UUU–EPI 4

UUU–EPI 4

அத்தியாயம் 4

ஐரோப்பிய நாடுகளுக்கு சாக்லேட் கொண்டு வரப்பட்ட நாள் ஜூலை 7, 1550 என சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதனால் தான் ஜூலை 7-சாக்லேட் டேயாக கொண்டாடப்படுகிறது.

 

“கையில் மிதக்கும் ப்ரஸ்சா(brush) நீ

கைகால் முளைத்தா மாப்பா(mop) நீ

கழுவ கழுவ சுத்தம் ஆகலையே

நுரையாய் பொங்கும் சோப்பா(soap) நீ”

என சோகமாய் பாடிக் கொண்டே ‘பைட் மீ’யின் டாய்லட்டை தேய்த்துக் கழுவிக் கொண்டிருந்தாள் சி சிம்ரன். வேலைக்கு சேர்ந்த நாளில் இருந்து தினம் நான்கு முறை டாய்லட் கழுவுகிறாள். மற்ற நேரமெல்லாம் சாக்லேட் செய்ய பயன்படுத்தும் பெரிய பெரிய இண்டஸ்டிரியல் பானைகளை தேய்த்துக் கழுவி அதற்கென இருக்கும் டிஸ்வாஷரில் போடும் வேலையையும் செய்கிறாள். அதோடு கபேயில் மக்கள் சாப்பிட்ட தட்டுக்களை அகற்றி, கழுவுவதோடு சநிடைஷேர் போட்டு மேசை துடைக்கும் வேலையும் அவளுடையதே! பெண்டு கழண்டுப் போனது சி சிம்ரனுக்கு.

“நாம பேசுன பேச்சுக்கு இந்த நாய் சேகர் நம்ம இடுப்ப உடைச்சி கையில குடுத்துட்டுத்தான் மறுவேலை பார்ப்பான் போல! பாபீ பெத்தூல்(சரியான பன்னி)” என முணுமுணுத்தவளுக்கு அவனை ‘பைட் மீ’யின் முதலாளியாய் சந்தித்த நொடிகள் கேட்காமலே மனக்கண் முன் ஓடியது.

நாய் சேகரை திட்டிவிட்டு வெறுங்காலோடு நடந்தவள், கடை வரிசையில் தெரிந்த இருபத்து நான்கு மணி நேரமும் திறந்திருக்கும் செவென் இலெவெனுக்குள் நுழைந்தாள். அங்கு மாட்டி இருந்த ரப்பர் செறுப்பு ஒன்றை வாங்கி அணிந்துக் கொண்டவள், ‘பைட் மீ’க்கு மெல்ல நடையைக் கட்டினாள்.

அன்று பார்த்த ஷீலாதான் கவுண்ட்டரில் இருந்தாள். இவளைப் பார்த்ததும்,

“வாங்கக்கா! இன்னிக்கு வேலைக்கு முதல் நாள்ல! எங்க கூட ஜோதியில ஐக்கியமாகி என்னைக்கும் ஹேப்பியா இருக்க வாழ்த்துக்கள்” என சிரித்த முகமாக வரவேற்றாள்.

நந்தனாவும் சிம்ரனும் முந்நாளில் பேசியதை இவளும் தானே கேட்டிருந்தாள். அதோடு நந்தனா காலையிலேயே போன் செய்து, என்ன வேலைகள் சிம்ரனுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என ஷீலாவிடம் சொல்லியிருந்தாள்.

இவளும் புன்னகையுடன்,

“ஹேப்பி மார்னிங் ஷீலா! அண்ட் தேங்க்ஸ்” என பதிலளித்தாள்.

“நாங்க ஃபர்ஸ்ட் வந்ததும் பசியாறிட்டுத்தான் வேலையை ஆரம்பிப்போம். ஸ்டாப்ஸ் காலையும் மாலையும் ரெண்டு வேளை ட்ரீங்க்ஸ் இங்க இருந்து எடுத்து குடிச்சிக்கலாம். அதோட பேக்கரி ஐட்டம்ஸ் ஒரு ஆளுக்கு ரெண்டு அலவ்ட். அதுக்கு மேலனா ஸ்டாப் டிஸ்கவுண்ட் யூஸ் பண்ணி காசு குடுத்து வாங்கிக்கனும். சாக்லேட் இஸ் நாட் அலவுட். அது கஸ்டமருக்கு மட்டும் தான். சொல்லுங்கக்கா, இப்போ என்ன ட்ரீங்க் வேணும் உங்களுக்கு?” என கலகலப்பாக பேசினாள் சின்னவள்.

நிஜமாலுமே சின்னவள் தான் ஷீலா. வயது இப்பொழுதுதான் பதினாறு! மாலை பள்ளி அவளுக்கு. காலையிலும் சனி ஞாயிறுகளிலும் பார்ட் டைம்மாக வேலைக்கு வருவாள். கொஞ்சம் கஸ்டப்படும் குடும்பத்தில் இருந்து வந்தவள் அவள். பேசிக் கொண்டிருந்த கொஞ்ச நேரத்திலேயே இவளுக்கு உணவு கொடுத்துக் கொண்டே தன் ஜாதகத்தையே புட்டு புட்டு வைத்திருந்தாள் ஷீலா.

கபே ஒன்பது மணிக்குத்தான் திறப்பார்கள். ஆனால் வேலை பார்ப்பவர்கள் ஏழரை மணிக்கே ஆஜராகி விட வேண்டும். சிம்ரனை மட்டும் முதல் நாள் வேலைக்கு 8 மணிக்கு மேல் வர சொல்லி இருந்தாள் நந்தனா.

“நந்தா அண்ணாவும் நந்து அக்காவும் தி பெஸ்ட் பீப்பிள் தெரியுமா! அவ்ளோ நல்லா பழகுவாங்க. நான் வேலை கேட்டு வந்தப்போ அண்ணா ரொம்ப யோசிச்சாங்க ஸ்கூல் கேர்ள்னு. அப்புறம் என்னோட சிச்சுவேஷன் கேட்டுட்டு வேலைக்கு சேர்த்துக்கிட்டாங்க. என்னோட ஸ்கூல் மார்க் ட்ராப் ஆச்சுன்னா வேலைய விட்டு தூக்கிருவேன்னு மிரட்டித்தான் சேர்த்துக்கிட்டாங்க. கஸ்டமர்ஸ் இல்லாதப்போ, நான் இங்கயே உட்கார்ந்து ரிவிஷன் செய்ய பெர்மிஷன் குடுத்துருக்காங்க ரெண்டு பேருமே. சோ ஸ்வீட் ரைட்! மேத்ஸ் தெரியலைனா அண்ணா சொல்லிக் குடுப்பாங்க. நந்தா அண்ணா மேத்ஸ்ல புலி” என பேசிக் கொண்டே அந்த கபே பின்னால் அழைத்துப் போனாள் ஷீலா.

கபேயின் கவுண்ட்டர் பின்னால் ஒரு கதவு இருந்தது. இனிப்புலகத்தின் சொர்க்கவாசல் அந்த கதவு! அந்த கதவுக்கு பின்னால் தான் சாக்லேட் தயாரிக்கும் பெரிய கிச்சன் இருந்தது. உள்ளே நுழைந்ததும், ப்ளாஸ்டிக் கேப்பை எடுத்துக் கொடுத்து தலையில் அணிந்துக் கொள்ள சொன்னாள் ஷீலா.

“இங்க சுத்த பத்தமா இருக்கனும்னு அண்ணா சொல்லிருக்காங்க. நந்துக்கா என்னமோ தமிழ்ல..இருங்கக்கா..சட்டுன்னு வர மாட்டுது..ஆஹ்ம். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே அப்படின்னு சொல்வாங்க. பழைய காலத்துல பசிச்ச வயித்துக்கு உணவு கொடுத்தா அவங்களுக்கு உயிர குடுத்ததுக்கு சமமா சொல்வாங்களாம். இப்போ பணம் வாங்கிட்டு உணவு தரோம்! உயிர குடுக்காட்டியும் போகுது, சாப்பிடறவங்க உயிர எடுக்காம இருக்கனும்னு சொல்வாங்க நந்துக்கா! அவங்க ஒரு தமிழ் புலவி” என சொல்லி சிரித்தாள் ஷீலா.

அங்கே வேலை செய்துக் கொண்டிருந்த நான்கு பெண்மணிகளையும் அறிமுகம் செய்து வைத்தாள் இவள். அதில் இருவர் மலாய் பெண்கள், ஒரு சீன பெண், இன்னும் ஒருத்தி அஸ்லி(மலேசியாவின் பழங்குடியினர்) பெண்.

மூவர் மட்டும் இவர்கள் வந்த சத்தம் கேட்டுத் திரும்பி பார்க்க, சீன பெண் மட்டும் தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“அவங்களுக்கு காது கேட்காது! ஆனா சூப்பரா காலிகிராபி (எழுத்தை அழகாய் வரைவது) செய்வாங்க. ஸ்பெஷல் ஆர்டர் சாக்லேட்டுக்கு இவங்கதான் டிசைன் செஞ்சு வரைவாங்க” என சொல்லி அவரின் தோளைத் தட்ட, திரும்பிப் பார்த்து புன்னகைத்தார் அவர்.

சிம்ரனும் புன்னகையுடன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். அந்த அறிமுகப்படலத்தில் அவள் அறிந்துக் கொண்டது, இரட்டையர்கள் இருவரும் உண்மையாலுமே வேலைத் தேவைப்படும் சிங்கிள் மதர்ஸ், உடல் குறை உள்ளவர்கள், குடும்ப பாரத்தை சுமப்பவர்கள் என பார்த்துதான் வேலைக்கு ஆள் எடுத்திருக்கிறார்கள் என்பதுதான். என்னவோ மனது நிறைவாய் இருந்தது இவளுக்கு.

சற்று நேரம் அங்கேயே நின்று எப்படி சாக்லட் கலவையை செய்கிறார்கள், பின் அதை எப்படி ட்ரேயில் ஊற்றி மிஷினில் பொருத்துகிறார்கள், அந்த மிஷின் எப்படி அழகாய் இவர்கள் செட் செய்த டிசைனுக்கு வெட்டிக் கொடுக்கிறது, அதை எப்படி காய வைத்து பின் பாக் செய்கிறார்கள் என அதிசயமாய் பார்த்து நின்றாள் சிம்ரன். பேக்கரி ஐட்டம் செய்வதற்கு என தனியாக கிச்சன் இருந்தது. அங்கேயும் பல சைசில் ஓவன், மிக்ஸிங் மிஷின்ஸ் என எல்லாமே டெக்னாலோஜி மயம்தான். நிறுப்பது, மிக்ஸ் செய்வது, பின் அந்தந்த மிஷினில் கலவையை கொட்டுவது, செய்து வரும் ஐட்டங்களை எடுத்து அடுக்குவது போன்ற வேலைகளைத் தான் அங்கிருந்தவர்கள் செய்தார்கள். மிஷினும் அதனோடு சேர்ந்து வேலைப் பார்க்கும் மனிதர்களும் ஒரு ரிதமாக சேர்ந்து இசைந்து வேலை செய்வதைப் பார்க்கவே கவிதையாய் இருந்தது. இவள் மலாய் பள்ளியில் படித்ததால், மனதில் கவிதையும் மலாயிலேயே வந்தது. அதை நாம் தமிழில் மொழிப்பெயர்த்துக் கொள்வோம்.

‘வாரேவா!!!

கேக், டோனட், சாக்லேட் குக்கி

ஃப்ரீயா கிடைக்கறதுனால நான் லக்கி

என் எக்ஸ் பேரு வெளங்காத விக்கி

அவன் கடைஞ்செடுத்த கேப்மாரி பக்கி!!

வாரேவா!!!’ (கவித கவித, மலாய் கவித)

‘ச்சை! சாக்லேட் கவிதைல கூட இந்த விக்கி வந்து மூட்ட ஸ்பாயில் பண்ணிடான்! மற மனமே அவன மற’ என மனதிற்கு கட்டளையிட்டவள், ஷீலா காட்டிய ஆபிஸ் ரூமையும் பார்த்தாள்.

சமையல் அறைக்கு அருகே சிறிய ரூம் அது. உள்ளே மேசை, நாற்காலி, கம்ப்யூட்டர், ப்ரிண்ட்டர், படுத்துக் கொள்வது போல சின்ன சோபா என சுத்தமாக இருந்தது.

“நந்து அக்கா இங்கதான் வேலைப் பார்த்துட்டே ரெஸ்ட் எடுப்பாங்க” என சொன்ன ஷீலா அப்படியே ஸ்டோர் ரூமையும், டாய்லட்டையும் காட்டிக் கொடுத்தாள்.

“இவ்ளோதான் ‘பைட் மீ’! நந்துக்கா இன்னிக்கு காபி மிசின்லாம் எப்படி ரீலோட் பண்ணறது, கஸ்டமர் சர்விஸ் எப்படி செய்யறதுன்னு மட்டும் சொல்லிக் குடுக்க சொன்னங்க! கடை திறக்கற டைம் ஆச்சு வாங்கக்கா” என சொல்லி கபேவுக்கு மறுபடி அழைத்து சென்றாள்.

வாசற்கதவுக்கு முதுகு காட்டி நின்று, ஹாட் சாக்லேட் மிசினில் ஹாட் சாக்லேட் மற்றும் பால் பவுடர் தூளை எங்கே நிரப்புவது, எந்த பட்டனை தட்டி பானத்தைத் தயாரிப்பது என ஷீலா கற்றுக் கொடுத்ததை எழுதி வைத்துக் கொண்டிருந்தாள் சிம்ரன். இன்னும் காபி மிசின் வேறு இருந்தது. அதோடு பாலுக்கும், டீக்கும் இன்னொரு மிசின் இருந்தது. அதெல்லாம் போக போக சொல்லிக் கொடுப்பதாக சொன்னாள் ஷீலா.

“அக்கா நான் டாய்லட் போய்ட்டு வரேன்! இன்னும் டென் மினிட் இருக்கு கடை திறக்க” என சொல்லிவிட்டு சென்றாள் ஷீலா.

அவள் சென்ற சில நிமிடங்களில் கதவு திறக்கும் சத்தத்தோடு ச்சைம்ஸ் ஒலியும் கேட்க திரும்பிப் பார்த்தாள் சிம்ரன்.

பூட்டி இருந்த கதவை எப்படி திறந்து வந்தான் என்பதெல்லாம் அவள் எண்ணத்தில் இல்லை. அவள் கவனம் எல்லாம் கையில் அவன் பிடித்திருந்த பிங்க் ஹீல்ஸ் மேல் தான் இருந்தது. அவசரமாக அவனை நெருங்கியவள் அதை கையில் வாங்கி மூக்கருகே கொண்டு போய் முகர்ந்துப் பார்த்தாள். சோப் வாசம் தான் வந்தது. ஹீல்சும் பளபளவென சுத்தமாக இருந்தது. அதன் பிறகு தான் கோபம் போய் அவள் முகத்தில் புன்னகையே வந்தது.

“நாட் பேட் நாய் சேகர்! சுத்தமா கழுவி, காய வேற வச்சிருக்கீங்க! ஹேர் ட்ரையர் யூஸ் பண்ணீங்களோ! குட் குட்!” என அவனை மெச்சியவள் நாய் சேகர் எனும் அழைப்பில் அவன் முகத்தில் தாண்டவமாடிய கொலை வெறியை கவனிக்கவில்லை. அவன் முன்னாலேயே ரப்பர் சிலிப்பரை கழட்டியவள், ஹீல்சை அணிந்து நடந்துப் பார்த்தாள்.

“நல்லாருக்குல்ல சேகர்! முந்நூறு வெள்ளி ஹீல்ஸ்! சேல் டைம்ல எழுபது வெள்ளிக்கு கிடச்சது! குட் டீல்ல! யா யா ஐ க்நோ” அவளே கேள்விக் கேட்டு அவளே பதிலும் சொல்லிக் கொண்டாள்.  

“ஹீல்ஸ் என்னமோ நல்லாத்தான் இருக்கு!” என நக்கலாக சொன்னான் ரிஷி.

அவன் குரல் பேதத்தில் அவனை உற்றுப் பார்த்தவள்,

“இப்போ என்ன? ஹீல்ஸ் நால்லாருக்கு ஆனா அத போட்டிருக்கற ஆளு நல்லா இல்ல, அதானே? இத தவிர வேற குட் டயலோக் இல்லையா சேகர்? இந்த மொக்க ஜோக்குக்கு பாவப்பட்டு சிரிக்கலாம்னா கூட எனக்கு சிரிப்பு வரமாட்டுது!” என கடுப்பாக சொல்லியவள்,

“அதான் ஹீல்ஸ குடுத்தாச்சுல்ல, கெளம்பறது! இங்கயே நின்னா பாவப்பட்டு ஃப்ரீயா காபி டீ எதாச்சும் குடுப்பேன்னு நெனைச்சியா? நெவர்! நந்தா சொல்லிருக்கான், ஃபிரீயா குடுக்கறது பிச்சைப் போடறதுக்கு சமம்னு” என அவனை விரட்டி அடித்தாள்.

“ஓஹோ!! நந்தா யாரு? உன் தம்பியா?”

“நோ, நோ! என் தம்பிக்கு போய் நந்தா பந்தான்னு பாடாவதி பேருலாம் வைப்பனா! அழகா கேஷவ், ரோஷன், கிஷன் இப்டினு மார்டனா வைப்பேன். யூ சீ, நந்தா இந்த கடையோட ஒனர்! நான் அவனுக்கே ஓனர்”

“என்னாது?”

“வை ஷாக் சேகர்? உனக்கு வேணும்னா நான் நல்லா இல்லாம இருக்கலாம்! ஆனா நந்தாக்கு என் மேல க்ரேசி க்ரேஸ்! லேடிஸ் படக்குன்னு மடிஞ்சுட்டா இவனுங்களுக்கு வச்சிப் போயிடும்ல, அதான் இன்னும் யெஸ் சொல்லாம அலைய விட்டுட்டு இருக்கேன்! தெனம் அவன் போன்ல லவ் மீ, லவ் மீன்னு அழறது பாவமாத்தான் இருக்கு. அதனால சீக்கிரம் யெஸ் சொல்லிடுவேன்னு நெனைக்கறேன். சோ நீ இங்கயே நின்னு என் மூஞ்ச மூஞ்ச பார்க்காம கெளம்பு! பொண்ணு அழகா இருந்துட்டா போதுமே, நாயையும் நரியையும் விட்டு கேம் ப்ளே பண்ணி அப்படியே பிக்கப் பண்ண பார்க்கறது!” என சத்தமாக சொன்னவள்,

“கொஞ்சம் அழகாக ஏன் தான் பிறந்தேனோ

போதும் நான் பட்டப்பாடு” என முனகினாள்.

“ஹலோலோ! போதும் போதும் ஓவர் பில்டப்பு! கரண்டியை வச்சு மூஞ்சில அப்பிருக்கறத சுரண்டி எடுத்துட்டா, இந்த பியூட்டி பார்க்க லோக்கல் பாட்டி மாதிரி இருக்கும்! இவங்கள நாய வச்சி கவுக்கறமாம்! என் டாகிக்கே உன்னைப் பார்க்க சகிக்காமத்தான் ஹீல்ஸ்ல வேலை பண்ணி வச்சிருச்சு!” என காட்டமாக காட்டு காட்டு என காட்டிவிட்டான் ரிஷி.

புசுபுசுவென கோபம் தலைக்கேற இவள் கத்த வாய் திறக்கும் முன்னே,

“மார்னிங் நந்தாண்ணா!“ என குரல் கொடுத்தாள் ஷீலா.

‘நந்தாவா, எங்க?’ என இவள் பார்வையை சுழற்ற, அவள் முன்னே நின்றிருந்தவன் தான் வாயைத் திறந்து,

“குட் மார்னிங் ஷீலா!” என பதிலளித்தான்.

‘என்னாது!!!!!!!!!!!! இந்த நாய் சேகர்தான் நந்தாவா? ஓ மை கடவுளே!!!!’ என அவள் மனம் கூச்சலிட, பிங்க் கண்கள் சாசர் போல் விரிய, ரூஜ் போடாமலே கன்னம் பிங்க் நிறம் கொள்ள, வாயைப் பிளந்து நின்றவளின் நாக்கு கூட பிங்க் நிறமாய் தெரிய, சற்று நேரம் இமைக்க மறந்து அந்த பிங்க் செம்பருத்தியையே பார்த்திருந்தான் ரிஷி.

அதிர்ச்சியில் இருந்த சிம்ரன், சட்டென நகர போக அடுத்த நொடி கீழே தொபுக்கடீர் என விழுந்து கிடந்தாள். அவளின் கவனச்சிதறலும் எடுத்து வைத்த அவசர அடியும், மூன்றரை இஞ்ச் ஹில்சும் அவளை வேரோடு சாய்த்திருந்தது.

“அக்கா” என ஷீலா ஓடி வர, ரிஷியும் அவசரமாய் அவள் முன்னே மண்டியிட்டு அமர்ந்தான்.

“ஆர் யூ ஆல்ரைட்?” என இவன் கேட்க, என்ன சொல்லி சமாளிப்பது என இவள் அவசர அவசரமாய் மூளையைக் கசக்கினாள்.

“ஐ அம் குட்!” என அசடு வழிந்தவாறே சொன்னவள் காலை மடக்கி சப்பளங்கால் போட்டு அமர்ந்து கொண்டே, மனதில்,

‘சை! ஒரே மாலுவா(அவமானம், வெட்கம்) போச்சே, இவன் முன்னுக்கு! ஏற்கனவே நாய் சேகர்னு கூப்பிட்டு பெரிய பல்பு! இதுல விழுந்து வேற வச்சிட்டேனே! வேலையும் இல்ல ஒரு மண்ணும் இல்லன்னு தொரத்திடுவானோ! இப்ப எப்படி டேமேஜ சரி பண்ணறது! யூனிவர்சல் ஆம்பளைங்க வீக்னஸ நமக்கு சாதகமா யூஸ் பண்ணிக்க வேண்டியதுதான்! வேற வழி இல்ல!’

அதற்கு முன் ஷீலாவை அப்புறப்படுத்த நினைத்தவள்,

“ஷீலாம்மா! ஐம் ஆல்ரைட் டா! ஆபிஸ் ரூம்ல என் பேக்கை மறந்து வச்சிட்டு வந்துட்டேன்! போய் எடுத்துட்டு வந்துடறியா?” என பொய் சொல்லி அனுப்பினாள்.

அவள் அகன்றதும் கண்களை மலர்த்தி, இமைகளை படபடவென கொட்டி, நாக்கை நீட்டி உதட்டை ஈரப்படுத்தி, ஆளை மயக்கும் புன்னகை ஒன்றை சிந்தியவள், அவன் கையை இறுக பற்றிக் கொண்டாள்.

“நான் அப்பவே ரொம்ப ஃபீல் பண்ணேன் தெரியுமா நந்தா! இவ்ளோ ஹேண்ட்சமா, மேன்லியா, யூத்புல்லா இருக்கற ஆளப் போய் தெரியாம திட்டிட்டோமேன்னு! வெரி சாரி நந்தா! எனக்கு கோபம் வந்துட்டா என் அறிவும் மனசும் பிரிஞ்சு நின்னு எனக்கு எதிரா சதி செஞ்சிடும்! கொஞ்ச முன்ன உங்கள திட்டனது எல்லாம் என் அறிவு சொல்லி வாய் கேட்டது! இப்போ மன்னிப்பு கேக்கறதெல்லாம் என் மனசு சொல்லி வாய் பேசறது! என் அறிவு சொன்னத மறந்துட்டு என் மனசு கேக்கற மன்னிப்ப குடுப்பீங்களா நந்தா! ப்ளீஸ்!!!!” கடைசி ப்ளிஸை மட்டும் உதட்டைக் குவித்து செக்சியாக கேட்டாள் சி சிம்ரன்.

திண்மையான தன் கையில் மிருதுவாய் அடங்கி இருந்த அவள் விரல்களின் ஸ்பரிசமும், மிக அருகில் அமர்ந்திருந்ததால் அவள் மேல் வீசிய ப்ளோரல் பர்பியூமின் வாசனையும், ஹார்ட் ஷேப்பில் குவிந்திருந்த இதழ்களும்,

“இன்றோடு ஹனுமார் பக்தன்

பிரமச்சரியம் முடிகிறதே!!!” என பாடல் பாட அழைக்க, படக்கென தலையை ஆட்டி அந்த மாயலோகத்தில் இருந்து மீண்டு எழுந்தான் ரிஷி.

சிம்ரனின் கையை உதறி எழுந்து நின்றவன், அழுத்தமாக அவளை ஏறிட்டான்.

“ஏய் பூங்கா ராயா! எழற உத்தேசம் இருக்கா? இல்லை இப்படியே உட்கார்ந்து வேலை வெட்டி செய்யாம இந்த இத்துப் போன உதட்டையும், சைடு வாங்கற கண்ணையும் காட்டி சம்பளம் வாங்கற பிளானா? உன்னை மாதிரி இல்ல என் அறிவும் மனசும்! ரெண்டும் ஒரே கோட்டுல தான் பயணிக்கும்! அது இப்போ என்ன சொல்லுதுனா, ஓன் வீக் ட்ரையல்ல நீ ஒழுங்கா வேலைய செஞ்சா இங்க உனக்கு வேலை கன்பர்ம். இல்லைனா இடத்தைக் கழுவலாம்னு சொல்லுது!” என கடுப்பாக சொன்னவன், அங்கே திரும்பி வந்த ஷீலாவிடம்.

“ஷீலாம்மா! சிம்ரன் மேடத்துக்கு டாய்லட் எங்கிருக்குன்னு காட்டிட்டியா? அப்படியே அத கிளின் பண்ணற பொருளெல்லாம் எங்கிருக்குன்னு காட்டிடும்மா! முதல் நாள் மங்களகரமா அந்த வேலையைப் பார்க்கட்டும்” என நக்கலாக சொல்லிவிட்டு ஆபிஸ் அறைக்குள் நுழைந்து விட்டான்.

தனது பாச்சா அவனிடம் பலிக்காமல் போக, அன்றிலிருந்து பெண்டு நிமிர்ந்தது சிம்ரனுக்கு. இந்த வேலை அவசியம் தேவை எனும் இக்கட்டில், செய்தறியாத கஸ்டமான வேலைகளைக் கூட முயன்று செய்தாள். ஒரு வாரமாக நந்தனாவுக்கு கொஞ்சம் உடம்பு முடியாமல் கடைக்கு வராமல் போக, ரிஷியிடம் இருந்து அவளைக் காப்பாற்ற யாரும் இல்லாத நிலை. சற்று நேரம் ஓய்வாய் நின்றால் கூட, இதை செய், அதை செய் என வாட்டினான்.

“இன்னியோட வேலைக்கு சேர்ந்து ஓன் வீக் ஆச்சு! ட்ரையல் பீரியட் முடிஞ்சு போச்சு! தொடர்ந்து வேலைக்கு வச்சிக்குவானா, இல்லை தொரத்திடுவானான்னு போய் கேட்டுட்டு வந்துடுவோம்! போய்டுன்னு சொன்னா, மான ரோஷம் பார்க்காம தடால்னு கால்ல விழுந்துடுவோம்” என தனக்குள் பேசிக் கொண்டே, டாய்லட்டின் ஈரத் தரையை மாப் செய்து விட்டு அவன் ஆபிஸ் அறைக்குப் போனாள் சிம்ரன்.

நாம் வாய் விட்டு கேட்பதை சில சமயங்களில் பிரபஞ்சமே நிகழ்த்திக் கொடுத்தி விடும் என்பதற்கொப்ப, அன்று ரிஷியின் காலடியில் தடால் என விழுந்து தான் கிடந்தாள் சி சிம்ரன். காலடியில் விழுந்தவள், காதலில் விழுவாளா????

 

(உருகுவான்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!