Uyir Vangum Rojave–EPI 14

ROSE-02a88419

அத்தியாயம் 14

என்னை பிடிச்சிருக்குன்னா பிடிச்சிருக்குன்னு சொல்லு

இல்லைன்னா இல்லைன்னு சொல்லு

நீ என் மனசுல பெரிய சுமையா இருக்க

உன்னை முதன் முதலா பாத்ததிலிருந்து என் மனசு குத்திக் கிட்டே இருக்கு

என்னால தாங்க முடியல

(விஜய் – காதலுக்கு மரியாதை)

 

குழந்தைப் போல் பார்த்துக் கொள்ள சொன்னவள், குழந்தையாகவே மாறி வேந்தனின் இடுப்பின் மேல் தன் இரு கால்களையும் போட்டபடி தூங்கிக் கொண்டிருந்தாள். மேஜை விளக்கின் ஒளியில் அவள் நிம்மதியாக தூங்குவதை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் வேந்தன்.

‘இவளா அந்த அடாவடி தேவி? பச்சைப் புள்ள மாதிரி, இல்ல இல்ல வெள்ளைப் புள்ள மாதிரி தூங்குறாளே. போட்டுருக்கற பென் டென் கார்டுன் பைஜாமாவ பாரு! அது கூட ஆம்புள பசங்க போடுறது தான் போட்டுருக்கா. ஆனாலும் கியூட்டா தான் இருக்கா. இவ்வளவு தடால் பார்ட்டியா இருக்காளே, போட்ட திட்டம் வெற்றி அடையுமா?’

மனதில் அன்று லட்டுவும் அவனும் அக்கு வேறு ஆணி வேறாக அந்த அக்ரிமெண்டை அலசியது வந்து போனது.

“இந்தாண்ணா காபி. அம்மா போடற அளவு இருக்காது. ஆனாலும் குடிக்கலாம்” என கப்பை நீட்டினாள் லாவண்யா.

வாங்கி குடித்தவன்,

“அம்மா கைமணம் உனக்கு அப்படியே இருக்கு குட்டிமா. நீயும் குடி. அனு தூங்கிட்டாளா?”

“அவ உன் கல்யாணம் நடக்க போகுதுன்ற சந்தோஷத்துல அம்மாவைக் கூட தேடலை இன்னிக்கு. தூங்கிட்டா. எப்ப பாரு சின்ன புள்ளை மாதிரி அம்மா கைய எடுத்து அவ கன்னத்துல வச்சிகிட்டா தான் மேடத்துக்கு தூக்கம் வரும். இன்னிக்கு அவங்க சேலைய கட்டி புடிச்சுகிட்டு படுத்துட்டா”

“மனசால அவ இன்னும் குழந்தை தான்டா. அம்மாவ ஒட்டிக்கிட்டே வாழ்ந்துட்டா. எனக்கும் பணம் இருந்தா அவளுக்கு மட்டும் வீட்டோட மாப்பிள்ளை பார்ப்பேன்”

“அண்ணா நீ வீட்டோட மாப்பிள்ளையா போற கதைய முதல்ல பார்ப்போம். அப்புறம் அவளுக்கு என்ன செய்யறதுன்னு யோசிக்கலாம்”

மீண்டும் அந்த பேப்பரை நன்றாக படித்தாள். பேனாவினால் சில வரிகளை ஹைலைட் செய்தாள். காப்பியைக் குடித்துக் கொண்டே வீட்டு ஹாலை ஒரு முறை சுற்றி வந்தாள். பேனாவால் தலையைத் தட்டிக் கொண்டாள். பார்த்த வேந்தனுக்கே கொஞ்சம் பயமாக தான் இருந்தது.

“லட்டும்மா! நீ போடுற சீனலெல்லாம் கொஞ்சம் ஓவரா இருக்கும்மா. அண்ணனுக்கு அள்ளு விடுது. நல்ல பிள்ளையா உக்காந்து யோசிம்மா” கெஞ்சாத குறையாக சொன்னான்.

அவன் கேட்டதற்காக அவன் அருகில் அமர்ந்தவள்,

“அண்ணா! அவங்க போட்ட கண்டிஷன்ல அவங்களுக்கே ஆப்பு வர மாதிரி ஒரு கண்டிஷனும் இருக்கு. அதை வச்சே உன்னை அவங்க கிட்ட இருந்து பிரிக்கிறேன். நீ கவலைப் படாம கல்யாணம் பண்ணிக்க. வெள்ளெலி வாலை புடுங்கி, நான் எறியறேன் . இதுல மேய்னா அஞ்சு கண்டிஷன் போட்டுருக்காங்கண்ணா. நான் வரிசையா சொல்லுறேன்.

  1. மேடம் சொல்லுற வேலைய எல்லாம் நீ தட்டாம செய்யனும்.
  2. நம்ம குடும்ப விஷயங்களில அவங்க தலையிடலாம். ஆனா அவங்க குடும்ப விஷயத்துல நீ தலையிட முடியாது.
  3. நீ அவங்க வீட்டோட மாப்பிள்ளையா போகனும். வீக்டேய்ஸ் பகல் வேளையில நீ எப்ப வேணும்னாலும் எங்கள பார்க்க வரலாம். ஆனா கரெக்டா மாலை அஞ்சு மணிக்கு அவங்க வீட்டுல இருக்கனும்.
  4. நீ இப்ப செய்யற வேலையையே தொடர்ந்து செய்யலாம். இப்ப குடுக்கற சம்பளத்தவிட பத்து மடங்கு உன் சேலரியா அதிகரிச்சிருக்காங்க. கம்பேனி ஷேர்சுலயும் இருபது பர்சன்ட் குடுத்துருக்காங்க.
  5. இந்த கல்யாணத்துல பிரச்சனை வந்தா அவங்க மட்டும் தான் உன்னை டைவர்ஸ் பண்ண முடியும். உனக்கு அந்த உரிமை இல்லை. அதோட நீங்க சேர்ந்து வாழும்போது பிள்ளை இருந்ததுனா, அந்த பிள்ளையோட பொறுப்பெல்லாம் அவங்களோடதுதான். உனக்கு பிள்ளை விஷயத்துலயோ இல்லை அவங்களோட சொத்து விஷயத்துலயோ உரிமை கோர எந்த ரைட்சும் இல்ல. ஆனா இந்த வேலைய நீ எப்பொழுதும் போல தொடரலாம்.

இதுதான் இந்த அக்ரிமெண்டோட சாராம்சம். இதுல உனக்கு பாதகமா ரெண்டு விசயமும் சாதகமா ஒரு விஷயமும் இருக்கு”

‘அதெப்படி பிள்ளைய அப்படியே விட்டுக் குடுக்கறது.’ அம்மாவுக்காக சைன் பண்ணி விட்டாலும் மனம் முரண்டியது அவனுக்கு.

“முதல்ல பாதகமா உள்ளத சொல்லு. கசப்பு மருந்த முதல்ல சாப்பிட்டறலாம்”

“கண்டிஷன் ஒன்னும் ரெண்டும் உன்னை வச்சி செஞ்சிரும். அவங்க சொல்லுற வேலைய செய்யனும்னா என்ன? ரொம்ப ஜெனரலான கட்டளை இது. அவங்க என்ன சொன்னாலும் நீ செய்யனும். கிட்டதட்ட புருசன்ற பேருல அடிமை நீ. ரெண்டாவது கண்டிசஷன் அத விட மோசம். நம்ம குடும்ப விஷயம்னா என்ன? அதுவும் ஜெனரலா இருக்கு. நம்ம குடும்பத்த அவங்க என்ன வேணும்னாலும் செய்யலாம். என் கல்யாண விஷயத்துல தலையிடலாம், அனு கல்யாண விஷயத்துல தலையிடலாம். உன்னால ஒன்னும் செய்ய முடியாது.”

“நான் காலம் பூராவும் அடிமையா இருப்பேன் லட்டு. ஆனா அம்மாவுக்காக உங்க ரெண்டு பேர் வாழ்க்கையையும் அடகு வச்சிட்டனோன்னு பயமா இருக்கு.” குரலில் சொல்லொண்ணா சோகம் இருந்தது.

“அண்ணா! அம்மாவுக்காக நாங்களும் எதுவும் தாங்கிக்குவோம். நீ கவலைப் படாதே. இப்ப நல்ல விஷயத்தைப் பாப்போம்”

“சொல்லுடா”

“ஐந்தாவது கண்டிஷன்ல, இந்த கல்யாணத்துல பிரச்சனை வந்தான்னு ஒரு செம மேட்டர் இருக்கு. அவங்களுக்கு பிடிக்காத மாதிரி நீ நடந்துகிட்டா, சீச்சீ இந்த பழம் புளிக்கும்னு உன்னைத் தூக்கி கடாசிருவாங்க. எப்படி ஐடியா?”

“ஐடியா எல்லாம் நல்லா தான் இருக்கு. ஆனா என் இமேஜை நீ ரொம்ப டேமேஜ் பண்ணுறீயோன்னு பீலீங்கா இருக்கு.”

“சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன். நீ பீல் ஆவாதண்ணா. அவங்களுக்கு உன்னை பிடிக்காம டைவர்ஸ் பன்ணிட்டாங்கனா, மத்த கண்டிஷன் எல்லாம் இல்லாம போயிடும். சோ நாம எல்லாரும் சேப் ஆயிடலாம். புரியுதா?”

“நல்லா புரியுது லட்டு. நான் அவங்க கூட இருந்து அவங்களுக்கு என்ன என்ன பிடிக்காதுன்னு கண்டுபிடிச்சி அதயே செய்றேன். கண்டிப்பா இது வொர்க் அவுட் ஆகும். அந்த பெண்ணாதிக்க பேயிடம் இருந்து கண்டிப்பா நம்ம குடும்பத்த காப்பாத்துறேன். இது நம்ம குல தெய்வம் குழந்தையம்மன் மேல ” சத்தியம் என சொல்ல வந்தவன் வாயை மூடினாள் லட்டு.

“குலசாமி மேல சத்தியம் போடக் கூடாதுன்னு அம்மா சொல்லியிருக்காங்க தானே?”

“சரி விடு. சத்தியம் வைக்காட்டி என்ன, என் மனசுக்குள்ள சத்திய பிரமாணம் எடுத்துக்கிறேன்” என வீரவசனம் பேசிவிட்டு இப்பொழுது இரவின் குளு குளு தனிமையில், கிறக்கமாக கேட்டாளென்று அவள் சொன்னதுக்கெல்லாம் தலையாட்டிய தன் முட்டாள்தனத்தை எண்ணி நொந்து கொண்டான்.

‘குழந்தையம்மன் மேல சத்தியம் வைக்க போன நான், அவளையே குழந்தையா பார்த்துக்கறேன்னு ப்ராமிஸ் பண்ணிட்டனே. லட்டுக்கு தெரிஞ்சா என்னை மங்குனி அமைச்சர் லெவலுக்கு பார்ப்பாளே. இந்த டெரர் பீஸ் கிட்ட குப்பை கொட்ட நம்மாள முடியாது. சீக்கிரமா ஏதாவது செஞ்சு அவளா பிரியற மாதிரி செஞ்சுறனும். அது வரைக்கும் நம்ம பிரம்மச்சரியத்தை கட்டிக் காக்கனும். பிரிய போறோம்னு முடிவெடுத்துட்டு அவ கிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்க கூடாது. அது மாதிரி பாவம் வேற எதுவும் இல்லை.’ மனதில் சங்கல்பம் செய்து கொண்டான்.

மெல்ல அவளது கால்களை தன் இடுப்பில் இருந்து நகர்த்தி கட்டிலில் போட்டான். பின் அவளுக்கு முதுகு காட்டி அந்த பக்கம் திரும்பி படுத்துக் கொண்டான். தூக்கத்திலேயே அவள் நகர்ந்து வந்து கைகளை அவன் இடுப்பில் போட்டு பின்னாலிருந்து குளிருக்கு இதமாக அணைத்துக் கொண்டாள்.

‘இது என்னடா எனக்கு வந்த சோதனை. இப்பத்தான் பெரிய சங்கல்பம் எடுத்தேன். அடுத்த நிமிஷமே அதை உடைச்சி எறியற மாதிரி நடக்குதே.’ அவன் பேச்சை கேட்காமல் மனம் வேறு சிச்சுவேஷன் பாட்டை எடுத்துவிட்டது.

‘கொக்கு சைவக் கொக்கு ஒரு கெண்ட மீனக் கண்டு
வெரதம் முடிச்சிருச்சாம்
மீனு மேலக் கண்ணு அது ஒத்தக் காலில் நின்னு
கொத்தித்தான் புடிச்சிருச்சாம் “

‘ஐய்யய்யோ! இம்சை அரசி என் தவத்தை கலைக்கப் பார்க்கிறாளே. அப்பேற்பட்ட விசுவாமித்திரரே மேனகை போட்ட டான்சுக்கு டவுன் டவுன் ஆயிட்டாரு. விசு படத்துல வர ஹீரோ மாதிரி இருக்கற நான் எம்மாத்திரம்.’ அவளிடம் இருந்து மெல்ல விலகியவன், போல்ஸ்டர் தலையணையை அவள் கைக்கு கொடுத்துவிட்டு, மார்பிள் தரையில் போர்வையை விரித்துக் கொண்டு படுத்துவிட்டான். மனதை ஒரு நிலைப்படுத்த மெல்லிய குரலில் பாடினான் அவன்.

“செல்லாத்தா செல்ல மாரியாத்தா
எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா”

அந்த மெல்லிய பாடல் சத்தத்திற்கு விழித்துக் கொண்டாள் தேவி. கீழே கிடக்கும் வேந்தனைப் பார்த்ததும் புன்னகை அரும்பியது அவளுக்கு.

‘மை ஸ்வீட் லிட்டல் ராஸ்கல்’ மனதிலேயே அவனை கொஞ்சியவாறு மீண்டும் தூங்கிப் போனாள்.

இரண்டு நாட்கள் சாப்பிடுவதும், தூங்குவதும், அவள் பேசுவதைக் கேட்பதும் என பொழுது போனது வேந்தனுக்கு. ஓரளவு அவளது டைம் டேபிள் அவனுக்கு தெரிந்தது. அவள் ஓயாமல் பேசியதில் அவளது பிடிப்பு, வெறுப்பு, பயம், ஆசை என கொஞ்சம் அவளைப் பற்றி அறிந்திருந்தான். பாசமாக பேசினால் அவனுக்காக என்ன வேணுமானாலும் செய்வாள் என்பதை நன்றாக புரிந்துக் கொண்டான் வேந்தன். அவள் அடக்குமுறைக்கு அடங்காதவள் அன்புக்கு மட்டுமே தலை வணங்குவாள் என்பது அவனுக்கு சாதகமாக இருந்தது.

தெரிந்த விஷயங்களைக் கொண்டு எப்படி அவளை வெறுப்பேற்றி பிரிவது என பகலெல்லாம் திட்டமாக தீட்டினான். ஆனால் ராத்திரியில் அவன் மேல் அவள் காலைத் தூக்கிக் போட்டு தூங்கியதும் போட்ட திட்டம் எல்லாம் அப்படியே மறந்து விடும் அவனுக்கு.

இந்த இரண்டு நாட்களில் வேந்தன் பக்தி பாடல்களின் களஞ்சியமாக மாறி இருந்தான். ஆழந்த தூக்கத்தில் எழுப்பி ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ பாடலை யார் பாடியது என்று கேட்டால் கரேக்டாக சொல்லுமளவுக்கு தேறியிருந்தான்.

மூன்றாம் நாளில் தேவி, வேந்தன் குடும்பத்திற்கு வாங்கியிருந்த வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்ய ஏற்பாடு ஆகியிருந்தது. அவர்கள் அனைவரையும் கார்த்திக் அழைத்து வருவதாகவும், தாங்கள் இப்படியே அங்கே கிளம்பலாம் எனவும் சொல்லிவிட்டாள் தேவி. விடிகாலையிலேயே எழுந்து வேட்டி, சட்டையுடன் தயாராகி நின்றிருந்தான் வேந்தன்.

“ரோஜா! எழுந்துக்க. அம்மா வீட்டுக்கு போகனும்” ஒரு விரலை மட்டும் கன்னத்தில் வைத்து தட்டினான்.

“இரு மலர். இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கிக்கறேன். ப்ளிஸ்” என கொஞ்சியபடியே மீண்டும் தூக்கத்தைத் தொடர்ந்தாள் அவள்.

‘சரி! கடுப்பேத்தற வேலைய இன்னிக்கு இருந்தே ஆரம்பிப்போம். நல்ல பிரம்ம மூகூர்த்தம் வேற.’ என எண்ணியவன் பாத்ரூமில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து அவள் முகத்தில் லேசாக தெளித்தான். பட்டென எழுந்தவள்,

“என்ன பண்ணுற மலர்?” குரலில் கோபம்.

“எழுப்பி விட்டேன். எங்க வீட்டுல இப்படி தான் எழுப்புவாங்க” என சாதாரணமாக சொன்னான்.

“ஓ!” ஒற்றை வார்த்தை தான் வந்தது. மெல்ல போர்வையை விலக்கிவிட்டு பாத்ரூமுக்குள் சென்று விட்டாள்.

‘என்னடா வெறும் ஓவோட முடிஞ்சிருச்சு. பெரிய சண்டை வரும்னு நினைச்சேனே. இப்படி புஸ்க்குன்னு போயிருச்சே.’ என நினத்தவாறே அவன் கீழே போட்டி படுத்திருந்த போர்வையை எடுத்து மடிக்க போனான். கீழே குனிந்தவன் எழும் போது சொட்ட சொட்ட நனைந்திருந்தான். திரும்பி பார்த்தால் கையில் பக்கேட்டுடனும், முகத்தில் சிரிப்புடனும் தேவி நின்று கொண்டிருந்தாள்.

“எங்க ஊருல உன்னை மாதிரி தண்ணி தெளிச்சு எழுப்ப மாட்டாங்க. இப்படி கொட்டி தான் எழுப்புவாங்க” என சொல்லியபடியே விழுந்து விழுந்து சிரித்தாள்.

“தேங்க்ஸ் மலர். இந்த மாதிரி எல்லாம் யாரும் என் கூட விளையாடியது இல்ல. ஐ எம் சோ ஹேப்பி” என நனைந்திருந்தவனை கட்டிக் கொண்டு குதித்தாள்.

பின் துண்டு எடுத்து வந்து தானே அவன் தலையை துவட்டி விட்டவள்,

“உடம்பும் துடைச்சி விடவா?” என கண் சிமிட்டிக் கேட்டாள்.

“நானே செஞ்சுக்கிறேன். நீங்க போய் குளிங்க” என அனுப்பியவன், மீண்டும் உடை மாற்றி ஈரத் தரையை மோப் செய்தான். முதல் முயற்சி தோற்றதில் கோபத்தை விட மனம் நிறைய சந்தோஷமே இருந்தது, லாவண்யாவிடம் இருந்து போன் வரும் வரை. சீக்கிரம் வருவதாக அவளிடம் சொல்லி வைத்தவன், அன்றே அடுத்த முயற்சியையும் தொடங்கினான்.

குளித்து வந்தவள் உடை மாற்றும் வரை அவன் ரூமில் உலாத்தியவன், பின் மீண்டும் அவர்கள் ரூமிற்கு வந்தான். அங்கே ஜீன்ஸ் மற்றும் ஷெர்டில் இருந்தாள் அவள். அடுத்த பிட்டை அங்கிருந்தே ஆரம்பித்தான்.

“இது என்ன சட்டை? அதுவும் நாம தான் சாங்கியமெல்லாம் முன்னிருந்து செய்யனும். போய் சேலை கட்டிக்க ரோஜா” அழுத்தமாக குரலை கொண்டு வரவே போராடினான் வேந்தன்.

“சேலையா? கல்யாணம்கிறதுனால அன்னிக்கு கட்டிக் கிட்டேன். அதுக்குன்னு சும்மா சும்மா கட்ட முடியாது. நோ வே” அவளும் குரலை உயர்த்தினாள்.

வேந்தனுக்கு ஒரே குதூகலம்.

‘எங்க பாட்டி போடுவா கொண்டை

இப்ப வரப் போகுது பார் சண்டை. ‘

கவிதை ஊற்றெடுத்தது.

“என் வைப் சேலை கட்டி டிரடிசியனலா இருக்கனும்னு எவ்வளவு கனவு கண்டிருப்பேன். எல்லாம் என் தலை எழுத்து. ஆசை பட்டது ஒன்னுமே நடக்க மாட்டிக்கிது” கோபமாக கட்டிலில் அமர்ந்து கொண்டான்.

அங்கேயே நின்று அவன் கோப முகத்தையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள் தேவி.

“கட்டிக்கிறேன்.” ஒற்றை வார்த்தை பதில். கோபமாக தான் வந்தது.

‘என்னது கட்டிக்கிறாளா? சண்டை பிடிப்பானுல்ல நினைச்சேன். ரெண்டாவதும் புஸ்க்கா?’ இடியப்பமாக இடிந்து போனான் வேந்தன்.

கவலையாக அவன் உட்கார்ந்திருக்க அவன் முன்னாலேயே அவள் உடை மாற்ற விழைய , அவன் தான் திரும்பி அமர்ந்து கொண்டான்.

“கட்டிட்டேன். வா போகலாம் மலர்” எனும் குரலுக்கு தான் திரும்பினான். மஞ்சள் நிற சில்க் சேலையில் வள வள இடுப்பு தெரிய நின்றிருந்தாள் அவள். கையில்லாத ரவிக்கை வேறு. பின்னால் திரும்பி அவள் மேக்காப் போடும் போது, வாய் விட்டே அவள் ஜாக்கேட்டின் ஜன்னல்களை எண்ணினான் வேந்தன்.

“ஒன்னு, ரெண்டு, மூனு, நாலு, ஐந்து, ஆறு!!!. அம்மாடியோய் இத்தனை ஜன்னலா? மேஸ்த்திரி, தான் கட்டுற வீட்டுக்கு கூட இத்தனை ஜன்னல் வச்சிருக்க மாட்டாரு” முனகினான் அவன்.

“என்ன சத்தம்”

“ஒன்னும் இல்ல. ஒரே சூடா இருக்கு”

“அதான் ஏசி ஓடுதுல்ல. அப்புறம் என்ன?”

‘ஏன்டி இப்படி ஆறு ஜன்னல் வச்சு ரவிக்கை போட நீ என்ன மச்சு வீடா? இல்ல குச்சு வீடா? இதுக்கு என் மானங்கெட்ட மைன்ட் ஒரு பாட்டு எடுத்து விட்டுருக்கனுமே இந்நேரம். தோ வந்துருச்சே!

‘சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க
ஜன்னல் வெச்ச ஜாக்கெட் போடவா தென்றல் அடிக்க’

சொக்கி போய் அமர்ந்திருந்தவனை உசுப்பினாள் தேவி.

“மலர், நான் ரெடி. வா போகலாம்”

“ரோஜா! உனக்கு சேலை கட்ட தெரியுமா?”

“தெரியாது”

“அப்புறம் எப்படி?”

“கார்த்திக் தான் சொன்னான், சேலை கட்டுனா உனக்கு பிடிக்கும்னு. அவன் தான் சிலது வாங்கி கடையில குடுத்து ரெடிமெட் சாரி தைத்து எடுத்து வந்தான். அப்படியே சேலைய சுத்தி பின்னு போட்டுக்கறது தானே. ஈசி பீசி லெமன் ஸ்குவிசி” சிரித்தாள் அவள்.

‘அடப்பாவி கார்த்திக். இப்படி எத்தனை பேருடா கிளம்பிருக்கீங்க என் பாவத்தை கொட்டிக்க. இந்த பிரம்மச்சாரி சாபம் உன்னை சும்மா விடாதுடா’

அதே நேரம், அவர்களின் புது வீட்டில் பளாரென லட்டுவிடம் அறை வாங்கி கன்னத்தைப் பிடித்தவாறு நின்று கொண்டிருந்தான் கார்த்திக்.

 

உயிரை வாங்குவாள்….