UMUV20

Banner-5cedd3f6

20

‘எத்தன நாளாச்சு, பயபுள்ள தானா ஒரு மெசேஜ் கூட பண்ணல! ‘அண்ணன் காரனுக்குத் தான் கொழுப்புன்னா, இந்த விஷ்ணுபய அதைவிட மோசம்! இன்னிக்கி ஹாய் போட்டா நாளான்னிக்கி தான் ஹாய் போடறான். ரெண்டு முரட்டு பீசுங்ககிட்ட என்னை கோர்த்துவிட்டு படுத்துறே’

அண்ணாந்து வானத்தைப் பார்த்தபடி கண்களைச் சுருக்கி முறைத்தவள், ‘என்ன பண்ணுவே ஏது பண்ணுவேன்னு தெரியாது, ரிஷி என்கிட்டே பேசணும்! ப்ளீஸ் ஹெல்ப் பண்ணு! என் செல்லம்ல?’ செல்லமாக மிரட்டுவதைப் போல ஆரம்பித்து, கெஞ்சலுடன் கடவுளிடம் வேண்டுதலை வைத்தவள்,

மனதுக்குள் சகோதரர்களின் நீண்ட நாள் மௌனத்தை எண்ணிப் புலம்பியபடி அலுவலகத்திலிருந்து வீட்டை நோக்கி நடந்தாள்.

வழியில் வாங்கி வந்த காய்கறிகளை ஃபிரிட்ஜில் வைத்தவள், ரிஷியும், நந்தா வான ரிஷியும், விஷ்ணுவும் மட்டும் பார்க்கும் படி லூகாஸுடன் ஆஃபீஸ் பார்ட்டியில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ‘வித் மை ஹேண்ட்ஸம் செல்லக் குட்டி’ என்று ஸ்டேட்ஸில் வைத்தாள்.

சில நிமிடங்களில் ரிஷியிடமிருந்து ‘ஸ்டேட்டஸ டெலீட் பண்ணு!’ என்ற மெசேஜ் வர,

‘டுபுக்கு! எத்தனை மெசேஜ் அனுப்பியிருப்பேன்? படிச்சுட்டு வேணும்னே அமைதியா இருந்தேல? முடியாது’ என்று கறுவிக்கொண்டவள்,

‘ஏன்? முடியாது!’ என்று பதில் அனுப்ப, அதுவோ அவனுக்குச் சென்று சேரவில்லை. அவனை அழைத்துப் பார்க்க, அவன் மொபைலை அனைத்துவிட்டிருந்தான்.

‘அடப்பாவி இவ்ளோ கோவமா இருக்கியா?’ வியந்தவள், ‘இருந்துட்டு போ!’ என்று அசட்டையாகத் தோளைக் குலுக்கிவிட்டு, வேலையைத் தொடர்ந்தாள்.

ஆனால் அவள் மனமோ அவ்வப்போது ரிஷிக்கு ஃபோன் செய்துபார்க்கத் தூண்டிக்கொண்டே இருந்தது.

‘ஏய் மானங்கெட்ட மைண்ட் வாய்ஸே அவன் தான் ஃபோனை அணைச்சுப்போட்டு பிகு பண்ணுறான்ல, அப்புறம் எதுக்கு நீ வெக்கம் கெட்டு இப்படி பேசு பேசுன்னு உயிரெடுக்குற? அவனுக்கு தோணும் பொழுது பேசட்டும், நீ அதுவரை மூடிட்டு போய் தூங்கு’ தலையணையை முகத்தில் போட்டுக்கொண்டு குப்புறப் படுத்துக்கொண்டாள்.

மறுநாள் ஆஃபீஸ் சென்றும் வேலையில் நாட்டம் இல்லாமல் தவித்தாள், ‘டேய் இவ்ளோ கோவமாகாது. இப்படியா ஒரு நாள் முழுக்க மொபைலை அணைச்சு போடுவ?’ தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தவள், மாலை வீடு செல்லும் வேளையில் லூகாஸின் விடாப்பிடி தொல்லையால் அருகிலிருந்த காஃபி கடைக்குச் சென்றாள்.

தங்களுக்கு வேண்டியதை வாங்கி கொண்டவர்கள், பனி சூழ்ந்த சாலையில் மெல்ல ஆங்கிலத்தில் உரையாடியபடி நடக்க துவங்கினர்.

“ஏன் டல்லா இருக்க வர்ஷா?” லூகாஸ் அவள் முகத்தையே தீவிரமாகப் பார்க்க, வர்ஷா தான் ரிஷியிடம் விளையாடியதையும் அவன் கோபத்தையும் சொல்லி வருந்த,

“இதுக்கெல்லாமா ஃபீல் பண்ணுவ? ஒரு பையனா சொல்றேன், அவன் உன்னைக் கண்டிப்பா காதலிக்கிறான், என்னமோ காரணத்தால உன்கிட்ட அவன் மனசை மறைக்க முயற்சி பண்றான்.

அவனுக்கு கொஞ்சம் டைம் குடு வர்ஷா, கண்டிப்பா உன்கிட்ட வ(ந்)ருவான்”

“யாரு அவன் தானே? உனக்கு அவனை தெரியாது லூகாஸ், அவனாவது வர்றதாவது….ரிஷி!” பேசியபடி சாலையைக் கடக்க நின்றவள் முன்னே எதிர் சிக்னலின் அருகே ரிஷி நிற்பதைப் போலத் தெரிய, கண்களைக் கசக்கிக்கொண்டு மீண்டும் பார்க்க, அங்கே அவன் இல்லை!

“என்னாச்சு வர்ஷா?” லுகாஸ் அவள் தோளைப் பற்ற,

“நத்திங்” என்றவள், மௌனமாகவே அவனுடன் சாலையைக் கடந்தாள்.

“சரி சண்டே பாப்போம்” என்று லூகாஸிடமிருந்து விடைபெற்றவள், பேருந்தில் ஏறிக்கொண்டு திரும்ப அங்கும் தொலைவில் ஜீன்சும் ஜெர்க்கினும் அணிந்தபடி ரிஷிநந்தன் நிற்பது போலவே தோன்ற, தலையை உலுப்பிக்கொண்டு,

‘வர்ஷா உனக்கு பைத்தியம் முத்தி போச்சு!’ னு பெருமூச்சு விட்டவள், பாட்டுக்கேட்டபடி பயணத்தைத் தொடர்ந்தாள். வீடு சென்று சேர்ந்தவள் வேலை செய்ய மனமின்றி, ரிஷி, நந்தா இரு வாட்ஸ்அப் விண்டோவை திறந்து திறந்து மூடிக்கொண்டிருந்தாள்.

‘பிரெண்டா உன்னை உசுப்பேத்தவா, நந்தாவா உன் பொறாமையைக் கிளறவா? ஐயோ ஒரு நம்பர்ல கடலைப் போடணும்னாலே கஷ்டம், நான் ஒருத்தன் கூடவே ரெண்டு நம்பர்ல ரெண்டு விதமா பேசணும்! இப்படியொரு சங்கடமும் குழப்பமும் எந்தப் பொண்ணுக்கும் வரக் கூடாது ஆண்டவா’

ரிஷிநந்தனின் இரண்டு எண்ணிற்கும் ‘ஹாய்’ என்று அனுப்பியவள், மொபைலை எடுத்து வைத்துவிட்டு டிவியை ஆன் செய்தாள். மனம் அதிலும் நாட்டம் இல்லாமல் அல்லாட, பராக்கு பார்க்கப் பால்கனிக்கு சென்றாள்.

மாலையும் இரவும் இழையும் மெல்லிய வெளிச்சத்தில் சாலையோரம் பனிக்குவியல் ஒதுக்கிவைக்கப்பட்டிருக்க, எதிரே இருந்த மரங்களின் அருகே குழந்தைகள் சிலர் விளையாடிக் கொண்டிருக்கும் அழகைப் பார்த்திருந்தவளின் கண்களில் சற்று தள்ளியிருந்த மரத்தின் மீது சாய்ந்து தன்னையே பார்த்திருக்கும் ரிஷியைக் கண்டு உறைந்து நின்றாள்!

உற்று உற்றுப் பார்த்தவள் குழப்பத்துடன், கண்களை ஒருமுறை அழுத்தமாக மூடித் திறக்க இப்பொழுது ரிஷியின் தடம்கூட அங்கில்லை.

‘அடேய்! என்னடா ஹீரோயின்க்கு பாக்குற இடமெல்லாம் ஹீரோ தெரிவானாம் அந்த மாதிரி ஏதாவது ஆகிப்போச்சா? ச்சே ச்சே எனக்குக் கண்டிப்பா முத்திப்போச்சு! மெசேஜுக்கு கூடப் பதில் தராதா டுபுக்கு எனக்காக கனடாக்கு வருவானாக்கும்!’ செல்லமாகத் தன்னவனை நொடிந்து கொண்டவள், ஏக்கமாக மீண்டும் ஒருமுறை மொபைலை எடுக்க,

நந்தாவின், ‘ஹாய்! ரொம்ப நாளாச்சு எப்படி இருக்கே?’ என்ற மெசேஜில் துள்ளிக் குதித்தவள்,

‘நந்தா எப்படி இருக்கீங்க? விஷ்ணு எப்படி இருக்கான்? ஏன் ரெண்டு பேரும் எனக்கு ஒரு மெசேஜ் கூட பண்ணலை? அம்மா எப்படி இருக்காங்க?’ படபடவெனக் கேள்விகளை அடுக்கினாள்.

சிலநிமிடங்கள் கழித்தே அவன் பதில் வந்தது, ‘சாரி ஒரு கால்ல இருந்தேன். அம்மா சௌக்கியம், விஷ்ணு நல்லா இருக்கான். நீ எப்படி இருக்க?’ இயல்பாக அவன் கேட்க,

‘என்னன்னு சொல்லுவேன்? பாக்குற எல்லா இடத்துலயும் நீ தாண்டாத் தெரியுறேன்னு எப்படி சொல்லுவேன்!’ தவித்தவள், ‘ஏதோ இருக்கேன்’ என்று பதில் அனுப்பிட,

மறுநொடியே ரிஷியின் எண்ணிலிருந்து ‘ஹாய்’ வந்தது.

‘நந்தா ஏன் ரிஷியா மாறினான் இப்போ?’ குழப்பத்துடன் அவனுக்குப் பதிலனுப்பி வைத்தாள்.

உடனே ரிஷியின் கால் வந்தது.

அவன் “எப்படி இருக்கே?” என்று இயல்பாகக் கேட்க, அவனிடமும் “ஏதோ இருக்கேன்” என்ற பதிலையே தந்தாள்.

“என்னாச்சு மா? ஏதாவது உடம்பு சரியில்லையா?” அவன் குரலில் தெரிந்த ஆதங்கத்தில், “மனசுதான் சரியில்ல ரிஷி” என்று வேகமாகச் சொல்லிவிட்டவள் உதட்டைக் கடித்துக்கொள்ள,

“என்ன ஆச்சு இப்போ? லூகாஸ் ஏதாவது சொன்னானா? என்ன செஞ்சான் அவன்?” அவன் குரல் சட்டெனக் கடுமை கூடியதில், பதறி, “இல்ல இல்ல! அவன் எங்க இங்க வந்தான்?” வேகமாக மறுத்தாள்.

“பொய் சொல்லாத வர்ஷா. உன் குரலே சரியில்ல! என்ன செஞ்சான் அவன்?” கோவத்தில் மொபைலை அழுத்தமாகப் பிடித்துக்கொண்டான் ரிஷி.

“உங்களுக்கு திட்டணும்னா நீங்க நந்தாவதான் திட்டனும்” அவள் சொல்ல, அதிர்ந்தவன், “நா என்ன…ஐ மீன் நந்தா என்ன பண்ணான்?” என்று குழம்ப,

‘செஞ்சதெல்லாம் அவன் தானே? சும்மா இருந்தவளை இம்ப்ரெஸ் பண்ணி பைத்தியமா திரியவிட்டுட்டு இருக்கான்” அவள் சொன்னதில் சிரித்துவிட்டவன் அமைதியாக இருக்க,

“நந்தாவை சொன்னா மட்டும் சைலெண்டா இருங்க என்ன? இன்னிக்கி பைத்தியக்காரியாவே ஆக்கிட்டான் தெரியுமா? ரோட் சிக்னெல்ல, பஸ் ஸ்டாப் பக்கத்துல, ஏன் இங்க வீட்டு எதிரே இருந்த பார்க்கல கூட நந்தா நிக்கிற மாதிரியே இருந்துது தெரியுமா?

இப்போ கூட என்னமோ அவன் பால்கனில நின்னுகிட்டு, என்னை பாக்குற மாதிரியே இருக்கு” என்றவள் கனவுலகில் சஞ்சரித்தபடி, “எங்க பாத்தாலும் அவன் தான் தெரியுறான். என்ன செஞ்சாலும் அவன்தான் மனசுக்குள்ள வாரான்” என்று உருக,

அவள் சொல்லச் சொல்ல காற்றில் மிதப்பதைப் போல உணர்ந்தவன், ‘நானும் இப்படித்தானே இருக்கேன் வர்ஷா!” மனதில் அவளிடம் சொல்ல, அதை அறியாதவளோ, தான் பாட்டுக்குத் தொடர்ந்து கொண்டிருந்தாள்.

“காலங்கார்த்தால கண்ணை திறந்ததிலிருந்து தூங்குறவரை, அவன் இப்போ என்ன செஞ்சுகிட்டு இருப்பான், சாப்பிட்ருப்பானா ஆஃபீஸ்ல இருப்பானா, வண்டி ஓட்டிக்கிட்டு இருப்பானா, பத்திரமா வீட்டுக்கு ரீச் ஆனானா, விஷ்ணுக்குட அவங்க அம்மா கூட என்ன பேசி சிரிச்சுட்டு இருப்பான்? டிவில எந்த ப்ரோக்ராம் பாப்பான்? இப்படி என்னென்னமோ அவனை பத்தியே மனசு ஓடுது.

உலகமே அவனை சுத்திதான் சுழலுது ரிஷி.

இதெல்லாம் உங்களுக்கு எங்க புரிய போகுது? நேத்து ஏன் மொபைலை அணைச்சு போட்டீங்க?” காதலில் உருகிக்கொண்டிருந்தவள் சட்டெனக் கடிந்துகொள்ள,

‘உன்னை அவன் கூட பாக்க பிடிக்கலைன்னு எப்படி சொல்லுவேன் வர்ஷா’ கண்களை மூடிக்கொண்டவன் அமைதியாகவே இருக்க,

“விடுங்க நந்தாவே என்னைப்பத்தி நினைக்கிறது இல்லை. உங்ககிட்ட எதிர்பாக்குறது தப்புதான்” அவள் படபடக்க,

‘மறந்தா தானே நினைக்க? எனக்கும் இப்படித்தானே இருக்கு?’ பேச்சின்றி அவன் இருக்க,

‘இங்க ஒருத்தி ஆசையா பேசிகிட்டு இருந்தா, தூங்கிட்டு இருக்கான் பாரு!’ கடுப்பானவள், “இருக்கீங்களா?” அதட்ட,

“இருக்கேன்” உணர்ச்சியின்றி அவன் சொல்ல,

“என்னமோ போங்க, நீங்களும் கண்டுக்கல நந்தாவும் கண்டுக்கல, இலவச இணைப்பா விஷ்ணுவும் கண்டுக்கல! எல்லாரும் பேசிவச்சுக்கிட்டு என்னை படுத்துறீங்க” அலுத்துக்கொண்டவள்,

“எனக்கு பொழுதும் போகல, பிசியா இருந்தா உங்க எல்லாரையும் பத்தி யோசிச்சு மனசை குழப்பிக்காம இருப்பேன்” வருந்த.

“எங்கேயாவது வெளில போயிட்டு வாயேன். நாளைக்கு சனிக்கிழமை தானே?”

“போகணும் ரிஷி. நாளைக்கி இங்க இருக்க மெட்ரோபொலிஸ் மாலுக்கு போலாம்னு இருக்கேன் லஞ்சுக்கு அப்புறம்” என்றவள், அழைப்பு மணி ஒலிக்க, “லைன்ல இருங்க ரிஷி. யாரோ வந்துருக்காங்க” என்றபடி கதவருகில் சென்று,

வாசலில் நிற்பவரைத் திரையில் காட்டும் வீடியோ டோர் ஃபோனில் பார்க்க, நின்றிருந்தான் லூகாஸ்!

“லூகாஸ் வந்துருக்கான் ரிஷி, கைல பொக்கே (பூங்கொத்து) வச்சிருக்கான். சரி அப்புறமா கூப்பிடுறேன்” என்றபடி கதவைத் திறந்தவள், லூகாஸிடம் அமைதியாக இருக்கும்படி செய்கை செய்து, அழைப்பைத் துண்டிக்காமல் ரிஷியின் பெயரைத் திரையில் காட்டி கண்ணடிக்க,

அவள் செய்கையை உணர்ந்தவன், புரிந்ததைப் போல் கட்டைவிரலைக் காட்டியபடி அவள் வீட்டிற்குள் நுழைந்தான்.

ரிஷி கேட்பது தெரிந்தும், அழைப்பைத் துண்டித்ததாக நடித்தபடியே வர்ஷா லூகாஸ் உரையாடல் துவங்கியது.

“என்ன அதிசயம்?” அவள் போலியாக ஆச்சரியப்பட,

“சும்மா உன்னை பார்க்கத்தான் டியர்” என்றான் லூகாஸ் கொஞ்சலாக. லூகாஸின் குரலைக் கேட்ட நொடியே ரிஷியின் கைமுஷ்டி இறுகியது.

“பிசியா இருந்தியா?” லூகாஸ் கேட்க, “இல்லை பிரென்ட் கிட்ட பேசிக்கிட்டு இருந்தேன். கட் பண்ணிட்டேன்” என்றாள் அவள்.

“லைன்லதா இருக்கேன். அவனைத் துரத்து, எதுக்கு வந்தான் அவன். வர்ஷா நான் பேசுறது கேக்குதா இல்லையா?” ரிஷியின் குரல் அவளுக்குக் கேட்கவில்லை.

“என்ன ஸ்பெஷல் லூகாஸ்? இவ்ளோ பூ?”

“அழாகான பூவை பார்க்க பூக்களோட வந்தேன்” என்று லூகாஸ் குழைய,

“அடேய் வெளில போடா! நான் இருக்கும்போதே அவகிட்ட வழியிரியா!” ரிஷி ஆங்கிலத்தில் கத்தியது சன்னமாக வார்ஷாவிற்கு கேட்க, மொபைலின் ஒலியளவைக் குறைத்தவள், ‘இன்னும் பேசு’ என்று லூகாஸுக்கு செய்கை செய்ய,

“ஹே பியூட்டி! என்கூட இந்த வீக்னெட் டின்னர் டேட்க்கு வந்து என்னை கௌரவிப்பாயா?” லூகாஸ் சொல்ல, தன் அறையில் சோஃபாவை எட்டி உதைத்தவன்,

“நோ சொல்லு! நோ சொல்லு!” என்று கத்த,

வர்ஷாவோ, “கண்டிப்பா, இத்தனை அழாகான பையன் இவளோ கியூட்டா கேட்டு எப்படி மறுக்க முடியும்? கண்டிப்பா வரேன்” என்று சொல்ல, அழைப்பைத் துண்டித்துவிட்ட ரிஷி, கோவத்தையும் ஏமாற்றத்தையும் தாங்கமுடியாமல் இறுகி அமர்ந்துவிட்டான்.

ரிஷியின் செய்கையை ரசித்தவள், விளையாட்டைக் கைவிட்டு லூகாஸிடம் பேசத்துவங்கினாள்.

மறுநாள் ரிஷியிடம் சொன்னதுபோலவே மதிய உணவை உண்டவள், மாலிற்கு சென்று, கடைகளை வேடிக்கை பார்த்தபடி நடந்தாள்.

‘எல்லாரும் ஜோடி ஜோடியா சுத்துறாங்க! எனக்கு மட்டும் ஏன் தான் மொக்கையா இருக்கோ எப்போவும்’ நொந்தபடியே நடந்தவள். மாலின் மையப்பகுதியில் நின்றுகொண்டு, மாலை புகைப்படமெடுக்க,

பிரமாண்ட தூண் ஒன்றிற்கு அருகில் கையில் காஃபீ கப்புடன் ரிஷியைப் பார்த்தவள், “நந்தா!” என்று கத்தியபடி அவனை நோக்கி நடக்க, எங்கிருந்தோ வந்து அவள்மேல் மோதிய குழந்தையில் தடுமாறியவள் நிமிர்ந்து பார்க்க, ரிஷி அங்கில்லை!

‘போச்சு! இன்னிக்கும் ஆரம்பிச்சுடுச்சு!’ தலையைப் புன்னகையுடன் உலுப்பிக்கொண்டவள் மீண்டும் புகைப்படமெடுக்கத் துவங்க, தூணிற்குப் பின்னால் நெஞ்சைப் பிடித்தபடி நின்றிருந்தான் ரிஷிநந்தன்!

‘ஜஸ்ட் மிஸ்! ஆண்டவா காப்பாத்திவிட்ட’ மேலே பார்த்து நன்றி சொன்னவன், சில்லென்ற காஃபீயை ஸ்டராவில் உறிஞ்சியபடி மெல்ல எட்டிப்பார்க்க, வர்ஷாவோ, அவ்விடத்தைத் தாண்டிச் சென்றுகொண்டிருந்தாள்.

அவன் கைப்பேசி வைப்ரேட் ஆக அதை எடுக்க,

‘எங்க பார்த்தாலும் நந்தாதான் தெரியுறான் ரிஷி’ என்று வர்ஷாவின் மெசேஜை படித்தவன், புன்னகைத்துக்கொண்டான்.

மாலிலிருந்து வெளியேறிச் சாலையை வேடிக்கை பார்த்தபடி நடந்தவளைப் பின்தொடர்ந்தவன், வர்ஷாவின் அழைப்பு வர, “சொல்லு மா” என்றான் சுற்றுத்தொலைவில் சென்று கொண்டிருந்த வர்ஷாவின் முதுகு வரை நீண்ட கூந்தலை ரசித்தபடி.

“எனக்கு நந்தாவை பார்க்கணும் போல இருக்கு ரிஷி, ரொம்ப மிஸ் பண்றேன்” என்று வருந்த,

“என்னாச்சு வர்ஷா, மிஸ் பண்ணா ஃபோன் பண்ணிப்பேசு”

“இல்ல, வேணாம்” என்றவள், சிறிய மௌனத்திற்குப் பிறகு “அவனை தினமும் பார்குறவங்க, பேசிப் பழகுறவங்க எல்லாரும் எவ்ளோ கொடுத்து வச்சவங்கல? பொறாமையா இருக்கு ரிஷி.

அவன் வீட்டுல ஒரு குட்டி பூச்சியாவது இருந்திருக்கலாம். அவனை பாத்துகிட்டே இருந்திருப்பேன். பறவையா இருந்தா கூட நினைச்சபோது பறந்து போயி பார்த்திருப்பேன். பொண்ணா பொறந்து வேஸ்ட்!”

கண்களை மூடிக்கொண்டவள் நீண்ட சுவாசத்திற்குப் பிறகு, ஏக்கமாகத் தொடர்ந்தாள்,

“அவனை பாக்காம இருந்தா மனசு மாறும்னு நினைச்சேன். அவன் காதலை ஏத்துக்காட்டி பரவால்ல வாழக்கையை தனியா ஓட்டிடுடலாம்னு நினைச்சேன். முடியல ரிஷி.

மனசு மாற எங்கயான போனாக்கூட, எங்க பார்த்தாலும் ஜோடியா இருக்காங்க, என் நந்தா என்கூட இருந்தா நானும் அவன் கையைப் பிடிச்சுக்கிட்டு நடப்பேன். இவ்ளோ அழகான ஊரு ஆனா அவன் பக்கத்துல இல்லாம எதுவுமே ரசிக்க முடியல ரிஷி. எனக்கு என் நந்தா வேணும்போல இருக்கு…” பேசிக்கொண்டே போனவள் குரல் உடைய,

ஓடிச்சென்று அவளை ஆரத்தழுவித் தேற்ற நினைத்தவன், ‘ஒரே ஒரு நாள்’ என்று தன்னை கட்டுப்படுத்திக்கொண்டான்.

“எதுவும் யோசிக்காம ஃப்ரீயா விடுமா”

“என்னமோ போங்க, சரி அப்புறம் பேசறேன்” அழைப்பைத் துண்டித்தவள், புத்தகக் கடைக்குள் நுழைந்தாள். சில நிமிடங்கள் புத்தகங்களைப் பார்த்தவள் சிலவற்றை எடுத்துக்கொண்டு பில்லிங் கவுண்டருக்கு வர, அவள் கவருடன், மெல்லிய ரிப்பன் சுற்றப்பட்ட புத்தகமொன்றைக் கொடுத்தார் கேஷியர்.

வர்ஷா விழிக்க, “கிப்ட் ஃப்ரம் எ சீக்ரெட் அட்மைரர்” (ரகசிய ரசிகனின் பரிசு) என்று அந்தப் பெண் புன்னகைக்க, சந்தேகமாகவே “தேங்க்ஸ்” என்றவள், குழப்பத்துடனே கடையை விட்டு வெளியேறினாள்.

‘எவன்டா எனக்கு ரசிகன்?’ குழப்பத்துடன், விழித்தவள் லூகாஸின் ஃபோன் கால் வர, அதைக் கவருக்குள் போட்டுக்கொண்டு பேசியபடி வீட்டுக்குப் புறப்பட்டாள்.

அவள் பேருந்தில் ஏறிச்செல்வதைத் தொலைவிலிருந்து பார்த்து நின்ற, அவள் ரகசிய ரசிகன் ரிஷிநந்தன் “ஒரே ஒரு நாள் தான் டியர்” என்று புன்னகைத்துக்கொண்டான்.

மொபைலில் மதுவுக்கு மெசேஜ் செய்தபடி வீட்டு வாயிலை அடைந்தவள், கதவைத் திறக்க நிமிர, கண்கள் விரிந்தாள். கதவில் மேல் வாழ்த்தட்டை ஒன்று ஒட்டியிருந்தது.

சுற்றும் முற்றும் பார்த்தவள், தயக்கத்துடன் அதைப் பத்திரமாக எடுத்துப் பிரிக்க,

‘யு லுக் வெரி பியூட்டிஃபுல் டுடே!’

என்றிருக்க, ஏனோ பயம் தொற்றிக்கொள்ள வீட்டிற்குள் நுழைந்து வேகமாகக் கதவை நாளிட்டுக் கொண்டாள்.

இதயம் படபடவென அடித்துக்கொள்ள, வேகமாகத் தண்ணீரைக் குடித்தவள், சமையல் மேடையைப் பிடித்துக்கொண்டு நிற்க, அழைப்புமணி ஒலிக்க, பயத்தில் உடல் சில்லிடுவதை உணர்ந்தவள், ‘பயப்படாதே! நீ ப்ளூ பெல்ட்!’ எச்சிலை விழுங்கியவள், இருப்பதிலேயே பெரிய கத்தியை எடுத்துக்கொண்டு,

வீடியோ டோர் ஃபோன் வழியே பார்க்க அங்கே யாருமில்லை! வேகமாகக் கதவைத் திறந்தவள் கையில் கத்தியுடன் ஆங்கிலத்தில், “யார்டா அது? ஒளிஞ்சு விளையாடுறியா? தைரியம் இருந்தா முன்னாடி வாடா” ஒரு அடி எடுத்துவைக்க, காலில் எதோ தட்டுப்பட, வீலென்று அலறிவிட்டாள்.

நெஞ்சைப் பிடித்தபடி அவள் குனிய அங்கோ அழகாகப் பேக் செய்யப்பட்ட பரிசொன்று இருந்தது, அதை மெல்ல எடுத்துப் பார்க்க,

‘ஹே பியூட்டி! உனக்கு இந்த ஸ்கார்லெட் ஸ்வெட்டர் அழகா இருக்கு’

என்று இருக்க, ‘தமிழ்’ புருவம் சுருக்கியவள், லிப்ட் வரும் ஓசை கேட்டு அலறியபடி மீண்டும் வீட்டிற்குள் புகுந்துகொண்டாள்.

“எவனோ அட்ரஸ் மாறி அனுப்பியிருப்பானோ?” முணுமுணுத்தபடி பார்சலை திருப்பித் திருப்பிப் பார்த்தவள், “அந்த புக்?” வேகமாகக் கவரிலிருந்து வண்ணக்காகிதம் சுற்றப்பட்டிருந்த புத்தகத்தை எடுத்தாள்.

காகிதத்தைப் பிரிக்க, “டைரி?” தயக்கத்துடன் அதைப் பிரித்தாள்.

துண்டு காகிதத்தில், “16/09” என்றிருக்க, வேகமாகச் செப்டெம்பர் பதினாறாம் தேதிக்குப் பக்கத்தைத் திருப்பினாள்.

“இருந்தாலும் ஒரு பெண்ணுடைய குரலுக்கு இவ்வளவு சக்தி இருக்க கூடாது!”

என்றிருக்க அடுத்து ஏதாவது இருக்கிறதா என்று பார்க்க, வேகமாகப் பக்கங்களைத் திருப்ப,

அங்கங்கே காலி பக்கங்களுக்கு இடையே,

“உன்னை பார்க்கும்போதெல்லாம் வரும் இந்த உணர்வுக்கு என்ன பெயர் வைக்க?”

“நீ என்னவளாக இல்லாத போதும், உனை இழக்க ஏனோ மறுக்கிறேன்”

“தினமும் உன் இதழைத் தொடும் காபி கப்பாக நான் மாறக்கூடாதா!”

“நீ அடிக்கடி தீண்டி தீண்டி தீரா இன்பம் பெரும் உன் தொடுதிரையாய் நான் இருக்க வேண்டும்”

ஆங்காங்கே இப்படி பல ஒற்றை காதல் வாக்கியங்களிருக்க, தலையைச் சொரிந்துகொண்டவள்,

“சத்தியமா எவனோ ராங் அட்ரஸ் தான்! நம்மளையெல்லாம் ஒரு பயலும் ரசிச்சு காதலிச்சு கிப்ட் அனுப்ப வாய்ப்பில்ல” மேலும் டைரியை படிக்காமல் மூடியவள், பரிசு பெட்டியைத் திறக்க, கைபேசியின் வடிவில் அழகிய பஞ்சடைத்த பொம்மையும், அதன் மேல் சின்ன வண்ண காகிதத்தில்,

“உனை மீட்டு உன்னில் வீழ்ந்தேன்”

“கொக்கமக்கா! நேரா சொன்னாலே ஒரு மண்ணும் புரியாது இதுல பிட்டுபிட்டா சொன்னா என்ன விளங்கும்?” முணுமுணுத்துக் கொண்டவள்,

‘டேய் ரிஷி! நியாயமா இதெல்லாம் நீ செஞ்சா நான் ரசிச்சுருப்பேன், பாரு எவனோ என்னை கலாய்க்கிறான்! எரும எரும போனாவது பண்ணுடா என் நந்தாவா ப்ளீஸ்!’ ஏக்கம் தொண்டையை அடைக்க, அனைத்தையும் அதே பிரிந்திருந்த பெட்டியில் வைத்து , சோஃபாவில் சுருண்டு படுத்தவள், உறங்கியும் போனாள்.

விடாது ஒலித்த அழைப்பு மணியின் ஒலியில் உறக்கம் கலைந்தவள், கண்களைக் கசக்கியபடி வீடியோ வழியே யாரென்று பார்க்காமலே கதவைத் திறக்க,

முகமெங்கும் புன்னகையுடன் கையில் கவருடன் நின்றிருந்தான் நந்தா!

கண்களைச் சாசர்போல் விரித்தவள், “போடா இதே வேலையா போச்சு! அங்க அங்க தெரிஞ்ச, இப்போ பேச வேற செய்றியா? இந்த லவ்வ பண்ணிட்டு நான் படுற அவஸ்தை!” முணுமுணுத்துக்கொண்டவள், அவன் கிளுக்கென்ற சிரிப்பில் அண்ணாந்து அவன் முகம் பார்த்து,

“சிரிடா சிரி! ஏன் சிரிக்க மாட்ட?” வாயைக் குவித்து வேகமாக மூச்சைவிட்டவள், கதவைச் சாத்திவிட்டு, கொட்டாவி விட்டபடி நேரத்தைப் பார்க்க, மணி பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது!

மீண்டும் அழைப்பு மணி ஒலிக்க, தலையில் அடித்துக்கொண்டு, கதவைத் திறந்தாள்.

“ஹே வர்ஷா! என்ன இது உன்னை பார்க்க வந்தா இப்படி மூஞ்சில அடிச்ச மாதிரி கதவை சாத்தற!” அவன் புன்னகைக்க. எதோ பேச வாயெடுத்தவள் உதட்டில் ஒற்றை விரலை வைத்தவன், “ஷ்ஷ்ஷ்” சந்தம் போடாதே என்று வாயசைத்தபடி அவள் வீட்டிற்குள் நுழைய, வர்ஷாவோ அதிர்ச்சியில் விக்கித்து நின்றுவிட்டாள்!

“அங்கேயே தான் நிக்க போறியா?” டேபிள் மீது கவரை வைத்தவன் கேட்க, வேகமாக உள்ளே நுழைந்தவள், மெல்ல அவனை ஒற்றை விரலால் தொட்டுப் பார்க்க,

“கனவெல்லாம் இல்ல! அதான் நீ முணு முணுத்ததே கேட்டுச்சி” சிரித்தபடி சென்று வாயிற்கதவைச் சாத்திவிட்டு வந்தான் ரிஷிநந்தன்.

“கவரை பிரித்தவன் அழகிய கேக் ஒன்றை மேஜையில் வைத்துவிட்டு, சமையலறைக்குச் சென்று கத்தியை எடுத்துவந்தான், அதைக் கேக்கின் பக்கத்தில் வைத்தவன் தன் கைப்பேசியை ஓரிடத்தில் கேமெரா செட் செய்து வைத்தான். வர்ஷாவோ அவனையே உணர்ச்சியின்றி பார்த்திருந்தாள்.

“ஹோய்! எவ்ளோ நேரம் அங்கேயே நிப்ப? வா வா” அவள் கையைப் பிடித்து மேஜைக்கு எதிரே நிற்கவைத்தவன், “இங்க இப்படி நில்லு, கத்திய எடு, நான் சொல்லும்போது கட் இட்” என்று சொல்லச் சாவிக்குடுத்த பொம்மைபோலச் செய்தவள்,

“நவ்!” நந்தாவின் ஜாடையில் கத்தியைக் கேக் வரை எடுத்துச் சென்றவள் அப்படியே நிறுத்த, அவள் அருகில் வந்தவன், அவள் கையைப் பற்றி,

“ஹேப்பி பர்த்டே டியர்” என்று அவள் காதில் மென்மையாகச் சொன்னபடி கேக்கை வெட்டினான்! தன் உயரத்திற்குக் குனிந்து கேக்கை ஊட்ட வந்தவனைக் கண்கலங்கப் பார்த்தவள், கேவலுடன் கையால் வாயைப் பொத்திக்கொண்டு சோஃபாவில் அமர்ந்துவிட்டாள்.