சரி © 8
யாஷிகா, ரிதுவின் அழைப்பிற்காக காத்திருந்தாள். வெகுநேரம் ஆகியும் அவள் அழைக்கவில்லை என்பதால், தானே அழைத்தாள்.
“ஹலோ ரிது! என்னாச்சு? ஒன்னுமே சொல்லலயேடி!”, யாஷிகா.
“அவ ஃபோனை எடுக்கவே இல்லடீ! நா என்ன பண்ண? ஒன்ன மாதிரித்தான் நானும் சஸ்ப்பென்ஸ் மூவி பாத்தமாதிரி இருக்கேன்!”
“என்னடி இப்புடிப் பண்றா!”
“விடுடீ, நேத்து செலிப்ரேட் பண்ணதுல டயர்டா இருக்காளோ என்னவோ! அங்கிள் வேற வந்திருக்கறதா காலைல பேசும்போது சொன்னா”
“அப்ப, காலைல அவட்ட நீ பேசுனியா!”, ஆச்சரியமாகக் கேட்டாள் யாஷிகா.
“ஆமா. இன்ஃபாக்ட், அதுனாலத்தான கிட்டத்தட்ட கன்ஃபார்ம்னு சொன்னேன்”, ரிது.
“அத ஏன்டீ சொல்லவே இல்ல?”
“நீ கேக்கவே இல்லயே!”
“சரி, கேக்குறேன் சொல்லு. என்ன பேசிட்டிருந்த?”
“நா சும்மா கேசுவலாத்தான் பேசுனேன். ஆனா அவதான்டீ ஆரம்பிச்சா”
“என்னன்னு?”, யாஷிகா ஆர்வமானாள்.
“அந்த கிஃப்ட் சூப்பர், அப்புடி, இப்புடீன்னா”
“ம்!”
“அப்பறம் அதுல வாழ்த்துச் சொல்லி ஒரு வார்த்தகூட இல்லாம, வெறும் பேர் மட்டுமே எழுதி இருந்துச்சாம். அதக் கேக்கப்போறேன்னு சொன்னா”
“அது சரி!”
“நானும் சும்மா இருக்க மாட்டாம, நேத்தே சித்து ரொம்ப ஃபீல் பண்ணதா சொன்னேன்”
“ஒடனே, நீ ஃபோனக் கட் பண்ணு, நான் சித்துகிட்ட பேசனும்னுட்டா!”
“அப்ப கன்ஃபார்ம் ஆயிருச்சு!”, முடிவுக்கு வந்தாள் யாஷிகாவும்.
“அதத்தான ஆரம்பத்துலயே நா சொன்னேன்”
“சரி, ஒன்னு செய்வோமா?”, திடீர் திருப்பம் கொடுத்தாள் யாஷிகா.
“என்னடீ சொல்லு”
“சம்யுக்தா வீட்டுக்கு உடனே ஒரு சர்ப்ரைஸ் விசிட் அடிப்போம்”
“ஒடனேவா? நோ வே”, என்று மறுத்தாள் ரிது.
“ப்ளீஸ், ப்ளீஸ், ப்ளீஸ்”, யாஷிகா அவசரப்பட்டாள்.
“என்ன ப்ளீஸ்? ஒனக்கு பக்கத்துல இருக்கு. நீ போயிருவ, நா இங்கருந்து எவ்ளோ தூரம் வரனும் தெரியும்ல? அம்மா அலோப் பண்ண மாட்டாங்கடீ சொன்னாக் கேளு”, அதட்டினாள் ரிது.
“ப்ளீஸ்டீ, இன்னக்கு சண்டே வேற. அவளும் ஃபோனைக்கூட எடுக்க மாட்டேங்குறா! எனக்கு இப்ப தலையப் பிச்சுக்கலாம் போல இருக்கு”
“சரி, சரி அழுகாத. மொதல்ல ஹோம் மினிஸ்டர்ட்ட பர்மிஷன் கேக்குறேன். டூவிலர மட்டுமாவது எடுத்துட்டு போறேன்னு சொல்லிப்பாக்கறேன். சரியா?”, எதிர்முனையில் ரிதுவும் சற்று ஆர்வமானாள்.
“ம், ம். சீக்கிரம் மனுவக் கொடு. நா ஃபோனக் கட் பண்றேன்”, என்று யாஷிகா அலைபேசியை அணைத்து கட்டிலில் தூக்கிப் போட்டுவிட்டு, ரிது அழைப்பதற்கு முன்பே கிளம்ப ஆயத்தமானாள்.
©©|©©
யோகி விடுதி அறைக்கு வருவதற்குள், சித்து வெளியில் செல்ல ஆயத்தமாகி இருந்தான். நண்பன் வரும்வரை மடிக்கணினியில் செஸ் விளையாடிக் கொண்டிருந்தான். அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் அலுவலகப் பணிகளை சற்று குறைத்துக் கொண்டு விரைவாக வந்துவிட்டான் யோகி.
“என்ன மச்சி பயங்கர எனர்ஜெட்டிக்கா இருக்க?” கேட்டுக்கொண்டே உள்ளே வந்தான்.
“எஸ் மச்சி! சம்திங்… இல்லல்ல, மெனித்திங் ஸ்பெஷல் டுடே!”, என்றான் சித்து. அவனை இவ்வளவு சந்தோஷமாக அப்பொழுதுதான் பார்த்தான் யோகி.
காலையில் நடந்த சம்பாஷனைகளைப் பற்றி ஆரம்பித்தான் சித்து. அவன் சொல்லச் சொல்ல யோகியின் மனமும் மகிழ்ச்சியில் திளைத்தது.
“எங்கிட்ட கூட காமிக்கலையே! நீ அப்புடி என்னடா மச்சி எழுதின?”, என்றான் யோகி, வேண்டும் என்றே கிண்டலாய்.
“நான் எழுதுனது எனக்கே புடிக்காமத்தான கிஃப்டோட வைக்காம விட்டுட்டேன். அவ ரொம்ப கம்பல் பண்ணி கேட்டா, லேசா கோச்சுகிட்டா. அதனால ஒடனே அனுப்பிட்டேன்”, என்று பேசிக்கொண்டே அவன் மொபைலை யோகியிடம் காண்பித்தான்.
“ம், கொஞ்சம் சின்னதாத்தான் இருக்கு. கவிதைனெல்லாம் சொல்ல முடியாது. ஆனா, எனக்குத் தெரிஞ்சு நீ எழுதுன மொதல் கவிதை இதுதான்னு நெனக்கிறேன்”
“ரொம்ப கலாய்க்காத மச்சி”, சித்து.
“அப்பறம் என்னாச்சு?, யோகி.
“நீ சொல்ற மாதிரி அது சின்னதுதான். ஆனா அவளுக்கு அந்த கடைசி வரி மட்டும் புடிச்சிருக்காம்”
“எது, ‘நீ எனக்கு’ அதுவா?”
“ஆமா மச்சி, மனசுல பட்டத சொன்னது சிம்பிளா, தெளிவா, புரியுற மாதிரி இருந்துச்சாம்”
“அவ சைடும் ஓக்கேவாமா?”
“ஓக்கே இல்லன்னா எதுக்கு மச்சி எனக்கு முன்னாடியே எந்திருச்சு கால் பண்ணப் போறா?”
“லாஜிக்காத்தான் பேசுற”, யோகி.
“ஆனா மொதல்ல பேச்ச ஆரம்பிக்கும் போது, ஏதேதோ பேசினா. அப்பறந்தான் அந்த கிஃப்ட்ல ஏன் எதுவுமே எழுதாமக் குடுத்தீங்கன்னு கேட்டா. அப்பத்தான் மச்சி எனக்கு முக்கால்வாசி கன்ஃபார்ம் ஆச்சு”, என்று தன் மன ஓட்டத்தை தெரிவித்தான் சித்து.
“ஒடனே நீயும் பரபரன்னு அனுப்பிச்சிட்ட”, யோகி.
“ஆமாடா மச்சி. ஆனா, கொஞ்ச நேரம் நா தவிச்சுப் போயிட்டேன் தெரியுமா? ஆறுதலுக்கு நீ வேற பக்கத்துல இல்ல”
“இந்த மாதிரி விசயத்த சோலோவா டீல் பண்றதத்தான்டா மச்சி விரும்புவாங்க. நல்ல வேள நா இல்லன்னு நெனச்சுக்கோ”
“ஆமா மச்சி, எனக்கும் நீ சொல்ற மாதிரித்தான் தோனுச்சு. நானும் அவ பக்கத்துல வேற யாரும் இல்லன்றத கன்ஃபார்ம் பண்ணிட்டுத்தான் அனுப்புனேன்”
“சம்யுவுக்கு எப்படி ஒன்னப் புடிச்சதுன்னு தெரியலயே”
“புடிக்கறதுக்குக் காரணமெல்லாம் கேக்காதீங்கன்னு சொல்லிட்டாடா. புடிக்கலைன்னா அதுக்கு ஆயிரம் காரணம் சொல்வேன்றா”
“ஓக்கே மச்சி. நல்லவிதமா நாசூக்கா உன்னோட லவ் ஸ்டோரி ஸ்டார்ட் ஆயிடுச்சு. அடுத்து என்ன பண்ணலாம்? இப்ப எங்க கிளம்பிட்ட? ஒன்னோட ஆள் அதுக்குள்ள வரச் சொல்லிட்டாளா என்ன?”
“அவ வீட்ல அவ அப்பா நேத்து நைட்டே வந்துட்டாராம் மச்சி. மனுஷன் வீட்டவிட்டு நகரவிட மாட்டாராம். கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் மாதிரி சொன்னா”
“சரி, அப்பறம் எங்க கிளம்பிருக்க?”
“இந்த மூடோட ரூம்லயே அடஞ்சு கெடக்காம எங்கயாவது போகணும்னு தோனுச்சு. அதான் நீ வந்தவொடனே ஒன்னக் கிளப்பி கூட்டிகிட்டு பீச்சு வரைக்குமாவது போவோம்னு கிளம்பி ரெடியா இருக்கேன்”, என்றான் சித்து சந்தோஷமாக.
யோகியும் மறுத்துக் கூறாமல் நண்பனின் மகிழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ளலாமே என்று, தன்னை புதுப்பித்துக்கொண்டு(Refresh) சித்துவுடன் கிளம்பினான்.
“டீ”, என்றான் அறையின் கதவருகில் நின்றுகொண்டு.
“ஒனக்கு பார்ட்டியே வக்கிறேன். வாடா மச்சி”, என்று சித்து அவனை தள்ளிக்கொண்டு வெளியில் வந்தான்.
©©|©©
சித்துவும், யோகியும் ரோட்டோரக் கடையில் நின்று டீ அருந்திக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு நான்கடி தூரத்தில் ஒரு வெள்ளை நிற ஆக்டிவா சாலையில் இருந்து ஓரங்கட்டி நிறுத்தப்பட்டது.
அதில், கண்களை மட்டும் விட்டுவிட்டு முகத்தில் முழுவதும் ஷாலைக் கட்டி, தெரிந்த கண்களையும் தெரியாமல் இருக்குமாறு குளிர் கண்ணாடி அணிந்து, வண்டியின் இருபுறமும் காலை நன்றாக ஊன்றி அமர்ந்து, அவர்களையே அந்த பெண் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“டே மச்சி, நம்மளையே அந்த ஆக்டிவா குருகுருன்னு பாத்துகிட்டேருக்குடா”, சித்துதான் முதலில் பார்த்துவிட்டு யோகியிடம் சொன்னான்.
“இந்த ஊருல நம்மள யாரு மச்சி பாக்குறது?”, என்று யோகியும் சந்தேகத்தோடு அந்தப் பெண்ணையே ஒரு சில வினாடிகள் உற்றுப் பார்த்தான்.
“விடு மச்சி, நம்மாள்தான்”, என்றான் யோகி.
அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவள் தன் கண்ணாடியைக் கழற்றினாள்.‘அப்பா, என்ன ஒரு வசீகரப் பார்வை?’, யோகி.
“ஏய் மிஸ்டர் இங்க என்ன பண்றீங்க? இங்க வாங்க”, என்றாள் ரிது சற்று குரலை உயர்த்தி.
யோகி சித்துவைப் பார்த்து,“மச்சி டீக்கு காசக் குடுத்துட்டு வா. பார்ட்டி வந்துருக்கு”, என்று கூறிவிட்டு ரிதுவை நோக்கி வந்தான்.
“ஹாய், எங்க இவ்வளவு தூரம்?”, என்றான் சகஜமாக பெயரைச் சொல்லாமல்.
ஆனாலும் ரிது தன் ஷாலைக் கழற்றாமலே,“எப்படி கண்டுபிடிச்சீங்க?”, என்றாள்.
“அத நா சொல்லவா மச்சி?”, என்று பின்னால் வந்த சித்து, யோகியை பார்த்துக் கேட்டான்.
“எஸ், ப்ரொசீட்”, என்றான் யோகி.
“நெற்றி முதல் பாதம் வரை மறைத்த மங்கையே, நேற்று அணிந்த அதே அலுமினிய மோதிரத்தை மாற்ற மறந்துவிட்டாயே!”, என்றான் நக்கலாக சித்து.
வண்டியின் முன்னால் வைத்திருந்த கையை சட்டென எடுத்து மற்றொரு கையில் வைத்து அழுத்திக்கொண்டாள். மறைக்கிறாளோ!
“இது ஒன்னும் அலுமினியம் இல்ல. பிளாட்டினம்”, என்றாள் ரிது சட்டென்று.
“என்ன பிளாட்பாரமா?”, சித்து சரியாக கேட்காததுபோல் அவளைக் கேட்டான்.
“அட போங்கப்பா. நா போய்ட்டு வரேன்”, என்று கிளம்ப முற்பட்டாள்.
“இருங்க மேடம். எங்க ஏரியாவுக்கு வந்துட்டு, எங்க பர்மிசன் இல்லாம கிளம்பினா எப்படி?”, என்றான் யோகி.
“என்ன ஒங்க ஏரியாவா?, ஓ, இங்கதான் ரூம் எடுத்துருக்கீங்களா?”, என்று ரிதுவும் சகஜமாகி முகத்தில் இருந்த ஷாலைக் கழற்றினாள்.
“இப்பத்தான் லெட்சனமா இருக்கு”, என்றான் யோகி.
“என்ன பண்றது, ஊரு பூரா தூசியா இருக்கு. இன்னொரு முக்கியமான விசயம் இது எங்கம்மாவோட ஆடர்”, ரிது.
“எதுனால? புரியலையே”, யோகி.
“அப்பா வீட்ல இல்ல. அம்மாட்ட இப்பவே போய்ட்டு வந்திறேன்னு பர்மிஷன் கேட்டேன். அதுனால டூவீலர்ல வேணா போ. ஆனா, இப்புடித்தான் போகனும்னு கண்டிசனோட வண்டியெடுக்க விட்டாங்க”
“அப்படி என்ன அவசரம் அம்மணிக்கு?”, சித்து.
“எல்லாம் இந்த யாஷிகாவாலத்தான்”, ரிது.
சித்து இந்த இடத்தில் சம்யுவின் பெயர் வரும் என்று எதிர்பார்த்திருந்தான். இவள் மாற்றிச் சொல்லவும் ஏமாந்தவனாக, “அப்ப, சம்யு வீட்டுக்குப் போகலயா?” என்றான்.
“சம்யு வீட்டுக்கு போகலையான்னு கேக்குறீங்களா? இல்ல போன்னு சொல்றீங்களா?”, ரிது கேள்வியால் மடக்கினாள்.
“நாங்க எதுக்கு சம்யு வீட்டுக்குப் போகச் சொல்றோம்?, நீங்க எங்க வேணா போங்க, எங்களுக்கென்ன?”, என்று பின்வாங்கினான்.
“சரி, நீங்க எங்கயோ கிளம்பிட்ட மாதிரி தெரியுதே?”, என்று ரிது யோகியைப் பார்த்து கேட்டாள்.
“இவந்தான் சண்டேன்றதுனால அப்டியே பீச்சுக்கு போய்ட்டு வரலாமேன்னு கூப்பிட்டான். கிளம்பிட்டோம். ஆர் யூ ஜாய்ன் வித் அஸ்?”
“நோ சான்ஸ். இப்பவே லேட். இதப் பத்தி அப்பறமா பேசலாம். இன்னும் கொஞ்ச நேரம் இருந்தேன்னா யாஷிகா கொன்னே போட்ருவா”, என்று வண்டியை உயிர்ப்பித்தாள்.
“அப்பறமா பேசலாம்னா, எப்ப?”, யோகி.
“மொதல்ல யாஷிகாவ பாத்துட்டு, அப்பறம் மூனுபேரும் டிஸ்கஸ் பண்ணிட்டு முடிஞ்சா இன்னிக்குள்ள பேசுறேன். ஓக்கேவா?”
“ஓக்கே, ஓக்கே”, யோகி.
“ஸீ யு”, சித்து.
அங்கிருந்து அவள் அகன்றதும் யோகி ஆரம்பித்தான், “என்ன மச்சி! ஒன்னப் பத்தியோ, சம்யுவப் பத்தியோ எதுவுமே கண்டுக்கல! சம்யு இன்னும் கன்வே பண்ணலன்னு நெனக்கிறேன்”
“இல்ல மச்சி. ரிது மறைக்கிற மாதிரி தெரியுது. பேசாம பின்னாடியே போய் பாத்துறலாமா?”, சித்து.
“ச்சே, ச்சே, வேண்டாம் மச்சி. ஒனக்குத்தான் கன்ஃபார்ம் ஆயிருச்சுல்ல. நாம டென்சன் ஆன மாதிரி காட்டிக்கக் கூடாது. அதான் இன்னிக்குள்ள மறுபடியும் பேசறேன்னு சொல்லிருக்குள்ள. அப்பறம் என்ன?”
“ஓக்கே, நாம இப்ப பீச்சுக்கு கிளம்பறோம். வரும்போது நல்ல ஹோட்டலாப் பாத்து ஒனக்கு நா ட்ரீட் தரேன். ஆனா நீயும் எனக்கு சீக்கிரமா இதுமாதிரியே ட்ரீட் தரணும்”, என்று வண்டியை கிளப்பிக்கொண்டே நிபந்தனை விதித்தான் சித்து.
“நானா, தரேன்டா மச்சி. ஒனக்கில்லாததா? அதென்ன இது மாதிரி? புரியலையே”, புரிந்தாலும் புரியாத மாதிரி கேட்டான் யோகி.
“புரியலையோ?”
“ம்”
“புரியும். புரிஞ்சாவுட்டு, அது எனக்கும் தெரியும். அப்ப நா கேட்டுக்கறேன். இப்ப ஒனக்கு இன்டர்வெல் விட்டு வக்கிறேன்”, என்று முடித்தான் சித்து.
©©|©©
யாஷிகா தயாராக விடுதியின் வெளியிலேயே நின்றாள். ரிது வருவதை சற்று தூரத்தில் பார்த்ததும் தன் ஆக்ட்டிவாவை உயர்ப்பித்து, சாலைக்கு வந்து அவளுடன் சேர்ந்தாற்போல் சம்யுவின் வீட்டை நோக்கி சம வேகத்தில் பயணித்தாள்.
சம்யுவின் வீட்டில் அவள் தந்தை, வெளியில் கிளம்புவதை தூரத்திலிருந்தே பார்த்துவிட்டனர் இருவரும். இருவர் வண்டிகளின் வேகமும் தணிந்தது.
“என்ன ரிது, கொஞ்சம் லேட் பண்ணி வந்திருக்கலாமோ?”
“நீதானடீ அவசரப்பட்ட?”
“சரி வா, அப்பாதான சமாளிச்சுக்கலாம்”
வீட்டின் அருகில் வந்ததும் யாஷிகா, “ஹலோ அப்பா, என்ன அதுக்குள்ள ஊருக்கு கிளம்பிட்டீங்களா?”, என்றாள் யாஷிகா, சம்யுக்தாவின் தந்தை தாமோதரனைப் பார்த்து.
“வாம்மா யாஷிகா. நல்லாருக்கியா? ஊருக்கு நைட்தாம்மா போறேன்”, என்றவர் ரிதுவையும் பார்த்தார். “வாம்மா ரிது. எப்டிருக்க? வீட்ல எல்லாரும் எப்டிருக்காங்க?”, என்று கேட்டார் சம்பிரதாயமாக.
“ம், நல்லாருக்கேன் அங்கிள். ஒங்க வேலைலாம் எப்படிப் போகுது?”
“ஏதோ ஓடிகிட்டுருக்கும்மா. பக்கத்துல டிரான்ஸ்ஃபர் கேட்ருக்கேன். கெடச்சா நல்லாருக்கும்”, தாமோதரன்.
“கெடச்சுரும் அங்கிள். சம்யு உள்ளயா இருக்கா?”, என்று கேட்டுக்கொண்டிருக்கும்போதே உள்ளேயிருந்து தாய் அனுசியா வந்தார்.
“அவ இப்பதானம்மா வேல விசயமா பேறேன்னுட்டு கிளம்பினா”, என்று அனு கூறிக்கொண்டே ‘இல்லை’ என்பதுபோல் சைகை செய்து, வீட்டின் உள்ளே கையைக் காண்பித்தார்.
“எங்க போனா ஆன்ட்டி? எங்கட்ட கூட சொல்லல. கால் பண்ணா எடுக்கல”, என்று கேட்டுக்கொண்டே ரிது சம்யுவின் அறையை நோக்கி நடந்தாள்.
யாஷிகாவும் பின்தொடர்ந்து அறைக்கதவை திறந்தனர். உள்ளே சம்யுக்தா இவர்கள் பேசுவதை கவனமாக கேட்பதுபோல் நின்றுகொண்டிருந்தாள். இவர்களைப் பார்த்ததும் ஓடிச் சென்று, அதற்குமேல் ஓட முடியாது என்பதை உணர்ந்து ஒரு மூளையில் அமர்ந்தாள்.
ரிதுவும், யாஷிகாவும், கிட்டத்தட்ட அவள் மேலே விழுந்து, அவளின் இருபுறமும் அவள் அகலாவண்ணம் அமர்ந்தனர்.
“என்னடீ ஓடி ஒளியுற?”, ரிது இடித்தாள்.
முகத்தை கீழே வைத்து, லேசாக மூடிக்கொண்டு நமுட்டுச் சிரிப்பு சிரித்துக்கொண்டாள் சம்யு.
“ஓ, சிங்கிள் டபுளாச்சு, முகமெல்லாம் சிரிப்பாச்சா?”, யாஷிகா.
“ப்ளீஸ், என்ன விடுங்கடி”, சம்யு அழுகாத குறையாக கெஞ்சினாள்.
“சரி எப்பப் பார்ட்டி?”, ரிது.
“ஏய், நேத்துத்தன பர்த்டே பார்ட்டியே முடிஞ்சிருக்கு. அதுக்குள்ள இன்னொன்னா”
“ஆமா, வேணும்”, என்றாள் யாஷிகா.
“கொஞ்சம் பொறுங்கடீ, ப்ளீஸ்” சம்யு.
“நீ இங்க பொறுக்கச் சொல்ற, அங்க ஒங்காலு பீச்சு, பார்க்குன்னு சுத்தக் கிளம்பிட்டாரு”, ரிது.
“அதெப்படி ஒனக்குத் தெரியும்?”, என்றாள் சம்யு. உடன் யாஷிகாவும் ஆச்சரியமாகப் பார்த்தாள்.
“இப்பத்தான் வழியில பாத்துட்டு வாறேன். விட்டா ஒங்க வீட்டுக்கு கூடவே வந்திருப்பாங்க. அவ்ளோ ஈகரா இருக்காரு சித்து”
“இத எங்கிட்ட சொல்லவே இல்ல”, யாஷிகா.
“நீ கேக்கவே இல்ல”, என்றாள் ரிது வழக்கம்போல. மேலும் தொடர்ந்தாள், “நா ஒன்னோட ஹாஸ்டல் வந்து இதெல்லாம் பத்தி கொஞ்ச நேரம் பேசிட்டு, அப்பறமா கிளம்பலாம்னுதான் நெனச்சேன். நீதான் அதுக்கு இடமே குடுக்கலயே”, ரிது.
“எந்த பீச்சாம்?”, சம்யுக்தா ஆர்வத்தை அடக்க முடியாமல் கேட்டுவிட்டாள்.
“எந்த பீச்சா இருந்தா ஒனக்கென்ன? ஓ! இப்ப கிளம்பிப் போய் சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு பாக்குறியோ?”, ரிது.
“போதும்டீ ஒரு நாளக்கு ஒரு சர்ப்ரைஸ்”, யாஷிகா.
“சரி? நீ எப்ப அடுத்த பார்ட்டி வைக்கப் போற?”, ரிது விசயத்திற்கு வந்தாள்.
“இன்னக்கி முடியாதுடீ, ப்ளீஸ்”, சம்யு கெஞ்சினாள்.
“சரி அடுத்த சண்டே?”, யாஷிகா.
“நீ ஒத்துக்கிட்டா, நா சித்துவ பாக்க அரேஞ்ச் பண்ணுவேன். என்ன சொல்ற?”, என்றாள் ரிது பீடிகை போட்டவளாய்.
“சரி அப்ப நாளைக்கே”, சட்டென்று கூறிய சம்யு, அவசரப்பட்டு கூறிவிட்டோமோ என்று நாக்கைக் கடித்துக்கொண்டாள்.
“வாடீ எம் மரிக்கொளுந்தே! இப்ப மட்டும் வேகமா ஒத்துக்கிற?”, யாஷிகா.
இவர்களின் பேச்சுக்கு நடுவே அறையின் கதவு திறக்கப்பட்டது. அன்னை அனுசியா அனைவருக்கும் தேனீர் எடுத்து வந்து கொடுத்துவிட்டு, கீழே அமர்ந்திருந்தவர்களை ஆச்சரியமாகப் பார்த்தார்.
“என்னாச்சு ஒங்களுக்கெல்லாம்! ஏன் கீழ ஒக்காந்திருக்கீங்க?”
“வேண்டுதல்மா”, யாஷிகா.
“எது…, மூனுபேரும் மூலையோட மூலையா ஒக்காந்திருக்கறதா?, ம், என்னாச்சுன்னு தெரியலையே! இவ வேற காலைலருந்து வெளியவே வரல! ஆத்தா மகமாயி நீந்தான் காப்பாத்தணும்!”, என்று விளையாட்டாய் வேண்டிக்கொண்டே அறையைவிட்டு வெளியேறினார் அனுசியா.
விளையாட்டு தொடரும்!
©©|©©