TholilSaayaVaa3

TholilSaayaVaa3

3

 

“நேத்து என்ன தேடி ரொம்ப சுத்தினதா கேள்விப்பட்டேன். களைச்சு போயி தெரியுற அதான் வழக்கமா அஞ்சு மணிக்குத் தானே இங்க வரவ இன்னிக்கி 3 மணிக்கே?” சிரித்தவன் கிண்டல் பார்வையில், ஏகத்திற்கும் கடுப்பானவள்

“உங்களுக்கு எப்படி நான் வர டைம்…அத விடுங்க, எங்க போய் தொலைஞ்சீங்க? ஒரு நாளே வேஸ்ட்டா போச்சு. இதெல்லாம் அழுகுனியாட்டம்” அடம் பிடிக்கும் குழந்தைபோலக் கையையும் காலையும் உதைத்துக்கொண்டு அவள் கோவப்பட,

அவளையே அதிசயமாகப் பார்த்திருந்தவன் முகத்தில் புன்னகை குறையவில்லை, “நான் என்ன வேணும்னேவா செஞ்சேன்? அவசரமா கிளைன்ட் பார்க்கப் போகவேண்டி வந்தது, அங்க போனா… மீட்டிங் பின்னாடி மீட்டிங்ன்னு நாள் ஃபுல்லா உட்காரவைச்சு காதுல ரத்தமே வர வச்சுட்டாங்க. பாஸை வேற கூட்டிட்டு போயிருந்தேனா”

“அதுக்காக? எனக்கு ஒரு நாள் போச்சே !” அவள் புகார் வாசிக்க

“அதுக்கு? வாங்குற காசுக்கு வேலை செய்யாம உன் பின்னாடியே சுத்த சொல்றியா?”

“அப்படி சொல்லலை…சரி விடுங்க. ஆமா நீங்க இங்க என்ன பண்றீங்க?” அவள் புருவம் சுருக்க,

“ஏன்மா நான் காபி குடிக்க வரக்கூடாதா? அப்படி ஏதும் இங்க போர்டு இல்லையே”

“கூடாது ! காபி குடிக்க கூடாது. உடம்புக்கு நல்லதில்லை. இந்தாங்க கோகோ இதை குடிங்க” அவனிடம் அந்தக் கையிலிருந்த கோகோ பொடியை நீட்டினாள்.

அதை வாங்கி முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்தவன், “நீ என்ன உங்கப்பா கம்பனிக்கு மார்க்கெட்டிங் பன்றியோ?” நக்கலாகக் கேட்க,

அவன் தன்னை கிண்டல் செய்வது கூட உணராது அவன் ஒற்றை புருவம் தூக்கிப் பேசும் அழகில் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள் மாயா.

அவனோ கேலியாக, “சைட் அடிச்சது போதும். கேட்டதுக்குப் பதில்”

அதில் சிந்தை கலைந்தவள், “சைட் எல்லாம் இல்ல.சும்மா அது…”

“சரி சரி அழகா இருந்தாலே இதெல்லாம் ஒரு தொல்லை என்ன சொல்றே?” என்றவன் கோகோப்பொடியை அங்கிருந்த மேடையில் வைத்து,

“நீயே கலந்து கொடு. உங்க கம்பெனி கோகோ எப்படித்தான் இருக்குனு பாப்போம்” என்றபடி அவன் கோப்பையை அவளிடம் நீட்ட, அதை வாங்கிகொண்டவள்,

“எங்க கம்பெனி கோக்கோன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?” கேட்டுக்கொண்டே அவனுக்கும் தனக்கும் சாக்லேட் மில்க் கலக்கினாள்.

“அதான் உன் கூடவே இருக்காங்களே ஒரு வானர கூட்டம், அவங்கதான் சொன்னது, எனக்கு மட்டும் இல்லை இந்த ஆபீஸ் பூராவே சொல்லி வச்சுருக்காங்க. அதுலயும் அந்த வினோத் மை காட் ! விட்டா இங்க விளம்பரமே வச்சுடுவான். இதுல இது பெரிய ரகசியம் பாரு” என்று நக்கலடிக்க

மாயா சிரித்தபடியே, “குடிச்சு பார்த்துட்டு சொல்லுங்க” அவனிடம் கோப்பையை நீட்டி, “ரகசியம்னு சொன்னா ஞாபகம் வருது, உங்க பெயர் என்னவா இருக்கும்னு லிஸ்ட் வச்சுருக்கேன்” என்று சொன்னபடி தன் ஜீன்ஸ் பேக்கெட்டில் இருந்த நீளமான பட்டியலை எடுத்தாள்.

“இவளோ பெரிய லிஸ்டா? நீ எல்லாத்தையும் சொல்லி முடிக்கும் வரை என்னால இங்க நிக்க முடியாது எவன் பாஸ் கிட்ட திட்டு வாங்குறது, உனக்கு மூணு சான்ஸ், சரியா சொன்னா ஓகே, இல்ல இன்னிக்கி கோட்டா ஓவர்” எச்சரித்தான்

ஆழ்ந்த மூச்சொன்றை வெளியிட்டவள் பட்டியலை ஒருமுறை பார்த்துக் கொண்டாள்,

“ரகுவரன்?”

பானத்தைக் குடித்தவாறே இல்லை என்று தலையசைத்தான்

“ஆகாஷ்?”

“இல்ல”

அவள் முகம் சோர்வதைக் கண்டு பொறுக்காதவன், “சரி இன்னும் எக்ஸ்ட்ரா ரெண்டு சான்ஸ்”

உற்சாகமானவள் “சித்தார்த்?”

“இல்ல”

“சிவா ஆர் சிவராம்?”

“இல்ல”

“ஒண்ணே ஒண்ணுதான் இருக்கு” சிரித்துக்கொண்டே நினைவூட்டினான்.

“பின்ன என்ன விஸ்வநாத்தோ ?” என்றாள் கடுப்புடன்

உரக்கச் சிரித்தவன், “என் பெயரை சொல்ல சொன்னா என் அப்பா பெயரையே சொல்லிட்டியே! நான் நெனைச்சதவிட நீ புத்திசாலி ஆழாக்கு”

“அட போப்பா, தெரியல போ… தோத்துபோய்ட்டேன்னு வச்சுக்கோ.என்னதான்டா உன் பேரு? இப்படி கொல்றே…” புலம்ப

“என்ன ஆழாக்கு போப்பான்னு ஆரம்பிச்சு பொசுக்குன்னு டான்னு சொல்லிட்ட! இதைத்தான் மரியாதை தேயுதுன்னு சொல்லறதா?” அவன் போலியாய் முறைக்க

“சாரி பாஸ் கடுப்புல வந்துருச்சு, உங்க பேருதான் என்ன? அட்லீஸ்ட் உங்க வேலை என்ன சொல்லுங்க” என்று கேட்க

“ஆஸ்கு புஸ்கு அதை சொன்னா எச்ஆர் கிட்ட கேட்டு பெயரை கண்டுபிடிச்சுடுவ? பேடி போ. என்னை டான்னு சொன்னேல்ல, இன்னும் யோசி. இல்ல நாளைக்கு என் கூடத்தான் லன்ச் சாப்பிடணும்”

“அதுக்கு வேற ஆள பாருங்க! கூப்பிட்ட உடனே ஓடிவர நான் என்ன உங்க வீட்டு நாய் குட்டியா?”

“இல்லை கொசு குட்டி” கண்ணடித்தவன், “நாளைக்கி மதியம் வரை உனக்கு டைம், சரியா 12 25கு மெஸேஜ் பண்ணுவேன் என் பெயரை சொல்லணும், இல்ல நீ என்கூட வந்தே ஆகணும்” என்றவன் நிமிடத்தில் அவ்விடத்தை விட்டுச் சென்றுவிட்டான்.

மனதில் அவனைத் திட்டிக்கொண்டே தன் இருக்கைக்குச் சென்றாள்.

“பத்மா…”

“சொல்லுடி”

“அவன் பெயர் கூட சொல்ல வேண்டாம் அவன் என்னவா வேலை செய்றான்னாவது சொல்லேன். ப்ராஜெக்ட் ரிஜெக்ட் பண்ண முடியும்னா எதோ சீனியர்ன்னு புரியுது”

“அவ எதுவும் சொல்லமாட்டா. நேர்மையா முயற்சி செய்” என்றான் வெங்கட்

‘இவன் ஒருத்தன் எப்போ பாத்தாலும் நேர்மை எருமை கருமைன்னு. ஐயோ உன்னையெல்லாம் எவண்டா ஐடி கம்பெனில சேர்த்தா மிலிட்டரிக்கு போயிருக்க வேண்டிய ஆளு, பாரேன் என்னமோ மெடல் கொடுக்குறமாதிரி விறைப்பா நிக்குறத?’

மாயா பக்கத்தில் அமர்ந்திருந்த வினோத்திடம்,

“வினோத்! நீ நல்லவன் தானே ?”

“இல்ல” கணினியிலிருந்து கண்ணை எடுக்காமல் பதில் தந்தான்

“எனக்கொரு உதவி பண்ணுவியாம்”

“மாட்டேன்”

“நீ என் செல்லா குட்டி தானே?”

“இல்ல”

“நீ எனக்கு உதவி பண்ணுவியாம், நான் உனக்கு பிஸ்ஸா வாங்கி தருவேனாம்”

“வேண்டாம். உனக்கு ஹெல்ப் பண்ணாம இருந்தா, எனக்கு டின்னர் வாங்கித்தரேன்னு சொல்லிருக்கார்”

“யாருடா அந்த நல்லவன் ?” முறைத்தாள்

“பேரைச் சொல்லவா… அது நியாயமாகுமா…” பாடியபடி வேலையைத் தொடர்ந்தான்

“அடேய் வேணாம்டா, எனக்கு உதவி செய்யாம கொட்டிக்கிட்ட பேதி பிச்சுக்கும் சொல்லிட்டேன்!”

“சபிக்கிறியோ?”

“படுத்தாதடா, ஒரு க்ளூ?” கெஞ்சினாள்

“மாட்டேன் போடி, எனக்கு சாபம் விட்டெல்ல?” முறுக்கிக்கொண்டான்

“போடா போடா நானே கண்டுபிடிச்சுக்குறேன். ரொம்பதான்” முகத்தைத் திருப்பிக்கொண்டாள்

இரவு அன்றைக்கு நடந்தவற்றை எப்பொழுதும்போல் குடும்பத்தினரிடம் ஒப்பித்தவள்,

“எனக்கு உதவி பண்ணாம இருக்க அவன் வினோத்துக்கு டின்னர் வாங்கித் தரானாம்!”

“நீ முழுமனசோட முயற்சி செய்தா தானா வழி கிடைக்கும்.” என்ற கிருஷ்ணன், “மாதவா அந்த பையன் சொன்ன கொக்கோ விளம்பர எண்ணம் நல்லா இருக்கு. நாம ஏன் இவங்க ஆபீஸ்க்கு இலவசமா சேம்பிள்ஸ் கொடுக்கக் கூடாது ?”

“சூப்பர் பா. சீக்கிரமா பேசிபாக்றேன்”

“நான் தொண்டை கிழியக் கத்திக்கிட்டு இருக்கேன், நீங்க பிசினெஸ் பிளான் போடறீங்க. இது ஒரு குடும்பமா? எல்லாம் வில்லன்கள்” பொரிந்து தள்ளியவளை யாரும் மதித்ததாய் தெரியவில்லை.

மறுநாள் அவனைத் தேடி அலைய நினைத்தவள் பனி சுமையால் இடத்தைவிட்டு நொடிகூட எழ முடியாமல் இருந்தாள்.

நேரம் 12 20 ஐ காட்ட மனம் படபடவென அடித்துக் கொள்ள, தந்தை அழைப்பு வர உடனே எடுத்தவள்,

“அப்பா அந்த நெட்டைக்கொக்கு…”

“நான் அந்த பையன் கிட்ட இப்போதான் பேசினேன், ரொம்ப நல்லவனா இருக்கான். அவன் பெயர் விலாசம் எல்லா விவரங்களையும் கொடுத்துட்டான். நீ போயிட்டு சீக்கிரமா ஆபீசுக்கு திரும்பிடு சரியா? எனக்கு மீட்டிங் இருக்கு வச்சுடறேன் ” அழைப்பைத் துண்டித்தார்.

‘எவன்கூடவோ லஞ்சுக்கு போக பர்மிசன் கொடுக்குற? லூசாப்பா நீ?’ கண்களை இருக்க மூடிக்கொண்டவள், ‘நான் இன்னும் அவன் பெயரை சொல்லவே இல்ல அதுக்குள்ள எங்கப்பா கிட்ட எப்படி பேசினான்? மொதல்ல எப்படி அப்பா நம்பர் தெரியும் ?’ குழம்பிக் கொண்டிருந்தவள் பார்வை வினோத்தின் மேல் விழுந்தது

“டேய் வினோதா…”

“ம்ம்”

“எங்கப்பா ஃபோன் நம்பர் அவன்கிட்ட கொடுத்தியா ?”

“எவன் கிட்ட ?”

“அதான் இன்னிக்கி டின்னர் வாங்கி கொட்டிக்க போறியே அவன் கிட்ட”

“அது நேத்தே டின்னர் போயிட்டு வந்துட்டேன். செம்ம சாப்பாடு தெரியுமா? அதுவும் கடைசியா ஐஸ்க்ரீம்…அட அட அட அந்த மசாலா பால்…சான்ஸே இல்ல! மனுஷன் கணக்கே பார்க்காம வாங்கி தள்ளிட்டார். எனக்கே சாப்பிட்டு மாளலைன்னா பாரேன்” அவன் சிலாகிக்க

“ஐஸ்கிரீம் காக எங்கப்பா நம்பர் அவன்ட கொடுத்துட்டே அப்படித்தானே?” முறைத்தாள்

“சேச்சே! என்னை என்ன நெனச்சே?” புன்னகைத்தான்

“சாரிடா உன்னைப்போய் தப்பா நெனச்சுட்டேன்…” வருந்தினாள்

“உன் அப்பா, அண்ணா, அம்மா ஏன் உன் மொபைல் நம்பர், வீட்டு விலாசம் எல்லாம் கொடுத்துட்டேன். உப்புக்கே நன்றி பாராட்ட சொல்வாங்க, நான் விருந்தே சாப்ட்ருக்கேன்…” என்று வினோத் தோளைக் குலுக்க, கையில் கிடைத்த பேனா நோட் அனைத்தையும் அவன்மீது எறிந்தாள்

“ஹே சீ இது என்ன ஆபிஸா ஸ்கூலா?” வெங்கட் கடுகடுக்கத்

தாழ்ந்த குரலில் “வினோத் இனி நான் உன் பேச்சு கா போடா” கோவமாகத் திரும்பிக்கொண்டாள்

“நான் டபுள் கா போடி “வினோத்தும் முறுக்கிக் கொண்டான்

பத்மா சிரித்துக்கொள்ள, வெங்கட்டும் சிரிப்பைக் கட்டுப்படுத்த திணறித்தான் போனான்.

சரியாக நேரம் 12 25ஆக, நெடியவன் எஸ்எம்எசில்.

‘ஹாய் ஆழாக்கு. அப்பா ஓகே சொல்லிருப்பாரே?’ என்று அனுப்பியிருந்ததைப் படித்தவள்,

‘நான் இன்னும் தோற்றுப் போகலை ஞாபகம் இருக்கட்டும்’ என்று பதில் தந்தாள்

மறுநொடியே அவள் கைப்பேசிக்கு அழைத்தவன்,

“சொல்லு பாப்போம்” என்றான் மிடுக்காக

அவள் ஒவ்வொரு பெயராய் சொல்ல அவனோ இல்லை என்று அசராது பதில் தர, தன் தோல்வியை ஒப்புக்கொண்டவள்,

“முடியலை! தொண்டை வறண்டே பேச்சு. இத்தனை பெரிய பட்டியலை படித்ததுக்கு கடவுள் பெயரை சொல்லி ஜெபிச்சுருந்தா கொஞ்சம் புண்ணியமாவது சேர்ந்திருக்கும்.”

“ம்ம் சரிதான். இப்போ லன்ச் கிளம்ப வேண்டியதுதானே ?” ஏளனமாய் சிரிப்பது அவன் குரலில் வெளிப்பட

“வந்து தொலைக்குறேன் வாங்க” என்றாள் வேண்டா வெறுப்பாக

“இப்படி சொன்ன வரமாட்டேன், பாசமா கூப்பிடு”

“பேசாம வாங்க பாஸ்” அலுத்துக்கொண்டாள்

“நீ பாசமா கூப்பிடுடா ஆழாக்கு” அடம்பிடித்தான்

“ டா வா ? சரி டா! வாடா என் செல்ல குட்டி, பட்டு குட்டி, கன்னுகுட்டி,நெட்டை குட்டி, லூசு குட்டி”

அவனிடமிருந்து பதில் வரவில்லை. அழைப்பைத் துண்டித்திருந்தான்.

‘ஒருவேளை டா சொன்னேன்னு கோவமா ?’ அவள் மனம் யோசிக்க மறுத்து வேலை நிறுத்தம் செய்தது

“நாங்க கிளம்பறோம் அப்புறம் சொல்லு உன் லன்ச் என்னாச்சுன்னு. ஆல் தி பெஸ்ட்” சொல்லிச் சென்று விட்டாள் பத்மா. வினோத்தும் சிரித்தபடி கிளம்ப வெங்கட்டின் பார்வையில் மட்டும் எச்சரிக்கை இருந்தது.

நேரம் 12 45, என்ன செய்வதென்று அவள் மனம் குழம்ப, வாட்ஸாப் ஒலித்தது, அதற்காகவே காத்திருந்த அவள் ஆர்வமாய் எடுத்துப் பார்க்க, மாதவன், ‘ஆல் தி பெஸ்ட் வாலு’ என்று அனுப்பி இருந்தான்

‘அடபோடா… ஊருக்கே தெரிஞ்சு இருக்கு. எனக்குத்தான் ஒன்னும் தெரியலை. இவன வேற காணும் ச்சே’ என்று வெறுத்து எழுந்தவள் திரும்ப, அவன்மேல் கிட்டத்தட்ட விழுந்தே விட்டாள்.

“ஹேய் பாத்து…சாரி ஆழாக்கு, பாஸ் கிட்டேந்து கால் வந்தது அதான் கட் பண்ணிட்டேன். கிளம்பலாமா? நீ இப்படி செல்லம் பட்டு ன்னு கொஞ்சுவேண்ண என்ன வேணும்னாலும் செய்யலாமே” என்று மறுபடி ஒரு புருவம் உயர்த்தி குறும்பாய் சொல்ல

அதுவரை இருந்த கோவம் பதட்டம் எல்லாம் மறந்தவள்,

“எப்படி ஒரு புருவம் மட்டும் தூக்குரீங்க? எனக்கு இப்படி பண்ண ரொம்பநாள் ஆசை ஆனா வரல. பாருங்க…” இருபுருவங்களையும் உயர்த்தி உயர்த்தி முகத்தில் பாவங்களை மற்ற

கையெடுத்துக் கும்பிட்டவன், “அம்மா தாயே ! இப்படிலாம் செஞ்சு என்னை பயமுடுத்ததே. பயங்கரம்மான கனவு வரும். இப்போ வா அப்புறம் சொல்லித்தரேன்” அவன் முன்னே நடக்க இவள்பின் தொடர்ந்தாள்

“ஸ்கூட்டி வேண்டாம் என்கூடவே கார்ல வா. உனக்காகவே இன்னிக்கி பைக்கை வச்சுட்டு காரை எடுத்துட்டு வந்தேன். அங்கிள் கிட்ட சொல்லிட்டேன்” என்றான் லிப்ட்டில்

“எங்கிள்? ச்சே எந்த அங்கிள் கிட்ட?”

“கிருஷ்ணன் அங்கிள்… உங்கப்பா”

அதிர்ந்தவள் ‘இவன் இம்சை தாங்கல. இதுல கூட்டுக் களவாணி வேலை வேற ‘ மனதுக்குள் அவனை மட்டும் அல்லாது தன் தகப்பனையும் சகோதரனையும் சேர்த்தே அர்ச்சித்தாள்.

“எதுக்கு கார்? நம்ம ஃபுட்கோர்ட்ல சாப்பிடலையா?”

“இல்லை ஆழாக்கு” என்றவன், அவள் பார்வையிலிருந்து கேள்வியை உணர்ந்து, “அப்புறம் ஏன்னு சொல்றேன். இப்போ சமத்தா அமைதியா வருவியாம்”

அவன் காரில் ஏறியவள், அவனுடன் புறப்பட்டதை அண்ணனுக்கு மெசேஜ் மூலம் தெறிப்படுத்தினாள்.

வானொலியில் மென்மையான ஹிந்தி பாடல் ஒலிக்கச் சென்னை போக்குவரத்து நெரிசலில் ஆமைவேகத்தில் சென்று கொண்டிருந்தனர்.

“ஏற்கனவே இவ்வளவு ஸ்லோவா போறதுல தூக்கமா வருது. இதுல பழைய ஹிந்தி பாட்டு வேற” மாயாவின் கண்கள் சொருக.

அவன் வானொலியில் அலைவரிசை மாற்ற, மாயா துள்ளி எழுந்து அவனை ஏகத்துக்கும் முறைத்தாள்.

இதமான முகம்மது ரஃபியின் பாடலிலிருந்து திடுமென்று காட்டு கத்தில் எவனோ அலறும் ஆங்கில பாடலை கேட்டு, நொடியில் உறக்கத்தை தொலைத்தது மட்டுமில்லாது, தலைவலியும் சேர்ந்துகொண்டது அவளுக்கு.

உரக்கச் சிரித்தவன், “என்ன சுகமா இருக்கோ? நான் இங்க கேனயனாட்டும் வண்டி ஒட்டுவேனாம், மேடம் மகாராணி மாதிரி தூங்கிட்டு வருவீங்களாக்கும்”

“உன்கூட ஒரு 10 நிமிஷம் கார்ல தனியா வந்தாலே தலைவலிக்குதே, உங்க கூட லன்ச் வேற, என்ன பண்ண போறேனோ?” என்று அவள் முடிக்கும் முன்பே, அவன் மென்மையான பழைய

♪ மாசிலா உண்மை காதலே

மாறுமோ செல்வம் வந்த போதிலே

மனதை நொடியில் வசீகரிக்கும் எம்ஜிஆர் பாடலை பிளே செய்திருந்தான்.

“அப்பாடா இப்போதான் காதுக்கு இதமா இருக்கு. உங்களுக்குக் கூட நல்ல ரசனை இருக்கே” புன்னகைத்த படி அவனைப் பார்க்க,

அவன் முகத்திலோ இதுவரை இருந்த சிரிப்பு மறைந்து இறுக்கம் படர்ந்திருந்தது. சாலையையே வெறித்தபடி காரை ஒட்டிக்கொண்டிருந்தான்.

“என்னாச்சு பாஸ் திடீர்னு சைலன்ட் ஆகிட்டிங்க?”

“என்கூட உன்னால 10 நிமிஷமே இருக்க முடியால, இதுல நான் வேற பேசி உன்னை இன்னும் கஷ்ட படுத்தணுமா?”

“சாரி பாஸ். உங்க கூட எப்போ பேசினாலும் ஜாலியா இருக்கும். ஆனா அந்த கரப்பான்பூச்சி பாட்டுக் கேட்டு தலைவலி வந்து… கோவத்துல சொல்லிட்டேன்! மன்னிச்சுடுங்க பாஸ்” வருந்தினாள்

ஒரு நொடி அவளைத் திரும்பிப் பார்த்தவன், அவள் முகம் வாடி இருப்பதைக் காண முடியாமல், “சும்மாதான் கிண்டல்” சிரித்தான்,

அவள் முகம் வாடியே இருந்தது அவனைப் புண்படுத்தி விட்டோமோ என்ற குற்ற உணர்ச்சியில்.

அவன் உற்சாகமாக “அதவிடு. அதென்ன கரப்பான்பூச்சி பாட்டு?” என்று கேட்க, மீண்டும் பழைய மாயா தலையைத் தூக்க, ஆர்வமாக,

“அதுவா பாஸ்? கரப்பாண்பூச்சிய திருப்பி போட்டா அது விலு விலுன்னு ஒதச்சுக்கும் அதுமாதிரி கத்துறான் அதான்…”

அதில் மனம் விட்டுச் சிரித்தவன், “ஐயோ ஆழாக்கு! நீயும் உன் உதாரணமும். ஆமா அதென்ன வார்த்தைக்கு வார்த்தை பாஸ்ன்னு கூபிட்றே? நெட்டைகொக்கு இப்போ பாஸ்ஸா மாறிட்டேனோ?” நக்கலாகக் கேட்டான்.

“பின்ன நெட்டை கொக்குன்னு பெரிசா கூப்பிட கஷ்டமா இருக்கு, நெகோன்னு கூப்பிட்டாலும் அவளோ பிடிக்கலை அதன் பாஸ்னு சிம்பிளா, நீங்கதான் பெரிய அப்பாடக்கராச்சே! பேரை சொல்லாம சீன போடுறீங்களே” புலம்பினாள்

“ஹேய் அதான் சொல்லிட்டேனே சொல்றேன்னு, ஆச்சு இதோ இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ”

ஆழ்ந்த மூச்சொன்றை விட்டவள் “சரி போங்கப்பா என்னமோ இவளோ பில்டப் பண்றீங்க, கடைசியில் உங்க பெயர் மட்டும் சப்புன்னு இருக்கட்டும் வச்சுக்குறேன்” கை முஷ்டியைக் காட்டி, குத்து விடுவேன் என்பது போல் மிரட்ட

“அம்மா தாயே, என் பெயரை உனக்கு பிடிக்கலைன்னா நான் என்ன பண்ண முடியும்? அது அப்பா அம்மா வச்ச பெயர். எதோ நான் தேர்ந்தெடுத்த மாதிரி என்னை மிரட்டுறியே ? சரி விடு எதுக்கு வம்பு என் பெயரே உனக்குத் தெரிய வேணாம்” புன்னகைத்தபடியே காரை உணவகத்தின் முன் நிறுத்தினான்.

‘ஐயோ இதென்ன வம்பு’

“இதெல்லாம் செல்லாது செல்லாது. சாப்பிட வந்தா பேர சொல்றேன்னு சொல்லிட்டு இப்படி ஜகா வாங்கினா, நான் இப்படியே கிளம்பிடுவேன். ஆமா” மிரட்டினாள்.

“ஏன் மா பெயரை சொன்னாலும் குத்தம், சொல்லமாட்டேன்னு சொன்னாலும் குத்தமா? நான் என்ன தான் பண்ணறது?” போலியாய் அலுத்துக்கொண்டே அவளை உணவகத்தினுள் அழைத்துச் சென்றான்.

சின்ன அறையில் பிரத்யேகமாக இவர்களுக்கென போடப் பட்டிருந்த மேசையில் சென்று அமர்ந்தனர்.

“என்ன பாஸ் ரொம்ப மெனக்கெட்டு எல்லாம் பிளான் பண்ண மாதிரி இருக்கு, நான் வர ஓக்கே சொல்லி முழுசா 1 மணிநேரம் ஆகலை அதுக்குள்ள இந்த அக்கப்போர் ஆகாது சாமி” மாயா தலைசாய்த்துப் புன்னகைக்க, பதிலாய் புன்னகையை மட்டும் தந்தான்.

தானே சூப்பைக் கொண்டு வந்தார் சர்வர். ஏதும் ஆர்டர் செய்யாமலே ஒவ்வொரு உணவாக அடுத்தடுத்து வந்தது.

“என்ன பாஸ் எனக்கு என்ன பிடிக்கும்னு எங்கப்பாகிட்ட எல்லாம் தெரிஞ்சுக்கிட்டீங்க போல இருக்கே, வெரி குட் ! எதுக்கு இத்தனை வேகமா வேலை பாக்குறீங்க ? இதுல உள்குத்து ஏதாவது இருக்கா?” என்று அவள் சாப்பிட்டுக் கொண்டே கேட்க.

“உள்குத்தாவது வெளிக்குத்தாவது எதுவும் இல்ல. உனக்கு பிடிச்சதை பண்ணலாம்னுதான். பாவம் இவளோ நாளா ரொம்ப ஓட விட்டேன்ல” வருந்துவது போல அவன் சொல்ல.

“சரி கதையை மாத்தாதீங்க. உங்க பேர் என்ன பாஸ்?” அவள் தன் காரியத்திலேயே குறியாய் இருக்க.

“ஸ்வீட் வரட்டும் சொல்றேன் ” அவன் நேரம் கடத்த.

‘மவனே அதுக்கப்புறம் மட்டும் தட்டி கழி, வச்சுக்குறேன் உன்னை’

சில்லென்று பரிமாறப்பட்ட ரசமலாயை தொட்டுக்கூடப் பார்க்காமல் எதிர்பார்ப்போடு அவன் முகத்தையே பார்க்க.

“சாப்பிடு ஆழாக்கு” புன்னகைத்தான்

“பிச்சுடுவேன் பிச்சு! ஸ்வீட் வந்தா சொல்றேன்னு சொன்னீங்கல. ப்ளீஸ்” கிட்டத்தட்ட மிரட்டலாகக் கெஞ்சினாள்.

எதுவும் சொல்லாமல் அவளையே வெறித்தவன், மெல்ல முன்னே குனிந்து அவள் காதருகே என் பெரு என்னனா,

“…” , ஏதும் சொல்லாமல் ரசமலாய்யுடன் ஐக்கியம் ஆகிவிட்டான்.

“ஹலோ! ஒண்ணுமே கேக்கல”

“நீ ரசமலாய் சாப்பிட்டா, உடனே கேட்கும்!”

கோவமாகச் சாப்பிட்டவள், “திருப்தியா? இப்போ சொல்லுங்க”

“பி வி” என்றான் தின்றபடியே

“ஜூ வி தெரியும் ஜூனியர் விகடன், அதென்ன பி வி ?” ங்கே என்று விழித்தாள்.

அவனோ சிரிக்க,

“பாஸ் ஒழுங்கா உங்க பெயரை சொல்லுங்க அதைவிட்டு ஜூனியர் விகடன், அனந்த விகடன், குமுதம்னு கடுப்பேத்தாதீங்க” இப்பொழுது பொறுமை முழுவதையும் இழந்து, எழுந்தே விட்டாள்.

“ஹே ஆழாக்கு உட்காரு என்ன இது, கொஞ்சம் கலாய்க்கக் கூடாதா ?” அவன் வசீகரமாய் புன்னகைக்க அதற்குமேல் இல்லாத கோவத்தைப் பிடித்துவைக்க முடியாமல் அமர்ந்தாள்.

இப்பொழுது தன் இருக்கையை அவளருகில் இழுத்து அமர்ந்தவன் அவள் காதருகே குனிந்து,

“என் பேரு …” என்று சொல்லி ஒரு நிறுத்தம் கொடுத்தவன் “மாயா…” என்று நிறுத்தி அவள் முகம் பார்க்க

“மாயா என் பேருடா கூமுட்டை!” கத்திவிட்டாள்

“ஸ்ஸ்ஸ் கேளேன்! பொறுமை கிலோ என்ன விலைனு கேப்பியோ?” முறைப்பது இப்பொழுது அவன் முறையானது.

“சாரி சொல்லுங்க நான் வாய மூடிக்கிறேன்” சரணாகதி ஆனாள்.

“பைரவ் விஸ்வநாத்”

“பைரவ்…” சொல்லிப் பார்த்துக்கொண்டாள்

“ஓகேவா? தேறுமா?” ஆர்வமாய் அவளைப் பார்க்க

“நல்லாத்தான் இருக்கு…” சிரித்தவள் கட்டைவிரலை உயர்த்தி காட்டி, “சரி என்னவா வேலை பண்றீங்க?”

“தேங்க்ஸ் மேடம்” என்றவன் “பெரிசா ஒன்னுமில்ல சிஈஓ (CEO) வா இருக்கேன் அவளோதான்” தோளைக் குலுக்கினான்

“என்ன?” அதிர்ந்தவள், “நீங்க தான் அப்போ இந்த கம்பெனிக்கு….” புருவம் விரிய

“எங்கம்மா தான் ஓனர். நான் வெறும் CEO தான்”

“CEO தானா? ரொம்பதான் தன்னடக்கம் ! ஆமா CEO விஸ்வநாத்ன்னு சொன்னாங்களே?”

“இப்போதான் என் முழுப்பெயரை சொன்னேனே. நீ கூட நேத்தே விஸ்வநாத்ன்னு சொன்னப்போ அப்பா பேருன்னு கிளு கொடுத்தேனே?”

“தோடா உலகத்துலயே விஸ்வநாத்ன்னா நீங்க ஒருத்தர்தானா? நான் CEO ன்னா ஏதோ வயசானவர்ன்னு நெனச்சேன்…”

“சுத்தம்…” முகம் வாடியவன், “சரி விடு வேற ஏதாவது ஆர்டர் பன்னவா?”

“இல்ல தேங்க்ஸ், வயறு முட்ட சாப்ட்ருக்கேன்.கிளம்பலாம் நேரமாச்சு.”

“ம்ம் நீ காருக்கு போடா பண்ணு, நான் பில் பே பண்ணிட்டு வரேன்” அவன் எழ

“இருங்க எவளோ ஆச்சுன்னு சொல்லுங்க நானும் ஷேர் பண்ணிக்கிறேன்” அவள் தன் பர்ஸை எடுக்க

“வேண்டாம்! மறுபடி சாப்பிட போனா அப்போ நீ கொடு”அவள் எவ்வளவு சொல்லியும் ஒப்புக்கொள்ளாதவன், தானே பணத்தைச் செலுத்திவிட்டு அவளுடன் அலுவலகத்தை நோக்கிப் புறப்பட்டான்.

error: Content is protected !!