Thanimai – 9

Thanimai – 9
கீர்த்தனாவின் மறுப்பும், சம்மதமும்
தன் பிள்ளைகளின் புகைப்படத்தை இரண்டு வீட்டினருக்கும் பொதுவாக அனுப்பி வைத்து அவர்களின் பதிலுக்காக காத்திருந்தனர்.
விக்னேஷ் தேர்ந்தெடுத்த பெண்ணான மௌனிகாவின் வீட்டில் மாப்பிள்ளை பிடித்துவிட்டது என்று தகவல் கிடைத்தது. அடுத்த கட்டமான நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் பற்றி பெரியவர்கள் முறைப்படி பேச தொடங்கினர்.
மற்றொரு பக்கம் அரவிந்தனின் திருமணம் கிணற்றில் போட்ட கல்போல அப்படியே இருந்தது. நாட்கள் நகர்ந்தபோது பெண் வீட்டினரிடம் இருந்து தகவல் வரவில்லையே என்று கவலைப்பட தொடங்கினார் நிர்மலா.
அவளின் புகைப்படம் கொண்டுவந்த தரகரின் மூலமாக ராமலிங்கம் போன் நம்பரை வாங்கி போன் செய்தார்.
ராமலிங்கம் தன் தறிபட்டரையில் வேலையில் ஈடுபட்டிருந்த சமயத்தில் அலைபேசி சிணுங்கிட திரையில் தெரிந்த புதிய எண்ணை கண்டவர் சிந்தனையோடு எடுத்து, “ஹலோ” என்றார்.
“ஸார் நான் அன்னூரில் இருந்து நிர்மலா பேசறேன். தரகரிடம் என் மகன் அரவிந்தனோட போட்டோவும், ஜாதகமும் அனுப்பியிருந்தேன். நீங்க பையனோட போட்டோ பார்த்தீங்களா?” தயக்கத்துடன் விசாரித்தார்.
அவர் சொன்னதைகேட்டு உள்ளம் மீண்டும் குழம்பியது. கீர்த்தனாவின் ஜாதகத்தை தரகரிடம் கொடுத்த ஞாபகம் இருந்ததே தவிர, சென்ற வாரம் அவர் வீட்டுக்கு வந்து சென்றதை முற்றிலும் மறந்திருந்தார்.
“என் கைக்கு எந்த போட்டோவும் கிடைக்கலங்க” என்றார் ராமலிங்கம்.
திடுக்கிட்ட மனதை சமன்படுத்திகொண்டு, “ஓஹோ.. நான் இன்னொரு முறை பையனோட போட்டோவை தரகரிடம் கொடுத்து விடட்டுமா?” என்று கேட்டார்.
“இல்ல நீங்க பையனை பற்றிய தகவல் சொல்லுங்க. நான் என் மனைவியிடம் பேசிட்டு உங்களுக்கு பதில் சொல்றேன்” என்றவரின் புருவம் கேள்வியாக சுருங்கியது. மற்றொரு பக்கம் அந்த பதிலைக் கேட்டு மனநிறைவுடன் போனை வைத்தார் நிர்மலா.
சட்டென்று தரகர் வீட்டிற்கு வந்து சென்றது நினைவு வரவே, ‘செல்வியிடம் போட்டோ இருக்குமா?’ என்ற யோசனையுடன் ஒரு பையனை அழைத்து வீட்டிற்கு செல்லும் விஷயத்தை கூறி தன் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்துவிட்டு கிளம்பினார்.
தறிபட்டரையில் இருந்து நேராக வீடு வந்து சேர்ந்தவர், “செல்வி” என்ற அழைப்புடன் வீட்டிற்குள் நுழைய முற்றத்தில் இருந்து உள்ளே நுழைந்தாள்.
“அரவிந்தன் என்ற பையனோட ஜாதகமும், போட்டோவும் உன்னிடம் தான் இருக்கிறதா?” கோபத்துடன் முறைத்தபடி கேட்டார்.
எந்தவிதமான பதிலும் இன்றி அவர் கேட்டதை எடுத்து கொடுத்துவிட்டு, “உங்க ப்ரெண்ட் மகனுக்கு பொண்ணு கொடுக்கணும்னு எண்ணமிருந்தால் என்னிடம் நேரடியாக சொல்லியிருக்கலாமே” என்ற மனையாளை புரியாத பார்வை பார்த்தவர், மீண்டும் ஜாதகத்தை படித்தபோதுதான் கவனித்தார்.
அரவிந்தன் பெற்றோர் என்ற இடத்தில் தன் நண்பனின் பெயரும், உடன்பிறவா தங்கையின் பெயரையும் பார்த்தவர், “நம்ம பொண்ணை அரவிந்தனுக்கு கட்டி வைக்க எண்ணமிருந்தது. ஆனால் நீதான் முதல் நாளே தடை போட்டுட்ட. இப்போ அவனோட ஜாதகமே நம்ம கைக்கு வருதுன்னா நம்ம பொண்ணுக்கு நல்ல நேரம் வந்திருக்கு என்று புரிஞ்சிக்கோ” என்றவர் பரபரப்புடன் அரவிந்தனின் போட்டோவை எடுத்து பார்த்தார்.
அதில் கையில் மூன்று வயது குழந்தையோடு அரவிந்தன் நின்றிருந்தான். கணவனின் பேச்சில் தவறில்லை என்ற எண்ணம் மனதினுள் தோன்றி மறையவே, “சரி அப்போ கீர்த்தியிடம் விருப்பதை கேளுங்க” என்றார்.
“இந்தமுறை அவளுக்கு போட்டோ அனுப்ப வேண்டாம். நான் போன் பண்ணி அரவிந்தனோட விவரம் சொல்றேன். என்ன சொல்றான்னு பார்த்துட்டு அப்புறம் நம்ம ஒரு முடிவுக்கு வரலாம்” என்றவர் கள்ளச்சிரிப்புடன் எழுந்து சென்றார்.
கணவனின் சிரிப்பியிருந்தே உள்ளர்த்தத்தை புரிந்து கொண்ட செல்வி, ‘என் பிள்ளைக்கு நல்ல வாழ்க்கை துணை அமைந்தால் சந்தோசம் தான்’ எழுந்து வீட்டு வேலைகளை கவனிக்க செல்ல கீர்த்தனாவிற்கு போன் செய்தார்.
காலையில் கிழக்கு விடிந்ததும் பரபரப்பாக எழுந்த இரு பெண்களும் சமையலை முடித்துவிட்டு குளிக்க சென்று தயாராகி வந்தனர். இருவரும் சாப்பிட அமரும்போது கீர்த்தனாவின் செல்போன் சிணுங்கியது.
தன்னருகே இருந்த போனை எடுத்து பார்த்த மௌனிகா, “உங்க அப்பாதான் பேசு” என்றவள் சாப்பிட அமர்ந்தாள்.
“ஹலோ அப்பா சொல்லுங்க..” என்று ஆரம்பித்த மகளிடம் பரஸ்பர நல விசாரிப்பிற்கு பிறகு மாப்பிள்ளை பற்றிய விவரத்தை கூறினார்.
மறுப்பக்கம் துடிக்கும் இதயம் நின்றிவிடாதா என்ற நிலையில் கல்போல சமைந்து அமர்ந்திருந்தாள் கீர்த்தனா.
தனக்கு உடனே மாப்பிள்ளை கிடைக்குமென்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. அதுவும் அவள் சொன்ன அனைத்து அந்த மாப்பிள்ளைக்கு பொருந்தி போனது. நொடி பொழுதில் உலகத்தை சுற்றி வரும் வல்லமை படைத்த மனதின் நினைவுகளை ஒதுக்கி தந்தை பேசுவதை கவனித்தாள்.
இறுதியாக, “இனிமேல் நீ சொல்லும் பொய்யை கேட்டுட்டு வேற மாப்பிள்ளை பார்ப்போம் என்ற எண்ணமிருந்தா இப்போவே விட்டுவிடு கீர்த்தி. அரவிந்தன் தான் உனக்கு மாப்பிள்ளை. நீ அவரிடம் பேச நினைத்தால் போன் நம்பர் அனுப்பறேன் பேசிட்டு முடிவு சொல்லு” தீர்க்கமான குரலில் முடித்தார்.
“எனக்கு நம்பர் வேண்டாம் அப்பா. அவரோட அட்ரஸ் சொல்லுங்க. நான் அவரை நேரில் மீட் பண்ணி பேசிட்டு முடிவு சொல்றேன்” அவள் சற்று இறங்கி வர அவரும் அரவிந்தனின் முகவரியை கொடுத்துவிட்டு போனை வைத்தார்.
தந்தை சொன்ன அதையும் யோசித்து பார்த்தவள், ‘இப்படி சொன்னால் மாப்பிள்ளை தேடாமல் விட்டுடுவாங்க என்று நினைச்சேன். ஆனால் விஷயம் பூகம்பம் மாதிரி விஸ்வரூபம் எடுத்து நிற்கிறதே. அவரை நேரில் சந்தித்து பேசுவதை தவிர வேறு வழியில்லை’ என்ற முடிவிற்கு வந்தவள் சட்டென்று சாப்பிட்டுவிட்டு எழுந்தாள்.
அவளின் முகத்தில் தோன்றி மறைந்த குழப்பமான உணர்வுகளுக்கு விடை கண்டுபிடிக்க முடியாமல், ‘இவ விருப்பபடி மாப்பிள்ளை பார்த்தபிறகு ஏன் தேவையில்லாமல் யோசிக்கிறா?’ என்ற சிந்தனையோடு எழுந்து சென்றாள் மௌனிகா.
“இன்னைக்கு ஆபீஸ் லீவ் சொல்லிரு மௌனி. நம்ம இருவரும் அன்னூர் வரை போக போறோம்” என்று தகவல் சொல்லிவிட்டு தன் ஹேண்ட் பேக்கை எடுத்தாள்.
“ஏய் என்ன சொல்ற? இன்னைக்கு எதுக்கு அன்னூர்?” புரியாமல் கேட்டவளை முறைக்க,
“இவளோட கனல் பார்வையிலிருந்து தப்பிக்க வேற வழியில்ல” முனுமுனுத்தபடி அவளோடு கிளம்பினாள்.
இருவரும் ஒன்றாக அன்னூர் நோக்கி பயணிக்க மௌனியின் மனமோ பஸ்ஸில் ஒளிபரப்பான பாடலில் ஒன்றிப்போனது. ஜன்னலோரம் விசுவிசுவென்று வீசிய காற்று கூந்தலை கலைத்து சென்றது. கீர்த்தனாவின் மனதில் சுற்றுபுறம் முற்றிலும் பதியாமல் சிந்தனையில் உழன்றாள்.
அரவிந்தனை நேரில் சந்தித்து என்ன பேச வேண்டுமென்று தெளிவாக மனதில் மீண்டும் ஒருமுறை ஒத்திகை பார்த்தாள். ஆனால் அவனை நேரில் பார்க்கும்போது வார்த்தைகள் மறந்து ஸ்தம்பித்து நிற்க போவதை அறியாமல் பயணத்தை தொடர்ந்தாள்.
அன்னூரில் இறங்கியதும் சுற்றுபுறம் பார்வையை சுழற்றிய கீர்த்தனா ஆட்டோ டிரைவரிடம் முகவரியை சொல்ல, “ம்ம் போலாம்” என்றார். இருவரும் ஏறியமர சிறிது நேரத்தில் அவள் கூறிய முகவரியின் முன்னே ஆட்டோவை நிறுத்தினர்.
வீட்டினை நிமிர்ந்து பார்த்த கீர்த்தனா மனதில் தைரியத்தை வரவழைத்தபடி, “தேங்க்ஸ் அண்ணா” என்று பணத்தைக் கொடுத்துவிட்டு முன்னே நடக்க மௌனிகா சற்று பின்தங்கி நின்றாள்.
காலையில் எழுந்ததும் உதயாவைப் பார்க்க வெளியே வந்த விக்னேஷ் விழிகளில் விழுந்தாள் மௌனிகா.
அவளை கண்டவுடன், ‘இந்த பொண்ணு எதுக்காக அரவிந்தன் வீட்டுக்கு வந்திருக்கு. இல்ல நம்மள பார்க்கத்தான் வந்திருக்கிறாளா?’ என்ற சந்தேகத்துடன் அவளையே இமைக்காமல் பார்த்தான். தன்னை யாரோ உற்றுநோக்குவது போல தோன்றவே சட்டென்று திரும்பிப் பார்த்தாள்.
அவளை பார்த்தபடி எதிர் வீட்டில் நின்றிருந்த விக்னேஷை கண்டவுடன் சிந்தனையோடு ஏறிட்டவளின் அருகே வந்த கீர்த்தனா, “இங்கே என்னடி நின்னுட்டே இருக்கிற? வா உள்ளே போலாம்” என்றாள்.
“இல்லடி! நீ பேசிட்டு வா.. நான் உனக்காக இங்கேயே வெயிட் பண்றேன்” என்று அங்கேயே நின்றுவிட்டாள்.
மௌனிகாவின் நிலையறியாமல் வேகமாக அரவிந்தன் வீட்டிற்கு சென்றவள் கதவை லேசாக தட்டி, “உள்ளே வரலாமா?” இயல்பான குரலில் கேட்டாள்.
அவளின் குரல்கேட்டு சமையலறைக்குள் இருந்து வெளியே வந்த அரவிந்தன் வாசலில் நின்றிருந்த
கீர்த்தியைக் கண்டவுடன் முகம் பளிச்சென்று ஒளிவீசிட, “வாங்க” என்றான் புன்சிரிப்புடன்.
அவனை நிமிர்ந்து பாராமல் வேகமாக வீட்டிற்குள் நுழைந்தவள் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து, “நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” விரல்களை ஆராய்ந்தபடி கூறினாள்.
வீட்டிற்குள் நுழைந்ததில் இருந்து அவள் தன் முகத்தை பார்க்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்டு, “இன்னும் காபி குடிக்கிற பழக்கம் இருக்கா இல்ல மாத்தி விட்டாயா?” அவனின் குரலில் இருந்த நெருக்கம் அவளை ஏதோ செய்தது.
சட்டென்று மனதினுள் இனம்புரியாத உணர்வு எழுந்து அவளின் மனதில் பளிச்சென்று அவனின் உருவம் தோன்றி மறைய பட்டென்று நிமிர்ந்து அரவிந்தனை பார்த்தவள், “நீங்களா?” என்றவள் திடுக்கிட்டு எழுந்து நின்றாள்.
கீர்த்தி சொல்ல வந்தது அனைத்தும் மறந்துபோக திகைத்து நின்றவளிடம், “நானே தான்! ஆமா வேற யாரை எதிர்பார்த்த?” என்ற கேள்வியோடு அவளை எதிர்கொண்டான்.
சட்டென்று திகைப்பில் இருந்து மீண்டவள், “அப்பா.. மாப்பிள்ளை..” கோர்வையாக சொல்ல முடியாமல் தடுமாறினாள் கீர்த்தி.
அவளின் தடுமாற்றம் மனதிற்கு நிறைவைக் கொடுக்க, “நான்தான் மாப்பிள்ளை. என் பெயர் அரவிந்தன். எனக்கு மூன்று வயதில் ஒரு பொண்ணு இருக்கிறா!” என்று புன்னகையோடு அவளுக்கு விளக்கம் கொடுக்க அவளின் முகமும் தெளிந்தது.
கீர்த்தி மௌனமாக நிற்பதை கண்டு, “காபி தான் பிடிக்கும் இல்ல. நீ இங்கேயே இரு. நான் எடுத்துட்டு வரேன்” என்று சமையலறைக்குள் செல்ல பொத்தென்று சோபாவில் அமர்ந்தவளின் மனம் வழக்கத்திற்கு மாறாக படபடவென்று துடிக்க தொடங்கியது.
தன் நெஞ்சில் கை வைத்து, ‘இவருதான் மாப்பிள்ளை என்ற உண்மைத் தெரியாமல் கல்யாணம் வேணாம்னு சொல்ல வந்திருக்கேன். இதுவரை யாரிடமும் சொல்லாத உண்மையை ஒருவனிடம் சொல்ல தயங்கி நின்ற தருணங்கள் கடந்து வந்துவிட்டேன். இனி என்ன முடிவெடுப்பது?’ என்ற சிந்தனையில் அமர்ந்திருந்தாள்.
அவளுக்கு காபி கலந்தபடி சமையலறையில் இருந்து கீர்த்தியைக் கவனித்தான். அவளின் பதட்டத்தை அப்பட்டமாக படம்பிடித்து காட்டியது. இரண்டு கையில் கப்புடன் ஹாலுக்கு சென்ற அரவிந்தன், “தனியாக வந்திருக்கிறாயா?” அக்கறையுடன் விசாரித்தான்.
தன்னோடு வந்த மௌனிகாவின் நினைவு வர, “என் ஃபிரெண்ட் கூட வந்தேன்” என்றாள் மெல்லிய குரலில்.
அவளின் கையில் கப்பை திணித்துவிட்டு, “உன் படிப்பெல்லாம் முடிஞ்சிதா?” என்றான் அவளின் எதிரே அமர்ந்தபடி.
அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல், “ம்ம் முடிஞ்சிது. இப்போ இரண்டு வருடமாக கோயம்பத்தூரில் வேலை பார்த்துட்டு இருக்கேன்” என்று தயக்கத்தை கைவிட்டவளாக பதில் கொடுத்தாள்.
“அப்புறம் கல்யாணம் பற்றி என்ன முடிவெடுத்து இருக்கிற?” என்றவனின் பார்வை அவளின் மீதே நிலைத்தது.
தன் பயத்தை கைவிட்டு பட்டென்று நிமிர்ந்த கீர்த்தி, “என்னைப்பற்றி அனைத்தும் தெரியாவிட்டாலும், ஓரளவு உண்மை உங்களுக்கு தெரியும். அதனால் தான் நீங்க இப்படியொரு முடிவிற்கு வந்திருக்கீங்க” என்றவள் பாதியுடன் நிறுத்திட,
“அதனால் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்ற” அந்த வாக்கியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தான்.
அவள் ஒப்புதலாக தலையசைக்க, “கீர்த்தி லிசன் டூ மீ! சில விஷயங்களை தெளிவாக பேச நேரமில்லை. ஆனால் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் நான் இருக்கேன்” என்று தொடங்கியவனை இமைக்காமல் பார்த்தாள்.
“எனக்கு என் குழந்தைதான் உலகம். இருவராக இருந்த எங்க உலகத்தில் நீயும் இப்போது உள்ளே நுழைகிறாய். சோ இனிமேல் நம்ம ஒரே குடும்பம். அவளுக்கு நீ அம்மாவாக இருக்கணும். கணவன் – மனைவியாக வாழ்க்கையை எப்போது தொடங்க தோணுதோ அதை அப்போ முடிவு பண்ணலாம்” அவன் தெளிவாக கூறிட அதிலிருந்த உள்ளர்த்தம் அவளின் மனதிற்கு நிறைவைக் கொடுத்தது.
அவனின் கேள்விக்கு தலையசைத்த கீர்த்தி, “ஆயிரம் குழப்பத்தோடு வந்தேன். இப்போ கொஞ்சம் நிம்மதியாக இருக்கு” என்ற பெருமூச்சுடன் எழுந்து நின்றாள்.
பாலைவன வெயிலில் நடந்து வந்தவளுக்கு கண்ணுக்கு குளிர்ச்சியான சோலையில் இளைபாறுதல் கிடைக்குமென அவள் கனவிலும் நினைக்கவில்லை.
அவளின் முகம் தெளிந்திருப்பதை கண்ட அரவிந்தன், “இதுவரை மனதை அழுத்திட்டு இருந்த பாரம் குறைந்திருப்பது போல தெரியுதே” என்றவனின் பார்வை அவளின் விழிகளை ஊடுருவிச் சென்றது.
திடீரென்று மனதில் ஏற்பட்ட ஏதோவொரு நம்பிக்கை அவனின் பார்வையை எதிர்கொள்ளும் துணிச்சலை உருவாக்கிட,“நீங்க சொல்வது உண்மைதான். இப்போ ரொம்ப ரிலாக்டாக இருக்கேன். கடந்து சென்ற சில ஆண்டுகளாக மனதை அழுத்திய பாரம் நிஜமாவே கொஞ்சம் குறைஞ்சிருக்கு” அவனை நேருக்கு நேர் பார்த்தபடி கூறினாள்.
“ம்ஹும் தட்ஸ் குட்” என்றவன் அவளை வழியனுப்ப வாசல்வரை வந்தான்.
அங்கே தீவிரமான சிந்தனையோடு எதிர்வீட்டின் மீது பார்வையை பதித்தபடி வாசலில் அமர்ந்திருந்த தோழியை புரியாமல் பார்த்தனர். அவர்களை வந்ததை கூட கவனிக்காமல் ‘என்னை எதுக்காக பார்க்கிறார்? இவரை ஏற்கனவே பார்த்திருக்கிறேனா?’ என்ற யோசனையோடு எதிர் வீட்டில் நின்றிருந்த விக்னேஷை பார்த்தாள்.
விக்னேஷ் அப்போதுதான் அவளின் பின்னோடு நின்றிருந்த கீர்த்தியைக் கவனித்துவிட்டு, ‘ஓஹோ ஃபிரெண்ட் கூட துணைக்கு வந்திருக்கிறா போல.. அது புரியாமல் இப்படி வச்சக் கண் வாங்காமல் பார்த்தால் அவளுக்கு குழப்பம் வராமல் என்ன செய்யும்’ என்று தன்னை ஓரளவு சமாளித்து கொண்டான்.
“மௌனி” என்று தோளை தொட்ட கீர்த்தியின் விரல் ஸ்பரிசத்தில் நிமிர்ந்தவள், “வீட்டுக்கு கிளம்பலாமா? எனக்கு என்னவோ மாதிரி இருக்கு..” என்றாள் தடுமாற்றத்துடன்.
தெருவில் சிறுவர்களோடு விளையாடி கொண்டிருந்த உதயாவை யாரோ அடிக்க வரவே, “நான் அப்பாகிட்ட சொல்றேன்” என்று வீட்டிற்குள் ஓடிவந்தாள்.
அவள் மூச்சிரைக்க ஓடிவருவதை கண்ட அரவிந்தன், “உதிம்மா மெல்ல வா..” கண்டிப்புடன் கூற கீர்த்தியின் கவனம் குழந்தையின் மீது திரும்பியது.
இரட்டை குதிரைவால் போட்டு அழகாக பிளாக் ஸ்கர்ட், அதற்கு ஏற்றார்போல் ஒயிட் கலர் சர்ட் அணிந்து ஓடிவரும்போது அழகோவியம் போல இருந்தாள்.
சட்டென்று கால் தடுக்கிவிட தடுமாறி, “அம்மா” என்ற அழைப்புடன் கீழே விழச் சென்றவளை ஓடிச்சென்று வாரியணைத்து கொண்டாள் கீர்த்தி. உதயா கீழே விழாமல் தடுக்கப்பட்ட போதும் மனம் படபடவென்று அடித்துக்கொள்ள அவளின் கழுத்தை கட்டிக்கொண்டு அழுகையைத் தொடர்ந்தாள்.
உதயாவை கையில் தூக்கியபோது மனதில் அழுத்திய மிச்சபாரமும் காற்றோடு கரைந்து செல்ல தேடிய பொக்கிஷம் கைக்கு கிடைத்துவிட்ட உணர்வை ஈடுபடுத்தியது. அவளை மார்புடன் அணைத்தபோது கீர்த்தி அவளையும் அறியாமல் கண்கலங்க நின்ற காட்சியை இமைக்க மறந்து பார்த்தான் அரவிந்தன்.
கீர்த்தனாவின் உள்ளுணர்வு அவளுக்கு எதையோ உணர்த்திட துடித்தது. அவள் அதை யோசிக்கும் முன்னரே, “உதிம்மா ஒண்ணுமில்ல” என்று குழந்தையை அவளிடமிருந்து வாங்கி கொண்டான். தன் கையிலிருந்த உதயா அரவிந்தனிடம் தாவி சென்றுவிட அவளின் ஸ்பரிசம்பட்ட மேனியோ ஒருமுறை சிலிர்த்து அடங்கியது.
விக்னேஷ் பார்வை மௌனியின் மீதே நிலைத்திருக்க தன்னுள் தோன்றி மறையும் உணர்வுகளை வெளிகாட்டாமல் மறைத்தாள். அதற்கான காரணம் புரியாவிட்டாலும் இருவரும் குழப்பத்துடன் அங்கிருந்து கிளம்பினர்.