும் பொறுமை இல்லாமல் கேட்டான்.
“நீ மொதல்ல சம்யுகிட்ட பேசி…, இல்ல, இல்ல ரிது அல்லது யாஷிகாவுக்கு ஃபோன் பண்ணி, சம்யுவ தைரியமா இருக்கச் சொல்லு. அப்பறம் ஒங்கம்மாவுக்கு ஃபோன் பன்னி அவங்க எங்க இருக்காங்கன்னு கேளு”, யோகி சற்று சரியாக கனித்தான்.
“இப்ப அம்மாட்டக் கேட்டு என்னடா செய்ய?”, சித்து.
“எல்லாம் காரணமாத்தான் மச்சி! கேளேன்”, யோகி.
“ஓக்கே மச்சி! பைடா”, என்று சித்து அவசரமாக யோகியுடன் இருந்த அழைப்பை துண்டித்தான்.
சற்று நேரத்திற்கெல்லாம் யோகி அங்கு தனக்கிருந்து வேலைகளை முடித்துக்கொண்டு, ஏஆர் மாலுக்கு விரைந்தான். தன் வண்டியை நிறுத்தும்போது, தானே சித்துவின் தாயாரிடம் பேசலாமே என்ற எண்ணம் திடீரென எழ அலைபேசியை எடுத்து அழைத்தான்.
எதிர் முனையில் பாமா, “என்னடா ஒனக்கு மூக்கு வேர்த்துருச்சா! இப்பத்தான் அவன் பேசி முடிச்சான், அடுத்து நீ ஃபோன் பண்ற! என்ன விசயம்?”, என்றார்.
“அம்மா, உண்மையச் சொல்லுங்க! எங்க இருக்கீங்க?”, யோகி நேரடியாக விசயத்திற்கு வந்தான்.
“சென்னை! என்ன பண்ணப் போற?”, பாமா.
“இது போதும் தாயே! மத்தத நா பாத்துக்கறேன்!”, யோகி.
“டேய், டேய், இருடா! நாங்க ஒங்காளுகிட்டயெல்லாம் இன்னும் மேட்டர ஓப்பன் பண்ணல! ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ் குடுக்கலாம்னு இருக்கோம். நீ பாட்டுக்கு எல்லாத்துக்கும் ஃபோனப் போட்டு அலர்ட் பண்ணிராத! என்ன புரியுதா?”, என்றார் பாமா அதட்டலாக.
“எதுக்கும்மா இந்த சர்ப்ரைஸெல்லாம்! வேண்டாமே ப்ளீஸ்!”, என்று யோகி கெஞ்சினான்.
“டேய், நாங்க பொண்ணு பாத்து, எங்கேஜ்மென்ட் ஃபிக்ஸ் பண்ண போறோம்! அவ்ளோதான? அதுக்கு என்னமோ பெரிய தப்புப் பண்ணப் போற மாதிரில்ல ஃபீல் பண்ற?”, பாமா.
“சரி, இப்ப நா சித்துவோட அங்க வரவா? வேணாமா?”, முடிவாகக் கேட்டான் யோகி.
“தேவையில்ல. ஆனா, நீ கெஞ்சிறதுனால அவங்கப்பாட்டக் கேட்டுட்டு சொல்றேன். தேவைப்பட்டா நா கூப்பிடுறேன். பொண்ணு வீட்லருந்து வண்டி வந்துரும்! நா ரெடியாகணும், நீ ஃபோன வை!”
“அவங்க வண்டி அனுப்பற அளவுக்கு வந்துட்டீங்களா? சரி, சரி. அப்ப நா ஒதுங்கி நின்னே வேடிக்கை பார்க்கிறேன்! இப்ப ஃபோன வைக்கிறேன்”
அலைபேசியை துண்டித்தவன், கையோடு சித்துவுக்கு ஒரு அழைப்பு விடுத்து, சித்துவின் குடும்பம் சென்னை வந்திருப்பதை அவனிடம் கூறாமல் (அன்னையின் ஆணை), அவனை சம்யுவின் வீட்டருகே வந்துவிடுமாறும், தானும் அங்கு வந்துவிடுவதாகவும், எது செய்வதாக இருந்தாலும் தான் வந்த பின்பு செய்யலாம் என்று கூறி அலைபேசியை வைத்துவிட்டு, முதலாளி ராஜசிம்மனை சந்திக்க அவரது அறைக்குச் சென்றான்.
©©|©©
நேரம் மாலை ஆறு மணியை நெருங்கிக்கொண்டிருந்தது. மதுரையில் இருந்து புறப்பட்ட சித்தார்த்தின் தாய், தந்தை மற்றும் உறவினர்கள் தாங்கள் சென்னையில் தங்கியிருக்கும் இடத்தை, சம்யுக்தாவின் தந்தைக்கு அலைபேசியில் தெரிவித்தனர்.
சம்யுவின் தந்தை, தன் ஓட்டுநரிடம் முகவரியைக் கூறி அவர்களை அழைத்துவர உத்தரவிட்டார். அனைவரும் ஒரே காரில் வர முடியாததால், அவர்களும் தனியாக ஒரு தனியார் வாகனம் ஏற்பாடு செய்து அதிலும் உறவினர்கள் சகிதம், சம்யுவின் வீட்டிற்கு வந்திறங்கினர்.
பெரியோர்கள் அனைவரும், புன்னகையுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். வீட்டின் உள்ளிருந்து வந்தவர்கள், வாகனங்களில் வந்திறங்கியவர்களை இன்முகத்துடன் வரவேற்று, உள்ளே அழைத்துச் சென்றனர்.
அனைவரும் வந்தமர்ந்ததும், திலோத்தமை சம்யுக்தாவின் அறைக்குள் சென்றார். அங்கு மூன்று தோழிகளும் எதையோ பற்றி கடுமையாக விவாதித்துக்கொண்டிருந்தனர்.
“சீக்கிரம் சம்யுவ கூட்டிட்டு வாங்கடீ! மாப்பிள்ளை வீட்டுக்காரங்கள்லாம் வந்துட்டாங்க!”, என்று திலோ அவசரப்படுத்தினார்.
“அவ தயாராத்தாம்மா இருக்கா”, என்றாள் ரிது.
அப்போதுதான் திலோத்தமை கவனித்தார். பட்டுச் சேலையில், சம்யுக்தா சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு, சற்று கூடுதல் அழகுடன் காணப்பட்டாள்.
“எங்கண்ணே பட்ரும்போல! வாடீ ராசாத்தி! வந்து எல்லாருக்கும் காப்பி கொடு”, என்று அழைத்தார் திலோ.
சம்யுவுடன் ரிதுவும், யாஷிகாவும் வர, அவர்களை அதட்டி அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு, சம்யுவை மட்டும் கையோடு சமையலறைக்கு அழைத்துச் சென்றார் திலோ.
அங்கிருந்து, அனைவருக்கும் கொடுப்பதற்காக காப்பி குவளைகள் அடங்கிய தாம்பாளத்தை கையில் ஏந்தி, குனிந்த தலை நிமிராமல், வரவேற்பறைக்கு வந்து நின்றாள் சம்யுக்தா.
வந்திருந்த பெண்கள் ஏதோ பேசிக்கொள்வதை உணர முடிந்தது, ஆனால் என்னவென்று கேட்க முடியவில்லை. தந்தை தாமோதரன் தன் அருகில் அமர்ந்திருந்த சித்துவின் தந்தை மார்தாண்டம் மற்றும் அவரது அண்ணன் சிவநேசன் ஆகியோரைக் காண்பித்து காப்பியை கொடுக்கச் சொன்னார்.
குனிந்த தலை நிமிராமல், குறிப்பாக அவர்களைப் பார்ப்பதை தவிர்த்து, ஒவ்வொருவருக்கும் காப்பியை கொடுத்துக்கொண்டே வந்தாள் சம்யு.
அதில் ஒரு பெண் மட்டும், “எல்லாருக்கும் குடும்மா. நா அப்பறம் எடுத்துக்கறேன்!”, என்றார்.
அதனால் சம்யு அவரை மட்டும் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவரைப் பார்த்தவுடன் எங்கோ பார்த்து, பழகியவராக தெரிந்தார். ஆனாலும் சம்யு ஏதும் சொல்லாமல் அமைதியாக நகன்று எல்லோருக்கும் கொடுத்துவிட்டு, கடைசியாக அந்த பெண்ணிடம் வந்து காப்பியை எடுத்துக்கொள்ளுமாறு நீட்டினார்.
“எம்பையன் வரல. ஆனா என்னப் பாத்தா எம் பையனப் பாத்த மாதிரி இருக்கும்! உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா தாயி”, என்றார் சித்துவின் தாய் பாமா!
அப்போதுதான் சம்யுக்தா, பாமாவை நன்றாகப் பார்த்தாள். ‘ஓ! இது சித்துவோட ஃபேஸ்!’அடுத்த நொடியே, “என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க அத்தை!”, என்று காலை நோக்கி குனிந்தாள். அங்கிருந்த அனைவரின் முகத்திலும் ஆனந்த அலைகள் பொங்கின.
ஆனால், பாமா சம்யுவின் கை தன் காலில் படாமல் தடுத்து, “தீர்க்க சுமங்கலியா இரு! மாமாட்ட ஆசீர்வாதம் வாங்கிக்க”, என்று சித்துவின் தந்தை மார்தாண்டத்தைக் காண்பித்தார்.
அப்பொழுதுதான் சித்துவின் தந்தையையும் நோக்கினாள் சம்யுக்தா. உடனே அவரிடம் ஆசீர்வாதம் பெற்று, அதற்குமேல் பேச முடியாமல், கண்களில் ஆனந்தக் கண்ணீருடன், வேகமாக அறைக்குள் சென்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.
©©|©©
ஏஆர் மாலில், ராஜசிம்மன் புதிய கஃபே திறப்பது பற்றி யோகியிடம் பேசிக்கொண்டிருந்தார்.
“நம்ம கஃபேக்கு மேல இருக்குற காலி போர்ஷன்ல என்ன செய்யலாம்?”
“இப்போதைக்கு ஒன்னும் தோனலையே சார்!”, யோகி வேகமாக பதிலளித்தான்.
“ஆமா! இப்போதைக்கு உங்களுக்கு எதுவுமே தோனாதுதான்! சம்யுவுக்கு எங்கேஜ்மென்ட், அதுக்காவது போகணும்னு தோனுதா?”
“ஆமா சார்! தோனுது. பட் இப்ப எப்படி போறதுன்னுதான் யோசிக்கிறேன்”, என்றான் தயக்கமாக.
“வாங்க போகலாம்!”, என்று எழுந்த ராஜசிம்மன் “நா கொஞ்சம் பேசலாம்னுதான் கூப்பிட்டேன், ஆனா ஒங்க பொசிசனைப் பாத்தா இப்ப கிளம்பிலாம்னு முடிவு பண்ணிட்டேன். நாம பேச வேண்டியத காரிலேயே பேசிகிட்டே போயிருவோம். வாங்க!”என்றார்.
“கார்லயா, எங்க சார்?”, என்றான் யோகி மேலும் அவசரமாக.
“சம்யு வீட்டுக்குத்தான்! போகும்போதே டிஸ்கஸ் பண்ணுவோம். வாங்க யோகி!” என்று ராஜு உரிமையோடு அழைத்து அறையில் இருந்து புறப்பட்டு, தன் காரை நோக்கி நடந்தார்.
யோகியும் அவசரமாக தன் உடைகளை சற்று சரி செய்தவனாக, ‘பழம் நழுவி பாலில் விழுந்துவிட்டதே!’ என்று அவர் பின்னால் சென்றான்.
கார் ஓட்டுநர் காரின் பின் கதவை திறந்து ராஜசிம்மன் அமர்ந்ததும் கதவை மூடி, தன் இருக்கையில் அமர்ந்தார். யோகி முன் இருக்கையில் அமர்ந்தவுடன் கார் சம்யுவின் வீட்டை நோக்கிப் பறந்தது.
“ஆர் யூ ரிலாக்ஸ்டு யோகி?”, என்றார் ராஜு.
“எஸ் சார்!”, என்று யோகி, தன் இருக்கையில் இருந்து சற்று பின்னோக்கி திரும்பி, ராஜுவை பார்த்தவாறு அமர்ந்துகொண்டான்.
“உங்களுக்கு ஸ்போட்ஸ்ல இன்ட்ரஸ்ட் இருக்கா யோகி?”
‘இந்த நேரத்துல என்ன விளையாடப் போறார்!’, என்று மனதுள் நினைத்துக்கொண்டே “ரொம்பவே சார்!” என்றான் யோகி.
“இப்ப நாம ஆரம்பிக்கப் போற கஃபே மாடில சில இன்டோர் ஐட்டம்ஸ் போட்டா உங்களால அதுலயும் சேர்த்து கான்சன்ட்ரேட் பண்ண முடியுமா?”, ராஜு.
யோகிக்கு புரிந்துவிட்டது, “பண்ணலாம் சார்!”.
“நம்ம நியூ கஃபேயோட, மாடில பில்லியாட்ஸ், டேபிள் டென்னிஸ், கேரம்னு அரேஜ் பண்ணிட்டு, கீழ கஃபேலயே அங்கங்க சில டேபிள்கள்ல செஸ் விளையாட ஏற்பாடு பண்ணா எப்படிருக்கும்?”, ராஜு தன் புதிய திட்டத்தை விளக்கினார்.
“எக்ஸலன்ட் சார்! நல்ல ஐடியா சார். விளையாட்ட லைக் பண்றவங்களும் நம்ம கஃபேக்கு வர நிறைய சான்ஸ் இருக்கு, அதே நேரத்துல நம்ம கஃபேக்கு வந்தவங்களும் கேம்ஸ்ல கான்சன்ட்ரேட் பண்ண நிறைய சான்ஸ் இருக்கு சார்”, யோகியும் ஆர்வமானான்.
“ஐடியா நல்லாருந்தா, ஆல் கிரிடிட்ஸ் கோஸ் டு மை டாட்டர் ரிது!”, என்றார் ராஜு.
தானும், சித்துவும் தங்களுக்கு விளையாட்டில் அதிக ஆர்வமிருப்பதை ரிதுவிடம் பகிர்ந்துகொண்டதை நினைத்துக்கொண்டான் யோகி. மேலும் டேபிள் டென்னிஸ் விளையாட தங்களுக்கு வசதியில்லை என்று கூறியதும் ரிது, ‘அரேஞ் பண்ணிருவோம்’ என்று கூறிய வார்த்தைகள் ஞாபகத்திற்கு வந்தன.
“ஹலோ யோகி, என்ன திடீர்னு அமைதியாகிட்டீங்க! வாங்க எறங்கலாம் சம்யு வீடு வந்திருச்சு”, என்றார் ராஜு.
©©|©©
சம்யுக்தாவின் அறையில் சம்யுக்தா, ரிது, யாஷிகாவுடன் இப்போது பாமாவும், ரித்திகாவும் அமர்ந்திருந்தனர்.
“ஒங்களுக்கு நாத்தனார் இல்லன்னு நெனச்சுக்காதீங்க! சித்துவோட பெரியப்பா பொண்ணு நா இருக்கேன், அந்த கொறையத் தீர்க்க! அப்பப்ப வந்து போவேன்”, என்றாள் ரித்திகா.
“ஏய், சும்மா இரு ரித்து! புள்ள பயப்புடப் போகுது!”, என்றார் பாமா.
“எனக்கு ஒன்னும் பயமெல்லாம் இல்ல அத்த! இந்த மாதிரி ஃப்ராங்க்கா பேசுறவங்கள எனக்கு ரொம்பப் பிடிக்கும்!”, என்றாள் பதிலுக்கு சம்யு.
அங்கு யாஷிகாவிற்கும், ரிதுவிற்கும் வாய் பார்க்கும் வேலைதான் இருந்தது. அதையும் அவர்கள் செவ்வனே செய்துகொண்டிருந்தனர்.
வெளியில் ராஜசிம்மனின் கார் ஹார்ன் சத்தம் கேட்டதும் ரிது கொஞ்சம் சுதாரித்து, தன் தந்தையை எதிர்பார்த்து, அறையைவிட்டு வெளியில் வந்தாள். அங்கே தன் தந்தை ராஜசிம்மன் முன்னால் வர, யோகி பின்னால் வந்துகொண்டிருந்தான்.
வீட்டிலிருந்து சம்யுவின் தந்தை, ராஜசிம்மனை வரவேற்று, அங்கிருந்த சித்துவின் தந்தை, பெரியப்பா மற்றும் பெரியம்மா ஆகியோருக்கு அறிமுகப்படுத்தினார்.
யோகி அதே நேரத்தில் சித்துவின் தாய் பாமாவை தேடினான். அவரோ அறைக்குள் சம்யுவுடன் ஐக்கியமாகி இருந்தார். உடனே யோகி சற்று வெளியே வந்து, தன் அலைபேசியை எடுத்து பாமாவை அழைத்தான்.
“என்னடா இந்த நேரத்துல! நாந்தான் ஃபோன் பண்றேன்னு சொன்னேன்ல?”, பாமா.
“நீங்க என்ன ஃபோன் பண்றது! நாங்களே வந்துட்டோம்ல! அதுவும் பெரிய சப்போட்டோட!”, என்றான் பந்தாவாக.
“டேய் என்னடா சொல்ற! இப்ப நீ எங்கருக்க?”, பாமா.
“நீங்க எங்கருக்கீங்க? நா அப்பாவப் பாத்துட்டேன். ஒங்களத்தான் பாக்க முடியலா!”
“இருடா வெளில வறேன்”, என்று பாமா அறையைவிட்டு வெளியில் வந்தார். அறையில் இருந்த அனைவரும் அவரை பின்தொடர்ந்தனர்.
“சரி, இப்பவாவது சித்துவ வரச் சொல்லவா?”, யோகி.
“அப்ப அந்தப் பய வரலயா?”, இப்போது யோகியை பார்க்க முடிந்தாலும் அலைபேசியிலேயே பேசினார் பாமா.
“அவந்தான் தாய் சொல்லைத் தட்டாத உத்தம புத்திரனால்ல இருக்கான்! நீங்க சொன்னா, அடுத்த நிமிஷமே வந்துருவான்! வரச்சொல்லவா?”
“சரி வரச்சொல்லு, இனிமே என்ன சஸ்பன்ஸ் வேண்டிக்கிடக்கு!”, என்று கூறியதுதான் தாமதம், யோகி அலைபேசியை துண்டித்து, வீட்டை விட்டு வெளியில் வந்தான். சுற்றுமுற்றும் பார்த்தான். சற்று தொலைவில் நின்று இவனையே பார்த்துக்கொண்டிருந்தான் சித்தார்த்.
சித்தார்த் தன் நிறுவனத்திலிருந்து கிளம்பி இங்கு வருவதற்குள், அவனது தாய், தந்தை மற்றும் உறவினர்கள் அனைவரும் சம்யுவின் வீட்டின் உள்ளே சென்றுவிட்டார்கள். அதனால், அங்கு என்ன நடந்தது, நடக்கின்றது என்று எதுவும் அறியாதவனாய், தவித்திருந்தான், தனித்திருந்தான்.
அவனைப் பார்த்த யோகி, அருகில் வருமாறு சைகை செய்தான். அவன் தயங்கியவாறு வருவதைப் பார்த்த யோகி, வேகமாக அவன் அருகிலேயே சென்று, லேசா அணைத்து, “கங்ராட்ஸ் மச்சி!”, என்று கைகுலுக்கினான்.
“என்ன மச்சி சொல்ற!”, சித்து.
“உள்ள வந்து பாரு மச்சி! எல்லாமே தன்னால புரியும்!”, என்று சித்தார்த்தை வேகமாக வீட்டினுள் இழுத்து வந்தான் யோகி.
அங்கு அனைவரும் மொத்தமாக நின்றது சித்தார்த்துக்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது. இன்ப அதிர்ச்சி! அனைவரும் கேலியும், சிரிப்புமாக அவனைப் பார்த்தனர். வீடே மகிழ்ச்சியில் திழைத்தது.
அடடா அடடா
வீடே கோவில்தான்
திருநாள் தினமே
இந்த வாழ்வில்தான்
©©|©©