TT-21-2

அத்தியாயம் – 21(B)

அடுத்த நாள் காலை, ப்ரியா எழும் முன் விழித்த செழியன்… காலை வேலைகளை முடித்துவிட்டு, சமையலறைக்குள் நுழைந்தான்.

சூடான டீயை போட்டுக்கொண்டு வெளியே எட்டிப்பார்க்க, ப்ரியா இன்னும் எழவில்லை. அவள் முன்பு வந்திருந்தபோது அவனுக்கு தந்த காபி கப்பில் டீயை ஊற்றிய செழியன் முகத்தில் புன்னகை.

பால்கனிக்கு சென்று தூரத்தில் தெரியும் பவய் ஏரியை பார்த்தபடி அவன் அருந்த, சிறிது நேரத்தில் உள்ளே வந்த சூரிய ஒளியில் ப்ரியா கண்வழித்தாள்.

தூக்கக்கலகத்துடனே எழுந்து வந்த ப்ரியாவை பார்த்து புன்னகைத்தவன், அவளின் அந்த களைந்த தோற்றம், நன்றாக தூங்கி வீங்கிய விழிகள் என அவளை ரசித்தான்.

பின், “போ ஃப்ரெஷ் அப் ஆயிட்டு வா” என அவளை அனுப்பிவிட்டு, அவன் குடித்து முடித்தபின், அவளுக்கு டீயை சூடு செய்து மற்றொரு கப்பில் ஊற்றினான்.

அவளும் காலைக்கடன்களை முடித்து விட்டு வர, அந்த கப்பில் டீயை பார்த்த ப்ரியாவின் கண்கள் மின்னியது.

அதை வாங்கிக்கொண்டு அவனை குறும்பாக பார்த்து மேலுதட்டை கடிக்க, அவன் ஒரு நொடி மயங்கி, பின் தன்னிலைக்கு வந்து, அவளை நெருங்கினான்.

ப்ரியா அதிர்ச்சியில் விழிகள் விரிக்க, அவள் உதட்டை விடுவித்த செழியன்… அவள் கண்களை பார்த்து, “காலைலயே… இட் ட்ர்ன்ஸ் மீ ஆன்” என்றவன் கண்களால் ‘வேண்டாம்’ என்று சொல்லி… 

“இன்னொரு டைம் நான் பண்ண வேண்டிய வேலைய நீ பண்ணாத. ஹ்ம்ம்” மயக்கும் குரலில் போலியாக கட்டளையிடுவது போல சொல்லிவிட்டு சென்றான்.

ப்ரியாவிற்கு இன்னமும் அதிர்ச்சி. இப்போது ‘பே’ என நிற்பது ப்ரியாவின் முறை. 

‘என்னது டர்ன் ஆன்’னா? இவனா பேசுறது?’ என நினைத்து அனிச்சையாக அவள் கை வாயை மூட, அவன் சொன்ன ஒவ்வொன்றையும் மனதில் ஓட்டிப்பார்த்தாள்.

‘அதென்ன அவன் பண்ண வேண்டிய வேலை? எதை சொல்கிறான்? அதுவும் ஆர்டர்…’ ஒன்றும் புரியாமல், டீயை வைத்துவிட்டு, அவன் பின்னாலேயே சென்றவள்… 

“என்ன ஆர்டர் போடற? அதென்ன நீ செய்ற வேலை? அப்படித்தான் பண்ணுவேன். என்ன பண்ணுவ?” என வேண்டுமென்றே அவன் முன் நின்று அதேபோல் செய்தாள்.

“என்ன பண்ணுவேனா?” என்ற செழியன் அவள் கையை பற்றி ஒரு சுற்று சுற்றி, அவளை தன்னருகே நிற்கவைத்து… மெதுவாக அவள் கழுத்தருகில் குனிந்தான்.

ப்ரியாவிற்கு சப்த நாடிகளும் செயலிழந்தது போல இருக்க, அவள் காதருகில், “நீ இப்போ செய்தது, நான் செய்ய வேண்டியது. அதை செய்ய நேரம் இன்னும் வரல” என்றபோது அவன் மூச்சு காற்று அவளை ஏதோ செய்தது.

முகம் சிவக்க நின்றவளை விட்டு நகர்ந்த செழியன், “என்ன சொன்னேன்னு புரிஞ்சுதா?” புருவம் உயர்த்தி கேட்டான்.

ப்ரியாவின் முகமே அவள் மனநிலையை வெட்ட வெளிச்சமாக காட்டியது. அவள் மூக்கை செல்லமாக பிடித்து… “நான் குளிச்சிட்டு வந்துடறேன்” என்றுவிட்டு குளியல் அறைக்குள் சென்றுவிட்டான்.

ப்ரியா சில நொடிகள் அப்படியே நின்றாள். பின் நடந்தது மனதில் ஓட, அவன் சொன்ன பொருள் புரிய, கொஞ்சம் வெட்கம் கலந்த புன்னகை எட்டிப்பார்த்தது.

செழியனின் இந்த மாற்றம் முற்றிலுமாக புதிது ப்ரியாவிற்கு. இந்த ஓரிரண்டு நாட்கள் அவன் செய்கைகளில் அவன் தடுமாறினானோ இல்லையோ, ப்ரியாவை ஆட்டிவைத்தது.

அதே மனநிலையுடன் உணவு என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போது, வீட்டில் இருந்து ப்ரியாவை அழைத்திருந்தனர்.

அம்மா, அப்பா, அண்ணா, அண்ணி, வெண்பா என வரிசையாக அனைவரிடமும் பேசினாள்.

அவள் பேசும்போதே செழியன் குளித்துமுடித்து வந்தான். அவள் பேசுவதை பார்த்துவிட்டு, சமையல் செய்ய ஆரம்பித்தான்.

அவன் பாதி செய்திருக்க, “இந்தா அப்பா உன்கிட்ட பேசணுமாம்” என்று போனை அவனிடம் தந்தாள்.

சமைத்துக்கொண்டே அவரிடம் சில வார்த்தைகள் பேசிய பின், ‘அவள் உதவுகிறேன்’ என்று சொல்லியும் கேட்காமல், குளிக்க அனுப்பிவிட்டு சமைத்து முடித்தான்.

ப்ரியா மனதில் காலையில் நடந்ததே ஓடிக்கொண்டிருந்தது. தனக்கு தானே அவ்வப்போது புன்னகைத்துக் கொண்டான்.

மாலை நேரம் ஆன போது, இருவரும் பார்ட்டி’க்கு கிளம்பத் தயாரானார்கள்.

அடர் சிவப்பு நிற ஷார்ட் கவ்னில் ப்ரியா தயாராகி வர, அவன் சாம்பல் மற்றும் கருப்பு நிற கேஷுவல் உடையில் தயாரானான்.

இருவரும் மற்றவரை பார்த்து சில நொடிகள் கண்களால் பேசிவிட்டு, அதிகம் வார்த்தையால் பேசாமல் வீட்டில் இருந்து கிளம்பினார்கள்.

அந்த உயர் ரக பப்’பில், செழியன் தோழர்கள் என சிலர், ப்ரியா தோழர்கள் என பலர். 

வந்தவர்கள் அனைவரும் கொஞ்சமாக உணவு சாப்பிட்டுவிட்டு, ஒரு சிலர் மது அருந்த, ஒரு சிலர் அப்போது ஆரம்பித்த DJ பாட்டுக்கு காலசைத்துக்கொண்டிருந்தனர்.

அங்கே ஒரு டேபிளில் ப்ரியாவும் செழியனும், நடப்பவைகளை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

திடீரென ப்ரியாவின் தோழிகள் இருவரையும் நடனமாட அழைத்தார்கள். ‘செழியனுக்கு தயக்கமாக இருக்கும்’ என நினைத்து ப்ரியா மறுத்தாள். 

அவர்கள் விடாமல் ‘நீ வந்து ஆடு’ என அழைத்ததும், செழியன் தனியாக இருப்பான் என மறுத்துவிட்டாள்.

ப்ரியா அங்கு ஆடும் ஜோடிகளை பார்த்துக்கொண்டிருக்க, செழியன் அவளிடம் “ஷல் வி டான்ஸ்?” என்று புருவத்தை ஏற்றி இறக்கி கேட்டான் கண்கள் மின்ன.

ப்ரியாவிற்கு அடுத்த அதிர்ச்சி. அவள் விழிகள் மறுபடியும் விரிய, எழுந்து அவள் அருகே சென்ற செழியன், அவள் கையை பற்றி எழச்செய்தான்.

பின் அவளை கூட்டிக்கொண்டு நடு மேடைக்கு செல்ல, ப்ரியா மனதில்… ‘இவன் ஆடுவானா? இல்ல எனக்காகவா?’ என்று தோன்றும் போது, அவனின் இடது கையை அவளின் வலக்கையுடன் இணைத்து, மற்றொருகையை அவளின் பின்புறத்திற்கு எடுத்துச்சென்றான் ஒரு கைதேர்ந்த டான்சர் போல. 

ப்ரியா அடுத்தென்ன என்று யோசிப்பதற்குள், அவளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான் செழியன்.

அவனின் நடன அசைவுகளுடன் அவனை மெய்மறந்து பார்த்தாள். 

அவள் இன்ப அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. அவன் கையில் சிக்கிய கைப்பாவை போல, மகுடிக்கு ஆடும் பாம்பை போல, அவனை தொடர்ந்தாள் ப்ரியா. 

அவளை சுற்றும்போதும், சுற்றிய பின் அவள் இடையோடு அவன் அணைத்து ஆடும் போதும்… அவளின் கட்டுப்பாட்டில் எதுவும் இல்லை கொஞ்ச நேரத்திற்கு.

செழியனோ, அவளின் ஒவ்வொரு பரிமாணத்தை… கண்கள் காட்டும் அபிநயத்தை… மனதிற்குள் ரசித்தான். இன்னமும்… இன்னமும் அதை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அது ஏதோ ஒரு இனம் புரியாத பரவசத்தை தந்தது அவனுக்கு.

ப்யர் எக்ஸ்டசி (pure ecstasy), ட்ரான்ஸ் ஸ்டேட் (trance state) என்பார்களே அதுபோல. தன்னை மறந்த நடனம்.

‘இதுதான் முதல் முறை அவன் ஆடுகிறான்’ என கற்பூரம் அடித்துச்சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள். அப்படியொரு நடனம். ஆனால் உண்மை… இதுவே முதல் முறை அவன் ஆடுவது.

அவளுக்கோ, நடனத்தின் நடுவில் அவன் கைகள் புரியும் ஒவ்வொரு தீண்டலும் மெய்சிலிர்க்க வைத்தது. அவளுக்கு நடனம் ஆடி பழக்கம் என்பதால், போக போக அவனுடன் சேர்ந்து அவளும் ஆடினாள்.

இவர்கள் இருவரும் அட ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில்… மற்றவர்கள் இவர்களின்  நடனத்தை பார்த்து, கைதட்டி உற்சாகப்படுத்தினர்.

ஆனால் அந்த கைதட்டல் எல்லாம் இருவர் செவிக்கு சென்றதா? என்று தெரியவில்லை. அது தேவையும் படவில்லை இருவருக்கும்.

பாடல் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் எடுக்க, இருவரின் நடனமும் வேகம் எடுத்தது. பார்ப்பவர்களுக்கு, இருவரும் ஒருவரை ஒருவர் காம்ப்ளிமென்ட் செய்து ஆடுவது போல தெரிந்தது.

ஒரு கட்டத்தில் அவன் அவளின் இடையை தாங்க, அதன் வெளிப்பாட்டில் அவள் பின்னே செல்ல, அவளை நோக்கி குனிந்தான் செழியன். 

இருவரின் கண்களும் நேருக்கு நேர் சந்தித்தது. இது எதில் முடியும் என்பது இருவருக்கும் தெரியும். அதைச் செய்வோமா… வேண்டாமா என இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க, கரகோஷம் ஆர்ப்பரித்தது. அப்போதுதான் சுற்றம் புரிந்தது.

அவன் பிடி கொஞ்சம் தளர, ப்ரியா மெதுவாக நிமிர்ந்தாள்.

அனைவரும் இவர்களை சுற்றி கைகளைத்தட்டியவண்ணம் நடனம் ஆட ஆரம்பித்தனர்.

செழியனின் பார்வையும் ப்ரியாவின் பார்வையும் நகரவில்லை. செழியன் நண்பர்கள் செழியனை ஆடச்சொல்லி உலுக்க, ப்ரியாவை பார்த்தபடி ஆடினான்.

ப்ரியா அவனை பார்த்து தன்னை மறந்து மேலுதட்டை கடிக்க, அவன் கண்கள் தானாக அவள் இதழ்களை வட்டமிட்டது. அதன் பொருள் அவளுக்கு புரிந்ததும், அவசரமாக பதட்டத்தில் கீழ் உதட்டை கடித்தாள். பின் இதழ்களை பூட்டிக் கொண்டாள்.

அவளின் ஒவ்வொரு செயலை பார்த்த செழியன், ஆடிக்கொண்டே சிரித்தான். அவள் போலியாக முறைத்தாள்.

அவனுக்கு அவள் கண்கள் பிடிக்கும் என்றால், அவளுக்கு அவன் சிரிப்பு பிடிக்கும். அதை அவள் ரசிக்க, இப்போது அவள் தோழிகள் அவளை ஆட இழுக்க, ப்ரியாவும் ஆட ஆரம்பித்தாள்.

இருவரும் தனித்தனியாக ஆடினாலும், கண்கள் மட்டும் நொடிக்கு ஒருமுறை பார்த்துக் கொண்டது.

அப்போது குமார் செழியனிடம்… “இளா உண்மைய சொல்லுடா? சரக்கடிச்சியா?” என்றதும், செழியனோ சிரித்துக்கொண்டே “நான் எப்போண்ணா அதெல்லாம் குடிச்சிருக்கேன்” என்றான்.

“அப்போ வேற ஏதாச்சும்?” குமார் கேட்டதும், செழியன் புரியாமல் பார்த்தான். அவன் காதருகே ‘ட்ரக்ஸ்?’ என கண்ணடித்து கேட்க, செழியன் விழித்தான்.

மும்பையில்… அதுவும் அதுபோல பப்’பில் போதை மருந்து எடுத்துக் கொள்வதெல்லாம் மிகவும் சாதாரணமான விஷயம். அங்கு ஆடும் பலர் அதை எடுத்துக்கொண்டு தன்னை மறந்து சுற்றம் மறந்து ஆடுவார்கள். அதனால் குமார் அப்படி கேட்டான். 

“என்னண்ணா இப்படி கேட்கறீங்க? அதெல்லாம் எதுவும் இல்ல” என்றான் அவசரமாக.

“இல்லை இளா நீ ஆடின டான்ஸ் அப்படி. நம்மள மாதிரி பசங்கள இந்த ஊரு பொண்ணுங்க பார்த்திருக்காங்களா… சொல்லு? ஒரு பொருட்டாவே மதிச்சதில்ல. ஆனா இன்னைக்கு பாரேன்… வந்திருக்கற பொண்ணுங்க பாதி பேரு உன்ன தான் பார்த்துட்டு இருக்காங்க. அப்படி ஒரு டான்ஸ் டா” என்றான் குமார் ‘பலே’ என்பதுபோல.

செழியன் புன்னகைத்துக்கொண்டே சுற்றிப் பார்த்தான். சில பெண்கள் நடனத்திற்கு நடுவில் அவனை பார்ப்பது புரிந்தது. இருந்தும் அவன் கண்கள் தேடியது அவனின் பெண்… ப்ரியா!

அவளும் சரியாக அவனைத்தான் பார்த்தாள். இப்படி ஒரு மாற்றம் இவ்வளவு சீக்கிரம் அவனிடம் அவள் எதிர்பார்க்கவில்லை. அவனை இப்படி பார்க்க மனம் நிறைவாக இருந்தது அவளுக்கு.

அவள் கண்களில் அதிர்ச்சி, ஆச்சரியம் போய், இப்போது கொஞ்சம் மகிழ்ச்சி தெரிந்தது அவனுக்கு.

ஒருவழியாக பார்ட்டி முடிந்து இருவரும் புறப்பட்டனர். முன்புபோல காரில் தள்ளி தள்ளி உட்காராமல் பக்கத்தில் உட்கார்ந்தனர். அவன் கையை பற்றிக்கொண்டு அவன் மேலே சாய்ந்து கொண்டாள்.

‘எப்படி இப்படி மாறினாய்? ஏன் இந்த மாற்றம்? உனக்கு ஆடத் தெரியுமா? என்னிடம் சொல்லவேயில்லயே!’ என்ற கேள்வி பதில் வேண்டாம்… அவன் மாறியதே பெரிய விஷயம். அதை தோண்டி துருவ வேண்டாம் என நினைத்து விட்டுவிட்டாள்.

எப்போதும் அவள் பேசுவாள். இன்று அவனே ஆரம்பித்தான்.

“நீ அனிமேட் பண்ண இளா மாதிரி இருந்தேனா இன்னைக்கு?” குனிந்து அவளை பார்த்து கேட்க, அவள் ஒரு நொடி யோசித்தாள்.

பின் ‘தன் பிறந்த நாள் அன்று வரைந்ததை சொல்கிறான்’ என புரிந்து புன்னகையுடன் அவனைப்பார்த்து… “அதுக்கும் மேல” என்றாள்.

அவன் ஏதேதோ பேசிக்கொண்டே வந்தான். எப்போதும் அவன் பார்க்கும் வேலையை, இன்று அவள் செய்தாள். அதுதான் பேச்சை ரசிப்பது… ‘அவன் இப்படி மாறவேண்டும்’ என பலமுறை நினைத்திருக்கிறாள். அது நடந்துவிட்டது போல இருந்தது அவளுக்கு.

இருவரும் வீடு வந்து சேர, அவள் களைப்பாக இருந்ததால், உடனே படுத்துக்கொண்டாள்.

தூக்கம் அவள் கண்களை தழுவும் போது, பின்னே இருந்து அணைத்தபடி செழியன் அவளுடன் படுக்கையில் படுத்தான்.

முதலில் அதிர்ந்தாள். பின் திரும்பி அவனைப்பார்க்க, அவன் ‘படுக்கவா’ என்று கண்களால் கெஞ்ச, அவளும் கண்களாலேயே சம்மதம் சொன்னாள்.

இருவரும் ஆடிய ஆட்டத்தின் களைப்பில் நன்றாக உறங்கினர். அடுத்தநாள் வெகு தாமதமாக எழுந்து, ஞாயிற்றுக்கிழமை என்பதால் மந்தமாக களித்தனர்.

திங்கள் அன்று இருவரும் சீக்கிரம் எழுந்து கல்லூரிக்கு புறப்பட்டனர்.

ப்ரியா சமையல் முடித்து வெளியே வர, செழியன் லேப்டாப்’பை பார்த்தவாறு தலையில் கை வைத்து உட்கார்ந்திருந்தான்.

‘என்ன ஆயிற்று’ என்று ப்ரியா கேட்க, அவன் சொன்ன பதிலில் அதிர்ந்தாள்.