UUU–EPI 26-part 1

UUU–EPI 26-part 1
அத்தியாயம் 26
சாக்லேட்டைப் பல வகையான பண்டிகைகளோடு சம்பந்தப் படுத்தலாம். ஈஸ்டருக்கு முட்டை மற்றும் முயல் வடிவ சாக்லேட் செய்து குழந்தைகளுக்குக் கொடுப்பார்கள். ஹனுக்கா எனும் பண்டிகைக்கு சாக்லேட் காய்ன் செய்து கொண்டாடுவார்கள்.
சாப்பாட்டு மேசையில் அமர்ந்திருந்த ரிஷியை முறைத்துப் பார்த்தப்படி அமர்ந்திருந்தார் சிவசு. அவனோ பொசு பொசுவென பொங்கி இருந்த பூரியை ஓட்டைப் போட்டு, அதிலிருந்து வெளியேறும் ஆவியை ரசித்தப்படி இருந்தான்.
கார உருளைக்கிழங்கு மசாலாவை அவனுக்குப் பரிமாறிய வாணி,
“சாப்பிடுங்க தம்பி! இன்னும் சூடா ரெண்டு பூரி போட்டு எடுத்துட்டு வரேன்! எங்க சிந்தி தான் ரொம்ப ஒல்லியா கிடக்கா! குடும்ப பாரத்த அவளுக்கும் சேர்த்து நீங்க சுமக்கனும்ல, நல்லா சாப்பிடுங்க” என வாஞ்சையாக சொன்னார்.
அவர் கிச்சனுக்குள் நுழைய, ரிஷியும் சிவசுவும் மட்டும்தான் மேசையில் அமர்ந்திருந்தார்கள். ஆண்கள் இருவரும் மில்லுக்கு சென்றிருக்க, மேகலாவும் கிச்சனுள் இருந்தார். சிந்தியா இன்னும் எழுந்து வந்திருக்கவில்லை.
ரிஷியைப் பார்த்து தொண்டையைக் கணைத்தார் சிவசு. நிமிர்ந்து அவரைப் பார்த்து புன்னகை சிந்தினான் இவன். சுற்றி முற்றி யாராவது இருக்கிறார்களா என பார்த்த சிவசு,
“என்ன ஜாதி?” என கேட்டார்.
அவருக்கு ஏற்கனவே தெரியும் ரிஷி வேற்று ஜாதியை சேர்ந்தவன் என. தன் பேத்தி சம்பந்தப்பட்ட விஷயத்தை அக்கு வேறு ஆணி வேறாக அறிந்துக் கொள்ளாமலா இருப்பார் சிவசு! வீட்டிற்கு வர வேண்டும் என்றால் ரிஷியை அவள் கணவனாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என தில்லும்மா மூலம் வீட்டில் எல்லோருக்கும் அறிவித்திருந்தாள் சிந்தியா. பேத்தியைக் கண்ணால் காணாமல் ஒடுங்கிப் போய் இருந்தவர், அவளின் கண்டிஷனை கஸ்டப்பட்டு ஏற்றுக் கொண்டார். ஆனாலும் மனம் முரண்டியப்படியே இருந்தது சிவசுக்கு.
சிந்தியாவின் முன்னே ரிஷியை மாப்பிள்ளை என விளித்திருந்தாலும், தானாக அவனிடம் ஒரு வார்த்தைப் பேசியிருக்கவில்லை சிவசு. அதுதான் பேத்தி இல்லாத சமயம் பார்த்து இவனை வம்பிழுக்க முனைந்தார். எவ்வளவு பட்டாலும் இவரைப் போல சிலர் திருந்தவே திருந்த மாட்டார்கள். பட்டென திருந்தி விட்டால் அவர்களின் பாரம்பரியம் என்னாவது!
மெல்லிய சிரிப்புடன்,
“என் தேகத்தப் பார்த்து தேவர்னு சொல்லலாம்! நடையைப் பார்த்து நாய்க்கர்னு சொல்லலாம்! முக வசீகரத்தப் பார்த்து முதலியார்னு சொல்லலாம்! ஐஸ் அழக பார்த்து ஐயர்னு சொல்லலாம்! செக்சியான ஸ்டைல பார்த்து செட்டியார்னு சொல்லலாம்! கலரான ஸ்கின்ன பார்த்த கவுண்டர்னு சொல்லலாம்! இன்னும் நெறைய ஜாதி இருக்கும் போல! எனக்கு இவ்ளோதான் தெரியுது! என் பிள்ளைகளுக்கு இதுக் கூட தெரியாது! தெரியாம பார்த்துப்பேன்!” என சொன்னவன் பூரியை வாய்க்குள் திணித்தான்.
அவனின் பதிலில் காண்டாகிப் போனார் சிவசு.
“நாங்க என்ன ஜாதின்னு தெரியுமா? எப்படிப்பட்ட பாரம்பரியத்த சேர்ந்தவங்கன்னு தெரியுமா? என் பேத்திய உன் கூட சேர்த்து வச்சுப் பார்த்தாலே, நெஞ்செல்லாம் எரியுது எனக்கு!”
சிந்தியாவின் மூலம் அவரின் ஜாதி வெறியையும், அதனால் ஏற்பட்ட இழப்புகளையும் அறிந்திருந்தவனுக்கு ஆத்திரம் பொங்கியது.
“என்ன பெரிய ஜாதி உங்க ஜாதி? மனிதாபிமானம் இல்லாத உங்கள மாதிரி ஆட்கள மனுஷ ஜாதியாவே மதிக்கக் கூடாது! என்ன பெரிய பாரம்பரியம் உங்க பாரம்பரியம்? பாவத்த மட்டுமே சேர்த்து வச்சிருக்கற உங்க பாரம்பரியத்த பாடையில போட்டு பத்த வைக்கனும்! உங்கப் பாரம்பரியத்தோட பழக்க வழக்கம் எப்படின்னு எனக்கு தெரியல! ஆனா எங்க பழக்க வழக்கத்துல பெரியவங்கள மதிக்கனும்னு சொல்லிக் குடுத்துருக்காங்க! அத மீறி என்னை நடக்க வைக்க மாட்டீங்கன்னு நம்பறேன் தாத்தா!” என படபடவென பேசியவன் நாற்காலியில் இருந்து பட்டென எழுந்தான்.
அவன் பின்னால் இருந்து தோளைப் பற்றி அமர வைத்தது ஒரு கரம்.
“உட்காரு ரிஷி!” என்றாள் சிந்தியா.
பின் தன் தாத்தாவைத் திரும்பிப் பார்த்து புன்னகையுடன்,
“குட் மார்னிங் தாத்தா” என்றாள்.
அதற்குள் பூரியுடன் வந்திருந்தார் வாணி. அவரிடம் இருந்து தட்டை வாங்கியபடி, ரிஷியின் பக்கத்தில் அமர்ந்துக் கொண்டவள்,
“ம்மா, உன்னோட ஸ்பெஷல் தோசை வேணும் எனக்கு” என ஆர்டர் போட்டாள்.
தட்டில் இருந்த பூரியைப் பிய்த்து, மசாலா வைத்து ரிஷியின் வாயருகே கொண்டுப் போனாள் சிந்தியா.
“ஆ காட்டு ரிஷி!”
அவன் வாயைத் திறக்க, ஊட்டி விட ஆரம்பித்தாள் சிந்தியா. அவளின் செயலைப் பார்த்து சிவசு சத்தம் வராமல் பல்லைக் கடித்தார்.
“தாத்தா! இன்னும் ஓன் மந்த்ல அண்ணா ப்ரோஸ்தெதிக்(உலோகத்தினால் ஆன மாற்றுக் கால்) கால் பொருத்தின ப்ராசிடர்லம் முடிச்சிட்டு வந்துடுவான். அவன் வந்த ரெண்டாவது நாள் எனக்கும் ரிஷிக்கும் ஜாம் ஜாம்னு கல்யாணம் நடக்கனும்! மறக்காம உங்க ஜாதிக்காரங்க எல்லாரையும் எங்க கல்யாணத்துக்கு இன்வைட் பண்ணுங்க! அது வரைக்கும் தில்லும்மாவோட நான் ரிஷி வீட்டுல தான் இருப்பேன்! ப்ரேக்பஸ்ட் சாப்பிட்டதும் நாங்க கிளம்பறோம்!”
ரிஷியுடன் கல்யாணம் எனும் வார்த்தையில் தொண்டை வரை கசந்து வழிந்தது சிவசுவுக்கு! ஆனாலும் ஒன்றும் செய்ய முடியாமல் சூழ்நிலை அவரைக் கட்டிப் போட்டிருந்தது. விக்கியை மணக்க சொல்லி வற்புறுத்தியதும், அதை தடுக்க நேசனை அவள் வரவைத்ததும், அதன் பிறகு நடந்த கொடூர விபத்தும் கண் முன் வந்துப் போனது அவருக்கு. மாரிலும் தோளிலும் போட்டு வளர்த்த தன் ஆசைப் பேத்தியை ஹாஸ்பிட்டலில் ரத்த வெள்ளத்தில் பார்த்த போதே நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சரிந்து விட்டார் அவர். முழுதாக இரண்டு வாரம் கோமாவில் கிடந்தவள், எழுந்து வந்து தாத்தா என அழைப்பாளோ மாட்டாளோ என தவித்த தவிப்பு அவருக்குத்தான் தெரியும்! இதற்கு மேலும் அவளைத் துன்பப்படுத்திப் பார்க்கும் சக்தி சிவசுவுக்கு இல்லை.
பல்லைக் கடித்துக் கொண்டு பேத்திக்காக ரிஷியைப் பொறுத்துக் கொள்ள முடிவெடுத்திருந்தார். அந்தப் பல்லைக் கடித்தலே ஆதங்கமாய் வார்த்தைகளில் வெளிப்பட்டு விடுகிறது, சற்று முன் வெளிப்பட்ட மாதிரி.
“அதுக்குள்ள கிளம்பனுமா சிந்திம்மா?” ஏக்கத்தோடு கேட்டார் சிவசு.
“நந்துவையும் பிள்ளைங்களையும் விட்டுட்டு எங்களால ரொம்ப நாள் இருக்க முடியாது தாத்தா! என்னை ரொம்ப மிஸ் பண்ணா கேமரன் வாங்க! எங்க வீட்டுல அன்னம் தண்ணி புலங்க மாட்டீங்கன்னு தெரியும்! சோ ஹோட்டேல் புக் பண்ணித் தரேன்! சரியா தாத்தா?” என கேட்டவள், கட்டிப் பிடித்து அவர் கன்னத்தில் முத்தமிட்டு கிளம்பிவிட்டாள்.
எவ்வளவு தப்பு செய்திருந்தாலும் அவளால் தன் தாத்தனை வெறுக்க முடியாது! சட்டென ஒருவரை வெறுத்து ஒதுக்க முடிந்தால் அது உணர்வுப்பூர்வமான அன்பில்லையே! இதே சிந்தியாவினால் ரிஷியையும் விட்டுக் கொடுக்க முடியாது! இனி அவள் வாழ்க்கை இரு பக்கமும் இழுபடும் கயிறு போல் தான்! ஆனால் அந்த இரு பக்கத்தையும் அழகாய் சமாளிப்பாள் நம் கேடி சிந்தியா!
ட்ரைவர் கார் ஓட்ட, உள்ளே அமர்ந்த உடனே ரிஷியின் மடியில் படுத்துக் கொண்டாள் சிந்தியா.
“நைட்டு தூங்கவே இல்லையே ரிஷி! கண்ண சொக்குது! கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேன்! அப்போத்தான் சீனீ பாப்பா கூடவும், குட்டி கூடவும் விளையாட எனர்ஜி இருக்கும்”
மடியில் படுத்திருந்தவளின் தலையைத் தடவிக் கொடுத்தான் ரிஷி! ஐந்து நிமிடங்களிலேயே தூங்கி இருந்தாள் சிந்தியா. தூக்கத்தில் மென்மையாக தெரிந்த அவள் முகத்தையேப் பார்த்தப்படி இருந்தான் இவன். இரவில் அவள் சொன்ன மீதிக் கதையை அசைப் போட்டப்படியே இவனும் கண்ணை மூடினான்.
“அண்ணா கார்ல இருந்து கீழ தள்ளி விட்டப்போ தாடையில செம்ம அடி. உடம்புலாம் சிராய்ச்சிப் போய் நெறைய உள்காயம் வேற. பாரதி இறக்கற வரைக்கும் எப்படியோ வில்பவர்ல தாங்கி நின்னிருக்கேன்! அவர் இறந்ததும்தான் அந்த ஆக்சிடேண்டோட வீரியம் முழுசா என்னைப் பாதிச்சிருக்கு! மயங்கி கீழ விழுந்தப்போ, தலை படார்னு தரையில மோதிக்கிச்சு! அந்த இம்பேக்ட்ல தான் கோமாக்கு போய்ட்டதா என்னை ட்ரீட் பண்ண டாக்டர் சொன்னாங்க!”
அவள் தலையை தன் மார்புக்குள் அழுத்திக் கொண்டவன், வலிக்குமோ என்பது போல அவள் உச்சியில் மிக மிக மென்மையாய் முத்தமிட்டான்.
“தாடை எலும்பு டிஸ்லோகேட் ஆகி அதை சரி செய்ய ஆபரேஷன் செஞ்சிருக்காங்க எனக்கு! நார்மலா பார்க்கறப்போ என் முகம் ஓகேவா இருந்தாலும் சிரிக்கறப்போ என்னமோ சரியில்லாதது போல தோணும். ஒரு வேளை அது என் மனப்பிராந்தியா கூடா இருக்கலாம்” (அவளின் வித விதமான இளிப்புக்கு இதுதான் காரணம்)
“போடி! உன் சிரிப்புக்கும் புன்னகைக்கும் இணையே இல்லத் தெரியுமா! அந்தக் காலத்துல புன்னகை அரசினா கே.ஆர். விஜயாவாம்! நடுவுல புன்னகை அரசியா சினேகா இருந்தாங்க! இந்த ஜெனரேஷன் புன்னகை குவீன் யார்னு வோட் எடுத்தாங்கன்னா கள்ள ஓட்டு போட்டாச்சும் இந்த மசாலா குவீனை ஜெய்க்க வைப்பேன்டி! சிரிக்கும் போதுதான் நீ கொள்ளை அழகு”
அவன் சொன்ன வார்த்தையில் மயங்கி அழகாய் புன்னகைத்தாள் சிந்தியா! அவள் கன்னம் வழித்து செல்லம் கொஞ்சினான் ரிஷி!
“கோமால இருந்து முழிச்சதும் உலகத்துல உள்ள எல்லா டெஸ்டும் எடுக்க வச்சாரு சிவசு! ட்ரௌமட்டிக் ப்ரேய்ன் இஞ்சுரின்னு(traumatic brain injury) சொன்னாங்க. தலை வேகமா கீழ மோதுனதுனால, மூளையோட நியூரொன்ஸ், செல்ஸ்லாம் ஆடிருக்கும். அதைத் துல்லியமா பார்க்க இன்னும் டெக்னோலோஜி வரல. ஆனா ப்ளட் க்ளோட்லாம் ஒன்னும் இல்லன்னு சொல்லிட்டாங்க. கோமால இருந்து முழிச்சதும் கொஞ்சம் ப்ளரா இருந்தாலும் அம்னேசியா மாதிரி எதுவும் இல்லை. ஐ வாஸ் சோ லக்கின்னு நியூரோசர்ஜன் சொன்னாங்க! ஆனாலும் லேசான தலை வலி, தலை சுத்தல், நடக்கறப்போ தடுமாற்றம், பேசறப்போ உளறல் இப்படின்னு சிம்ப்டம்ஸ் இருந்தது! இதெல்லாம் ஹெட் இஞ்சுரிக்குப் பிறகு வர அப்டர் இபேக்ட்ஸ், போக போக சரியாகிடும்னு சொல்லிட்டாங்க!”
அவள் முகத்தில் தெரிந்த சோகத்தில் தவித்துப் போனான் ரிஷி.
“என்னாச்சுடா? போக போக சரியாகலையா?”
“இல்ல, சரியாகல ரிஷி! அடிக்கடி தலை சுத்தல் வர ஆரம்பிச்சது! நடந்துகிட்டு இருக்கறப்போ, திடீர்னு பேலன்ஸ் இல்லாம தடுமாறி கீழ விழுந்துடுவேன்! தூங்கி எழுந்து பெட்ல இருந்து இறங்கறப்ப பூமியே சுழழுற மாதிரி இருக்கும், பட்டுன்னு விழுந்துடுவேன். பாத்ரூம்ல கூட இப்படி விழுந்துருக்கேன். தில்லும்மாவும் அம்மாவும் கூடவே இருந்தாங்க. மறுபடி ஒரு கம்ப்ளீட் டெஸ்ட் எடுத்தாங்க! வெர்ட்டிகோ(vertigo—பேலன்சிங் ப்ராப்ளம்) இருக்கலாம், ப்ரேய்ன் செல்ஸ் டேமேஜ் ஆகிருக்கலாம் இப்படிலாம் டையக்நோஸ் பண்ணாங்க! மருந்து மாத்திரை, தெரப்பி, எக்சர்சைஸ் இப்படின்னு சில மாசம் ஓடுச்சு! அந்த டைம்ல என்னால ரதிய பத்தியோ பாரதிய பத்தியோ சிந்திக்கக் கூட முடியல. போக போக குறைய ஆரம்பிச்சது தலை சுத்தல். லாங் டேர்ம்ல முழுதா சரியாகிடற வாய்ப்பு இருக்குன்னு சொன்னாங்க. நம்பிக்கைத்தானே வாழ்க்கை ரிஷி! ஒரு டாக்டரான நானே அவநம்பிக்கையா இருக்கலாமா! இன்னிக்கு வரை மருந்து சாப்பிடறேன், மெடிடேஷன் செய்யறேன், நம்பிக்கையோட இருக்கேன்! ஐ வில் ஓவர்கம் திஸ்”
“அதனாலத்தான் டாக்டர் வேலைய விட்டியா?”
“நானே விடல! விட வேண்டிய சூழ்நிலை ஆகிருச்சு! அண்ணாவ ட்ரீட்மெண்ட்காகவும், ப்ரோஸ்தெதிக் லேக் வைக்கறதுக்கும் அவன் இருந்த ஊருக்கே அனுப்பிட்டோம். கூட அம்மாவும் அப்பாவும் போயிருந்தாங்க! நான் கொஞ்சம் குணமானதும், சிவசு மேல உள்ள கோபத்துல தனியா வீடேடுத்து தங்கி இருந்தேன். என் கூட தில்லும்மாவும் வந்துட்டாங்க! என்னோட தலை சுத்தல் எல்லாம் ஓரளவு குறைஞ்சு, நான் நார்மலா பீல் ஆனதும் வேலைக்கு ஜாய்ன் பண்ணேன்.”
மீண்டும் அமைதி.
“அது ஒரு நார்மல் டெலிவரி ரிஷி. குழந்தை தலை பாதி வெளிய வந்துடுச்சு. வெளிய இழுக்கற டைம்ல அப்படியே தலை சுத்தி மெடிக்கல் டூல்ஸ்லாம் வச்சிருந்த மேசை மேல விழுந்துட்டேன். நெத்தியில ஸ்கால்பேல்(கத்தி) பட்டு ரத்தக்காயம் எனக்கு. தியேட்டரே ஸ்தம்பிச்சு போச்சு. என்னோட அசோசியேட் பட்டுன்னு குழந்தையை வெளிய கொண்டு வந்துட்டாங்க. அவங்க கொஞ்சம் தாமதிச்சிருந்தாலும் குழந்தைக்கு எதாச்சும் ஆகியிருக்க சான்ஸ் இருக்கு. அந்த சம்பவத்துக்குப் பிறகு அன்பிட் டூ பெர்போர்ம் மெடிக்கல் ப்ராக்டிஸ்னு மெமோ குடுத்துட்டாங்க! சஸ்பென்சன் மாதிரினு வச்சிக்கயேன்!”
சற்று நேரம் அமைதியாய் அவள் இருக்க, இவனும் பேச்சுக் கொடுக்காமல் தன் அணைப்பில் அணுசரனையை உணர்த்தினான்.
“ரெண்டு வயசுல இருந்து டாக்டர், டாக்டர்னு அந்த ஒரு லட்சியத்துக்காவே வளர்க்கப்பட்ட என்னை அன்பிட்(unfit)னு சொல்லிட்டாங்க ரிஷி! என்னால தாங்கிக்கவே முடியல. சிந்தனை, செயல் எல்லாமே டாக்டரா ஆகனும்னு சொல்லி சொல்லி வளர்க்கப்பட்ட என்னை டாக்டரா ப்ராக்டிஸ் பண்ண தகுதி இல்லதவன்னு முத்திரை குத்திட்டாங்க. டாக்டர்ங்கறது எனக்கு ஒரு தொழில் இல்ல! என்னோட உயிரில் கலந்த ஓர் உணர்வு! எனக்கு கிடைச்ச அந்த சஸ்பென்ஷன் என் வாழ்க்கைக்கு அடிச்ச சாவு மணியாத்தான் தோணுச்சு. ஆபரேஷன் தியேட்டல மத்தவங்க முன்ன விழுந்து கிடந்தத என்னால இன்னும் மறக்க முடியல. பிரசவ வலில இருந்த அந்தப் பொண்ணு நான் விழுந்தத பார்த்து கத்துன சத்தம் இன்னும் என் காதுல கேக்குது ரிஷி! அவ்ளோ நாள் தைரியமா இருந்த நான், அன்னைக்கு முழுசா உடைஞ்சு போய்ட்டேன்! உயிர பூமிக்கு கொண்டு வர வேண்டிய என்னால, ஓர் உயிர் போயிருக்குமேன்னு நினைச்சு நினைச்சு துடிச்சேன். யாராலயும் என்னை ஆறுதல் படுத்த முடியல! அந்த டிப்ரஷன்ல இருந்து என்னை மறுபடி எழுந்து உட்கார வச்சது எங்கண்ணாதான். சஸ்பென்ஷனா எதிர்த்து மேல் முறையீடு செய்ய சொன்னான்! ஆனா நான் செய்யல ரிஷி! எனக்கே அந்த சம்பவத்துக்கு அப்புறம் ஃபோபியாவா ஆகிடுச்சு! மறுபடி இன்னொரு உயிர இந்த உலகுக்கு தைரியமா கொண்டு வர முடியுமான்னு பயம் என்னை ஆட்டி வைக்க ஆரம்பிச்சிருச்சு. நந்தனாவுக்கு பிரசவம் பார்த்தப்ப கூட உள்ளுக்குள்ள எப்படி நடுங்கனேன்னு எனக்குத்தான் தெரியும்! நீ மட்டும் என் பின்னால நின்னு நான் இருக்கேன்ற மாதிரி என் தோளைப் பிடிச்சுக்காம இருந்திருந்தா கண்டிப்பா மயங்கி சரிஞ்சிருப்பேன்.”
அன்று அவள் சொன்ன மயங்கிவிட்டால் தண்ணி தெளித்து எழுப்பி விடு என்பது ஜோக்குக்காக இல்லை என புரிந்தது ரிஷிக்கு. அந்த விபத்தில் ஒரேடியாக பாரதி போய் விட்டதால், நித்தம் அவரை நினைத்து இவர்களுக்குத் துன்பம்தான். ஆனால் இவளோ இன்னும் கூட அந்த அப்டர் இபெக்டால் அடிக்கடி விழுந்து வாரி உடலால் காயப்படுவது மட்டுமில்லாமல், உயிராய் நினைத்த வேலை இல்லாமல் மனதாலும் காயப்பட்டு நிற்பதை நினைக்கையில் நெஞ்சில் உதிரம் கொட்டியது ரிஷிக்கு. ஏற்கனவே துன்பப்பட்டவளை தானும் கடுமையான வேலைகள் கொடுத்து துன்பப்படுத்தியதை நினைத்து கூசிப்போனான்.
“என்னை மன்னிச்சுருடா சிம்மு!” என சொல்லியவனின் கண்களும் லேசாய் கலங்கி இருந்தது.
“இப்படி என் துன்பம்தான் பெருசுன்னு நான் உழண்டுகிட்டு இருந்தப்போ, அண்ணா ஒரு வேலை குடுத்தான் எனக்கு”
“என்னடா வேலை?”
“உங்களைத் தேடிப் போக சொன்னான்”
“ஏன்?”
சிவநேசனுக்கு இந்த விபத்து மிகுந்த மன உளைச்சலைக் கொடுத்திருந்தது. தன்னால் ஓர் உயிர் உலகை விட்டுப் போய் விட்டதோ எனும் எண்ணம் போட்டு வாட்டியது அவனை. இறந்தவனைப் பற்றியும் அவன் குடும்பத்தைப் பற்றியும் தன் அப்பாவை வைத்து முழுதாய் அறிந்துக் கொண்டவன் அதன் பிறகு இரட்டையர்களை தனது கண்காணிப்பிலே வைத்திருந்தான். பாரதிக்கு ஒரு மனைவி இருக்கிறாள், ஒரு குழந்தை இருக்கிறது என்ற விசயம் அவன் மனதை வாள் கொண்டு அறுத்தது. ரிஷி, ரதி, பாரதி, குழந்தை என குடும்பமாய் அவர்கள் எடுத்திருந்த படத்தைப் பார்த்தவனின் கண்கள் சீனி பாப்பாவின் சிரித்த முகத்தில் நிலைக்குத்தி நின்றன. அவள் அப்பாவை கொன்ற பாவி நானோ எனும் எண்ணம் அவனை உறங்க விடாமல் செய்தது. அந்தக் குழந்தை எந்த கஸ்டமும் இல்லாமல் வளர வேண்டியது தன்னுடைய பொறுப்பு என முடிவெடுத்துக் கொண்டவன், தன்னால் முடிந்த உதவியை செய்ய முனைந்தான்.
பாரதியின் இன்சுரன்ஸ் க்ளைம், ஆல்கஹோலினால் விபத்து என்பதால் ரிஜேக்ட் ஆகியிருந்ததை அறிந்துக் கொண்டான் நேசன். அந்த விஷயம் நந்தனாவிடம் போவதற்கு முன் மூர்த்தியை வைத்து, பாரதியின் ஏஜெண்டைப் பிடித்து வேறு பத்திரம் தயாரித்து, எந்த சந்தேகமும் வராத அளவுக்கு நேசனே காப்பீடு பணத்தை செட்டில் செய்தான் நந்தனாவுக்கு. தங்கை பிடிவாதத்துடன் தனக்கு எழுதி இருந்த தாத்தனின் சொத்தை, மறைமுகமாக அவரால் பாதிக்கப் பட்ட குடும்பத்துக்காக பயன்படுத்தினான். இந்த ப்ராசெஸ் எல்லாம் நடந்துக் கொண்டிருந்த சமயத்தில் தான் நந்தனா கருவுற்றிருப்பது தெரிந்தது அவனுக்கு. முற்றிலும் இடிந்துப் போனான் சிவநேசன். தன்னுடையப் பாவக் கணக்கு ஏறிக் கொண்டே போவது போல இருந்தது அவனுக்கு. மனசாட்சி உள்ளவர்களுக்கு குற்ற உணர்ச்சி என்பது கூடவே இருந்து கொல்லும் நோயல்லவா! அவர்களுக்கு கொடுத்த இன்சுரன்ஸ் பணம் இந்தக் காலத்தில் இரண்டு பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி நல்லது செய்ய போதுமானதாக இருக்காது என நன்றாக புரிந்தது அவனுக்கு.
எழுந்து நடமாட முடியாத நிலையில் இருப்பதால் தன் தமக்கையின் உதவியை நாடினான் சிவநேசன். அவர்களோடு பழகினால், உயிரிழப்பைத் தாங்கிக் கொண்டு முயன்ற அளவுக்கு சகஜ வாழ்க்கை வாழ முனையும் அவர்களே இன்னும் பரிதாபத்துக்குரியவர்கள் என்பதை உணர்ந்து தனது டிப்ரஷனில் இருந்து வெளி வருவாள் சிந்தியா எனவும் நம்பினான். பொதுநலத்தோடு சேர்ந்த சின்ன சுயநலம்!
டீப் டிப்ரஷனில் இருந்த சிந்தியா எங்கேயும் போக மாட்டேன் என அழுது ஆர்ப்பாட்டம் செய்ய, அவளை கெஞ்சி கொஞ்சி சமாதானப்படுத்தி கேமரனுக்கு அனுப்பினான். தான் யார் என்பதைக் காட்டிக் கொள்ளாமல், அவர்களின் தேவையை நிறைவேற்றி விட்டுக் கிளம்பி வந்து விட வேண்டும் என சொல்லி அனுப்பி இருந்தான் சிவநேசன்.
அண்ணனின் அலும்பலில் கிளம்புவதாய் பேர் பண்ணிக் கொண்டாலும், அவள் அங்கே சென்ற உண்மை காரணம் பாரதி சொன்ன ‘என் ரதி… என் ரதிய.. பார்’ எனும் வார்த்தைகள்தான். இறக்கும் போது கூட காதலோடு அவன் உச்சரித்த ரதி எனும் சொல் இவளை என்னவோ செய்தது. அடிக்கடி கனவில் பாரதியின் முகமும் அவன் சொன்ன வார்த்தைகளும் வந்து தூக்கம் கெடுத்தன. ஏற்கனவே பல பிரச்சனைகளில் உழன்றவள், பாரதியால் தூக்கமின்றி வேறு தவித்தாள். அந்த ரதியைப் போய் பார்த்தால் தான் என்ன என தோன்ற ஆரம்பிக்கவும் கிளம்பி விட்டாள் சிந்தியா. இடமாற்றம் தனக்கும் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும் என நம்பினாள் அவள்.
மற்ற விஷயங்களை ரிஷியிடம் பகிர்ந்துக் கொண்டவள், பண விஷயத்தை அப்படியே மறைத்து விட்டாள்.
{கொஞ்சம் பெரிய எபி. அதனால ரெண்டு பாகமா குடுக்கறேன். பார்ட் 2 நடு ராத்திரி பேய் நடமாடற டைம்ல இல்லை நாளைக்கு காலைல தரேன்.(இன்னும் கொஞ்சம் பட்டி டிங்கரிங் இருக்கு. அதனாலதான்)}