UUU–EPI 16

UUU–EPI 16
அத்தியாயம் 16
சாக்லேட் பல்லுக்குக் கெடுதி என பரவலாக நம்பப்பட்டு வருகிறது. அது இன்னும் நிரூபிக்கப்படவில்லை. நம் பல்லில் இருக்கும் பாக்டீடியா இனிப்பை ப்ராசேஸ் செய்து அசிட்டாக மாற்றி பற்களை சேதப்படுத்துகிறது. இந்தப் பிரச்சனையை பற்களை சுத்தமாக வைத்துக் கொள்வதிலேயே தீர்த்துவிடலாம்.
“நந்து! போன தடவை தங்கி இருந்தியே அந்த கொன்பைன்மெண்ட் செண்டர்லயே சேர்த்திடவா உன்னை?”
எப்பொழுதும் போல டிப்டாப்பாக இருந்த தன் தமையனையே சிறிது நேரம் உற்று நோக்கினாள் நந்தனா. கண்கள் லேசாய் சிவந்திருக்க, கண்களுக்குக் கீழே இருந்த கருவளையம் தூக்கமின்மையைக் காட்டிக் கொடுத்தது. முகத்தை நார்மலாக வைத்திருந்தாலும், அவனை முழுதாய் அறிந்து வைத்திருப்பவளுக்கு கண்களில் ஜீவனில்லாதது, முகத்தில் ஒளி இல்லாதது அப்பட்டமாகத் தெரிந்தது.
“வரேன்டி சிம்மு! தேடி வந்து கொல்றேன்டி உன்னை!” வாயுள்ளேயே முணுமுணுத்தாள் நந்தனா.
“என்ன சொன்ன?” என கேட்டான் ரிஷி.
“அவ எங்கப் போயிருக்கான்னு கண்டுப்புடிச்சியா?”
“எவ?”
“டேய்! நடிக்கறத நிறுத்து”
“எதுக்கு கண்டுப்புடிக்கனும்?”
“உன் கூட குடும்பம் நடத்தத்தான்”
“பைத்தியம் மாதிரி உளறாதே நந்து”
“என்னடா உளறுறாங்க!!! இல்ல என்ன உளறுறாங்கன்றேன்!!”
“ம்ப்ச்” என சலித்துக் கொண்டவன், க்ரிபில் தூங்கிக் கொண்டிருக்கும் தன் குட்டி மருமகளின் அருகே போய் நின்றான்.
“அழகா இருக்கால்ல! அப்படியே இந்த குளுகுளு வெதருக்கு ரோஜாப்பூ மாதிரி பொறந்துருக்கா என் மருமக” என்றவனுக்கு குழந்தையை வெளியே எடுத்த நொடி முகம் மலர, கண்கள் கலங்க சிந்தியா சொல்லிய ‘நம்ம மருமக ரிஷி’ எனும் வார்த்தைகளே காதில் ரீங்காரமிட்டன.
ஒற்றை விரல் கொண்டு குழந்தையின் கன்னத்தை வருடியவன், அவளையேப் பார்த்தப்படி இருந்தான். சீனி பாப்பாவை ஹாஸ்பிட்டல் உள்ளே இருக்கும் விளையாடும் இடத்தில் சற்று நேரம் விட்டுவிட்டு வந்திருந்தான். அங்கே பாதுகாப்புக்கு ஹாஸ்பிட்டல் நிர்வாகம் நியமித்திருக்கும் ஆள் இருக்கவும் பயமில்லாமல் நந்தனாவுடன் அமர்ந்திருந்தான்.
நந்தனா ஹாஸ்பிட்டலில் இருக்கும் இந்த சில தினங்களில் நிற்க நேரம் இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்தான் ரிஷி. காலையில் குட்டியை கிளப்பி பள்ளியில் விட்டு விட்டு, தனது இருப்பிடத்துக்கு ஓடி வருவான். டீவாவை நடக்க அழைத்துப் போய், அதற்கு உணவிட்டு, தண்ணீர் மாற்றி வைப்பான். பின் கீழே ‘பைட் மீ’க்கு போய் அவன் மட்டுமே பார்க்க வேண்டிய வேலைகளைப் பார்த்து விட்டு நந்தனாவைப் பார்க்க ஓடி வருவான். அவளுக்கு உணவு எல்லாம் ஹாஸ்பிட்டலிலேயே கொடுத்து விடுவதால், அந்தக் கவலை மட்டும் இல்லை இவனுக்கு.
இரவெல்லாம் குழந்தையைப் பார்த்துக் கொள்வதால் களைத்திருக்கும் தமக்கைக்கு சற்று ஓய்வு கொடுத்து, இவன் பிள்ளையைப் பார்த்துக் கொள்வான். ஏற்கனவே ரோஷினியைப் பார்த்துக் கொண்ட அனுபவம் இருப்பதால், பயப்படாமல் இவளையும் தூக்கி வைத்துக் கொள்வான் ரிஷி. வயிற்றில் இருக்கும் போதிலிருந்தே மாமனின் குரல் கேட்டு வளர்ந்திருந்த குட்டியும், அவன் அணைப்பில் அழகாய் தூங்கிப் போவாள்.
தமக்கை குட்டித் தூக்கம் போட்டு எழுந்ததும், மீண்டும் ‘பைட் மீ’க்கு ஓடுவான் வேலைகளைப் பார்க்க. பள்ளி முடிந்து சின்னவளை நர்சரியில் வைத்துக் கொள்ள சொல்லி இருந்தாலும், ஒரு நாள் இருப்பவள், மறுநாள் அழைத்துப் போக வேண்டும் என காலையிலேயே பிடிவாதமாக சொல்லி விடுவாள். அந்த மாதிரி நாட்களில் ஹாஸ்பிட்டல் அழைத்துப் போய் நந்தனாவைக் காட்டிவிட்டு கடைக்கு கூட்டி வந்துவிடுவான் ரிஷி. இரவு டீவாவை கவனித்து விட்டு குட்டியோடு நந்தனாவின் வீட்டில் படுத்து விடுவான். நாள் முழுக்க வேலை வேலை வேலை மேல மேல வேலை வேலை என்று ஓடினாலும், சிந்தியாவின் நினைப்பு மட்டும் மனதின் ஒரு மூலையில் ஓடிக் கொண்டே இருக்கும் இவனுக்கு.
அவள் அருகாமை வேண்டும், சிரிப்பைப் பார்க்க வேண்டும், அவள் அணியும் பூக்கள் கொண்ட உடைகளை ரசிக்க வேண்டும், கலர் கண்களின் வழி அவள் இதயத்துக்குள் புகுந்துக் கொள்ள வேண்டும் என மனம் கிடந்து தவியாய் தவிக்கும்.
“நீ வேணும்டி எனக்கு! யாரா இருந்தாலும் எவரா இருந்தாலும் நீ வேணும் எனக்கு” என முணுமுணுத்துக் கொண்டே இரவெல்லாம் விழித்திருப்பான் ரிஷி.
அவளைத் தேடிப் போக சொல்லி உடலின் ஒவ்வொரு அணுவும் துடித்தாலும், கடமை எனும் தளைகள் அவனைக் கட்டி வைத்திருந்தன.
அமைதியாய் இருந்த தமையனையே கவலையுடன் பார்த்திருந்தாள் நந்தனா.
“நந்தா!”
“ஹ்ம்ம்”
“நாளைக்கு பேர் வெட்டிருவாங்க(டிஸ்ச்சார்ஜ் செய்வதை இப்படித்தான் சொல்வோம் இங்கே). நீ என்னை அந்த செண்டர்லயே சேர்த்திடு. உதவிக்கு கேர்டேக்கர் இருப்பாங்க! பெரியவளையும் என் கூடவே வச்சிப் பார்த்துக்கறேன். நீ கெளம்பி போ”
“எங்க?”
“காசிக்கு சந்நியாசம் வாங்க! கேக்கறான் பாரு கேள்வி! சிந்தியாவத் தேடி போடான்றேன்! எங்க நொங்கன்னு”
“நந்து! அவளுக்கு நம்ம கிட்ட என்னமோ காரியம் ஆக வேண்டி இருந்திருக்கு! வந்தா, அந்த காரியம் முடிஞ்சதும் கெளம்பிட்டா! அவ்ளோதான். அது புரியாம, அவ தள்ளித் தள்ளிப் போன போதும் கண்மூடித்தனமா காதல வளர்த்துக் கிட்டது என்னோட தப்பு! நீயும் பிள்ளைங்களும் மட்டும்தான் என் வாழ்க்கையிலன்னு முடிவெடுத்தவன் அவள பார்த்து சலனப்பட்டதும் என்னோட தப்பு! அப்பா இல்லாத குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுக்க வழிகாட்டியாய் இருக்கனும்னு நெனைச்சவன் காதல் கத்திரிக்காய்னு வழிமாறிப் போனதும் என்னோட தப்பு. அவ சரியாத்தான் இருந்திருக்கா நந்து. என்னைத் தள்ளித்தான் நிறுத்திருக்கா! எனக்குத்தான் புரியல. காதல் மூளைய மழுங்கடிச்சிருச்சு! இப்போ…இப்போ எந்த பேசிஸ்ல நான் அவள தேடிப் போவேன்?”
குரல் கமற பேசியவனைக் கண்கள் கலங்கப் பார்த்தாள் நந்தனா.
“டேய் முட்டாள், எதுக்குடா என்னைத் தேடி வந்த? நான் தான் உன்னைக் காதலிக்கவே இல்லையேன்னு கேட்டுட்டான்னா என் முகத்த எங்க கொண்டுப் போய் வச்சிக்குவேன்? சொல்லு நந்து எங்க கொண்டுப் போய் வச்சிக்குவேன்? ஆனா நந்து… ஐ மீஸ் ஹேர் டேரிபளி! என்னால அவள மறக்கவே முடியலடி! எழுந்ததுல இருந்து தூங்கற வரைக்கும் நினைவுல வரா, தூங்கனா கனவுல வரா. முடியலடி நந்து. அவ வேணும்டி நந்து எனக்கு!” என கண் கலங்கியவனைப் பார்த்து இரு கரங்களையும் விரித்தாள் நந்தனா.
கட்டிலின் அருகே மண்டியிட்டு அமர்ந்தனை, இறுக்கி அணைத்துக் கொண்டாள் அவள். சின்ன வயதில் அம்மாவோ அப்பாவோ அடித்து விட்டால் இவளைக் கட்டிக் கொண்டு இப்படித்தான் அழுவான் ரிஷி. அவன் அழுது முடிக்கும் வரை தன் அணைப்பிலேயே வைத்திருப்பாள் நந்தனா. அதே போல் கண்ணீர் விடும் தமையனை அணைத்தப்படி அமர்ந்திருந்தாள் அவள். சட்டென தன்னை மீட்டுக் கொண்டவன்,
“சாரி நந்து!” என்றபடி நகர்ந்துப் போய் ஜன்னல் அருகே நின்றுக் கொண்டான்.
அவன் சற்று ஆசுவாசமடைய நேரம் கொடுத்தவள்,
“நந்தா! இங்க வந்து உட்காரு. நான் கொஞ்சம் பேசனும்” என அழைத்தாள்.
அவள் அருகே இருந்த நாற்காலியில் வந்து அமர்ந்தான் ரிஷி.
“நான் என்னடா படிச்சிருக்கேன்?”
“டிகிரி முடிச்சு டீச்சிங் கோர்ஸ்சும் முடிச்சிருக்க!”
“என்ன வேலை செய்யறேன்?”
“டீச்சரா இருக்க! மாமா இறந்ததுல இருந்து சம்பளம் இல்லாத லீவ் எடுத்துருக்க! எப்படியும் மேட்டர்னட்டி லீவும் முடிச்சுட்டு வேலைக்குப் போயிடுவ”
“எனக்கு கைகால் எதுவும் ஊனமாடா?”
“என்ன உளறல் இது நந்து?”
அமைதியாக அவனையேப் பார்த்திருந்தாள் நந்தனா.
“நாம ஒட்டி ஒன்னா பொறந்தோம், ஒத்துக்கறேன்! அதுக்குன்னு சாகற வரைக்கும் ஒட்டிக்கிட்டே இருக்கனும்னு எதாச்சும் வேண்டுதல் இருக்காடா?”
“நந்து!”
“எனக்காகவும் என் பிள்ளைங்களுக்காகவும் உன் வாழ்க்கையைத் தியாகம் செய்யப் போறேன்னு பைத்தியக்காரத்தனமா பேசிட்டு இருந்தேன்னு வை, சீக்கிரம் அதுதான் நடக்கும். என் பிள்ளைங்கள கூட்டிட்டு நானும் பிரிஞ்சு எங்கயாச்சும் போயிடுவேன். வெறும் வாய் வார்த்தையா சொல்லலடா! இது சத்தியம்!”
“ரதி நந்தனா!!!”
“என்ன, என்ன சவுண்டு? சவுண்டு விட்டா நான் பயந்துடுவனா? என்னடா நெனைச்சிட்டு இருக்க உன் மனசுல? என்னமோ எவளும் என் மனச புழியல, துவைக்கலன்னு இத்தனை நாள் என் கிட்ட கதை விட்டுட்டு இருந்திருக்க! நானும் ஏமாந்துப் போய் உனக்கானவ இன்னும் வரல போலன்னு கேணை மாதிரி நம்பிட்டு இருந்துருக்கேன்”
“இப்போ ஏன் நந்து இதெல்லாம் பேசிட்டு! உடம்பு நல்லாகட்டும்”
“நல்லா வாயில வண்ண வண்ணமா வந்துடும் சொல்லிட்டேன். பாபி!(பன்னி) என் உடம்புக்கு ஒன்னும் இல்ல! உன் ஆள் புண்ணியத்துல சுகப்பிரசவமாகி நல்லாத்தான் இருக்கேன்!” மூச்சு வாங்க கோபமாக இரைந்தாள் நந்தனா.
“இப்போ என்ன, என் புருஷன் செத்துப் போயிட்டாரு! என் புள்ளைங்களோட அப்பா உலகத்துல இல்ல! அவ்ளோதானே! நான், அவங்க அம்மா உசுரோடத்தானே இருக்கேன்! என்னால அவங்கள பார்த்துக்க முடியாதாடா? நல்லபடி வளர்க்க முடியாதாடா? ஊருல எத்தனை சிங்கிள் மதர் இருக்காங்கன்னு உனக்கு தெரியுமாடா? புருஷன் கூட இருந்தும், எல்லாத்தையும் தானே கவனிச்சிக்கிற எத்தனை பெண்கள் இந்த உலகத்துல இருக்காங்கன்னு தெரியுமாடா? பெண் என்பவள் சக்திடா! அந்த கடவுளான பராசக்தி மட்டும் இல்ல, ஆற்றல், வலிமை, திறன் கொண்ட சக்திடா அவ. இந்த நந்தனாவும் சக்திடா! யார் உதவி இல்லாமலும் என்னால சுயமா இயங்க முடியும்! புரியுதாடா மரமண்டை?”
படபடவென பொரியும் தன் தமக்கையையே கண் கொட்டாமல் பார்த்திருந்தான் ரிஷி.
“மாமா இறந்தும் உன்ன என் வீட்டுல இருக்க வச்சிக்காம, எதுக்கு தள்ளி வச்சேன்னு தெரியுமா? சோகத்துல உன்னை சார்ந்து இருந்துட்டா, நமக்குத்தான் நந்தா இருக்கானேன்ற எண்ணம் வந்துடும். எல்லாத்துக்கும் உன்னையே எதிர்ப்பார்க்கத் தோணும்! அது நடக்கக் கூடாதுன்னு தான் தள்ளி வச்சேன். அடிக்கடி வீட்டுக்கு நீ வரதையும், பாப்பாவ ஸ்கூல் விடறதையும் ஏன் அனுமதிச்சேன்னா, மாமா இறந்த துக்கத்துல இருக்கியே, உனக்கும் ஒரு மாற்றம் வேணும்னுதான். அதுக்குன்னு என்னென்னைக்கும் எனக்கும் என் புள்ளைங்களுக்கும் சேவகனா உன்னை வச்சிருப்பேன்னு நினைச்சியா? எப்படி நீ அப்படி நினைக்கலாம்? எங்களுக்காக நீ எப்படி உன் வாழ்க்கையை தியாகம் பண்ண முடிவெடுக்கலாம்? நீ அப்படி செஞ்சா என் மனசு குளிர்ந்துப் போயிடும்னு நெனைச்சியாடா? அப்படி உன்னை யூஸ் பண்ணிக்கிட்டா, எரிஞ்சு காத்தோட காத்தா போயிட்ட உன் மாமாக்கூட என்னை மன்னிக்க மாட்டாருடா! என்னை ஏன்டா பாவியாக்குற ரிஷி? என்னை நீ புரிஞ்சுகிட்டது இவ்வளவுதானா?” கடைசி வார்த்தையைக் காட்டமாக கேட்டாள் நந்தனா. அவள் சத்தத்தில் குழந்தை சிணுங்க ஆரம்பித்தாள்.
“உன்னை ஏசுனதும் உன் மருமகளுக்குப் பொறுக்கல போல! அவள தூக்கிக் குடு என் கிட்ட”
பிள்ளையைத் தூக்கி தமக்கையிடம் கொடுத்தவன், சீனி பாப்பா என்ன செய்கிறாள் என பார்க்கப் போனான். நந்தனா குழந்தைக்கு பால் கொடுக்க ஆரம்பித்தாள்.
“மாமாவ ஏசிட்டனா! உங்களுக்கு கோபம் வந்துடுச்சா குட்டிம்மா! இனிமே ஏசல! சரியா” என கொஞ்சிக் கொண்டே அவளுக்கு பசியாற்றினாள்.
விளையாட்டு அறையில் இன்னும் சில பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள் ரோஷினி.
“சீனிம்மா! அம்மாட்ட போகலாம் வாங்க”
“வேணா! சம்மோர் வெளாடனும். லேட்டர் வரேன்” என அடமாக மறுத்தாள் குட்டி.
அவளை அங்கேயே விட்டவன், வரும் வழியில் இருந்த வெண்டிங் மிசினில் காபி ஒன்று எடுத்துக் கொண்டு மீண்டும் ரூமுக்குப் போனான். நந்தனாவின் உள்ளத்துக் குமுறலும், சில நாட்களாக சரியாக தூங்காததும் தலைவலியைக் கொடுத்திருந்தது அவனுக்கு.
“பால் குடிச்சிட்டாளா?” என கேட்டவன், காபியை மேசை மேல் வைத்து விட்டு பிள்ளையை வாங்கி தோளில் போட்டு லேசாக அவள் முதுகில் தட்டினான். அவள் ஏப்பம் எடுத்ததும் மீண்டும் கிரிப்பில் படுக்க வைத்தான் ரிஷி.
“உனக்கு எதாச்சும் வேணுமா நந்து?”
“இல்லடா! ஒன்னும் வேணா”
பின்பே காபியை எடுத்துப் பருகியபடி நாற்காலியில் அமர்ந்தான். அவன் பருகி முடிக்கும் வரை அமைதியாய் இருந்தாள் நந்தனா.
“நந்தா, மாமாவும் நானும் ஒருத்தர் மேல ஒருத்தர் எவ்வளவு காதல் வச்சிருந்தோம்னு உனக்குத் தெரியும் தானே? அவர் மகாராணி மாதிரி என்னைப் பார்த்துக்கிட்டாருடா! உள்ளங்கையில வச்சி தாங்கினாரு! அவர் இறந்துட்டாலும் இன்னும் என் நெஞ்சுக்குள்ள வாழ்ந்துட்டுத்தான் இருக்காரு! ரதி ரதின்னு பூமியிலேயே சொர்க்கத்த எனக்கு காட்டனவருடா அவர்! காதல்னா என்ன, அரவணைப்புன்னா என்ன, ஆதரவுனா என்னன்னு எனக்கு அழகா கத்துக்குடுத்தவருடா அவர். திகட்ட திகட்ட காதல அனுபவிச்சிருக்கேன்டா நான்.”
சொல்லும்போதே குரல் கரகரத்தது அவளுக்கு. தொண்டையை செறுமி தன்னை சரி செய்துக் கொண்டவள்,
“காதல இழக்கறதோட வலி என்னன்னு எனக்கு நல்லாவே தெரியும். என்னோட வலிய நீயும் அனுபவிக்கறதுல எனக்கு கொஞ்சம் கூட இஸ்டமில்ல. அவள எப்படி ஃபேஸ் பண்ணுவேன்னு தயங்கி தத்தளிக்கறதோட, தேடிப் போய் பார்த்து பேசி ஒரு முடிவுக்கு வா! எல்லாத்துக்குமே ஒரு க்ளோஷர் வேணும்டா வாழ்க்கையில. முடிவு தெரியாம இப்படி இருந்துருக்குமோ, அப்படி இருந்துருக்குமோன்னு தவிக்கறது முட்டாள்த்தனம். என் நந்தா முட்டாளில்ல.”
தமக்கையின் முகத்தையே அமைதியாகப் பார்த்திருந்தான் ரிஷி.
“அவளுக்கும் உன் மேல காதல் இருக்குடா நந்தா! நீ கவனிக்காத நேரத்துல உன்னையே கண் எடுக்காம பார்ப்பா! குட்டிக் கூட பேசறப்போ உன் பேர அடிக்கடி உள்ள இழுப்பா! என்னைப் பத்தி தெரிஞ்சிக்கற மாதிரி சின்ன வயசு கதைலாம் கேப்பா. அந்த கதைல எல்லாம் என் ட்வீன் நீயும் தானே இருப்ப! ஷீ லைக்ஸ் யூ நந்தா! அவ நம்ம மேல வச்சப் பாசம் பொய்யில்ல! ஆனா என்னமோ அவள தடுக்குது அத எக்ஸ்ப்ரேஸ் பண்ண! தேடிப்போ! அவ எதுக்கு வந்தான்னு கண்டுப்புடி. அவ மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கோ! நீங்க ரெண்டு பேரும் சேரனும்! நாம ஒரு குடும்பமா வாழனும்டா! ப்ளிஸ்” என கேட்டவளை நெருங்கி அணைத்துக் கொண்டான் ரிஷி.
ரூம் கதவு தட்டப்படும் ஓசையில் இருவரும் கண்ணைத் துடைத்துக் கொண்டார்கள். இவன் கதவைத் திறக்க, ஒரு வயதான பெண்மணி உள்ளே நுழைந்தார்.
“யாருங்க நீங்க?” என கேட்டான் ரிஷி.
“தம்பி, சிந்தி பாப்பா என்னை அனுப்பி வச்சாப்பா இங்க” என சொன்னவர், அவர் பாட்டுக்கு குழந்தையின் அருகே போய் அதை தூக்கிக் கொண்டார்.
சிந்தி எனும் பெயரில் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“என் பேரு திலகவதி! சிந்தி பாப்பா தில்லும்மான்னு கூப்டுவா. பாப்பாவ வளர்த்து விட்டது நான் தான். இங்கீலீசுல என்னமோ சொல்லுவாங்களே நானியா, நோனியா! அதுதான் நான்”
“நேனி” என சொன்னாள் நந்தனா.
“ஆமா, அதுதான். பொறக்க வச்சவங்களயும் நல்லாப் பார்த்துக்குவேன்! மருந்து செலவு போட்டு கொலம்பு வைக்கிறதுல இருந்து குளிப்பாட்டி விடற வரைக்கும் எல்லாம் செய்வேன். எப்ப பேரு வெட்டறாங்களாம் உனக்கு?” என விசாரித்தார் அவர்.
“தில்லும்மா! நாங்க அதுக்குன்னு இருக்கற செண்டர்ல போய் பார்த்துக்கிறோம். அப்படியே திரும்பிப் போய் உங்க சிந்தி பாப்பாக்கிட்ட எங்களுக்கு எந்த உதவியும் தேவையில்லன்னு சொல்லிடுங்க” என்றான் ரிஷி.
அப்படியே தரையில் சப்பளமிட்டு அமர்ந்தவர்,
“அதெல்லாம் போகமாட்டேன்! எங்க வீட்டுல சிந்தி பாப்பா சொன்னதுதான் சட்டம்! அவ இங்க வர சொன்னா, ரெண்டு பாப்பாவையும் அவங்க அம்மாவையும் பார்த்துக்க சொன்னா, அத தான் நான் செய்வேன். வெளிய போக சொன்னாலும் வீட்டு வாசல்லயே சாப்பிடாம விழுந்துக் கிடப்பேன்! ஒரு வயசானவள கொடுமை பண்ண பாவம் எதுக்கு தம்பி உங்களுக்கு.” என ஒப்பாரி வைக்காத குறையாக பேசினார்.
என் பார்வை எப்பொழுதும் உங்கள் மேல் இருக்கும் என வாயால் மட்டும் சொல்லாமல் செயலாலும் காட்டி இருந்தாள் சிந்தியா.
“அவதான் அனுப்பனான்னு நாங்க எப்படி நம்ப?” என கேட்டாள் நந்தனா. ஏற்கனவே ஏமாந்த அனுபவம் பேசியது.
மெல்ல அவர் எழ முயல, குழந்தையை வாங்கிக் கொண்டான் ரிஷி. தனது பேக்கில் இருந்து போனை எடுத்தவர், சிந்தியா ரெக்கார்ட் செய்திருந்த ஆடியோவைப் போட்டுக் காட்டினார்.
“நந்து, இவங்க தில்லும்மா! என்னை வளர்த்தவங்க! உன்னையும் பாப்பாங்களையும் கண்ணுக்குள்ள வச்சிப் பார்த்துப்பாங்க. என் மேல உள்ள கோபத்துல இவங்கள திருப்பி அனுப்பி வைக்கனும்னு மட்டும் நெனைக்காதீங்க. அவங்க போக மாட்டாங்க. அதோட என்னைப் பத்தி என்ன கேட்டாலும் அவங்க கிட்ட இருந்து ஒத்த வார்த்தை வராது, என்னோட காண்டேக்ட் டீடேய்ல்சும் கிடைக்காது. சோ ப்ளீஸ், லெட் ஹெர் டேக் கேர் ஆப் யூ! ஐ மிஸ் யூ காய்ஸ்! முக்கியமா ரெண்டு குட்டிசையும் ரொம்ப, ரொம்ப, ரொம்ப மிஸ் பண்ணறேன். டேக் கேர்! பை. கடைசியா லவ் யூ, லவ் யூ சோ மச்”
அந்த லவ் யூ சோ மச்சை கேட்டதும் ரிஷிக்கு உடம்பே சிலிர்த்தது.
“ராட்சசி” என முணுமுணுத்தான்.
“சரி தில்லும்மா! எங்க கூடவே இருங்க” என்றாள் நந்தனா.
“நந்து!” என ஆட்சேபித்தான் ரிஷி.
சிந்தியாவைப் பற்றி இவர் எதுவும் சொல்லக்கூடாது என அனுப்பப்பட்டிருந்தாலும், கேட்கும் விதத்தில் கேட்டு விஷயத்தை வாங்கலாம் என முடிவெடுத்த நந்தனா ரிஷியின் ஆட்சேபனையைக் கிடப்பில் போட்டாள்.
பெயர் வெட்டிய தினத்தில் தில்லும்மாவையும் அழைத்துக் கொண்டு தனது வீட்டுக்குப் புறப்பட்டாள் நந்தனா. பாப்பா, பாப்பா என நந்தனாவை பாசமாய், பரிவாய் கவனித்துக் கொண்டார் தில்லும்மா. சீனி பாப்பா கூட அவருடன் ஒட்டிக் கொண்டாள். பத்தியமாய் சமைத்துப் போட்டார். வாய்க்கு ருசியாய் சமைத்து ரிஷியையும் வற்புறுத்தி சாப்பிட வைத்தார். மொத்ததில் அந்தக் குடும்பத்தைத் தாங்கிப் பிடித்தார் தில்லும்மா.
கே.எல்.ஐ.ஏ அனைத்துலக விமான நிலையத்தில் போர்டிங்குக்காக காத்திருந்தாள் சிந்தியா. அவளுக்கு வீடியோ கால் எடுத்த தில்லும்மா யாருக்கும் தெரியாமல், டைனிங் டேபிளில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருக்கும் ரிஷியைக் காட்டினார்.
“லவ் யூ சோ மச் சேகர்! மிஸ்ஸிங் யூ பேட்லி” என மெல்லிய குரலில் சொல்லிக் கொண்ட சிந்தியா கண்ணீர் வழிய வழிய அவனை கண்களுக்குள் நிறைத்து மனதுக்குள் பதிய வைத்துக் கொண்டாள்.
“பை டா ரிஷி! நமக்குன்னு கடவுள் முடிச்சுப் போட்டிருந்தா, மீண்டும் சந்திப்போம். மேல பறக்குது ப்ளைட்டு, சேகர்தான் என்னோட சைட்டு!” என சொல்லியவளுக்கு கண்ணீரையும் மீறி புன்னகைப் பூத்தது.
‘ப்ளேனு பறக்குது பார்த்தியா????
விட்டுட்டுப் போயிட்டாலே சிந்தியா!!!!!’
(உருகுவான்…)
*போன எபிக்கு லைக்ஸ், கமேண்ட், மீம் போட்ட அனைத்து தங்கங்களுக்கும் எனது நன்றி..அடுத்த அப்டேட்டில் சந்திப்போம். லவ் யூ ஆல்.