தாழையாம் பூமுடித்து🌺16

தாழையாம் பூமுடித்து🌺16

16

இருவரும் ஒருத்தொருக்கு ஒருத்தர் காதலை வாய் வார்த்தையாக வெளிப்படுத்திக் கொள்ளவில்லையே ஒழிய,‌ இருவரது மனதிற்குள் இருப்பதும், தெளிந்த ஓடையின் அடி மணலாய்  தெள்ளென விளங்கியது‌ இருவருக்கும். பார்வைப் பரிமாற்றங்களே வாய் பேசாத வார்த்தைகள் எல்லாம் பேசியது. அடிக்கடி சென்னையிலிருந்து ஊருக்கு வர ஆரம்பித்தான் முத்துவேல்.‌ அவன் வந்து விட்டாலே தூதுப் பாடல் காற்றில் சென்று அவளை மாடிக்கு அழைத்து வந்துவிடும். 

வீட்டுக்கு வருபவளின் ஓரப் பார்வையிலும், பிள்ளைகளிடம் பேசுவது போன்ற சாடைப் பேச்சிலுமே காதல் வளர்ந்து கொண்டு இருந்தது. 

கிராமத்து கிளிக்கோ அதிகாலைப் பனியாய் அச்சம் இன்னும் முழுமையாக விலகவில்லை. எனினும் மன்னவனது பார்வை அவளுக்கு மலையளவு தைரியம் கொடுத்தது.

இது லேசாக அன்னபூரணிக்கு சந்தேகத்தை விளைவித்தது. மூன்று பெண்களைப் பெற்று, அடை கோழியாக பாதுகாத்து, அவர்களை கிராமத்தில் ஒரு சொல் கேளாமல் வளர்த்தவருக்கு தெரியாதா… இருவரின் பார்வைப் பரிமாற்றங்களும் அதன் அர்த்தமும்.

அவருக்கு உள்ளுக்குள் பதற்றம் தொற்றிக் கொண்டது. சின்னவருக்கு தெரிந்தால் என்னாவது. ஊருக்குள் தெரிந்தால் இரண்டு சாதிக்குள்ளும் முட்டிக் கொள்ளுமே.

அப்பொழுது தான் தொலைபெசி இணைப்பு சின்னவர் வீட்டிற்கு வந்திருந்தது. அதுவரை கடிதப் போக்குவரத்து தான். திலகவதியை தொலைபேசியில் அழைத்தவர்,‌ “சின்னவனுக்கு வயசு ஏறிட்டே போகுதே, சீக்கிரம் கல்யாணத்தப் பண்ண வேண்டியது தானே க்கா?” எனக் கேட்க, 

“ஸ்கூல் வேலைய முடிச்சிட்டு தான், கல்யாணம் பண்ணுவேன்னு ‌சொல்றான்,‌ அன்னம்.” எனக் கூற,‌ 

“அத அப்புறமா பாக்கலாம். முதல்ல பொண்ணப் பாருங்க.” என எதையும் வெளிப்பாடையாகப் பேசமுடியாமல் வைத்துவிட்டார். 

 ஒரு பெண்பிள்ளை விவகாரம் ஆயிற்றே.‌ வெறும் சந்தேகத்தை மட்டும் கொண்டு, ஊர்ஜிதமாகப் பேச முடியாதே என்பது அவரது எண்ணம். சின்னவர் ஆத்திரக்காரர் என்றால் பெரியவர் அவசரப்புத்திக்காரர். ஆனால் இதுவே பெரிய பிரச்சினை ஆகும் என அவரும் எதிர் பார்க்கவில்லை.

“அக்கா!”

“ஏன்டா கத்துற?”

“சின்னக் குட்டியக் காணோம்.”

“நல்லா பார்றா. ஆத்தா கூடத் தான் போகும்.”

“இல்லக்கா… அதோட ஆத்தாவும் கத்துது பாரு.” என்று சாந்தியின் தம்பி கூற, அவளும் ஆட்டு மந்தையை கவனிக்க, போட்டு இரண்டு மாதமே ஆன குட்டியை காணவில்லை. அதனுடைய அம்மாவும் கத்திக் கொண்டே மந்தையோடு சேராமல் பின் தங்கியது.

வானம் வேறு‌ இருட்டிக் கொண்டு வந்தது. சுழற்றியடித்து பேய்க்காற்று வீசியது. அதனால் தான் வேகமாக மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்ற ஆடுகளை வீட்டிற்கு ஓட்டிக் கொண்டு திரும்பினர் அக்காவும், தம்பியும். 

“அக்கா, ஆட்டுக்குட்டியக் காணாம்னா அம்மா நம்மல உருச்சு உப்புக் கண்டம் போட்டுரும் க்கா.” எனக் கூற, அவளுக்குமே சித்தியை நினைத்து சற்று பயம் வந்து போனது. என்ன பேசினாலும் இந்தக் காதில் வாங்கி அந்தக் காது வழியாக விட்டு விடுவாள் தான். அப்பா இருந்தாலாவது, சித்தி வாயைத் திறக்க மாட்டார். நல்லசிவமும் பக்கத்து ஊருக்கு ஒரு விசேஷத்திற்கு சென்று விட்டார். 

“ஆமாடா… உங்க அம்மா பேசுற பேச்சுல வயிறு ஊதிப்போகும். நீ ஆட்ட எல்லாம் ஓட்டிட்டுப் போடா. நான் தேடிட்டு வர்றே.” என்றவள் தம்பியிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, மீண்டும் வந்த வழியே அவர்களது காட்டிற்கு சென்றாள். சற்று தூரம் செல்ல, குட்டியின் சத்தம் கேட்டது. சத்தம் வந்த வழியே அவளும் செல்ல, முட்புதருக்குள்  மாட்டிக் கொண்டு, இவளைப் பார்த்ததும் வேகமாகக் கத்தியது. கையில் இருந்த குழை அறுக்கும் தொரட்டி கொண்டு முட்களை இழுத்து விலக்கியவள், குட்டியை கையில் தூக்கிக் கொண்டாள். அதனோடு வாயாடிக் கொண்டே நடக்க, சடசடவென தூரல் போட ஆரம்பிக்க, வேகமாக நடையை எட்டிப் போட்டாள். 

மழை வலுக்க ஆரம்பிக்க, நடக்க முடியாமல் களிமண் வரப்பும் வழுக்கியது. காலைச் சுற்றிய ஈரப் பாவாடையும் நடையைத் தடுக்க, காற்றும் மழையுமாக சுழற்றி அடித்துப் பெய்த மழையில் கை, முகமெல்லாம் எரிச்சல் எடுக்க, இப்பொழுது அவர்களது தோட்டம் தாண்டி சின்னவர் கரும்புக் காட்டிற்குள் வந்துவிட்டாள். சுற்றிலும் சோளக்காடும், கரும்புத் தோட்டமும். சாயங்காலப் பொழுதே கருக்கல் மாதிரி இருட்டிக் கொண்டு பேய் மழை அடித்து ஊற்ற, ஆட்டுக் குட்டியை தூக்கிக் கொண்டு நடக்கவும் முடியவில்லை. மந்தையோடு வந்த குட்டி என்பதால் கழுத்தில் கயிறும் கட்டவில்லை. கயிறு இருந்தாலாவது இறக்கிவிட்டு இழுத்துக்கொண்டு போயிருக்கலாம். அதுவும் முடியாமல் போக,

போகும் வழியில் சின்னவர் தோட்டத்தில், மோட்டார் ரூம் இருப்பது தெரியும். மழை‌ ஓயும் வரை சற்று ஒதுங்கிக் கொள்ளலாம் என அங்கே வேகமாக உள்ளே நுழைந்தாள்‌. 

உள்ளே ஆள் இருக்கும் அரவம் உணர்ந்து சட்டென, யாரென்றும் பார்க்காமல் வெளியேற எத்தனித்தவளை, அழைத்த குரல் கேட்டு, பசுவைக் கண்ட கன்றாக துள்ளித் திரும்பியவளின் பார்வை சொன்னது அவளின் ஏக்கத்தின் அளவை. கண்கள் ஒருகணம் செவ்வந்தியாய் மலர்ந்து சிரித்தது.

அங்கே முத்துவேல், சித்தப்பாவிற்கு தெரியாமல் சிகரெட் புகைக்க, வழக்கம் போல், கரும்பு வயலுக்கு மத்தியில் இருந்த மோட்டார் அறைக்கு வந்திருந்தான். மழையை மதிக்காமல் ஓடி இருக்கலாமோ என உள்ளே வந்த பிறகு தான் தோன்றியது. காலம் கடந்த ஞானம் கன்னியவளுக்கு.

வேகமாக வெளியே சென்றுவிடு என கன்னி மனம் எச்சரிக்க, வாய்க்காத தனிமை வாய்த்திருக்க, இருக்கவும் முடியாமல், விட்டுச் செல்லவும் மனம் இல்லாமல் இருதலைக்கொள்ளி எறும்பாக பெண்ணவள் தவித்து இருக்க, மழையில் தெப்பலென நனைந்து, ஆட்டுக் குட்டியை அணைத்து இருந்தவளது தோற்றமோ, ஆடவனை ஆட்சி செய்து கொண்டு இருக்க அங்கே கனத்த அமைதி நிலவியது. 

இடிச்சத்தத்திற்கு இணையாக இருவரின் இதயச் சத்தமும் இணை மத்தளம் கொட்டியது. தொண்டை வரண்டு தாகம் எடுக்க, வெளியே அடித்து ஊற்றிய மழையில் ஈரக்குலையும் குளிரெடுக்க, இங்கோ… இருக்கும் இடமே அனலடித்தது இருவருக்கும்.

எந்தத் தீயாக இருந்தாலும் அணைக்காமல் அடங்காது. முதன் முதலாக தாவணி அணிந்த பருவப் பெண்ணாய், படபடத்த மங்கையின் பார்வை மண் பார்த்து இருக்க, மன்னவனின் மேய்ச்சல் பார்வையில், மண்பானை ஈரமாய் இருவருக்குள்ளும் காமம் கசிந்திருக்க, பறித்து மடியில் கட்டியிருந்த குண்டுமல்லி வேறு தன் பங்கிற்கு இருவருக்கும் இம்சை கூட்ட, 

தன்னந்தனி காட்டுக்குள்ள ஜோடி நாம கூட்டுக்குள்ள

தன்னந்தனி காட்டுக்குள்ள ஜோடி நாம கூட்டுக்குள்ள

மாமனிவ பக்கத்துல மயிலு நான் வெக்கத்தில

மாமனிவ பக்கத்துல மயிலு நான் வெக்கத்தில

மழை செஞ்ச ஜாலம் சில நனஞ்ச கோலம்

யம்மா யம்ம ய ம யம்மா

ஹோ யம்மமமா மா மா

தொட்டது யார், தொடர்ந்தது யார்… மயங்கியது யார், மயக்கியது யார்… வீழ்ந்தது யார், வீழ்த்தியது யார்… எனத் தெரியாமல் இருவரும் ஒருவருக்குள் ஒருவராகி இருந்தனர். தொடங்கியதை முடிக்கத் தெரியாமலா, இல்லை… முடிக்க முடியாமலா, இல்லை… முடிக்க விருப்பமில்லாமலா, எடுத்துக் கொடுக்க, கொடுத்து எடுக்க வெளியேயும் பேய்‌மழை அடித்து ஊற்றி ஓய்ந்தது. 

ஆணின் தவிப்பு அடங்கி விட பெண்ணின் தவிப்பு தொடங்கியது. வயதும், இளமை வேகமும், தனிமையும், வரம்பு மீற வைத்திருந்து. அடிவயிற்றில் ஆரம்பித்த தவிப்பு இப்பொழுது தொண்டைக்குழி அடைத்து நின்றது பெண்ணவளுக்கு.

மார்பில் தலைசாய்த்து படுத்து இருந்தவளின், கண்ணீரின் வெப்பச்சூட்டை உணர்ந்தவனது அணைப்பு இறுகியது ஆறுதலாக. வெடவெடத்த கோழிக் குஞ்சாக ஒண்டிக் கொண்டாள் விட்டுவிடாதே எனும் விதமாக. 

“எம்மேல நம்பிக்கை இல்லையா?” ஆதுரமாக ஒலித்தது குரல்.

“ஊர நெனச்சா பயமா இருக்கே.” ஆயாசமாக வந்தது பதில்.

“எனக்கு ஊரப் பத்தி கவலை இல்லை.” இளங்கன்றின் பயம் அறியாப் பதிலாக இருக்க,

“உங்களுக்கு ஊரப்பத்தி தெரியல.” என்றாள் பயம் விலகாமல்.

“எனக்கு தெரிய வேண்டாம். தெரிய வேண்டியவள தெரிஞ்சுக்கிட்டாச்சு… அது போதும்.” என மேலும் அணைப்பு இறுக, 

“நீங்க தொட்ட உடம்ப இன்னொருத்தன் தொடுறதா இருந்தா அது எம்பொணமாத்தான் இருக்கும்.” என தொண்டையடைக்க கூறியவளை, சட்டென விலக்கியவன், பட்டென வாயில் அடித்து ஆதரவாக இறுக்கிக் கொண்டான்.

“தனியா பேச இப்ப தான் வாய்ப்பு கெடச்சுருக்கு. அதுல அபசகுணம் புடிச்ச மாதிரி பேசி வைக்கிறியே.” சற்று கோபமாக கடிந்து கொள்ள,

“நீங்க மட்டும் என்ன… எப்ப பாரு லவ் ஃபெயிலியர் ஆன டி.ஆர். பாட்டவே போட்டுகிட்டு. வேற பாட்டு கேசட்டே உங்ககிட்ட இல்லையா? இதுல மொத மொதன்னு பேசுறோமாம். இருக்குற இருப்ப பாத்தா அப்படியா தெரியுது.” என்றவளது கோலம் உணர்ந்தவனுக்கும் கோபம் தணிந்து சிரிப்பு வந்தது.

“நீ மட்டும் என்னாவாம். பாத்த மொத நாளே குளிக்க கூப்புட்ட ஆளாச்சே. நான் பாக்குறேன்னு தெரிஞ்சு தானே அன்னைக்கி கூப்புட்ட.” எனக் கேட்க, அன்று அவன் அரண்டு விழித்ததை நினைத்தவளுக்கு இன்றும் சிரிப்பு வந்தது.  

“அது உங்களுக்கு தான் மொத நாள். எனக்கில்ல… நாங்க பலநாளா பாக்குறோம். அன்னைக்கி கோழி திருடுன திருடனாட்டம் முழிச்சீங்களே?” எனக் கேட்டு சிரிக்க,

“இந்த வெடக்கோழிய திருடலாம். தப்பில்ல.” என்றவனது அணைப்பு அவளை அங்கிருந்த வேகமாகக் கிளம்பச் சொன்னது.

அவனை விட்டு விலகியவள், ஒரு கை கொண்டு அங்கம் மறைத்து, மறுகை கொண்டு, அவனுக்கு அடியில் கிடந்த தாவணியை இழுத்து உறுவி தோளில் போட, இருவரின் தாபச் சூட்டில் தாவணி ஈரம் காய்ந்து வெகு நேரம் ஆகிவிட்டது. 

“முழுக்க நனஞ்ச பின்னாடி முக்காடு எதுக்கு?” எனக் கேட்டு கண்சிமிட்ட, அந்தி வானமாய் சிவந்த முகம், அடுத்த நொடி கருக்கல் வானமாய் பயத்தில் இருண்டது. ஏனோ அந்தக் கேலி அவளுக்கு சுகிக்கவில்லை. அவளது தவிப்பை உணர்ந்தவன், கேலியை விட்டு விட்டு,

“அடுத்த தடவை ஊருக்கு வரும் போது, ஒரு நல்ல முடிவோட வர்றே. இனியும் உன்ன விட்டு என்னால இருக்க முடியாது. நீ எதுக்கும் தயாரா இருந்துக்கோ. பெரியவங்க சம்மதிச்சா பாக்கலாம். இல்லைனா உன்னைய எங்கேயாவது கூட்டிட்டு போயிர்றே. எதுக்கும் இருக்கட்டுமேனு பாம்பேல என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட வேலை விசாரிச்சு வைக்க சொல்லி இருக்கேன். தைரியமாயிரு.” என்றவனது உறுதியான பேச்சு நான் எதற்கும் தயாராக இருக்கிறேன் என்றது. அதுவே அவளுக்கு மலையளவு தைரியத்தை கொடுக்க, அதே துணிச்சலோடு வீட்டிற்கு வந்தாள். 

“ஆட்டுக்குட்டி வந்து அம்புட்டு நேரமாச்சு. நீ எங்கேடி போயிட்டு வர்றே. இது என்னாடி கழுத்துல காயம்.” என சித்தி வாசல் படி ஏறும் முன் கேள்வி கேட்க, பகீரென பயத்தில் அடிவயிறு கலங்கியது அவளுக்கு. 

“ஆட்டுக்குட்டி முள்ளுக்குள்ள சிக்கியிருந்துச்சு. அத தூக்க போனப்ப முள்ளுகிள்ளு கிழிச்சிருக்கும்.” என்ற வார்த்தைகள் தந்தியடித்தது தொண்டைக் குழிக்குள்.

“வித்தாரக்கள்ளி வெறகு பொறுக்க போனாளாம். கத்தாழ முள்ளு கொத்தோட குத்துச்சாம்கற கதையா இருக்கு உங்கதை. இருந்து இருந்து இன்னைக்கு தான் போனே. அதுக்குள்ள முள்ளு குத்துச்சு கல்லு குத்துச்சுனு வந்து நிக்கிற. போயி மஞ்சளத் தேச்சு குளி. இல்லைனா அந்த மனுஷ வந்து, என்னமோ ஊரு உலகத்துல இல்லாத சீமாட்டியப் பெத்து வச்சுருக்குற மாதிரி என்னயத்தான் பேசுவாரு.” என்ற சித்தியின் பேச்சுக்கள் அதோடு ஓயவில்லை… தொடர்ந்து கொண்டு தான் இருந்தது. 

“டேய்… உங்க அம்மா பேசுனதே வயிரு நெறஞ்சுருச்சுடா. இன்னைக்கி சோறே வேணாம்டா.” என தம்பியிடம் கேலி பேசிவிட்டு குளிக்க சென்றாள். செய்த காரியத்தின் வீரியம் வயிற்றை மந்தமாக்கியது.

          *********

“வாங்க ண்ணே! சாப்புடுங்க.” என, 

சின்னவருக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு தோப்பிற்கு வந்த அன்னபூரணி, பரிமாறிக்கொண்டே அவ்வழியாகச் சென்ற நல்லசிவத்தையும் உபசரிக்க, 

“சாப்புட்டு தான் வந்தேம்மா…” என்றவாறே அங்கே வந்தார்.

இவர்கள் தோப்பு வழியாகத்தான் அவரது தோட்டத்திற்கு செல்ல வேண்டும். 

“வாப்பா நல்லு!” என வரவேற்றவர், வந்தவரை எதிர் புறம் இருந்த இன்னொரு கயிற்றுக் கட்டிலில் அமரச் சொன்னார் சின்னவர். சிறிது நேரம் இருவரும் அரசியல், ஊர் விவகாரம் என  பேசிக் கொண்டு இருந்தனர். 

“சாந்திக்கி சொந்தத்துல மாப்பிள்ளை ஏதும் இருக்கா ண்ணே.” என அன்னபூரணி அக்கறையாக விசாரிக்க, அந்த அக்கறை தன் வீட்டுப் பிள்ளையின் மீதும் வந்த அக்கறை. இவர்கள் விவகாரம் தொண்டையில் சிக்கிய முள்ளாக அவருக்கு உறுத்திக் கொண்டு இருக்கிறதே.

“அதெல்லாம் இருக்கானுக ம்மா. எனக்கு தான் குடுக்க மனசு ஒப்பல.”

“யாரு ண்ணே அது?”

“சின்னவளே, அவளோட தம்பிக்கு தான் கொடுக்கணும்னு முரண்டு பண்றா.  மாமியா வீட்டுக்கு போயிட்டு வர்றவனாட்டம் மாசத்துல ரெண்டு தடவ சாராயக் கேசுல போலீசு ஸ்டேசனுக்கு போயிட்டு வர்றவனுக்கு எப்படி பொண்ணு கொடுக்கறது. இவளுக்கு செத்தவளோட அம்பது பவுன் நகை கண்ண உறுத்துது. பல்லக் கடுச்சுக்கிட்டு பொண்ணுக்காக அத மட்டும் கட்டிக் காப்பாத்தி வச்சுருக்கே. அதனால வெளிய கொடுக்க விடமாட்டேங்கிறா.”

“சொந்தத்துல இஷ்டம் இல்லைனா வெளிய பாக்க வேண்டியது தானே ண்ணே. வயசாகுதுல்ல. காலா காலத்துல முடிக்கணும்ல. தாயில்லாப்பிள்ள பாருங்க.” என்றவர் பேச்சில் கரிசனம் மிகுந்திருந்தது.

“பாக்கணும் ம்மா. ரெண்டு நாளைக்கி முன்னாடி கூட, ஒரு விசேஷத்துக்கு போயிட்டு, அப்படியே வள்ளுவன(ஜோசியர்) பாத்துட்டு தான் வந்தே.” 

“சாதகத்துல என்ன சொன்னாங்க ண்ணே?”

“இப்ப கொஞ்சம் சாந்திக்கி கெரகம் சரியில்லையாம் ம்மா. ஒரு தத்து(கண்டம்) இருக்குனு வேற சொன்னாப்ல. அப்படியே கல்யாணம் முடிஞ்சாலும் தகராறுல தான் முடியும்னு வேற சொல்லியிருக்காப்ல.” என கவலையாக நல்லசிவம் கூற, மரத்தில் பல்லி கத்தும் சத்தம் கேட்க, அன்னபூரணிக்கு சகுணம் சரியில்லையே என்று அடிவயிற்றில் தீ பிடித்தது‌. 

“அவ தான் அல்ப ஆயுசுல போயிட்டா. எம்பிள்ளையாவது நீண்ட ஆயுசோட குடும்பம் குட்டினு வாழணும்மா. அந்த சங்கிலிக்கருப்பண் கிட்ட தெனமும் இதத்தான் வேண்டிக்கிறே.” என மூத்த மனைவியின் நினைவில் கண் கலங்க,‌ மேல் துண்டால் கண்களைத் துடைத்துக் கொண்டார். என்னவோ அவர் எழுந்து செல்லும் பொழுது, நடை தளர்ந்து செல்வதாகவே பட்டது அன்னபூரணிக்கு. இப்பவாவது தனக்கு ஏற்பட்ட‌ சந்தேகத்தை கணவரிடம் சொல்லி இருக்கலாம்.

அவர் பயந்தது போலவே, மோட்டார் அறைக்குள் பற்றிய தீ ஊருக்குள் புகைய ஆரம்பித்தது. ஊருதுன்னாலே பறக்கும் எனச் சொல்லும் ஊர். கேட்கவா வேண்டும். வாயு வேகத்தில் வதந்தி பரவியது. முக்கியஸ்த்தர்கள் வீட்டிற்கு எல்லாம் மொட்டக் கடிதாசி பறந்தது. ஊருக்குள் ஒரு விவகாரம் அடிபட்டால் உடனே மொட்டைக் கடிதாசி தான் பறக்கும். 

சோளக்காட்டுக்குள்ள சோடி சேந்த கதை தெரியுமா? இதுதான் உங்க ஊர் கட்டுப்பாடா? சாதி விட்டு சாதி சம்பந்தம் பண்ணுவீங்களா? இதுக்கு நீங்க எல்லாம் சேலைய கட்டிக்கலாம்… என இன்னும் பலப்பல எழுத்தில் வடிக்க முடியாத வார்த்தைகள் எல்லாம் எழுதியிருக்க… சின்னவர் வீட்டிற்கும் ஒன்று வந்தது.

**********************

“தாத்தாஆ… முத்து மாமவ சாவடியில புடுச்சு வச்சுக்கிட்டாங்க.” என, அங்கே பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டு இருந்த ஈஸ்வரன், ஓடிவந்து தகவல் கூற, அப்பொழுதுதான் சாப்பாட்டில் கைவைத்த மாமனும் மருமகனும் கையை உதறிக்கொண்டு வேகமாக எழுந்தனர். கையைக் கூட கழுவவில்லை. வெறும் பனியனோடே துண்டை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு இருவரும் வேகமாக சாவடியை நோக்கி சென்றனர். 

“அக்கா… ஊர் இருக்குற இருப்புக்கு, இப்ப எதுக்கு முத்துவ ஊருக்கு வரவிட்டீங்க.” என அன்னபூரணி உடனே ஃபோனில் அழைத்து திலகவதியை கடிந்து கொள்ள, 

அவரோ, “அவன் கிளம்பியதே தெரியாதே.” என்றார் படபடப்பாக.

தன்னவளைப் பார்க்கப் போகும் ஆவலில் உற்சாகமாக ஊருக்கு வந்து இறங்கியிருந்தான் முத்துவேல். இந்த முறை  ஊருக்கு வர இரண்டு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. இரண்டு மாதமே இரண்டு யுகமாகக் கழிந்தது முத்துவேலிற்கு. பள்ளியும் இறுதிக்கட்ட வேலையில் இருந்ததால் அவனால் ஊருக்கு வர முடியவில்லை. சுப்பையாவும் விடவில்லை. அவனுக்காக ஏதோ ஒரு வேலை வைத்துக் கொண்டே இருந்தார்.

அவனுக்கு தன் பெற்றொரிடம் சம்மதம் கிடைக்கும் என்று தோன்றவில்லை. இப்பொழுது தான் தீவிரமாக சுப்பையா பெண் தேடுவதாகப் பட்டது. எனவே முதலில் தெரியாமல் திருமணம் முடித்துக் கொண்டு மாலையும் கழுத்துமாக வந்து நின்றால் ஒன்றும் செய்ய முடியாது என்ற எண்ணம் வந்தது. எனவே தான் வேலைக்கு எல்லாம் ஏற்பாடு செய்துவிட்டு வந்தான். 

“வாடா… பங்காளி!” என அழைத்தவாறே சாவடியில் அமர்ந்திருந்த பால்பாண்டி இவனைப் பார்த்துவிட்டு குதித்து இறங்கினான். முத்துவேலும் முதலில் கண்டு கொள்ளவில்லை. நம்ம ஊருக்குள் யார் நம்மை இப்படி மரியாதை இல்லாமல் அழைக்க போவது என்ற எண்ணம் தான். 

“பங்காளிக்கு காது கேக்காது போலடா. ஒரு வேள பொட்டச்சிக கூப்புட்டா தான் நிப்பாரோ?” என எகத்தாளமாகக் கேட்டுக் கொண்டே அவன் சோட்டு ஆட்களோடு முத்துவை நெருங்க, சாவடியில் அமர்ந்திருந்த இவன் இனத்து இளவட்டங்களும் ஒருபுறம் வேகமாக இறங்கி வந்தனர்.

“இப்ப தான் ஊருக்கு வர்ற போல. நல்லா சோக்கா தான் இருக்க. பேன்ட்டு சட்டைனு மாட்டிக்கிட்டு தான் பொட்டச்சிக கிட்ட ஃபிலிம் காமிச்சு மயக்குறியா?” என அருகே வந்து கேட்க அப்பொழுதுதான், அவன் கேட்டது தன்னை எனத் தெரிந்தது. 

“மரியாதையா பேசு. யாரப் பத்தி பேசுறேன்னு தெரிஞ்சு தான் பேசுறியா? அப்படி எந்த பொண்ண மயக்கினேன்?” என கோபமாகக் கேட்க,

“எந்தப் பொண்ணுனு தெரியாத அளவுக்கு, அப்படி எத்தன பேர கரும்பு காட்டுக்குள்ள கூட்டிட்டுப்போன.” எனக் கேட்க, அப்பொழுதுதான் விஷயம் அம்பலமானதே புரிந்தது முத்துவேலிற்கு. 

“அப்படி என்னத்த காட்டிடா அவள மயக்கினே?” எனக் கேட்க கோபம் எல்லை மீறியது முத்துவேலிற்கும். 

” நான் யார எங்க கூட்டிட்டுப் போனா உனக்கென்ன? அதக் கேக்க நீ யாருடா? ஒழுங்கு மரியாதையாப் பேசு.” முத்துவேலிற்கும் கோபம் கண்ணைக் கட்டியது. 

“பங்காளிக்கு மரியாதை வேணுமாம்ல. ஊருக்குள்ள எங்க அக்கா வீட்டு மானம் மரியாதையை சந்தி சிரிக்க வச்சுட்டு, உனக்கு மரியாதை வேணுமா? நா… யாருன்னா கேட்ட. நா… அவளுக்கு தாலி கட்டின புருஷன்.” என்ற பதிலில் ஒரு நிமிடம் அவன் சொன்னதன் அர்த்தம் விளங்கவில்லை. அடுத்த நொடி முத்துவேலின் சட்டையைப் பிடித்து இருந்தான் பால்பாண்டி. முத்துவேலின் உலகமே தன் இயக்கத்தை நிறுத்தியது. 

திருமணம் முடிந்ததை அறிந்ததற்கே இயக்கம் நின்றது எனில், தன்னுள் சங்கமித்தவள் சாம்பலாகி சிலநாட்கள் ஆகிவிட்டதை அறிந்தால் இதயமும் இயக்கத்தை நிறுத்தி விடுமோ?

       

 

error: Content is protected !!