Un Vizhigalil Vizhutha Naatkalil – 21

Un Vizhigalil Vizhutha Naatkalil – 21

“ அங்க என்ன நடக்குதுன்னு வேற தெரியலயே! “ எரிச்சலுடன் கத்தினாள் வசுந்தரா.

“ அங்க ஒன்னும் பெருசா நடக்காது. ரெண்டு பேரும் ….” வில்லி சொல்ல வர

“ போதும் போதும் சொல்லாத.. “ அவனை இடையிட்டு பாதியிலேயே நிறுத்தினாள்.

“ சரி விடுங்க , முதல்ல நான் யாரு என்னனு சொல்லிடறேன்…” என்று ஆரம்பித்தவன், அவனைப் பற்றியும் நேற்று வெற்றியிடம் தான் குழப்பியது வரை விலாவரியாகச் சொன்னான்.

அனைத்தையும் அறிந்து கொண்ட வசுந்தராவின் முகத்தில் லேசாக புன்னகை வந்தது.

“ சரி , இனிமே ஜீவா எனக்குத் தான்னு எனக்கு நம்பிக்கை வந்துடுச்சு. அதுக்கு நீ என் கூட இருக்கணும். “ அவனுக்கு ஆணை பிறப்பிக்க,

“ நான் உங்க கூட இருந்தா எனக்கு என்ன லாபம்”

“ அட முட்டாளே! ஜீவா எனக்குன்னா , அப்புறம் அந்த அப்பாவி வாணிக்கு யார் வாழ்க்கை குடுப்பா நீ தான !”

“ அது சரி. ஆனா இதுல எதுவும் பிரச்சனை வராதுல்ல, வெளில தெரிஞ்சா அந்த வெற்றி என்னை துவச்சு காயப் போட்றுவான். அப்புறம் நான் போய் சேர வேண்டியது தான். சமோசாக்கு ஆசப் பட்டு சாக்கடைல விழுந்த மாதிரி ஆயிடக் கூடாதுல “ அவனின் பயம் அவனுக்கு.

“ சரி சரி. எல்லாம் விளக்கமா நாம அப்பறம் பேசிக்கலாம். இப்போ நான் கெளம்பறேன். மழை நிக்கற மாதிரி இருக்கு, அவங்க ரெண்டுபேரும் வந்தா மாடிப்போம். வா போலாம்.” இருவரும் அங்கிருந்து சென்ற பின்பு ,

சிறிது நேரத்தில் மழை விட , வாணியை வீட்டில் விட்டு ஜீவாவும் வீடு வந்து சேர்ந்தான்.

வீட்டில் மிகவும் மகிழ்ச்சியான சூழலே நிலவியது. நீண்ட நாட்களுக்குப் பிறகு நிம்மதியாக உணர்ந்தான்.

சில நாட்கள் இதயாவை சந்திப்பதும் அதைப் பற்றிய நினைவுகளுடனே ஆனந்தமாக இருந்தான் ஜீவா.

இவர்களை எப்படிப் பிரிப்பது என்று மனம் முழுதும் வஞ்சத்துடனே அலைந்தாள் வசுந்தரா. வீட்டில் தந்தையின் முன் நடித்துக் கொண்டு வில்லியுடன் திட்டம் போட்டுக் கொண்டிருந்தாள்.

அந்த நேரத்தில் தான் , வெற்றி ஜீவாவின் வீட்டில் இருந்து தாம்பூலம் மாற்றிக் கொள்ள ஒரு நாள் பார்த்து வந்திருந்தான்.

ரேகா வும் ஏற்கனவே சம்மதித்து இருந்ததால் , ஜீவாவிடம் அந்த வாரம் வெள்ளிக் கிழமை நல்ல நாள் என்றும் வீட்டிற்கு அனைவருடனும் வருமாறும் போன் செய்தான்.

அனைவரும் வீட்டில் இருந்த சமயம் , வெற்றி கூறியதை தவசியிடம் சொல்ல,

“ சரி அப்போ வெள்ளிக் கிழமை எல்லாரும் லீவ் போடுங்க, குடும்பமா போனாத் தான் நல்லா இருக்கும். யமுனா , சுபி உங்களுக்குத் தான் சொல்றேன்.” கூறிச் சென்றார்.

“ அப்பா நான் மொத நாள் லேந்தே லீவ்….” சுபி வாய் விட,

யம்மு அவள் காதைக் கடித்தாள்.

“ ஏ பிராட் ! நீ ஏன் லீவ்ன்னு எனக்குத் தெரியும், ஆனந்த் கூட ஊர் சுத்தப் போறியா”

“ தெரியுதில்ல … கொஞ்சம் கம்முனு இரு… அப்புறம் அதுக்கு வேற அம்மா கிட்ட பாட்டு வாங்கணும்”

“ ஹா ஹா… பாத்து நீ ஊர் சுத்துறது ஏற்கனவே அரசல் புரசலா தெரியும்.. கொஞ்சம் கவனமா இரு!” யமுனா கொஞ்சம் கண்டிப்பாகக் சொல்ல,

“ நான் சுத்தறது இருக்கட்டும். நீ எப்போ உன் ஆள கூட்டிட்டு சுத்தப் போற ?”

“ ம்ம்ம் அவரு  என்னை விட மோசம்.. போன் பண்ணவே யோசிச்ச ஆளு .. ஊர் சுத்த வருவாருன்னு நினைக்கற.. ம்ம் ஹும்ம்… நோ சான்ஸ்… “ அலுத்துக் கொண்டாள்.

ஜீவா வின் இந்தப் பெண் பார்க்கும் விஷயத்தைப் பற்றி சங்கரி, ஆனந்தின் வீட்டில் தெரியப் படுத்த அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

அதே போல நண்பனாகவும் , எதிர்கால சம்மந்தியாகவும் இருக்கும் வரதனிடம் , தவசி விஷயத்தைச் சொல்ல, அவரின் வீட்டில் இருப்பவர்களுக்கும் இந்த விஷயம் தெரிந்தது.

ஏற்கனவே மனதில் பல திட்டங்களைப் போட்டு , எதை செயல் படுத்தலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த வசுந்தராவிற்கு இந்த விஷயம் ஹல்வா சாப்பிட்டது போல இருந்தது.

அன்று இரவு அனைவரும் உறங்கியதும் தன் செல்போனை எடுத்துக் கொண்டு மாடிக்கு வந்தாள்.சுற்றும் முற்றும் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு , போனை எடுக்க , பின்னால் இருந்து குரல் கேட்டது.

“ இன்னும் தூங்காம என்ன பன்ற?” சேரனின் குரல் தான்.

பதில் சொல்வதற்குத் திரும்பினாள். அவனோ அந்தப் புறமாக திரும்பி நின்று கொண்டிருந்தான்.

பிறகு தான் அவன் போனில் பேசுவது புரிந்தது வசுந்தராவிற்கு. சேரன் தன்னை கவனிக்கும் முன் ஒளிந்து கொண்டாள். அவன் போனில் யமுனாவிடம் தான் பேசுகிறான் என்பதைப் புரிந்து கொண்டாள்.

இது தெறியாமல் இவன் பேச,

“ என்ன யமுனா திட்ற… !”

“ அடடா… சாருக்கு நான் திட்றது கூட இவ்ளோ சீக்கிரம் தெரிஞ்சுடுச்சே!”

“ ஒய்! நக்கலா… வந்தேன்னு வை… “

“ நீங்க வரலன்னு தான் திட்றதே… சுபீ கூட அண்ணன்னுக்கு பொண்ணு பார்க்க போறப்ப லீவ் போடுன்னா, முதல் நாளே லீவ் போட்டு சுத்த போறா…நீங்களும் இருக்கீங்களே… “

“ என்ன, வெள்ளிக் கிழமை தான உங்க அண்ணனுக்கு பொண்ணு பார்க்க போறீங்க… சுபி ஏன் வியாழக் கிழமையும் லீவ் போடறா?” பின்னால் வில்லங்கம் இருப்பது தெறியாமல் கத்திப் பேசினான் சேரன்.

“ ம்ம்… முதல் நாள் அவ ஸ்வீட் பலகாரம் எல்லாம் செய்யப் போறா.. இவ்ளோ அப்பாவிய வெச்சுகிட்டு நான் என்ன தான் பண்ணப் போறேனோ .. ஆண்டவா என் நிலமைய கொஞ்சம் கவனி டா!” தலையில் அடித்துக் கொண்டாள் யமுனா.

“ ஓ! அவ ஆனந்தோட ஊர் சுத்தப் போறாளா!”

“ ம்ம்ம்…. நீங்க கண்டுபிடிக்கறதுக்குள்ள , அவ கல்யாணம் பண்ணி குழந்தை பெத்து அதை ஸ்க்கூலுக்கே அனுப்பிடுவா!”

“ ஹா ஹா… சரி டா… கொஞ்சம் பொறுமையா இரு , நானும் ஒரு நாள் லீவ் போட்டு வரேன் . நாமளும் வெளில போவோம்” சமாதானம் செய்ய முற்பட்டான்.

“ ம்ம் பாப்போம்… சரி ரொம்ப பேசிட்டு இருந்தா அம்மா எழுந்து வந்துடுவாங்க.. குட் நைட்… “

“ சரி டா.. குட் நைட்” சிரித்துக் கொண்டே அவன் திரும்ப , சட்டென மறுபக்கம் ஒளிந்தால் வசு.

அவளது உடை போல லேசாகத் தெரிய, பின்பு அது காயப் போட்டிருக்கும் துணி காற்றில் அசைவதாக நினைத்து அவன் சென்று விட்டான்.

அவன் சென்ற பிறகு நிம்மதியாக வெளியே வந்தாள் வசுந்தரா.

“ ஜீவா! என்னைப் பொண்ணு பாக்க வந்துட்டு பாக்காம கூட போனில்ல ,இப்போ  நீங்க எப்படி போய் அந்த வாணிய மட்டும்  பொண்ணு பாக்கறன்னு நானும் பாக்கறேன். “

உடனே வில்லியமிற்கு போன் செய்தாள்.

இவளுடைய பிளானை சொன்னதும் , வில்லி சற்று பதட்டமானான்.

“ இதெல்லாம் சரியா வருமா அக்கா!” தயங்கிக் கொண்டு கேட்க,

“ நமக்கு வேண்டியது அவங்க பொண்ணு பார்க்கப் போகக் கூடாது. அப்போ தான் அந்த வெற்றிய நீ நம்ப வைக்க முடியும், இவங்களையும் கொஞ்சம் கலங்க வைக்க முடியும். புரியுதா.. சொன்னதை செய்! உனக்கு நான் ஆளுங்கள வேணாலும் என் கம்பனிலேந்து அனுப்பறேன்.”

“ அதல்லாம் வேணாம். கூட்டம் சேர்க்காதீங்க நமக்குத் தான் ஆபத்து. ஏன்னா இது வெளிய தெரியாம  இருக்கணும். தெரிஞ்சா நான் ஜெயில்ல களி திங்க வேண்டியது தான். “ கொஞ்சம் பயம் இருக்கவே செய்தது.

ஒரு மனிதன் தனக்கு ஆசைப்பட்ட ஒன்று கிடைக்கவில்லை என்றால் அதனை அடைந்தே தீர வேண்டும் என்று மனதில் சிலருக்குத் தோன்றிவிடுவதால் அவர்களை தவறான பாதைக்கும் அது வெகு சுலபமாக அழைத்துச் சென்று விடுகிறது.

சிலர் அது கிடைக்காவிட்டாலும் , தனக்கு இருப்பதை வைத்துத் திருப்திப் பட்டுக் கொள்கின்றனர்.

வெகு சிலரை அதை அடைய நேர் வழியில் முயற்சி செய்கின்றனர்.

இவை அனைத்திற்கும் காரணம் , அவர்கள் வளரும் சூழலும் , கிடக்கப் பெரும் அனுபவங்களுமே !

ஜீவா , தன் காதலை அடைய நேர் வழியில் தான் முயற்சி செய்தான்.

ஆனால் வில்லியும் வசுவும் தங்கள் ஆசையை நிறைவேற்ற எந்த வழி வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம் என்று தவறாக யோசிக்கின்றனர்.

இதில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் இவர்களின் ஆட்டத்தில் சற்றும் சம்மந்தம் இல்லாத சுபத்ரா இதில் பலியாடாவது தான் விதியின் விளையாட்டு.

வாணிக்கு பெண் பார்க்க வருகிறார்கள் என்று சொன்னதிலிருந்து தலை கால் புரியவில்லை. எப்போதும் பூரிப்புடனேயே இருந்தாள்.

அன்று மழையில் நின்ற காட்சிகள் அவளை மேலும் தூங்க விடாமல் செய்தது.

அவனை மழையில் நனைய விடாமல் கட்டிக் கொண்டவள், தன்னுடைய தாவணி அந்த ஈரத்தில் நனைந்து உடலோடு ஒட்டி இருப்பதை சிறிதும் உணரவில்லை.

அவன் கைகளே அந்நிலையை அவளுக்குப் புரியவைத்தது. அவனோடு ஒட்டி நிற்க, இடையில் அவன் எழுதிய கோலங்கள் அவளை பஞ்சு போன்ற மேகத்தினுள் தள்ளியது போல உணர்ந்தாள்.

தன்னுடைய இதயா , இனி தனக்கு மட்டுமே சொந்தமாகப் போகும் இதயாவை அவன் இன்று உரிமையோடு தழுவினான்.

அவள் விழிகளை சந்தித்த முதல் நாளிலிருந்து இன்று வரை நடந்தது யாவும் அவனால் நம்பவே முடியவில்லை. அந்தக் விழிகளின் பார்வை பரிமாற்றம் அவனை போராட வைத்து இன்று பெற்றவர்கள் சம்மதம் வரைப் போகச் செய்துள்ளது.

அவளை தனக்கே தனக்காக உணர்ந்தான். அவளது ஈரமான தோள்களில் தன் முகத்தைப் பதித்து அவளை மேலும் நெளியச் செய்தான்.

அடுத்த இடி சத்தம் கேட்கும் வரை அவர்கள் தங்கள் வசம் இல்லை . எல்லை தாண்ட விடாமல் இயற்கைத் தடுத்தது. இருவரும் விலகி நிற்க, மழையும் சற்று நின்றது.

அவளை வீடு வரை கொண்டு வந்து விட்டவன், எதுவும் பேசவில்லை. இருவரும் அந்த நிகழ்விலிருந்து வெளி வர விரும்பவில்லை.

இப்போதும் அவனது மீசையின் குறுகுறுப்பை தன் கழுத்து வளைவில் உணர்ந்தாள்.

வெட்கத்தில் கண்ணங்கள் சிவக்க , எதுவும் செய்தத் தோன்றாமல் ஒரே இடத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

 ரேகா வந்து அழைத்த போது தான் , எவ்வளவு நேரம் இப்படியே இருக்கிறோம் என்பது புரிந்தது.

“ வா டி கடைக்குப் போய் உனக்கு நல்ல புடவை எடுத்துட்டு , அப்படியே  மாமா வீட்டுல விஷயத்தை சொல்லிட்டு வருவோம்.” அவளை அழைக்க, வெற்றி தடுத்தான்.

“ அம்மா! அவ வேண்டாம். நாம மட்டும் போவோம். நீங்களே அவளுக்கு புடவை செலக்ட் செய்ங்க . மாமா கிட்ட இப்போ சொல்ல வேண்டாம்.” அழுத்தமாகச் சொல்ல,

“ எப்படி வெற்றி சொல்லாம இருக்கறது. அவங்க தப்பா நினைப்பாங்க. ஏற்கனவே ….”

“ அம்மா! நான் சொல்றத கேளுங்க. இப்போ அவங்க பொண்ணு பாக்க தான வராங்க. நிச்சயம் ஆகட்டும் அப்பறம் சொல்லிக்கலாம். கிளம்புங்க .“ வீட்டில் வாணியை விட்டு விட்டு இருவரும் சென்றனர்.

கடைக்குச் சென்றவன் ரேகாவை புடவை எடுக்கச் சொல்லிவிட்டு தான் மட்டும் வெளியே வந்தான்.

அங்கே வில்லியம் யாருடனோ பேசிக் கொண்டு கையில் சிகரெட்டுடன் இருப்பதைக் கண்டான். கூட இருந்தவர்கள் பார்க்க ரவுடிகள் போல இருக்கவே, அவனுக்கு வில்லியின் மேல் இருந்த அபிப்பிராயம் அடியோடு குறைந்தது.

‘ நல்ல பையன்னு நெனச்சேனே! சிகரெட் வேற பிடிக்கறான். மோசமான சகவாசம் வேற இருக்கும் போலிருக்கே! வாணி கிட்ட அதிகம் பேசாதன்னு சொல்லி வைக்கணும். ச்சே! இவன் பேச்சை கேட்டு ஜீவா வ வேற தப்பா நினைக்கறோம். யாரை நம்பறதுனே தெரியல.

இவன் சொன்ன மாதிரி அவன் அப்பா அம்மாவோட வாராம இருக்கட்டும். அப்புறம் இருக்கு! ‘

எதையும் யாரையும் நம்ப முடியாமல் தவித்தான் வெற்றிவேல்.

 

 

error: Content is protected !!