AMP3

AMP3

அத்தியாயம் 3

அன்றே மனோ கிளம்பியிருந்தான். ஆமாம். அ‌வன் கிளம்பி விட்டான் என்று அறிந்தது சௌமி மூலமாகத்தான். எப்பொழுதும் அவன் அனுப்பும் ‘பை’ என்ற மெசேஜ் வரவில்லை. ஃபோன் கால்களும் இல்லை.

இருக்கட்டும்.. அவளுக்கென்ன வந்தது. அவளுக்கு எத்தனை கஷ்டமோ அது அவனுக்கும்தானே.. அப்படி அவனுக்கு கொஞ்சம் கூட கஷ்டம் இல்லையென்றால் அவள் இப்பொழுது கஷ்டப்படுவதே முட்டாள்தனம். கடைசி வருடத்தின் கடைசி மாதங்கள் என்பதால்  படிக்க ஒன்றும் இல்லை. அதுதான் மனம் தேவையில்லாத காரியங்களில் குழம்புகிறது என்று தனக்குத் தானே சமாதானம் செய்து கொள்வாள். அடுத்த நொடியே டொய்ங் என்று கையிலிருக்கும் செல்ஃபோன்  சொட்டு போட்டால் அதை முறைப்பாள்.  நிச்சயமாக மனோவாக இருக்காது.   பேசாமல் இந்த கோபத்தைக்  கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு பேசி விடலாமா.. சும்மா ஒரு ‘ஹை’ மட்டும்.

நோ.. நோ கண்மணி.. என்ன தான் மிஸ் பண்ணினாலும் நியாயம் என்று ஒன்று இருக்கிறதுதானே.. அன்றைய பேச்சில், சண்டையில் தப்பு யார் பக்கம். இவள் பின்னே சுற்றுவது கிஷோர். அவள் எப்படி குற்றவாளி ஆவாள்?. ஒருவேளை ஒரு பையன் ஒரு பெண் பின்னாடி சுத்தினா அந்த பொண்ணுதான் அதை என்கரேஜ் பண்றானு அர்த்தம் என்று எண்ணும் கோடானுகோடி அறிவாளிகளில் மனோவும் ஒன்றா.. இல்லை. இதற்கு முன்னாடி கலை அக்காவுக்கு ஏதோ பிரச்சனை என்றதும் முன்னே நின்றானே..

கோபத்திற்கு  இரண்டாவது காரணமாக  சந்தேகப்படுவது அவள் இதை முன்னேயே யாரிடமாவது சொல்லியிருக்க வேண்டும் என்பது. இது கொஞ்சம் நியாயமான காரணம் தான்.  ஆனால் அதைக் கண்மணி செய்யாததற்கு  காரணம் அவள் அப்பா.. தெரிந்தால் அவளைக் கல்லூரிக்கு விட மாட்டார் என்று ஒரு டிரெடிஷனல் அப்பாவை நினைத்துவிடாதீர்கள். அருணாச்சலம், அரசு பள்ளி தலைமையாசிரியர். எல்லா வகை மனிதர்களையும் எப்படி கையாள வேண்டும் என்று அனுபவத்தில் கண்டவர். மகள் என்றால் உயிர். கண்மணி  என்று பெயர் வைத்தவர் ஆயிற்றே. அவளுக்கு ஒன்று என்றால் பொங்கி விடுவார். ஒரு பொங்கு பொங்கி அவர் போடும் ஹீரோ எஃபெக்டில் நம்ம மனோவே பல்வாள்தேவன் சிலையாகி விடுவான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். உண்மையைச் சொல்வதென்றால் அந்த கிஷோர் இதற்கெல்லாம் தகுதியானவனே கிடையாது.

சண்டைக்கான மூன்றாவது காரணம் அந்த நேரத்தில் அவள் நினைத்ததுதான். அவனைப் பற்றி பேசியதால் வந்த கோபம். ஆனாலும் எவ்வளவு கோபம். கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கோபம். தவறு செய்வாராம். ஆனால் மற்றவர்களுக்குத் தெரியக்கூடாதாம். முட்டாள், மடையன், மூடன். இருந்த கோபத்திற்கு இந்த வார்த்தைகளெல்லாம் பத்தாமல் போக, சொன்னால் நம்ப மாட்டீர்கள் டிக்ஷனரி எடுத்து புதுவார்த்தைகள் தேடி எடுத்தாள்.

அரவிந்த் வந்து கேட்டான் என்ன இந்த செமஸ்டர்ல போச்சா என்று.

போடா குரங்கு.. உன்ன மாதிரின்னு நினைச்சியா.. என்று எகிற

நானா குரங்கு.. நீதான் இஞ்சி தின்ற குரங்கு மாதிரி மூஞ்ச வைச்சி கிட்டு சுத்துற..

பாரதி வந்தார். டேய் என்னடா.. குரங்கு அது இது ன்னு.. போ..

அவள் குரங்கு னு சொல்லும் போது வந்துடாதீங்க. நான் சொன்னா மட்டும் கரெக்டா வந்துடுவீங்க.. என்று பாட்டியைப்போல் ம்க்கும் என்று உதட்டைச் சுழித்து விட்டு சென்றான். அவனுக்கு தெரியாது அது தங்கைகள் ஸ்பெசல்லா வாங்கி வந்த வரம் என்று..

அம்மா அடுத்த நாள் வந்து யாரும்மா அது கிஷோர் என்றதும் சுற்றும் முற்றும் தேட எதற்குமே சம்பந்தம் இல்லாதது போல விட்டத்தை வெறித்தான் அருண்.  கொலைவெறியோடு அவனை முறைக்க அவனை ஏன்டி பார்க்கிற..

பார்வையை திருப்பி, ஆமாம் அம்மா.. கிஷோர்னு ஒருத்தன் மூன்று வருடம் பின்னே சுத்துறான். கிஃப்ட் வாங்கி வருவான். காத்திருக்கிறேன்னு சொல்வான். இதுல என் மேல் என்ன தப்பு.. என்கிட்ட ஏன் கத்துறீங்க.. என்று உச்சஸ்தாயில் கூறி முடிக்க வீட்டில் ஒரு நொடி அமைதி நிலவியது.

புயலுக்கு முன் அமைதி. ஏனென்றால் அடுத்து அஞ்சுவது அஞ்சாமை பேதைமை என்று வள்ளுவரிடம் ஆரம்பித்த பாரதி.. ஔவையார், இளங்கோவடிகள், பாரதியார், பாரதிதாசன் என்று ஒரு ஃபுல் ரவுண்ட் அடித்து முடிக்க கிட்டதட்ட இரண்டு மணி நேரம் பிடித்தது.  அதுவரை அறிவுரை மழையில் சொட்ட சொட்ட நனைந்த கண்மணி  ஆபத்பாந்தவராய் வந்த அப்பாவின் வண்டி சத்தம் கேட்டதும் தான் தலையை நிமிர்ந்தாள்.

என்ன கண்மணியின் முகம் ஒரு மாதிரி இருக்கு என்று அருணாச்சலம் கேட்க யாரையும் பேச விடுவதற்கு நம் கண்மணி என்ன முட்டாளா..

‘தலை வலிக்கிறது பா’ என்று ஓடி அவர் மடியிலேயே தலை வைத்து படுத்துக் கொண்டாள். தாயும் தந்தையும் கண்களில் பேசியது அறியாததால் ‘அச்சோ.. காஃபி குடிக்கிறாயா கண்ணம்மா,’ என்றபடி தலையைக் கோத தப்பித்தோமடா சாமி என்று கற்பனையிலேயே நெற்றி வேர்வையை துடைத்துக் கொண்டாள்.

அரவிந்த் அரியர்களை ஒரு வழியாய் முடித்து  சென்னையிலேயே ஒரு வேலையைத் தேடிக் கொண்டான்.

தேர்வுகளில் தேர்வு பெறுவதில் தேர்ச்சி வாய்ந்த ?? நம்ம அருண் வங்கி  வேலை பார்த்தவாறே சி.ஏ படிக்க எடுத்த சில முயற்சிகளில் அந்த தேர்வின் சூட்சுமம் புரிந்தது. விளைவு, கண்மணி வீட்டின் வெளியே அருண் ஆடிட்டர் என்ற போர்டு ஏறியது.

கண்மணி அவள் வழக்கமாய், அரவிந்தைப் பார்த்தால் உதட்டை சுழிப்பது, அருணைக் கண்டதும் முறைப்பது, தாயைப் பார்த்ததும் தலையைக் குனிந்து விடுவது, தந்தை வந்ததும் மடியில் படுப்பது என்று நேரத்தைப் போக்கினாள்.கல்லூரியின் கடைசி நாட்கள், தேர்வு, காம்பஸ் இண்டர்வியு என்று அது வேறு டென்ஷன்.

சும்மாவே டென்ஷன். இதில் டென்ஷனுக்காகவே பிறந்த ஒரு திங்கள் கிழமையில்தான் மனோ ஃபோனில் அழைத்தான். மணி காலை பதினொன்று இருந்திருக்கும். காலேஜ் காண்டீனில் உட்கார்ந்து மாதுளம்பழச்சாறை உறிஞ்சிய படி ஜன்னல் வெளியே பார்க்க, மஞ்சள் வெயிலில் வேப்ப மர நிழலில் இரண்டு அணில்கள் ஓடிக் கொண்டிருந்தன. முதல் பார்வைக்கு வெறும் ஓடுவது போல்தான் இருந்தது. ஆனால் பார்த்த சில நொடிகளிலேயே அதில் ஒரு ரிதம் தெரிந்தது. ஒன்று வேப்ப மர விதையை எடுத்து ஓட, பின்னே போனது அதைப் பறிக்க பார்த்தது. ஓட்டத்தில் கையோ முன்னங்காலோ தவறி விதை கீழே விழ இரண்டும் மரத்தை சுற்றியவாறு குடுகுடு வென்று கீழே ஓடின. இப்போது  அந்த இரண்டாவது அணில் ஒரு விதையை எடுத்து முன்னங்காலில் ஏந்தி நறுக் நறுக் என்று கொறிக்க தட் என்று குச்சி விழும் சப்தம். மறுபடியும் அந்த விதையைத் தூக்கிக் கொண்டு ஓடியது. நிழல் எங்கும் பரவியிருந்த வேப்பமர விதைகளுக்கு நடுவில் ஒற்றை விதைக்காக அவை நடத்திய பந்தயத்தைக்  காண அவள் முகத்தில் மென்னகை ஒன்று மலர்ந்தது. ஒரு நொடி நின்று இது உனக்கு இது எனக்கு என்றால் பிரச்சனையே இல்லையே. ஆனால் அப்படி பேசுவது அவ்வளவு எளிதும் அல்லவே.  நீண்ட மூச்சு ஒன்றை உள்ளிழுத்து  வெளியில் விட அவள் ஃபோன் அந்த பிரபலமான பழைய பாடலைப் பாடி அவளை அழைத்தது.

சுற்றி இருந்தவர்கள் எல்லோரும் சிரிக்க சட்டென்று ஃபோனை எடுத்தவள் அசடு வழிய ஆன்  செய்து காதினில் கொடுத்தாள். அந்த பக்கமும் மௌனம்.  அந்த அணில்கள் மறுபடியும் கண்ணில் பட ஒரு முடிவுடன் அவள் பேச வாய் திறந்த போது மனோவே பேசினான்.

ஹாய் கண்மணி..

….

ஹலோ.. கண்மணி கேட்குதா..

ம்ம்… கேட்குது.

நேரடியாக விஷயத்திற்கு வந்தான். சாரிடா..யாரோ முட்டாள் ஏதோ பண்ணினால் நாம் ஏன்  சண்டையிட வேண்டும்.

வாய்ப்பூட்டு அகன்றது.

நாமா..ஏன் பன்மையில் சொல்கிறாய் மனோ? நானெங்கே சண்டையிட்டேன்? என்ன ஏது என்று கேளாமல் கத்தியது நீதான். அதற்காக பேசாமல் இருந்ததும் நீதான்.

ம்ம்..‌நான்தான். சாரி.. சரியா..

அதெப்படி சரியாகும். ஒரு மாதமாக எப்படி இருந்தது தெரியுமா மனோ..

நான்கு வாரங்கள், ஆறு நாட்கள்.

என்ன..

நாம் கடைசியாகப் பேசியதிலிருந்து இன்று வரை.. நான்கு வாரங்கள் ஆறு நாட்கள் ஆகின்றன. எனக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது கண்மணி.. சரி.. என்மேலேதானே தப்பு.. என்ன பனிஷ்மென்ட் சொல்லு.

ம்ம்.. இப்படி டக்குனு கேட்டா எப்படி சொல்றது..

சரி.. இரண்டு நாள் டைம் தர்றேன். யோசித்து வை. ஓகேவா..

ம்ம்.. ஓகே..

ஓகே.. பை கண்மணி. கொஞ்சம் வேலை இருக்கு.. அப்புறம் கால் பண்றேன். ஃபோனைக் கட் பண்ணியதும் நிமிர்ந்து மேலே பார்த்த போது கண்மணி முதலில் நினைத்தது காண்டீனில் லைட் எதுவும் எக்ஸ்ட்ராவாக போட்டிருக்கிறார்களா.. என்றுதான்.  திடீரென்று எல்லாமே பளிச்சென்று இருந்தது.

காண்டின் மட்டுமல்ல அன்று எல்லாமே பளிச் என்று தெரிய,  இரவு  மனோவின் அம்மா கலாவதி ஆன்ட்டி வந்தார். மனோ இரண்டு நாளில் வர்றானாம்மா.. கடைசி ஆறு மாதங்கள் ப்ராஜெக்ட் தானாமே அதை சென்னையிலேயே பண்ணப் போகிறானாம். அதோடு இங்கே கம்பெனி ஆரம்பிக்கும் வேலையையும் செய்ய வேண்டுமாம்..  இது புரியாது போகும் என்று நினைத்தாரோ என்னவோ, இனி எல்லா நாட்களும் காலையும் மாலையும் மனோ இங்கேயே இருப்பான் என்று விளக்கமாக மகிழ்ச்சியைக் குரலில் கலந்து சொன்ன போது கண்மணிக்கு அவள் உலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த லைட் எல்லாம் பளிச் பளிச் என்று துடிக்க ஆரம்பித்தது. எவ்வளவு மகிழ்ச்சியோ அதைவிட பல மடங்காய்  அவ்வளவு பயமும்.

பயமென்றால் எப்படின்னு கேட்டீங்கனா இந்த புதையலைக் காக்கும் பூதத்திற்கு வருமே அந்த பயம். இவள் எந்த புதையலைப் பாதுகாக்கிறாள், அதை யாரிடமிருந்து பாதுகாக்கிறாள். கொஞ்சம் யோசித்து பார்த்ததில் தெரிந்த பதிலில் லைட் எல்லாம் மின்னலாக மாறி டமால் டுமீல் என்று இதயத்துக்குள் அடிக்க முகமெல்லாம் மலர கலாவதி ஆன்ட்டியைப் பார்த்தவள் ஓடிப்போய் அவரைக் கட்டிக் கொண்டு சுற்றினாள். மகன் வருகையில் மகிழ்ந்திருந்த அந்த தாய்க்கும் அவளோடு சுற்றுவது சுகமாய்தான் இருந்தது.

அன்று முழுவதும் அவள் எண்ணத்தில் ஓடியது எப்பொழுது எப்பொழுது என்பது தான். எப்பொழுதுமே மனோ ஸ்பெசல் தான். ஆனால் இப்படியெல்லாம் அவள் நினைத்ததேயில்லை. பதின்வயதில் அவளோடுதான் இருந்தான், தினமும் பார்த்து பேசிக் கொண்டு இருந்தார்கள்.. அப்பொழுதெல்லாம் அப்படி… சொல்லப் போனால் அந்த அடலஸன்ட் க்ரஷ் என்பார்களே அப்படி ஒன்று இவளுக்கும் வர ‘அந்த சிவாவைப் பிடிக்கும். போய் சொல்லு மனோ.. ப்ளீஸ்’ என்று அவனைத் தூதே அனுப்பியிருக்கிறாள். அப்புறம் எப்போது?.. கல்லூரி தோழி அந்த பவிகூட ஒருநாள் கேட்டாள் ‘நீயும் மனோவும் லவ்வர்ஸ் ஆ’ என்று.

சீச்சீ.. இல்லையே.

பின் எல்லாவற்றையும் அவனிடம் சொல்வேன் என்கிறாயே..

ஏன்னா அவன் என் ஃப்ரெண்ட்.

வெறும் ஃப்ரெண்ட் மட்டுமா..

ஏன்.. ஒரு ஆணும் பெண்ணும் ஃப்ரெண்டாய் மட்டும் இருக்கக் கூடாதா.. உனக்கு ஔவை அதியமான் தெரியுமா என்று பாடம் எடுத்து அனுப்பினாள்.

அவ்வளவு ஏன் மாதத்திற்கொரு கேர்ள் ப்ரெண்ட் என்று சொன்ன போது கூட அது தப்பு என்றுதான் கோபப்பட்டாளே தவிர.. அதற்கு தான் கோபப் பட்டாளா..  தன்னையே யாரோ போல் ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பது சிரிப்பைத்  தர புன்னகையுடன் தலையில் தட்டிக் கொண்டாள்.

‘நான் வேணும்னா ஹெல்ப் பண்ணவா’ கேட்ட அரவிந்தை  எதற்கு என்று கண்களால் கண் விரித்துப் பார்க்க ‘இல்லை நீயே கொட்டிக் கொண்டிருக்கிறாயே.. அதுதான் நானும் தலையில் இரண்டுகொட்டு கொட்டுகிறேன்’  அப்பாவி போல் கேட்டான். அந்த மொக்கை ஜோக்கிற்கு சத்தமாய் சிரித்து போடா ஸ்டுபிட் என்றபடி அவன் தலையிலும் ஒரு தட்டு தட்டி விட்டு ஓடினாள்.

ஆனால் இவள் சொன்ன ஸ்டுபிடு இவள்தான். பின்னே தான் எப்போது ஆரம்பித்தோம் எப்படி ஆரம்பித்தோம் என்று தன்னைப் பற்றியே யோசித்தவள் அவளுக்காக இன்னொருவனிடம் தூது போனவன், மாதத்திற்கு ஒரு கேர்ள்ஃப்ரெண்ட் என்று பெயர் பெற்றவன் அவனிடம் ஏதாவது பாதிப்பு இருக்குமா என்று யோசிக்கவேயில்லை.

மேகத்திலே மிதந்து கொண்டு பார்ப்பதெல்லாம் வானவில்லாய்த் தெரிய சுற்றியுள்ளோரெல்லாம் அற்ப‌மனிதர்கள் என்ற ரேஞ்சில் பறந்து கொண்டிருந்த கண்மணியைக் கீழே இறக்கியது சாட்சாத் நம்ம மனோதான். கீழே என்றால் தரைக்கு அல்ல அதையும் தாண்டி அதல பாதாளத்திற்கு இறக்கினான்.

அதை செய்வது அப்படி ஒன்றும் அவனுக்கு கடினமாகவும் இல்லை. அவள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த நன்னாளில் காரில் அவனுடைய பல ஃபோட்டோக்களில் சிரித்துக் கொண்டிருந்தார்களே அதே பொம்மை போன்ற பெண்ணோடு வந்திறங்கியதே மேகம் தாண்டி போய்க் கொண்டிருந்தக் கண்மணியைக் கீழே இறக்க போதுமானதாக இருந்தது.

மனோ திரும்பி வந்த அந்த ஆறு மாதங்களின்  நினைவுகள் இவ்ளோ யோசிச்சிட்ட.. என்னையும் கொஞ்சம் யோசிச்சி  பாரேன் என்று தலையை லேசாகத் தூக்க  நச் என்று தலையில் ஒரு கொட்டு விழுந்தது. ஆச்சரியமாய் தன் கையைப்பார்க்க அது அப்பாவியாய் அவளைப் பார்த்து ‘இப்போ நான் இல்லைபா’ என்றது.

பிறந்தநாள் அதுவுமா எவ்ளோ நேரம் கண்மணி இப்படியே உட்கார்ந்திருப்ப.. ம்ம். எழுந்திரு கையில் பெல்ட் போல சார்ஜரை சுழட்டிக் கொண்டிருந்தாள் வெண்ணிலா. கல்லூரி தோழி. இனி ஒரு நாள் கூட அங்கு இருக்கக் கூடாது.. கூடாது என்ன கூடாது முடியாது என்றிருந்த சூழ்நிலையில் பெங்களூரில் வேலையும் தங்க இடமும் அளித்த தேவதை.

இதோ எழுந்து விட்டேன் நிலா.. இன்னும் ஒரே நிமிடம்..

பால் வாங்கி விட்டு வருவேன். நீ எந்திரிக்கல அவ்ளோதான் என்று மிரட்டியபடி அவள் செல்ல மணியைப் பார்த்த கண்மணியின் கண்கள் தன் வழக்கமாக விரிந்தது. இரண்டு மணி நேரமாகி விட்டது மனோவிடம் பேசி(!!) முடித்து.  ஆனால் இந்த இரண்டு மணி நேரத்தில் ஒன்றைக் கண்டுபிடித்தாகி விட்டாள். தள்ளிச் சென்றால் மறந்து விடும் என்ற முயற்சி சரியாக வேலை செய்யவில்லை. சரியாகவா.. கொஞ்சம் கூட வேலை செய்யவில்லை.ஒரு பிக்செல் தவறாமல் எல்லாம் கண்முன் வருகிறதே.

மனம் குழம்பியது. அடுத்த வாரம் ஊர் திரும்புவது தவறோ.. இங்கேயே இன்னும் சில நாட்கள்‌ சில வாரங்கள் சில மாதங்கள்.. ம்ம்ம்..

ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய என்று எஸ்.பி.பி பாட செல்ஃபோன்  டிஸ்பிளேயில் அருணாச்சலம்‌ சிரித்தார். புன்னகைத்தவாறே ஃபோனை எடுத்தாள்.

பிறந்த நாள் வாழ்த்துகள் கண்மணி..

தேங்க் யூ பா..

அம்மாவை இப்போதான்  பஸ் ஏற்றி விட்டு வந்தேன்மா. பன்னிரண்டுக்கு அங்கே வருவாள். கூப்பிட போய்விடு.

சரிப்பா..

அடுத்த வாரம் வந்து விடுவாய்தானேம்மா..

என்னப்பா..(சரியாகக் கேட்கவில்லையாம்)

அடுத்த வாரம் எப்பொழுது வரும் என்று ஆவலாக இருக்கிறதம்மா..

நீண்ட மூச்சை உள்ளிழுத்து ‘எனக்கும்தாம்பா’..

ஆசையாய் கேசம் வருடும் பெண் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்க தன்குரலாலே அவள் மனதை வருடி சரிம்மா.. பார்க்கலாம். உடம்பைப் பார்த்து கொள். என்று ஃபோனை வைத்தார்.

இந்த சென்னை பயணத்தை தள்ளி வைக்க கூடாது. அவளது சிறுபிள்ளைத்தனமான முடிவுகளுக்கு அவளை மதித்து சம்மதித்து எல்லாவற்றிலும் உறுதுணையாயிருந்தவர்கள் அவள் தாயும் தந்தையும்.

 

மனோவைப் பார்க்கக் கூடாது என்றால் அங்கேயே ஏன் இருக்கக் கூடாது. இதற்கு முன் சென்னை சென்ற இரண்டு தருணங்களிலும் சமாளித்தாள் தானே.. ஆம். அதுதான் சரி. இன்னும் மனோவிடம் சாதாரணமாய் பேசும் மனம் வரவில்லை. அதுவரை.. அவளாகப் போனால்தானே உண்டு, அவள் போகப் போவது இல்லை. அவனே வந்தாலும், தலை வலிக்கலாம், தூக்கம் வரலாம். காரணங்களா இல்லை..

கண்கள் கலங்க ஃபோனை வெறிக்கும் தன் பணியை மீண்டும் தொடங்கினாள் கண்மணி.

 

 

error: Content is protected !!