T-T-13B

அத்தியாயம்  – 13B

புது எண்ணில் இருந்து வந்த அழைப்பை எடுத்த செழியன், இந்துமதி பேசுகிறாள் என்று தெரிந்ததும், அவன் பேச ஆரம்பிக்க…

“செழியா சாரி டா. என்னை கூப்பிட்டிருப்பன்னு தெரியும். வீட்ல போன் எல்லாம் வாங்கி வச்சுக்கிட்டாங்கடா. இப்போ ஃபிரண்ட் நம்பர்ல இருந்து தான் கால் பண்றேன்” என்றதும்… “என்னாச்சு இந்து? ஏன் ஒரு மாதிரி பேசற?” என்று பதட்டத்துடன் கேட்டான்.

“எனக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க செழியா” அவள் சொன்னதும் அதிர்ந்தான் செழியன்.

“காலேஜ்ல ஒருத்தன் லவ் பண்றேன்னு ரொம்ப டார்ச்சர் பண்ணான். வீடுவரை பின்னாடியே அடிக்கடி வந்தான். ஒருநாள் இதை வீட்ல பார்த்துட்டாங்க. என்னை கேட்டப்ப, நான் தப்பாயெதுவும் இல்லன்னு சொல்லுயும், யாருமே நம்பலை. அப்போ சரியா அவன் எனக்கு கால் வேற பண்ணிட்டான். அதுவரை போன்ல அவன்கூட நான் பேசினதுகூட இல்ல”

“நான் எவ்ளோ சொல்லியும் வீட்ல நம்பாம, லவ் பண்ணி ஓடிப்போப்போறயான்னு சொல்லி ஒரே அடி. போன்’லாம் பிடிங்கி வச்சுட்டாங்க. படிச்சதெல்லாம் போதும்னு சொல்லி காலேஜ் கூட அனுப்பல. அப்புறம் மாமாவோட சீக்கிரம் கல்யாணத்த முடிச்சிட்டாங்க. நான் தான் மாமாகிட்ட கெஞ்சி இப்போ எக்ஸாம் எழுத வந்தேன். அவர் காலேஜ் வாசல்ல தான் வெயிட் பண்ணிட்டு இருக்காரு” என்று அவள் சொல்ல சொல்ல, செழியனுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை.

அவள் வீட்டில் மிகவும் கண்டிப்பாக இருப்பார்கள் என்று தெரியும் அவனுக்கு. இருந்தும் பெற்ற பெண்ணை நம்பாமல் இப்படியா செய்யவேண்டும் என நினைக்க… அவள் தொடர்ந்தாள்.

“அத்தை வீட்ல ரொம்ப ஸ்ட்ரிக்ட் செழியா. போன்’லாம் அதிகம் பேசவே கூடாது. அதுவும் பசங்கன்னா அவ்ளோ தான். உன் கூட இனி பேசறது கஷ்டம் டா” அவள் எப்போது ‘உன்னுடன் பேசுவது கஷ்டம்’ என்று சொன்னாலோ அப்போதே செழியன் முகம் முற்றிலுமாக மாறியது. மன அழுத்தம் அதிகமானது.

“ஏதாவது பேசு செழியா… எனக்கு தெரியும் உனக்கு கஷ்டமா இருக்கும்னு. நம்ம ஊர்ல கல்யாணம் ஆன பாதி பொண்ணுங்களோட தலைவிதி இதுதான். கல்யாணத்துக்கப்புறம் எல்லாத்தையும் மறந்துட்டு வீடே கதின்னு இருக்கணும். ப்ச்.  சரி நான் எக்ஸாம் ஹால்’க்கு போறேன். முடிஞ்சு வந்தவுடனே இந்த நம்பர்ல இருந்து திரும்ப கூப்பிடறேன். பை டா” என போனை வைத்துவிட்டாள்.

செழியன் கண்கள் கலங்கியது. ‘தனக்கு மட்டும் நல்லதே நடக்காதா… இருந்த ஒரு தோழியும் இப்போது இல்ல. என்ன வாழ்க்கையிது’ என்ற மனவலியுடன் தேர்வுக்கு சென்றான்.

இவன் செய்த ப்ராஜக்ட் மிகவும் தனித்துவமாக இருந்தது. வைவா நடத்த வெளியில் இருந்து வந்த தேர்வாளர்கள் (examiner) முன்பு, ‘தங்கள் மாணவன்’ என்று சொல்லி செழியனுடைய ஆசிரியர்கள் பெருமைப்பட்டனர்.

ஆனால் செழியன் காதுகளுக்கு எதுவுமே எட்டவில்லை. ‘தனக்கு மட்டும் ஏன் இப்படி’ என்ற ஒரே கேள்வி மனதுள். அழுத்தம் இன்னமும் அதிகமானதுபோல ஒரு உணர்வு.

செழியனுடைய ப்ராஜக்ட்’டை பார்த்து ஆச்சர்யத்துடன், தேர்வாளர் அவனை கேள்வி கேட்க ஆரம்பித்தார். ஆனால் பதிலேதும் வரவில்லை அவனிடமிருந்து.

மறுபடியும் அவனை கேள்வி கேட்க, அவனால் பதில் சொல்ல முடியாமல் விழிக்க… பக்கத்தில் இருந்த அவன் ஆசிரியர்… “சொல்லு செழியன். இதுக்காக நீ நிறைய effort போட்டுருக்க. சொல்லு” என்றார்.

செழியனுக்கு சுத்தமாக blank out ஆனதுபோல இருந்தான். எதுவுமே தோன்றவில்லை.

“நீங்க தான் இதை பண்ணீங்களா, இல்ல பணம் குடுத்து வெளிய பண்ணீங்களா?” அமைதியாக இருந்த செழியனைப்பார்த்து, தேர்வாளர் கொஞ்சம் கடுமையுடன் கேட்டார்.

“நான் தான் பண்ணினேன். பட் எதுவும் ஸ்ட்ரைக் ஆகமாட்டேங்குது” வெற்றுமுகத்துடன் முகத்துடன் அவன் சொல்ல, அவனுடைய ஆசிரியர் தேர்வாளரிடம் செழியனை பற்றியும், அவன் திறமையை பற்றியும், இதுவரை எடுத்த மதிப்பெண்கள் பற்றியெல்லாம் சொன்னார்.

இருந்தும் வந்தவர் திருப்தியடைவில்லை. மிகவும் குறைவான மதிப்பெண்களை வழங்கினார்.

ஆனால் செழியனோ, ‘சந்தோஷமில்லாத வாழ்க்கையில் படித்து மட்டும் என்ன பயன்?’ என்ற மனநிலைக்கு தள்ளப்பட, ‘இல்லை அம்மா நன்றாக படிக்கச்சொன்னார்’ என்று மூளை அறிவுறுத்த… மண்டையே வெடிப்பதுபோல உணர்ந்தான்.

“என்ன செழியன் இது” என்று ஆசிரியர் குறைபட்டுக்கொள்ளத்தான் முடிந்தது. அவரால் முடிந்தவரை முயற்சித்தார். கண்டிப்பாக ப்ராஜக்ட் மதிப்பெண்கள் அவனுக்கு குறைந்துவிடும் என்று வருத்தப்பட்டார்.

இந்த சிலநாட்களாக இந்துமதியிடம் பேசாமல் இருத்தலால் இப்போது பேசாதது பெரிதாக தெரியவில்லை. ஆனால் இனி அவளுடன் பேசவே முடியாது என்பதுதான் கஷ்டமாக இருந்தது அவனுக்கு.

இதே மனநிலையில் வீட்டிற்கு சென்றால் அங்கே கவிதாவின் சோகமான முகம். இந்துமதியை மறந்து கவிதாவின் நிலையை பற்றி கவலைப்பட ஆரம்பித்த்தான்.

அவன் ஓரளவு பேசும் இருவரின் வாழ்க்கையிலும் இப்போது சந்தோஷமில்லையே என்கிற வருத்தமும் சேர்ந்துகொண்டது.

அடுத்த ஒரு வாரத்தில் கல்யாணம். ஆனால் கவிதாவின் முகத்தில் துளிக்கூட புன்னகை இல்லை.

‘அக்காவின் நிலைமைக்கு அகிலன் தான் காரணம். அகிலனே இப்படி என்றால் இன்னும் அவன் வீட்டில் மற்றவர்கள் எப்படி இருப்பார்கள்? அவன் அம்மா அக்காவை கொடுமை படுத்துவார்களோ? அவனை போலத்தானே இருப்பார்கள். எதற்கு அக்காவிற்கு இப்படி ஒரு திருமணம்?’ என வருந்தினான்.

‘அகிலனுக்கு ஒரு தங்கை இருக்கிறாள் என்று அப்பா சொன்னாரே. ஒருவேளை அவளும் அகிலனை போலத்தான் இருப்பாளோ? அக்காவை இழிவு படுத்திவிடுவாளோ?’ என நினைத்தான்.

ஆனால் அவன் நினைப்பை பொய்யாக்க வந்தாள் இசைப்ரியா.

கல்யாணத்திற்கு இரு தினங்களுக்கு முன்… ‘சடங்குகள் செய்யவேண்டும்’ என அகிலனின் குடும்பம், மற்றும் சில உறவினர்கள் கவிதாவின் வீட்டிற்கு அதிகாலையிலேயே வந்தனர்.

அகிலன் சாதாரணமாக நடந்துகொண்டான்.

‘கல்யாணம் வேண்டாம் என்பானாம். ஆனால் எதுவுமே நடக்காதுபோல இருப்பானாம். எப்படி முடிகிறது இப்படி நடந்துகொள்ள. அத்தனையும் மாப்பிள்ளை என்கிற திமிர்’ என மனதில் அகிலனை அர்ச்சனை செய்தான் செழியன்.

ஸ்வாமிநாதன் செழியனிடம் வந்தவர்களை பார்த்துக்கொள்ளச் சொன்னார். அவனும் அந்த வேலையில் இறங்கினான். வந்தவர்களுக்கு காபி’யை தந்தான்.

‘அக்கா ஏதாவது குடித்தாளா? சாப்பிட்டாளா? என்று தெரியவில்லையே’ அவனுக்கு திடீரென ஞாபகம் வர, காபி ட்ரே எடுத்துக்கொண்டு கவிதாவின் அறை அருகில் சென்றபோது…

“என்ன அண்ணி நீங்க… எதுவும் குடிக்காம கொள்ளமவா இருப்பீங்க? இந்த வீட்ல உங்கள கவனிக்க யாருமே இல்ல. கவலைப்படாதீங்க. நீங்க எங்க வீட்டுக்கு வாங்க. அண்ணா சூப்பர்’ரா பார்த்துப்பார்” என்ற குரல் கேட்டது.

முதலில் ‘அண்ணி’ என்று சொன்னதை கேட்ட செழியன் முகம் கோபத்திற்கு மாறியது. அகிலனின் தங்கை அக்காவுடன் பேசிக்கொண்டிருக்கிறாள் என.

பின், அவள் கவிதாவிடம் காட்டிய அக்கறை, அவனுள் ஏதோ ஒரு சின்ன நிம்மதியை தந்தது. ‘தான் நினைத்துபோல இல்லை இவள்’ என நினைத்து.

அடுத்து, ‘என் அண்ணன் நல்லா பார்த்துப்பார்’ என்று அவள் சொன்னதும்… ‘கல்யாணம் வேண்டாம் என நிறுத்தசொன்னவன் எப்படி நன்றாக பார்த்துக்கொள்வான்’ என அவன் நினைக்கும்போது…

உள்ளே, “நான் போய் குடிக்க ஏதாச்சும் மொதல்ல குடுத்தனுப்பறேன் அண்ணி. சாப்பிட என்ன இருக்குன்னு பார்த்து எடுத்துட்டு வரேன்” என்று சொல்லிமுடிக்கும்போது, செழியன் முன் நின்றாள் ப்ரியா.

கையில் காபி ட்ரே’யுடன், பழைய சட்டையுடன், தோளில் துண்டுடன், நின்ற செழியனிடம், ப்ரியா…

“ஏப்பா தம்பி… அப்போயிருந்து பார்க்கறேன்… காபி எல்லாருக்கும் தர. ஆனா கல்யாணப்பொண்ணு ஒன்னும் குடிக்காம இருக்காங்க. போபோ… போய் குடு” என்றவுடன்… ‘தம்பியா…’ என செழியன் ஒருவிதமாக அவளையே பார்த்தான்.

அடுத்து அவள், “ஆமாம் இங்க சமையல் எங்க செய்றாங்க?” சுற்றி பார்த்துக்கொண்டே கேட்க, செழியன் கையை நீட்டினான்.

“சரி சரி அப்படியே மந்தமா நிக்காத. சீக்கிரம் காபி’ய குடு. நான் போய் என்ன சாப்பிட இருக்குன்னு பார்க்கறேன்” என்றுவிட்டு சென்றுவிட்டாள்.

முதலில் அவளைப்பார்த்து முறைத்தான். பின் மனதில் ‘இத்துணுண்டு இருந்துட்டு இவ என்ன பேச்சு பேசறா? மந்தம்னு வேற சொல்றா… அவ்வளவும் திமிர் அண்ணனைப்போலவே’ அவளை நினைத்து சிறிய நூலிழை புன்னகையுடன், கவிதா அறைக்குள் சென்றான்!