UKK4

UKK4

உலாவரும் கனாக்கள் கண்ணிலே-4

கனவுகளின் தேசமான உறக்கம்…

உல்லாச நினைவுகளை அள்ளித்தரும்!!!

வெகுநேரம் உறங்காத போதும் வழக்கம்போல காலை ஐந்து மணிக்கு விழிப்பு வந்து எழுந்திருந்தாள் ஜனதா.

கடந்த இரு நாட்களில் தனது திருமண நிகழ்வினை முன்னிட்டு சரியான உறக்கம் இல்லை.  மேலும் தனது சகோதரனின் எதிர்பாரா விபத்து தந்த அதிர்ச்சி மற்றும் புதிய இடமாகையால்… இன்றும் நிறைவான உறக்கம் இல்லை.

விழிப்புநிலை உறக்கத்திலிருந்தபடியே எழுந்தமையால் தலைபாரமாகவும், உடல் சற்று சோர்வாகவும் இருப்பதாக உணர்ந்தாள், ஜனதா.

இருப்பினும் முந்திய தின அறிவுரைகளின் செயல்பாடாக… குளித்துவிட்டு காஃபீ கலந்துகொள்ள எண்ணியவள், முதலில் சோர்வுபோக குளித்துவிட்டு வந்தாள்.

குளித்தவுடன் சோம்பல் நீங்கி, புத்துணர்ச்சியை உணர்ந்தவள், தங்களது அறையில் இன்னும் உறக்கத்தில் இருக்கும் கணவனின் உறக்கம் கலையாதவாறு மெதுவாக தங்களது அறையிலிருந்து, தரைத்தளத்தில் இருக்கும்  அடுக்களைக்கு சென்றாள்.

நேரம் ஐந்து இருபது என அங்கிருந்த கடிகார முள், அதன் ஓய்வில்லா ஓட்டத்தின் சாட்சியாக நேரத்தைக் காட்ட, யாரும் இன்னும் எழாமல் இருப்பதைக் கண்டு… யோசித்தவாறு கிச்சனில் இருந்த ஃப்ரிட்ஜை திறந்து பால் இருக்கிறதா எனப் பார்த்தாள்.

ஒரு அரை லிட்டர் பால் பாக்கெட் மட்டுமே இருக்க, அதில் வந்திருந்த அனைவருக்கும் போட இயலாது என யோசித்தவள், என்ன செய்வதென அறியாமல் வெளிக்கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்றாள்.

வாசல் கூட்டி கோலமிட்டவள், உள்ளே வர… அவள் எதிரில் வந்த மாமியாரைப் பார்த்து புன்னகைத்தவாறு,

“அத்த பால் எப்ப வரும்?”

“பால் இனி தான் வரும்… ஆனா ஒரு பாக்கெட் பால் மட்டும் ஃப்ரிட்ஜ்ல இருக்கும், அத எடுத்து டீ போடு”

சரியென்று தலையாட்டியவள், தனது காஃபீ எண்ணத்தை ஒதுக்கிவிட்டு டீ போட ஆயத்தமானாள்.

டீ போட்டவள், தனது மாமியாரிடம் இதை யாருக்கெல்லாம் கொடுக்கவேண்டும் என கேட்டாள். சுசீலா கூறிய லிஸ்டில் அவள் இல்லாமல் போக, லிஸ்டில் இருந்தவர்களுக்கு டீயை கொடுத்துவிட்டு வரும்போது, பால் வந்திருந்தது.

மாமியாரின் வழிகாட்டுதலில், பனிஸ்மெண்ட் போல மீண்டும் டீயை போட்டவள்… அடுத்தடுத்து எழுந்தவர்களுக்கு டீயை பட்டுவாடா செய்தாள். பிறகு ஒரு டம்ளரில் டீயை ஊற்றியவள் தனது மாமியாரிடம்,

“அத்த… அவங்களுக்கு டீ குடுக்கல இன்னும், போயி குடுத்துட்டு வரேன்” எனக் கூறியபடி டீயுடன் மாடியேறினாள்.

அங்கு இன்னும் உறக்கத்தில் இருந்தவனை எழுப்ப மனமில்லாமல் சற்று நேரம் நின்றாள். கணவனின் குடிக்காத டீயுடன் கீழே சென்று வரக்கூடிய நிகழ்வுகளை எதிர்கொள்ள விரும்பாமல்,

எப்படி எழுப்ப என யோசித்து, இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தவள்

“ஏங்க… ஏங்க…”, என இருமுறை அழைத்தாள்.

அவளின் அழைப்பிற்கு கண் விழித்தவன், “என்ன ஜனதா? அதுக்குள்ள எழுந்துட்ட!”, என்றபடி படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்திருந்தான்.

“ம்… சீக்கிரம் பிரஷ் பண்ணிட்டு வாங்க, டீ ஆறிரும்”

“இரு வரேன்”, என்றவன் மூன்று நிமிடத்தில் பிரஷ் செய்து ஃப்ரெஷ்ஷாகி வந்திருந்தான்.

மனைவியின் மலராத வாடிய முகம் அவனுக்கு எதையோ உணர்த்த, ”நீ டீ குடிச்சியா ஜனதா?”

“இல்ல இனி தான், நீங்க குடிச்சுட்டு டம்ளரை குடுங்க நான் கீழ போயி குடிச்சுக்கறேன்”

கையில் வாங்கிய டீயை அங்கிருந்த டேபிளின் மீது வைத்தவன், முந்திய தினம் பால்செம்புடன் வைக்கப்பட்டிருந்த டம்ளரை எடுத்து வந்து, அதில் பாதி டீயை ஊற்றி மனைவியிடம் நீட்டியிருந்தான்.

அவள் மறுக்க, “மொதல்ல இத பிடி”, என சத்தமாக கடினக் குரலில் கூற

கணவனை பார்த்தவாறு டீ டம்ளரை வாங்கியிருந்தாள்.

டீயை சந்துரு குடித்துவிட்டு டம்ளரை அவளிடம் தந்தவன், “இன்னைக்கு உங்க அம்மா வீட்டுக்கு மறுவீடு போகணும்ல, சீக்கிரமா கிளம்பு”, என்றவன் குளிக்கச் சென்று விட்டான்.

டீயைக் குடித்து முடித்தவள், அங்கிருந்து கீழே வந்திருந்தாள்.

அதற்குள் அங்கு வந்த அவளின் அண்ணி சீதா, “காலை சாப்பாட்டுக்கு அத்த… அங்க உங்கள கூட்டிட்டு வரச்சொல்லிருக்காங்க ஜனதா, இப்போ தான் ஆறரை மணி ஆகுது. எட்டே காலுக்கு கிளம்பினா நிதானமா வீட்டுக்கு போயிரலாம், இத உங்க மாமனார், மாமியார்கிட்ட போயி இப்போ தான் சொன்னேன்”

“சரிண்ணி, அவரு இப்போ தான குளிக்க போயிருக்காரு, வரட்டும்”

அங்கு வந்த அபி, “ஜனதா! நைட்டெல்லாம் சரியா தூங்கல போல”, என கிண்டல் குரலில் மெதுவாக கேட்க

“இவ கிட்ட எதுக்கு கேட்டுகிட்டு, புருஷன், பொண்டாட்டிய ரூமை விட்டு வெளிய அனுப்பிட்டு, நாம போயி அவங்க ரூமை பாத்தா… தெரிஞ்சிட்டு போகுது”, என சீதா கிண்டலடிக்க

முதலில் இவர்களின் கிண்டல் புரியாமல் நின்றவள், புரிந்தவுடன் புன்னைகையை இதழில் கொண்டு வந்திருந்தாள்.

“அவருக்கு நம்ம வீட்டுக்கு எப்போ கிளம்பணும்னு தெரியுமா?, அண்ணி”, என சீதாவைப் பார்த்து ஜனதா கேட்க

“ஏய்… ஜனதா! எது உங்க வீடு, நெய்வேலி இனி உங்க அம்மா வீடு, இது தான் இனி உங்க வீடு”, என அபி சண்டைக்கு வர

“இனி உங்கட்ட பாத்து பேசணும்”, ஜனதா

“அந்த பயம் இருக்கட்டும்”, அபி

“…”, சீதா

“சரி நான் போயி, இருக்கறவங்களுக்கு காலைல சாப்பிட என்ன செய்யணும்னு சித்திட்ட கேக்கறேன்”, என அங்கிருந்து அபி நகர

“உங்களுக்கு நானும் வந்து ஹெல்ப் பண்ணவா?”, ஜனதா

“இன்னிக்கு மட்டும் உங்க ஹெல்ப் வேணாம், நீங்க மறுவீட்டுக்கு போகிறதால ரெஸ்ட் உங்களுக்கு”, என்றபடி சுசீலாவை நோக்கிச் சென்றாள்.

சீதாவும் கிளம்ப ஆயத்தமாக, ஜனதா அவளின் அறைக்கு வந்திருந்தாள்.

குளித்துவிட்டு வந்திருந்த சந்துரு கைலியில் இருக்க, இவள் வந்ததை உணர்ந்தவன்

“ஜனதா, மறுவீட்டுக்கு போயிட்டு நீ உங்க அம்மா வீட்ல இரு… எனக்கு, இன்னிக்கு கொஞ்சம் கடலூர்ல வேலையிருக்கு, சாப்டுட்டு நான் அங்க வர போயிட்டு வரணும், வந்த பின்ன உன்னை இங்க கூட்டிட்டு வரேன்”

“இன்னிக்கு போயிட்டு, இன்னிக்கே இங்க வந்திருவோமா?”

அவளின் சிறுபிள்ளைத்தனமான கேள்வியில் சிரித்தவன், மனைவியின் அருகில் வந்திருந்தான்.

“இவ்ளோ நாள் அங்க தான ஜனதா இருந்த… அரை மணி நேரத்துல போயிட்டு வர தூரம் தான் உங்க அம்மா வீடு!”

தனது உரையாடலுக்கு இடைவெளி விட்டவன், இடைவெளி இல்லாமல் மனைவியை அணைத்திருந்தான்.

“வந்த ஒரு நாள்லயே இங்க பிடிக்கலயா?”

“…”

“என்ன… பிடிக்கலயா?”

இரவிலிருந்து அவனது அணைப்பிற்கு பழகியிருந்தாலும் அப்போதைய மனநிலையில் எதையும் உணராத அவள் மனம், தற்போது உணரத் துவங்கியிருந்தது.

“ம்…”, என்ற ஒற்றைச் சொல் அவனது அணைப்பிற்கு வந்த வெகுமதி என்பதை உணர்ந்தாலும்,

“உன்னோட ம்…கு பிடிக்கலனு நான் அர்த்தம் எடுத்துகிறதா! இல்ல… பிடிக்குதுனு நினைக்கிறதா ஜனதா”

“பிடிக்குதுனு தான்… எடுத்துக்கணும்”, என்ற அவளது ஸ்ருதி குறைந்து மாறிய பதிலில் அவனுக்கு சிரிப்பு வந்தது.

“நான் பூச்சாண்டியா?”

“இல்ல”

“அப்றம் ஏன் பயப்படற?”

“நான் ஒன்னும் பயப்படல”

“அப்ப ஏன் உன் குரல்ல நடுக்கம்…”

“….”

“குளிரெல்லாம் இல்ல… அப்போ வயசாயிருச்சோ உனக்கு?”

அவனது கிண்டலை உணர்ந்தவள், அவனது அணைப்பிலிருந்து வெளிவர முயற்சிக்க

“எங்க போற இப்போ?”

“யாராவது வந்திருவாங்க”, என சிணுங்கலாக அவள் பதில தர

“வந்தா என்ன?, புதுசா கல்யாணம் ஆனவங்கனு நினச்சுக்குவாங்க”

“ஷையா இருக்காதா?”

“எதுக்கு ஷை?”

“நீங்க ஜென்ஸ் அதான் அப்டி பேசுறீங்க….!”

“சரி, லேடிஸ் எப்டி பேசுவீங்க?”

“…”

அவனது அணைப்பு இன்னும் இறுக, அவளின் உடலில் உள்ள உணர்வுகள் தந்த போதையில் தேன் குடித்த வண்டு போல கணவனின் கைகளில் மயங்க ஆரம்பித்திருந்தாள்.

அவளின் உணர்வுகளை முன்னின்று கண்களால் பருகியவன், உதடுகளால் இதழ் தேனைப்பருகி அவளை மெல்ல விடுவித்தான்.  மயக்கத்திலிருந்து மீளாத ஜனதா தடுமாற…, தன் கைவளையில் அவள் மீளும் வரை வைத்திருந்து… பின் மெல்ல விடுவித்தான்.

“நீ கிளம்பு மொதல்ல, நான் கீழ போயிட்டு வரேன்”, என்றவாறு அறையிலிருந்து சென்றிருந்தான்.

சந்துரு கீழே சென்ற சற்று நேரத்தில் அங்கு வந்த சீதா மற்றும் அபி இருவரும் ஜனதாவை கிண்டல் செய்ய, சிரித்தவாறு அவர்களை சமாளித்தாள்.

மஞ்சள் நிற பார்டரில், பச்சை நிற பட்டு உடுத்தி கிளம்பியிருந்த ஜனதா, நீண்ட முடியினை தளரப் பின்னல் இட்டு, தலையில் மல்லியுடன், கனகாம்பரம் வைத்திருந்தாள். முன்னுச்சியில் குங்குமம் வைத்து அவளைக் கண்ணாடியில் பார்க்க, அதில் தெரிந்த தனது பிம்பத்தில் நிறைவாக உணர்ந்தாள்.

வெள்ளை வேட்டி சட்டையில் கிளம்பிய சந்துருவை அவள் கண்கள் காதலுடன் காண, அதை மறைக்க கீழே குனிந்தவாறு ஜனதா இருந்தாள்.

மழை விட்டும் தூவானம் விடாததது போல, திருமணமாகியும் தன்னை விட்டு விலகாத வெட்கத்தால் ஜனதா குனிந்த தலையை நிமிர்த்த முடியாமல் இருந்தாள்.

குறித்த நேரத்தில் அங்கிருந்து சந்துரு, ஜனதாவுடன், சீதாவும் அனைவரிடமும் விடைபெற்றுக் கிளம்பியிருந்தாள்.


தனக்கு அடிபட்டபிறகு தன் கண்ணில் பட்டாலும், கருத்தில் வராத தனது மனைவியை யோசித்தவனாய் அறைக்குள் நுழைய வந்தவன், உள்ளிருந்து வந்த பேச்சுக் குரலில் சற்று நிதானித்தான்.

     “ஏய் அர்ச்சனா!, எழுந்து மொதல்ல குளிக்க போ”, இது அவளின் அக்கா மங்கையின் குரல் என்பதை உணர்ந்தவன், அறைக்குள் செல்லும் அவனது எண்ணத்திற்கு நூற்று நாற்பத்து நான்கை அமல்படுத்தி, ஹாலுக்கு திரும்ப எத்தனிக்க,

     “கொஞ்ச நேரம் படுத்திருக்கேன் கா… ஒரு பத்து நிமிசத்துல எழுந்துறேன்”, என்ற மிதமான குரலைக் கேட்ட அமர்நாத், ‘அட ஸ்லீப்பிங்க் பியூட்டி, ரொம்ப நாட்டியா நீ’ என நினைத்தபடியே ஹாலில் மீண்டும் ஹால்ட் ஆகியிருந்தான்.

     அங்கு வந்த அன்பரசி, “என்ன அமரு! உங்குயின பாக்க போறேன்னு சொல்லிட்டு இங்க வந்து உக்காந்துட்ட!, காலு வலியா இருக்கா?”

          தன்னவள் இன்னும் எழாமல் இருப்பதை சொல்லவிரும்பாதவன், “லைட்டா இன்னும் பெயின் இருக்கும்மா!, அதான் இப்டியே உக்காந்துட்டேன்”, என்றான்.

     “ம்… தான்னு நாட்டம பண்ணி இப்டி அடிபட்டு வந்திருக்க, என்னனு கேட்டாலும்… கேக்காதவன மாதிரி இருக்க… உன்னல்லாம்… சின்ன புள்ளையா இருந்தா அடிச்சு திருத்தலாம், வளர்ந்தும் இப்டி இருக்கறவன என்ன செய்ய?”, என்றவாறு திருமணத்திற்கு வந்திருந்த உறவுகளை கவனிக்க சென்றுவிட்டார் அன்பரசி.

     “என்ன பங்கு இன்னும் வலியிருக்கா, காலைல போயி டாக்டர பாத்துட்டு வருவமா?”, என கேட்டபடி கையில் நியூஸ் பேப்பருடன் அமரின் அருகில் வந்தமர்ந்தான், பத்ரி.

     “இல்ல தலைவா!, நேத்துக்கு இப்போ பரவாயில்ல… சாப்டுட்டு டேப்ளட் போட்டா சரியாகிரும்”

     சுற்றிலும் பார்வையில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்த பத்ரி குரலை குறைந்த டெசிபலுக்கு மாற்றி, “ஏய் பங்கு!, மறைக்காம சொல்லு நேத்து எங்க போன?”

          தனது சகோதரனின் டெசிபலுக்கு தன் குரலை குறைத்து, “கொரியர் ஆபீஸ் போனேன்”

     “வந்த கொரியர அவன் வந்து கொடுப்பான்ல பங்கு!, அதுக்குள்ள உனக்கு என்னடா அவசரம்”

“ம்… அதுல அதிரசம் அனுப்பியிருக்காங்களாம்… அதான் அவசரமா போனேன். நீ வேற”

“ஏன் பங்கு சலிச்சுக்கிற?”

“என் கஷ்டம்… சல்லடை இல்லாம சலிக்கிறேன்”

“கஷ்டத்துலயும் காமெடி உன்னால தான் பங்கு பண்ணமுடியும்! அப்டி என்ன ஸ்பெஷல் அந்த கொரியர்ல?”

          “ஸ்பெஷலா, இல்ல நசலானு கொரியர் வந்தா தான் தெரியும், தலைவா!”

“என்ன பங்கு சொல்ற?”

“வேற… தெரிஞ்சததான சொல்ல முடியும்! இது வர எனக்குனு எந்த கொரியரும் இந்த வீட்டுக்கு வந்ததில்ல…”

“அதான் தொர… நேருல போயி வாங்கப் போனீங்களாக்கும்!?”, என கிண்டலாக கேட்டவன்

“சரி! யாரு அனுப்புனது?”

“வேற யாரு, ஆப்ரிக்காவில இருந்து அப்ஸ்காண்ட் ஆன அந்த அரக்கிறுக்கு தான்”

“என்ன சொல்ற!”

“உண்மைய தான் தலைவா உங்கிட்ட சொல்லுறேன்”

“சரி அது அனுப்புனத… உனக்கு யாரு சொன்னா?”

“அது தான் பேசுச்சு, கொரியர் அனுப்பினது வந்திருச்சானு?!”

“என்ன பங்கு நீ… கொரியர்ல கிஃப்ட் தான அப்டினாலும் உனக்கு அனுப்பிருக்கும்?”

“எனக்கு எங்க அனுப்புச்சு? அது அர்ச்சனாவுக்கில்ல அனுப்பிருக்கு”

“என்னது அர்ச்சனாவுக்கா!”, என பத்ரியின் பதட்டத்தால் சத்தத்தின் டெசிபல் அளவு கூட

“ஸ்… மெதுவா தலைவா… அது சொல்றத நம்பவும் முடியல, நம்பாமலும் இருக்க முடியல, கொரியர்ல எதுவும் அனுப்பாம கூட என்னை அலைய விட்டுருக்கலாம்.

ஆனா கொரியர் பண்ணிருந்தாலும்… உண்மையில கிஃப்ட் அனுப்பல… எங்க ரெண்டு பேருக்கும் இடையே பிரச்சன ஆகற மாதிரி ஏதோ அர்ச்சனாவுக்கு அனுப்பிருக்கு”

“எத வச்சு அப்டி சொல்ற?”

“இது வர எந்த கிஃப்டும், அவளுக்கு நான் வாங்கி கொடுத்ததில்ல, அதனால அத திருப்பி குடுக்க வாய்ப்பில்ல!, காலேஜ்ல படிக்கும்போது குரூப் போட்டோ எடுத்தது. தவிர தனியா ரெண்டு முறை மௌனிகா ஃபோர்ஸ் பண்ணதால செல்ஃபீ எடுத்திருக்கேன் அவகூட. ஒரு வேள அத கொரியர்ல அனுப்புவாளாயிருக்கும் அர்ச்சனாவுக்கு!”

“எந்த கொரியர்ல அனுப்பிருக்காம்”

“அத எங்க சொன்னா?”

“அப்போ, ஒவ்வொரு கொரியரா போயி வேல கேட்டியா?”, என்றான் சிரித்தபடி

“இல்ல…, ஃப்ரண்கிட்ட தான் ஹெல்ப் கேட்டேன், அவன் பி ஆர் ஓ நம்பர் கேக்குறான், எங்க போக நான்?, ரொம்ப நேரமாகியும் அவங்கிட்ட இருந்து ரெஸ்பான்ஸ் இல்ல, அதான் அவன் கொரியர் ஆஃபீஸ்கு போனேன்.

அவனுக்கு எல்லா கொரியர்லயும் தெரிஞ்சவங்க இருக்காங்க, ஆனா மௌனிகாங்கிற பேருல இருந்து அர்ச்சனாங்கற பேருக்கு எந்த கொரியரும், எந்த கொரியர்லயும் நேத்து வரல… அவன் எனக்காக ரிஸ்க் எடுத்து பாத்துட்டு வந்து சொல்றவர அங்க வயிட் பண்ணிட்டு, வீட்டுக்கு கிளம்பி யோசனையில வரும்போது தான் எதிரில வந்த வண்டிய கவனிக்காம விட்டுட்டேன்”

“இத நீ எங்கிட்ட சொல்லிருக்கலாம், எதுக்கு நீ போகனும்?”

“தலைவா! எனக்கு வந்த கால் அட்டெண்ட் பண்ணிட்டு வச்சேன், அப்போ தான் நீ வண்டில வெளியில கிளம்பி போன… வேற முக்கிய வேலயா வெளியில போற உன்ன எதுக்கு தொந்திரவு பண்ணனும்னு நான் மொதல்ல ஃபர்ஸ்ட் ஃப்ளைட் கொரியர்ல வேலைல இருக்குற என் ஃப்ரண்டுக்கு கால் பண்ணேன். அவன் ரொம்ப நேரமா ரெஸ்பான்ஸ் பண்ணல… அதான் டென்சன்ல யோசிக்க முடியல, அவன் ஆஃபீஸ்கு கிளம்பி போயிட்டேன்.”

“இருந்தாலும் நீ வெளியில போயிருக்கக்கூடாது”

“…”

“இப்போ பாரு… உனக்கு எவ்வளவு பிரச்சனைனு?”

“ம்…”

“ஏய் என்னங்கடா நீங்க ரெண்டு பேரும் காலைலயே ஹாலுல உக்காந்து… அப்டி என்ன ரகசியம் பேசிட்டு இருக்கீங்க?

அமரு உன் பொண்டாட்டி இப்போ தான் குளிக்க போயிருக்கா, காணாம்னு போயி ரூம்ல தேடாத, உனக்கு முடிஞ்சா… இன்னிக்கு அவங்க வீட்டுக்கு போயிட்டு வா”, என்றபடி அங்கு வந்த அன்பரசியின் வார்த்தையில், இருவரும் தனது தாயை பார்த்து சிரித்தபடி

“என்ன ஆசப்பட்ட மாதிரி, மருமகள்கள் கூட்டணி எண்ணிக்கைய கூட்டிட்ட சந்தோசத்துல இருக்கீங்க போல”

“அட போங்கடா, நான் முந்தின ஜென்ரேசன் மருமக, உமாவும், அர்ச்சனாவும் கரெண்ட் ஜென்ரேசன் மருமகளுங்க… கேப் இருக்குல்ல”, என்றவாறு அருகிலிருந்த சேரில் வந்தமர்ந்தவர்

“உங்க கேப் எப்டியிருந்தாலும், கேப் கிடைக்கும் போது… முன்னாடியே ரெண்டுபேருமா சேர்ந்துகொண்டு எங்கள வச்சு செய்வீங்க… இப்போ கூடுதலா ஒரு ஆள் வேற வந்துருச்சு, இனி உங்க கிட்ட நெருங்க கூட வர முடியாது!”, இது பத்ரி

“அப்ப கரெண்ட் ஜென்ரேசன், கரெண்ட் மாதிரி ஷாக்கடிக்கும்னு சொல்றீங்களா?”, இது அமர்

“கரெண்ட் ஜென்ரேசன் கரண்டியால மட்டும் தான் அடிக்குமாம், ஷாக்கு ஆகறது எல்லாம் உங்க வேல”

“அப்ப தலைவா… அண்ணிகிட்ட கரண்டியால வாங்கி, வாங்கி ஷாக்குல கருத்திருச்சா?”

“நான் எங்கடா அப்டி சொன்னேன்”

“சும்மா கேட்டு வச்சுக்குவோம், ஆளந்தெரியாம கால விட்டுட்டு… பின்னாடி நான் கஷ்டப்படக்கூடாது பாருங்க குயின்”, அமர்.

“அத்த…, மசாலா எல்லாம் அரச்சுட்டேன், நீங்க வந்து தாளிக்கிறீங்களா, இல்ல நான் தாளிச்சு போடவா?”, என கிச்சன் வாயிலில் நின்றவாறு உமா கேட்க

“நான் வரேன் உமா, நீ பூரிக்கு மாவை ரெடி பண்ணு”, என்றவாறு எழ

“ஏங்க, நிசி, நிகிய இன்னிக்கு ஸ்கூலுக்கு அனுப்பிவிடணும், போயி எழுப்புங்க” என உமாவிடமிருந்து வந்த செய்தியை அவள் கூறி முடிக்கும் முன்னே, கையிலிருந்த செய்தித்தாளை காஃபீ டேபிளின் மேலே வைத்துவிட்டு எழுந்து நின்றிருந்தான், பத்ரி.

“நான் போயி பாக்குறேன் உமா”, என்றவன் அவர்களது அறையில் உறங்கும் தமது மகள்களை எழுப்ப ஒரு போர் வீரன் போல சென்று கொண்டிருந்தான்.

‘இன்னும் கொஞ்ச நாள்ல தலைவா மாதிரி நாமளும் ஆகிருவோமோ’, என எண்ணியவனாய் குளிக்க சென்றான் அமர்.

சூரியன் வந்தால் எனக்கென்ன? என வெளிச்சத்தை பொருட்படுத்தாமல் நிசிதா, நிகிதா இருவரும் உறங்கிக் கொண்டிருக்க

“நிகி, நிசி எழுந்துருங்க… விடிஞ்சிருச்சு…”, பத்ரி

இருவரது பெயர்களும் உச்சரிக்கப்பட்டதை உணராத இருவரும் சிறு அசைவும் இல்லாமல் உறங்கிக் கொண்டிருக்க

அவர்களது அறையில் இருந்த டிவியில் சின்சானை பத்ரி உயிர்பிக்க…, சின்சான் பேச ஆரம்பித்த ஒரு நொடிக்குள் இருவரும் படுக்கையிலிருந்து புரண்டவாறு, மூடியிருந்த கண்களைப் பிரிக்க,

பத்ரி இருவரையும் படுக்கையில் இருந்து இருபுறமும் தூக்கியிருந்தான்.

இருவரும் தந்தையின் தோளில் சாய்ந்தவாறு… சின்சானைப் பார்த்திருக்க

“நிசி, நிகி ரெண்டு பேரும் ஸ்கூலுக்கு போகணுமில்ல?”

மனதில் அதிர்ச்சியை வாங்கிய இருவரும்

“அப்பா… சித்தப்பாக்கு முடியலல , அதனால் நான் இன்னிக்கு லீவு”, என இருவரும் ஒரே விடயத்தை காரணமாகக் கோரசாகக் கூற

இருவரின் தில்லுமுல்லு அறிந்தததால்

“சித்தப்பாக்கு சரியாகிருச்சு, சோ நீங்க இன்னிக்கு ஸ்கூலுக்கு போகலாம்”

“அதுக்குள்ளயா?”, என இருவரும் அவர்களது அதிர்ச்சியை வெளிக்காட்ட

     அறையில் இருந்த டிவியை அணைத்துவிட்டு, ஹாலுக்கு இருவரையும் தூக்கி வந்தான்.

     “பாருங்க, சித்தப்பாக்கு சரியாகிருச்சு, அதான் இங்க இல்ல”, என ஹாலில் முந்தைய தினம் அமர் படுத்திருந்த கட்டிலைக் காட்டிக் கூற

     “….”, நிசி

     “….”, நிகி

     அமைதியாக பத்ரி கூறியதை செவிமடுத்த இருவரும், பத்ரியின் கைகளில் இருந்து அமைதியாக இறங்கி அமரின் அறையை நோக்கிச் செல்ல…

     தனது பேச்சை நம்பாமல் இருவரும் அமரின் அறைக்குள் செல்வதை உணர்ந்தவன், சிரித்தபடி இருவரையும் பார்த்திருந்தான்.

     அர்ச்சனா குளித்துவிட்டு உடைமாற்றியள், தனது அக்காவிடம் பேசியபடி தலை முடியை காய வைத்துக்கொண்டிருந்தாள்.

     நிசி, நிகியை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே கண்டிருந்ததால் இலகுவாக அவளிடம் தனது சித்தப்பாவை பற்றி விசாரிக்க ஆரம்பித்திருந்தனர்.

     “சித்தி, சித்தப்பா எங்க?”, நிசி

     “குளிக்க போயிருக்காங்க”

     “அவங்களுக்கு சரியாகிருச்சா?”, நிகி

     “சரியானதால தாண்டி குளிக்க போயிருக்காங்க”, நிசி, நிகியின் வினாவிற்கு பதிலளித்திருந்தாள்.

     “உங்க சித்தப்பான்னா உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா?”, மங்கை

     “பிடிக்குமே!”,  நிசி

     “ஏன் கேக்குறீங்க?”, நிகி

     “காலைல எழுந்தவுடனே தேடுறீங்கள்ல… அதான் கேட்டேன்”, சிரித்தபடி மங்கை கூற

     “தேடுறதுக்கும் ரீஸன் இருக்கு, அது சீக்ரெட்… அத பத்தி நாங்க யாருகிட்டயும் டிஸ்கஸ் பண்ண முடியாது! என்னடி நிகி”, என நிசி கேட்க நிகி அதை ஆமோதிக்க… தலையை மேலும் கீழுமாக அசைத்து உறுதி செய்தாள்.

மங்கையும், அர்ச்சனாவும் இருவரின் பேச்சு மற்றும் செயலில் சிரித்திருந்தனர்.

கனவுக்குள், இன்பக்கனவு வந்து கலைத்தாலும்

உறக்கம் கலையாது!!!

—————————————————

error: Content is protected !!