UUU–EPI 8
UUU–EPI 8
அத்தியாயம் 8
எல்லா சாக்லேட்களிலும் தியோப்ரோமின் எனும் ஒரு கெமிக்கல் இருப்பதால், அவை விலங்குகளுக்கு உகந்தது அல்ல. இந்த கெமிக்கல் அவற்றின் செரிமானத்துக்கு ஊறு விளைவித்து உயிருக்கே ஆபத்தைக் கொடுக்கக் கூடும்.
கேமரன்மலை மலேசியாவின் பிரசித்தி பெற்ற ஹைலண்டாக இருப்பதால் சுற்றுப்பயணிகளுக்கு இங்கு பஞ்சமே கிடையாது. அதனாலேயே சனி, ஞாயிறு கண்டிப்பாக கபே திறந்திருக்கும். அந்நாட்களில் தான் வியாபாரமும் சூடு பிடிக்கும். வீக்கேண்ட் என்றால் இறக்கை இல்லாமலே பறப்பார்கள் ‘பைட் மீ’யின் ஊழியர்கள்.
சாதாரண நாட்களில் விற்கும் சாக்லேட்களின் அளவை விட நான்கு மடங்கு விற்றுப் போகும் வார கடைசிகளில். கவுண்ட்டர் பார்த்து கொள்கிறவருக்கும் கிச்சனில் இருப்பவர்களுக்கும் தாவு தீர்ந்துவிடும். வார நாட்களில் காலை ஒரு தடவை மட்டும் தான் பேஸ்ட்ரி ஐட்டங்களை செய்வார்கள். வார இறுதிகளில் மதியமும் பேக்கிங் வேலை நடக்கும். ரிஷி முழு நேரமும் கிச்சனில் தான் பலி கிடப்பான். திறமையாய் வேலை வாங்குபவனுக்கு ஒவ்வொரு ஐட்டமும் அருமையாய் செய்யவும் வரும். எந்த புது ஐட்டமானாலும் இவன் கற்றுக் கொண்ட பின்னரே மற்றவர்களுக்கு பயிற்சி அளிப்பான்.
ரிஷி உள்நாட்டிலேயே மெக்கனிக்கல் இஞ்சினியரிங் முடித்திருந்தான். படித்த கையோடு சில ஆயிரங்கள் சம்பளமாய் பெற்று ஒரு நிறுவனத்திலும் வேலைப் பார்த்திருக்கிறான். தொழில் ஒன்று தொடங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த போது தான் உணவு தொழிலே என்றும் நசிந்து போகாமல் இருக்கும் என்பதை ஆராய்ந்து அதில் காலடி எடுத்து வைத்தான். ஆட்கள் வைத்து, முதலாளியாய் ஆரம்பிக்காமல் முறையாக இத்தாலியில் சாக்லேட்டரி ஷோர்ட் கோர்ஸ் ஒன்று சேர்ந்து கற்று வந்தான். அத்தோடு மலேசியாவின் புகழ் பெற்ற கல்லூரியில் பார்ட் டைம் பேஸ்ட்ரி கோர்சும் படித்தான். ரிஷி நந்தன் சாக்லேட் பாய் மட்டும் இல்லை சாக்லேட்டும் செய்யும் பாய். புதிது புதிதாக எதாவது சாக்லேட் செய்து அதை ‘சாக்லேட் ஆப் தே வீக்’ என அறிவித்து விற்பனைக்கும் வைப்பான்.
ரீசண்டாக மலேசியாவின் பழங்களின் ராஜா என அழைக்கப்படும் டுரியானை பேஸ்ட்டாக செய்து உருண்டை வடிவ சாக்லேட்டில் அடைத்து அவன் செய்திருந்த சாக்லேட் கையிருப்பு இல்லாமல் விற்று தீர்ந்திருந்தது. டேஸ்ட் செய்வதற்கு மட்டும் சில சாக்லேட்களை வேலை செய்பவர்களுக்கு கொடுத்திருந்தான் ரிஷி. அதன் ருசியில் மயங்கி, சாக்லேட் ஸ்டாப்புக்கு இல்லை என அவன் சொல்லி இருந்ததை, இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டு அரை கிலோ சாக்லேட்டை திருடி தின்றிருந்தாள் நமது சிம்ரன் என்பதை இங்கே பதிவு செய்தே ஆக வேண்டும்.
கவுண்ட்டரில் இவள் ஓரளவு தேறி இருந்ததால், கிச்சனுக்கு வேலை பழக வர சொல்லி இருந்தான் ரிஷி. மெஷினில் வெட்டப்பட்டு அழகாய் வரும் சாக்லேட்களை குட்டி குட்டி பெட்டிகளில் அழகாய் அடுக்குவது தான் அங்கே முதல் வேலை. சொல்லிக் கொடுத்த மாதிரியே அழகாய் வேலைப் பார்த்தாள் சிம்ரன்.
உணவு இடைவேளைக்குப் பிறகு கிச்சனுக்கு வந்தவள், கேப் அணிய மறந்திருந்தாள். சற்று நேரம் சென்று கிச்சனுக்கு வந்த ரிஷி, கேப் இல்லாமல் வேலை செய்யும் சிம்ரனைப் பார்த்து கடுப்பாகிப் போனான்.
“அறிவில்ல உனக்கு?” என அவளை நெருங்கி பின்புறம் நின்று இவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கத்தினான் ரிஷி.
திடீரென அவன் குரல் கேட்கவும் திடுக்கிட்டுப் போனாள் சிம்ரன்.
அதன் பிறகே அவன் கேட்டது மண்டையில் ஏற, கோபம் புசுபுசுவென வந்தது இவளுக்கு.
“ஏன் பிஞ்ஜாம்(கடனா) வேணுமா?” என இவளும் பொரிய ஆரம்பித்தாள்.
அங்கிருந்த காது கேட்காத சீன பெண்மணி தன் பாட்டுக்கு வேலையைப் பார்க்க, மற்ற இருவருக்கும் தமிழ் புரியாததனால் அவர்களும் இவர்களைக் கண்டு கொள்ளவில்லை.
“வீட்டு சமையல்ல முடி இருந்தா, சமைச்சவங்களுக்கும் சாப்பிடறவங்களுக்கும் சொந்தம் விட்டுப் போகாதுன்னு சொல்லுவாங்க! இங்க சாக்லேட்ல முடி விழுந்து கிடந்தா பிஸ்னஸ் பந்தமே புட்டுக்கிட்டுப் போயிடும்! புரியுதா சிம்ரன்?” என அவளைக் கண்டித்தவன், எப்பொழுதும் ஏப்ரன் பாக்கேட்டில் வைத்திருக்கும் கேப்பை வெளியே எடுத்தான்.
அவள் முடியை அழகாய் கோதி, ஒரு சுருட்டு சுருட்டி கேப்பை அணிவித்து விட்டவனின் கரங்கள் அவள் நீண்ட கழுத்தை மெல்ல வருடியபடி நின்றன. எதையும் ப்ளான் செய்து செய்யவில்லை அவன். இயல்பாக நடந்து விட்டது அச்சம்பவம்.
பட்டென அவன் கையில் ஒன்று போட்டு தட்டி விட்டவள், ரிஷியை முறைத்துப் பார்த்தாள்.
“ஹலோ சேகர்! இதென்ன சும்மா தொட்டுப் பார்க்கற பழக்கம்! அன்னைக்கே சொன்னனா இல்லையா, கஸ்டம்தான் ஆனாலும் என்னை மனசுல இருந்து தூக்கிப் போடுங்கன்னு!”
“இப்ப உன்னை யாரு மனசுல புகுத்தி வச்சு பூஜை பண்ணிட்டு இருக்காங்க?”
“நீங்க தான்! இந்த மாதிரி இடுப்பப் புடிக்கறது, வயித்தத் தடவுறது, முடிய கோதுறது, கழுத்த வருடறது எல்லாம் காதலோட நாலாம் படி தெரியுமா?” என இன்னும் சொல்ல வந்தவளை கைக்காட்டி நிறுத்த சொன்னவன்,
“முதல் மூனு படி என்ன சிம்ரன்?” எனும் முக்கிய கேள்வியைக் கேட்டான்.
“கண்ணால பார்த்து அட்ராக்ட் ஆகறது மொத படி! இவ கூட பழகி பார்த்தா நல்லாருக்குமேன்னு தோணி டேட்டிங் கூட்டிப் போறது ரெண்டாம் படி. டேட்டிங் போய் நமக்கு செட் ஆகும்னு தெரிஞ்சதும் அப்படியே தொபுக்கடீர்னு லவ்வுல விழறது மூனாம் படி. தொட்டுத் தடவி, அப்படியே காதல் ஒரு காவியம்டா, ஓவியம்டா, கோமியம்டான்னு பேணாத்தறது நாலாம் படி! சைட்டடிக்கற முதல் படியில நிக்கறப்பவே என்னை மறந்துடுங்கன்னு சொன்னேன். நீங்க என்னான்னா ரெண்டாம் படி, மூனாம் படிலாம் ஸ்கிப் அடிச்சிட்டு ஸ்ட்ரேய்ட்டா நாலாம் படிக்கு வந்து நிக்கறதுலாம் லெஜெண்ட் லெவல். வேளை வந்ததும் நான் பாட்டுக்கு கெளம்பி போய்ட்டே இருப்பேன். அப்புறம் தேவதாஸும் நானும் ஒரு ஜாதி தானடின்னு பாடிட்டு சுத்தப் போறீங்க, பார்த்துக்கோங்க!” என மிரட்டினாள் சிம்ரன்.
காதல், தேவதாஸ் என அவள் பேசியதைக் கேட்டு, அப்படியும் இருக்குமோ என அவன் தடுமாறி நின்றது சில நிமிடங்கள்தான்.
“யாரு நாங்க? தேவதாஸ் பாட்டு படிப்போம்? ஓவர் நினைப்பு ஒடம்புக்கு ஆகாது சிம்ரன்! சுமார் மூஞ்சி சுகுமாரி உன்னைப் பார்த்து நான் நாலாம் லெவல் காதல் படிக்கு போய்ட்டேன்னு சொல்றது எல்லாம் உன் மனபிராந்தி.
‘இளைய நாயகன்
இனிய பாடகன்
எனது வாழ்விலே நூறு நிலா’ன்னு போய்கிட்டே இருக்கற மன்மதன் நான். கெளம்பு கெளம்பு, காத்து வரட்டும்!” என நக்கலாக சொன்னான்.
“கெளம்புவோம், கெளம்புவோம்! யாரும் இங்கயே டேரா போடப் போறது இல்ல! இந்த சிம்ரனோட அருமை இப்போத் தெரியாது நந்தா சார்! வாழ்க்கையில வெறுமை வரும் போது என்னோட பெறுமை தெரிய வரும். அந்த நாள், உங்க டைரில குறிச்சு வச்சிக்கீங்க! சிம்மு சிம்முன்னு கதறனாலும், நான் நோ கம்மு(come)”
“ஷப்பா! முடியலடா சாமி! எருமையோட கருமை, உன்னோட அருமை எல்லாம் எனக்குத் தெரியாமலே போகட்டும். வாயைக் கொறைச்சிட்டு வேலையைப் பாரு” என சொல்லி சென்று விட்டான்.
பார்க்கும் பொழுதெல்லாம் இருவருக்கும் எதாவது மாட்டிக் கொள்ளும். வாயைக் கொடுத்து நன்றாக வாங்கிக் கட்டிக் கொள்வாள் சிம்ரன். ரிஷியும் பல முறை அவளிடம் பல்பு வாங்கி பளிச்சென மின்னுவான்.
நாள்தோறும் உழைத்து களைத்துப் போகும் ‘பைட் மீ’யின் ஊழியர்களுக்கு ஓய்வு கொடுக்க திங்கட்கிழமையை விடுமுறை நாளாக வைத்திருந்தான் ரிஷி. அன்று கடை அடைக்கப்பட்டு எல்லோருக்கும் ஓய்வு வழங்கப்படும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை திங்கட்கிழமையன்று தன்னிடம் வேலை செய்பவர்களை எதாவது ரெஸ்டாரண்டுக்கு டின்னர் அழைத்துப் போவதையும் வழக்கப்படுத்தி இருந்தான் ரிஷி.
அன்று இவர்கள் டின்னருக்கு போக வேண்டிய திங்கட்கிழமை. காலையிலேயே டீவாவை வாக்கிங் அழைத்துப் போய் வந்து, உணவிட்டு மறுபடி கவிழ்ந்தடித்துப் படுத்துக் கொண்டான் ரிஷி. மறுபடி அவன் விழித்தப் போது மணி ஒன்று ஆகியிருந்தது. காலையில் குடித்த ஒரு கப் காபிதான். வயிறு பகபகவென பசித்தது. எதையும் சமைத்து சாப்பிடவும் மூட் இல்லை அவனுக்கு.
தூக்கக் கலக்கத்துடனே தமக்கைக்கு அழைத்தான்.
“என்ன சமையல்?”
“குட் அப்டர்நுன் மை டியர் ப்ரோ” என பதிலளித்தாள் நந்தனா.
“அது கிடக்கட்டும்! இன்னிக்கு என்ன சமையல்? பசிக்குதுடி” குரல் தூக்கக் கலக்கத்தில் இன்னும் கரகரவென இருந்தது ரிஷிக்கு.
“இன்னிக்கு சிம்ஸ் சமைக்கறா! என்ன மெனுனு தெரியல! என்னை கிச்சன் உள்ளயே விடல” என இவனிடம் சொன்னவள்,
“சிம்ரன்! என்ன சமையல்னு உங்க நந்தா சார் கேக்கறாரு!” என சத்தமாக கிச்சனில் உள்ள சிம்ரனிடம் கேட்டாள்.
அங்கிருந்து அவள்,
“மெனுலாம் சொல்ல முடியாது! ஆனா செஃப் வானுக்கே (மலேசியாவின் பேமஸ் செஃப்) டஃப் குடுக்கற லெவலுக்கு சமைச்சிருக்கேன்! வர சொல்லுங்க” என கத்தியது இவனுக்கு இங்கே கேட்டது.
நந்தனா அவள் சொன்னதை இவனிடம் சொல்லும் முன்னே, போனை நிறுத்தி இருந்தவன் குளிக்க சென்றிருந்தான்.
“ஒரு வாரமா இந்த கலர் குருமி மொறைச்சிக்கிட்டே திரிஞ்சா. இருந்த கோபத்துக்கு சோறு என்ன மோரு கூட குடுக்க மாட்டான்னு நெனைச்சேன்! சாப்பிட வான்னு சொல்லிட்டாளே!” என முனகியபடியே தாடியை ட்ரீம் செய்தான் ரிஷி.
‘பரவாயில்லையே இந்த சிம்ரன்! டாடிஸ் லிட்டில் பிரின்சஸ்னு கெத்து காட்டிட்டுத் திரியாம சமையல்லாம் செய்யறா! வாய் மட்டும் தான் கொஞ்ச நீளம். மத்தப்படி ரொம்ப நல்லவதான். சலிச்சுக்காம கபேயில வேலைப் பார்க்கறதாகட்டும், வீட்டுல நந்தனாவுக்கு ஹெல்ப் செய்யறதாகட்டும், குட்டி கூட கொட்டமடிக்கறதாகட்டும் எந்நேரமும் எனர்ஜியோட சுத்திட்டு இருக்கா. இன்னிக்கு நமக்கு செம்ம வேட்டைத்தான்! அழகான பொண்ணு கையால சமைச்ச அருமையான சாப்பாடு! என்னோட நெலமை, அவளத்தான் கட்டிக்க முடியல, அவ சமைச்ச சாப்பாட்டயாவது ஃபுல் கட்டு கட்டிடலாம்!’ என பெருமூச்சு விட்டப்படியே அவசரமாக குளித்தான்.
அடுத்த அரை மணி நேரத்தில் நந்தனாவின் வீட்டில் இருந்தான் ரிஷி. மாமா என ஓடி வந்த மருமகளை தூக்கி முத்தமிட்டவன், அவளையும் சுமந்து கொண்டு டைனிங் ஹால் போனான். அங்கே மேசை முழுக்க பதார்த்தங்கள் மூடி வைக்கப்பட்டிருந்தன. நந்தனா நாற்காலியில் அமர்ந்திருக்க, அவள் அருகே நின்றிருந்தாள் சிம்ரன். இவனைப் பார்த்ததும் பைல்ஸ் வந்த பைசன் போல லேசாக இளித்து வைத்தவள், பார்வையை நந்தனாவின் புறம் திருப்பிக் கொண்டாள்.
“வா, வா நந்தா! உட்காரு! சிம்ஸ் ப்ரேஷெண்டேஷன் செய்யப் போறாளாம்! அப்புறம் தான் சாப்பட முடியுமாம்!”
“ப்ரேஷெண்டேஷனா?” என பச்சையில் பூப்போட்ட ப்ளவுஸ் அணிந்திருந்தவளை கேள்வியாகப் பார்த்தான் ரிஷி.
“ஆமா நந்தா சார்! சோறு வச்சா மட்டும் பத்தாது, அதுக்கு பேரு வச்சு பெருமை சேர்க்கனும்.” என அவன் முகம் பார்க்காமல் சொன்னவள், எல்லோரையும் நிற்க சொன்னாள்.
சீனி பாப்பா நாற்காலி மேல் ஏறி நிற்க, நந்தாவும் நந்துவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
‘இன்னிக்கு நமக்கு செம்ம ட்ரீட்டு’ என அவள் முகபாவனை சொல்ல,
‘பிரிச்சு மேஞ்சிடலாம்’ என இவன் பாவனை சொன்னது.
ஆவலாக இருவரும் சிம்ரன் முகத்தைப் பார்க்க, அவள் பச்சை நிற லென்ஸ் அணிந்த கண்கள் சந்தோஷத்தில் பளபளத்தது. தொண்டையைக் கணைத்துக் கொண்டவள்,
“வணக்கம் அண்ட் சலாம் செஜாத்தேரா(மலாய் வணக்கம் என வைத்துக் கொள்ளலாம்)! இன்று நான் வியர்வை சிந்தி உழைத்து உணவாக்கிய பதார்த்தங்களை சாப்பிட வந்திருக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துகள். இதை போன்ற உணவை நீங்கள் வேறு எங்குமே ருசித்திருக்க முடியாது என்பதை நான் கண்டிப்பாக இங்கே சொல்லியே ஆக வேண்டும். சமைப்பது என்பது ஒரு கலை. அதில் கைத்தேர்ந்த சிற்பி நான் என்பதை நீங்கள் நம்ப வேண்டும்” என இன்னும் அடுக்கிக் கொண்டே போனாள் சிம்ரன்.
‘ஐயோ கொல்லுறாளே இவ! சோத்தப் போடுடி முதல்ல! இருக்கற பசிக்கு ஓயாம பேசற அந்த ஹார்ட் ஷேப் உதட்ட கடிச்சு தின்னுட போறேன்!’ என மனதிலேயே புலம்பினான் ரிஷி.
“சிம்மு ஆண்ட்டி சீனி பாப்பாக்கு பசிக்கி!” என அவள் சொற்பொழிவில் இருந்து இரட்டையர்கள் இருவரையும் காப்பாற்றினாள் ரோஷிணி.
“ஓ சரிடா சரிடா! தோ முடிஞ்சது” என சொன்னவள், முதல் ஐட்டத்தின் மூடியைத் திறந்தாள்.
“தடா!!!!!!!!!! ஃபர்ஸ்ட் ஐட்டம் இஸ் அப்பளம்”
சரி அடுத்து செம்மையாக எதுவோ வரப் போகிறது என ஆவலாக இரட்டையர்கள் காத்திருக்க,
“தடா!!!!! செகண்ட் ஐட்டம் இஸ் மங்கோ ஊறுகா” என்றாள் சிம்ரன்.
அடுத்து என்ன என இவர்கள் பார்த்திருக்க,
“தடா!!!!” சீனி பாப்பா எடுத்துக் கொடுக்க,
“தேர்ட் ஐட்டம் இஸ் மோர் மொளகா” என இவள் முடித்து வைத்தாள்.
அடுத்து, தடா வந்தது, தயிர் வந்தது, தடா வந்தது, தக்காளியை வெட்டிப் போட்ட சாலட் வந்தது, தடா வந்தது, சாதம் வந்தது, தடா வந்தது, நெத்திலி பொரியல் வந்தது, தடா வந்தது பொறித்த நாகேட் வந்தது. ஆனால் கடைசி வரை மேய்ன் டிஷ் வரவேயில்லை.
கொலைப்பட்டினியில் இருந்த நந்தா சிம்ரனை முறைத்துப் பார்க்க,
“என்ன நந்தா சார்! இத்தனை ஐட்டம் இருக்கே எது சாப்பிட எது விடன்னு தெரியலையா! எல்லாமே நமக்குத்தான் பொறுமையா சாப்பிடுங்க” என கெத்தாக சொன்னாள்.
“சோத்துக்கு ஊத்திக்க கொழம்பு கொழம்புன்னு ஒன்னு இருக்குமே! அது எங்கன்னு கண்ணுல காட்டிட்டனா நான் உக்காந்து சாப்பிடுவேன்” என கடுப்பாய் கேட்டான் நந்தா.
“அது வந்து நந்தா சார், நான் கொழம்பு வைக்க இனிமேத்தான் கத்துக்கனும்! இதெல்லாம் சமைச்சு எடுக்கவே எனக்கு நாலு மணி நேரம் ஆச்சு. சோ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க”
“எதே!!!!! சோத்துல ஊறுகாய வைக்கறதுதான் உங்க ஊருல சமையலா! அத நாங்க அட்ஜஸ்ட் வேற பண்ணிக்கனுமா! இதுடா தடா, பொடான்னு பெத்த பில்டப்பு வேற உனக்கு! வாயிலயே வடை சுடறத கேள்விப் பட்டிருக்கேன், இப்போத்தான் அத நேர்லயே பார்க்கறேன்! நாங்கதான் செஃப் வான்னு, சமையல்ல நம்பர் ஓன்னுன்னு இனிமே பேசன, கேமரன் ஹைலண்டில் ஒரு அழகிய பெண் கத்தியால் குத்தி படுகொலைன்னு பேப்பர்ல நியூஸ் ஆகிடுவ!” என கடுகடுத்தவன், சாதத்தைப் போட்டுக் கொண்டு ஊறுகாயை சைட் டிஷ்சாக வைக்காமல் மேய்ன் டிஷ்சாகவே அள்ளி வைத்துக் கொண்டான்.
நந்தனாவுக்கு பேய் முழி முழித்த சிம்ரனைப் பார்த்து ஒரு பக்கம் சிரிப்பாகவும், பசியில் நொந்து போய் அமர்ந்திருந்த தமையனைப் பார்க்க பாவமாகவும் இருந்தது.
“ஒரு கைத்தேர்ந்த செஃப் உருவாகறது சில பேருக்கு பொறுக்க முடியல. பொறாமைல பொசுங்கறாங்க” என முணுமுணுத்தவள், ரிஷி நிமிர்ந்துப் பார்க்கவும் வாயை கப்பென மூடிக் கொண்டாள்.
சோறு சாப்பிடுவதில் இருந்து விடுதலை என குஷியான சீனி பாப்பா, நாகேட்டை சுவைத்து சாப்பிட ஆரம்பித்தாள்.
“இனிமே லீவ் நாளுல நான் சமைக்க சொல்லித்தரேன் சிம்ஸ்! இண்ட்டெரெஸ்ட் இருந்த சமையல் ரொம்ப ஈசிதான்.” என சொன்ன நந்தனா, நேற்று மீந்திருந்த குழம்பை சூடு பண்ணி எடுத்து டைனிங் டேபிளில் வைத்தாள்.
முதல் ஆளாக அந்தக் குழம்பை தனது சாதத்தில் ஊற்றிக் கொண்டாள் சிம்ரன்.
“நானே சமைச்சு நானே சாப்பிடறது எனக்கு ஒத்துக்காது நந்து.” என காரணம் வேறு சொன்னாள்.
ரிஷியும் நந்தனாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கண்ணால் சிரித்துக் கொண்டனர்.
இருந்ததை அட்ஜஸ்ட் செய்து சாப்பிட்டனர் நால்வரும்.
“இன்னிக்கு நைட் ‘பைட் மீ’ டின்னர் இருக்கு. நாம இப்பவே கிளம்பி எங்கயாச்சும் சுத்திட்டு அப்படியே டின்னர்ல கலந்துக்கலாம்” என்றான் ரிஷி.
இவர்கள் மூவர் மட்டும் கிளம்புகிறார்கள் என சிம்ரன் நினைக்க, அவளையும் அழைத்தனர் இரட்டையர்கள். பரவாயில்லை என சொன்னவளை வற்புறுத்தி அழைத்து சென்றார்கள்.
அவர்கள் சென்றது மவுண்ட் பிரிஞ்சாங் எனும் மலைபாங்கான இடத்துக்குத்தான். திரும்பி வரும் போது ரிஷியின் தோளில் உப்புமூட்டையாக வந்தாள் நமது சி சிம்ரன்.
தோளில் ஏற்றினான் மூட்டை
அது கிளப்புமோ காதல் சூட்டை!!!!!!!!!!! (ஆத்தர வெளுக்கப் போறேன்ற உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது…மீ எஸ்கேப். எல்லோருக்கும் விநாயகர் சதூர்த்தி வாழ்த்துகள். அவசரமா போட்டுட்டு வெளிய போறேன்! எழுத்துப் பிழை இருந்தா மன்னிக்கவும்)
உருகுவான்…..