SY19

சரி © 19

 

அலுவலக வேலையில் மூழ்கி இருந்த சித்தார்த், திடீரென ஞாபகம் வந்தவனாய் அலைபேசியை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தான். காலையில் யோகிதாஸ் ரிதுவிடமும், திலோத்தமையிடமும் பேசிக்கொண்டிருந்ததை சம்யுக்தாவிடம் தெரிவித்துவிடலாம் என்று எண்ணி அவளை அழைத்தான்!

 

எதிர் முனையில் எடுத்த சம்யு உற்சாகமாக ஹாய்!என்றாள்.

 

ஹாய் சம்யு! வேலையா இருக்கியா?, என்று சித்து உற்சாகம் இல்லாமல் கேட்டான்.

 

ஆமா! வரேன் இருங்க, கட் பண்ணிறாதீங்க!, என்று மெல்லிய குரலில் கூறிவிட்டு தன் இடத்தை விட்டு எழுந்து, பேசுவதற்கு வசதியான இடத்திற்கு சென்றாள்.

 

ம், இப்பச் சொல்லுங்க, சம்யு.

 

நேத்து நைட், நா பேசுனதுக்கப்பறம் ரிதுட்ட பேசுனியா?, சித்து.

 

பேசுனேன். ஆனா, அவ அடங்கவே இல்ல. அப்பறம் நானே ஃபோன கட் பண்ணிட்டு தூங்கிட்டேன். சரி… யோகி என்ன சொன்னார்?

 

நோ பாசிட்டிவ் ரிசல்ட்! ஆனா, அத அவனே ரிதுகிட்ட சொல்லிக்கிறேன்னு சொல்லிட்டான். காலைல ரிதுக்கு கால் பண்ணி கஃபேக்கு வரச்சொன்னான். அப்பறம் என்னாச்சுன்னு தெரியல

 

என்ன சொல்றீங்க சித்து! ஏன்? ரிதுவுக்கு என்ன கொற?

 

கொறயே இல்லன்றதுதான் ரீசன் சம்யு!

 

புரியல சித்து! இப்படியெல்லாமா ஒரு ரீசன் இருக்கும்?

 

இருக்கும் சம்யு! அதெல்லாம் ஒங்களுக்கு புரியறதே இல்ல! யூ நோ ஒன் திங்? ஹீ இஸ் எங்கேஜ்டு வித் சம் ஒன்!

 

ஏற்கனவே யோகிக்கு யாருடனோ காதல் உள்ளது என்ற இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் சம்யுவால் நம்ப முடியவில்லை. ஆச்சரியத்தில் அவசரமாக கேட்டாள்.

 

யோகி எங்கேஜ்டா! யாரது அந்த இன்னொருத்தி?, சம்யு.

 

இன்னொருத்தியா? இல்லையே ஒருத்திதான! அதுவும் யாருன்னு இன்னும் எனக்குத் தெரியல. நைட்டே கேட்டேன். இன்னிக்கி இன்ட்ரோ பண்றேன்னு சொல்லிருக்கான்

 

இன்னிக்கேவா! அப்படின்னா அவளும் இதேச் சென்னைதானா!

 

ஐ திங் சோ! அதப் பத்தி ரொம்ப பேசல. பட், ரிதுவப் பத்தியும், திலோ மேடம் சார்கிட்ட சொன்னா அதுக்கு சார் எப்படி ரியாக்ட் பண்ணுவாரோன்னும் கொஞ்சம் ஃபீல் பண்ணிகிட்டிருந்தான், சித்து.

 

ஃபீல் பண்ணா போதுமா சித்து? ரிது மனசு எவ்ளோ கஷ்டப்படும்! இப்ப அவளுக்கு என்னதான் முடிவு?, சம்யு சம்பந்தமில்லாமல் சித்துவுடன் சண்டைக்கு வந்தாள்.

 

ஏய், கூல் சம்யு! எங்கிட்டக் கேட்டா, நா என்ன பண்ண முடியும்? நீயே யோகிக்கு கால் பண்ணி பேசிறேன். ஒரு க்ளாரிட்டிக்கு வந்துருவ!

 

நா என்னோட ஃப்ரண்டுக்காக ஒங்கட்டதான் கேக்க முடியும்! நீங்கதான் ஒங்க ஃப்ரண்டுக்காக, ஃப்ரண்டோட ஃப்யூச்சருக்காக, லைஃப் இம்ப்ரூவ்மென்ட்காக, ஒங்க ஃப்ரண்டுட்டக் கேக்கணும் சித்து!

 

அதென்ன ஃப்யூச்சர், இம்ப்ரூவ்மென்ட் அப்டின்னெல்லாம் சொல்ற சம்யு!

 

ஆமா சித்து! ரிதுவோட யோகி சேந்தா, யோகியோட லைஃப் ஸ்டைலே டெவலப் ஆகிரும்ல சித்து!

 

அப்ப ரிதுவோட சேரலைன்னா டெவலப் ஆகாதா?, சித்து சம்யுவின் எண்ணங்களை ஏற்றுக்கொள்ள மறுத்தான்.

 

அப்படிச் சொல்லல, பட் ரிதுவுக்கும் புடிச்சிருக்கு, யோகிக்கும் புடிச்சிருந்தா, ரெண்டு பேருக்கும் லைஃப் நல்லாருக்கும்னு நா நெனக்கிறேன், சம்யு.

 

ரெண்டுபேருக்கும் நல்லாருக்குமா? அதுதான் என்னோட டவுட்?

 

ஒய் நாட்?

 

ஆமா, அங்கதான் பெரிய நாட் அதாவது பெரிய முடிச்சு இருக்குது! அத நீங்கள்லாம் புரிஞ்சிகிட்டா இப்படி எல்லாம் கேக்க மாட்டீங்கன்னு நெனக்கிறேன். அதான் இந்நேரம் மீட் பண்ணிருப்பாங்களே! யோகி கிளாசே எடுத்திருப்பான்!

 

அப்படின்னா… ரிதுவோட லவ், ஒன் ஸைட் லவ்வா சித்து!

 

டெஃப்பனட்லி சம்யு! எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு. இருந்தாலும் நாம யோகியோட பொஷிசன்ல இருந்து பாக்கணும்

 

எனக்கு யோகியோட பொஷிசன்ல இருந்தெல்லாம் பாக்கத் தெரியாது சித்து! நா ரிதுவோட பொஷிசன்ல இருந்துதான் பாப்பேன், எனக்கு ரிதுதான் முக்கியம்!, தன் தோழியை விட்டுக்கொடுக்காமல் பேசினாள் சம்யு.

 

சரி விடு சம்யு! நாம ஏன் சண்டை போட்டுக்கணும்? நடக்கறது நடக்கட்டும், நம்ம கல்யாண விசயம் எந்தளவுல இருக்கு?, சித்து பேச்சை மாற்றினான்.

 

அதச் சொல்லத்தான் நேத்து கால் பண்ணேன். ஆனா இந்தப் பிரச்சனையில வேற ஏதேதோ பேசி, மறந்தே போச்சு!

 

என்ன சொல்ல வந்த, சம்யு?

 

இந்த வீக்கென்டுல ஒங்க வீட்லருந்து எனக்கு பூ வைக்க வறாங்க. அப்பறம் எங்க வீட்டுலருந்து எல்லோரும் ஒங்க ஊருக்கு, ஒங்க வீட்டுக்கு வறோம்

 

பூ வைக்கவா! அதுக்கெதுக்கு அவுங்க வரணும்?

 

ஆமா, அதெல்லாம் சம்பிரதாயம்!

 

அப்பறம் நீங்க எல்லாரும் எங்க வீட்டுக்கு வறீங்க!, மனதார மகிழ்ந்தான் சித்து.

 

ஆமா, அதுக்குப் பேரு வீடறிதல்!, சம்யு சம்பிரதாயங்களை சித்துவுக்கு சொல்லிக்கொண்டிருந்தாள்.

 

ச்சே! நம்ம லவ் இவ்ளோ நல்லாப் போற இந்த நேரத்துல ரிதுவோட மனசு ரொம்ப கஷ்டத்துல இருக்கறது என்னாலயே தாங்கிக்க முடியல சம்யு! நீ எதுக்கும் ரிதுவுக்கு கால் பண்றியா?

 

ம், ஓக்கே சித்து! நா ஃபோன கட் பண்ணிறவா?

 

ஓக்கே, பை!

©©|©©

 

உச்சி முதல் பாதம் வரை சூரியன் சுட்டெரிக்க, உள்ளத்திலும் உற்சாகமின்றி, நொந்து, வீட்டை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தாள் ரிது. அவளின் அலைபேசி அழைத்தது. அது சம்யுதான். எடுத்து உயிர்ப்பித்து, காதில் வைத்து சுரத்தையில்லாமல் பேசினாள் ரிது.

 

சொல்லுடீ

 

என்னாச்சு ரிது! ரொம்ப டல்லா இருக்க? யோகிட்ட இருந்து ரெஸ்பான்ஸ் வந்துச்சா?, சம்யு.

 

ரெஸ்பான்ஸா! பயங்கர ரெஸ்பான்ஸ் போ!, உடைந்த குரலில் பேசினாள் ரிது.

 

என்னடீ சொல்ற! ஆர் யூ நார்மல்?, சம்யு பதறினாள்.

 

நோ!

 

நீ இப்ப எங்கருக்க? நா கிளம்பி வரவா ரிது?

 

ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்காத, நா இப்ப வீட்டுக்கிட்ட நடந்து போய்கிட்டிருக்கேன்

 

ஏன்டீ, வண்டி என்னாச்சு?

 

என்ன மாதிரியே அதுவும் ரிப்பேராப் போச்சு!

 

ரிது, டோன்ட் பி சில்லி! என்னாச்சுன்னு சொன்னாத்தானடீ தெரியும்! ப்ளீஸ் டெல் மீ, வாட் ஹாப்பன்ட்?

 

ம்… அந்த உத்தம புத்திரன் வரச் சொன்னாருன்னு ஆசையா, அவசரமா போனேனா! உக்கார வச்சு கத சொல்லிட்டிருக்காரு! அவருக்கு எம்மேல லவ்வில்லையாம்! அதுக்கு காரணமா எங்கப்பா, ஸ்டேட்டஸ் அது இதுன்னு என்னென்னமோ சொல்றாரு! நா கிளம்பி வந்துட்டேன்

 

அது மட்டுமில்ல ரிது, நா இப்பத்தான் சித்துக்கிட்ட பேசிட்டிருந்தேன். யோகிக்கு ஏற்கனவே வேற ஒருத்தியோட லவ்வாம்டீ. அதுவும் சென்னைலயே இருக்கலாம்னு கெஸ்ஸிங்

 

இந்த ஊர்ல, யாருடீ அந்த சக்காளத்தி!, ரிதுவின் சோகம் கோபமாக மாறியது.

 

தெரியல ரிது. ஆனா உனக்கு கோபத்துல வார்த்தையெல்லாம் மாறுதுடீ! ப்ளீஸ் கன்ட்ரோல் யுவர்செல்ஃப்!

 

நோ சம்யு! இப்போதைக்கு என்னக் கன்ட்ரோல் பண்ணக்கூடிய ஒரே ஆள் அம்மாதான். வீட்டுக்குப் போய் அம்மாட்ட எல்லாத்தையும் சொல்லி, ன்னு அழனும்போல இருக்கு சம்யு!

 

பேசிக்கொண்டே வீட்டின் அருகில் வந்திருந்தாள் ரிது. வாசலில் நின்றிருந்த காவல்காரர்(செக்யூரிட்டி) அவள் நடந்து வருவதைப் பார்த்ததும் அவளை நோக்கி வேகமாக வந்தார். அதனால் வந்த அழுகையை அடக்கிக்கொண்டாள் ரிது.

 

மறுமுனையில் சம்யு என்ன செய்வதென்று தெரியாமல், அழாதடீ, நா லீவு போட்டுட்டு இப்பவே வீட்டுக்கு வறேன், என்று ஆறுதலாகக் கூறினாள்.

 

வீட்டுக்கு வந்துட்டேன் சம்யு. நா அப்பறம் பேசறேன், என்று அலைபேசியை அணைத்து பைக்குள் வைத்தாள்.

 

அருகில் வந்த காவல்காரர் பதட்டத்துடன் வண்டிக்கு நடந்தவற்றை கேட்டறிந்துகொண்டார். வண்டிச்சாவியை அவரிடம் கொடுத்துவிட்டு, அவரைக் கடந்து, அவள் மாளிகையின் சுற்றுச்சுவருக்குள் நுழைந்ததும், ஆங்காங்கே தோட்டத்தில் வேலையில் இருந்தவர்கள் இவளைப் பார்த்து, முதலாளி மகள் என்ற மரியாதையில் புன்னகைத்தனர்.

 

ஆனால், அவர்களின் புன்னகையெல்லாம் ரிதுவின் கலங்கிய, கற்பனைக் கண்களில் கேலியாக சிரிப்பதுபோல் தெரிந்தன. அவர்களைக் கடந்து வாசல் அருகில் வரும்போதுதான் கவனித்தாள், தந்தை ராஜசிம்மனின் கார் இருக்க வேண்டிய இடத்தில் பத்திரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

 

அப்பா வந்திட்டாரா! நேரடியா அப்பாகிட்டயே சொல்லி ஒரு முடிவுக்கு வந்திட வேண்டியதுதான்!, என்று எண்ணியவளாய் வீட்டின் உள்ளே நுழைந்து, தந்தையின் அறையை நோக்கி நடந்தாள்.

 

அவள் அறையின் அருகில் செல்லச்செல்ல, உள்ளே தாய் திலோத்தமையும், தந்தை ராஜசிம்மனும் பேசிக்கொள்வது கொஞ்சம் கொஞ்சமாக தெளிவாகக் கேட்டது. கேட்ட இடத்திலேயே நின்றுவிட்டாள் ரிது. திலோதான் சற்று சத்தமாக பேசினார்.

 

நைட் நீங்க இந்த மாதிரி பேசலையே, ரிதுப்பா!, திலோ.

 

அப்ப யோகியும் நம்ம பொண்ண விரும்புறதா நெனச்சுகிட்டு இருந்தேன் திலோ, ராஜசிம்மன் அமைதியாகச் சொன்னார்.

 

எது எப்படியோ! நம்ம பொண்ணுக்கு யோகிய மேரேஜ் பண்ணி வச்சிருவோமே, ப்ளீஸ்! அவ வாழ்க்க சந்தோசமா இருக்க வேணாமா?, திலோ.

 

தான் பேச நினைத்ததை, தன்னைவிட உரிமையாக தன் தாய் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்ட ரிதுவந்திகாவிற்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அங்கேயே உறைந்து நின்றாள். அம்மாவின் கண்டிப்பிற்குப் பின் அன்பும் அளவிடமுடியாமல் இருப்பதை நினைத்து உள்ளூர பெருமைப்பட்டாள்.

 

சரியா யோசி திலோ! நம்ம பொண்ணு வாழ்க்கையப் பத்தி மட்டும் நீ யோசிக்காத, ராஜு.

 

நமக்கு இருக்கறது ஒரே பொண்ணுதானங்க!, திலோ.

 

ஒரு பொண்ணுதான். ஆனா, ரிது பொறக்கும் போது, நம்மால ஒரு பொண்ணு மட்டும்தான் பெத்து வளக்க முடியும்ற நிலைமைலயா இருந்தோம்? யோசிச்சுப்பார், அந்த நேரத்துல எங்கம்மாகூட ஒனக்கு தொணைக்கிருந்தாங்க. உடல் ஆரோக்கியம், செல்வம், செல்வாக்குன்னு எல்லாமே இருந்தும், நாம ஏன் ஒரே பொண்ணோட போதும்னு, வேற பெத்துக்கல?

 

, கணவனையே வெறித்துப் பார்த்தார் திலோ.

 

நம்மோட அன்பு, பாசம் எல்லாம் ரிது மேல மட்டும்தான் இருக்கணும், இன்னொன்னு இருந்தா, எதா இருந்தாலும் ஷேர் பண்ண வேண்டி இருக்கும். அது கொஞ்சம் முன்னப் பின்ன இருந்தாக்கூட ரிது மனசு கஷ்டப்படும்னுதான பெத்துக்கல? அப்படி அப்ப இருந்தே, இந்த ஒரே பொண்ணுமேல பாசமும், அக்கரையும் வச்சிருக்கிற நாம, அதுவும் நா எப்படிம்மா தப்பான முடிவுக்குப் போவேன். நீ கொஞ்சம் யோசி!

 

யோசி… சரியா யோசின்னே சொல்றீங்களே, அப்படி என்னத்தத்தான் யோசிக்கச் சொல்றீங்க?, என்றுமில்லாத அளவில் சண்டைக்கே வந்தார் திலோ.

 

சரி திலோ! மொதல்ல ஒன்னோட பாயின்ட் ஆஃப் வியூவில இருந்தே வறேன். ரிதுவ யோகிக்கு கட்டி வச்சுருவோம். அதுக்கபறம் ரெண்டுபேரும் என்ன செய்யணும், எங்க இருக்கணும்? அதயும் நாமதான் டிசைட் பண்ணுவோம், இல்லைன்னாலும் இந்த சென்னைலயே எங்கயோ ஒரு எடத்துல புதுசா ஒரு ஃப்ளாட் வாங்கி வாழ்றதா வச்சுக்குவோம். யோகிக்கு இதே வேலையா இருக்கப்போறது இல்ல. இன்னும் அதிகமா, கைநிறைய சம்பாத்தியம், வசதிகள் எல்லாம் பெருகிடும். யோகியப் பாக்கறவங்க எல்லாம் மரியாதையோடையும், பணிவாவும் நடந்துப்பாங்க. ஆனா, யோகிக்கு பின்னாடியும் எல்லாருமே அப்படித்தானா பேசுவாங்க?

 

 

நிச்சயமா இருக்காது! எல்லாமே நம்ம பொண்ணால கெடச்சதுன்னுதான் சொல்லுவாங்க! ஆனா, நம்ம ரிதுவ லவ் பண்ணித்தான் யோகி அந்த பொசிஷனுக்கு வரணுமா? நிச்சயம் இல்ல! அந்தளவுக்கு யோகிக்கு ஆசையும் இல்ல. அதெல்லாம் ஃபுல்லா ஸ்டடி பண்ணித்தான் இந்த கஃபேயோட பவர அவர்கிட்ட கொடுத்துருக்கேன். மதுரைல இருந்து வந்த யாரோ ஒருத்தனுக்கு, நா ஈசியா இவ்வளவு இம்பார்டன்ஸ் எப்படிக் கொடுப்பேன்? இது மட்டுமில்ல இன்னும் அடுத்தடுத்து எல்லா பிஸினசிலயும் ஒர்க்கிங் பார்ட்னராக்கூட ஆக்கிக்க நா ரெடியாத்தான் இருக்கேன்! ஆனா அதுக்கெல்லாம் கொஞ்ச நாள் ஆகும். இப்ப சொல்லு, இதெல்லாம் யோகிக்கு யாரால கெடக்கும்?

 

நீங்களே சொல்லுங்க, நா கேக்க மட்டும் செய்யிறேன், எரிச்சலுடன் திலோ கூறினாலும், எதிர்த்துப் பேசுவதை குறைத்துக்கொண்டார்.

 

யோகிக்கு தன்னோட விடா முயற்சியாலயும், உழைப்பாலயும், அறிவுத் திறமையாலயும், சமயோஜித புத்தியாலயும், அனுபவத்தாலயும் மட்டுமே கிடைக்கப் போற வெகுமதிகள்! இதெல்லாம் நம்ம கம்பெனில இருந்தா மட்டும் இல்ல, எந்தக் கம்பெனில இருந்தாலும் யோகிக்கு கெடச்சிரும். அந்த நம்பிக்க யோகியவிட எனக்கு அதிகமாவே இருக்கு! இப்பச் சொல்லு, யோகி பெரிய ஆளா? நம்ம ரிது பெரிய ஆளா?

 

அறையின் வெளியில் நின்றவாறே இதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த ரிதுவுக்கு அவள் மேலேயே சற்றுக் கோபம் வந்தது. தான் இழுக்கும் பக்கம் யோகி வந்துவிடக்கூடும் என்று எளிதாக எண்ணியவளுக்கு இது புதிய கோணமாக இருந்தது. உள்ளே திலோவிடம் அமைதி. ராஜசிம்மன் தொடர்ந்தார்.

 

சரி விடு! நீ நம்ம பொண்ண விட்டுக்கொடுக்க மாட்ட! நீ மனசார விரும்புற ஒருத்தருக்கு, அவரின் திறமையாலயே கிடைக்கப்போற வெற்றிகரமான வாழ்க்கைக்கு தடையா இருப்பியா? வாழ்க்கையே உன்னாலதான் கெடச்சிச்சுன்னு, மத்தவங்க மட்டுமில்ல அவனோட சந்ததியே பேசுறத விரும்புவியா?, என்று சந்ததியே என்பதில் அழுத்தம் கொடுத்துக் கேட்டார் ராஜு.

 

நீங்க இப்ப ஒரு பிஸினஸ்மேனா பேசுறீங்க! அப்பாவா பேசல ரிதுப்பா!

 

ஓக்கே, ஓக்கே! கூல்… நான் யோகிய வற்புறுத்தி ரிதுவுக்கு கட்டி வச்சிறவா?

 

கட்டி வைக்கலாம்! ஆனா காதலிக்கவைக்க முடியாதேப்பா!, என்று மனதுக்குள் தன் ஒருதலைக் காதலை புதைத்துவிட்டு, சாப்பாட்டு மேசையை நோக்கிப் போய், அங்கிருந்த தண்ணீர் முழுவதையும் மடக் மடக் என மூச்சுவிடாமல் குடித்து முடித்து ஜாரைக் கீழே வைத்துவிட்டு, அங்கிருந்த ஒரு நாற்காலியிலேயே அமர்ந்துவிட்டாள்.

 

அவள் ஜாரை வைத்த சத்தம் ராஜசிம்மனின் அறை வரை சன்னமாகக் கேட்டது. இதைக் காதில் வாங்கிய திலோத்தமை சட்டென யாரோ வீட்டின் உள்ளே வந்திருப்பதை உணர்ந்து அறையிலிருந்து அவசரமாக வெளியில் வந்தார்.

 

சற்று தூரத்தில் இருந்த சாப்பாட்டு மேசைக்கருகில் ரிதுவந்திகா அமர்ந்திருப்பதைப் பார்த்த திலோவுக்கு தூக்கி வாரிப்போட்டது, இவ எப்ப வந்தா?

 

வாம்மா, எப்ப வந்த? அப்பா வந்துட்டாரும்மா! ஒன்னப்பத்தித்தான் பேசிட்டிருந்தேன்!, என்று பேசிக்கொண்டே மகளின் அருகில் வந்து நின்றார் திலோ.

 

கேட்டுட்டேன்மா!, என்று கலங்கிய கண்களுடன் அருகில் வந்து நின்ற தாயின் மேல் சாய்ந்தாள் ரிது.

 

ஐயிரு திங்கள், அனுதினமும் சுமந்து, பார்த்துப் பார்த்து கருவாய், உருவாய், பெற்ற வயிற்றில், பெண்ணின் கண்ணீர் கட்டியிருந்த புடவையையும் மீறி பட்டதும், சிலிர்த்துப் போனார் தாய்.

 

ரிலாக்ஸ் ரிது!, என்று மகளின் கூந்தலை வருடிக் கொடுத்து, அன்னத்தைத் தூக்கி, அருகில் வைத்து முகத்தைப் பார்த்தார் திலோ. எதுவாயிருந்தாலும் ஸ்போர்ட்டிவா எடுத்துக்கொள்ளும் ரிதுவா இது?

 

ராஜசிம்மனின் அறை சற்று தொலைவுதான் என்றாலும், அவரால் அங்கு நடக்கும் சம்பாஷனைகளை உணர முடிந்தது. குறிப்பாக ரிதுவின் அழுகை அவரின் காதுகளை பதம் பார்த்தது. வெளியில் வர எத்தனித்தவர், மீண்டும் அறைக்குள்ளேயே சென்று தன் கணினியை உயிர்ப்பித்தார்.

©©|©©

 

யாஷிகா வேலை பார்க்கும் நிறுவனத்தில், அலைபேசி அழைத்துக்கொண்டே இருப்பதை கவனித்தும், எடுக்க முடியாமல், அன்றைய வேலைகளில் மூழ்கி இருந்தாள். அருகில் நின்றுகொண்டிருந்த உயர் அலுவலர் அகன்றதும், கைப்பையை எடுத்து அதனுள் இருந்த அலைபேசியைப் பார்த்தாள். சம்யுக்தா அழைத்திருந்தாள். விசயம் என்ன என்று தெரியாமல் நிதானமாக சம்யுவை அழைத்தாள் யாஷிகா.

 

சாரி டீ! பக்கத்துல எச்ஆர் நின்னுகிட்டு இருந்தாரு. அதான்டீ ஃபோன எடுக்க முடியல!

 

பரவால்ல விடு! ரிதுக்கு கால் பண்ணியா?, சம்யு.

 

இல்லையே, நேத்து கஃபேல பாத்துப் பேசுனது. அதுக்கப்பறம் நா கொஞ்சம் பிஸியாவே இருந்துட்டேனா, அதுனால கான்டாக்ட் பண்ண முடியல!, யாஷிகா.

 

சரி விடு. இன்னிக்கும் நீ பிஸியா?, என்று இடைமறித்து அவசரமாகப் பேட்டாள் சம்யு.

 

ஆமா! நானே நிறைய ஒங்க ரெண்டு பேர் கிட்டயும் பேசனும்னு நெனச்சேன். ஆனா, நேத்து ரூமுக்கு போறதுக்கே லேட்டாயிருச்சு. அப்பறம் ஒங்கள டிஸ்டப் பண்ண வேண்டாமேன்னு இருந்துட்டேன். ஆனா, காலைல கம்பெனில ஒரே பிஸி!, யாஷிகா.

 

நேத்து நைட்லருந்து நிறைய விசயங்கள் நடந்துகிட்டு இருக்குடீ!, சம்யு.

 

என்னடீ சொல்ற?

 

ஆமாடீ! ரிது யோகிய லவ் பண்றா! அத அவுங்கம்மா தெரிஞ்சுகிட்டு, அவுங்கப்பாட்ட சொல்லப் போக, ரிது பதறிப் போய் எங்கிட்ட சொல்லிப் பொலம்புனா! நா மொதல்ல யோகிட்ட லவ்வ சொல்லிட்டியான்னு கேட்டேன். இல்லைன்னா. மொதல்ல அத கன்ஃபார்ம் பண்ணிருவோம்னு சித்து மூலமா தூது போனேன். யோகி ஏற்கனவே ஒரு பொண்ண விரும்பறதா சித்து சொன்னாரு. ஆனா காலைல யோகி ரிதுவ நேர்ல வரச்சொல்லி, அதப் பத்தி ஒன்னும் பேசாம, ரிதுவ ரிஜக்ட் பண்ணி பேச ஆரம்பிச்சுருக்காரு, அதக் கேட்டு அவ எரிச்சலோட வீட்டுக்குக் கிளம்பிருக்கா, போற வழியிலேயே நான் கால் பண்ணி யோகி வேற ஒரு பொண்ண விரும்பறதா சித்து மூலம் கேள்விப்பட்டதையும் சொன்னேன். ரொம்ப கோவப்பட்டா. இப்ப ரிதுவோட நெலம என்னன்னு தெரியல! ஆனா அப்செட்டா இருக்கான்றது மட்டும் நல்லா தெரியுது. நா லீவு போட்டுட்டு, அவளப் பாக்கப் போறேன். போனாத்தான் அடுத்து என்னன்னு தெரியும்!, என்று அவசர அவசரமாக சொல்லி முடித்தாள் சம்யுக்தா.

 

இவ்ளோ நடந்திருக்கா இந்த ஒரு நாள்ல! ரிது யோகிய லவ் பண்றேன்னு முன்னாடியே ஒங்கிட்ட சொல்லிருக்காளா?

 

சொல்லல, பட் சில நேரங்கள்ல கவனிச்சு கேட்டிருக்கேன். அப்பல்லாம் உண்மைய ஓப்பனா பேச மாட்டா! மழுப்பிருவா!

 

நானாவது க்ளியரா கேட்ருக்கலாம்! நா என்னோட ஃபீலிங்ஸ சொல்லலாம்னு நெனச்சுப் போனப்பவும், அவ பேசவே விடமாட்டா!

 

நீ ஏன்டீ ஒரு மாதிரி ஃபீல் பண்ற! நீ ரிதுகிட்ட என்ன சொல்லப் போன?

 

இதற்கு பதில் சொல்வதற்கு முன், தன்னை அலுவலக அறையிலிருந்து தனிமைப் படுத்திக்கொண்டாள் யாஷிகா.

 

யோகி லவ் பண்றேன்னு சொன்னதே என்னத்தான்டீ! இப்பப் புரியுதா, நா ரிதுகிட்ட என்ன ஃபீலிங்ஸ சொல்லப் போயிருப்பேன்னு!

 

…!

 

இந்த பதிலை யாஷிகாவிடமிருந்து எதிர்பார்க்காததால், சில வினாடிகள் மௌனம் காத்தாள் சம்யுக்தா. ஆனால், யாஷிகா தொடர்ந்தாள்.

 

அதுவும் இத்தன நாள் இல்லாம நேத்து ஈவினிங்தான் ரெண்டு பேரும் லவ்வ ஷேர் பண்ணிகிட்டோம். எனக்கு எங்க வீட்டுலருந்து பிரச்சனை வரும்னு எதிர்பார்த்தேன். ஆனா, இப்ப ரிதுவுக்கே பிரச்சனையாயிருச்சே!

 

யார்கிட்டயும் சொல்லலயேடி நீ!

 

இந்த விசயத்த நேரடியா சொல்றதுதான்டீ சுகமே! மத்தவங்ககிட்டச் சொல்லி தெரியப்படுத்துறது அவ்ளோ ஸ்வீட்டா இருக்காது சம்யு!

 

நாங்கள்லாம் ஒனக்கு மத்தவங்களாப் போய்ட்டோமா?, சற்று கோபப்பட்டாள் சம்யு.

 

என்னையக் கேக்குறியே, நீ எங்ககிட்ட உன்னோட லவ்வப் பத்தி ஏதாவது சொன்னியாடீ?

 

இந்தக் கேள்வியை சற்றும் எதிர்பாராததால், மறுமுனையில் சம்யு மௌனமானாள்.

 

சரி விடு! நா கம்பெனில சொல்லிட்டு ரிதுவப் பாக்க வறேன். அதுவரைக்கும் ரிதுகிட்ட ஒன்னும் சொல்லிக்க வேண்டாம்டீ, ப்ளீஸ்!, கெஞ்சினாள் யாஷிகா.

 

சரி வா! நா ஆஃபீஸ்ல லீவு கேக்கப் போறேன். ஃபோன வைக்கிறேன், அமைதியாக மறுமுனையில் அலைபேசி அணைக்கப்பட்டது.

 

யாஷிகாவிற்குள் எண்ணங்கள் எங்கெங்கோ சிதறின. யோகியின் காதலை தொடர்வதா? ரிதுவின் நட்பைத் தொடர்வதா? இருவருமே தன் வாழ்வில் இணைந்தே பயணித்தால் இன்பமாகத்தானே இருக்கும் என்றும் எண்ணினாள்!

©©|©©

 

மாலை வேளை வருமுன் வந்திருந்தான் சித்து! யோகி தன் காதலியை அவனுக்கு அறிமுகம் செய்துவைக்கிறேன் என்று கூறியதாலும், ரிதுவிற்கும் யோகிக்கும் இடையே என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்ளவும் அன்று தன் வேலைகளை சீக்கிரமே முடித்துக்கொண்டு, அலுவலகத்தில் அனுமதி பெற்று ஏஆர் கஃபே கார்னர் வந்து, யோகியின் அலுவலக அறையில் அவனுக்காக காத்திருந்தான்.

 

சமையல் அறையில் இருந்த யோகி, சித்துவின் வருகையை கேள்விப்பட்டு சிறிது நேரத்திலேயே விரைந்து வந்து, தன் இருக்கையில், தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்தான்.

 

என்ன மச்சி! எனி ப்ராப்ளம்?, சித்து.

 

மெனிப் ப்ராப்ளம் வரும்போல மச்சி!, யோகி.

 

ஏன்டா, ரிது வந்ததும் நீ என்ன சொன்ன? ரிதுவோட ரியாக்ஷன் எப்படி இருந்தது?

 

சொல்ல வந்தத பாதிகூட கேக்கல மச்சி! விருட்டுன்னு கோபப்பட்டு போனதுக்கப்பறம் எந்த இன்ஃபர்மேஷனும் இல்ல! பாஸ் நெகட்டிவ் ரியாக்ட்  பண்ணிருந்தாக்கூட பரவால்ல, அடுத்து என்ன செய்யலாம்னு யோசிக்கலாம். இப்ப என்ன பண்ணணும்னே தெரியாம இருக்கேன் மச்சி!

 

கூல் மச்சி! பாஸிட்டிவா திங் பண்ற நீயே இப்படிப் பேசுற! நெகட்டிவா ஏதாவது நடக்ககணும்னா இந்நேரம் நடந்திருக்கணும். அதுனால, நெகட்டிவா எதையும் நீயே யோசிக்காத! பாசிட்டிவா ஃப்யூச்சர யோசி! சரி ஒன்னோட ஃப்யூச்சர் எங்கடா? இன்னும் வரலையா?, சித்து பேசிக்கொண்டிருந்த தலைப்பை மாற்றினான்.

 

இதைக் கேட்டதும், சிறிது நேரம் சித்துவையே உற்று நோக்கிய யோகி நிதானமாகச் சொன்னான், அவ ரிதுவப் பாக்கப் போயிருக்கா!

 

ரிதுவையா, சம்யுல்ல பாக்கப் போறதாச் சொன்னா! அப்ப இது… யாஷிகாவா?, ஆச்சரியத்தை அவசரமாகக் கேட்டான் சித்து.

 

ஆமா, மச்சி! யாஷிகாதான். நேத்து மதியம் நீங்க எல்லாரும் போனப்பறம் ரொம்ப நேரமா உக்காந்துகிட்டே இருந்தா. நானும் சகஜமா பேசிக்கிட்டிருந்தேன். இப்பல்லாம் நாங்க ரெண்டு பேரும் அடிக்கடி மீட் பண்றதும், இந்த மாதிரி சகஜமா பேசுறது வழக்கம்தான். நா இந்த கஃபே வேலைய ஆரம்பிச்ச கொஞ்ச நாள்லயே, இந்த வழியா யாஷிகா அவ ரூமுக்கு போறப்ப, வரப்பல்லாம் நாங்க மீட் பண்ணிக்குவோம். சில நேரம், இங்க என்னோட வேலை முடியறவரைக்கும் கூடவே நின்னு கம்பெனி கொடுப்பா. அப்பறம் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்தே கிளம்புவோம்.

 

கிட்டத்தட்ட டெய்லி நடக்கும் போலயே!, சித்து.

 

அப்படி இல்ல, மேக்ஸிமம் நடக்கும் மச்சி! ஆனா, நா ஒங்கிட்ட சொல்லலாம்னு வரும்போதெல்லாம் நீ மொபைல்ல சம்யுவோட பிஸியா இருப்ப! அப்பறம் இது ஒன்னும் பெரிய விசயம் இல்லையேன்னு நானும் இருந்துருவேன்.

 

ஓ!

 

ஆனா, நேத்துதான் அவளோட கண்கள்ல இருந்து வந்த பார்வை வித்தியாசமா இருந்துச்சு! ஏதோ சொல்ல வர்ற மாதிரி தோனுச்சு!

©©

என்ன யாஷிகா ஏதோ சொல்ல வர்ற மாதிரி இருக்கு, ஆனா சொல்ல மாட்டேங்கறீங்க?, யோகி.

 

என்னமோ தெரியல சொல்ல முடியல! ஆனா இன்னிக்கே, இப்பவே சொல்லிறனும்னு தோனுது!, யாஷிகா.

 

அதென்ன இன்னிக்கே, இப்பவே?, யோகி.

 

இன்னிக்குத்தான் உங்களுக்கு புதுசா ஒரு முன்னேற்றம் வந்திருக்கு, அதுவும் ஒங்களோட முழு உழைப்பால! அதனால நீங்க ரொம்ப சந்தோசமா இருக்கீங்க! நாளும் நல்லாருக்கு!, யாஷிகா.

 

என்ன பீடிகை எல்லாம் ரொம்ப பலமா இருக்கே! பேஷ் பேஷ்! அப்ப விசயமும் பெரிசாத்தான் இருக்கும்! மகிழ்ச்சியா இருந்தா சொல்லுங்க, ஷேர் பண்ணிக்குவோம்!

 

இத கட்டாயம் ஷேர் பண்ணித்தான் ஆகனும்!

 

உத்தரவு ராணியே! இன்னும் சொல்ல வந்தத சொல்லவில்லயே!

 

ஐ லவ் யூ!, என்று கூறிய யாஷிகா மறு நொடியே தரையை பார்த்து குணிந்துகொண்டாள். ஆனால், பார்வை யோகியைவிட்டு அகலவில்லை. கீழ் நோக்கியும், பார்வையால் அவனை நோட்டமிட்டே அமர்ந்திருந்தாள்.

 

ஒரு பெண்ணிடமிருந்து இந்த மாதிரி இன்பமான தாக்குதலை நேரடியாக இப்போதுதான் முதன்முறையாக உணர்ந்தான் யோகி. சொல்வது அறியாமல் நின்றாலும், நேர்மறை பதிலையே அவளுக்குத் தர வேண்டும் என்று முடிவோடு கேட்டான்,

 

ஸ்வீட்டா என்ன சாப்பிடலாம்?

©©

 

ஸ்வீட் எடு! கொண்டாடுன்னு ஆரம்பிச்சிட்டீங்க! அப்பறம் நைட் டின்னர வெளில முடிச்சிட்டு, ரூமுக்கு வர லேட்டாயிருச்சு! நல்லாத் தானடா போய்கிட்டு இருக்கு! அப்பறம் ஏன்டா மூஞ்சியத் தூக்கி வச்சிகிட்டு இருக்கற?, சித்து.

 

அட போடா! லவ்வச் சொல்லி இருபத்துநாலு மணி நேரங்கூட ஆகல! ஆனா, அதுக்குள்ள ப்ரேக்கப் பண்ணிக்கலாமாண்ணு கேட்டுட்டுப் போறாடா!, யோகி வெதும்பினான்.

 

என்னது ப்ரேக்கப்பா, ஒன்னுமே புரியலையே! என்ன ரீசன் மச்சி?, சித்து சற்றுக் குழம்பினான்.

 

அவளுக்குக் ஃப்ரண்ஷிப்பா, லவ்வான்னு பாக்கும்போது, ப்ரண்ஷிப்தான் முக்கியமா தோணுதுன்னு சொல்லிட்டுப் போய்டாடா!, யோகி.

 

இதுல ஃப்ரண்ஷிப்ப கம்பேர் பண்றதுக்னு என்னடா ரீசன்?, சித்து.

 

ரிது என்ன லவ் பண்ணறான்னு சம்யு மூலமா யாஷிகாவுக்குத் தெரிஞ்சுபோச்சு. எங்கிட்ட வந்து நீங்க ரிதுவக் கட்டிக்கறதுதான் நல்லது! ரெண்டு பேருமே ஹேர்ட் ஆகாம, கல்யாணம் பண்ணிக்கோங்க! நா விலகிக்கறேன்னுட்டு, ரிது வீட்டுக்குக் கிளம்பிப் போய்ட்டா! அங்க போய் என்னத்தச் சொல்லப் போறாளோ! எனக்கு அவ போனதுல இருந்து, இல்ல இல்ல நேத்து நைட்ல இருந்தே, தலையப் பிச்சுக்கலாம் போல இருக்கு மச்சி!

 

சித்து இருக்கையை விட்டு எழுந்து வந்து யோகியின் தோளைத் தொட்டு ஆறுதலாக, இங்க பாரு மச்சி! ஒன்னோட நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதாத்தான்டா நடக்கும்! நா சொல்றத கன்ஃப்யூஸ் பண்ணிக்காம கேளேன். அதாவது நீ என்ன நெனச்சு டென்ஷன் ஆகறன்னா, ஒன்னு ஒங்க பாஸ்கிட்ட இருந்து ஏதாவது நெகட்டிவ் ரியாக்ஷன்! இன்னொன்னு நேத்துத்தான் ஆரம்பிச்ச ஒன்னோட லவ் அதுக்குள்ள புட்டுக்குமோ! அப்படின்னு நீ நெனக்கிறது, சரியா மச்சி?, சித்து கேள்விகளை தெளிவாகக் கேட்டான்.

 

எனக்கு என்னென்னமோ தோணுது மச்சி! சரி, மொதல்ல நீ கேட்ட இந்த ரெண்ட மட்டும் இம்மீடியட்டா கிளியர் பண்ண முடியுமா?, யோகி தெளியக் கேட்டான்.

 

என்ன மச்சி! ஒங்க பாஸ் ஒரு வேலையக் குடுத்தா சரியா யோசிச்சு ஒரு முடிவுக்கு வர்ற! வீட்ல அம்மாட்ட சொத்து வேணான்னு தெளிவா சொல்ற! ஏன்… எனக்கே லவ்ல ஒரு பிரச்சனைய சால்வ் பண்றதுகூட நீயாத்தான் இருக்க! இப்படி ஊர்ல இருக்க எல்லாப் பிரச்சனைக்கும் ஈசியா சொல்யூஷன் குடுக்குற நீ, ஒனக்குன்னு ஒன்னு வரும்போது ஏண்டா இப்படி கன்ஃப்யூஸ் ஆகற?, சித்து.

 

ஆதான்டா இயல்பு மச்சி!

 

சரி, சொல்றேன் கேட்டுக்க! ஒங்க பாஸ்கிட்ட இருந்து நெகட்டிவா ஏதாவது வர்றதா இருந்தா இந்நேரம் வந்திருக்கணும். அது வரல! ஸோ, அந்த மாதிரி நெனச்சு ஒரிப் பண்ணிக்காத. ஒன்னோட லவ்வர் ஒன்ன கழட்டி விட்டுட்டு ஃப்ரண்ஷிப்தான் முக்கியம்னு போறதா இருந்தா நிச்சயம் அத ஒன்ன நேர்ல வந்து பாத்து சொல்லிட்டுப் போகனும் அப்படின்ற கட்டாயம் இல்ல! நேரா ரிது வீட்டுக்குத்தான் போயிருக்கணும். அப்படி நடந்திருந்தா, நீ டென்ஷனா இருக்குறதுல அர்த்தம் இருக்கு!, சித்து தன்னால் முடிந்தவரை தேற்றினான் யோகியை.

 

, யோகி.

 

மொதல்ல நெகட்டிவா திங் பண்றத நிப்பாட்டு எல்லாம் சரியாப் போயிரும்!, சித்து.

 

©©|©©

 

ரிதுவின் வீட்டிற்குள் நுழையும் போதே, வெளியில் நின்றிருந்த சம்யுக்தாவின் இரு சக்கர வாகனத்தை கவனித்துவிட்டுத்தான் உள்ளே வந்தாள் யாஷிகா. கையில் குடிக்க கொடுப்பதற்காக, ஏதோ எடுத்து வந்த திலோத்தமை அவளை எதிர்க்கொண்டாள்.

 

வா யாஷகா! சம்யுவும் வந்திருக்கா!, திலோ.

 

எங்க ஆன்ட்டி?, யாஷிகா.

 

மாடிலதான் இருக்குதுங்க ரெண்டும். இந்தா, இதக் கொண்டு போ! நா உனக்கு எடுத்துட்டு வறேன்! பால் சாப்பிடுவல்ல?, திலோ.

 

ம், என்று ஓரெழுத்தில் பதிலளித்துவிட்டு, திலோத்தமை கொடுத்த பால் குவளைகளுடன் கூடிய தட்டை வாங்கிக்கொண்டு மாடியில் இருந்த ரிதுவின் அறைக்குச் சென்றாள்.

 

யாஷிகா வருவதைக் கண்டதும் ரிதுவந்திகாவும், சம்யுக்தாவும் ஒரு சிறிய செயற்கையான புன்னகையுடன் வரவேற்றனர்.  அவர்களுக்குத் தான் கொண்டு வந்த பால் குவளைகளைக் கொடுத்தாள்.

 

அங்க வைடீ, சம்யு அருகில் இருந்த மேசையைக் காண்பித்தாள்.

 

என்ன ரிது! இவ்ளோ சைலன்ட்டா இருக்க! இது ஒனக்கு நல்லால்லடீ!, யாஷிகா.

 

எனக்கு எதுதான்டீ நல்லாருக்கு?, ரிது.

 

இப்பென்ன ஒனக்கு யோகி ஓக்கே சொன்னா ஹாப்பியா?, யாஷிகா.

 

அத எங்கப்பாவே சொல்ல வச்சிருவாருடீ! ஆனா, அதுக்கப்பறம்…!

 

அய்யோ, அப்பா சொல்றது வேற, நா சொல்றது வேறடீ!, யாஷிகா.

 

என்ன வேற?

 

இப்ப யோகியோட அந்த லவ்வரே, யோகிய ரிதுவத்தான் கல்யாணம் பண்ணணும்னு கட்டாயப்படுத்துனா, அவரால என்ன செய்ய முடியும்?, யாஷிகா.

 

இதை சம்யுக்தா எதிர்பார்க்கவில்லை, ஏய் என்னடீ சொல்ற! கொஞ்சம் சும்மா இருடீ!, என்றாள்.

 

இருடீ அவ என்னமோ சொல்ல வர்றா! சொல்லட்டும் விடு, என்றாள் ரிது அமைதியாக.

 

சாரி ரிது! நா ஒங்கிட்ட ஒன்ன மறைச்சுட்டேன்!, யாஷிகா.

 

என்ன!, ரிது.

 

நானும் யோகிய லவ் பண்ணித் தொலஞ்சுட்டேன்டீ! அதக்கூட நேத்துதான் சொன்னேன்! ஆனா அதுக்குள்ள இவ்ளோ நடந்துருச்சு! நா சொல்லிருக்கவே கூடாது, என்று யாஷிகா பேசிக்கொண்டிருக்கும் போதே ரிதுவின் முகம் மாறியது.

 

மெல்லிய புன்னகையுடன் ரிது,அடிக் கள்ளி! நீதானாடீ அந்த அதிர்ஷ்டசாலி! வாடீ என் ராசாத்தி!, என்று யாஷிகாவை மகிழ்வோடு இழுத்துத் தன் மடியில் போட்டுக்கொண்டாள்.

 

சம்யுவும், யாஷிகாவும் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், மகிழ்ச்சியான ரிதுவின் முகத்தைப் பார்த்ததும் தாங்களும் மகிழ்ச்சியான சிரிப்பை முகத்தில் கொண்டுவந்தனர்.

 

இங்க பாரு யாஷிகா! இனிமே யாரு வந்து சொன்னாலும் நா யோகியப் பத்தி நெனச்சுக்கூட பாக்க மாட்டேன். அந்தளவுக்கு எங்கப்பா எங்கம்மாவுக்கு லெக்சர் எடுத்திருக்காரு. நானும் அத எதேச்சையா கேட்டுட்டேன்! இப்பவே யோகிகிட்ட ஃபோன் போட்டு, அவரோட வாழ்க்கைல நா குறுக்கிட்டதுக்கு ஒரு சாரி கேக்கப் போறேன். அதுவும் அவரோட லவ்வர் நீதான்னு தெரிஞ்சதும் எனக்கு ரொம்ப ஹாப்பியா இருக்குடீ!

 

எனக்குப் புரியவே இல்லைடீ! நீ என்ன சொல்ற? நீ யோகிய லவ் பண்றதா சம்யு சொன்னா!, யாஷிகா.

 

அது அப்ப!, ரிது.

 

அப்பன்னா! இப்ப?, யாஷிகா.

 

ஐம் ப்ளான்க்! வாஷ்அவுட்! எப்படி வேணா வச்சுக்கோ. சரி ட்ரீட் எப்ப?, ரிது.

 

என்னது ட்ரீட்டா!, திலோ.

 

பால் குவளையுடன் அறைக்குள் வந்த திலோத்தமை கேட்டவுடன், சட்டென அனைவரும் மகிழ்ச்சியான முகத்துடன் அவரைப் பார்த்தனர். அனைவரின் முகத்தில் மகிழ்ச்சியைக் கண்டதும் அவருக்கும் சந்தோசம் தொற்றிக்கொண்டது.

 

என்னடீ செஞ்ச யாஷிகா! இப்டி இன்ஸ்டன்ட் ஹாப்பியாயிட்டா!, திலோ.

 

அவ செஞ்சதெல்லாம் சொல்லணும்னா மறுபடியும் ஆரம்பத்துல இருந்துதான் வரணும்! பரவால்லயா?, சம்யு.

 

பரவால்ல சொல்லுங்க, கேக்கறேன்!, என்று அவர்களுடன் தாய் திலோத்தமையும் தன்னிலை தளர்த்தி ஐக்கியமாகினார்.

 

மறுபடியும் மொதல்ல இருந்தா…!

©©|©©