Un Vizhigalil Vizhuntha Naatkalil 18
Un Vizhigalil Vizhuntha Naatkalil 18
ஒரு வாரம் ஜீவாவிற்குக் கெடு கொடுத்துவிட்டு தானும் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டிலேயே இருந்தான் வெற்றி. வாணியும் ஒரே நாளில் மிகவும் சோர்ந்து இருந்தாள்.
இருவருக்கும் என்ன ஆயிற்று என்று குழம்பினாலும் அண்ணன் தங்கை சண்டை தான் என்று சாதரணமாக எடுத்துக் கொண்டார் ரேகா.
ஜீவாவிடம் பேசிய பிறகு, வெற்றிக்கும் அவன் மீது சிறு அபிப்பிராயம் தோன்றியிருந்தது. தன்னுடைய பிரச்சனைகளை முடித்துவிட்டு அவன் வந்தால் நிச்சயம் வாணியை அவனுக்கு மனம் முடிக்கலாம் , தங்கையும் சந்தோஷப் படுவாள் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தான்.
ஆனால் வாணியிடம் சிறிதும் நம்பிக்கை வரும்படியாக அவன் பேசிவிடவில்லை. ஏனெனில் அவளுக்கு ஒரு தவறான உத்திரவாதத்தை தந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். அதனால் வாணி கேட்டதற்கும் ,பொறுமையாக இரு என்று பிடிப்பில்லாமல் கூறிச் சென்றுவிட்டான்.
மறுநாள் காலை தூங்கி எழுந்ததும் ஜீவா சற்று தெளிவுடன் இருந்தான். அவனுக்குள் ஏதோ ஒன்று செய்தாவது அந்த வசுந்தராவை விலக்கிவிட வேண்டும் என்று யோசித்தான்.
அப்பாவிடம் நேராகச் சென்று சொன்னால் , அவர் மறுக்கக் கூடும், ஆனால் அதுவே சேரனின் அப்பா மற்றும் சேரனிடம் தன் மனதில் உள்ளதைச் சொல்லி விடலாம். அப்படிச் சொன்னாள் அவர்கள் சற்று யோசிக்கக் கூடும் என்றும் மனதில் தோன்றியது.
அம்மா சங்கரி ஜீவாவிடம் வந்து நேற்று தவசி சொன்னதைப் பற்றி சொல்ல, எப்படி அவர்கள் வீட்டிற்குப் போகலாம் என்று யோசித்த ஜீவாவிற்கு இது சாதகமாகப் பட்டது.
“சரிம்மா.. போகலாம் . ஆனா நான் மட்டும் போயிட்டு வரேனே! எதுக்கு எல்லாரும். நான் அவங்க அப்பா கிட்டயும் சேரன் கிட்டயும் பேசறேன். சேரன் கண்டிப்பா புரிஞ்சுப்பாரு. அவங்க அப்பாவும் நல்ல மனுஷனா தான் தெரியறாரு. எடுத்து சொன்னா போதும்.“ உறுதியுடன் சொல்ல,
சங்கரியும் அதற்குச் சம்மதித்தார்.
“ அப்பா கிட்ட நான் சொல்லிக்கறேன். அவங்க வீட்டுலயும் போன் பண்ணி சொல்ல சொல்றேன். ஏதோ உங்க எல்லாருக்கும் மனசு கோணாம வாழ்க்கை அமைஞ்சா சரி. நீ போயிட்டு வா. ”
சிறு நம்பிக்கை வந்தது ஜீவாவிற்கு. அதே உற்சாகத்துடன் கிளம்பினான்.
தவசி முதலில் யோசித்து விட்டு பிறகு நண்பனுக்கு போன் செய்து சொல்ல,
“ எனக்கு ஜீவா வருவதே சந்தோஷம் தவசி. வரச் சொல்லு நான் வீட்டுல சொல்லிடறேன்” வரதன் அதற்கு சந்தோஷமாகவே ஒத்துக்கொண்டார்.
ஜீவா வருவதால் அன்று சேரனையும் வீட்டிலேயே இருக்கச் சொன்னார். வசுந்தரா தனது திட்டம் இவ்வளவு சீக்கிரம் நிறைவேறியதில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்.
“ அம்மா! பாத்தியா நான் நேத்து விட்ட டோஸ் எப்படி வொர்க்அவுட் ஆயிடுச்சுன்னு” செல்வியிடம் சொல்லி மகிழ்ந்தாள்.
“ பின்ன, நீ என் பொண்ணாச்சே. நினைச்சதை சாதிக்காம இருப்பியா, சரி சரி சீக்கிரம் ரெடியாகு . நாம அப்புறம் பேசிக்கலாம். “ பெருமை தாங்கவில்லை செல்விக்கு.
ஜீவா தன் மனதில் அவர்களிடம் என்ன பேசவேண்டும் என்று யோசித்துக் கொண்டே வந்தான்.
அவனுக்காக வாசலிலேயே காத்திருந்தான் சேரன். ஜீவா தெரு முனையில் தனது பைக்கில் வருவதைக் கண்டதும் கையசைத்து காட்டினான் சேரன்.
வண்டியை விட்டு இறங்கியதும் , சேரன் சிநேகமாகப் புன்னகைக்க ஜீவாவும் கை குலுக்கினான்.
“ வாங்க மச்சான். எப்படி இருக்கீங்க, வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா?” விசாரித்துக் கொண்டே ஜீவாவை உள்ளே அழைத்துச் சென்றான்.
வரதனும் தன் பங்கிற்கு வரவேற்று , ஜீவாவை ஹாலுக்கு அழைத்துச் சென்று அமர வைத்தார்.
வேலையாளை அழைத்து முதலில் ஜூஸ் கொண்டுவரச் சொன்னார்.
“ விருந்து ரெடியாகுது தம்பி, சாப்டுட்டு தான் போகணும்” மலர்ந்த முகத்துடன் அவர் சொல்ல,
ஜீவா மிகவும் சங்கடமாக உணர்ந்தான். ஏதும் பேசாமல் உதட்டளவில் சிரித்து வைத்தான்.
ஜூஸ் வரும் வரை வீட்டில் உள்ள அனைவரின் நலனையும் பற்றிக் கேட்டு கொண்டிருந்தார் வரதன். தங்களின் தொழில் பற்றியும், சேரனது வேலை பற்றியும் சொன்னவர், ஏதோ நினைவு வந்தவராக, உள்ளே குரல் கொடுத்தார்.
“ செல்வி, வசுந்தராவ ரெடி பண்ணிட்டியா ?”
“ இதோ அஞ்சு நிமிஷம்ங்க “ பதில் குரல் கொடுத்தார் செல்வி.
“இல்ல பரவால்ல.. “ மறுப்பாகப் பேசினான் ஜீவா.
“ என்னப்பா..?” குழப்பத்துடன் வரதன் கேட்க, சேரனும் தீவிரமாகப் பார்த்தான்.
“ நான் உங்க ரெண்டு பேர் கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்.” திடமாகவே சொல்லிவிட்டான்.
“ என்ன விஷயம் ஜீவா? சொல்லுங்க” சேரன் கேட்க,
“ வேற எங்கயாவது பேசலாம்” சேரிலிருந்து எழுந்தான் ஜீவா.
சேரன் உடனே வரதனைப் பார்க்க,
வரதனும் ,” வாங்க தம்பி “ என்று முன் வாசலில் இருந்த அவரது அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றார்.
மூவரும் உள்ளே நுழைந்ததும் ,
“ முதல்ல என்னை நீங்க மன்னிச்சிடுங்க .நான் இப்போ பொண்ணு பாக்க வரல”
சேரந அமைதியாகப் பார்க்க, வரதன் பதறினார்.
“ என்னப்பா சொல்ற, என்ன ஆச்சு?”
“ சார் நான் முதல்ல எல்லாத்தையும் சொல்லி முடிச்சிடறேன் , பிறகு நீங்க என்ன சொன்னாலும் சரி” ஜீவா அவரை சற்று அமைதிப் படுத்தினான்.
தன் மூக்குக்கண்ணாடியை கழட்டி விட்டு கண்ணைத் துடைத்துக் கொண்டு அருகில் இருந்த சோபாவில் அமர்ந்தார்.
“ நீங்க சொல்லுங்க ஜீவா” சேரன் சொல்ல,
“ நான் உங்க பொன்னை இப்போ பொண்ணு பாக்க வரல, என்னால அவங்கள கல்யாணம் செஞ்சுக்க முடியாது. ஏன்னா நான் ஏற்கனவே வேற ஒரு பொண்ணை விரும்பறேன்.
இது என்னோட சுயநலத்துக்காக மட்டும் சொல்லல, உங்க பொண்ணோட வாழ்க்கைக்காகவும் தான் சொல்றேன்.
என்னோட தங்கச்சி கல்யாணம் இதுல அடங்கிருக்குன்னு எனக்குத் தெரியும், இருந்தாலும் நான் ஏன் சொல்றேன்னா, ஏற்கனவே வேற பொண்ண மனசுல வெச்சுக்கிட்டு இன்னொரு பொண்ணோட வாழறது , கண்டிப்பா நல்லா இருக்காது. நான் இதை சொல்லாம என் தங்கச்சிக்காக இவங்கள கல்யாணம் பண்ணிகிட்டா , நாளடைவில ரெண்டு பேருக்குமே அந்த வாழ்க்கை வெறுத்துடும். சங்கடப் பட்டுகிட்டு எப்படி வாழறதுன்னு கண்டிப்பா பிரிவு தான் வரும்.
இதுனால நம்ம எல்லாருக்குமே மனக் கஷ்டம் தான். அதுனால இதைப் பத்தி உங்க கிட்ட முன்னாடியே சொல்லிடறது பெட்டெர்னு தோணிச்சு. நான் சொல்ல வந்தத சொல்லிட்டேன். “ அத்துடன் நிறுத்தினான்.
மற்ற இருவரும் அவனையே இமைக்காமல் பார்க்க, அவர்கள் மனதில் என்ன ஓடுகிறது என்பதை அவனால் கணிக்க முடியவில்லை. இருவரின் முகத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் அவனே பேசினான்.
“ என் தங்கச்சிக்கு சேரனை ரொம்ப பிடிச்சிருக்கு, எங்க வீட்டுல எல்லாருக்குமே பிடிச்சிருக்கு, அதுனால அவங்க கல்யாணம் கண்டிப்பா தடை பட நான் விட மாட்டேன்.
ஆனா எனக்கும் உங்க பெண்ணுக்கும் கல்யாணம் நடந்தா தான் இவங்களுக்கும் கல்யாணம்னா , கண்டிப்பா நான் உங்க பெண்ணையே கட்டிக்கறேன் சார். என்னால என் தங்கச்சி வாழ்க்கை வீணாக கண்டிப்பா நான் விடமாட்டேன். “ அவன் பேச்சில் ஒரு உறுதி இருந்ததை இருவருமே உணர்ந்தனர்.
சேரனும் வரதனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, அங்கே இரண்டு நிமிடம் மௌனம் நிலவியது. பிறகு வரதன் எழுந்தார்.
“ நீ சொன்னது எனக்குப் புரியுதுப்பா, கண்டிப்பா உன் தங்கச்சிக்கும் என் மகனுக்கும் கல்யாணம் நடக்கும். என் நண்பன் தான் எனக்குச் சம்மந்தி. “ முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் சொல்ல,
ஜீவா சற்று குழம்பினான்.
“ சார் நீங்க சொல்றது எனக்கு சரியா புரியல.. “ தயங்கி நிற்க,
சேரன் அவனது தோளில் கை போட்டுக் கொண்டு நின்றான்.
“ அப்பா உங்க காதலை ஆமொதிக்கறார் மச்சான். “ மகிழ்ச்சியாகச் சொல்ல,
ஜீவா திகைத்துப் பார்த்தான் .
“ ஆமாம்ப்பா. நீ சொன்னது சரி தான். பிடிக்காம வாழ்ந்து காலம் பூரா கஷ்டப் படரத விட, மனசுக்குப் பிடிச்சவங்க கூட வாழறது தான் நல்லது. முன்னாடியே நீ வெளிப்படையா பேசுனது ரொம்ப நல்லத்தாப் போச்சு. மத்ததெல்லாம் நான் தவசி கிட்டப் பேசிக்கறேன்” அவரும் ஆருதல்லாகவே பேச, ஜீவாவிற்கு மனம் நிறைவாக இருந்தது.
“ சார், இது…”
“ என்னப்பா இன்னும் சார்.. உன் தங்கச்சிக்கு மாமனார், அப்போ உனக்கும் மாமா தான.. “
“ சரி மாமா. அப்பாக்கு இன்னும் என் விஷயம் தெரியாது, இனிமே தான் சொல்லணும். “
“பக்குவமா நானே சொல்லி உனக்கு ஹெல்ப் பன்றேன்ப்பா .. நான் ஒன்னும் அந்தக் காலம் இல்ல. கம்பனி நடத்த எப்பவும் நாம அப்டேட்டா இருக்கணும். நானும் அப்படித் தான். நீ கவலைப் படாம போயிட்டு வா. எல்லாம் நான் பாத்துக்கறேன். “
“ரொம்ப தேங்க்ஸ் மாமா. உங்க பொண்ணு கிட்டயும் அத்தை கிட்டயும் ….”
சேரன் அருகில் வந்து , “ நாங்க எடுத்து சொல்லிகறோம் . வசு அப்பா சொன்னா கண்டிப்பா கேப்பா. நீங்க வொரி பண்ணிக்காதீங்க ஜீவா”
“ரொம்ப நன்றி சேரன்.”
“ உங்க நன்றிய நீங்க உங்க தங்கச்சிக்கிட்ட ஃபோன் குடுக்கறது மூலமா கூட காட்டலாம்” அவன் காதில் கிசுகிசுக்க,
இருவரும் சிரித்துக் கொண்டே வெளியே வந்தனர். ஜீவாவை வாசல் வரை வழியனுப்பிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான் சேரன்.
உள்ளே காளி அவதாரம் எடுத்திருந்தாள் வசுந்தரா.
“ அப்பா, என்ன சொல்றீங்க நீங்க! எதுக்காக இப்படி பண்ணீங்க? நான் கல்யாணம் பண்ணா ஜீவாவைத் தான் செஞ்சுப்பேன். “
“ வசு , அவன் வேற ஒரு பெண்ணை விரும்பறான். அவனை எப்படி நீ கல்யாணம் செஞ்சு சந்தோஷமா வாழ முடியும்? “
“ அதெல்லாம் போகப் போக சரியாயிடும். நீங்க கல்யாணத்தை நடத்துங்க”
“ என்ன வசு இவ்வளவு அடமென்ட்டா பேசற, ஒருத்தரோட விருப்பு வெறுப்புக்கு எப்பவும் மதிப்புத் தரனும். அது இல்லனா யாருக்கும் நம்மள பாத்தா வெறுப்புத் தான் வரும். அவங்க வீட்டுல சம்மந்தம் பண்ணனும்னு நெனச்சோம், அந்தப் பையன கட்டாயப் படுத்தித் தான் இதை நடத்தனும்னு இல்ல. அப்படியே அவனை கட்டாயப் படுத்தி கல்யாணம் பண்ண வெச்சாலும் ‘நாம இவ்ளோ சொல்லியும் அவங்க இப்படி பண்ணிட்டாங்களேன்னு’ கடைசி வரை ஒரு கசப்பு இருந்துட்டே தான் இருக்கும், அதை உன்கிட்ட தான் காட்டுவாங்க. புரிஞ்சிக்கோ வசு” அவளுக்கு எப்படியாவது புரிய வைக்க முயற்சி செய்தார்.
“ நாம மட்டும் ஏன் அவங்க வீட்டுப் பெண்ணை கட்டிக்கணும். வேண்டாம்னு சொல்லிடுங்க” செல்வி தன் பங்கிற்கு ஆடினார்.
“ செல்வி! உளறாத, நீ உள்ள போ” மனைவியை முறைத்தபடி சொல்ல, செல்வியின் தலை வேறு அறைக்குள் சென்று மறந்தது.
எப்போதும் சேரன் தந்தை பேசும் போது குறுக்கே வரமாட்டான். அதுவும் வசுந்தரா விஷயத்தில் அப்பா தான் சரியான ஆள் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். அதனால் நடப்பதை மட்டும் வேடிக்கை பார்த்தான்.
“ இங்க பாரு வசு, இந்த பேசிக் விஷயம் கூட புரிஞ்சிக்காம உன் விருப்பம் மட்டும் தான் பெருசா நினைக்கற, நீ எப்படி கம்பனிய திறமையா ரன் பண்ணப் போற!” அவளை அடக்கும் முறை தெறிந்து மடக்கினார்.
“ அப்பா! நான் கம்பனிய நல்லா தான கொண்டுபோறேன். ஏன் இப்போ அதைப் பத்தி பேசறீங்க!” கம்பனி தன் கை விட்டுப் போய்விடும் என்று சற்று குரல் கம்மியது.
“ இல்ல வசு , உன் விருப்பத்திற்கு மாறா எதாவது நடந்தா, அதை அவங்க போக்குல விட்டுப் பிடிக்கணும். நீ இப்படி ஒரே பிடில இருந்தா கம்பனில நிச்சயம் வெற்றி அடைய முடியாது. உன்கிட்ட கம்பனிய எப்படி நான் ஒப்படைக்கறது. யோசிக்கணும் “ வேறு திசையில் இந்தப் பிரச்சனயை கொண்டு செல்ல,
நரித் தனமாக யோசிக்க ஆரம்பித்தாள் வசுந்தரா.
கம்பனியும் வேண்டும் ஜீவா வும் வேண்டும். அதற்கு அப்பா சொல்வது போல இவர்கள் அனைவரையுமே விட்டுப் பிடிக்க வேண்டும் என்று சிந்தித்தாள்.
உடனே தன் பிடியில் இருந்து ஒரேடியாயாகத் தளர்ந்தாள்.
“ சாரிப்பா. நீங்க சொல்றது சரி தான். நான் மட்டும் விருப்பப் பட்டு என்ன செய்றது. அவங்க வீட்டுல எனக்கு மதிப்பும் இருக்காது. ஜீவா எனக்கு வேண்டாம் . “ சோகமாக சொல்வது போல சொன்னதும் ,
“ உனக்கு நல்ல இடமா நான் பாக்கறேன் மா “
“ இல்லப்பா. இப்போ எதுவும் வேண்டாம். முதல்ல அண்ணா கல்யாணம் நடக்கட்டும். பிறகு பார்த்துக்கலாம்.” உள்ளே சென்றுவிட்டாள்.
அவள் அடங்கிவிட்டாள் என்று நினைத்து வரதனும் சேரனும் சென்றனர். ஆனால் வசுந்தரா வேறு எந்த வழியில் ஜீவாவை அடைவது என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.