Thithikkum theechudare – 17

TTS

Thithikkum theechudare – 17

தித்திக்கும் தீச்சுடரே – 17

வள்ளியம்மை சற்று படபடப்பாக ஜெயசாரதி நோக்கி வந்தார். “என்ன வள்ளி?” என்று ஜெயசாரதி அழுத்தமாக கேட்க, “நீங்க இப்படி என்னை மட்டும் கேள்வி கேட்டுகிட்டே இருங்க. மீரா எங்க போயிருக்கா தெரியுமா?” அவர் கேட்க, “தெரியும் வள்ளி, நானும் அதை பத்தி தான் யோசிச்சிட்டு இருக்கேன்” அவர் கூற, “உங்களுக்கும் தெரியுமா?” சற்று சடவோடு அவர் அருகே அமர்ந்தார் வள்ளியம்மை.

“இப்ப தான் எனக்கு தகவல் வந்தது. முகிலன் இப்ப தான் கொண்டு வந்து விட்டுட்டு போயிருக்கான். அதுக்குள்ளே இவ அங்க போயிருக்கா” ஜெயசாரதி கோபமாக கூறினார். “என்ன பண்ணலாம்? விஷயம் கை மீறுதே” வள்ளியம்மை குரலில் தீவிர யோசனை இருக்க,

“இப்ப வீட்டுக்கு வர்ற மீரா இனி வெளிய போக கூடாது. அவள் வெளியுலக தொடர்பே இல்லாமல் இருக்கணும்.” ஜெயசாரதி கூற, “அவ லேப்டாப், டேப் எல்லாம் நான் இப்பவே எடுத்திடுறேன். அவ உள்ள வந்ததும் அவ மொபைலை தூக்கிட்டா முடிஞ்சிது” வள்ளியம்மை கூற, “நாளைக்கு காலையில் ஒன்பது மணிக்கு நல்ல நேரம். அவளை பொண்ணு பார்க்க வர்ற சொல்லறோம். இந்த வாரத்தில் கல்யாணம் ஏற்பாடு பண்ணிட வேண்டியது தான். ஆடுற மாட்டை ஆடி கறக்கணும். பாடுற மாட்டை பாடி கறக்கணும். மீராவை வைக்க வேண்டிய இடத்தில வைக்கணும்.” ஜெயசாரதியின் குரலில் உறுதி இருக்க, வள்ளியம்மை அவருக்கு ஆமோதிப்பாக தலையசைத்தார்.

அதே நேரம், முகிலன் தன் அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான். ‘நாளைக்கு விடியல் எனக்கு சாதகமா இருக்கனும். அம்மாவை எப்படியாவது சமாதானம் செய்யணும். அம்மா, காலில் விழுந்தாவது சம்மதம் வாங்கணும்.’ அவன் அலுவலகத்திலிருந்து சில மணி நேரத்திலே வீடு திரும்பினான்.

அவன் வீட்டில் மயான அமைதி. முகிலனின் தாயார், சோபாவில் கோபமாக அமர்ந்திருக்க, “அம்மா…” அவன் தன் தாயின் காலடியில் அமர்ந்தான்.

அவர் பதில் பேசவில்லை. “எனக்கு பசிக்குது அம்மா” என்றான் தன் முகத்தை பாவமாக வைத்து கொண்டு. “எனக்கும் தான் பசிக்குது. அதுக்கு என்ன பண்ண?” என்றார் வெடுக்கென்று.

“இது என்ன பெரிய கேள்வி? எல்லாரும் சாப்பிடலாம்” என்றார் கோவிந்தராஜன். “அது தானே, யாரு எப்படி போனா உங்களுக்கென்ன? உங்களுக்கு சாப்பாடு தானே முக்கியம்?” அவர் தன் கணவனிடம் கோபமாக எகிற, “சாப்பிட்டுட்டு பேசினா எல்லாரும் நிதானமா யோசிப்போம். நல்லது நடக்கும்” அவர் சமாதானமாகவே பேசினார்.

அமிர்தவல்லி எதுவும் பேசாமல், சாப்பாடை எடுத்து வைத்தார். முகிலன் எதுவும் பேசாமல் சாப்பிட்டான். அம்மா, அப்பா, மகன் என்று மூவருமே பேசிக்கொள்ளவில்லை. அவர்களுடைய உணவு நேரம் இத்தனை அமைதியாக அரங்கேறியது இதுவே முதல் முறை. சாப்பிட்டு முடித்த முகிலன், “சாப்பாடு நல்லாருந்திது அம்மா. எல்லாமே எனக்கு பிடிச்சதா வச்சிருக்கீங்க. நீங்க எனக்கு பிடிக்காததை வச்சிருந்தாலும், நான் கோபப்பட மாட்டேன் அம்மா. பேசாமல் சாப்பிட்டிருப்பேன். ஆனால், சந்தோஷமா சாப்பிட்டிருக்க மாட்டேன் அம்மா” அவன் மடமடவென்று தன் அறைக்குள் நுழைந்து கொண்டான்.

கோவிந்தராஜன் தன் மகனின் சாமர்த்தியத்தில் சிரித்து கொண்டார். “ஏதவாது சொல்லுவீங்களே சொல்லுங்க” அமிர்தவல்லி கோபமாக கேட்க, “நான் எதுக்கு பேசிகிட்டு?உன் கிட்ட திட்டு வாங்கவா?” அவர் சிரித்துக் கொண்டே கேட்க, “நீங்க அவன் பக்கம் தானே? என் மகனுக்கு இப்ப நான் மட்டும் தானே எதிரி? நான் தானே கெட்டவ?” அமிர்தவல்லியின் கண்கள் கலங்கியது.

“நான் அவன் பக்கம் இல்லை அமிர்தா. இந்த குடும்பத்தின் சந்தோஷத்தின் பக்கம்.” அவர் கூற, அமிர்தவல்லி தன் கணவனை கோபமாக முறைத்தார். “நம்ம குழந்தைங்க நம்ம மூலமா இந்த உலகத்திற்கு வந்திருக்காங்க. நாம அவுங்களுக்கு வழிகாட்டி அவ்வுளவு தான். நம் குழந்தைகள் இப்படி தான் வாழணுமுன்னு நாம சட்டம் விதிக்குறது தப்பு. அவனுக்கு இது ஒரு வாழ்க்கை தான். அதை நீ சொல்றபடி… உன் விருப்படி வாழ்ந்துட்டா அப்ப அவனுக்கு பிடிச்ச மாதிரி எப்ப வாழுவான்?” கோவிந்தராஜன் கேட்க,

“அவன் நல்லதுக்கு தானே நான் சொல்றேன். அரசியல் குடும்பம் வேண்டாமுன்னு” அமிர்தவல்லி கண்ணீரோடு கேட்டார். “முகிலன் அவனுக்கு வேணுமுன்னு நினைக்குறானே” அவர் கூற, அமிர்தவள்ளியிடம் மௌனம்.

“உனக்காக அவன் வேண்டாமுன்னு சொல்லிட்டா? அவனுக்கு வேண்டியதை நீ தட்டி பார்க்குற அமிர்தா. பெரும்பாலான அம்மா, அப்பா இந்த தப்பைத் தான் செய்யுறாங்க. முப்பது வயசிலும் நாற்பது வயசிலும் கூட பிள்ளைகளை இதை செய் அதை செய்ன்னு அவங்க வாழ்க்கையை வாழ நினைக்குறாங்க. பிள்ளைகள் நல்லதுக்குனு பெத்தவங்க நினைக்குறாங்க.”

“நிச்சயமா அது அவங்க நல்லதுக்கு இல்லை. பிள்ளைகள் காதலை தட்டி பறிக்கிறது. கல்யாணத்துக்கு அப்புறம் அட்வைஸ் பண்றேன் பேர்வழின்னு அவங்க வாழ்க்கையை வாழறது தப்பு அமிர்தா. அவங்களை அப்படியே விட சொல்லலை. அவங்க தடுமாறி நிற்கும் பொழுது கைகொடுத்தாலோ, தடுக்கி விழும் பொழுது தூக்கி விட்டாலோ போதும். பிள்ளைங்க வாழ்ந்திருவாங்க” அவர் கூற, “அப்ப நான் விருப்பப்படுற பெண்ணை அவன் கல்யாணம் பண்ணனுமுனு கண்டிச்சா?” அமிர்தவல்லி கோபமாக கேட்க,

“உன் வாழ்க்கையை வாழ்ந்து முடிச்சிட்டு அவன் வாழ்க்கையும் வாழ பேராசைப்படுறேன்னு சொல்லுவேன் அமிர்தா” கோவிந்தராஜன் இப்பொழுது குரலை உயர்த்தினார். “நீங்களும் அவனும் ஒன்னு சேர்ந்துடீங்கள்ல? உங்க விருப்படி என்னவும் பண்ணுங்க” அவர் கோபமாக எழுந்து செல்ல, “தப்பு அமிர்தா” இருவரும் சாப்பாட்டை முடித்து கொண்டு ஹாலில் இருந்த சோபாவிற்கு வந்திருந்தனர்.

“முகிலனுக்கு பிடிச்சிருக்கு. அந்த பொண்ணு தப்பான பெண்ணா இருந்தா முகிலனுக்கு வேண்டாம். நாம சொன்னா முகிலன் கேட்டுப்பான். பெண்ணை போய் பார்ப்போம். பேசுவோம். ஜெயசாரதி அப்படி இப்படித் தான் இருப்பார். அதுக்கு அந்த பெண் என்ன பண்ணும்? அவனுக்கு கை கொடுப்போம். கல்யாணத்துக்கு அப்புறமும் நம்ம பையன் தடுமாறி நின்னா தூக்கி விடுவோம். அவன் நம்ம பையன் இல்லையா?” அவர் கேட்க, “நீங்க நல்ல அப்பா. நான் நல்ல அம்மா இல்லை. அதை தானே சொல்ல வரீங்க?” தாய்ப்பாசத்தில் அவர் உள்ளம் துடித்து கேட்டார்.

மறுப்பாக தலையசைத்தார் கோவிந்தராஜன். “நான் என் பையன் மேல அளவா பாசம் வச்சிருக்கேன். பாசக்கயிற்றை என் பிடியில் வச்சிக்கிட்டு அவனை பறக்க விட நினைக்குறேன். நீ அவன் மேல உயிரையே வச்சிருக்க. உன் சிறகுகளுக்குள்ளையே வச்சி அடை காக்க நினைக்குற. வேண்டாம் அமிர்தா. சிறகுகள் சிறையாகிற கூடாது அமிர்தா. நீயா பறக்க விட்டுட்டா பையன் நம்ம பிடியில் இருப்பான். அவனா சிறகை உடைச்சிக்கிட்டு போக கூடிய சூழ்நிலை வந்தா, உன் கிட்ட இருந்து விலகி போயிடுவான்.” அவர் கூற,

“என் முகிலன் கூட போவானா?” அமிர்தா ஏக்கத்தோடு கேட்க, “எல்லா அம்மாவுக்கும் அவன் மகன் சிறப்பா இருக்கலாம். ஆனால், எல்லாம் மகனும் சராசரி மனுஷன் தான் அமிர்தா. அவர் அதற்கு பேசத் தேவையில்லை என்பது போல் தன் அறைக்குள் நுழைந்து கொண்டார்.

அமிர்தவள்ளி தீவிரமாக சிந்தித்தபடி தன் அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்தார். சற்று நேரம் அமர்ந்தார். சற்று நேரம் நடந்தார்.

அன்று மாலை,

  மீரா தன் அலைபேசியைப் பார்த்தபடி அவள் வீட்டிற்குள் உற்சாகமாக நுழைந்தாள். ஜெயசாரதிக்கு அவள் உற்சாகத்தை பார்த்து அதீத சந்தேகம் வந்தது. வள்ளியம்மை வேண்டுமென்றே சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, அவளை இடிக்குமாறு நடக்க, மீராவின் கையிலிருந்த அலைபேசி தவறி கீழே விழ, அது இரண்டாக உடைந்தது. மீரா அந்த அலைப்பேசியை எடுக்குமுன் வள்ளியம்மை முந்திக்கொள்ள, மீராவின் கண்கள் சுருங்கியது.

‘நான் வந்தாலே எட்டு அடி தள்ளி போற கேஸ் எல்லாம் என் கிட்ட வந்து மோதுது’ மீரா தன் உதட்டை சுளிக்க, “சாரி, தெரியாமல் இடிச்சிட்டேன். நான் உன் மொபைலை சரி பண்ணி கொடுத்திடுறேன்” வள்ளியம்மை அவள் அலைபேசியை அலேக்காக தூக்கி கொண்டு நகர, மீராவுக்கு விர்ரென்று கோபம் ஏறியது.

‘வள்ளியம்மையின் முடியை பிடித்து நாலு சாத்து சாத்தி, என் மொபைலை தான்னு சொன்னால் என்ன?’ என்ற வேகம் மீராவுக்குள் எழ, முகிலன் சொன்ன வார்த்தைகள் அவளுக்கு நினைவு வர, முகத்தில் புன்னகையோடு தன் அறை நோக்கி சென்றாள் மீரா.

தன் மகளையே பார்த்துக் கொண்டிருந்த ஜெயசாரதி தன் நெஞ்சை நீவினார். ‘இந்த மீரா, அவள் அம்மாவோடு இருந்த மீரா. இந்த சந்தோஷமும், நிதானமும் அவள் அம்மா இருக்கும் பொழுது உள்ள மீரா. எதுவோ சரி இல்லை.’

“என்ன உங்க பொண்ணு இன்னும் சண்டைக்கு வரமா போறா? பயந்துட்டாளா?” வள்ளியம்மை கேட்க, “மீராவாது பயப்படுறதாவது. எதுவோ சரி இல்லை வள்ளி.” ஜெயசாரதி கூற, “என்ன இப்படி சொல்றீங்க? அப்படி என்ன பண்ண முடியும்? மீரா நம்ம வீட்டில் தானே இருக்கா?” வள்ளியம்மை கேட்க, “அது தான் நான் யோசிக்குறேன். ஆனால், பதில் கண்டுபிடிக்க முடியலை” ஜெயசாரதி கடுமையாக யோசித்தார்.

அறைக்குள் சென்ற மீரா, தன் மடிக்கணினியை தேடினாள். “ஓ,என் டேப், லேப்டாப் எல்லாம் தூக்கிட்டாங்க போல” தனக்குள் முணுமுணுத்துக் கொண்டு அவள் அறையிலிருந்த சோபாவில் அமர்ந்தாள். வீட்டின் காவலாளி மாறி இருந்ததையும் அவள் கவனித்திருந்தாள். எதுவோ சரி இல்லை என்று அவளுக்கு புரிந்தது.

தன் நெஞ்சை அழுத்தினாள். அந்த இதயமும் அவளை அழுத்தியது. முகிலனின் அலுவலகத்தில் நடந்ததும் அவள் நினைவை தொட்டது.

அவன் அவள் செவியோரமாக கிசுகிசுக்க ஆரம்பித்தான். “ரவுடி, நீ ஜாக்கிரதையா இருக்கனும்.” அவன் கூற, “இவ்வளவு நாள் நான் தனியா இருந்தேன். இப்பத்தான் நீங்களும் இருக்கீங்களே?” அவள் கூற, “அது தான் பிரச்சனை. என் தொடர்பு உனக்கு ஆபாத்தாகிற கூடாது” அவன் கூறிக்கொண்டே, அவளைத் தன் பக்கம் இழுத்தான்.

“ஹீரோ, என்ன பண்றீங்க? வில்லத்தனாமா வேலை செய்யறீங்க?” அவள் தன் படபடப்பை விளையாட்டாகவே வெளிப்படுத்தினாள்.

“நான் ஹீரோன்னு யார் சொன்னது. வில்லன் தான். அதுவும் ரவுடியை கையாளும் பொழுது வில்லன் தான்” அவனும் அவள் விளையாட்டு பேச்சை ரசித்து சிரித்தான். சிரிப்பினோடே, சட்டென்று தன் சட்டைப்பையில் இருந்து ஒரு பரிசுப் பொருளை எடுத்து அவளுக்கு அணிவித்தான்.

அவன் செய்கையில் உறைந்து நின்ற அவள் சட்டென்று விலகி நின்றாள். அவள் கழுத்தில் இதய வடிவில் ஒரு செயின் தொங்கியது. அவள் அதை கையில் அழுத்தமாக பிடிக்க, அவன் அலைபேசி அலறியது.

“ஹீரோ, என்னதிது?” அவள் கண்களில் பதட்டத்தோடு கேட்க, “என் தோழிக்கு நான் கொடுக்கும் பரிசு” என்றான் பின்னே நடந்து கொண்டு, சுவரில் சாய்ந்தபடி தன் மார்பில் குறுக்கே கைகளை கட்டிக்க கொண்டு அவளை ஆழமாக பார்த்தான்.

“ஆமா, பிரெண்டுக்கு ஹார்ட் போட்ட செயின் தான் கொடுப்பாங்களா?” அவள் இடுப்பில் கை வைத்து கேட்க, “இந்த பிரென்ட் எனக்கு ஸ்பெஷல்” அவன் கூற, “எனக்கும் இந்த பரிசு ஸ்பெஷல் தான். என் அம்மா இருக்கும் பொழுது தான் இந்த மாதிரி எல்லாம் அப்பப்ப வாங்கி கொடுப்பாங்க. இப்ப நீங்க. பல வருஷத்துக்கு அப்புறம்.” அவள் இப்பொழுது அவன் கொடுத்த பரிசுப் பொருளை மென்மையாக தீண்டினாள்.

“மீரா, உன் உயிருக்கு கூட ஆபத்து வரலாம். உன் அப்பா… சாரி ஜெயசாரதிக்கு அவ்வுளவு பதவி வெறி உண்டு. நீ என் கூட சேர்றது அவருக்கு பிடிக்காது. நான் உன்னை சீக்கிரம் உங்க வீட்டிலிருந்து கூப்பிட்டு வந்துடறேன். அதுவரைக்கும் நீ வீட்டில் எதுவும் தெரியாம பார்த்துக்கோ.” முகிலன் கூற, “ஹீரோ, நீங்க தேவை இல்லாமல் பயப்படுறீங்க. அப்படி எல்லாம் என்னை ஒண்னும் பண்ண முடியாது.” மீரா கூற, அவன் அவள் தலை முடியை ஒதுக்கினான். அவள் முகத்தை வரிவடிமாக தீண்டினான். அவன் முகத்தில் மென்னகை பரவியது.

“நானும் அதுக்கு தான் ஆசைப்படுறேன் மீரா.” அவன் ஆழமான குரலில் கூறினான்.

அவன் சிந்தையில் இப்பொழுது ஜெயசாரதி இல்லை. அரசியல் எண்ணம் இல்லை. மீரா… மீரா… மீரா மட்டுமே நிறைந்திருந்தாள்.

“இந்த செயின்ல ட்ரகேர் இருக்கு மீரா. ஒரு தடவை அழுத்தினா, எனக்கு அலெர்ட் டோன் வரும். நீ திரும்ப திரும்ப அழுத்தினா உனக்கு ஆபத்துன்னு எனக்கு தெரிய வரும். அது மட்டுமில்லை. இது ட்ரகேர். நீ எங்க இருக்கன்னு எனக்கு காட்டிகிட்டே இருக்கும்.” அவன் கூற, அவளுக்கு அவனிடம் கேட்க, கேலி பேச பல எண்ணங்கள் தோன்றியது. ஆனால், அவள் அவன் அக்கறையை கேலி செய்ய விரும்பவில்லை.

அந்த இதயத்தை மெல்ல வருடி, அவனுக்கு இங்கு எதுவோ சரி இல்லை என்பதை மட்டும் அனுப்பிவிட்டாள். அதன்பின், ‘அதெல்லாம் நான் பார்த்துப்பேன்.’ என்று தன் முகத்தை அசட்டையாக சுளித்துக் கொண்டாள்.

அந்த இதயத்தை தூக்கி, அவள் கண் முன் கொண்டு வந்தாள். முகிலனின் இதயமே அவளிடம் இருப்பது போன்ற உணர்வு அவளுக்கு வந்தது.

அவள் முகத்தில் மென்னகை பரவியது. ‘அம்மா… அம்மா… அம்மானு சுத்திட்டு இருந்த என்னை இப்படி மாத்திட்டாங்க இந்த ஹீரோ’ அவள் எண்ணம் ஓடியது. தன் தாயை அவள் அருகே இருந்து புன்னகைப்பது போல் தோன்ற, “அம்மா நான் இப்படி இருக்கனுமுனு தான் ஆசை படுவாங்களோ?” அவளுள் கேள்வி எழும்பியது.

‘ஜெயசாரதியும் வள்ளியம்மையும் ஏதோவொரு திட்டம் வச்சிருக்காங்க.’ அவளுள் அபாய மணி அடித்தாலும், “என்னை என்ன செய்து இவங்களால கிழிக்க முடியும். நான் தனியா இருக்கும் பொழுதே ஒரு மண்ணும் கிழிக்க முடியலை. இப்ப ஹீரோவும் இருக்காங்க” அவள் இதழ்கள் சற்று உற்சாகமாகவே முணுமுணுத்தது. இத்தனை நாட்கள் இவர்களோடு தனியாக இருந்த உணர்வு கொடுத்த அழுத்தம் அவளிடம் இன்று இல்லை. நிம்மதியாக படுத்தாள். “எதுவா இருந்தாலும் ஹீரோ பார்த்துப்பார்.” தான் என்ற தன்னிலை மாறி, ஹீரோ என்ற எண்ணம் அவளை ஆட்கொள்ள அவள் நிம்மதியாக உறங்கினாள்.

அதே நேரம் முகிலன் தன் வீட்டில்,

முகிலன் தன் அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்தான். ‘ அரசியல் மோகத்திற்கும் என் திரைத்துறை வளர்ச்சிக்கும் நான் ஒரு பெண்ணை பழி கொடுக்க போறேனோ?’ அவனுள் அச்சம் கிளம்பியது. ‘பெரிய ஆபத்து இல்லை. ஆனால், எதுவோ தப்பா இருக்கு. நான் அம்மா கிட்ட பேசி, நாளைக்கு காலையில் இதை தீர்த்து வைக்கணும்.’ தூக்கம் வராமல், மீராவின் எண்ணத்தில் தத்தளித்தான் அவன்.

அதே நேரம், ஜெயசாரதியின் அறையில், “நாளைக்கு காலையில், மீராவை கோவிலுக்கு கூட்டிகிட்டு போகணும். அவ அங்க நாம பார்த்து வச்சிருக்க மாப்பிள்ளைக்கு சம்மதம் சொல்லணும். இந்த வார கடைசியில் கல்யாணம். இல்லைனா, அங்கையே கல்யாணம்.” ஜெயசாரதி உறுதியாக கூற, வள்ளியம்மை மௌனமாக தலையசைத்தார்.

‘அதுவும் நடக்கலைனா, மீராவின் அம்மாவுக்கு நேர்ந்த கதி தான் அவளுக்கும்.’ வள்ளியம்மை தனக்கென்று தனி கணக்கை வடித்து கொண்டிருந்தார்.

தாக்க நினைப்பவனும் தூங்கவில்லை

காக்க நினைப்பவனும் தூங்கவில்லை

பல நாட்கள் தூக்கமில்லாமல் தவித்த அவள்

நித்திராதேவியிடம் அடைக்கலம்

புகுந்துவிட்டாள்…

ஆராரோ பாடிட அன்னை இல்லை

அவளுக்கு ஆராரோ பாடியது

காதல் நெஞ்சம்

அந்த காதல் நெஞ்சமும்

கள்வனென்று அவள் அறிவாளா?

அறிந்தால்,

உயிர் வாழ்வாளா?

 

தித்திப்புகள் தொடரும்…

error: Content is protected !!