UUU–EPI 15
UUU–EPI 15
அத்தியாயம் 15
சாக்லேட்டை வாயில் திணித்து குதப்பி உண்ணுவதில் இல்லை அதன் சுவை. இதை ரசித்து ருசித்து சாப்பிடக் கூட வழிமுறைகள் இருக்கின்றன. சாக்லேட்டை தடவிப் பார்த்து, அதன் வாசத்தை முகர்ந்து, நிறத்தை உணர்ந்து, சிறிய அளவில் கடித்து, நாக்கின் மேலேயே அதை இருபது வினாடிகள் வைத்திருந்து ஆழ்ந்து அனுபவித்து உண்ண வேண்டும்.
உதடு துடிக்க உள்ளம் பதற ரிஷியின் முகத்தையேப் பார்த்திருந்தாள் சிம்ரன். இனி சிந்தியா என சொல்ல வேண்டுமோ!! நேம் கார்டைப் படித்துப் பார்த்தவனின் முகம் ஆச்சரியத்தில் மலர்ந்து, ஆத்திரத்தில் சிவந்து பின் அவமானத்தில் கூம்பிப் போனது. முகம் இருண்டுப் போய் நின்றவன் சிந்தியாவை நிமிர்ந்துப் பார்த்தான்.
ஆத்திரத்தையும் சோகத்தையும் ஒருங்கே சுமந்திருந்த அந்த பார்வையிலேயே பாதி மரித்துப் போனாள் சிந்தியா. இப்படி என்னை முட்டாளடிக்க எப்படி முடிந்தது உன்னால் என கண்ணசைவாலேயே கேள்வி கேட்டான் ரிஷி. அவனை நோக்கி இவள் ஓர் எட்டு வைக்க, சட்டென கையைத் தூக்கி அங்கேயே நில் என்பது போல சைகை செய்தான் ரிஷி. அவன் உடல் மொழி என்னை நெருங்காதே என சத்தமாய் மொழிந்தது.
“இப்போதைக்கு எதையும் பேச வேணாம்! நந்துவ பார்க்கலாம் முதல்ல! யார் என் வாழ்க்கையில வந்தாலும் போனாலும் என் கூட இருக்கப் போறது என்னோட ரத்த சொந்தம் மட்டும் தான்னு நல்லாவே புரிஞ்சிருச்சு. நீ யாரு, எவரு செவருன்றத எல்லாம் அவ பொழச்சு வந்ததும் பேசிக்கலாம். பொழைக்க வச்சிடுவத்தானே?”
“ரிஷி!!!” என இவள் குரல் நலிந்து ஒலிக்க,
“நந்தா!” என நந்துவின் குரல் வலியில் ஓங்கி ஒலித்தது.
இவர்களின் உணர்வு போராட்டம் நந்தனாவின் கத்தலில் ஒரு முடிவுக்கு வந்தது. சிந்தியா நந்தனாவின் அருகே ஓட, ரிஷி தன் மருமகளை அந்த அறையில் இருந்து வெளியே அழைத்துப் போனான். ஹாலில் இருந்த அவளது நாற்காலியில் குட்டியை அமர்த்தியவன்,
“சீனிம்மா, குட்டி பேபி கேக் சாப்பிட ரெடியாகிட்டாங்களாம். சிம்மு ஆண்ட்டி அம்மாவுக்கு ஊசி போட்டு பாப்பாவ வெளிய கொண்டு வர போறாங்க. நீங்க உள்ள வந்தா உங்களுக்கும் ஊசி போடுவாங்க. அதனால சமத்து குட்டியா இங்கயே உட்காந்து கார்ட்டுன் பாருங்க.” என மெல்லிய குரலில் சொன்னான்.
ஊசி எனும் சொல்லில் பயம் வர, அடம் செய்யாமல் அமைதியாக கார்ட்டுன் பார்க்க அமர்ந்தாள் சின்னவள். அதன் பிறகே, பெண்கள் இருவரும் இருக்கும் ரூமுக்கு ஓடினான் ரிஷி. வெளியே இன்னும் இடி இடித்து மழை கொட்டிக் கொண்டிருந்தது.
அங்கே ரூமின் உள்ளே வலி நிறைந்த குரலில்,
“சிம்மு, நீ யாரு? நந்தா ஏன் கோபமா பேசறான்? என்ன நடக்குது இங்க?” என கேட்டாள் நந்தனா.
“என் பேரு சிந்தியா! தியாஸ் மசாலா மில்ஸோட ஏகபோக வாரிசு. அட் தே சேம் டைம் ஐ வாஸ் அ கைனி.”
“ஒரு கைனிக்கு எங்க கடைல டாய்லட் கழுவுற அவசியம் என்ன?” வலியில் முகத்தை சுருக்கினாலும் குரல் திடமாக வந்தது நந்தனாவுக்கு.
“நந்தும்மா, ப்ளிஸ்! உங்களுக்கு எந்த வித கெட்டது செய்யவும் நான் வரல. இதை மட்டும் நான் உறுதியா சொல்லுவேன்! மத்தத பற்றி பிரசவம் முடிஞ்சு பேசலாம்டா! இத்தனை நாள் என் கிட்ட பழகிருக்கல்ல, என் மேல கொஞ்சம் கூட நம்பிக்கை வரலியா!”
“இதுல நான் மட்டும்….”என சொல்லி மூச்சு வாங்கியவள்,
“நான் மட்டும்னா நீ நடந்துகிட்ட விதத்துக்கு உன்னை..கண்ண மூடிட்டு நம்புவேன். ஆனா..அம்மா!!!!” என கத்தியவள், மீண்டும் மூச்சு வாங்கி,
“இதுல என் நந்தா சம்பந்தப்பட்டிருக்கான். என் கிட்ட அவன் சொல்லாம மறைச்சாலும், உன் மேல உசுரையே வச்சிருக்கான்னு எனக்கு நல்லாவே தெரியும்! இது கூட தெரியலைனா நான் என்ன ட்வீன் சிஸ்டர்! அவன மட்டும் கலங்கடிச்ச, உடம்பு தேறினதும் நீ எங்க போனாலும் தேடி வந்து சங்க கடிச்சுத் துப்பிடுவேன்” என மிரட்டினாள் நந்தனா.
இந்த மாதிரி நேரத்தில் கூட தமையனுக்காக பேசும் நந்தனாவை கண் இமைக்காமல் பார்த்திருந்தாள் சிந்தியா. ரூமின் உள்ளே ரிஷி நுழையவும் அவர்களின் பேச்சு வார்த்தை நின்றது.
சிறு வயதில் இருந்தே இரட்டையர்கள் இருவரும் ஒன்றாக சாப்பிட்டு ஒன்றாக குளித்து ஒன்றாக விளையாடி ஒன்றாக தூங்கி வளர்ந்திருக்கிறார்கள். நந்தனா பெரிய பெண் ஆனது முதல் இருவருக்கும் தனி ரூம்தான். ஆனால் இன்று தமக்கையின் பிரசவத்துக்கு தனது உதவி தேவை என உணர்ந்தவனுக்கு பயம், சங்கடம், சங்கோஜம் எல்லாம் பின்னால் போயிருந்தது. அவளின் உயிரும் வயிற்றில் இருக்கும் ஜீவனின் உயிரும் மட்டுமே பிரதானமாக இருந்தது அவனுக்கு.
ரூமுக்குள் நுழைந்தவன், நந்தனாவின் அலமாரியைத் திறந்து அவள் துவைத்து மடித்து வைத்திருக்கும் டவல்களை கையில் அள்ளிக் கொண்டான். அதோடு ஹீட்டரை சூடாக திறந்து சுடுநீரும் இரண்டு பக்கேட்களில் எடுத்து வந்தான்.
“வேற என்ன வேணும்?”
எந்த பெயரையும் சொல்லி விளிக்காமல் பொதுவாகவே கேட்டான் ரிஷி. வலியில் துடித்துக் கொண்டிருக்கும் தமக்கையைப் பார்க்கும் போது, நெஞ்சில் ரத்தக் கண்ணீரே வந்தது அவனுக்கு.
போன பிரசவத்தின் போது கொடுத்திருந்த தேதிக்கு ஒரு வாரத்துக்கு முன்பே, ஆண்கள் இருவரும் அவளை ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்திருந்தார்கள். பெண் துணை இல்லாதிருந்த வீட்டில், டாக்டரும் நர்சுமே துணை என பணம் தண்ணீராய் செலவழிந்ததைக் கூட பொருட்படுத்தாமல் நந்தனாவை ஹாஸ்பிட்டலில் வைத்துக் கவனித்துக் கொண்டனர். அவள் பிறக்க வைக்கும் வரை ரவிபாரதியும் அவளுடனே ஹாஸ்பிட்டலில் தங்கி இருந்தார். அதன் பிறகு கூட கொன்பைன்மெண்ட் செண்டர் எனப்படும் குழந்தைப் பிறந்த பெண்களையும் குழந்தையையும் சேர்த்துப் பார்த்துக் கொள்ளும் செண்டரில் அவளை சேர்த்து, முழுதாக தேறி வரும் வரை அங்கேயே வைத்திருந்தார்கள். பிரசவித்த பெண்ணை எப்படிப் பார்த்துக் கொள்வது என இந்த இரு ஆண்களுக்கும் தெரியவில்லை. ஆனால் கையில் பணம் இருக்க, நந்தனாவை ராணி போல கவனித்துக் கொண்டார்கள். தாயற்றுப் போனால் சீரற்றுப் போகும் என யார் சொன்னது!! தாயுமானவனாக தமையனும், கணவனும் இருக்கும் போது எந்தப் பெண்ணும் சீரற்றுப் போவதில்லை.
அதே போல் தான் இந்த முறையும் டீயூ டேட்டுக்கு ஒரு வாரத்துக்கு முன்னமே ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்து விடலாம் என இருந்தான் ரிஷி. ஆனால் கடவுள் எழுதிய கணக்கு வேறு மாதிரி அல்லவா இருந்தது. நீ முடிவெடுத்தாலும் முடித்து வைப்பவன் நான் அல்லவோ என தனது இருப்பை உணர்த்தி இருந்தான் மேலிருந்தவன்.
“நான் மயங்கி விழுந்துட்டா, தண்ணி தெளிச்சு எழுப்பி விடுங்க போதும்!”
“என்னது? ஹே!! நீ நெஜமா டாக்டராடி? இல்ல இதுவும் பொய்யா?” என கத்தினான் ரிஷி.
அந்த நேரத்தில் கூட தனது ட்ரேட்மார்க் அனிமல் இளிப்பை அதாவது உப்புசம் வந்த உடும்பு போல இளித்து வைத்தவள், குனிந்து தனது வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள். ரிஷி தமக்கையின் கையைப் பற்றிக் கொண்டு அவள் அருகிலேயே அமர்ந்திருந்தான். ரிஷியின் கலவரமான முகத்தைப் பார்த்து பல்லைக் கடித்து வலியைப் பொறுத்தாள் நந்தனா.
“நந்தும்மா, நான் பார்த்த உன்னோட மெடிக்கல் ஹிஸ்டரி படி, போன தடவை பேபி நார்மலா பொறந்துருக்கு. ஆனா இந்த தடவை இது, ப்ரீசிபிட்டஸ்(precipitous) லேபர். அப்படினா பனிக்குடம் உடைஞ்ச 2-5 ஹவர்ல பேபி பிறந்திடும். கண்ட்ராக்ஷனும் கிட்ட கிட்ட இருக்கும். சில சமயம் கண்ட்ராக்ஷன் வந்தவுடனே குழந்தை கீழ இறங்கற ஃபீல் இருக்கும். இந்த மாதிரி சட்டுன்னு வலி வந்து பட்டுன்னு பிள்ளை பிறந்துடறது வரமா இருந்தாலும், நம்மால டைம்முக்கு ஹாஸ்பிட்டல் போக முடியாம, நடு வழியில சுகாதாரம் இல்லாத இடங்கள்ல பிள்ளை பிறந்து இன்பெக்ஷன் ஆகவும் நெறைய வாய்ப்பு இருக்கு. எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்துல குட்டி வெளிய வந்துடுவாங்க. சோ ப்ளிஸ் கோ ஆபரேட் வித் மீ”
தன்னிடம் இருக்கும் கத்தி மற்றும் கத்திரிக்கோலை சுடுநீரில் சனிடைஸ் செய்த சிந்தியா,
“ஆரம்பிக்கலாமா நந்து?” என கேட்டாள்.
“ஆரம்..அம்மா!!! ஆரம்பிக்கலாம் சிம்மு இல்லல்ல சிந்தி”
அதன் பிறகு அங்கு நடந்த ஓர் உயிரை உலகுக்கு கொண்டு வரும் போராட்டம் எழுத்தால் வடிக்க கூடியது இல்லை. தமக்கையின் புறம் நின்று அவளுக்கு தைரியமூட்டியவனின் கண்கள் அடிக்கடி சிந்தியாவையும் தொட்டு மீண்டது. தலையை அடிக்கடி ஆட்டி கை கால்களை உதறி ‘யூ கென் டூ இட்’ என தனக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டே பிரசவம் பார்த்தவளை கண்டவனுக்கு அவள் மேலிருந்த கோபம் பின்னால் போனது. அவளை நெருங்கி வந்த ரிஷி அவள் தோள்களில் இருந்த டென்ஷன் க்நாட்ஸ்களை மெல்ல நீவி விட்டான்.
அவனைத் திரும்பிப் பார்த்தவளின் கண்கள் கலங்கி இருந்தன.
“தேங்க்ஸ் ரிஷி! தேங்க் யூ சோ மச்” என்றவள் அதன் பிறகு எந்த வித நடுக்கமும் இன்றி தன் பணியைத் தொடர்ந்தாள். அரை மணி நேரப் போராட்டத்தின் பின் பூமிக்கு வந்தாள் ரவிபாரதி நதி நந்தனாவின் காதல் காவியத்துக்கு கடவுள் பரிசளித்த அழகிய தேவதை.
“ரிஷி! பாருங்க நம்ம மருமகள! அவ்ளோ அழகா இருக்கா!” என சொன்ன சிந்தியா, குழந்தையைத் தூக்கி அப்படியே நந்தனாவின் நெஞ்சில் படுக்க வைத்தாள்.
சிந்தியாவின் நம்ம மருமக எனும் வார்த்தை ரிஷியின் முகத்தில் புன்னகையை வரவழைத்தது. தாவி அவளை அணைத்துக் கொண்டவன்,
“தேங்க் யூ சோ மச் சிம்மு!” என மனதார சொன்னான். சிந்தியா ஒரு ஏமாற்றுக்காரி என்பதெல்லாம் இவ்வளவு நேரம் அவள் பிரசவம் பார்த்த பாங்கில் டெம்ப்ரவரி அம்னீசியா போல மறந்து மறைந்துப் போயிருந்தது அவனுக்கு.
குழந்தையின் அழுகைக் குரலுக்கு ரூமின் உள்ளே ஓடி வந்தாள் சீனி பாப்பா. பட்டென அவளைத் தூக்கிக் கொண்ட ரிஷி, நந்தனாவின் முகத்தை மட்டும் பார்க்கும் படி அவளைத் திருப்பிப் பிடித்துக் கொண்டான். களைத்துப் போய் கண்ணீர் வழிய தன் மகவை அணைத்துப் பிடித்திருந்த நந்தனாவை பார்த்த சின்னவள்,
“அம்மா! பாப்பா வந்துட்டா! வீச் வீச்னு சத்தம் கேட்டோனே சீனீ பாப்பா ஓடி வந்துட்டேன். பாப்பா ஒரே அழுக்கா இருக்கா. மவுஸ் மாதிரி இருக்கா!” என ஒரே ஆர்ப்பாட்டம். அவளின் ஆர்ப்பாட்டம் பெரியவர்கள் மூவரின் முகத்திலும் புன்னகையை வரவைத்தது.
“தொப்புள் கொடிய வெட்டிடலாம் ரிஷி”
“இரு வரேன்” என சொன்ன ரிஷி, தன் சீனி பாப்பாவை பாத்ரூம் இட்டு சென்று அவள் கையை சுத்தமாக சோப் போட்டு கழுவி விட்டான்.
“சீனிம்மா! மாமா சொல்லறது உங்களுக்குப் புரியுமா தெரியல. ஆனா சொல்லறது என் கடமைடா குட்டி! அம்மாவுக்கும் பேபிக்கும் இடையே பந்தமா இருக்கற தொப்புள் கொடிய நீங்கதான் கட் பண்ண போறீங்க. அந்த பந்தத்த கட் பண்ணற நீங்க இனிமே தங்கச்சிப் பாப்பாவ உங்க சொந்தமா கொண்டாடனும். அவளுக்கு இனிமே நீங்கதான் எல்லாம்! யூ ஆர் அ பிக் சிஸ்டர் நவ். நானும் அம்மாவும் எப்படி இணைப்பிரியாம இருக்கமோ அதே மாதிரி நீங்களும் பாப்பாவ சாயாங்கா பார்த்துக்கனும். சீனி பாப்பாவையும் குட்டிப் பாப்பாவையும் மாமாவும் சாயாங்கா பார்த்துப்பேன், என்னென்னிக்கும்!”
அவன் சொன்னது புரிந்ததோ என்னவோ, ஆனால் பிக் சிஸ்டர் என்பது மட்டும் குட்டிக்கு நன்றாகப் புரிந்தது.
“ஆமா! சீனீ பாப்பா பிக் சிஸ்டர்”
சிம்ரனிடம் இருந்து கத்திரிக்கோலை வாங்கியவன், குட்டியின் கைப்பற்றி தொப்புள் கொடியை வெட்டினான்.
“ஹேப்பி பேர்த்டே டூ யூ! ஹேப்பி பேர்த்டே டூ யூ! ஹேப்பி பேர்த்டே குட்டிப் பாப்பா! ஹேப்பி பேர்த்டே டூ யூ” என சீனி பாப்பா பாட, அதற்கு பின்பாட்டாய் அவள் தங்கையின் அழுகுரல் இருந்தது.
அதற்குள் ஆம்புலன்ஸ் வந்திருக்க, அசந்துப் போய் அமர்ந்து விட்டாள் சிந்தியா. ஆம்புலன்சில் வந்திருந்த எமெர்ஜென்சி மெடிக்கல் ஸ்டாப்ஸ் சட்டென மற்ற வேலையைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டனர். ப்ளசண்டாவை எடுத்துப் பத்திரப்படுத்தியவர்கள், நந்தனாவையும் குழந்தையையும் சுத்தம் செய்து ஆம்புலன்சில் ஏற்றினார்கள்.
சிந்தியா தன்னை அவசர அவசரமாக சுத்தப்படுத்திக் கொண்டு வர, தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு ஹாஸ்பிட்டலுக்கு புறப்பட்டார்கள் இவர்களும். அடை மழை நின்று தூரல் மட்டும் போட, மண் சரிந்திருந்த பாதையை ஓரளவுக்கு சரி செய்திருந்தனர். ட்ராபிக் போலிஸ் காவலிருக்க, மெதுவாகத்தான் நகர்ந்தது வாகனங்கள். சீனி பாப்பா சிந்தியாவின் மடியில் அமர்ந்து கழுத்தில் முகம் புதைத்திருக்க, அவளை அணைத்தப்படி அப்படியே உறங்கிப் போயிருந்தாள் சிந்தியா.
சாலையில் கவனம் இருந்தாலும், உறங்கியபடி வரும் தன் நெஞ்சம் நிறைத்தவளையும் அடிக்கடி திரும்பிப் பார்த்துக் கொண்டான் ரிஷி. பிரசவம் முடிந்து தாயும் சேயும் நலம் என அறிந்ததில் இருந்து, அவன் மனது பலதையும் எண்ணி துடித்துக் கொண்டிருந்தது. சிந்தியா ஏன் சிம்ரனாய் மாறினாள்? டாக்டருக்கு ‘பைட் மீ’யில் என்ன வேலை? தன்னுடன் பழகியது, சிரித்தது, சினந்தது, சீண்டியது, முத்தமிட்டது எல்லாம் வேஷமா? இப்படி பல கேள்விகள் மனதில் முட்டி மோதி அவனைத் திக்குமுக்காட வைத்தன.
இவர்கள் ஹாஸ்பிட்டலை அடைந்து ப்ராசிடர்களை முடிக்கும் நேரம் நந்தனாவை ரூமுக்கு மாற்றி இருந்தார்கள். நர்ஸ் நந்தானாவை கவனிக்க, களைத்திருந்த சிந்தியாவுக்கு சூடாக, ஹாஸ்பிட்டல் அருகே இருந்த மேக்டோனல்ட்ஸில் கஞ்சி வாங்கி வந்துக் கொடுத்தான் ரிஷி.
ஒன்றும் பேசாமல் பேப்பர் பேக்கை மட்டும் அவளிடம் நீட்டியவன், தூங்கிக் கொண்டிருந்த குட்டியை அவள் தோளில் இருந்து தூக்கிக் கொண்டான். அவன் முகத்தைப் பார்த்தப்படியே அதனை மிச்சம் வைக்காமல் உண்டாள் சிந்தியா.
அன்று இரவு எந்த வித பேச்சு வார்த்தையும் இன்றி ஒருவரை ஒருவர் கண்களால் தொட்டுத் தடவிக் கொள்வதிலும், குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதிலும், நந்தனாவை கவனிப்பதிலும் கழிந்தது.
விடிகாலையில் தூங்கிக் கொண்டிருக்கும் நந்தனாவின் அருகே போய்,
“டேக் கேர் நந்தும்மா! என் பார்வை எப்பொழுதும் உன் மேலயும் உன் பிள்ளைங்க மேலயும் இருந்துட்டேத்தான் இருக்கும்” என முணுமுணுத்தவள் அவள் அருகே படுத்திருக்கும் தான் பிரசவிக்க உதவிய ஜீவனின் கன்னத்தை மென்மையாய் தடவினாள். பின், குட்டி சோபாவில் தூங்கிக் கொண்டிருக்கும் சீனி பாப்பாவுக்கு மென்மையாக முத்தமிட்டவள், கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
நாற்காலியில் அமர்ந்த வாக்கில், தமக்கையின் பெட்டில் தலை வைத்துப் படுத்திருக்கும் ரிஷியின் அருகே வந்து நின்றாள் சிந்தியா. அவன் தலை முடியைக் கோதி கொடுக்க எழுந்த ஆவலை கஸ்டப்பட்டு அடக்கியவள்,
“யூ வில் பீ போரேவெர் இன் மை ஹார்ட் ரிஷி!” என முணுமுணுத்தாள். கண்களில் நிற்காமல் கண்ணீர் வழிந்தது. மெல்ல கண்ணைத் துடைத்துக் கொண்டவள், சத்தம் போடாமல் கதவைத் திறந்து வெளியேறினாள்.
விழித்து எழுந்த ரிஷி கண்டது சிந்தியா இல்லாத அறையைத்தான். அவசரமாய் அவள் எண்ணுக்குப் போன் செய்தான். அது நாட் ரிச்சபிள் என வந்தது. மனம் துடித்தாலும், தமக்கைக்கு செய்ய வேண்டிய உதவிகளை செய்து விட்டு, குட்டியையும் அழைத்துக் கொண்டு அடித்துப் பிடித்து வீட்டுக்கு ஓடினான். அங்கே அவளறையில் தனது வாசத்தை மட்டும் விட்டுவிட்டு இவன் நேசத்தை களவாடி சென்றிருந்தாள் சிந்தியா. அவளது உடமைகள் ஒன்றும் இல்லாமல் அவன் மனதைப் போலவே அந்த அறையும் ஜீவனில்லாமல் இருந்தது.
இதயம் ஓவென கதற, பிள்ளை பயந்து விடுவாளே என கண்ணீரை தனக்குள்ளேயே புதைத்தான் ரிஷிநந்தன்.
“என் கண்ணில் ஏனடி வந்தாய்
என் காற்றை நீ கொள்ளை கொண்டாய்
உள்ளுயிரே உருகுதம்மா!!!!!!!”
‘பறந்துப் போனாள் பைங்கிளி
இனி துடியாய் துடிப்பான் ஆண்கிளி’
(உருகுவான்…)
(ஹாய் டியர்ஸ்!!! போன எபிக்கு லைக்ஸ், காமேண்ட், மீம் போட்ட அனைவருக்கும் மிக்க நன்றி. சிம்ரன் யாருன்னு மோஸ்ட்லி எல்லாரும் கண்டுப்புடிச்சிட்டீங்க. யெஸ்! சிக்கி சிக்கி தவிக்கிறேன்ல வெறும் பெயரளவுக்கு வர தியாஸ் மசாலா கம்பேனியின் வாரிசு தான் இந்த சிந்தியா. அதுல குருவுக்கு இவள பார்ப்பாங்க. ஆனா இவன் வேணாம்னு சொல்லிடுவான். சிந்தின்னு கூப்டா மட்டும் போதுமா இல்ல மூக்கையும் சிந்தி விடனுமான்னு வேற கேப்பான். ஹஹஹ. அதுல இருந்து என் மண்டைக்குள்ள புகுந்து இவ ஒரே டார்ச்சர். நான் மட்டும் என்ன கேவலமா போய்ட்டேன், எனக்கு ஏன் இந்த டயலோக் வச்சன்னு! அதான் அவளை சமாதானப்படுத்த இந்த கதைய எழுத வேண்டியதா ஆகிருச்சு. அவ டாக்டர்னு எங்க க்ளூ குடுத்தன்னு கேட்டீங்க பலர். அவ நந்தனாவுக்கு மசாஜ் பண்ணி விடுவா, அதோட ப்ரீதீங் எக்ஸர்சைஸ் சொல்லிக் கொடுப்பா, மயங்கி விழுந்தப்போ ஹாஸ்பிட்டல் சேர்க்கறப்போ டாக்டர் இஸ்மாயில் சொல்லுவாரு முதலுதவி செஞ்சு கொண்டு வந்ததால ஷீ இஸ் குட் நவ் னு. இப்படி தான் சின்ன சின்ன க்ளூ குடுத்தேன். பெருசா குடுத்தா கண்டுப்புடுச்சிருவீங்களே! அதோட நந்தனா கிட்ட சிந்தியான்னு சொல்ல வந்து பாதில கட் பண்ணி சி சிம்ரன் ன்னு மாத்திருவா! அது தான் அந்த சி சிம்ரன் காரணம். ஏன் வந்துருக்கா ட்வீன்ஸ் வாழ்க்கையில என்பத போக போக சொல்லுவேன். கதயோட இன்வால்வ் ஆகி கெஸ் பண்ண எல்லாருக்கும் என் வாழ்த்துக்களும் நன்றியும். இப்படி உங்க கிட்ட இருந்து பீட்பேக் வரப்போ ரொம்ப ஹேப்பியா இருக்கு. ரொம்ப தேங்க்ஸ் டியர்ஸ். மீண்டும் அடுத்த எபில சந்திக்கலாம். லவ் யூ ஆல்!!!)