UUU–Epilogue

103977454_653445081909496_2472649225753995686_n-bbaf1c5a

எபிலாக்

சாக்லேட்டுக்கு எல்லைகள் கிடையாது. எல்லா மொழியும் பேசும். எல்லா வடிவத்திலும் வரும். நிறைய பாரம்பரியம் கலாச்சாரத்தோடு பின்னி பிணைந்துக் கிடக்கும். மனநிலை, உடல்நிலை மற்றும் பொருளாதார நிலையில் சாக்லேட்டின் தாக்கம் இருக்கிறது. நமது குழந்தைப் பருவத்தில் இருந்து முதுமை வரை நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்கிறது சாக்லேட்.

ஹேர்மன்.எ.பெர்லைனெர்(எக்கோனோமிஸ்ட்)

வீட்டில் இரண்டு குழந்தைகளை வைத்து மேய்ப்பதே நம்மில் பலருக்கு பெரும்பாடாய் இருக்கும். எப்பொழுதடா பள்ளி விடுமுறை முடியும், மீண்டும் இவர்கள் பள்ளிக்குப் போவார்கள் என அலுத்து சலித்துவிடும். அப்படி இருக்க, பள்ளியில் முப்பது மாணாக்கர்களை கட்டி மேய்த்து, பாடம் சொல்லிக் கொடுத்து, அவர்களின் குறும்புகளை சகித்து, அடிதடியின் போது ரெப்ரி வேலைப் பார்த்து, பலவித குணநலன்களை ஒற்றை ஆளாய் கணித்து, அதற்கேற்றார் போல அவர்களை முன்னேற்றி கொண்டு வரும் ஆசிரியர்கள் தெய்வம் அல்லவா! அந்த தெய்வம் பள்ளி முடிந்து, களைத்துப் போய் வீடு வந்து சேர்ந்தது. மேட்டர்னட்டி லீவ் முடிந்து வேலைக்கு செல்ல ஆரம்பித்திருந்தாள் நந்தனா.

வீட்டு வாசலிலே அந்த சிகப்பு நிற காரைப் பார்த்த நந்தனாவுக்கு ஆயாசமாக இருந்தது. ம்ப்ச் எனும் சலிப்புடன் செருப்பை வாசலில் விட்டுவிட்டு வீட்டினுள் நுழைந்தாள். உள்ளே நுழையும் போதே, சீனீ பாப்பாவின் சந்தோஷ சிரிப்பும், குட்டி ஹாசினியின் மழலை மொழியும் மெல்லிய புன்னகையை வரவைத்தது இவளுக்கு. அவர்களோடு சேர்ந்து ஒலித்த அந்த ஆர்ப்பாட்டமான சிரிப்பைக் கேட்டபடியே, அமைதியாக ஹாலைக் கடந்தாள்.

“வணக்கம் டீச்சர்” என்ற குரலுக்கு, வேண்டா வெறுப்பாக ஒரு புன்னகையைக் கொடுத்தவள்,

“வணக்கம்! வாங்க” என முகமன் கூறினாள்.

வந்திருந்தவன் சிவநேசன். சோபாவில் அமர்ந்து பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தவன், அவளை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.

வணக்கத்தோடு பேச்சை முடித்துக் கொண்டவன், பிள்ளைகள் மேல் தான் கவனத்தை வைத்திருந்தான். அம்மாவைப் பார்த்ததும் கையாட்டி சிரித்த சீனி பாப்பா,

“கோ அம்மா! மண்டி(குளிப்பது) அண்ட் கம். பூசோக்(நாற்றம்)” என மூக்கை சுருக்கினாள்.

வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் கட்டிக் கொள்ள ஓடி வருபவளை, இவள்தான் அம்மா நாற்றம், குளிக்க வேண்டும் முதலில் என சொல்லி தள்ளி நிறுத்துவாள். அதையே மகள் சிவநேசன் முன் சொல்லவும், பல்லைக் கடித்தாள் நந்தனா. அவனோ குனிந்திருந்தாலும், சத்தம் வராமல் சிரிப்பது இவளுக்கு நன்றாக தெரிந்தது.

“என் மானத்த வாங்க, இவ ஒருத்தி போதும்!” என முணுமுணுத்தவாறே தன் ரூமுக்கு குளிக்க சென்றாள்.

“தில்லும்மா, டீச்சர் வந்துட்டாங்க! அவங்களுக்கு சாப்பிட எடுத்து வைங்க” எனும் சிவநேசனின் மெல்லிய குரல் காதில் வந்து மோதியது.

“என் வீட்டுக்கு வந்து எனக்கே சாப்பாடு போட சொல்லுறான்! இவனை எல்லாம் சிந்தி ஏஞ்சலுக்காக பொறுத்துக்க வேண்டி இருக்கு” முனகிக் கொண்டே குளிக்கப் போனாள் நந்தனா.

அடுத்த மாதமே திருமணம் வைக்க வேண்டும் என தன் தாத்தாவை சிந்தியா மிரட்டி இருக்க, அடுத்த மாதத்தை அடுத்த வருடமாக்கி இருந்தான் ரிஷி.  

“சிந்திம்மா, நந்து இப்போத்தான் பொறக்க வச்சிருக்கா! என் கல்யாணத்துக்கு எல்லாமே முன்ன நின்னு அவதான் செய்யனும்னு எனக்கு ஆசை. அவ உடம்பு தேறி வரட்டும். குட்டியும் கொஞ்சம் வளந்துடுவா, சோ ஈசியா இருக்கும் சமாளிக்க! இந்த ஓன் இயர் கேப்ல நாம இன்னும் கொஞ்சம் நல்லா லவ் பண்ணிக்கலாம். இவ்ளோ நாளா ஏட்டிக்குப் போட்டின்னு சண்டைதானே போட்டுட்டு இருந்தோம்! மூச்சு முட்ட லவ் பண்ணலாம்டா டார்லிங்! டேட்டிங் போகலாம், திருட்டு கிஸ் அடிச்சுக்கலாம், அப்பப்போ கட்டிப் புடிச்சுக்கலாம், ஊட்டி விட்டுக்கலாம், கிப்ட் எக்ஸ்சேஞ் பண்ணிக்கலாம். இதெல்லாம் கல்யாணத்துக்குப் பிறகு செஞ்சா கிக் இருக்காதுடி! ப்ளிஸ்” என கெஞ்சினான் சிந்தியாவிடம்.

“இந்த கிஸ், ஹக், கிப்டுக்காகலாம் ஒத்துக்க முடியாது! என் நந்துக்காக ஒத்துக்கறேன்!”

“அடிக்கடி குடுக்கறேன்ல, அதான் மதிப்பு தெரியல! இனிமே நீயா கெஞ்சி கேக்கற வரைக்கும் குடுக்க மாட்டேன்டி” என பொய்யாய் கோபம் கொண்டாலும், தன் தமக்கையின் மேல் உயிரை வைத்திருக்கும் தன்னவளை இறுக்கி அணைத்து முத்தாடினான் ரிஷி.

“நானா கேக்கற வரைக்கும் குடுக்க மாட்டேன்னு சொன்ன!” என கலாய்த்தாள் சிந்தியா.

“இதான் லாஸ்ட். இனிமே நீயா கேட்டாத்தான் கிடைக்கும்”

“கேட்டு வாங்கி எனக்கு பழக்கமில்ல போ”

“ஏய் அப்படிலாம் சொல்லாதடி! இப்படிலாம் சொல்லுவன்னு தெரியாம சபதம் வேற போட்டுட்டேன்! ஒரு நாளைக்கு ரெண்டு தடவையாச்சும் கேட்டுடுடி ப்ளிஸ்” என கெஞ்சியபடி அவள் பின்னால் போனது எல்லாம் நடந்து ஒரு வருடம் ஆகியிருந்தது.

திருமணமானால் நந்தனையும் அவன் மனைவியையும் தன்னோடு வைத்துக் கொள்ளப் பிரியப்படவில்லை நந்தனா. தனித்து இருந்தால்தான் இருவருக்குள்ளும் ஒரு பிடிப்பு வரும். அதோடு நந்தாவை தான் சார்ந்து இருக்கக் கூடாது என பிடிவாதமாக சொல்லி விட்டாள் சகோதரனிடம். கெஞ்சி கொஞ்சி இவனால் அவளை வழிக்குக் கொண்டு வர முடியும். ஆனாலும் தன் தமக்கையின் தன்னம்பிக்கையை அழிக்கும் அச்செயலை ஒரு போதும் செய்யமாட்டான் ரிஷி. அதனால் தங்கள் இருவருக்காக வீடு தேட ஆரம்பித்தான்.

பிறந்ததில் இருந்து செல்வ செழிப்புடன் வளர்ந்த சிந்தியாவை, தனது குட்டி ஜாகையில் குடி வைக்க மனம் வரவில்லை அவனுக்கு. ஒரு வார்த்தை சொன்னால் ஒன்றுக்கு இரண்டு என கேஷ் மணி கொடுத்து வீடு வாங்கி கொடுப்பாள் அவனின் மசாலா குவீன். திருமண செலவெல்லாம் தங்களுடையது என சிவராமன் அன்பாய் வற்புறுத்தியிருக்க, அவர் மகள் வாழப்போகும் வீட்டையாவது தன்னுழைப்பில் கொடுக்க நினைத்தான் ரிஷி. அதற்கும் சேர்த்துதான் இந்த ஒரு வருட இடைவெளி. கேமரனிலேயே நான்கறை கொண்ட அழகான மாடி வீடு வாங்கி, சிந்தியாவின் இஸ்டப்படி அவ்வீட்டை அலங்கரிந்தும் முடித்திருந்தான் ரிஷி. தனது சேமிப்பில் பாதியை முன்பணமாகவும் மீதத்தை பேங்க் லோனாகவும் எடுத்திருந்தான் வீடு வாங்க. வீட்டு சாவி கிடைத்ததும் தங்களுடைய அன்பளிப்பு என வீட்டை பொருட்களால் நிறைத்திருந்தனர் சிந்தியாவின் குடும்பத்தினர்.

அந்த ஒரு வருட கேப்பில், சின்னவளுக்கு ஹாசினி என பெயர் சூட்டி சிம்பிளாக விழா நடத்தினார்கள். சிவசுவையும், அந்த நேரத்தில் அமெரிக்காவில் இருந்த நேசனையும் தவிர மொத்தக் குடும்பமும் ஆஜர் ஆகியிருந்தது. இரண்டு குட்டிப் பெண்களும் சிந்தியாவின் குடும்பத்தின் செல்லக் குழந்தைகளாக ஆகிப் போயினர்.

ஈப்போவில் இருந்து அடிக்கடி யாராவது பிள்ளைகளைப் பார்க்க வந்து கொண்டுதான் இருப்பார்கள். வேறுபாடு பார்க்காமல் நந்தனாவின் வீட்டில் கை நனைத்து விட்டுத்தான் போவார்கள். தில்லும்மா சிவசுவிடம் போக மாட்டேன் என பிடிவாதமாக நந்தனாவுடனே தங்கி விட்டார். பேத்தியைப் பார்க்க சிவசு மட்டும் வந்து ஹாட்டலில் தங்கி இருந்து அவளோடு அளவளாவி விட்டுப் போவார். வயதான காலத்தில் தன்னை ஒதுக்கி வைத்து விட்ட மனைவி மேல் அவருக்கும் கோபம்தான். சிந்தியாவுடன் தன்னைப் பார்க்க ஹோட்டல் வரும் மனைவியை முறைத்தவாறே இருப்பார்.

தில்லும்மாவோ,

“கொள்ளுப் பேரப்பிள்ளைங்க எடுக்கற வயசுல, முறைப்பொண்ண முறைக்கற மாதிரி என்னை முறைக்க வேணாம்னு சொல்லு சிந்திம்மா! காடு வா வாங்குதாம், வீடு போ போங்குதாம்! ஆனா இன்னும் திமிரு மட்டும் அடங்கல.” என சத்தமாக முணுமுணுப்பார்.

“நல்லா ஆடு கோழின்னு போட்டு வளத்தேன்ல உங்க பாட்டிய, அதான் உடம்பு முழுக்க கொழுப்பு வச்சு அலையறா! கட்டன புருஷன விட்டுப்புட்டு கண்டவங்க வீட்டுல சேவகம் பண்ணிக்கிட்டு திரியறா!” என அவரும் சத்தமாக முணுமுணுப்பார். இருவரையும் சமாதானப்படுத்தி பேச வைப்பதற்குள் போதும் போதுமென ஆகிவிடும் சிந்தியாவுக்கு.  

இந்த ஒரு வருடத்தில், அமெரிக்காவில் தொடங்கி இருந்த பிஸ்னசை மூடி அங்கிருந்த வீட்டை விற்று மொத்தமாக மலேசியாவுக்கு வந்து விட்டான் சிவநேசன். ப்ரோஸ்தெதிக் லேக் பொறுத்தி இருந்தவனுக்கு பல மாதம் எடுத்தது தடுமாற்றம் இல்லாமல் நடந்து பழக. சாதாரணமாக எல்லோரும் செய்யும் வேலைகளை இவனாலும் செய்ய முடிந்தது. கடுமையான பயிற்சியும் விடா முயற்சியும் அவனுக்கு கைக்கொடுத்தது. சாதாரணமாக பார்த்தால் அவனுக்கு கால் ஊனம் என்பதே கண்டுப்பிடிக்க முடியாத அளவுக்கு நடக்க பயின்றிருந்தான் அவன்.

கோலாலம்பூரில் சிவநேசன் தனது பிஸ்னசை ஆரம்பித்து இன்றோடு இரண்டு மாதங்கள் ஆகின்றன. அடிக்கடி தில்லும்மாவையும் தங்கையையும் பார்க்க கேமரன் வருவான். அவனது அப்பழுக்கில்லாத அன்பால் குழந்தைகள் அவனோடு நெருங்கிப் போயினர். சிவா சித்தப்பா என உறவு முறையை தில்லும்மா சொல்லிக் கொடுக்க, அது சிவாப்பா என சுருக்கப்பட்டது சீனிப்பாப்பாவால். ஹாசினி குட்டியோ இன்னும் சுருக்கி ப்பா, ப்பா என தன் மழலையால் அழைப்பாள். முதல் தடவை நேசனை தன் மகள் ப்பா என கூப்பிட்டதை கேட்டு எவ்வளவு அடக்க முயன்றும் கண்ணில் நீர் பொங்கிவிட்டது நந்தனாவுக்கு.     

அங்கிருந்த தில்லும்மாவும் சிந்தியாவும் பதறிப் போய் அவளை நெருங்க, விடுவிடுவென ரூமுக்குள் நுழைந்துக் கொண்டாள் நந்தனா. அன்று மாலை கிச்சனில் டீ தயாரித்துக் கொண்டிருந்த நந்தனாவின் அருகே வந்து நின்றான் நேசன்.

“டீச்சர்!”

அவன் குரலில் உடல் விறைக்க, திரும்பிப் பார்க்காமல் அப்படியே நின்றிருந்தாள் நந்தனா. தன் கணவனால் இவனுக்கு கால் போனது, தங்களுக்காக இவன் பண உதவி செய்து சிந்தியாவையும் அனுப்பியது, சிவசுவால் அவன் பட்டப்பாடுகள் என எல்லாவற்றையும் அறிவாள் அவள். ஆனாலும் சிந்தியாவின் மற்ற உறவுகளிடம் பேசுவது போல அவனிடம் சகஜமாகப் பேச முடியவில்லை நந்தனாவால். அவளைப் பார்க்கும் போது அவன் கண்களில் தோன்றும் ஒளி நந்தனாவுக்கு ஒரு வித பயத்தைக் கொடுத்திருந்தது. அந்த பயமே நேசனிடம் இருந்து தள்ளி நிறுத்தி இருந்தது அவளை. ஹாய், நலமா என்பது போல ஒரு சில வார்த்தைகளில் பேச்சை முடித்துக் கொள்வாள் நந்தனா.

இன்னும் பாரதியை மனதில் வைத்துப் பூஜிக்கும் அவளுக்கு, தன் பாரதிக்கு கிடைக்க வேண்டிய அப்பா எனும் ஸ்தானத்தை தன் குட்டி மகள் இவனுக்குக் கொடுத்ததை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இதயம் ரத்தக் கண்ணீர் வடித்தது.

அவளிடம் இருந்து பதில் இல்லாமல் போக மீண்டும், மிக மிக மென்மையாக,

“டீச்சர்!” என அழைத்தான் நேசன்.

குரலாலே ஒருத்தரின் காயத்துக்கு மருந்து போட முடியுமா? குரலாலே ஒருத்தரின் தலையை வருடிக் கொடுக்க முடியாமா? குரலாலே ஒருத்தரின் கைப்பிடித்து நானிருக்கிறேன் உனக்கு என உறுதி கொடுக்க முடியுமா? முடியும் என்றால், அதைத்தான் செய்ய முயன்றான் சிவநேசன்.

மெல்ல திரும்பியவளின் கண்கள் சிவந்திருந்தன.

“எனக்குப் பிடிக்கல!”

உன்னைப் பிடிக்கவில்லை என்றாளோ, என் மகள் உன்னை அப்பா என அழைப்பது பிடிக்கவில்லை என்றாளோ அது அவளுக்குத்தான் வெளிச்சம்.

கைகளைக் கட்டிக் கொண்டு, கண்களை மூடி ஆழ்ந்த மூச்சொன்றை வெளியேற்றினான் சிவநேசன். பின் கண்களைத் திறந்தவன், அவள் கண்களை ஊடுருவி,

“எனக்குப் பிடிச்சிருக்கு டீச்சர்!” என்றான்.

நந்தனாவைப் பிடித்திருக்கிறது என்றானோ, பிள்ளை அப்பா என கூப்பிடுவது பிடித்திருக்கிறது என்றானோ, அது அவனுக்குத்தான் வெளிச்சம்.

அன்றிலிருந்து தொடங்கியது கண்ணாமூச்சி ஆட்டம். இவன் வந்தாலே வாங்க என சொல்லி ஒதுங்கிக் கொள்வாள் நந்தனா. அவன் கிளம்பும் வரை வெளியே வரமாட்டாள். இந்த நாடகத்தைப் பார்த்த ரிஷி, நேசனைத் தனியாகப் பிடித்தான்.

“சிவா! பரிதாபத்துல எடுக்கற முடிவு வாழ்க்கைக்கு சரி வராது”

“பரிதாபம்னு யார் சொன்னது ரிஷி? தனாவ எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு”

“தனாவா?”

“என் மனசுக்குள்ள நந்தனாவ அப்படித்தான் கூப்பிடறேன்! முதன் முதலா உங்க குடும்ப போட்டோவ பார்த்தப்போ, என்னால இவ விதவையா ஆகிட்டாளே, குழந்தைங்களுக்கு அப்பா இல்லாம ஆகிடுச்சேன்னு குற்ற உணர்ச்சில ரொம்ப தவிச்சேன். அவளையும் குழந்தைகளையும் நல்லா வாழ வைக்க என்னால முடிஞ்சத எல்லாம் செஞ்சேன். பாரதி குடும்பம் நல்லா இருக்கனும்னு நெனைச்ச என்னை, இந்தக் குடும்பத்துல ஒரு அங்கமா ஆகிடமாட்டோமான்னு ஏங்க வைச்சிட்டாங்க உன் ட்வீனும் அவ பெத்த தேவதைகளும். தனாவோட அழகுல மயங்கிதான் இந்த முடிவ எடுத்தேன்னு நினைச்சிடாத ரிஷி! எல்லாப் பொண்ணுமே ஏதோ ஒரு வகையில அழகுதான். அவங்க கிட்ட இருக்கற தனித்துவம்தான் நம்மள கொக்கிப் போட்டு இழுக்கும்.”

“எங்க நந்து தனித்துவமானவன்னு இவ்ளோ ஷோர்ட் டைம்ல கண்டுப்புடிச்சிடீங்களா சிவா?” என நூல் விட்டுப் பார்த்தான் ரிஷி.

“செர்டன்லி! பிள்ளைங்க கூட அவ பழகற விதம், தில்லும்மா கிட்ட காட்டற பாசம், சிந்தியாவ தாங்கற அழகு, உன்னைப் பார்த்துக்கற பாங்கு, பாரதி பாரதின்னு உருகற உருக்கம், என் மேல் என்னமோ வெறுப்பு இருந்தாலும் சிந்தியாவுக்காக சகிச்சுக்கிட்டு ரெண்டு வார்த்தை பேசற கேர்ட்டசி இதெல்லாம் ரொம்பவே என்னை கவர்ந்திருச்சு ரிஷி! அவளும் குழந்தைகளும் எனக்கே எனக்கா வேணும்னு மனசு கிடந்து அடிச்சுக்குது. விட்டா தினம் இங்க வந்து அவங்கள பார்த்துட்டுப் போவேன். ஆனா அது தனாவுக்குப் பிடிக்காது! அதான் வாரத்துக்கு ஒரு தடவை வந்துட்டுப் போறேன்!”

“நீங்க ஹேண்ட்சமா இருக்கீங்க! பிஸ்னஸ் இருக்கு! கால் பிரச்சனையா இருந்தாலும் அதையும் கடந்து நார்மலான மனுஷனா நடமாடறீங்க! நல்ல பொண்ணா கிடைக்கும் சிவா. இப்படி ரெடிமேட் குடும்பத்த ஏத்துக்க வேண்டிய அவசியமில்ல உங்களுக்கு”

“இவங்க எனக்கு ரெடிமேட் பேலியா தெரியல ரிஷி! என் பேமிலாயாத்தான் தெரியறாங்க! என் பொண்ணுங்க என் கிட்ட சிணுங்கறப்ப, உரிமையா அது இது வேணும்னு கேக்கறப்ப, மேல ஏறி விளையாடறப்ப, சிவாப்பா, ப்பான்னு கூப்பிடறப்ப எல்லாம் அவங்களுக்காக என் உயிரையும் குடுக்கலாம்னு தோணுது ரிஷி! தனா ஒத்தப் பார்வை அதுவும் கடனேன்னு பார்க்கறப்ப கூட இதயம் படபடன்னு துடிக்குது எனக்கு! ஐ லவ் மை த்ரீ ஏஞ்சல்ஸ் வெரி வெரி மச்! ஆனா தனாவ நான் போர்ஸ் பண்ணமாட்டேன் ரிஷி. விலகியும் போக மாட்டேன். அவதான் எனக்குன்னு நான் பிக்ஸ் ஆகிட்டேன்! என்னை ஏத்துக்கறதும், ஒதுக்கி வச்சி உயிரோட கொல்லறதும் அவளோட விருப்பம்.” என சொன்னவனை இறுக அணைத்துக் கொண்டான் ரிஷி.

“பாரதி கூட உயிருக்கு உயிரா வாழ்ந்த நந்தனாவுக்கு உங்கள ஏத்துக்கறது ரொம்பவே கஸ்டம் மச்சான்! உங்க வாழ்க்கையை காத்திருந்து வீணாக்கிடாதீங்க”

“என் வாழ்க்கையே அவங்க மூனு பேர்தான் ரிஷி. தனாவுக்கு புருஷனா இருக்கக் குடுத்து வைக்கலனாலும் என் குழந்தைகளுக்கு ஒரு அப்பாவா இப்படியே இருந்துடுவேன். இதப்பத்தி இதுக்கு மேல பேச வேணாமே!” என முடித்துக் கொண்டான் சிவநேசன்.

அவன் மனது காலியான தரிசு நிலம். சுலபமாக ரதிநந்தனாவை அதில் நட்டு வைத்துக் கொண்டான். அவள் மனமோ சூறாவளி அடித்து ஓய்ந்த பொட்டல் காடு. அதில் இன்னொரு உயிர் முளைவிட்டு முளைக்குமா?

குளித்து விட்டு வந்தவள், தில்லும்மா எடுத்து வைத்திருந்த உணவை அவசரமாகப் சாப்பிட்டாள்.

“தில்லும்மா, ஹாசினியை அவர் கிட்ட இருந்து வாங்கிட்டு வாங்க! பால் குடுக்கனும்”

அதற்குள் பிள்ளையுடன் அங்கே வந்தவன் குழந்தையை அவளிடம் நீட்டினான். தாய் முகம் பார்த்து தாவிக் குதித்தது அந்த குட்டி வாண்டு. பிள்ளையை வாங்கிக் கொண்டவள், விடுவிடுவென ரூமுக்கு போய் விட்டாள். தன் பேரனைப் பாவமாகப் பார்த்தார் தில்லும்மா!

“விடுங்க தில்லும்மா! என் வாழ்க்கையில எதுதான் சுலபமா கிடைச்சிருக்கு, இப்போ மட்டும் கிடைச்சிட! அம்மாவோட பாசம் கிடைக்கல, அப்பாவோட பாசமும் கிடைக்கல. அதெல்லாம் வேணும்னு நான் சின்னப்பிள்ளையில ஏங்கியிருக்கேன் தில்லும்மா! ஆனா கிடைக்கதுன்னு புரிஞ்சதும் ஒதுங்கி வாழப் பழகிட்டேன். இப்போ இவள ரொம்பப் புடிக்குது தில்லும்மா! குழந்தைகளையும் ரொம்ப ரொம்ப புடிக்குது. இவங்க கிடைக்கமாட்டாங்கன்னு தெரிஞ்சா ஒதுங்கிக்க முடியுமான்னு தெரில தில்லும்மா! ரொம்ப உடைஞ்சி போயிடுவேன்னு நெனைக்கிறேன்!” என தன் பாட்டியைக் கட்டிக் கொண்டான் சிவநேசன்.

மேசையில் விட்டுவிட்டுப் போயிருந்த போனை எடுக்க வந்த நந்தனா, அவன் பேசியதையும் அதில் தொணித்த சோக பாவத்தையும் கேட்டாள். மனதை அழுத்தும் வலியோடு போனை எடுக்காமலே மறுபடி ரூமுக்குள் நுழைந்துக் கொண்டாள் அவள்.

அடுத்த வாரம் நடக்க இருக்கும் ரிஷி சிந்தியாவின் திருமணத்துக்கு தைத்து வந்திருந்த ப்ளவுஸ் மற்றும் மற்ற ஆடை அணிகலன்களைக் கொடுக்க வந்திருந்த சிவநேசன் தங்கை கிளினிக்கில் இருந்து வரும் வரை அங்கிருந்து விட்டே சென்றான்.

ஆம்! சிந்தியா மறுபடி டாக்டராக ப்ராக்டிஸ் செய்ய ஆரம்பித்திருந்தாள். ரிஷியின் மோட்டிவேஷனிலும், விடாத வற்புறுத்தலாலும் மேல் முறையீட்டுக்கு எழுதி போட்டிருந்தாள். அவர்கள் கேட்டிருந்த எல்லா செக் அப்களையும் செய்து, மெண்டலி அண்ட் பிசிக்கலி டாக்டராக இருக்க எல்லாத் தகுதியும் இருக்கிறது என நிரூபித்திருந்தாள். போன மாதம்தான் அவளது முறையீடு பரிசீலிக்கப்பட்டு அப்ரூவாகி வந்திருந்தது. தற்பொழுது கேமரனில் இருக்கும் ஒரு கிளினிக்கில் பகுதி நேரமாக ப்ராக்டிஸ் செய்கிறாள். அவள் பெயரில் சின்னதாக ஒரு மகப்பேறு மருத்துவமனை ஒன்றை கேமரனில் கட்டிக் கொண்டிருக்கிறார் சிவசு. பேத்தி மறுபடி டாக்டர் ஆனதுக்கு அவர் கொடுக்கும் அன்பு பரிசு அது!  

திருமண நாளும் அழகாக விடிந்தது. சிந்தியா விரும்பியதைப் போலவே பிரம்ம முகூர்த்தத்தில், ஈப்போவின் பிரபலமான கோயிலில் மங்கள இசை முழங்க தன்னவளின் கழுத்தில் மூன்று முடிச்சுப் போட்டு மிஸ்டர் சிந்தியா ஆனான் ரிஷி. அவர்கள் கலயாணத்துக்கு எல்லா வேலைகளையும் நந்தனாவும் நேசனும் இழுத்துப் போட்டுக் கொண்டு சந்தோஷமாக செய்தார்கள். தேவையான தருணங்களில் நேசனுடன் நார்மலாக பேசக் கூட செய்தாள் நந்தனா. சின்னக் குட்டியை தில்லும்மா பார்த்துக் கொள்ள, ஓடியாடிய சீனீ பாப்பாவை சிவராமனில் இருந்து சியாம் வரை எல்லோரும் கவனித்துக் கொண்டார்கள்.

கல்யாணக் கோலத்தில் பேத்தியைக் கண்டு ஆனந்தத்தில் கண் கலங்கிப் போனார் சிவசு. அவள் முகத்தில் தெரிந்த சந்தோசத்தில், மனம் நிறைந்துப் போனார். திருமணத்துக்கு வந்த முக்கிய சொந்தங்கள் ஜாதியை சொல்லி அவர் வாயைப் பிடிங்கியது கூட அவர் சந்தோசத்தைக் குலைக்கவில்லை. ரிஷி, நந்தனா, அவள் பிள்ளைகள் என யாரிடமும் நெருங்காவிட்டாலும், பேத்தியை மட்டும் தொட்டுத் தடவி அகமகிழ்ந்துப் போனார் அந்தக் கிழவர்.

அன்று மாலையே மிக பிரமாண்டமாக, புகழ்பெற்ற ஒரு மண்டபத்தில் இவர்களின் திருமண விருந்து நடைப்பெற்றது. ரெட் அண்ட் கோல்ட் தீமென அறிவித்திருக்க, வந்தவர்கள் எல்லோரும் சிவப்பும், தங்கக் கலரிலும் கண்ணைப் பறித்தார்கள். மண்டபமும் தீமுக்கு ஏற்றவாறு அலங்கரிக்கப்பட்டிருந்தது.

ரிஷி ஏற்கனவே வந்து மணமக்கள் அமரும் இருக்கையில் அமர்ந்திருந்தான். கோல்ட் கலர் ஷெர்வாணியில் ஆணழகனாக அமர்ந்திருந்தான் நம் ரிஷி. தன் மனையாள் வருவாளா என வாசலையேப் பார்த்திருக்க, டீஜே சிஸ்டத்தில் இருந்து ஒலித்தது அட மாமோய்!!!டண்டனக்க டணக்கு டணக்கு மம்பட்டியான் அட மம்பட்டியான்!!!

முகம் முழுக்க புன்னகையுடன் இவன் எழுந்து நிற்க, அவன் மணவாட்டி சிகப்பு வர்ண லெஹெங்காவில் கருப்புக் கண்ணாடி அணிந்து ஸ்டைலாக மண்டபத்தின் உள்ளே நுழைந்தாள். அவள் முன்னே கோல்ட் கலரில் லெஹெங்கா போட்டு கியூட்டாக கருப்பு கண்ணாடி அணிந்து நின்றிருந்தாள் சீனீ பாப்பா. புன்னகையுடன் மண்டபத்தில் உள்ள அனைவரும் எழுந்து நின்று கைத்தட்ட ஆரம்பித்தார்கள்.

“மலையூரு நாட்டாமை

மனச காட்டு பூட்டாம

உன்னைப் போல யாரும் இல்ல மாமா” என சிந்தியா துப்பட்டாவைக் கையில் பிடித்தப்படி ஆடிக்கொண்டே கிராண்ட் எண்ட்ரன்ஸ் கொடுக்க அவளோடு சுழண்டு சுழண்டு ஆடியபடியே வந்தாள் நம் சீனீ பாப்பாவும்.

மெல்ல கீழே இறங்கி வந்த ரிஷி,        

“நான் ஐயனார போல

ஒரு காவலுக்கு போறேன்

இப்போ நெய்ய ஊத்தி

சோறு திங்க நேரம் இல்ல போடி” எனும் வரிகளுக்கு ஆடியபடியே வந்தான். இவர்களை அவன் நெருங்க, சிந்தியா சீனீ பாப்பாவைத் தூக்கிக் கொண்டாள். இவன் சிந்தியாவைத் தூக்கிக் கொண்டான். எல்லோரும் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து ஆர்ப்பரித்தார்கள். இருவரையும் தூக்கிக் கொண்டே மேடையருகே வந்து இறக்கி விட்டான் ரிஷி.

சிந்தியாவின் பிடியில் இருந்து இறங்கிக் கொண்ட குட்டி, அவர்களோடு மேடை ஏறாமல் சற்று தொலைவில் நின்றிருந்த சிவநேசனை நோக்கி ஓடினாள். மகள் பின்னாலேயே அவளைப் பிடிக்கப் போனாள் நந்தனா. குட்டி ஓடி வந்த வேகத்திலேயே நேசனை வந்து இடித்து ப்ரேக் போட, நிலைத் தடுமாறினான் அவன். பட்டென அவன் கைகளைப் பற்றி விழுந்து விடாதவாறு தாங்கிக் கொண்டாள் நந்தனா. தன்னை சமாளித்துக் கொண்டவன், மெல்லக் கீழே குனிந்து சீனீ பாப்பாவைத் தூக்கிக் கொண்டான். சட்டென நிகழ்ந்த இந்த சம்பவத்தில் படபடவென வர, இன்னும் சிவநேசனின் கையை இறுகப் பற்றியபடி நின்றிருந்தாள் நந்தனா.

“எப்பொழுதும் என்னைத் தாங்கிப் பிடிக்க, என் கூடவே இருப்பியா தனா?” என அவள் விழிகளை ஆழ்ந்துப் பார்த்து மென்மையாக கேட்டான் சிவநேசன்.

அவன் கையைப் பிடித்திருந்த தன் கையைப் பார்த்திருந்த நந்தனாவுக்கு கண்கள் லேசாக கலங்கியது. அவன் கழுத்து வளைவில் முகம் புதைத்தவாறு ஏதோ பேசிக் கொண்டிருந்த தன் மகளின் முதுகை வெறிக்கப் பார்த்தவளுக்கு உள்ளுக்குள் பிரளயமே நிகழ்ந்தது. மெல்ல கையை விலக்கிக் கொண்டவள், அவனை நிமிர்ந்துப் பார்த்து மெலிதான புன்னகை ஒன்றைக் கொடுத்தாள். அவள் கொடுத்த முதல் புன்னகையில் முகம் மலர்ந்து விகசிக்க, மெய் மறந்து நின்றான் சிவநேசன். (இவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்க சொல்லி நெறைய கொலை மிரட்டல் எனக்கு. ஒரு பெண் கணவனை இழந்த பட்சத்தில் மறுமணம் செய்து கொள்வது என்பது மிக மிக வரவேற்கப்பட வேண்டிய விஷயம். ஆண்களைப் போலவே அவளுக்கும் உணர்வும், உணர்ச்சிகளும் உண்டு. கணவன் மரிப்பதால் அவை மரித்துப் போய் விடுவது இல்லை. ஆனால் இங்கே நந்தனா உயிர் உருக ரவிபாரதியுடன் வாழ்க்கை நடத்தி இருக்கிறாள். அவனும் காதலால் அவளை திக்குமுக்காட வைத்திருக்கிறான். அப்படிப்பட்டவளுக்கு சட்டென பாரதியை மறந்து இன்னொருத்தனிடம் ஒன்றுவது என்பது மிக மிக கஸ்டமே! சிவநேசனின் அன்பு அவளையும் மாற்றலாம்! மாற்றும் எனும் பொசிட்டிவ் வைப்ரேஷனோடு இவர்களின் சேப்டரை முடிக்கிறேன்.)    

இவர்களை ரிஷியும் சிந்தியாவும் மேடையில் இருந்து கவனித்துக் கொண்டுதான் இருந்தார்கள். ரிஷியின் கண்கள் கலங்கி இருந்தாலும், உதடுகள் புன்னகை பூசி இருந்தன. ரிஷியின் கைப்பற்றி தட்டிக் கொடுத்த சிந்தியா,

“அண்ணா நம்ம நந்துவ நல்லாப் பார்த்துப்பான். அவளுக்கு காவலனா, கணவனா, பிள்ளைங்களுக்கு நல்ல அப்பாவா இருப்பான்! நந்துவோட நல்ல மனசுக்கு ரொம்ப நல்லா இருப்பா அவ” என குரல் கரகரக்க சொன்னாள். நேசன் நந்தனாவை கையில் குழந்தையுடன் அமர்ந்திருந்த தில்லும்மாவும் கண் கலங்கப் பார்த்திருந்தார்.

“குட்டிம்மா! உன் சிவாப்பா பாசம் காட்ட ஆள் இல்லாம ஏங்கி வளந்தவன்டா! அவனோட ஒட்டு மொத்த பாசத்தையும் உங்க மூனு பேருக்கும் குடுத்து கதிகலங்க வைக்கப் போறான் பாரேன்! இந்த தில்லும்மா சொல்லறது அப்படியே நடக்கும்” என ஹாசினி பாப்பாவிடம் சொல்ல, அது தன் பொக்கை வாய் திறந்து சிரித்தது. வந்தவர்கள் வயிறார உண்டு மணமக்களை வாழ்த்திவிட்டு சென்றார்கள்.

மறுவீட்டு அழைப்பு என மூன்று நாட்கள் சிந்தியாவின் வீட்டில் தங்கி இருந்து, கேமரனுக்குப் புறப்பட்டார்கள் அனைவரும். கேமரனில் ரிஷி வாங்கி இருந்த வீட்டுக்கு கிரகப்பிரவேஷம் செய்து, முதலிரவை அங்கேயே வைப்பதாக ஏற்பாடு. புது வீட்டில் போய் இறங்க, டீவா குரைத்துக் கொண்டே ஓடி வந்து ரிஷியின் மேல் தாவியது. சிந்தியாவைப் பார்த்து கடுப்பில் குலைத்த டீவா, ரிஷியின் முகமெங்கும் நக்கி வைத்தது.

“எங்கடா என் கிட்ட உன்னை உரிமைக் கொண்டாட நந்தனாவோ குட்டிங்களோ யாருமே சண்டைக்கு வரலன்னு பார்த்தேன்! கடைசிலே இந்த டீவா கூட உரிமைப் போராட்டம் நடத்த வச்சிட்டல்ல என்னை” என சொல்லி சிரித்தாள் சிந்தியா.

அவள் பேச்சில் எல்லோரும் கலகலவென நகைத்தார்கள். மணமக்களை அமர்த்தி வீட்டுக்கு பூஜை செய்து, பால் காய்ச்சி, மாலை வரை அங்கிருந்து பேசி சிரித்து, அவர்களை அங்கேயே விட்டு விட்டு கிளம்பினார்கள் எல்லோரும். டீவாவையும் தூக்கிக் கொண்டுதான்.

“சிம்மு!” என கொஞ்சினான் ரிஷி.

“என்ன சேகர்?” என குயிலும் கொஞ்சியது.

“எனக்கு..எனக்கு..”

“உனக்கு..உனக்கு..”

“தூக்கம் தூக்கமா வருதுடி”

“எடு அந்த மோப்பு கட்டைய! எவ்ளோ ஆசை ஆசையா இன்று முதல் இரவு, நீ என் இளமைக்கு உணவுன்னு காலையிலெ இருந்து மனசுக்குள்ளயே நூறு தடவைப் பாடிருப்பேன்! தூக்கம் வருதாம்ல, தூக்கம்! இதுல எல்லாம் விளையாடதே சேகர்! கொன்ட்ருவேன்!”

“எங்க கொல்லுடி பார்க்கலாம்” என்றவன் குடுகுடுவென மாடி ஏறினான்.

அவன் பின்னாலேயே துரத்தி கொண்டு ஓடியவள், அவன் ரூமுக்குள் நுழைந்து கதவை பூட்டிக் கொள்ள,

“சேகர்! கதவைத் திறக்கறியா? இல்ல சாவிப் போட்டு உள்ள வரவா?” என கத்தினாள்.

“பேபி, செம்ம மூட்ல இருக்கப் போல! உன் ரூம்ல கிப்ட் பேக் ஒன்னு வச்சிருக்கேன்! அத போட்டுட்டு வா! அப்போத்தான் இந்தக் கதவு திறக்கும்” என்றான்.

கிப்ட் என்றதும் ரூமுக்கு ஓடியவள், கட்டில் மேல் வீற்றிருந்த கவரைப் பிரித்துப் பார்த்தாள். பிங்க் வண்ணத்தில் அழகான இரவு உடை ஒன்றை வாங்கி வைத்திருந்தான் ரிஷி!

“ரசிகன்டா சேகர் நீ” என கத்தி சொன்னாள் சிந்தியா.

மற்றொரு ரூமில் இருந்தவனுக்கு புன்னகையில் முகம் மலர்ந்தது.

குளித்து விட்டு அவன் கொடுத்த உடையை அணிந்தவள் தன் ரூம் கதவைத் திறக்க, அலேக்காக அவளை அள்ளிக் கொண்டான் ரிஷி.

“ரிஷி, ரிஷி! நீ இவ்ளோலாம் ரோமேண்டிக்கா இருப்பேன்னு நான் நெனைச்சுக் கூட பார்க்கலப்போ!” அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டே சொன்னாள் சிந்தியா.

“கட்டிக்கறதும் உன்னை, வச்சிக்கறதும் உன்னைன்னு ஆயிருச்சு என் நிலமை. இவ்ளோ ரோமேண்டிக்கா கூட இல்லைன்னா எப்படி” என சிரித்தவன், தன் ரூமின் கட்டிலில் கிடத்தினான் அவளை.

“பெட் ஷிட் எங்கடா? ஏன் ப்ளாஸ்டிக் கவர போட்டு வச்சிருக்க பெட்ல?” என கேட்டாள் சிந்தியா.

குறும்புடன் புன்னகைத்தவன், அவன் செட் செய்ந்திருந்த சாக்லேட் பவுண்டனை கண்களால் சுட்டிக் காட்டினான்.

“ஐ சாக்லேட் பவுண்டன்! செம்ம செம்ம! மார்ஸ்மெல்லோ குடு தொட்டு சாப்பிட” என கையை நீட்டினாள் சிந்தியா.

“இந்த சாக்லேட்காரனுக்கு நீதான்டி இன்னிக்கு மார்ஸ்மெல்லோ” என சொன்னவன் சிந்தியா சிணுங்கி, சிரித்து, கத்தி, ஓடி, ஆடி ஆர்ப்பாட்டம் செய்ய செய்ய அவளை சாக்லேட்டில் குளிப்பாட்டி, தானும் குளித்து இனிக்க இனிக்க கொண்டாடினான் முதலிரவை.

உருகி கரையும் சாக்லேட்டைப் போல உள்ளுயிர் உருக காலமெல்லாம் காதலிக்கட்டும் இந்தக் காதல் பறவைகள். இனிப்பான சாக்லேட்டைப் போல தித்திக்கட்டும் இவர்களின் இனிய வாழ்க்கை. இனிக்க இனிக்க இவர்களிடம் இருந்து விடைபெறுவோம்!!!!

(முற்றும்)

(இந்த கதைல நந்தனா கூட வாழ்ந்து முடிச்சேன் நான். செம்ம ஸ்ட்ரேஸ் கதை முடிக்கற வரை. என்னால முடிஞ்ச அளவுக்கு எல்லா கேரக்டருக்கும் நியாயம் செஞ்சிருக்கேன்! குற்றம் குறைகள் இருந்தா மன்னிச்சிருங்க! கொஞ்சம் கேப் எடுத்துகிட்டு அடுத்த கதையில சந்திக்கலாம்..அண்ட்டில் தென் லவ் யூ ஆல் மை டியர்ஸ்! )