TT21-1

அத்தியாயம் – 21(A)

செழியன் ஹாலில் ஜெயராமானுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தான். இல்லை இல்லை அவர் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தான்.

உள்ளே ப்ரியாவிற்கு லட்சுமி, ‘எப்படி நடந்துகொள்ளவேண்டும்’ என பாடம் எடுக்க, “அம்மா ஒரு நிமிஷம். இளா அப்போவே கூப்பிட்டான். மறந்துட்டேன்” என நழுவினாள்.

“எவ்ளோ டைம் சொல்றது ப்ரியா மரியாதை கொடுத்து பேசுன்னு” அவள் பின்னாலேயே வந்த லட்சுமி கடுகடுக்க… ப்ரியா செழியன் முன் நின்றாள்.

இவர்கள் வரவும், “இருக்கட்டும் அத்த. இதுல என்னை இருக்கு” செழியன் சொன்னதும், “இல்ல மாப்பிள்ளை இதே பழக்கம் தான் எல்லார் முன்னாடியும்” அவர் முடிக்கவில்லை…

“நீங்களும் என்னை பேரு சொல்லியே கூப்பிடுங்கத்த. நீங்க என் அம்மா மாதிரி” அவன் சொன்னவுடன், ப்ரியா முகத்தில் புன்னகை.

மனதில் ‘என் அம்மாவையே கரெக்ட் பண்ணிடுவ போலயே. உன்ன அப்படியே… இரு இரு உன்ன மும்பை போய் கவனிச்சுக்கறேன்” கள்ளத்தனைத்தை கண்களில் தேக்கிவைத்துப் பார்த்தாள் அவனை.

செழியன் அப்படி சொன்னதும் ஜெயராமன் மற்றும் லட்சுமி, இருவரும் நெகிழ்ந்தனர்.

“சரிப்பா. இவளுக்கு கொஞ்சம் துடுக்குத்தனம் அதிகம். அவ அப்பா அண்ணா ரெண்டு பேரும் ரொம்ப செல்லம் கொடுத்து கெடுத்து வச்சுருக்காங்க” மகளை பார்த்து லட்சுமி முறைக்க, அவளும் இப்போது அம்மாவை பார்த்து முறைத்தாள்.

செழியன் புன்னகைக்க மட்டுமே செய்தான். “சரி சரி ரெண்டு பேரும் சண்டை போட்டுக்காதீங்க. ப்ரியா எல்லாம் எடுத்துவச்சுட்டல்ல. போ இளாவ கூப்பிட்டு போய் ரெடி ஆகுங்க. ட்ராஃபிக்’கு முன்னாடி ஸ்டேஷன் போய்டலாம்” என்றார் ஜெயராமன்.

அதேபோல கிளம்பி வந்தார்கள் ப்ரியாவும் செழியனும். முழு குடும்பமுமே இருவருடன் ஸ்டேஷனுக்கு கிளம்பியது.

அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு பயணத்தை ஆரம்பித்தனர். ஃப்ரஸ்ட் க்ளாஸ் coupe புக் செய்திருந்தார்கள். இது ப்ரியாவின் கல்லூரி நண்பர்கள் செய்த வேலை.

செழியன் மனதுக்குள் ‘முடிந்தது. என்ன நடக்க போகிறதோ’ என்று எண்ணிக்கொண்டே உள்ளே செல்ல, ப்ரியா மனதில் ‘அமைதியா போற. மேல ஏறி படுக்கற ப்ரியா. உன் உருப்புடாத ஃபிரண்ட்ஸ் செய்த விளங்காத வேலைல இது ஒன்னு. இதுக்கு அண்ணன் அண்ணி வேற உடந்தை. இன்னும் என்னென்ன செஞ்சு வச்சுருக்காங்களோ’ என நினைத்து அமைதியாக சென்றாள் உள்ளே.

இருவரும் கொஞ்ச நேரம் பேசினார்கள். சாதாரணமாக பேசுகிறோம் என்ற பெயரில் ஏதேதோ பேசிக்கொண்டே இருக்க, சிறுது நேரம் கழித்து உணவு உண்டனர்.

செழியன் கையில் துறை சார்ந்த புத்தகம் ஒன்று இருக்க, அவள் கையில் Sherlock Holmes நாவல்.

ஒரு கட்டத்தில் அவளுக்கு தூக்கம் வந்ததும், “இளா நான் மேல தூங்க போறேன். தூக்கம் வருது” அவள் சொன்னவுடன், “நான் போறேன் நீ இங்கயே இரு” என்றான்.

“இல்ல இல்ல. இன்னும் TTR வரல. அவர் வந்தா டிஸ்டர்ப் பண்ணிடுவாரு. மொதல்ல ரெஸ்ட் ரூம் போய்ட்டு வந்துடறேன்” என்று அவள் உடனே எழுந்தாள். அவனும் அவளுடன் சென்றான்.

முகத்தை அஷ்ட கோணலாக வைத்துக்கொண்டு வெளியே வந்தாள்.

“இதுக்கு தான் சொன்னேன் ஃபிளைட்’ல போய்டலாம்னு. இன்னும் டுவெண்ட்டி அவர்ஸ் இருக்கு” என்றான் அவளில் அசௌகரித்தைப் பார்த்து.

“மேல ஏறிடுவயா? விழுந்துடமாட்டயே?” அவன் யோசனையுடனே கேட்க, அவள் முறைத்துக்கொண்டே மேலே ஏறினாள்.

அவள் பக்கத்தில் இருந்தவரை நன்றாக இருந்தது. இப்போது ஏதோ சின்ன வெறுமை அவனுள். மறுபடியும் புத்தகத்தில் மூழ்கினான்.

கொஞ்ச நேரம் கடந்திருக்கும், திடீரென அவளிடம் இருந்து சத்தம். பதறிக்கொண்டு அவன் எழுந்து பார்க்க, அவளும் எழுந்து உட்கார்ந்தாள்.

“இசை என்னாச்சு?”

“அது அது” என சுற்றி முற்றி பார்த்தாள். பின், “ஒன்னும் இல்ல” என்றாள் ஆனால் கண்களில் பயம் நன்றாக தெரிந்தது அவனுக்கு.

“கீழ இறங்கு மொதல்ல” கீழே இறங்க அவளுக்கு உதவிய செழியன்… “ரெஸ்ட் ரூம் போணுமா?” என கேட்க, அவள் ஆம் என்பதுபோல தலையசைத்தாள். அவளை அழைத்துச்சென்றான்.

பின், அவள் வெளியே வந்தவுடன்… அங்கிருந்த கதவு கொஞ்சம் திறந்திருக்க, அதன் வழியாக காற்று சில்லென்று உள்ளே வந்தது. அந்த கதவை அவள் நன்றாக திறந்து, அதன்மேல் சாய்ந்தவாறு நின்றாள். அவளுக்கு எதிராக அவன் நின்றான்.

அந்த காற்றில் அவள் கூந்தல் பறக்க, அதை மெதுவாக சரிசெய்த செழியன், “நைட் எதுக்கு அதுபோல புக்ஸ் படிக்கணும்?” என்று கேட்டதும்… முதலில் அவன் கை தீண்டலில் ஒரு நொடி மின்சாரம் பாய்ந்தது போல இருந்தாலும், ‘ஐயோ கண்டுபிடிச்சுட்டானா?’ என நினைத்து, “அதெல்லாம் நான் ஒன்னும் பயப்படல” என்றாள் அவனை பாராமல்.

அவன் புன்னகைத்தான். பின், அவளை கொஞ்சம் நெருங்கி, “வாய் மட்டும் தான் பொய் சொல்லுது” என அவள் இதழ்களை வருடி கண்களை கூர்ந்து பார்க்க, அவள் விழி விரித்து நின்றாள்.

அவன் இன்னமும் நெருங்கியவுடன், அவள் உடனே கண்களை இறுக மூடிக்கொண்டாள். அவளை பார்த்து புன்னகைத்த செழியன், மெதுவாக அவனுக்கு மிகவும் பிடித்த, அவன் அதிகம் பேசும், அவள் கண்களில் முத்தமிட்டான்.

அதில் அவள் உடனே கண்திறக்க, ரயில் தண்டவாளத்தில் கொஞ்சம் ஆடியது.

அவளால் நிற்க முடியாமல், அவன் சட்டையை பற்றிக்கொண்டாள். அவள் கீழே விழாமல் இருக்க, அவனின் இரு கைகளை அரணாக இருபுறமும் வைத்த செழியன், அவனுக்கு அடுத்து மிகவும் பிடித்த… அவள் குரல் வெளிவரும் இதழ்களை நெருங்கினான்.

ப்ரியா இதழ்களை நன்றாக பூட்டிக்கொள்ள, புன்னகையுடன் அவள் இதழில் சின்ன முத்தமிட்டான். ப்ரியாவுக்கு உடல் முழுவதும் சில்லிட்டது.

அதை தொடர அவன் நினைக்க, தொடர்வண்டி எழுப்பிய சத்தத்தில், ப்ரியா சுற்றம் உணர்ந்து அவனை தள்ளிவிட்டு விட்டு ஓடிவிட்டாள் அவர்கள் இடத்திற்கு.

படபடப்பாகவே இருந்தது அவளுக்கு. ஷாலை திருகியவண்ணம், ‘ஐயோ கண்ட்ரோல் பண்ண முடியலையே. பயமா இருக்கு’ என முணுமுணுத்துக் கொண்டே, ஜன்னல் பக்கம் திரும்பி உட்காந்தாள்.

அவனும் தன்னை கட்டுபடித்துக்கொண்டு உள்ளே வந்து உட்கார்ந்தான். அவள் திரும்பவே இல்லை. அவனும் மொபைல் எடுத்தான்… பார்த்தான். புத்தகத்தை புரட்டினான், அதிலும் கவனம் செலுத்த முடியவில்லை.

மறுபடியும் அவளை பார்த்தான். அவள் தனக்கு தானே முனகிக்கொண்டிருந்தாள். அவளின் தவிப்பும், பயமும் புரிந்தது அவனுக்கு.

அவள் பின்னே வந்து உட்கார்ந்த செழியன், “இசை” என்று அழைக்க, அவள் ஹ்ம்ம் கொட்டினாள். மறுபடியும் அழைத்தான். அதே பதில்.

அவளை தன் பக்கம் திருப்பி அவளை அணைத்துக்கொண்டு, மெதுவாக… “ஸாரி. ஏதோ ஃபீல்’ல அப்படி பண்ணிட்டேன். உன்னையும் டிஸ்டர்ப் பண்ணிட்டேன். ஸாரி… பயப்படாத” என்றான்.

‘தன் நுணுக்கமான உணர்வுகளை புரிந்துகொண்டானே’ மனது நெகிழ்ந்து அவனை அவளும் இறுக கட்டிக்கொண்டாள். அந்த அணைப்பு, இருவரின் பல தவிப்புகளை, ஆசைகளை, ஏக்கங்களை அணைத்தது.

சில நிமிடங்களுக்கு பின், அவன் “சரி இங்கயே படு. மேல போகவேணாம். எனக்கு கொஞ்சம் படிக்கணும். தூக்கம் வரல” என்றவுடன், அவளும் புன்னகைத்து, “தூக்கம் வர்றப்ப சொல்லு” என்றுவிட்டு, அவன் மடியில் படுத்துகொண்டாள் தலையணை கட்டிக்கொண்டு.

அவள் முடியை அவன் கோதி விட்டுக்கொண்டே படித்தான். கொஞ்ச நேரத்தில் அவள் உறங்கிவிட்டாள். தலையணையை அவள் தலைக்குக் கொடுத்து, அவளின் நெற்றில் முத்தமிட்டபின், அப்படியே உட்கார்ந்து அவனும் உறங்கிவிட்டான்.

அடுத்தநாள் ரயில் பயணம் முடிந்து, இருவரும் மும்பை வந்தடைந்தனர்.

அதே வீடு. ஆனால் இப்போது அவளுக்கு புதிதாக தெரிந்தது. படிக்கும் அறையில் அவளுக்கென தனி ஸ்பேஸ் ஒதுக்கியிருந்தான்.

ஆனால் இப்போதும் ஹாலிலேயே தான் படுக்கை. என்ன ஒரே ஒரு மாற்றம், அவளுக்காக என தனி மெத்தை. இரண்டு மெத்தைகளுக்கும் நடுவில் நல்ல இடைவெளி. அவனை பார்த்து புன்னகையுடன் அவள் முறைக்க, அவன் புன்னகைத்தான்.

இருவரும் அன்றே கிளம்பினார்கள் கல்லூரிக்கு… விடுதியில் இருந்து அவள் பொருட்களை எடுக்க.

செழியன் வருகிறான் என்றதும், குமாரும் மற்றும் அவன் துறை நண்பர்களும் வந்தனர். அவர்களுடன் கொஞ்சம் சகஜமாக பேசினான் செழியன்.

ப்ரியாவிற்கு கொஞ்சம் ஆச்சரியம் தான். ‘பரவாயில்லை அவனிடம் நல்ல மாற்றம் தெரிகிறது’ என நினைத்து ஹாஸ்டலுக்கு அவனையும் அழைத்துச் சென்றாள்.

அவளை தோழிகள் அனைவரும் கேலி கிண்டல் செய்தனர். அவள் அறை தோழி காயத்ரி… “ப்ரியா ஹாப்பி ஃபோர் யு. கண்டிப்பா எங்களுக்கு ட்ரீட் வேணும். Let’s have fun” என்றதும் ப்ரியா ஒரு நொடி யோசித்தாள்.

‘செழியனிடம் கேட்டால் செய்வான். ஆனால் அவனுக்கு கஷ்டம் தர வேண்டாம்’ என நினைத்து ‘அதெல்லாம் கொஞ்ச நாட்கள் கழித்து என சொல்லிவிடலாம்’ என நினைக்க, செழியன் புன்னகையுடன்… “நாளைக்கு நைட் வந்துருங்க” ஒரு pub’இன் பெயரை சொல்லி அழைத்தான்.

ப்ரியாவிற்கு அடுத்த ஆச்சரியம். விழிகள் அகல அவனைப் பார்க்க, அவளின் அந்த விரிந்த கண்களை உள்வாங்கிக் கொண்டே, அவளை பார்த்து புன்னகைத்தான்.

ப்ரியா கிளம்பத் தயாராக, காயத்ரி கொஞ்சம் கண் கலங்கினாள். அதை பார்த்ததும் ப்ரியாவுக்கும் கண்ணீர் எட்டிப்பார்த்தது.

இந்த ஒன்றரை வருடத்தில் காயத்ரியும் ப்ரியாவும் மிகவும் இணக்கமாக பழகியிருந்தனர்.

காயத்ரியை கட்டிக்கொண்ட ப்ரியா… “எங்க போறேன். பக்கத்துல தான். பத்து நிமிஷம்… வந்து நிப்பேன் காயு. டெய்லி எப்படியாச்சும் பார்த்துடலாம். ஒகே” என அவளை தேற்றி விட்டு, செழியனுடன் கிளம்பினாள் ப்ரியா.

இருவரும் பொருட்களை எடுத்துக் கொண்டு கிளம்பிய பின், “என்ன இளா பார்ட்டி’லாம்?” அவள் கேட்க, “என் ஃப்ரெண்ட்ஸ்’ஸே கேட்டாங்க. இத்தன நாள் உன் கூட பழகின இவங்க கேட்காம இருப்பாங்களா? அப்போ முடியாதுன்னு சொல்ல முடியாதுல்ல இசை” என்றான்.

“அதுக்குன்னு அவளோ பெரிய இடத்துல பண்ணனுமா? சிம்பிள் ஆஹ் பண்ணலாமே. தேவையில்லாத செலவுன்னு தோணுது இளா” என்றாள் கொஞ்சம் வருத்தத்துடன்.

“பிளான் இல்லாம… யோசிக்காம செய்வேனா இசை? பார்த்துக்கலாம். ஒன்ஸ் இன் அ லைஃப் டைம்” என்று அவளை சமாதானப்படுத்தினான்.

‘தனக்காக என்பதால் இவ்வளவு செய்கிறானோ? அவனை கஷ்டப்படுத்திகிறோமோ?’ என்று நினைக்கத் தோன்றினாலும், ‘தனக்காக இவ்வளவு செய்கிறானே’ என நினைத்து கொஞ்சம் சந்தோஷமாகவும் இருந்தது!

அன்றே இருவரும் ஷாப்பிங் புறப்பட்டனர்.

அவளுக்கு தேவையானதை அனைத்துமே கேட்டு கேட்டு வாங்கினான். அவள் விலை அதிகம் என நினைத்து மறுத்ததையும் கண்டுகொள்ளாமல் அவளுக்காக ஆசை ஆசையாக செலவு செய்தான். அவனுக்காகவும் சிலவற்றை வாங்கிக்கொண்டான்.

‘எதற்கு இவ்வளவு செலவு செய்கிறாய்? பண விரயம்’ என்று அவள் சொல்லியும் அவன் கேட்கவில்லை. 

அவளுக்கு மனதில் கொஞ்சம் உறுத்தலாக இருந்தாலும், தனக்கென, தனது சந்தோஷத்திற்கென இவ்வளவு மெனக்கெடும் அவனை பார்க்க பார்க்க மனது அவனை மெச்சியது.

எந்த மனைவிக்கும் கணவன் தனக்கு பார்த்து பார்த்து செலவு செய்தால், அதை கண்டு மனம் மகிழும். ப்ரியாவும் அதையே உணர்ந்தாள்.

இருப்பினும் ஒரு நூலிழை உறுத்தலும் இருந்தது. அவனிடம் இதுபோல கேட்டு இனி கஷ்டப்படுத்த கூடாது என நினைத்துக் கொண்டாள்.

அவனுக்கோ, மனதில் சொல்ல தெரியாத ஒரு இன்பம் செலவு செய்யும் போது. இதுவரை இதுபோல அவன் செய்ததில்லை. ஒவ்வொன்றுக்கும் யோசிப்பான். 

ஆனால் இன்று அவன் மனம் விரும்பும் பெண் அவனுடன். ‘இதுபோதாதா நான் செலவு செய்ய’ என நினைத்து செய்தான்.

இருவரும் சோர்வுடன் வீடு வந்து சேர, அடுத்த நாள் நடக்கப்போகும் பார்ட்டி குறித்து ஆவலுடன் பேசிவிட்டு, பல எதிர்பார்ப்புகளுடன் உறங்கிவிட்டனர்.