UUU–EPi 13

103977454_653445081909496_2472649225753995686_n

அத்தியாயம் 13

சாக்லேட் சாப்பிடுவதால் குண்டாகிறோம், அதோடு நமது கொலேஸ்டெரோலையும் அதிகரிக்கிறது எனும் மாயை உலவுகிறது. ஆராய்ச்சியின் படி சரியான விகிதத்தில் சாக்லேட் சாப்பிடுவது, நமது குட் கொலேஸ்ட்ரோலை அதிகரிக்கும்.

 

சிம்ரனின் தாடையில் குட்டியாய் பஞ்சு வைத்து ப்ளாஸ்திரி போட்டிருந்தார்கள். அதோடு கை கால்களில் இருந்த சிராய்ப்பையும் சுத்தம் செய்து மருந்திட்டிருந்தார்கள் அந்த கிளினிக்கில்.

முகத்தை சீரியசாக வைத்தப்படி, டாக்டர் முன்னே அமர்ந்திருக்கும் சிம்ரனையே பார்த்திருந்தான் ரிஷி. அவன் தோளில் களைத்துப் போய் தூங்கிக் கொண்டிருந்தாள் சீனி பாப்பா. ட்ரெஸ்ஸிங் செய்யப்படும் போது வலியில் முகத்தை சுளித்தாலும் வாயில் இருந்து சின்ன சத்தம் கூட வரவில்லை அவளுக்கு. இவன் தான் ஸ்,ஸ்,ஸ் என ரத்தத்தை அழுந்தத் துடைத்து மருந்திடும் போதெல்லாம் அவளுக்கு டப்பிங் கொடுத்தான். டாக்டரே அவனை ஒரு மாதிரி பார்க்க ஆரம்பித்து விட்டார்.   

கிச்சனில் சாக்லேட்டும் கையுமாய் இருந்தவனை போன் சத்தம் அசைத்துப் பார்த்தது. நந்தனாவுக்கும் சிம்ரனுக்கும் மட்டும் பிரத்தியேகமான ரிங் டோன் செட் செய்திருந்தான் ரிஷி. நந்து அழைத்தால் ‘கண்ணில் அன்பை சொல்வாளே’ எனும் பாடலும், சிம்ரன் அழைத்தால் ‘அழகான ராட்சசியே!’ பாடலும் வரும். மற்றவர்கள் அழைத்தால், சாக்லேட்டும் கையுமாய் இருக்கும் போது போனை எடுக்க மாட்டான். காண்செண்ட்ரேஷன் விடுபட்டு மெஷெர்மேண்ட் சொதப்பிவிடும் எனும் பயம்தான் அதற்கு காரணம். அந்த நேரத்தில் அழகான ராட்சசியே ரிங்டோன் ஒலிக்க, அவசரமாக கையைக் கழுவிவிட்டு போனை அட்டேண்ட் செய்தான் ரிஷி.

“ரிஷி, ரிஷி!”

“என்ன சிம்ரன், என்னாச்சு?” என பதட்டமாக கேட்டான் அவன்.

குழந்தையோடு ட்ரீப் போனவள் திடீரென போன் செய்யவும் பதட்டமாகியது அவனுக்கு.

“இஸ் பாப்பா ஆல்ரைட்?”

“அவ நல்லாருக்கா! நான் தான் இன்னொரு ஸ்டூடெண்ட் விழ போறான்னு பிடிக்கப் போய் விழுந்துட்டேன். ட்ரீப் முடியப் போகுது! நீங்க வந்து எங்கள ஏத்திக்கறீங்களா?”

பள்ளி ஏற்பாடு செய்திருந்த பஸ்சில் தான் சென்றிருந்தனர் இருவரும். ஆசிரியர்கள் ஸ்ட்ராபெரி செடி எப்படி வளர்கிறது என விளக்கி, ஆளுக்கொரு ப்ளாஸ்டிக் காண்டேய்னர் கொடுத்து பழம் பறிக்க கற்றுக் கொடுத்தார்கள். சிம்ரனும் மற்ற பெற்றவர்களோடு சிரித்துப் பேசிக் கொண்டு, சின்னவளுக்கு உதவிக் கொண்டு பொழுதை இனிமையாகத்தான் கழித்தாள். குட்டி பழம் பறித்து முடித்ததும், அதை அளந்து அதற்குரிய பணத்தை செலுத்தி பாக் செய்துக் கொண்டாள் சிம்ரன். பிறகு அங்கிருந்த கபேவுக்கு போனார்கள் அனைவரும். குட்டி கேட்ட ஸ்ட்ராபெரி ஷேக் வாங்கிக் கொடுத்தவள், அவளோடு மேசையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள்.

பானம் அருந்தி முடித்த சின்ன வாண்டுகள் ஓடிப்பிடித்து விளையாட ஆரம்பித்தார்கள். சீனி பாப்பாவைப் பிடிக்க வந்த ஸ்டீபனை ஹேலென் வந்து இடிக்க, தடுமாறி விழப் போனான் அவன். கடைசி நிமிடத்தில் தன்னை ஒரு நிலைப்படுத்தி விழாமல் அவன் சமாளிக்க, நம் சூப்பர்வூமன் அவனைப் பிடிக்கப் பாய்ந்து போய், இவள் கீழே விழுந்துக் கிடந்தாள். இந்த முறை விழுந்த வேகத்துக்கு தாடையில் சரியான அடி. தோட்டம் என்பதால் செம்மண் தான் தரையாக இருந்தது. இல்லையென்றால் இன்னும் பலமாக அடிப்பட்டிருக்கும் சிம்ரனுக்கு.

பிள்ளைகளைப் பார்க்க வந்த ஆசிரியர்கள் கடைசியில் சிம்ரனை கவனிக்கும்படி ஆகிவிட்டது. ஒன்றும் இல்லை என இவள் மறுத்தாலும் அவளைப் பிடித்து ஒரு நாற்காலியில் அமர வைத்து விட்டனர். ரோஷினியோ அவள் தாடையில் இருந்து வந்த ரத்தத்தைப் பார்த்து ஒரே அழுகை. ஆசிரியர் ஒருவர் எமெர்ஜென்சி கிட்டில் இருந்து பஞ்சு எடுத்து அவள் காயத்தை துடைத்து விட்டார். அப்படியும் ரத்தம் வந்துக் கொண்டே இருந்தது.

“சிம்மு ஆண்ட்டி! சிம்மு ஆண்ட்டி வலிக்குதா?” என நொடிக்கொரு முறை கேட்டப்படியே இருந்தாள் சின்னவள். அப்படியே வலியோடு பள்ளி பேருந்திலேயே கிளம்பி விடலாம், அங்கே போய் கிளினிக்குக்கு போய் விடலாம் என தான் நினைத்தாள் சிம்ரன். ஆனால் அழும் சின்னவளை சமாளிக்க முடியவில்லை அவளால். அதனால் தான் ரிஷியை அழைத்தாள்.

“என்னது விழுந்துட்டீயா? மறுபடியுமா? ரொம்ப அடியா சிம்ரன்?” என பதறினான் அவன்.

“லேசாத்தான்!”

“நெஜமா சொல்லு! எங்கெல்லாம் அடி? கால்ல, கையில, மூஞ்சில?” என பதட்டத்தில் கேள்வியாய் கேட்டுத் தள்ளினான் ரிஷி.

“வலிக்குது ரிஷி!” என அவள் சொல்ல சட்டென ஆப் ஆனவன்,

“தோ, வந்துட்டேன். அங்கயே இருங்க” என சொல்லி செய்துக் கொண்டிருந்த வேலையை அப்படியே போட்டுவிட்டு கிளம்பினான்.

அங்கே போய், ரத்தக்காயத்துடன் நின்றிருக்கும் சிம்ரனைப் பார்த்தவனுக்கு கோபம் பொங்கி விட்டது.

சின்னவளைத் தூக்கிக் கொண்டவன்,

“இங்கயே நில்லு, வரேன்” என சொல்லி போனான்.

குட்டியை கார் சீட்டில் அமர்த்தி சீட் பேல்ட் போட்டு விட்டு சிம்ரனிடம் வந்தவன், ஒரு கை கொண்டு அவள் கையை மென்மையாகப் பற்றி இன்னொரு கை கொண்டு இடுப்பை வளைத்து நடத்திப் போய் காரில் அமர்த்தினான் ரிஷி. சிம்மு கும்மு அவதாரம் எடுத்து விட்டால் சின்னக் குழந்தைகள் முன் மானக்கேடாகி விடுமே என தான் நடத்திக் கூட்டிப் போனான். இல்லாவிட்டால் பாகுபலி லிங்கத்தை தூக்கியது போல இவன் பெண் சிங்கத்தைத் தூக்கி சென்றிருப்பான்.  

“இதுதான் லேசான அடியா? அறிவில்ல உனக்கு!! எப்பப் பாரு சின்ன புள்ள கணக்கா எங்கயாச்சும் விழுந்து வைக்க வேண்டியது. கண்ணு ரெண்டையும் என்ன பொடனியிலயா வச்சிருக்க! பார்த்து பத்திரமா இருக்கத் தெரியாது?” என வழி நெடுக சிம்ரனை தாளித்துக் கொண்டே வந்தான் ரிஷி.

பின்னால் கார் சீட்டில் அமர்ந்திருந்த குட்டி அலைந்த களைப்பிலும், அழுத களைப்பிலும் தூங்கி இருக்க, அது வரை அமைதியாய் இருந்த சிம்ரன் தன் வாயைத் திறந்தாள்.

ரிஷி கொடுத்த துண்டில் தாடையை அழுத்திக் கொண்டே,

“எப்ப என்ன பிரச்சனை? ஏன் இந்த குதி குதிக்கிறீங்க?” என கேட்டாள்.

“ரத்தம் வருது சிம்ரன்”

“கீழ விழுந்தா ரத்தம் வராம துளசி தீர்த்தமா வரும்?”

“என்ன, ஜோக்கா!”

“அப்கோர்ஸ்! துன்பம் வந்தா சிரிக்கனும் சேகர். இல்லைனா நம்ம பொழப்பு சிரிப்பா சிரிச்சிரும்”

“வலிக்கலையா உனக்கு?” என கடுப்பில் கேட்டான் அவன்.

“வலிக்குதுதான்! அதுக்கு என்ன செய்யட்டும்? அழவா? அழுதா வலி போய்டுமா? வலி நல்லது நந்தா சார். வலிக்கும் போதுதான் நாம இன்னும் உயிரோடத்தான் இருக்கோம்ன்ற உணர்வு இருக்கும். வலிக்கலைனா செத்துட்டோம்னு அர்த்தம்!”

“ம்ப்ச்! சீரியசா பேசிட்டு இருக்கறப்போ கோபம் வர மாதிரி தத்துவம் சொல்லாதடி! அப்படியே அறைஞ்சி வச்சிடப் போறேன்”

“என்ன என்ன? டீ யா? அறைஞ்சிடுவீங்களா? ஹலோ என்ன கூராங் அஜாரா(மரியாதை இல்லாமல் பேசுவது) போய்ட்டு இருக்கு பேச்சுலாம்!! வோர்க் ப்ளேஸ் ஹாராஸ்மேண்ட்னு போலிஸ்ல புடிச்சுக் குடுத்துடுவேன்!”

“கொஞ்ச நேரம் பேசாம வரீயா சிம்ரன்? தாடை வலிக்கப் போகுது!”

“நான் பேசாமத்தான் வந்தேன். நீங்கதான் கடுப்பைக் கிளப்பிப் பேச வைக்கறீங்க!”

“பெரிய இம்சைடி நீ!”

“நான் இம்சைனா, நீங்க அந்த இம்சைக்கே அரசன்!!”

“சரி சரி! நான் ஒன்னும் பேசல! நீயும் பேசாம வா, வலிக்கப் போகுது” என சொன்னவன்,

“ராட்சசி!” என மெல்ல முணுமுணுத்தான்.

“போடா பன்னி!” என இவளும் மெல்ல முணுமுணுத்தாள்.

டாக்டரிடம் காட்டி விட்டு, மருந்தும் வாங்கிக் கொண்டு மீண்டும் காருக்கு வந்தனர் மூவரும். அப்பொழுதுதான் கண் விழித்தாள் சின்னவள். சிம்ரனின் பிளாஸ்திரியைப் பார்த்து,

“வலிக்குதா சிம்மு ஆண்ட்டி?” என மீண்டும் ஆரம்பித்தாள்.

“கொஞ்சமா வலிக்குது” என புன்னகைத்தாள் சிம்ரன்.

“சீனி பாப்பா தூக்குங்க” என ரிஷியிடம் இருந்து சிம்ரனிடம் தாவினாள் ரோஷினி.

“சிம்மு ஆண்ட்டிக்கு வலிக்குதுல! அதனால மாமா கிட்டயே இருடாம்மா”

“வலிக்கி கிஸ் குடுக்கனும் மாமா! அப்போத்தான் பேய்ன் ஓடிப்போகும்”

சின்னவளை சிம்ரனின் அருகில் கொண்டு போனான் ரிஷி. மாமனின் பிடியில் இருந்துக் கொண்டே சிம்ரனின் தாடையில் முத்தமிட்டாள் குட்டி.

“வலி போச்சா?”

“ஓடிப்போச்சு சீனி பாப்பா!” என சிரித்தாள் சிம்ரன்.

அவளுக்கு மிக அருகில் நின்றிருந்தவன், அவள் காதருகே குனிந்து மெல்லிய ஹஸ்க்கி குரலில்,

“நெஜமா வலி போய்டுச்சா? பாப்பா குடுத்ததுல தாடை வலி மட்டும் தானே போயிருக்கும்! நான் வேணா கை கால் வலிலாம் போகிற மாதிரி இன்னும் கொஞ்சம் அழுத்தமா, தாராளமா எச்சி வச்சி உதட்டுல உம்மா குடுக்கட்டா சிம்மு பேபி?” என கேட்டு சிரித்தான்.

“குடுத்துத்தான் பாருங்களேன் நாய் சேகர்! அப்புறம் சாப்பிட வாய் இருக்காது! கடிச்சுத் துப்பிடுவேன்!” என சன்னக் குரலில் மிரட்டியவள், மெல்ல நொண்டியப்படியே காரில் ஏறி குட்டியின் அருகே அமர்ந்துக் கொண்டாள்.

அவளையேப் பார்த்திருந்தவனின் முகத்தில் புன்னகை மட்டுமே அப்பியிருந்தது. முந்திய நாள் எடுத்த சபதம் வெயிலில் வைத்த சாக்லேட்டைப் போல் உருகி கரைந்துப் போயிருந்தது.

அடுத்து வந்த ஒரு வாரமும் வேலை வேலை என மூச்சு விடக் கூட நேரமில்லாமல் ஓடியது ரிஷிக்கு. சிம்ரனை ஓய்வெடுக்கும் படி சொல்லியிருந்தான். அதனால் அவள் வேலையும் இவன் தலையில் தான். ஷீலா பள்ளியில் விடுமுறை என முழுநேர வேலைக்கு வந்திருந்தாள் அன்று. அதனால் கொஞ்சம் ஓய்வுக் கிடைக்க, நந்தனாவின் வீட்டுக்குக் கிளம்பினான் ரிஷி. நேரமும் மாலையாகி இருக்க, அருகில் இருந்த இந்தியக் கடையில் நந்தனாவுக்குப் பிடித்த வடை, உருண்டையும், சீன கடையில் சிம்ரன் விரும்பி சாப்பிடும் ச்சக்கோய்(கோதுமை மாவில் செய்த பலகாரம்)யும் வாங்கி சென்றான். போன முறை குட்டிக்காக இவன் வாங்கி சென்றிருக்க, சிம்ரனும் விரும்பி சாப்பிட்டதை கவனிக்காததைப் போல கவனித்திருந்தான் இவன். ஆண்கள் வார்த்தையால் காதலை, பாசத்தை சொல்லாவிடிலும் மனைவிக்கு இது பிடிக்கும் என அறிந்து வாங்கி வரும் தின்பண்டங்களே சொல்லி விடும் அவர்களின் காதலை.(அப்டி நெனைச்சு மனச தேத்திக்குங்கப்பா! சும்மா நொய் நொய்ன்னு லவ் யூ சொல்லுன்னு மனுச பயல டார்ச்சர் பண்ணாதீங்கப்பா! எனக்குலாம் ஐ லவ் யூவ விட, இன்னிக்கு பிரியாணி சாப்பிட போலாமா தான் பிடிக்குது)

பலகாரம் வாங்கிக் கொண்டு இவன் காரில் ஏறி அமர, அழகான ராட்சசியே என இசைத்தது அவனின் போன். புன்னகையுடன் போனை எடுத்து காதுக்குக் கொடுத்தான் ரிஷி.

“நந்து சார், கெளம்பிட்டீங்களா?”

“எப்படி தெரியும் உனக்கு?”

“உங்க மேல ஸ்பை போட்டிருக்கேன்”

“ஸ்பைலாம் எதுக்கு சிம்ரன்! நீ ஹ்ம்னு சொல்லு இனிமே எங்க போனாலும் உன் கிட்ட சொல்லிட்டேப் போறேன், சொல்லிட்டே வரேன்” என வம்பிழுத்தான் ரிஷி.

“ஹ்ம்ம்ம்!!!”

“நான் ஹ்ம் தான் சொல்ல சொன்னேன்! நீ ஹ்ம்ம்ம்னு சொல்லிட்டே! சோ இது செல்லாது” என சொல்லி சிரித்தான் இவன்.

“ஓவரா ஆடாதீங்க மிஸ்டர் சேகர். நீங்க வேலையில இருந்து கிளம்பனா சொல்ல சொல்லி ஷீலா கிட்ட சொல்லி இருந்தேன். அவ தான் மேசேஜ் போட்டா”

“ஓ சரி! இப்ப எதுக்கு நான் கெளம்பிட்டனானு தெரிஞ்சுக்கனும் சிம்ரன் மேடமுக்கு!”

“நீங்க நந்துவை கொஞ்ச நேரம் வெளிய கூட்டிட்டுப் போறீங்களா?”

“எங்க, ஏன், எதுக்கு?”

“அது வந்து..ஒரு சர்ப்ரைஸ் பார்ட்டி குடுக்கலாம்னு தான். ப்ளிஸ் நந்தா சார்”

“எங்களுக்கு பேர்த்டே கூட இல்லையே பார்ட்டி குடுக்க! வேற எதுக்கு?”

“ச்சா! கூட்டிட்டுப் போன்னா கூட்டிட்டுப் போயேன். ஒரு ஓன் ஹவர் மட்டும். அத விட்டுட்டு நொய் நொய்னு கேள்வி கேக்கற! இப்படிலாம் கேள்வி கேட்டா பொண்ணுங்களுக்குப் பிடிக்காது! அப்புறம் லைப்லோங் சிங்கிள் தான் நீ”

“என்னன்னு கூப்ட நீ? ச்சாவா?”

“ஆமா! மச்சான், மச்சா ஆகி இப்போ ச்சா ஆகிருச்சாம். யூத் லேங்குவேஜ் பாஸ்! ப்ரேண்ட்ஸ்குள்ள இப்படித்தான் கூப்டுக்கறாங்களாம். ஷீலா சொன்னா! சோ நீங்க எனக்கு ச்சா, நான் உங்களுக்கு ச்சீ!”(இங்க ச்சா னு தான் கூப்டுக்கறாங்க இந்த யூத் பசங்க. மலாய், சீனர், இந்தியர் எல்லாரும். ஜோ எனவும் ஒருத்தரை ஒருத்தர் அழைத்துக் கொள்கிறார்கள்)

“ச்சை! போன வை! வரேன்”

வீட்டை அடைந்தவனை ஓடி வந்து வரவேற்றாள் சிம்ரன்.

“சீக்கிரம் கூட்டிப் போங்க! சீக்கிரம்”

“ஒரு டீ குடுக்க மாட்டியா முதல்ல! வீட்டுக்கு வந்ததும் விரட்டற!”

“நீங்க என்ன என் புருஷனா! வீட்டுக்கு வந்ததும் டீ போட்டுக் குடுத்து சாக்ஸ் கலட்டி விட்டு, தலை அமுக்கி விட!” என கிண்டலாகக் கேட்டவள், அவன் களைத்தத் தோற்றத்தைப் பார்த்து டீ கொண்டு வந்து கொடுத்தாள். டீயோடு அவன் வாங்கி வந்த பலகாரத்தையும் வைத்துக் கொடுத்தாள்.

இன்முகத்துடன் வாங்கிக் கொண்டவன், அவளையே ஆழ்ந்துப் பார்த்தான். அன்று முட்டி வரை இருக்கும் கலர்புல் ப்ளோரல் ட்ரெஸ் அணிந்திருந்தாள் சிம்ரன். கண்ணில் வானவில் கலவையாய் அழகிய லென்ஸ். அந்த வானவில் விழியில் வழுக்கி விழுந்தான் ரிஷி. தமக்கையின் கணைப்பு சத்தத்தில் தான் பூலோகத்துக்கு வந்தான் அவன்.

“என்னடா எங்கயோ என்னை வெளிய கூட்டிப் போறேன்னு சொன்னியாம்! சிம்ரன் கெளம்பு கெளம்புன்னு ஒரே டார்ச்சர்”

“ஓஹோ!” என்றவன் சிம்ரனைப் பார்க்க அவள் மூச்சா வந்த மூஞ்சுறு போல இளித்து வைத்தாள்.

‘இவளும் இவ சிரிப்பும்’ என முனகியவன்,

“வடைலாம் வாங்கிட்டு வந்தேன் பாரு, சாப்பிட்டுட்டு டீ குடிச்சுட்டு வா நந்து! பேபி பொறக்கற டைம்ல தேவைப்படற திங்ஸ்லாம் கொஞ்சம் வாங்கிக்கலாம்” என்றான் ரிஷி.

“ரோஷினியோட பழைய சட்டைலாம் இருக்குடா!”

“அதுக்குன்னு என் மருமக புள்ளைக்கு தெனம் பழசையே போட்டு விடுவியா! அதெல்லாம் முடியாது! புதுசாவும் கொஞ்சம் வாங்கிக்கலாம் வா.”

புன்னகையுடன் கிளம்பினாள் நந்தனா. எட்டாம் மாதம் முடியும் தருவாயில் இருக்க, பிறக்கப் போகும் பிள்ளைக்கும் தனக்கும் ஹாஸ்பிட்டலுக்கு எடுத்து செல்ல வேண்டிய பொருட்களை இன்னும் வாங்காமல் இருந்தாள். முதல் குழந்தைக்கு இரட்டையர்களும், ரவிபாரதியும் எல்லாம் பார்த்து பார்த்து வாங்கினார்கள். அந்த நினைப்பே நெஞ்சை கசக்கிப் பிழிய, முயன்று அதை பின்னே தள்ளினாள். வயிற்றில் உள்ள குழந்தைக்காகவாவது தான் தைரியமாய் இருப்பது முக்கியம் என ஹாஸ்பிட்டலில் இருந்து வந்ததில் இருந்து மனதை தேற்றி வைத்திருந்தாள் நந்தனா. தங்கள் காதல் கருவாய் மடி சேர்ந்திருக்க, அதை போற்றி பாதுகாப்பதுதான் அக்காதலுக்கு செய்யும் மரியாதை என மனதை உருவேற்றி இருந்தாள் பாரதியின் ரதி.  

குட்டி இன்னும் தூங்கிக் கொண்டிருக்க, அவளை தான் பார்த்துக் கொள்வதாக சொல்லி விட்டாள் சிம்ரன்.

இரட்டையர்கள் இருவரும் கிளம்ப, ரிஷியின் அருகே போனவள்,

“அங்கிருந்து கெளம்பறப்போ மேசேஜ் பண்ணுங்க நந்தா சார்” என மெல்லிய குரலில் சொன்னாள்.

“நந்தனாக்கு மட்டும் சர்ப்ரைஸ் பார்ட்டி தர! நான் உனக்கு முதலாளி தானே, எனக்கு ஒன்னும் தரமாட்டியா சிம்ரன்?” என கிசுகிசுப்பாக கேட்டான் ரிஷி.

“முதலாளிக்கு பார்ட்டிலாம் தர முடியாது! குடுக்கற பிசாத்து சம்பளத்துக்கு போண்டா டீன்னு எதாச்சும் வாங்கி மட்டும் தான் தர முடியும்”

‘போண்டா டீ வேணாம் கண்ணே

பொண்டாட்டியா வாடி முன்னே!’ என மனமோ கவிதை வசித்து ஜொள்ளு ஊத்த, அறிவோ

‘போண்டா டீ வேணாம் கண்ணா

போயிடுவ மண்ணோடு மண்ணா!’ என எச்சரிக்கை மணியடித்தது.

“பேசி முடிச்சாச்சுன்னா கெளம்பலாமா நந்தா சார்?” என கிண்டலாகக் கேட்டாள் நந்தனா.

ஒரு பெருமூச்சுடன் கிளம்பினான் நந்தா.

அன்றிரவு சர்ப்ரைஸ் பார்ட்டி என நந்தனா ஏற்பாடு செய்திருந்த ஏற்பாடுகளைப் பார்த்து இரட்டையர் இருவருக்கும் கண்கள் கலங்கிப் போனது.

பார்ட்டி வைத்தாள் அழகிய மங்கை

இரட்டையர்களுக்கு கண்களில் பொங்கியது ஆனந்த கங்கை!!!!!!

 

(உருகுவான்…)

(அடுத்த எபில முக்கிய சஸ்பென்ஸ் ஒன்னு கிளியர் ஆகும். அதோட கதையோட போக்கே மாறிடும்..13வது எபி வரைக்கும் வந்துட்டோம். ஹீரோக்கு லவ் வந்துருச்சுன்னு தெரிஞ்சுடுச்சி. நம்ம இளிப்பழகிக்கு லவ்வு வந்துச்சா, ஜவ்வு வந்துச்சான்னு எதாச்சும் புரிஞ்சதா டியர்ஸ்? நெக்ஸ்ட் எபில சந்திக்கும் வரை நன்றி வணக்கம். போன எபிக்கு லைக்ஸ், கமேண்ட், மீம் போட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி)