Uyir Vangum Rojave–EPI 17

ROSE-aec60d12

அத்தியாயம் 17

ஒரு விஷயத்துக்காக ரொம்ப நேரம் வெயிட் பண்ணா அதை லவ் பண்றோம்னு அர்த்தம்ல

மேடம் ட்ரேன் லேட்டா வந்தா கூடதான் வெயிட் பண்ணுறோம், அதுக்காக ட்ரேயின நேசிக்கறோம்னு அர்த்தமா?

(அஜித், ஹீரா—காதல் கோட்டை)

ஒரு வாரமாக ‘கண்ணாமூச்சி ரே ரே கண்டுபிடி யாரே’ என ஒளிந்துக் கொண்டிருந்தான் வேந்தன். அவன் தேவியிடம் நடந்து கொண்டதை இன்னும் அவனால் ஜீரணிக்க முடியவில்லை.

‘வேணா, வேணான்னு சொன்ன நானா இப்படி நடந்துகிட்டேன்? என் சுய கட்டுப்பாட்டையே இழக்கற அளவுக்கு என்ன மோகம், என்ன தாகம்? காதல் இல்லாம மோகம் மட்டும் வருமா? அப்படி வந்தா அது நான் ரோஜாக்கு செய்யற துரோகமில்லையா?’ பலவாறாக சிந்தனை அவனைப் போட்டு பாடாய் படுத்தியது.

தேவியும் அவனைக் கவனித்துக் கொண்டு தான் இருந்தாள். இரவில் அவளுக்கு முன்பாகவே அவனது அறையில் படுத்துக் கொள்வது, இவள் எழும் முன்பே எழுந்து கிளம்பி விடுவது, இரவு உணவை இவளோடு சாப்பிடுவதை தவிர்ப்பது என போக்கு காட்டிக் கொண்டிருந்தான் அவன். வேந்தன் செய்வதெல்லாம் அவளுக்கு குழந்தை செய்யும் சேட்டையாக தான் பட்டது. அதோடு அவர்களின் உறவுக்கு பிறகு, என்னோடு என் ரூமில் வந்து இரு என இவளாக கூப்பிடுவதற்கு வெட்கமாக இருந்தது. கொஞ்ச நாள் விட்டுப் பிடிக்கலாம் என விட்டுவிட்டாள். ஒரு வாரத்திற்கு மேல் இப்படியே செய்தால் அப்புறம் வைத்துக் கொள்ளலாம் கச்சேரியை என சமாதானமாகிக் கொண்டாள் தேவி.

இன்றோடு தேவி போட்டு வைத்திருந்த ஒரு வார கெடு முடிவுக்கு வந்திருந்தது. வேந்தன் இன்னும் அப்படியே தான் இருந்தான். அன்று அவன் ரூமில் படுத்ததும், அரை மணி நேரம் அவன் செட்டிலாவதற்கு கொடுத்த தேவி, பின் மாற்று சாவியால் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள்.

விட்டத்தை வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்த வேந்தன் அவளைக் கண்டதும் திகைத்து எழுந்து நின்றான்.

“வா, ரோஜா”

“உன் குரல கேட்டு ஒரு வாரம் ஆச்சு தெரியுமா மலர்”

நடந்து அவன் அருகில் சென்றவள், அவனை அமர சொல்லிவிட்டு தானும் அமர்ந்தாள். அவனது கையைத் தன் கையில் வைத்துக் கொண்டவள், ஒவ்வொரு விரலாக சொடுக்கு எடுத்துக் கொண்டே,

“வாட்ஸ் போதரிங் யூ மலர்?” என கேட்டாள்.

“ஒன்னும் இல்ல ரோஜா” குரலில் சுரத்தே இல்லை.

“ஒன்னும் இல்லைனா ஏன் இந்த ஹைட் அன்ட் சீக் விளையாட்டு? எதுவா இருந்தாலும் நீ என் கிட்ட ஷேர் பண்ணிக்கலாம் மலர். நீ இப்படி இருந்தா நான் என்னன்னு நினைக்க? என்னை பிடிக்கலையா? இல்ல என் கூட இருந்தது பிடிக்கலையா?”

அவளது வாயைப் பொத்தினான் வேந்தன்.

“உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்கறதுன்னு தெரியல ரோஜா”

“சொல்லித்தான் பாரேன், புரியுதா இல்லையான்னு அப்புறம் பார்ப்போம்”

மெல்ல தன் மனதை அவளிடம் திறந்தான் வேந்தன்.

“எனக்கு எங்க அம்மா தான் ரோல் மாடல். அவங்க அவ்வளவா படிக்கல. வீட்டுல பார்த்த மாப்பிள்ளைய தான் கட்டிக்கிட்டாங்க. ஆனா எங்க அப்பா மேல உயிரையே வச்சிருந்தாங்க. காதலாகி கசிந்துருகினு சொல்லுவாங்களே அப்படி. அவரு இன்னொருத்திய முன்னமே காதலிச்சவருன்னு தெரிஞ்சும், இருந்துட்டு போகுது அதனால நான் அவர் மேல வைச்ச காதல் இல்லைன்னு போயிருமான்னு வாதம் செய்வாங்க. அவரு இறந்தப்ப அவங்களுக்கு சின்ன வயசு தான். அவரையே நினைச்சுக்கிட்டு, எங்களுக்காக வாழறாங்க. அவங்க மாதிரி நானும் என் மனைவிய மனசார விரும்பனும்னு நினைச்சேன். காதலால நாங்க ஈருடல் ஓருயிரா இருக்கனும்னு கோட்டை கட்டி வச்சிருந்தேன். ஆனா இப்படி திடீர்ன்னு நமக்குள்ள நடந்த இந்த விஷயம் என்னைப் புரட்டி போட்டுருச்சு. காதலில்லாம காமத்தை மட்டும் உன் கிட்ட காட்டிட்டனோன்னு என் மனசாட்சி என்னை கொல்லுது”

காதலில்லாமல் என்ற வார்த்தை தேவியை வெகுவாக தாக்கியது. முயன்று முகம் மாறாமல் காத்தாள். அவளது கவலையைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம், இப்பொழுது இவனைத் தேற்றுவது தான் முக்கியம் என உணர்ந்தாள்.

“மலர், என்னைத் தவிர வேற பொண்ணு கிட்ட இப்படி நடந்து இருப்பியா?”

“சேச்சே! நீ என் வைப், அதனால தான் அப்படி நடந்துருப்பேன். மத்த பொண்ணுகிட்ட போய் எப்படி?” குரலில் கோபம் இருந்தது.

“நீயே சொல்லிட்ட நான் உன் மனைவின்றதனால தான் இப்படி நடந்துகிட்டன்னு. அப்புறம் என்ன? இதுல நீ கில்ட்டியா பீல் பண்ண என்ன இருக்கு? காதலாகி கசிந்துருகினு ஒரு ப்ரேஸ் சொன்னியே, அது எப்படி வரும் தெரியுமா? ஒருத்தரோட குறை நிறைகளை பெரிது படுத்தாம உனக்கு நீ எனக்கு நான் அப்படின்னு எப்போ வாழுறாங்களோ அப்பத்தான் வரும். எனக்கு நீ நன்மைதான் செய்வேன்னு கணவன் மனைவி ஒருத்தர் மேல் ஒருத்தர் நம்பிக்கை வைக்கனும். அந்த நம்பிக்கைய உன் மேல நான் வச்சிருக்கேன். எந்த சமயத்திலயும் தன் துணைய மற்றவங்க கிட்ட விட்டுக் குடுக்கக் கூடாது. எப்போ நாமளும் இப்படி மாறருமோ அப்போ  கசிந்துருகலாம். அது வரைக்கும் இருக்கற சுமூகமான உறவையும் ஏன் கெடுத்துக்கனும்? என் கிட்ட நீ எடுத்து கிட்ட உரிமைய நான் என்னிக்குமே தப்பா நினைக்க மாட்டேன். ஏன்னா நீ என் பிலவ்ட் ஹஸ்பண்ட். இப்போ மனச அலட்டாம நம்ம ரூமுக்கு வா. எப்போதும் போல இரு. வாழ்க்கை நம்மல எப்படி இழுத்துட்டு போகுதோ அதன் வழியில போகலாம். சியர் அப் மலர்” அவன் கன்னத்தைப் பிடித்து கொஞ்சியவள் அவனை எழுப்பி தனதறைக்கு அழைத்துச் சென்றாள். எப்பொழுதும் போல் அவனைக் கட்டிக் கொண்டு படுத்துக் கொண்டாள்.

அழகாக தூங்கும் மனைவியை கண் கொட்டாமல் பார்த்த வேந்தன்,

‘எனக்கு காதல் வந்துருச்சா? தெரியலையே? காதல் வந்தா என்ன சிம்ப்டம் வரும்?’ மெல்ல நகர்ந்து போனை எடுத்து தட்டிப் பார்த்தான்.

‘சிம்ப்டம் 1- அவளுக்காக அசௌகரியங்களை பொறுத்துக் கொள்ளுவது

சிம்ப்டம் 2- அவளுக்காக வலி தாங்குவது

சிம்ப்டம் 3- ஈர்ப்பு கொண்டு, கண்கள் தன்னவளையே சுற்றுவது

சிம்ப்டம் 4- அவள் மேல் மட்டுமல்லாமல் அவள் குடும்பத்தின் மேலும் பற்று, பாசம் வருவது

சிம்ப்டம் 5- காதலி சொல்வதை மட்டும் அல்ல சொல்லாததையும் செய்வது

அடடா இதுல 4 சிம்ப்டம் எனக்கு பொருந்தி வருதே. வைரமுத்து வேர வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்
உருவமில்லா உருண்டையொன்று உருளக் காண்பாய்னு சொல்லியிருக்காறே. நான் இவள பார்க்கறப்ப எல்லாம் பல உருண்டைகள் உருளுதே. அப்போ கம்யூட்டர் ஜி, காதல் ஆப்சன லாக் பண்ணிறலாமா? கொஞ்ச நாள் போகட்டும், எனக்கு கன்பர்மா இதுதான்னு தெரியட்டும், அப்புறம் லாக் பண்ணறேன். காதல மட்டும் இல்ல இந்த காரிகையயும் தான்.’

தூங்கும் அவள் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டான் அவன். ஒரு வாரமாக தூக்கமில்லாமல் துக்கப்பட்டவன் தேவியை ஒரு கையிலும் நித்திரா தேவியை மறுகையிலும் அணைத்தபடி நிம்மதியாக உறங்கினான்.

மறுநாள் காலை உணவின் போது, வேந்தனுக்கும் தேவிக்கும் ஒரே நேரத்தில் போன் வந்தது. கார்த்திக்கும் அவர்களோடு தான் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

போனை அட்டன்ட் செய்த தேவியும், வேந்தனும் ஒருங்கே

“என்னது?” என கூவினர்.

அவர்கள் கத்தலில் அப்பொழுதுதான் உள்ளே இறக்கியிருந்த பொடி இட்லி அப்படியே வாயிலிருந்து வெளியே வந்து விழுந்தது கார்த்திக்குக்கு.

போனை வைத்த வேந்தன் அவசரமாக கையைக் கழுவிக் கொண்டு வெளியேற ஆயத்தமானான். தேவி இன்னும் போனில் தான் இருந்தாள்.

“என்னடா மச்சான்? என்னாச்சு?”

“தங்கச்சி மயங்கிட்டாளாம். ஹாஸ்பிட்டல் கொண்டு போயிருக்காங்க. அம்மா தான் போன் பண்ணாங்கடா”

“ஐயோ லட்டும்மா! உனக்கு என்னம்மா ஆச்சு? “ கார்த்திக் தட்டை உதறிக் கொண்டு எழுந்ததில் இட்லிகள் நாலா புறமும் பறந்தன.

“டேய் பக்கி! லட்டு இல்லடா. அனு”

“ஓ! அனுவா? நான் கூட என் செல்லா குட்டியாக்கும்னு பதறிட்டேன்.” என்றவன் இட்லி போச்சே என்பது போல் கீழே சிதறிக் கிடந்த இட்லிகளை பாவமாக பார்த்தான்.

“போடாங்!” கடுப்பில் திட்ட வந்தவன், முறைத்துவிட்டு கிளம்பிவிட்டான். போவதற்கு முன் போனில் இருக்கும் தேவியிடம் சொல்லிவிடுமாறு கார்த்திக்கை பணித்துவிட்டு தான் சென்றான்.

வேந்தன் பதட்டத்துடன் வெளியேறுவதை ஓரக் கண்ணால் பார்த்த தேவி, அந்தப் பக்கம் பேசிய சிவப்பு சட்டையிடம் எல்லா விவரங்களையும் கேட்டு அறிந்துக் கொண்டாள். போனை வைத்தவள்,

“கார்த்திக், ஹாஸ்பிட்டல் போகுறது முன்னுக்கு ஒரு நகைக்கடைக்கு போ. தாலி வாங்கனும்” என்றாள்.

வேந்தன் அந்த தனியார் மருத்துவமைனையை அரை மணி நேரத்தில் அடைந்து விட்டான். முதல் வகுப்பு அறையின் முன் சிவப்பு சட்டை நின்று கொண்டிருந்தான். வேந்தனை பார்த்ததும்,

“ஒன்னும் பயப்படற மாதிரி இல்லை சாரே. லோ பி.பி தான். அதிர்ச்சியான விஷயத்தைக் கேட்டதும் மயங்கிட்டாங்க. இப்ப ட்ரிப்ஸ் ஏறுது.” என வேந்தன் வயிற்றில் பாலை ஊற்றினான்.

கதவின் வெளியே இருந்தே இந்து பாடும் சத்தம் கேட்டது. கவலையிலும் வேந்தனுக்கு சிறு புன்னகை வந்தது. சிவப்பு சட்டையும் பாடலைக் கேட்டு புன்னகைத்தான்.

உள்ளே நுழைந்த வேந்தன் கண்டது, அனுவை மடியில் வைத்துக் கொண்டு சோகமே உருவாய் பாடிக் கொண்டிருந்த தன் அம்மாவைதான்.

‘அரும்பரும்பா சரம் தொடுத்த அழகு மலர் மாலை இது. ஆராரோ

தரையினிலே தவழந்து வந்த தங்க நிலா மேனியிது ஆராரோ ..”

மகனைப் பார்த்ததும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டார் இந்து.

“வாடாப்பா, வந்து உன் தங்கச்சிய பாரு. இன்னும் கொஞ்ச நேரத்துல மயக்கம் தெளிஞ்சிரும்னு டாக்டர் சொன்னாரு.”

அம்மாவின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்த தன் தங்கையை கவலையாக பார்த்தான் வேந்தன். வாடிய மலர் போல் துயில் கொண்டிருந்தாள் அவள். சந்தோஷ வானில் மிதந்த மனத்தில் மீண்டும் பாரம் ஏறி அழுத்தியது.

‘என் தங்கச்சிக்கு ஒரு வழி பண்ணாம நான் மட்டும் காதல் , கனவுன்னு மிதக்கறேனே. எப்படி முடிஞ்சது என்னால’ மீண்டும் குற்றவுணர்வு நெஞ்சை அறுத்தது.

“என்னம்மா ஆச்சு?”

“அன்னைக்கு உங்க அத்தை வந்துட்டு போனதுல இருந்து எனக்கு மனசு சரியில்லடா. நீயும் சொல்லிக்கிட்டே இருக்கீயேன்னு தரகர் கிட்ட அனுக்கு மாப்பிள்ளை பார்க்க சொன்னேன்”

“ஆமா, அவரு எனக்கும் போன் போட்டு போட்டே எல்லாம் வாட்ஸாப்ல வாங்குனாறே. அப்புறம் என்னாச்சும்மா?”

“இன்னிக்கு காலையிலேயே மனுசன் வீட்டுக்கு வந்துருந்தாரு. நம்ப அனுக்கு அவர் பார்த்த மாப்பிள்ளை வீட்டுக்காரங்க விசாரிக்கறதுக்காக உங்க மாமா வீட்டுக்கு போயிருக்காங்க”

பல்லைக் கடித்தான் வேந்தன்.

“அந்த குண்டம்மா இல்லாததும் பொல்லாததும் சொல்லியிருக்குமே?”

“வேற ஏதாச்சும் சொல்லி இருந்த பரவாயில்லைடா. நம்ப பொண்ணு ஏற்கனவே கெட்டுப் போனவ, கெடுத்தவனே என் மகன்தான்னு சொல்லியிருக்காங்கடா. அதுவும் எப்படி சொன்னுச்சாம் தெரியுமா? பையன் தொட்டுட்டான், பொண்ணு கெட்டுட்டா அப்படின்னு சொல்லி சிரிச்சிருக்காங்க. அந்த தரகர் வந்து இப்படி பட்ட பொண்ணுக்கெல்லாம் என்னால சம்மந்தம் பார்க்க முடியாதுன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிட்டு போறான்டா. என்னாலயே தாங்க முடியல. அப்பத்தான் எழுந்து வந்த உன் தங்கச்சி கேட்ட உடனே மயங்கி விழுந்துட்டா. நம்ம சிவப்பு சொக்காதான் ஹாஸ்பிட்டல் வரைக்கும் தூக்கிட்டு வந்து அட்மிட் பண்ணான்.” சொல்லி முடித்து தேம்பினார் இந்து.

மடமடவென கோபம் தலைக்கேறியது வேந்தனுக்கு.

“இப்பவே போய் அவங்கள ரெண்டுல ஒன்னு பார்த்துட்டு வரேன்மா. இந்த பச்சைக் குருத்தை பார்த்து இப்படி நாக்கு மேல பல்லு போட்டுப் பேச அவங்களுக்கு எவ்வளவு தெனாவெட்டு இருக்கும்” புயலென புறப்பட்டான் அவன்.

சிவப்பு சட்டை தான் அவனைப் பிடித்து நிறுத்தினான்.

“சார், மேடம் உங்கள எங்கயும் விடக் கூடாதுன்னு சொல்லியிருக்காங்க. அவங்க இப்ப வந்துருவாங்க. எதுவா இருந்தாலும் பேசிக்கலாம். நீங்க அவரப்படாதீங்க” வேந்தனை அசையாத மாதிரி பிடித்துக் கொண்டான் அவன்.

“விடுறா டேய். நீ வேற நேரம் காலம் தெரியாம. இன்னிக்கு நான் அப்புற அப்புல ஆத்தாலும் மகனும் இங்கயே வந்து அட்மிட் ஆகனும். விடுடா” திமிறிக் கொண்டு நடந்தான் வேந்தன்.

“மலர்”

“வேந்தா” தாயின் குரலும் தாரத்தின் குரலும் ஒருங்கே அவனை தடுத்து நிறுத்தின. இருவரையும் ஒரு சேர முறைத்தவன் மீண்டும் ரூமினுள் நுழைந்துக் கொண்டான்.

“வாம்மா” என மருமகளை வரவேற்றார் இந்து.

உள்ளே நுழைந்தனர் கார்த்திக்கும் தேவியும்.

“எங்கம்மா நம்ம லட்டுவைக் காணோம்?” கேட்டது வேறு யார், நம்ம கார்த்திக் தான். களேபரத்திலும் சாருக்கு காவியத் தலைவி மேல்தான் கண்.

“மருந்து வாங்க போயிருக்காப்பா. தோ வந்துட்டாளே”

உள்ளே நுழைந்த லாவண்யா இவர்கள் இருவரையும் மருந்துக்கு கூட மதிக்கவில்லை. நேராக சென்று அண்ணன் அருகில் நின்று கொண்டாள்.

இந்துவிடம் அனுவின் நலனை விசாரித்த தேவி , அங்கிருந்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டாள். அவளுக்கு ஏற்கனவே வீட்டில் என்ன நடந்தது என செக்குரிட்டி சிவப்பு சட்டையின் வாயிலாக தெரிந்திருந்தது.

இவர்கள் யாருமே எதிர்பார்க்காத விதமாக தாமரையும் மதனும் அனுவைக் காண வந்திருந்தனர். தேவியின் கண்ணசைப்பில் செக்குரிட்டி சிவப்பு சட்டை வேந்தனின் அருகில் நின்று கொண்டான். இந்துவுக்கோ என்ன செய்வது என புரியவில்லை. கார்த்திக் நகர்ந்து லட்டுவின் புறம் நின்று கொண்டான். அவள் உடல் மொழியிலே தன் அத்தையின் மேல் பாயப் போகிறாள் என அவனால் அனுமானிக்க முடிந்தது.

இதை எல்லாம் கண்டு கொள்ளாத தாமரையோ,

“என் மருமகளுக்கு என்னாச்சு? இப்படி உருவிப் போட்ட கறிவேப்பிலை மாதிரி படுத்துக் கிடக்கறாளே. டேய் மதன், பாருடா உன் பொண்டாட்டிய. இப்படி இருக்காளே” என ஒப்பாரி வைக்க ஆரம்பித்தார்.

அவர் போட்ட சத்ததில் மெல்ல கண்விழித்த அனு, இவர்களைப் பார்த்ததும் கலவரமடைந்தாள். அவள் கண்களில் மாலை மாலையாக கண்ணீர் ஊற்றியது. கை தானாக உயர்ந்து அம்மாவின் கரத்தை தேடியது. அவள் அருகில் வந்த இந்து அவளை இருக அணைத்துக் கொண்டார்.

“ஒன்னும் இல்லடா, நாங்க எல்லாரும் இருக்கோம். அழாதே” வெடவெடத்த மகளை தேற்றினார் இந்து.

“ஏன்டாம்மா அனு, எதுக்கு இந்த பயம், உன் புருஷன் மதன் கூட இருக்கறப்ப?” என பல்லிளித்தார் தாமரை.

வேந்தனுக்கு அதற்கு மேல் தாங்க முடியவில்லை.

“இப்ப இங்க ரெண்டு கொலை விழறதுக்குள்ள, ஒழுங்கு மரியாதையா நீங்க ரெண்டு பேரும் இடத்தை காலி பண்ணுங்க. “ உறுமினான் அவன்.

“எங்கக்காக்கு யாரு புருஷன்? உன் பொம்பளை பொறுக்கி மகனா? தோ பாரு தாமரை, இன்னும் கொஞ்ச நேரம் இங்க நின்ன உன்னை சொறி புடிச்ச தேரையா ஆக்கிருவேன்” வெகுண்டாள் லாவண்யா.

“ஏன்டி சின்னக் கழுதை. ஏற்கனவே நான் குடுத்தது பத்தலையா? சிலுப்பறே. இங்க பாருடி, உங்கக்கா அணில் கடிச்ச பழம். கடிச்ச என் மகன் தான் கட்டனும். மீறி மானமுள்ள எந்த சீமைத்துரை அவள கட்டுவான்?” இளக்காரம் தெறித்தது அவர் பேச்சில்.

அந்த வார்த்தையில் பாய்ந்து வந்த வேந்தன் மதனின் மூக்கில் ஓங்கி ஒரு குத்துவிட்டான். அவன் அம்மாவை அடிக்க முடியாத ஆத்திரம் மகன் மேல் இறங்கியது. இன்னும் அடி தடி ஆவதற்குள் தேவி குரலெடுத்து கத்தினாள்.

“நிறுத்துங்க எல்லாரும்” நிசப்தமானது அந்த இடம்.

தன் பாக்கேட்டிலிருந்து தாலியை வெளியே எடுத்தவள்,

“கார்த்திக்! பிடி தாலிய. போய் அனு கழுத்துல கட்டு”

உலகமே தட்டாமாலை சுற்றியது கார்த்திக்குக்கு. மெல்ல லாவண்யாவை திரும்பி பார்த்தான். அவள் அப்படியே சமைந்து போய் நின்றிருந்தாள். மற்ற அனைவருக்கும் அதிர்ச்சிதான். பாறாங்கல்லாய் கணத்த கால்களை நகர்த்தி தேவி நீட்டிய தாலியை கை நடுங்க வாங்கினான் கார்த்திக்.

மூக்கின் ரத்தத்தைத் துடைத்துக் கொண்டே,

“யாரு பொண்டாட்டிய யாருடா கட்டறது?” என பாய்ந்து வந்து தாலியைப் பிடுங்கினான் மதன். கார்த்திக் மீண்டும் மதனிடமிருந்து தாலியைக் கைப்பற்ற, மீண்டும் மதன் பிடுங்க ஒரே ரணகளமானது அவ்விடம். வேந்தனை விட்டுவிட்டு சிவப்பு சொக்கா தாலி சண்டை இடத்துக்கு வந்தான். இந்த அபூர்வ சண்டை அனுவின் அருகில் தான் நடந்தது. மற்றவர்கள் சுதாகரிக்கும் முன்னே ஒரு ஜோடி கை அனுவின் கழுத்தில் அவசரமாக தாலியைக் கட்டியது. மேள தாளம் இல்லாமல், மந்திரம் முழங்காமல் மகள் கழுத்தில் தாலி ஏறுவதைப் பார்த்த இந்து அவசர அவசரமாக தனக்குத் தெரிந்த அளவில்

“மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா

கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்

என்றென்றும் புன்னகை
முடிவில்லா புன்னகை
இன்று நான் மீண்டும் மீண்டும் பிறந்தேன்
ஒரு துளி பார்வையிலே” என பாடினார்.

கோபத்தில் உச்சியில் இருந்த வேந்தன்,

“எவன்டா என் தங்கச்சிக்கு தாலி கட்டுனவன்?” என போட்ட சத்தம் ஹாஸ்பிட்டலின் மூலை முடுக்கெல்லாம் பட்டுத் தெறித்தது.

கட்டுனது யாரு??????

 

உயிரை வாங்குவாள்….