Thithikkum theechudare – 6

coverpic
Akila Kannan

தித்திக்கும் தீச்சுடரே – 6

முகிலன் தன் அறையில் ஒலித்து கொண்டிருந்த தன் அலைபேசியை யோசனையாக பார்த்து கொண்டிருந்தான்.  

அதே நேரம் முகிலனின் தந்தை, கோவிந்தராஜன் அவர்கள் அறையில்  தன் மனைவியை கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தார்.

அமிர்தவல்லி, அவர்கள் அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தார். “அமிர்தா” என்று அவர் தன் மனைவியை அழைக்க, “ரொம்ப பலமான யோசனையா இருக்கிற மாதிரி தெரியுது” என்று அவர் கேட்க, ‘ஆம்’ என்பது போல் அவர் தன் தலையை மேலும் கீழும் அசைத்தார்.

“உன் பையன் படத்துக்கு எதுவும் கதை யோசிக்கறியா?” அவர் அதிதீவிரமாக கேட்க, “என்ன நக்கலா?” என்று அவர் தன் கணவனிடம் சண்டைக்கு தயாராக, “அமிர்தா, நீ ரொம்ப இளமையா சண்டை போட, சிந்திக்க எல்லாம் ரெடியா இருக்க. ஆனால், எனக்கு வயசாகிருச்சு. அதனால, நீ என்ன விஷயமுன்னு சொன்னால், நல்லாருக்கும்” அவர் செய்த கேலிக்கு சட்டென்று சமாதான கொடியை பறக்க விட்டார்.

“உங்களுக்கு எப்பப்பாரு கேலி தான். முகிலன், நம்ம கிட்ட ஏதோ மறைக்கிறான். எதுவும் பெரிய பிரச்சனையா இருக்குமோ?” என்று அமிர்தவல்லி கேட்க, “பிரச்சனை மாதிரி எனக்கு தெரியலை. ஆனால், ஏதோ ஒரு பெண்ணை சந்திச்சிருக்கான். அவன் மனசை தொடுற அளவுக்கு” என்று கோவிந்தராஜன் அசட்டையாக கூறினார்.

“எப்படி சொல்றீங்க?” என்று அமிர்தவல்லி ஆச்சரியமாக கேட்க, “உன் பையன், பொண்ணு பார்க்க சொன்னதை வைத்து தான். எங்க காதலில் விழுந்திருவோமுன்னு பயப்படுறான்னு நினைக்குறேன். அது மட்டுமில்லை. என் கேலி பேச்சுக்கு அசராமல் கேலி பேசுற முகிலன் கிட்ட இன்னைக்கு பொண்ணை பத்தி பேச்செடுத்ததும் தடுமாற்றம் வந்தது.” அவர் தன் நெற்றி சுருங்க தலையசைத்தபடி கூறினார்.  

“ஓ…” அமிர்தவல்லி எதுவும் பேசாமல் அமைதியாக படுத்துவிட, “ஏன் அமிர்தா? எதுவும் பேசாமல் படுத்திட்டே?” அவர் தன் மனைவியின் தோள் தொட்டு கேட்க, “என்ன சொல்ல சொல்றீங்க? இங்க எது நான் சொல்றபடி நடக்குது. நல்லா படிச்சான். நம்ம பிசினெஸ்ஸை நல்லா பார்த்துகிறான். அப்படி இருப்பான்னு பார்த்தா, ரொம்ப அழகா இருக்கான். அப்படி இருக்கான். இப்படி இருக்கான்னு மாடெல்லிங்ன்னு சொன்னான். அப்புறம் விருப்பமனு சினிமான்னு சொன்னான். இப்ப நம்பர் ஒன் ஹீரோன்னு சொல்றான்” அவர் சலிப்பாக கூற,

“இதுக்கு நீ சந்தோசம் தானே படணும் அமிர்தா?” என்று அவர் கேட்க, “நமக்கு எதுக்கு இதெல்லாம்? நாம உண்டு வேலை உண்டுன்னு நம்ம பையன் இருக்கனுமுனு நான் ஆசைப்பட்டேன். ஆசைப்படுறேன். அதை விடு, அவன் விருப்பம்முன்னு சொல்லிட்டீங்க. இப்ப அரசியல் வாடை வேற வீசுது. எனக்கு அதில் துளி கூட விருப்பமில்லை. அவனும் அதை தான் சொல்றான்…” அவர் இழுக்க, “அப்புறம் ஏன் கவலைப்படுற அமிர்தா?” அவர் கேள்வியாக நிறுத்தினார்.

“பணம், பதவி இதெல்லாம் வேண்டாம் வேண்டாமுன்னு சொன்னாலும் ஆசை வராமல் போகாதுங்க. நம்ம ஜனத்தில் ஒரு பெண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கலாமுன்னு நான் யோசிக்குறேன். கொஞ்சம் கொஞ்சமா அவனை சினிமா, அரசியல் இதுல இருந்தெல்லாம் வெளிய கூட்டிட்டு வர்ற மாதிரி ஒரு பெண்ணை நான் பார்க்கனுமுனு நினைத்தா, நீங்க வேற என்னவோ சொல்றீங்க” அமிர்தவல்லி கவலை தோய்ந்த குரலில் கூற, “நான் சொன்னது தப்பா கூட இருக்கலாம் அமிர்தா” அவர் தன் மனைவியை சமாதானம் செய்தார்.

“எனக்கு நீங்க சொன்னது சரின்னு தான் தோணுது.” மனைவி கூற, “அப்படி நம்ம பையன் காதலிச்சிட்ட என்ன பண்ண முடியும்?” அவர் கேட்க, அமிர்தவல்லி கண்கள் கலங்கியது. எதுவும் பேசாமல் படுத்துக் கொண்டார்.

***

அதே நேரம், தன் அறையில் முகிலன் தூக்கம் வராமல், குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான். மீண்டும் மீண்டும் அலைபேசி ஒலிக்க, ஜெயசாரதியின் பெயரைப் பார்த்தான்.  

‘இந்த மனுஷன் எத்தனை தடவை என்னை தொங்கல்ல விட்டிருக்காரு. இவர் கூப்பிட்டா நான் எடுக்கணுமா?’ அவனுக்கு கடுப்பாக இருந்தது. அலைபேசியை அணைத்து தூக்கி எறிந்தான்.

“உன் பொண்ணு அவளா வந்து என்கிட்ட சிக்குறா. எதுக்கு என்னனு தெரியலை ஜெயசாரதி. ஆனால், என்ன வாய்ப்பு கிடைத்தாலும், நான் புகுந்து விளையாடுவேன்” முகிலன் தனக்கு தானே முணுமுணுத்துக் கொண்டான்.  

அப்பொழுது அவன் மெத்தையருகே இருந்த கண்ணாடியில் அவன் முகத்தை பார்க்க, நெற்றியில் பட்ட காயம் வீங்கியிருந்தது. அவன் அதை மெதுவாக தடவி கொடுத்தான். கொஞ்சம் வலித்தது. முகத்தை வலியில் சுருக்கினான்.  

‘அவள் மீது கோபம் வர வேண்டும்.’ என்றே எண்ணினான். ஆனால், வரவில்லை. அவன் மறுக்க நினைத்தும் அவள் முகம் அவன் நினைவுக்கு வந்தது. அவன் சிரித்து கொண்டான். ‘எல்லாம் வயசு பிரச்சனை. முதலில் அம்மாவை சீக்கிரம் ஒரு பொண்ணு பார்க்க சொல்லி கல்யாணம் பண்ணனும்.’ தனக்கு தானே அறிவுறுத்திக் கொண்டு படுக்க சென்றான்.

*** *** ***

மறுநாள் அதிகாலையில்,

மீரா அதிகாலையில் எழுந்தாள். தன் காலை வேலையை முடித்துவிட்டு ஜாகெர்ஸ், டீ-ஷர்ட் அணிந்து கொண்டு அவள் அறையோடு ஒட்டியிருந்த பால்கனியில் யோகா செய்தாள்.  

முகிலனை சந்தித்ததில், அவனுடன் பயணிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொண்டதில், தன் வாழ்வின் போராட்டத்தில் முதல் அடியை எடுத்து வைத்த பூரிப்பு அவளுள். அந்த பூரிப்பை ரசிக்காமல், அவள் தன் மனதை அடக்க ஆரம்பித்தாள்.

‘அதெல்லாம் இல்லை. நான் ஜஸ்ட் முகிலன் கிட்ட நட்புக்கரம் நீட்டிருக்கேன். அவ்வுளவு தான். அதுவும் பயங்கர அடாவடியா. அது நட்புக்கரமா, இல்லை உதவிகரமான்னு கூட தெரியலை. முகிலன் கிட்ட நெருங்கி பழக கூடாது. என் பெயர் கெட்டு பொய்ட கூடாது. முகிலனுக்கும் கெட்ட பெயர் வந்திற கூடாது. ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்.’ தனக்கு தானே அறிவுறுத்தி கொண்டு, சூரிய நமஸ்காரத்தை முடித்துக்கொண்டு வெளியே செல்ல, கீழே இறங்கி வந்தாள்.

“மீராம்மா காபி” தீபா கேட்க, “வேண்டாம் தீபா அக்கா. நான் ஜாக்கிங் முடிச்சிட்டு வரேன். குளிச்சிட்டு டிஃபன் சாப்பிடுறேன்” கூறிவிட்டு, அவள் வேகமாக ஓட ஆரம்பித்தாள்.  

அவள் எண்ணங்கள் முகிலனையே சுற்றி வந்தது. தான் அடுத்ததாக செய்ய வேண்டிய காரியத்தை கணக்கிட்டு கொண்டே ஓடினாள். தெளிவான திட்டம் எதுவும் இல்லை. ஆனால், எதையாவது செய்ய வேண்டும் என்ற வெறி அவளுள் கிளம்பியது. தலையசைத்து வேகமாக தன் ஓட்டத்தை முடித்துவிட்டு தன் அறைக்குள் சென்று குளியலை முடித்தாள்.  

தொளதொளவென்று ஜீன்ஸ் அணிந்தாள். குட்டி குட்டி பூக்கள் கொண்ட ஒரு தொளதொள டீ ஷர்ட். தன் தலை முடியை சீவிக் கொள்ள மட்டுமே கண்ணாடி முன் செல்வாள். இன்றும் அதற்காகவே கண்ணாடி முன் சென்றாள். தன் முகத்தை கண்ணாடியில் பார்த்ததும், அவளுக்கு நேற்று முகிலன் சொன்னது நினைவுக்கு வந்தது.  

‘இளம் பெண்ணா? சிங்கம், புலி, சிறுத்தை…’ அவன் கூறியது நினைவு வர, பக்கென்று சிரித்தாள். தன் உடையைப் பார்த்தாள். நேற்று முகிலன் அணிந்திருந்த உடையின் நேர்த்தி அவள் கண்முன் வந்தது. ‘என்னா பயங்கர ட்ரெஸ்ஸிங்? பேண்ட், ஷர்ட் மட்டுமில்லை வாட்ச், பெல்ட் எல்லாமே பயங்கர செலக்ஷன்’ அவள் மனம் அவன் உடையை கணக்கிட்டு கொண்டது.

அவள் கவனம் தன் உடைக்கு வந்தது. ‘இப்படி டிரஸ் பண்ணினா, இளம் பெண்ணான்னு தான் கேட்பாங்க. ஆனால், இந்த சிங்கம், புலி, சிறுத்தை எல்லாம் ரொம்ப ஓவர். நான் நேத்து முகிலன் கிட்ட ரொம்ப தன்மையா ரொம்ப பணிவா பேசிட்டேன்னு நினைக்குறேன். அது தான் முகிலன் ரொம்ப பேசிட்டார். இனி நான் அவர் கிட்ட கறாரா பேசணும். அவர் சினிமா ஹீரோ நல்லா டிரஸ் பண்ணனும். அப்ப தான் நல்ல பட வாய்ப்பு எல்லாம் வரும். ஹீரோ ஹீரோ அப்படின்னு அவரை எல்லாரும் சொல்லுவாங்க. எனக்கென்ன, நாடு ஆறு மாசம். காடு ஆறும் மாசம்ன்னு வாழுவேன்.’ தன் சிந்தனைக்கு முற்று புள்ளி வைத்தாள்.

“ஐ அம் கரெக்ட்” தனக்கு தானே கூறிக்கொண்டு உல்லாசமாக துள்ளி குதித்து படியிறங்கினாள்.  

“தீபா அக்கா என்ன ஸ்பெஷல்?” என்று கேட்டு கொண்டே சாப்பாட்டு மேஜையில் அமர்ந்தாள். அவள் வைத்த புட்டு, கொண்டைக்கடலையை ருசித்து சாப்பிட்டாள். அவள் மறுக்க நினைத்தும், தான் செய்து கொண்டிருக்கும் செயலால் அவள் உள்ளம் சந்தோஷத்தில் மிதந்தது. மீரா கடுகடுப்பாக இருப்பது போல் காட்டிக்கொண்டு, எதிரே இருந்த ஜெயசாரதி வள்ளியம்மையிடம் பேசாமல் இருந்தாலும், அவள் முகம் அவள் மனதின் பூரிப்பை காட்ட தவறவில்லை. அவளை கவனித்து கொண்டிருந்த ஜெயசாரதியும், வள்ளியமையும் மீராவை கவனிக்க தவறவில்லை.

மீரா தன் உணவை முடித்துக் கொண்டு தன் பைக்கில் அலுவலகம் நோக்கி கிளம்பினாள். ஜெயசாரதியின் நெற்றி சுருங்கியது.

சுமார் பத்து மணியளவில், மீரா அவள் அறையில் வேலையை பார்த்து கொண்டிருந்தாள். “ஒவ்வொரு ஏரியாவிலும் எவ்வளவு பிரச்சனை? இதெல்லாம் வெளிய கொண்டு வரணும்” பேசிக்கொண்டே அவள் மடிக்கணினியை தட்ட, அவள் அலைபேசி ஒலித்தது.

‘புது நம்பர்’ அவள் நெற்றி சுருங்கியது. தன் சூழல் நாற்காலியில் அரைவட்டமடித்து, தன் அலைபேசியை கையிலெடுக்க, அவள் தூக்கி கட்டியிருந்த தலைமுடி சிலுப்பிக் கொண்டது.

“ஹெலோ” அவள் குரலில் அவள் வேலையை தொந்திரவு செய்ததன் சலிப்பு அப்பட்டமாக தெரிந்தது. “ஹெலோ, வேலை நேரத்தில் டிஸ்டர்ப் பண்ணிட்டேனா? அப்புறம் கூப்பிடட்டுமா?” எதிர்முனை கேட்க, “ஹீரோ…” என்றாள் ஆச்சரியமாக.  

“அன்னைக்கு இந்த நம்பரில் இருந்து கூப்பிடலையே. அதனால், இந்த நம்பர் எனக்கு தெரியலை” அவள் கூற, “இது என் பெர்சனல் நம்பர். எல்லாருக்கும் இதிலிருந்து கூப்பிட மாட்டேன். ஆனால், நீங்க அடுத்த படம் என் கூட ஒர்க் பண்றதால எப்படியும் உங்க கிட்ட அடிக்கடி பேச வேண்டியதிருக்கும். அதனால் இதிலிருந்து கூப்பிட்டேன்” அவளின் அளவுகோலை தெளிவாக காட்டுவது போல் அவன் பேசினான்.

“ஓகே ஹீரோ” அவள் கூற, “ஹீரோன்னு கூப்பிட்டா எனக்கு பிடிக்காது. ஒருத்தரை அவங்க செய்யற வேலை வைத்து இடை போடுவது எனக்கு பிடிக்காது.” அவன் அழுத்தமாக கூற “ஹீரோ, எனக்கு இது தான் வசதி” அவள் அவனை இடைமறித்தாள்.

“ஹீரோ, உங்க கூட ஒர்க் பண்ணும் பொழுது, எல்லாரும் இருப்பாங்க. அப்ப, நான் மட்டும் பெயர் சொல்லி கூப்பிட்டா நல்லாருக்காது. உங்களை சார்ன்னு கூப்பிடுற அளவுக்கு உங்களுக்கு வயசாகலை. நீங்க ஹீரோ, நான் ஜர்னலிஸ்ட் அதைத்தவிர உங்களுக்கும் எனக்கும் வேற எந்த சம்பந்தமும் கிடையாது.” அவன் மறைமுகமாக காட்டிய அளவுகோலை, அவள் வெளிப்படையாக காட்டினாள்.

“நீங்க ஹீரோ, நான் உங்களுக்கு கவர் ஸ்டோரி பண்றேன். தட்’ஸ் இட். சொல்லுங்க ஹீரோ.” அவள் அழுத்தமாக கூற, ‘ரவுடி, இவ நான் சொல்றதை கேட்க மாட்டாளா. இல்லை, யார் சொல்றதையும் கேட்க மாட்டாளா?’ அவன் பெருமூச்சு விட்டுக்கொண்டான்.

“ஓகே. உங்க இஷ்டம். நம்ம ஷூட்டிங் நெக்ஸ்ட் வீக் ஆரம்பிக்குது. நாம, இந்த சனிக்கிழமை கிளம்புறோம்” அவன் நேரத்தையும் அத்தோடு இடத்தையும் கூற, அவள், “ம்…” கொட்டிக்கொண்டாள்.  

இடத்தை கூறினால், ஆச்சரியப்படுவாள் என்று அவன் எண்ண, அவளிடம் எந்த ஆச்சரியமும் இல்லை. “இந்த விவரம் எல்லாம் ஏற்கனவே தெரியுமா?” அவன் கண்களைச் சுருக்கி கேட்க, “ஹீரோ, நான் ஒரு ஜர்னலிஸ்ட். மீடியா, மேகசின் அப்படின்னு பல இடத்தில எனக்கு தொடர்ப்பு இருக்கு. இதெல்லாம் எனக்கு தெரியாமலா இருக்கும்?” அவள் கேட்க, “என்ன, என்னை வேவு பாக்குற வேலையா?” அவன் நக்கலாக கேட்க, “ஹீரோ, தொழில் தர்மம் ஹீரோ… தொழில் தர்மம்…” அவள் இழுக்க, ‘எங்களை போன்ற சினிமா நடிகர்களை பத்தி விஷயம் சேகரிக்கிறது இவளுக்கு தொழில் தர்மமா?’ அவனிடம் பதில் இல்லை.

அவனுக்கு பிடிக்கவில்லை என்று கணித்து கொண்டாள். சட்டென்று பேச்சை திசைத் திருப்பினாள். “ஆனால், தெரியாத விஷயம் ஒன்னு இருக்கு” அவள் கூற, “என்ன?” என்றான் அவன் கேள்வியோடு.  அவன் தொனியில் சற்று கோபம் இருந்தது.

“இது தான் நீங்க சொல்லப்போற விஷயம்முனு எனக்கு தெரியும். ஆனால், நீங்க சொல்லுவீங்கன்னு நான் நினைக்கலை. உங்க மானேஜர் யாரவது கூப்பிட்டு சொல்லுவாங்கன்னு நினைச்சேன். கூப்பிட்டு சொன்னதுக்கு தேங்க்ஸ்” அவள் கூற, அவன் சிரித்துக் கொண்டான்.

“எங்க டீம்ல இல்லாம ஒரு பொண்ணை கூட கூப்பிட்டு போறோம். அதுவும் என் பொறுப்பில்! நான் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனுமில்லையா? அது தான்” அவன் அவளுக்கு விளக்கம் சொன்னாலும், அவன் மூளை அவள் அவனிடம் கேட்ட கேள்வியை தன்னிடமே கேட்டுக் கொண்டது.

அவள் சிரித்துக் கொண்டாள். “ஓகே, வெள்ளிக்கிழமை பார்ப்போம்” அவன் கூற, அவள் “ம்…” கொட்டினாள்.

அவன் வைக்குமுன், “ஹீரோ…” அவள் குரல் சற்று யோசனையோடு அழைத்தது, “சொல்லுங்க மீரா” அவன் கேட்க, “உங்க தலையில் பட்ட காயம் சரியாகிருச்சா? உங்க வீட்டில் எதுவும் கேட்டாங்களா? உங்க வீட்டில் உங்க அம்மா அப்பா உங்க மேல பயங்கர பாசம்ன்னு நான் கேள்வி பட்டிருக்கேன்.” அவள் கேட்க, அவன் தன் தலையை தடவிக்கொண்டான்.

‘எல்லார் வீட்டிலும் அம்மா அப்பா பாசமா தானே இருப்பாங்க’  கேள்வி அவன் மனதில் எழுந்தாலும், எதுவும் கேட்காமல், “கெட்டிங் பெட்டெர்” என்று கூறிவிட்டு, இரெண்டு வார்த்தையில் அவன் தன் பதிலை முடித்துக் கொண்டான். ‘சாரி…’ அவள் இதழ்கள் இன்று மன்னிப்பை முழு மனதோடு கேட்டது. ஆனால், சத்தமாக கேட்க, அவள் இயல்பு இடம் கொடுக்கவில்லை. “வேற ஒண்ணுமில்லை ஹீரோ.” அவள் முடித்துவிட, அவன் தன் அலைபேசி பேச்சை முடித்துக் கொண்டான்.

அவள் அழைத்த, ‘ஹீரோ…’ என்ற அழைப்பு அவனுக்கு பிடிக்கவில்லை. ஆனால், அவள் அதை கேட்க போவதில்லை. அவன் தன் நெஞ்சை நீவிக்கொண்டான். அவள் மூலம் காரியம் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கூட அவனுக்கு பின்னே சென்றது. ‘இவளை சமாளிக்குறதே பெரிய வேலையா இருக்கும் போல’ அவன் மனதில் அதுவே முதலில் நின்றது.  

அப்பொழுது, அவன் மீராவிடம் பேசாத வேறொரு அலைபேசிக்கு அழைப்பு வர, ஜெயசாரதியின் பெயர் மின்னியது. ‘இவர் வேற…’ அவன் சலிப்பாக அலைபேசியை எடுத்தான்.

“என்ன முகிலன். என்னை பார்த்தா பயமா? கூப்பிட்டா கூட பேச மாட்டேங்கிறியே” என்றார் ஜெயசாரதி.  

“என்ன விஷயம்?” அவன் நேரடியாக கேட்க, “சரி, விஷயத்திற்கு வருவோம். எம் பொண்ணு ஏதோ கவர் ஸ்டோரின்னு உன் கூட வர்றதா கேள்வி. அதெல்லாம் வர கூடாது. அதை சொல்லத்தான் கூப்பிட்டேன்” அவர் கூற,  

“அதை ஏன் நீங்க என் கிட்ட கூப்பிட்டு சொல்லணும். உங்க வீட்டில் இருக்கிற உங்க பொண்ணு கிட்டயே சொல்லலாமே?” அவன் விட்டெறியாக கூறினான். “மீரா சின்ன பொண்ணு. கொஞ்சம் வீம்பு, பிடிவாதம், அவ கிட்ட சொன்னா புரியாது. இந்த சினிமாக்காரங்க எல்லாம் சரி கிடையாது.” அவர் இழுக்க, “ஷட்அப்” என்று கர்ஜித்தான் முகிலன்.

“அதெல்லாம் உங்க வீட்டு பிரச்சனை. என்ன பேசணுமோ. அதை உங்க பொண்ணு கிட்ட பேசுங்க” அவன் கறாராக கூற, “வேண்டாம் முகிலன். நம்ம பிரச்சனையில் மீராவ பணையக்காய்யா ஆக்காத. நான் என்ன பண்ணுவேன்னு யாருக்கும் தெரியாது. உன் எதிர்காலத்தையே அழிச்சிருவேன். செய்த பாவம் போதும். உன் பாவமும் எனக்கு வேண்டாமுன்னு நான் பிழைத்து போன்னு விட்ட பல விஷயத்தில் நீயும் ஒன்னு” அவர் குரல் மிரட்டியது.

“என்ன பண்ண முடியும்? என் பெயரை கெடுப்பீங்களா?” அவன் போட்டு வாங்க முயற்சிக்க, அவர் பெருங்குரலில் சிரித்தார்.

“உன் பெயர் கெடுத்து, என் பெண்ணை உனக்கு கட்டிக்கொடுக்க, நான் என்ன உனக்கு மாமனா? மச்சானா? போடா லூசுப்பையலே. என் ஆட்டமெல்லாம் வெறித்தனமா இருக்கும்” ஜெயசாரதியின் குரல் பாம்பாக சீற, “உங்களால் முடித்ததை பண்ணுங்க. ஆல் தி பெஸ்ட்” தன் அலைபேசி பேச்சை துண்டித்தான்.  

அவர் பேச்சை துண்டித்து விட்டாலும், ‘ஜெயசாரதியின் திட்டம் என்னவாக இருக்கும்?’ என்ற கேள்வி முகிலனை வண்டாக குடைந்தது.  

 தித்திப்புகள் தொடரும்…