UMUV3

Banner-49adf0b8

UMUV3

அத்தியாயம் 3 

 

ரிஷியின் அறிவுரைப்படி முடிந்தவரை ஆதேஷை கண்டுகொள்ளாமல் வேலையில் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தாள் வர்ஷா.

அன்று அவள் தினமும் மதிய உணவிற்காகச் செல்லும் உணவகத்தில் தன்னை சந்திக்கும்படி ஆதேஷ் மெசேஜ் செய்திருந்தான். என்னவாக இருக்குமென்று குழம்பியவள், சில நிமிடங்கள் கழித்தே சரியென்று பதில் அனுப்பினாள்.

ஆதேஷின் வருகைக்காகக் காத்திருந்தவள் தன் முன்னே இருந்த தண்ணீர் கிளாஸ் விளிம்பைக் கைகளால் வருடியபடி யோசனையில் ஆழ்ந்திருந்தாள்.

அருகில் கேட்ட தொண்டை செருமல் சத்தத்தில் ஆதேஷின் வருகையை நிமிர்ந்து பாராமலே உணர்ந்தவள், “உட்காருங்க” என்று மட்டும் சொல்ல, அவளை முறைத்தபடி அவளெதிரே அமர்ந்தவனோ,

“நீ எல்லாத்தையுமே வேணும்னே தானே பண்றே?” என்று கோவமாகக் கேட்க, எதுவும் விளங்காமல் அவனை நிமிர்ந்து பார்த்தவள், “நான் என்ன பண்ணினேன்?” என்று விழிக்க,

“எப்போதும் ஏன் என் கண்ணு முன்னாடியே திரியுற? மறுபடி என் மனசைக் கலைக்க நினைக்கிறியா? கண்டிப்பா நடக்காது!”

“ப்ளீஸ் நான் எதுமே பண்ணலையே! நீங்க ஏதோ தப்பா நினைக்கறீங்க” அவளைக் கைகாட்டி நிறுத்தியவன்,

“வர வர என்னால நிம்மதியா வேலை செய்யக் கூட முடியலை. உன்ன பார்த்தாலே கடுப்பா இருக்கு” எனக் கத்த துவங்கினான்.

அவர்கள்பின் இருக்கையில், வர்ஷாவின் முதுகுக்குப் பின்னே அமர்ந்திருந்த ரிஷியின் காதில் ஆதேஷின் வார்த்தைகள் விழுந்தன. அவன் முன்னே இருந்த விஷ்ணுவிடம் மெல்லிய குரலில்,

“இந்த பொண்ணுக்கு சூடு சொரணையே இல்லையா, ஏன் இப்படி அமைதியா இருக்கா?’ என்று புருவம் சுருக்க, லேசாக எட்டி ஆதேஷின் முகத்தைப் பார்த்த விஷ்ணுவோ,

“ஆள் பாக்க சுமார் தான், இல்ல பாக்க கேவலமா இருக்கான்” என்று வாயசைத்துவிட்டு சிரித்துக்கொண்டு, “பேசாம கம்ப்ளைன்ட் செஞ்சுடுவோமா?” என்று கேட்க,

ரிஷியோ, “இவனையெல்லாம் பேசி சரி கட்ட முடியாது. அடிச்சு மூஞ்சிய உடைச்சா தான் சரி வரும்” என்றபடி ஸ்லீவை மடக்க, கண்கள் விரிந்த விஷ்ணு வேண்டாமென்று தலையசைக்க. ரிஷி எழும்முன்னே, எழுந்த ஆதேஷ் வேகமாக உணவகத்தை விட்டு வெளியேறினான்.

“பொழச்சான்” என்று விஷ்ணு கிசுகிசுக்க, ரிஷி தன் பின்னால் அமர்ந்திருக்கும் பெண் விசும்பும் சத்தத்தில் திரும்ப, அவன் கண்ணில் பட்டதென்னவோ, காலி டிஷ்யூ டப்பாவைத் துழாவிக் கொண்டிருந்தவளின் கைகள் தான்.

நீண்ட மூச்சொன்றை விட்டவன், எழுந்து தங்கள் மேசையிலிருந்த டிஷ்யூ டப்பாவை அவள் முன்னே நகர்த்த, தலைநிமிராமல் அதைத் தன் பக்கம் இழுத்துக்கொண்டவள், மெல்லிய குரலில் தேம்பலுடன் ”தேங்க்ஸ்” என்பதைப் போல் எதையோ சொல்ல,

“ம்ம். கூல்டவுன் மிஸ். டேக் கேர்” என்றவன், மீண்டும் தங்கள் மேசையில் அமர்ந்துகொண்டான்.

முடிந்தவரைக் கண்ணீரைத் துடைத்துக்கொண்ட வர்ஷா, இரண்டு கிளாஸ் தண்ணீரைப் பருகிவிட்டுக் கிளம்பிவிட்டாள்.

“ச்சே பாவமா இருக்குடா நாம வந்தபோது வந்தா, சாப்பிடாமலே கிளம்பிட்டா” விஷ்ணு வெளியே சென்று கொண்டிருந்த வர்ஷாவை பார்த்தபடி சொன்னான்.

அவனை உற்றுப் பார்த்த ரிஷி, “புரியுதா இப்போ ஏன் எனக்கு லவ்னா அலர்ஜினு?” என்று கேட்க,

விஷ்ணு, “நீயேன் அந்த சைக்கோவ பாக்குற? அந்த பொண்ணோட பொறுமையை பாரேன்”

“நான்சென்ஸ்! பொறுமையா இருந்தே இப்போ பொருமிக்கிட்டு இருக்கவளை பார்த்தும் உனக்கு எப்படி இப்படியெல்லாம் தோணுது?”

“யாழ்ஸ ஏன்டா இதுல இழுக்கிற?” விஷ்ணு புருவம் சுருக்கினான்.

“பைத்தியக்கார தனமா காதல் கத்தரிக்காய்ன்னு போயிட்டு இப்போ அவன் கூட வாழவும் முடியாம பிரியவும் முடியாம சிக்கி அவஸ்த்தை பட்டுக்கிட்டு இருக்கா. அவனுக்கெல்லாம் அவ்ளோ அருமையான பொண்ணு அமைஞ்சுருக்கு! எப்போ கோவம் கைமீறிப் போய், அந்தப் பரதேசியைத் தூக்கிப்போட்டு மிதிக்கப் போறேன்னு தெரியலை” கடுகடுத்தவன் பாதி உணவில் எழுந்து கைகழுவச் செல்ல, வேறு வழியின்றி அவனைப் பின்தொடர்ந்தான் விஷ்ணு.

ரிஷியின் பின்னே பைக்கில் ஏறிக்கொண்டவன், “இருந்தாலும் நீ பேசினா யாழ்ஸ் சந்தோஷ படுவாள்ல?”

மறுப்பாகத் தலையசைத்த ரிஷி “கண்டிப்பா நான் பேசினா அந்த சைக்கோ சந்தேகப் பட்டு அவகிட்ட சண்ட போடுவான்”

“பேசாம அவனை விட்டு வரச் சொல்லிடலாம். வேற கல்யாணம் செஞ்சு வைப்போமா?”

“போடா! நான் எத்தனையோ தடவை சொல்லிட்டேன், நான் நல்ல பையனா பாக்குறேன்னு. பைத்தியம் மாதிரி அவனை விட்டு இருக்க முடியாதுன்னு மட்டுமே சொல்றா. அப்புறம் என்ன பண்ண முடியும்?” என்றபடி ரிஷி, கோவமாக ஆக்ஸிலேட்டரை உயர்த்த, அவனை தட்டி சமாதானம் செய்த விஷ்ணு,

“பெஸ்ட் ஐடியா! பேசாம வீடு புகுந்து தூக்கிடுவோமா?” குறும்பாய் புருவங்களை உயர்த்த,

“யோசிக்கலைன்னு நினைக்கிறியா?” என்ற ரிஷி, சற்று சகஜமான குரலில், “பாப்போம் பழையபடி அடிச்சு காய படுதின்னா அவனை அடிச்சுப்போட்டு அவளைத் தூக்கிக் கொண்டுபோய் அவ அம்மா வீட்ல விட்ருவோம்”

“ஐயோ நான் விளையாட்டுக்குச் சொன்னேன்” பதறிய விஷ்ணு,

“நீ பாட்டுக்கு உன் பெஸ்ட் பிரெண்ட காப்பாத்துறேன்னு ஏதான செஞ்சுவைக்காத, அப்புறம் பெரிப்பா என்னை பிச்சுடுவார் பிச்சு. என்னமோ அப்பாவி பையன நான் தான் கெடுத்த்தாப்ல!” என்று சிரிக்க, பதிலுக்குப் புன்னகைத்த ரிஷி,

“இதுக்கு தான் ஃபோன் பண்ண மாட்டேன்னு சொன்னேன். வேணும்னா நீ பேசிக்கோ. நீ பேசினா அந்த சைக்கோ ஒன்னும் சொல்லாது” என்றபடி வண்டியைக் கிளப்பினான்,

“பாப்போம்” என்ற விஷ்ணு யோசனையில் ஆழ்ந்தான்.

ரிஷியின் நெருங்கிய பள்ளித் தோழியும், விஷ்ணுவின் சீனியருமான யாழினி. பெற்றோர்களை வற்புறுத்திக் காதலித்தவனையே திருமணம் செய்துகொண்டு, கணவனின் சந்தேகத்திலும் தாழ்வு மனப்பான்மையிலும் தினம் தினம் வதைபட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

அவள் தேர்வு தவறென்று பலமுறை ரிஷி எடுத்துச்சொன்ன போதிலும் காதலைக் காரணம் காட்டி அவனை அடக்கிவிட்டாள். தோழியின் நிலை தெரிந்தும் உதவ முடியாமல் தவிக்கும் ரிஷி, நாளடைவில் காதல், திருமணம் இரண்டையும் அடியோடு வெறுக்கத் துவங்கிவிட்டான்.

விஷ்ணுவை அவன் அலுவலகத்தில் இறக்கிவிட்டவன், “ஈவினிங் கொஞ்சம் வேலை இருக்கு, நீ நம்ம ஆபீசுக்கு வந்துடு. அப்புறம் சேர்ந்து கிளம்பலாம்”

சரியென்று தலையசைத்துத் திரும்பிய விஷ்ணுவை அழைத்தவன், “எப்படி இருக்கான்னு கேட்டுக்கோ” என்று சொல்ல,

“ம்ம்” என்று புன்னகைத்த விஷ்ணு சென்றுவிட, சில நொடி பைக் பெட்ரோல் டேங்கை வெறித்த ரிஷி தன் அலுவலகத்திற்குக் கிளம்பினான்.

மாலை மதுவுடன் கடைக்குச் சென்ற வர்ஷா, ரிஷி சொன்ன மாடல்கள் சிலவற்றைப் பார்த்து, வண்டி ஒன்றை புக் செய்தாள்.

இரவு உணவின் பொழுது வர்ஷாவை சீண்டிக் கொண்டிருந்தாள் மது, “சும்மா துணி வாங்கப் போனாலே திருதிருன்னு முழிக்கிறவ, ஒரு மணிநேரத்துல வண்டியை டிசைட் பண்ணி புக்கும் பண்ணிட்டா தெரியுமா பாட்டி” என்று வியப்பாய் சொல்ல,

“எப்படி நல்ல புத்தி வந்தது?” என்றபடி வர்ஷாவின் தட்டில் சப்பாத்தியை வைத்தார் பாட்டி.

“பாய் ஃபிரென்ட் சொல்லிருப்பான்” என்று மது சொல்ல, வர்ஷா அதிர்ச்சியில் விழிகள் விரிய, சிரித்தபடி மது குனிந்துகொண்டாள்.

“யார்டீ அது?” பாட்டி பெண்கள் இருவரையும் முறைக்க,

“அதெல்லாம் ஒன்னுமில்ல பாட்டி, அவ சும்மா வம்பு வளக்குறா. என் ஃபிரென்ட் சில மாடல்ஸ் சொன்னதை வச்சு செலெக்ட் பண்ணேன்” சமாளித்தவள், வேகமாகச் சப்பாத்தியை வாயில் அடக்கிக்கொண்டாள்.

“என்னமோ நல்ல வண்டியா இருந்தா சரி, ஜாக்கிரதையா ஓட்டுங்க போதும்” என்ற பாட்டி, “சொல்ல மறந்துட்டேன் உங்க தாத்தா சனிக்கிழமை வரார், யாரவது ஒருத்தர் ரயில்வே ஸ்டேஷன் போயி கூட்டிகிட்டு வாங்க”

“ஹைய் அதுக்குள்ளே வண்டி வந்துட்டா புது வண்டில தாத்தாவ அழைச்சுட்டு வரேன்” உற்சாகமானாள் வர்ஷா.

“பாவம் அவரை வச்சு எக்ஸ்பெரிமெண்ட் பண்ணாத, பேசாம டேக்சி இல்ல ஆட்டோ எடுத்துக்கோ” மது சிரிக்க,

“என்னமோ ஒன்னு, அந்த மனுஷனை பத்திரமா கூட்டிகிட்டு வாங்க போதும்” என்றார் பாட்டி.

நாட்கள் உருண்டோடத் தினம் தினம் ஏதாவதொரு காரணம் காட்டி வர்ஷாவை கடிந்து கொள்வதை வாடிக்கையாக்கிக் கொண்டான் ஆதேஷ். முடிந்த வரை வர்ஷா தன் உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டாள்.

அன்று தேநீர் இடைவேளையில் வர்ஷா தன் டீம் ஆட்களுடன் பேசிக்கொண்டிருக்கும்பொழுது,

“ஆதேஷ் சார் கேபின்ல புதுசா ஒரு பொண்ணு உட்காந்திருக்கா பாத்தியா?” ஒருத்தி கேட்க

“ஆமா அவங்க பேர் அகாங்ஷா. யுஎஸ் ஆஃபீஸ்ல ஆதேஷ் கூட ஒர்க் பண்ணாங்களாம். இப்போ கரண்ட் ப்ராஜெக்ட்காக வந்திருக்காங்க” மற்றொருத்தி தனக்குத் தெரிந்ததைச்சொன்னாள்.

“அதான் இவளோ நாளா இங்க யாரையும் அவர் திரும்பி கூட பாக்கலபோல, அவர் ரேஞ்சே வேற, அந்தப் பொண்ணு பார்க்க ஃபாரினர் மாதிரி ரொம்ப அழகா இருக்கா” முதல் பெண் சொல்ல,

வர்ஷாவை பார்த்தபடி நிர்மல் என்றழைக்க பட்டவன், அவள் டீம் லீட், அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில், “நீயும் ஆதேஷும் டேட் பண்றீங்கன்னு யாரோ சொல்ல நான் கூட உன்ன தப்பா நினைச்சுட்டேன். சாரி டா!” தயக்கத்துடன் சொல்ல,

“பரவால்ல” மெல்லிய புன்னகையுடன் சொன்னவள், தன் இருக்கைக்கு எழுந்து சென்றாள், எதிரில் வந்த அகாங்ஷா வர்ஷாவை பார்த்துப் புன்னகைத்தபடி நடந்து செல்ல, பின்னே அவளை முறைத்தபடி வந்த ஆதேஷ் வர்ஷாவை நெருங்கி,

“என்ன சிரிப்பு? அவகிட்ட எல்லாத்தையும் போட்டுக்கொடுக்க சான்ஸ் தேடறியா?”

“ஐயோ அதெல்லாம் இல்ல” அவசரமாக மறுத்தவள், மெல்லிய குரலில் “ஸ்மைல் பண்ணாங்க அதான் நானும் மரியாதைக்கு…”

“ஒன்னும் தேவையில்லை” அவளை முறைத்தவன், “அவகிட்ட பேசறதையோ பழகர்தயோ பார்த்தேன், அப்புறம் என் கிட்ட மிஸ்பிஹேவ் பண்ணேன்னு டிசிப்ளினேரி ஆக்ஷன் எடுக்க வைப்பேன் ஜாக்கிரதை!” அவன் கண்களில் தெரிந்த வெறுப்பில் அத்தனை நாட்கள் பிடித்து வைத்திருந்த மனவலிமை இடிந்து தரைமட்டமாக, தலை குனிந்து கொண்டவள், வர்ஷா “சாரி” என்று கண்கலங்க,

“ஆ ஊன்னா அழுது ஊரை ஏமாத்த எப்படித்தான் முடியுதோ, ***” என்றவன் வேகமாகச் சென்றுவிட, தன் இருப்பிடத்திற்கு வந்தவள், அதற்கு மேல் அங்கிருக்கமுடியாமல், பெர்மிஷன் கேட்டுக்கொண்டு, கிளம்பிவிட்டாள்.

வீட்டிற்குச் செல்ல மனமின்றி எங்குச் செல்வதென்று தவித்தவள், கடற்கரைக்குப் புறப்பட்டாள்.

மதிய நேரமென்பதால் கண்ணிற்கெட்டிய தூரம்வரை ஒன்றிரண்டு நபர்களைத் தவிரக் கூட்டமென்று பெரிதாய் இல்லை.

கரையோரமாக அலைகள் கால்களைத் தீண்டிச் செல்ல மெல்ல நடக்கத் துவங்கினாள், உச்சிவெயில் உடலைச் சுட, அதைவிட உள்ளத்தின் வெப்பம் அதிகமாக இருப்பதை உணர்ந்தாள்.

ஆதேஷை முதல் முதலாகச் சந்தித்து முதல், அவளையே சுற்றிச் சுற்றி வந்து காதலை அவன் சொன்ன தருணம், ஒரே மாதத்தில் பிரிந்து வெளிநாடு சென்றது, பேசுவதை மெல்ல மெல்லக் குறைத்துக்கொண்டது,

சில மாதங்களில் அவன் பேசுவதைக் கிட்டத்தட்ட நிறுத்தியே விட அதைப் பணிச்சுமை என்று முட்டாள்தனமாகத் தனக்குத் தானே சமாதானம் சொல்லிக்கொண்டது, கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் கழித்து வந்தவன் நிரந்தரமாகப் பிரிந்துவிட தனக்கும் சேர்த்து முடிவெடுத்தது என அனைத்தும் மனதில் காட்சியாய் விரிய அவளின் கட்டுப்பாட்டை மீறிக் கண்கள் பணித்தது.

கரையையொட்டி நடந்தவள் மனமோ கடலுக்குள்ளே நடந்து செல்லத் தூண்ட, அதன் படி கால்கள் திரும்ப, கடலை நோக்கிச் சில அடிகள் எடுத்துவைத்தவள், கடலை வெறித்தபடி நின்றாள்.

வேண்டாம் என்று ஒரு மனம் தடுக்க, இன்னும் கொஞ்சம் முன்னேறினால் இந்த வலியிலிருந்து நிரந்தரமாகத் தப்பிக்கலாமென்று ஒரு மனம் ஊக்கப் படுத்த, தனக்குள்ளே போராடிக் கொண்டிருந்தாள்.

என்ன நினைத்தாளோ கைகள் தானாக ரிஷியை அழைக்க, சில ரிங்குகள் செல்ல அழைப்பை ஏற்றவன்,

“ஹாய் எப்படி இருக்கீங்க?” உற்சாகமாகக் கேட்க, மெல்லக் கண்களில் நீர் வழிய வானத்தை வெறித்தவள் மௌனமாக இருக்க,

“வர்ஷா, இருக்கீங்களா ஹலோ?”

“…”

“என்னாச்சு வர்ஷா ஆர் யு ஆல் ரைட்?”

“நோ”

அவள் குரலில் என்ன உணர்ந்தானோ, “எங்க இருக்கீங்க?” அவன் குரலில் பதற்றம் தெரிந்தது.

“பீச்”

“இப்போ அங்க என்ன பண்ணறீங்க? வெய்யில் வீணாகுதா?”

“என்னால முடியலை, சாரி இதுக்கு மேல என்னால முடியலை” வெடித்தெழத் துவங்கினாள்.

அவளைச் சமாதானம் செய்யப் பேசத்துவங்கியவனின் குரல் அவள் அழுகையிலும் கடல் அலை சப்தத்திலும் கரைந்தது.

அங்கே தன் அலுவலக அறையில் அமர்ந்திருந்தவன், வேகமாகப் பேசியபடி அலுவலகத்தை விட்டு வெளியேறினான்.

“வர்ஷா லிசன், இதெல்லாம் ஒரு மேட்டரா? அவனே உங்களை விட்டு வேற லைஃப் ஸ்டார்ட் பண்றான் நீங்க ஏன் இதுக்கு உங்களை அழிச்சுக்கணும்?”

“தினம் தினம் என்னால முடியலை” அவள் உடைய,

“அதுக்கு? மொதல்ல நீங்க இப்போ எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க” பேச்சுக்கொடுத்தபடி பைக்கை பார்கிங்கிலிருந்து எடுத்தான்,

“பீச்”

“அதான் சொன்னியே, எந்த பீச்?”

“ஏ…எதுக்கு?” அவள் தயங்க,

ரிஷி, கோவமாக “சொல்லுன்னு சொன்னேன்” கட்டளையிட,

“வேண்டாம்” அவள் பதற,

அவன் கொஞ்சம் இளகிய குரலில், “ப்ளீஸ் எங்க இருக்கீங்க, நான் வரேன், பேசலாம் எல்லாம் சரி ஆகும். ப்ளீஸ்” கேட்க

“இல்ல வேண்டாம்” பதறியவள், “தேவையில்லாம நீங்க எதுக்கு”

“எந்த பீச்?” மீண்டும் கேட்க,

“ப்ளீஸ்”

“சொல்லுங்க”

“பெசன்ட் நகர்”

“நான் வரேன், அங்கேயே இருங்க”

“நோ நோ வேண்டாம் ப்ளீஸ்”

“அப்போ இப்போவே அங்கிருந்து கிளம்புங்க. என்கிட்ட பேசிக்கிட்டே வீட்டுக்குப் போங்க”

“ப்ளீஸ் சார், எனக்கு வாழ்ந்தது போதும்”

“இடியட்!” கத்திவிட்டவன், “அவனுக்காக சாகுற அளவுக்கு அவ்ளோ வொர்த்தா அவன் காதல்?”

“நான் ஏமாந்துட்டேன் பைத்தியம் மாதிரி ஏமாந்து, இப்போ செய்யாத தப்புக்குத் தினம் தினம் அவன்கிட்ட அசிங்கப்படுறேன். முடியல மனசு வலிக்குது” அவள் விசும்ப,
“ஏமாற இதுல என்ன இருக்கு? சொல்லப் போனா நீங்கதான் ஏமாத்துறீங்க”

“நா..நான் யாரை ஏமாத்துறேன்?” அழுகையுடன் கோவம் சேர்ந்துகொள்ள,

“யாரயா? என்னை ஏமாத்துறீங்களே அது தெரியலையா?”

“நான் உங்களை என்ன பண்ணினேன். ஒரு மாசம் எவ்ளோ கண்ட்ரோல் பண்ணிக்கிட்டேன் தெரியுமா?”

‘அப்பாடா மூட் மாறுது’ மனதில் ஏனோ நம்பிக்கை வர, அதே நக்கல் தொனியில் பேசத் துவங்கினான்.

“ஒரு மாசம் பொறுத்துக்க முடிஞ்சுதாம், அதுக்கு அப்புறமென்ன தைரியம் ஸ்டாக் தீந்து போச்சோ?”

“நான் உங்கள என்ன ஏமாத்தினேன் அத சொல்லுங்க”

“உங்களை நம்பி என் மேனேஜர் கிட்ட பேசின என்னை, நீங்க ஏமாத்தலை?”

“என்ன… என்ன பேசினீங்க? நான் இப்போ என்ன பண்ணிட்டேன்?” அவளுள் குழப்பம்

“என்னால, என் கவுன்சிலிங்கால தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டதோட இல்லாம, வாழ்க்கையை தைரியமா ஃபேஸ் பண்றீங்கன்னு பெருமையா மேனேஜர் கிட்ட சொன்னேனே! அதை நம்பி அவரும் எனக்கு ஆயிரம் ரூபாய் இன்கிரிமெண்ட் கொடுத்தாரே!

இப்போ நீங்க இப்படி செஞ்சா நான் பொய் சொன்னேன்னு ஆகாதா? உங்க சுயநலத்துக்காக என் வயத்துல அடிக்கிறீங்களே.

அதெல்லாம் பத்தி உங்களுக்கென்ன, உங்களுக்கு நீங்க தான் பெரிசு, உங்களை மதிக்காம உதறிட்டு போன லூசு பயலுக்காக நீங்க சாகுங்க. உங்கள மாதிரி நன்றி கெட்ட பெண்ணை நம்பி என் நேர்மையை இப்போ கேள்வி குறியாக்கிட்டு நிற்கிற என்னைப் பத்தி நீங்க நினைக்க வேண்டாம்.

பொய் சொன்னேன்னு என்னைக் கேவலமா என் மேனேஜர் எதாவது சொன்னா? என் நாணயத்தையே அவர் சந்தேகப் படுவாரே, வேண்டாம் இனி நான் இருக்கக் கூடாது.

நீங்க எப்படியோ போங்க, இதோ ரோட்டுல ஆயிரம் வண்டி போகுது, எனக்குன்னு ஒன்னு கூட வராதா என்ன?

கையாலாகாதவன்னு உலகம் சொல்லும், ஏமாத்துக்காரன்னு மேனேஜர் சொல்லுவான், சுயநலவாதின்னு குடும்பம் சொல்லும், கல்நெஞ்சக்காரன்னு என்னைக் கல்யாணம் செஞ்சுக்கப்போற பொண்ணு சொல்லுவா, பரவாயில்ல.

நீங்க என்ன கிளம்புறது? நான் கிளம்பறேன்! இனி நான் வாழ்ந்து என்ன ஆகப் போகுது? கடைசில என் வாழ்க்கையை முடிச்சுட்டீங்கல? உங்க காதலுக்கு என் கனவை, என் வாழ்க்கையை அழிச்சுட்டீங்கல?” என்றவன் உடனே அழைப்பைத் துண்டித்துவிட்டு,

‘ஆண்டவா உன் மேல பாரத்தைப் போட்டு வாயில வந்ததை அடிச்சு விட்ருக்கேன், தயவு செஞ்சு காப்பாத்து’ இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொண்டான்.

வர்ஷாவை யோசிக்க விடாமல் தோன்றிய அனைத்தையும் பேசி அவள்மீது பழிபோட்டு அவள் குற்ற உணர்ச்சியைத் தூண்டினால் அவள் மனம் மாறுவாள் என்று யூகித்தவன், அவ்வாறே செய்து, காத்திருந்தான்.

சில நொடிகூட தாமதிக்காது அவள் அழைப்பு வர, “எஸ்! எஸ்!” என்று குதித்தவன், வேண்டுமென்றே அழைப்பை ஏற்காமல் நின்றிருந்தான்.

கரையிலிருந்து வேகமாகச் சாலையை நோக்கி நடந்தபடி மீண்டும் மீண்டும் ரிஷியின் மொபைலிற்கு அழைத்தாள்,

‘ஐயோ கடவுளே எனக்கு ஹெல்ப் பண்றேன்னு அவர் இப்படி முடிவெடுக்க நான் காரணமாயிட்டேனே! ப்ளீஸ் ப்ளீஸ் அவரைக் காப்பாத்தேன்’ விடாது மீண்டும் முயற்சித்தவள், கண்கள் பயத்திலும் குற்றவுணர்ச்சியிலும் கலங்க, அழுதபடி கைப்பேசியை உயிரின் இழையாய் பிடித்திருந்தாள்.

அழைப்பை ஏற்றவன் மௌனமாக இருக்க, வர்ஷாவோ “ரிஷி! ரிஷி!” என்று அலற, தன்னுள் எதுவோ பிறழ்வதைப் போல உணர்ந்தவன், “இருக்கேன்” என்று மட்டும் சொன்னான்.

அவளோ பேச்சிழந்து, அழத் துவங்க, அவள் உணர்வுகளைச் சொல்லாமலே புரிந்துகொண்டவன்,

“சாகத் தான் நெனச்சேன், என் கிரகம் இடிக்க வந்த கார்காரன் ‘வூட்ல சொல்லிட்டு வந்துட்டியான்னு’ திட்டிட்டு போயிட்டான்” என்று வருத்தமாகச் சொல்ல,

வர்ஷாவுக்கு அழுகையும் சிரிப்பும் சேர்ந்து கொண்டது, “ஏன் சார் இப்படி பண்றீங்க, அவன் பிரேக் போடாமயிருந்திருந்தா என்ன ஆயிருக்கும்?” குரலில் பதற்றம் குறையவில்லை.

“என்ன ஆனா உங்களுக்கென்ன? கடலை ஏன் காக்க வைக்கறீங்க போங்க” அவன் நக்கலாகச் சொல்ல,

“இல்ல நான் பீச்லேந்து வந்துட்டேன் ரோட்ல இருக்கேன், சாகல, தயவுசெஞ்சு நீங்க எதுவும் தப்பா செஞ்சுக்காதீங்க, உங்களை நம்பி குடும்பம், உங்க வருங்கால பொண்டாட்டி மாலதி…ப்ளீஸ் ரிஷி என்னை மன்னிச்சுடுங்க” அவள் குரல் உடைந்தது.

“உங்களை என்னால இனிமே நம்ப முடியாது வர்ஷா, இப்போ இப்படி செஞ்ச நீங்க மறுபடி ஏதாவது ஆச்சுன்னா பீச்சு, கூவம்னு போனா ஒவ்வொரு தடவையும் நான் வந்து உங்களை காப்பாத்த முடியுமா?

வேணாம்! இன்னியோட இந்த ஆட்டத்தை முடிச்சுக்கலாம். என்னை விட்டுடுங்க!”

தன் செயல் அவனை எவ்வளவு பாதித்ததென்று உணர்ந்தவள் மௌனமாக நிற்க, அவள் மனவோட்டத்தை யூகித்தவனும் மௌனமாகவே இருந்தான்.

வர்ஷா மெல்லிய குரலில் “சாரி ரிஷி” சொல்ல,

“வேண்டாம் உங்க சாரி” என்றவனிடம் தெரிந்த வெறுப்பு அவளை வாட்ட, மறுயோசனையின்றி, “சத்தியமா இனிமே தற்கொலை பண்ணிக்க யோசிக்கவே மாட்டேன்! என்ன ஆனாலும் இனிமே இப்படி செய்யமாட்டேன். ப்ராமிஸ்!” என்று வாக்களித்தாள்.

“எப்படி நம்புவேன்?”

“இப்படி கேட்டா? தயவுசெய்து என்னை நம்புங்க ரிஷி” அவள் கெஞ்ச, அவளை நம்பமுடியாதென்று போக்கு காட்டியவன், நீண்ட நெடிய கெஞ்சுதலின் பின்னே அவளை நம்புவதாக ஒப்புக்கொண்டான்.

“இப்போ எப்படி வீட்டுக்குப் போவீங்க? நான் வந்து டிராப் பண்ணவா?” ஒரு வழியாகக் கேட்கத் தயங்கியதை கேட்டுவிட்டான்.

“தேங்க்ஸ் சார், நான் வண்டியில தான் வந்தேன், நானே வீட்டுக்குப் போயிடுவேன்”

“வண்டியா? வாவ் வாங்கினதை சொல்லவேயில்ல, மாடலெல்லாம் பார்த்துச் சொன்னேனே, சொல்லணும்னு தோணவே இல்லல்ல?”

“ஐயோ அப்படி இல்ல, சொல்ல நினைச்சேன் அடிக்கடி கால் பண்ணா உங்களுக்குத் தொந்தரவா இருக்குமேன்னு தான்”

“ஒரு கால் பண்ணியிருந்தா என்ன ஆயிருக்கும்? பேச யோசனையா இருந்தா வாட்ஸாப் பண்ணியிருக்கலாமே”

“வாட்ஸாப் பண்ணா பரவால்லயா?” அவள் தயங்க,

“தாராளமா பண்ணலாம் அதுக்கென்ன? ப்ளஸ் இனிமே எதுனாலும் ஃபோனோ மெஸேஜோ பண்ணுங்க.மனசுக்குள்ளேயே வச்சுக்கிட்டு இப்படி ஸ்ட்ரெஸ் ஏத்திக்கிட்டு எனக்கும் பீப்பி (BP) ஏத்தாதீங்க. புண்ணியமா போகும்”

“சாரி” என்றவள் உற்சாகமாக, “சரி வண்டியைக் காட்டறேன் பாக்கறீங்களா? ஃபேன்சி நம்பர் கிடைச்சுது” என்றவள் அழைப்பைத் துண்டித்தும் தன் வண்டியை ஃபோட்டோ எடுத்து ரிஷிக்கு அனுப்பி வைத்தாள். வண்டியுடன் தானும் இருக்கும்படி புகைப்படம் அனுப்புவாளென்று நினைத்தவனுக்கோ வெறும் வண்டியின் படம் ஏமாற்றமே.

‘இந்த வண்டிய நாங்க பார்த்ததே இல்ல பாரு’

“நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்” என்று அனுப்பிவைத்தான்.

மனதின் கணம் பெரிதாகக் குறையவில்லை என்றாலும் கொடுத்த வாக்கிற்காக வாழ்ந்து பார்க்கத் துணிந்திருந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!