TT6B

தனிப்பெரும் துணையே – 6B

இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது அங்கே வந்தான் ரிஷி அவன் நண்பர்களுடன். இவர்களை பார்த்ததும்… அருகில் வர, கொஞ்சம் அதிர்ந்தாள் ப்ரியா.

பின் சுதாரித்துக்கொண்டு… “ஹாய் ரிஷி…” என்று புன்னகைக்க, செழியனும் திரும்பி ரிஷியை பார்த்தான்.

“இளா. ஹி இஸ் ரிஷி என்னோட லீட். ரிஷி ஹி இஸ் இளஞ்செழியன்” என்றாள் கொஞ்சம் தயக்கத்துடன் எங்கே ஏதாவது உளறிவிடுவனோ என்று.

செழியனை பார்த்து புன்னகைத்த ரிஷி… “ஹலோ… இசைப்ரியா உங்கள பத்தி சொன்னா. காங்ராட்ஸ்” என்றவுடன், செழியன் புரியாமல் “தேங்க்ஸ்” என்றான். பின் ரிஷி ப்ரியாவிடம்… “என்ஜாய்” என்றுவிட்டு இருவரையும் பார்த்து புன்னகைத்துவிட்டு சென்றான்.

“எதுக்கு அவர் எனக்கு காங்ராட்ஸ் சொன்னாரு?” கேள்வியுடன் அவளை பார்க்க… ‘ஐயோ. எனக்குன்னு இன்னைக்கு வரிசையா ஆப்பு வைக்கறாங்களே. முதல்ல சர்வர் இப்போ ரிஷி’ என நினைத்தாலும்… “நீ யூனிவர்சிட்டி செகண்ட்’ன்னு சொல்லியிருந்தேன். அதுக்கு சொல்லியிருப்பான்” என்றாள் திக்கி தடுமாறி.

“உனக்கிட்ட எதுக்கு என்ஜாய்ன்னு சொல்லணும்?” அடுத்த கேள்வி கேட்க… ‘அடேய் கேள்வி கேட்கறது ரொம்ப ஈசி. என்னை கொஞ்சம் யோசிக்கவாவது விடேன்டா’ மனம் வசை பாடினாலும்…

“அவன் எதுக்கு சொன்னான்னு எனக்கு எப்படி தெரியும்? மே பி வேலை செய்யாம கடலை போட்டுட்டு இருக்கேன்ல அத நினைச்சு கூட சொல்லியிருக்கலாம்” என்றாள். இப்போது செழியன் சிரித்தான்.

ஏனோ அவன் சிரிப்பது அவ்வளவு அழகாகத்தெரிந்தது அவளுக்கு. அவனையே பார்த்தாள்.

‘இதுபோல உன்னிடம் சிரித்துக்கொண்டு… பேசிக்கொண்டே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்’ ஆசைகொண்ட மனம் அவனுடனான இந்த நெருக்கத்தை ரசித்தது.

அவன் சாப்பிட எதுவும் வேண்டாம் என்று மறுத்த போதும் அவனை வலுக்கட்டாயமாக சாப்பிடச்சொன்னாள்.

படிப்பு பற்றி இருவரும் பேசும்போது…  ‘ஸ்டைபெண்ட் மட்டும் வைத்துக்கொண்டு சமாளிக்க முடியுமா’ என அவள் கேட்டதற்கு…

அவன், “மேனேஜ் பண்ணலாம். வீட்டு ரெண்ட் 16K. அது என்னோட ப்ரோஃபஸர்’ரோட ஓல்ட் அபார்ட்மெண்ட். அதுனால என்கிட்ட அவர் அதிகமா ரெண்ட் கேட்கல. கொஞ்சம் தள்ளி போனா ரெண்ட் கம்மியா இருக்கும் பட் காலேஜ் போக வர செலவு இருக்கும். பக்கத்துலன்னா எப்போ வேணும்னாலும் போய்ட்டு வரலாம்” என்றான்.

“ஆல்ரெடி காலேஜ்ல ஒர்க் இருக்கும். அதுபத்தாதுன்னு படிக்கணும். இவ்ளோ இருக்கப்ப உன்னால எக்ஸ்ட்ரா ஆபீஸ் ஒர்க்’கும் பண்ணமுடியுமா இளா? ரொம்ப ஒர்க்லோட் ஜாஸ்தி இருக்காது?” கனிவுடன் கேட்டாள்.

ரிசெர்ச் அஸிஸ்டன்ஷிப் என்பது, பல்கலைக்கழகத்தில் வேலை பார்த்துக்கொண்டே படிப்பது. கிட்டத்தட்ட வாரத்தில் இருவது முதல் முப்பது மணிநேரம் வேலை பார்க்கவேண்டும். அதில்லாமல் படிப்பு.

ப்ரியா கேட்டவுடன், அவளைப்பார்த்து புன்னகைத்தான் செழியன். பின், “நம்ம நினைச்சது… நம்ம விருப்பப்படறது நடக்கணும்னா, அதுக்கு எவ்ளோ வேணாலும் கஷ்டப்படலாம்” என்றான் அவள் கண்களைப் பார்த்து.

‘படிக்கவேண்டும் என்று எவ்வளவு விருப்புகிறான்’ என நினைத்து அவளும் புன்னகைத்தாள்.

“இப்போவாவது வீட்டுக்கு சொல்ற ப்ளான் இருக்கா” அவள் கேட்க… மறுப்பாக தலையசைத்தான்.

அவள் கொஞ்சம் திடுக்கிட்டாள். சொல்லாமல் எப்படி முடியும் என.

அதை அவன் உணர்ந்துகொண்டதுபோல, “மாஸ்டர்ஸ் எப்படி பண்ணேனோ அதுபோல தான். நான் பணம் தரணும்னு இதுவரை அப்பா எதிர்பார்த்ததில்ல. ஒருவேள இனி தேவபட்டுச்சுன்னா, என்னோட சேவிங்ஸ்ல இருந்து குடுத்துடுவேன்”

“என்ன பார்க்க யாரும் வந்ததில்லை, வரவும் போறதில்ல. எல்லாரும் அவங்க அவங்க வேலை, வாழ்க்கைன்னு பிஸி’யா இருக்காங்க. இன்னமும் நான் அதானி’ல தான் வேலை பார்க்கறேன்னு நெனச்சுட்டு இருக்காங்க. மும்பை வந்ததுகூட தெரியாது. டாடாக்கு மாறினது தெரியாது. உன்னத் தவிர”

“நான் என்ன பண்றேன்னு யாரும் தெரிஞ்சுக்க ஆசைப்படல. பையன் வேல பார்க்கிறான்… கை நிறைய சம்பாதிக்கிறான் அவளோ தான். அவங்கள பொறுத்த வரைக்கும் பையன்னா நல்லா சம்பாதிக்கணும். அது தான் அவனுக்கு அழகு”

இதை சொன்னபோது அவன் கண்கள் நிச்சயமாக விரக்தியை காட்டியது. கைகள் இரண்டையும் நன்றாக சேர்த்துக்கொண்டான்… ஒருவேளை மனதின் நடுக்கம் கைகளில் தெரியக்கூடாது என்பதாலோ?

அதை புரிந்துகொண்டாள் ப்ரியா. அவனின் அந்த முகம் பார்க்க முடியவில்லை அவளால். அவன் கைகளை ஆதரவாக பற்றிக்கொள்ளவேண்டும் என மனம் துடித்தது. ஆனால் மௌனம் மட்டுமே அங்கு நிலவியது.

அதை தடுத்தார் முன்பு வந்த சர்வர். இருவருக்கும் குடிக்க டீ மற்றும் காபி எடுத்துவந்தவர் ப்ரியாவிடம், “ப்ரியா…. ரிஷி சொன்னாரு… காங்ராட்ஸ்” இருவரையும் ஒரு மாதிரி பார்த்து, புன்னகையுடன் சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

இதற்கு முன் ப்ரியா, ரிஷி மற்றும் அவர்கள் சகாக்களுடன் இங்கு வருவார்கள். ப்ரியா அனைவரிடமும் சகஜமாக பழகுவாள். வேலை பார்ப்பவரில் ஆரம்பித்து, ஹோட்டல் நடத்துபவர் வரை இவளை நன்றாக தெரியும்.

‘இந்த ரிஷியை என்ன செய்ய… என்ன சொல்லி வெச்சானோ’ ரிஷியை உள்ளுக்குள் திட்டிக்கொண்டே செழியனை பார்க்க… அவனும் அவளை பார்த்தான்.

‘ஐயோ இதற்கு என்ன கேள்வி கேட்கப்போகிறானோ கடவுளே’ என நினைத்து திரு திருவென விழித்தாள்.

அதை பார்த்த செழியன், “நான் யூனிவர்சிட்டி செகண்ட் வந்ததை சொல்லியிருப்பார் போல” என்றான் சிரித்துக்கொண்டே காபியை அவள் பக்கம் நகர்த்தி.

‘இது நக்கல் சிரிப்பு மாதிரில இருக்கு’ மனது நினைத்தாலும், வெளியில் அசடு வழிய சிரித்தாள்.

பின் இருவரும் அதிகம் பேசவில்லை என்றாலும், அவனுடன் இருக்கும் நேரம் ரம்மியமாக இருந்தது அவளுக்கு.

சில நிமிடங்கள் கழித்து… அவன் கிளம்புகிறேன் என்று சொன்னபோது… சொல்லமுடியாத அதே வலி அவள் மனதில். விருப்பமே இல்லாமல் அவனை அனுப்பிவைத்தான்.

அன்றே முடிவெடுத்துவிட்டாள். கேட் தேர்வுக்கு தயாராகவேண்டுமென. அது அவ்வளவு சுலபமில்லை என நன்றாக தெரியும்.

இந்தியாவிலேயே மிகப் பிரபலமான IIT’யில் ஒன்று IIT பாம்பே. அதில் சேர்வது என்பது எளிதல்ல. தீவிர பயற்சி வேண்டும்.

வீட்டில் மேல்படிப்பு என்று சொன்னால் ஒத்துக்கொள்வார்களா என்ற சந்தேகம் எழுந்தது. உடனே செழியன் சொல்லாமல் படித்துமுடித்தது நினைவிற்கு வர, இப்போதைக்கு யாரிடமும் சொல்லாமல் தேர்வுக்கு தயாராவோம் என முடிவெடுத்தாள்.

தேர்வுக்கான விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்தாள். தேதிகளை குறித்துக்கொண்டாள்.

எப்பொழுதும் விளையாட்டு மற்றும் துறுதுறுவென இருந்த ப்ரியா, முற்றிலுமாக தன்னை படிப்பில் ஈடுபடுத்திக்கொண்டாள். தேவையில்லாமல் மனம் அலைபாயும் என நினைத்து, செழியனிடம் பேசுவதைக் கூட குறைத்துக்கொண்டாள்.

இதில் அவளுக்கு ஆச்சர்யம் என்னவென்றால், அரிதாக சிலசமயம் அவனிடம் இருந்து மெசேஜ் வரும். அதை பார்க்கும்போது, அவனிடம் சகஜமாக பேசவேண்டும் என்று தோன்றும். பின், அது தன் இலக்கை எட்ட முட்டுக்கட்டையாக இருக்கும் என தவிர்த்துவிட்டாள்.

பலவிதமாக யோசித்து… ஒருவேளை தான் விருப்பப்படும் பிரிவு (course) கிடைக்கவில்லை என்றால், எளிதில் கிடைக்கக்கூடிய மாற்றுப்பிரிவுக்கும் (backup course) தன்னை தயார் செய்துகொண்டாள். 

IITB ‘யில் எந்த ஒரு பிரிவும் கிடைக்கவில்லை என்றால், IIIT புனே அடுத்த ஆப்ஷன் என முடிவெடுத்திருந்தாள்.

நாட்கள் விரைவாக நகர, இரவு பகல், வீடு அலுவலகம் என பாராமல் தன்னை தேர்வுக்கு தயார் செய்துகொண்டாள்.

முதல் தேர்வுக்கான நாளும் வந்தது. அன்று காலையில் வேண்டாத தெய்வமில்லை. அதை முடித்து, சில நாட்கள் கழித்து அடுத்த பிரிவுக்கான தேர்வுகளும் எழுதினாள். ஓரளவு நன்றாகவே எழுதியதை போல உணர்ந்தாள். இருப்பினும் முடிவு வெளிவரும் நாளுக்காக காத்திருந்தாள்.

இப்போதுதான் நிம்மதியாக மூச்சிவிடுவர்தற்கான நேரம் கிடைத்துபோல இருந்தது அவளுக்கு. பழையபடி இல்லையென்றாலும், அவ்வப்போது செழியனுக்கு மெசேஜ் அனுப்ப ஆரம்பித்தாள்.

அடுத்த ஒரு மாதத்தில், தேர்வுக்கான முடிவு வந்தது. அவள் நினைத்ததுபோல அவ்வளவு சுலபமாக கிடைக்கும் என தோன்றவில்லை.

விருப்பட்ட பிரிவு கிடைக்க, அடுத்த சுற்றுக்கான தேர்வு இருந்தது. அதற்கு மும்பை சென்றாகவேண்டும். அதற்கு முதலில் வீட்டில் சொல்லவேண்டும்.

எப்படி என்று யோசித்தபோது, அகிலனிடம் சொல்லிவிட்டு, அவனை அம்மா அப்பாவிடம் பேசச்சொல்வோம் என முடிவெடுத்தாள்.

அதேபோல அகிலனிடம் சொல்ல…. அவன் ஆச்சரியத்துடனும் பெருமையுடனும் “வாவ் குட்டி. சூப்பர் டா… எங்ககிட்டயெல்லாம் சொல்லவே இல்லையே” என குறைபட்டுக்கொள்ள… “சஸ்பென்ஸ்’ஆஹ் இருக்கட்டும்னு தான் ண்ணா” என்றாள் புன்னகைத்துக்கொண்டே.

ஆனால் அவன் கேட்ட அடுத்த கேள்வி, அது அவள் எதிர்பார்த்ததுதான்… இருந்தாலும் அவன் “ஏன்டா இங்க IITல கிடைக்கலையா?” என கேட்டவுடன் கொஞ்சம் தடுமாறினாள்!!!