Uyir Vangum Rojave–EPI 12

ROSE-3d55135f

அத்தியாயம் 12

இந்த உலகத்துல உள்ள எல்லா பொண்ணுங்களையும்

என் தங்கச்சியா ஏத்துக்கிறேன்

இனிமே உன்னை தவிர

(சிம்பு- விண்ணை தாண்டி வருவாயா)                    

 

 

அந்த ஞாயிற்றுக் கிழமை வானம் சிறு தூரல் போட அனைவருக்கும் அழகாக விடிந்தது. வேந்தன் மட்டும் வீட்டு ஜன்னல் அருகே சிந்தும் தூரலை மன பாரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். இன்னும் ஒரு மணி நேரத்தில் அவனுக்கு திருமணம். தங்கைகளுக்கு முடித்து தான் தனக்கு எல்லாம் என்றிருந்தவன் வாழ்க்கையை புயல் புரட்டிப் போட்டிருந்தது. 

பட்டு வேட்டி பட்டு சட்டையில் இருந்தவனுக்கு மாப்பிள்ளை களை வந்திருந்தது. முந்தைய நாள் வீட்டுக்கு வந்து அவனுக்கு குரூமிங் வேறு செய்திருந்தனர். மீசையை ட்ரீம் செய்து, முகத்துக்கு பழ பேசியல் செய்து, தலை முடியையும் சேரும் போட்டு பளபளக்க வைத்திருந்தனர். கடுப்பில் உள்ளுக்குள் கருவாடாக பொரிந்து கொண்டிருந்தான் வேந்தன்.

‘இந்த முகத்தை தானே வேணும்னா. அப்புறம் எதுக்கு ஆயிரெத்தெட்டு அலங்காரம்? காக்காய்க்கு பவுடர் போட்டா வெள்ளை காக்காயா தானே ஆகும். என்னமோ மயில் ஆகிட போற மாதிரிதான் அட்டகாசம் பண்ணுறா. மேடமாம் மேடம், என்னை உசுரோட சுட்டுப் பொசுக்கற சூடம் ’ மனதிலேயே தான் புலம்ப முடிந்தது. அவனுக்கு வந்த ஆத்திரத்துக்கு மரியாதை எல்லாம் மண்ணுக்குள் போய்விட்டது.

அனு சந்தோஷமாக அலங்கரித்து கிளம்பி நின்றிருந்தாள். லாவண்யா புதுப் புடவை அணிந்து, நகை போட்டிருந்தாலும் மேக்காப் தலை அலங்காரம் என அலட்டாமல் சாதாரணமாகவே இருந்தாள்.

என்னதான் எல்லா ஏற்பாடும் தேவியே செய்திருந்தாலும், தாலியை மட்டும் வேந்தன் சென்று வாங்கி வந்திருந்தான். அவர்கள் குடும்பத்தில் அணியப்படும் அன்னலட்சுமி டிசைன் போட்ட தாலியை அலைந்து திரிந்து வாங்கினான். பத்தரிடம் சொல்லி செய்ய நேரம் இல்லாததால் பல கடைகள் அலைய வேண்டியதாகிவிட்டது. அதோடு அவன் பட்ஜெட்டுக்கு ஏற்ற மாதிரி ஐந்து பவுனில் தாலி சங்கிலியும் வாங்கியிருந்தான். லட்டுவும் அனுவும் ஏதோ தங்களுக்கு தெரிந்த அளவில் வரிசை தட்டுக்களை ரெடி செய்திருந்தனர். வேந்தன் அவர்கள் சைடில் யாரையும் திருமணத்திற்கு அழைக்கவில்லை. மெதுவாக சொல்லிக் கொள்ளலாம் என விட்டுவிட்டான்.

இன்னும் பதினைந்து நிமிடங்களில் இவர்களை அழைத்துப் போக வருவதாக கார்த்திக் போன் செய்திருந்தான். அவன் தான் மாப்பிள்ளை கார் டிரைவர். சிந்தனையில் இருந்த வேந்தன் கார்த்திக் விடாமல் அடித்த கார் ஹாரன் ஒலியில் தான் தன்னை மீட்டுக் கொண்டான்.

மூவரும் தட்டுக்களை எடுத்துக் கொண்டு கீழே இறங்கி வந்தனர். கார்த்திக் கீழே இறங்கி வேந்தனுக்கு முன் கார் கதவை திறந்து விட்டான்.

“ஏறு மாப்பிள்ளை” என்றவன் தான் பார்ப்பதற்கு மாப்பிள்ளை போல் இருந்தான். முகம் பளபளவென இருந்தது. முடியை முன்னே ஸ்பைக் செய்து பின்னால் போனிடேல் போட்டிருந்தான். அகல கரை வைத்த பட்டு வேட்டி கட்டி, ரோஜா வண்ணத்தில் ஜிப்பா அணிந்து ஜம்மென இருந்தான். லாவண்யா அவனை தான் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பின்னால் கார் கதவை திறந்து விட்டவன்,

“மை பியூட்டிபுல் லேடிஸ், ப்ளிஸ் பீ சீட்டட்” என்றான். அனு முதலில் ஏறி உட்கார்ந்தாள். லாவண்யா மட்டும் உட்காராமல்,

“அண்ணா! இன்னொரு தட்டு எடுக்கனும், பழங்களை அடுக்க. மறந்துட்டேன்” என நாக்கைக் கடித்தாள்.

“சரி, இரு. நான் போய் எடுத்துட்டு வரேன்” என்றான் வேந்தன்.

“வேணாண்ணா. நீ ரிலாக்சா உக்காரு. நம்ப கார்த்திக் சார் வந்து எடுத்து குடுக்கட்டும்.” என முன்னே நகர்ந்தாள். மற்ற நேரத்தில் எப்படியோ, இப்பொழுது அவனே ஒரு மனநிலையில் இல்லாததால் பேசாமல் அமர்ந்துவிட்டான் வேந்தன்.

கார்த்திக் முகத்தைப் பார்க்க வேண்டுமே, அண்ணாச்சி செம்ம ஹேப்பி. விசிலடித்தபடியே, படி ஏறும் லட்டுவின் பின்னலழகை ரசித்தப்படி பின் தொடர்ந்தான்.

கதவை திறந்து கார்த்திக்கை உள்ளே விட்டு பின் கதவை மூடினாள்லாவண்யா. கேள்வியாக நோக்கியவனை,

“வேட்டியை கழட்டு” என்றாள்.

ஆவென வாயைப் பிளந்தவன்,

“அடி கள்ளி! மாமன் மேல இம்புட்டு ஆசைய வச்சுகிட்டு எதுக்கு இந்த கோப வேஷம்? எனக்கும் ஆசைதான். இருந்தாலும் கல்யாணத்துக்கு முன்னால இதுலாம் தப்பு லட்டும்மா.” என சொல்லிக் கொண்டே அவள் அருகில் வந்து நின்று கன்னத்தை தடவினான்.

பட்டென்று அவன் கையில் ஒன்று போட்டவள்,

“கர்மம் கர்மம். பேச்சைப் பாரு. வாயில ஒன்னு போட்டுருவேன்” அவனைத் திட்டிக் கொண்டே வேந்தனின் அறைக்கு சென்று ஒரு சாதாரண வெள்ளை வேட்டியை எடுத்து வந்தவள், அதை அவனை நோக்கி வீசினாள். நமது கேட்ச் மன்னனும் அதை அழகாக கேட்ச் பிடித்தான்.

“அந்த பட்டு வேட்டியை கழட்டிட்டு இதை கட்டு. மாப்பிள்ளை நீயா, எங்கண்ணானானே தெரியலை.”

“அதெல்லாம் முடியாது போடி. நான் இப்படிதான் வருவேன்” என அவனும் அடம் பிடித்தான்.

“அப்ப சரி. நீ செலக்ட் பண்ண இந்த சேலைய கழட்டி வீசிட்டு, சாதாரண சேலையை கட்டிக்கிட்டு வரேன்” என அவளது ரூமுற்கு செல்ல முற்பட்டாள் அவள்.

“நில்லுடி. சேலைய அவுத்த கொன்னுப்போட்டுருவேன். அடம் பிடிச்ச கழுதை.” என அவளை திட்டிக் கொண்டே வேட்டியை கழட்டினான். பட்டாம்பட்டி டவுசரோடு அவனைப் பார்த்தவள் சட்டென அவனுக்கு முதுகு காட்டி நின்று கொண்டாள். அவளால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

“வெளிய தான் ஹைகிளாசா? உள்ள படா லோக்கலு போல” என கிண்டலடித்தாள். அவனுக்கும் சிரிப்பு வந்தது.

“வேட்டி அவுந்து விழுந்துட்டா, என் மானத்தை காப்பாத்த தான் இந்த டவுசர். ஷோர்ட்ஸ் போட்டா உட்கார கஸ்டமா இருக்கு. அதுக்கு தான் இந்த ஐடியா. சரி இப்பவாச்சும் கீழ போலாமா?”

“இன்னும் ஒன்னு. தலைய கலைச்சி சாதாரணமா சீவிட்டு வா”

“என்னடி ஓவரா போற. இப்ப உனக்கு என்னதான் பிரச்சனை? நான் நல்லா இருந்தாலும் உனக்கு பிடிக்கல, நல்லா இல்லாட்டியும் பிடிக்கல. தலை சுத்துதுடி”

“ஒன்னும் பிரச்சனை இல்ல. நீ இப்படியே வா. நான் போய் இந்த நகை நட்டையெல்லாம் கழட்டி போட்டுட்டு சும்மா வரேன்”

“அடச்சை” கடுப்பில் ஆவேசமாக பாத்ரூமுக்கு சென்றான் அவன்.

வெளியே வரும்போது, ஸ்பைக் எல்லாம் போய், வழித்து சீவி இருந்தான். பளபளவென இருந்த முகத்தையும் கழுவி துடைத்திருந்தான்.

“இப்ப திருப்தியா? போலாமா” குரலில் அப்பட்டமாக கடுப்பு இருந்தது.

மறக்காமல் தாம்பள தட்டையும் எடுத்துக் கொண்டு கீழே இறங்கினார்கள்.

கார்த்திக் முன்கிக் கொண்டே வந்தான்.

 “என்ன சத்தம்?”

“என் சோகம் உனக்கு சத்தமாவா கேக்குது?”

பேசிக் கொண்டே காரை நெருங்கி இருந்தனர்.

அவள் அமர்ந்ததும், காரை ஸ்டார்ட் செய்தான் கார்த்திக்.

“என்ன கார்த்திக் சார், சகலகலா வல்லவன் கமல் மாதிரி உள்ள போனீங்க. இப்ப சப்பாணி கமல் மாதிரி திரும்ப வந்திருக்கீங்க” என சிரித்தாள் அனு.

‘எல்லாம் என் நேரம். இந்த வாயில்லா பூச்சி கூட என்னை ஓட்டுது’ என நினைத்தவன்,

“யாருப்பா அது, சில்லரைய கொட்டி விட்ட மாதிரி அழகா சிரிச்சது? நம்ம அனு குட்டியா? இவ்வளவு அழகா நீ பேசி சிரிப்பேன்றதே எனக்கு இன்னிக்குதான்மா தெரியும். சோ ஸ்வீட்” என புகழ்ந்தான் கார்த்திக்.

“டேய்! அவளையாச்சும் விட்டு வைடா.” முறைத்தான் வேந்தன்.

“அப்படியெல்லாம் சொல்லப்படாது. நம்ம தமிழ் கல்ச்சர் என்ன சொல்லுது? கொழுந்தியான்னு ஒருத்தி இருந்தா கண்டிப்பா கலாய்க்கனும், வம்பிழுக்கனும்னு சொல்லுது. தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிரேறும்னு பாடினா மட்டும் போதாது, கலாச்சாரத்தையும் கட்டிக் காக்கனும்.”

வாய்விட்டு சிரித்த வேந்தன்,

“அந்த பாட்டு எழுதுன கவிஞர் சத்தியமா இப்படி ஒரு அர்த்ததுல எழுதி இருக்க மாட்டார்டா. நீயும் உன் விளக்கமும்” என இன்னும் பொங்கி சிரித்தான்.

கனிவாக அவனை நோக்கிய கார்த்திக்,

“நீ எப்பவும் இப்படி சிரிச்சுகிட்டே இருக்கனும் மச்சி. உன் முகத்துக்கு சோகம் செட் ஆகல. தூக்கு மேடைக்கு போகற மாதிரி முகத்தை வச்சுக்காம, சந்தோஷமா வாடா. மேடம் உன்னை கண் கலங்காம பார்த்துக்குவாங்க” என்றான்.

அதற்கு பிறகு அமைதியாகவே, கோவிலுக்கு சென்றார்கள். காரிலிருந்து இறங்கும் முன்,

“அம்மா எப்படா வருவாங்க?”

“தாலி கட்டறதுக்கு முன்ன வந்துருவாங்க. கவலைப் படாம வா மச்சி”

கோவிலில் சின்னதாக மேடை போட்டு, சிம்பிளாக கல்யாணத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். தேவியின் சைடிலும் யாரையும் அழைக்கவில்லை. ராகவனைக் கூட காணோம். மாப்பிள்ளை தோழன், பெண் தோழி என எந்த சம்பிரதாயமும் இல்லை. வேந்தனை மணமேடையில் அமர வைத்து, மந்திரங்களை படித்தார் ஐயர். பின் தேவி அழைக்கப்பட்டாள். பச்சை வர்ண பட்டுடுத்தி, அளவான நகைகள் போட்டு அமைதியாக வந்தாள் அவள். முடியை ஜடைப் போட்டு, பூ அலங்காரம் செய்து தேவதை போல் வரவில்லை. முடியே இல்லை இதில் எங்கிருந்து ஜடை போடுவது. இருந்த குட்டை முடியை சீவி கேதோரம் ஒரு ரோஜாவை சொருகி இருந்தாள்.

அவ்வளவு சாதாரணமாக அலங்கரித்தும் , அப்சரஸ் போல் இருந்தாள் தேவி. நிமிர்ந்து பார்த்த வேந்தன்,

‘நடந்து வருது ரோஜா

அவளுக்கு தூக்குவேன் நான் கூஜா’

என மனசுக்குள்ளேயே கவிதை பாடினான்.

‘மஞ்சள் கயிறே இன்னும் கட்டலை. அதுக்குள்ள அதோட மேஜிக் வேலைய காட்டுதே’ என மிரண்டு போனான். பிறகு ரப்பர் கொண்டு அந்த கவிதையை அழித்தவன்,

‘நடந்து வரா தேவி

அவ ஒரு மகா பாவி’ என கவிதையை மாற்றினான். பிறகு தான் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது அவனால்.

இருவரும் அருகருகே அமர்ந்து ஐயர் சொன்னதை கர்ம சிரத்தையாக செய்து கொண்டிருந்தனர். தேவி மட்டும் ஓரக் கண்ணால் தான் கண்ணாளனை கண்டு கொண்டே இருந்தாள். அவனோ ஐயரையே ஐஸ்வர்யா ராய் ரேஞ்சுக்கு பார்த்துக் கொண்டிருந்தான். மறந்தும் தேவியிடம் பார்வையை திருப்பவில்லை.

அந்த நேரத்தில் தான் கோவில் வாசலில் ஒரு கருப்பு பிஎம்டபிள்யு கார் சரக்கென வந்து நின்றது. முன் சீட்டில் இருந்து இறங்கிய மனிதன், பின் கார் கதவை திறந்துப் பிடித்துக் கொண்டான்.

அதில் மகாராணி போல் ஸ்டைலாக இறங்கினார் இந்து. அவர் இறங்கி நடந்து வர, சிறிது இடைவெளி விட்டு அவர் பின்னால் இரண்டு கடத்தல்காரர்களும் நடந்து வந்தார்கள். அவர்கள் இருவரும் ரோசா கன்ஸ்ட்ரக்சனின் செகுரிட்டி பகுதியில் பணிபுரிபவர்கள். அந்த காட்சியே பார்ப்பதற்கு பெண் பாட்ஷாவும் அவர் கையாட்களும் நடந்து வருவது போலவே இருந்தது.

இந்து பட்டுசேலையில் நகைகள் பளபளக்க பந்தாவாக நடந்து வந்தார். அவரின் புன்னகை அணிந்திருந்த நகைகளைவிட பளீரென இருந்தது. மணமக்களை கண்டவர் லேசாக கண் கலங்கினார். ஆனந்தக் கண்ணீர். அம்மாவைப் பார்த்ததும் மணமேடையில் இருந்து எழ முயற்சித்த வேந்தனை தோளை அமுக்கி மீண்டும் அமர வைத்தான் கார்த்திக்.

“மணமேடையில இருந்து எழும்ப கூடாது மச்சி. அம்மா தான் வந்துட்டாங்கல்ல. அப்புரம் என்ன? ஹேப்பியா தாலிய கட்டு” என சமாதானம் கூறினான்.

அனு அம்மாவை கட்டிக் கொண்டு அருகிலேயே இருந்ததால் விளக்குப் பிடிக்க லாவண்யா தான் செல்ல வேண்டியதாகிவிட்டது. ஐயர்

‘மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா

கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்’ சொல்ல மங்கள வாத்தியங்கள் முழங்க மூன்று முடிச்சுக்களையும் தானே போட்டு வெற்றிகரமாக மிஸ்டர் ரோசாலியா தேவியானான் வேந்தன்.

தேவிக்கு முகமெல்லாம் பூரிப்பு. அவளிடம் அட்லிஸ்ட் ஒரு வெட்கப் புன்னகையை எதிர்பார்த்த வேந்தன், பயங்கரமாக ஏமாற்றம் அடைந்தான். அவள் தான் வெட்கம், வாட் இஸ் வெட்கம்? ந்த ஷாப்ல விற்கிறது என கேட்கும் ரகமாயிற்றே. வேந்தனின் கை பிடித்துக் குலுக்கியவள்,

“தேங்க்ஸ் மலர். ஐ எம் சோ ஹேப்பி டுடே” என்றதோடு இல்லாமல் அனைவர் முன்னுக்கும் அவனை அணைத்துக் கொண்டாள். அவன் தான் எல்லார் முன்னேயும் இப்படி செய்கிறாளே என நெளியும்படி ஆகியது.

மணமக்கள் அங்கே இருந்த ஒரே பெரியவரான இந்துவிடம் ஆசிர்வாதாம் வாங்க சென்றனர். வேந்தன் அவரின் பாதம் பணிய, தேவியோ அவரை அணைத்துக் கொண்டாள். வெளியில் இருந்து பார்ப்பதற்கு வேந்தன் தாய் மற்றும் தாரத்தின் பாதத்தை பணிவது போலவே இருந்தது. அதைப் பார்த்த கார்த்திக்குக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. பக்கத்தில் இருந்த லாவண்யாவிடம்,

“உங்கண்ணன், செல்ல கண்ணன் ! கல்யாணம் முடிஞ்ச கையோட அப்படியே பொண்டாட்டி காலுல படார்னு விழுந்துட்டானே. பொழைக்க தெரிஞ்சவன்” என்றான்.

அந்த காட்சியைப் பார்த்து பல்லைக் கடித்தவாறு நின்றிருந்தாள் லாவண்யா. இந்துவோ ஆனந்தக் கண்ணீர் பெருக ஒரு பாடலை அவிழ்த்துவிட்டார்.

“கொஞ்சி கொஞ்சி பேசி வரும் தமிழ் போல

அஞ்சி அஞ்சி வீசி வரும் அலைப் போல

நெஞ்சில் என்றும் தங்கும் சந்த கவி போல

நூறு ஜென்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம்

பூ தூவுகிறோம்”

இருவருக்கும் அந்த பாடலின் வழி மேசேஜ் கொடுத்து வாழ்த்தினார் அவர். மருமகளை கட்டி உச்சி முகர்ந்தவர், பின்பு தான் மகனை ஆசிர்வாதம் செய்து தூக்கிவிட்டார்.

“உங்கம்மா பாடுன இம்மாம் பெரிய பாட்டுக்கு உங்கண்ணன் கீழயே படுத்து தூங்கிருப்பான்னு நினைச்சேன்.” என அதற்கும் லட்டுவை வம்பிழுத்தான் கார்த்திக்.

பின் நண்பனைக் கட்டிக் கொண்டவன்,

“வாழ்த்துக்கள் மச்சான். மேடத்தைப் பத்திரமா பார்த்துக்க. அவங்க கண்ணுல ஒரு சொட்டு கண்ணீர் வந்தா கூட உன் கண்ணுல ரத்தத்தை வர வச்சிருவேன்” என்றான் அவன். விளையாட்டுக்கு சொன்ன மாதிரி இருந்தாலும், அதில் மறைமுக மிரட்டல் இருந்த மாதிரி இருந்தது வேந்தனுக்கு. கார்த்திக்கை ஊடுருவி பார்த்தான். முகம் எப்பொழுதும் போல் பச்சை பிள்ளை மாதிரி தான் இருந்தது.

திருமணம் முடிந்த கையோடு, ஒரு உயர்ரக உணவகத்தில் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தாள் தேவி. எல்லா திருமணங்களிலும் இருக்கும் செல்ல சீண்டல்கள், கிண்டல்கள், ஒருவருக்கு ஒருவர் ஊட்டிக் கொள்ளுதல் போல் எதுவுமின்றி அமைதியாக ஆர்ப்பாட்டமின்றி எல்லாம் ஒழுங்கு முறையோடு நடந்தது. இருவரும் அருகருகே அமர்ந்து சாப்பிட்டாலும், எதுவும் பேசிக் கொள்ளவில்லை. உணவை முடித்துவிட்டு மணமக்கள் இருவரும் தேவியின் வீட்டுக்கு புறப்பட்டனர். கார்த்திக் மற்றவர்களை அவர்கள் வீட்டில் விட்டுவிட்டு வருவது என ஏற்பாடு. கிளம்பும் போது, தேவி வேந்தனின் கையைப் பற்றிக் கொண்டாள். அவனோ தன் குடும்பம் பத்திரம் என பலமுறை கார்த்திகிடம் சொல்லிவிட்டு, அவர்களை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே வெளியேறினான். அவன் வெளியேறும் வரை சிரித்த முகமாய் நின்றிருந்த இந்து, பிறகு தான் உடைந்து அழுதார். பெண்கள் இருவரும் அவரைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அவர்களும் கண்ணீர் விட்டனர். செய்வதறியாமல் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்திக்.

 

உயிரை வாங்குவாள்….