Uyir Vangum Rojave–EPI 18

ROSE-c7f2b6e9

 

அத்தியாயம் 18

உன்ன விட்டுப் போனா எனக்கு நல்ல பொண்ணு கிடைப்பா

ஆனா உனக்குதான் கேவலமான பையன் கிடைப்பான்

உன் வாழ்க்கை நாசமா போறத என்னால தாங்க முடியாது

(ஜெயம் ரவி – ரோமியோ ஜீலியட்)

 

 

வேந்தன் போட்ட சத்தத்தில் அந்த இடமே மயான அமைதியானது.

தங்கையை நோக்கியவன், கண்களால் வினவினான் யாரேன்று. அவளுமே நடந்தருந்த காரியத்தில் கண்கள் உடைப்பெடுக்க, அதிர்ந்து போய் அமர்ந்திருந்தாள்.

“அனுமா! சொல்லு எவன் கட்டுனான்?”

அவள் வலது கை மெல்ல மெலெழும்பி சுட்டி காட்டிய இடத்தில் நின்றிருந்தவன், சாட்சாத் நம் சிவப்பு சட்டைதான்.

பாய்ந்து அவன் சட்டையைப் பிடித்திருந்தான் வேந்தன்.

“ஏன்டா, நீ யாரு எவருன்னே எங்களுக்கு தெரியாது. எவ்வளவு தைரியமிருந்தா என் தங்கச்சி கழுத்துல தாலியைக் கட்டுவ? உன்னைய சும்மா விடமாட்டேன்டா”

சிவப்பு சட்டைக்கு சரமாரியாக குத்துக்கள் முகத்திலும் தோளிலும் விழுந்தன. வேந்தன் அடித்த அடிக்கெல்லாம் அனுவைப் பார்த்தபடியே அப்படியே தடுக்காமல் நின்றிருந்தான் அவன். கார்த்திக் பிடித்து தடுத்தும் வேந்தன் அசரவில்லை. தேவி கத்தியும் அவன் காதில் ஒன்றும் ஏறவில்லை. சிவப்பு சட்டையின் வாய் கிழிந்து ரத்தம் குபு குபுவென வந்தது.

“நிறுத்துண்ணா!” ஓங்கி கத்தியது நம் அனுதான்.

தங்கையின் கத்தலில் அடிப்பதை நிறுத்தியவன், திரும்பி கேள்விக் குறியுடன் அவளைப் பார்த்தான்.

“போதும்ண்ணா! கையெடுத்துக் கும்புடுறேன் என் புருஷனை விட்டுரு. ரத்தம் எப்படி வருது பாரு. அவரு என்னண்ணா தப்பு பண்ணாரு? இப்படி எல்லார் முன்னுக்கும் கேவலப்பட்டு நிக்கற உன் தங்கச்சிக்கு வாழ்க்கை குடுத்தாரு. அது தப்பா? அவரை விட்டுருண்ணா. “ கத்திவிட்டு தேம்பி அழுதாள் அனு. அங்கே இருந்த அனைவருக்கும் பேரதிர்ச்சி. வேந்தனின் கண்கள் கலங்கி விட்டது.

“அனும்மா! வளர்த்த கடா மாருல பாயுறதுன்றது இதுதானா? என் தங்கச்சி, என் தங்கச்சின்னு நீ பொறந்தப்பா கீழயே விடாம தூக்கி கிட்டு திரிஞ்சேனே அந்த அண்ணனுக்கு நீ காட்டுற மரியாதை இதுதானா? குழந்தையா நீ இருக்கறப்போ ஓயாமல் அழவ, இதோ இந்த நெஞ்சுல தான்மா உன்னை தூக்கிப் போட்டுகிட்டு டுவிங்கள் டுவிங்கள் லிட்டில் ஸ்டார், அனும்மா எங்க ஷைனிங் ஸ்டார்னு வாய் வலிக்க திரும்ப திரும்ப பாடுவனே அதுக்கா இப்படி ஒரு வார்த்தை கேட்டுட்ட? என்னால தாங்க முடியலையே! மீன் குழம்புல உப்பு கம்மி, அண்ணன் இப்ப ஆயிட்டேன் டம்மி”

‘ஐய்யய்யோ! டி. ஆர் மாதிரி பேச ஆரம்பிச்சிட்டானே. இப்போ பாட்டு வேற எடுத்து விடுவானே. கடவுளே’ என கார்த்திக் அடுத்து வரப் போகும் பாடலுக்காக காதை தீட்டி காத்திருந்தான். அவனை ஏமாற்றாமல்,

“தட்டிப் பார்த்தேன் கொட்டாங்கச்சி
தாளம் வந்தது பாட்ட வச்சி
தூக்கி வளர்த்த அன்பு தங்கச்சி
தூக்கி எறிஞ்சா கண்ணு குளம் ஆச்சு”

பாடியவாறே கண்ணைத் துடைத்துக் கொண்டான் வேந்தன். கட்டிலிலிருந்து எழுந்து ஓடி வந்த அனு அண்ணனைக் கட்டிக் கொண்டு அழுதாள். அவளோடு இந்துவும், லட்டுவும் சேர்ந்து கொண்டார்கள். அவர்கள் ஒப்பாரியைப் பார்த்து தேவியே தலையைப் பிடித்துக் கொண்டாள்.

“இப்ப எதுக்கு என் கண்ணாலத்துல குடும்பமே இப்படி கண்ணீர் உடுறீங்க? சொல்லுங்க மச்சான், எனக்கு என்ன குறைச்சல்? “ சிவப்பு சட்டையின் குரலில் அடக்கப்பட்ட கோபம் இருந்தது.

“டேய்! முதல்ல உன் பேரு கூட என்னன்னு எங்களுக்கு தெரியாதுடா? இதுல எப்படிடா உன்னை எங்க வீட்டு மாப்பிள்ளைன்னு ஏத்துக்கறது?” வெடித்தான் வேந்தன்.

“அனும்மா, அவன் கட்டுன தாலிய கழட்டி போட்டுட்டு வாம்மா. நாம போகலாம்” என தங்கையை அழைத்தான் வேந்தன்.

“வேந்தா! இப்படிலாம் பேசாதடா. எதா இருந்தாலும் யோசிச்சு அப்புறம் முடிவு எடுக்கலாம்” பதறினார் இந்து.

“அனும்மா! நான் கட்டுன தாலி கீழ இறங்குச்சுனா, நான் செத்துட்டேன்னு அர்த்தம். அது தான் உனக்கு வோணுமா?” என கேட்டான் சிவப்பு சட்டை.

அனு இங்கேயும் அங்கேயும் அல்லாடினாள். அவளுக்கு அண்ணனையும் விட முடியவில்லை. புதிதாக தாலி கட்டி வந்த சொந்தத்தையும் விடமுடியவில்லை. இறைஞ்சுதலாக தேவியைப் பார்த்தாள். கண்ணை மூடி திறந்து அவளை தைரியப்படுத்திய தேவி, முதலில் தாமரையையும் மதனையும் வெளியேற்றும் வேளையில் இறங்கினாள்.

அதற்குள் தாமரையோ,

“சரி, ஆனது ஆகிப்போச்சு. இனி நம்ம லட்டுவையாச்சும் மதனுக்கு குடு மதனி” என இந்துவைப் பார்த்து கேட்டுக் கொண்டிருந்தார். சில பேர் என்ன பிரச்சனை நடந்தாலும் அதில் தமக்கு சாதகமானதை தேடிக் கொள்வார்களாம். அந்த கூட்டத்தை சேர்ந்தவர் தான் தாமரை.

‘என்னது லட்டுவையா? காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் கொண்டு போன கதையாவுல இருக்குது.’ அனுவைக் கட்ட தாலியைக் கையில் வாங்கிய மகராசனின் புலம்பல் இது.

“உங்க மகனைதான் போலீஸ் தீவிரமா வலை போட்டுத் தேடிக்கிட்டு இருக்காங்களாமே லோட்டஸ். அவனுக்கு ஏற்கனவே மாமியார் வீடு ரெடியா இருக்கறப்போ ஏன் நீங்க வேற மெனக்கெடுறீங்க” என கேட்டாள் தேவி.

“என்னடி உளர்ற?” திமிராக கேட்டான் மதன்.

வேந்தனும் கார்த்திக்கும் துடித்துப் போய் அவனைப் மொத்த வருவதற்குள், தேவியே அவனைப் கன்னம் கன்னமாக அறைந்திருந்தாள்.

“யாரைப் பார்த்து டீ போட்டு கூப்பிடற? என் ஹஸ்பெண்டே என்னை அப்படி கூப்பிட்டதில்லை. நீ யாருடா என்னை டீ போட” மீண்டும் கன்னம் பழுத்தது மதனுக்கு. கார்த்திக் மதனைப் பிடித்துக் கொண்டான்.

வேந்தன் தேவியை பிடித்து இழுத்து வந்து நாற்காலியில் மீண்டும் அமர வைத்தான்.

“அவன் மேல எல்லாம் கை வச்சு உன் ஸ்டேன்டர்ட்ட இறக்கிக்காதே ரோஜா” அவளை சமாதானப் படுத்தினான்.

“உங்க சூப்பர் மார்கேட்டுல வேலை செய்யுற பொண்ணை உன் மகன் கையைப் புடிச்சி இழுத்துட்டானாமே. அந்தப் பொண்ணு சிசிடிவி ஆதாரத்தை வச்சிருக்காளாம். அதனால போலீஸ் கேக்குறப்போ ‘என்ன, கையைப் புடிச்சு இழுத்தியா?’ன்னு வடிவேலு ஸ்டைல்ல திரும்ப திரும்ப கேட்டு உதை வாங்கிட்டு வராதீங்க.” இப்பொழுது பேசியது கார்த்திக்.

“அப்புறம், உங்க சூப்பர் மார்க்கேட்டுல காலாவதியான பொருளுங்க லேபலை மாத்தி திரும்பவும் விக்கறீங்களாம். அப்படி வாங்குன பாலை குடிச்சி ஒருத்தன் கவர்மெண்ட் ஹாஸ்பிட்டலுல இன்னிக்கோ நாளைக்கோன்னு இருக்கான்னாம். இப்போ, இந்த நேரத்துல அதிகாரிங்க உங்க எல்லா சூப்பர் மார்க்கேட்டையும் ரைட் பண்றாங்களாமே? காதோரமா நியுஸ் வந்தது. சீக்கிரமா போய் எதையாச்சும் புளுகி இருக்கறதையாச்சும் காப்பாத்துங்க.” கார்த்திக் பேசிக் கொண்டே இருக்கும் போது , தாமரைக்கு சூப்பர் மார்க்கேட்டிலிருந்து போன் வந்தது. எடுத்துப் பேசியவர் பதறி அடித்துக் கொண்டு ஓடினார். மதனும் அவர் பின்னாலேயே ஓடினான்.

‘ஓன் விக்கட் அவுட். இப்படி பச்சா மேட்டருல எல்லாம் நாம கைய வைக்க வேண்டியதா இருக்கே. சிக்கனிங் பெல்லோவ்ஸ்’ முனகியபடியே தூசியைத் தட்டுவது போல் கையைத் தட்டிக் கொண்டாள் தேவி.

அடுத்த பிரச்சனையை முடிக்க தயாரானவள், இவர்கள் மூவரையும் திரும்பி பார்த்தாள். அவர்கள் இன்னும் கட்டிப்பிடித்த நிலையில் தான் இருந்தார்கள். சிவப்பு சட்டை அவர்கள் அருகே கையைப் பிசைந்து கொண்டு நின்று கொண்டிருந்தான்.

“அத்தை, அனு இன்னும் வீக்காதான் இருக்கா. அவள முதல்ல படுக்க வைங்க. நாம பேசலாம்” என இந்துவுக்கு சாவியைக் கொடுத்தாள். பின் கார்த்திக்கிடம் அனைவருக்கும் குடிக்க காபி வாங்கி வர சொன்னாள்.

பின் திரும்பி லட்டுவை ஒரு பார்வைப் பார்த்தாள் தேவி. அவள் ஒரு நாற்காலியை எடுத்து வந்து சிவப்பு சட்டைக்கு கொடுத்து உட்கார சொன்னாள்.

காபி வந்தவுடன் அமைதியாக அனைவரும் குடித்தனர். பின் தேவிதான் ஆரம்பித்தாள்.

“மீட் கர்மவீரன். என்னோட சீப் செக்குரிட்டி. அவரை வீட்டுக்குள்ள நான் விட்டப்பவே உங்களுக்கு தெரிஞ்சிருக்கனும் அவன் எவ்வளவு நல்லவன், நம்பிக்கையானவன்னு. தற்காப்பு கலைகள்ல கை தேர்ந்தவன். அதனால தான் இவ்வளவு சீக்கிரமா ப்ரமோட் பண்ணேன். நல்ல பதவில இருந்தாலும் சாதாரண ஸ்கூல் படிப்புதான். கொஞ்சம் அடிமட்டத்துல இருந்து வந்தவன். கார்த்திக்க கட்ட சொல்லும் போது இவன் இப்படி நடுவுல வருவான்னு நான் நினைக்கல மலர். இப்போ நீ சொல்லு நான் என்ன செய்யட்டும்? இவனை தூக்கிறவா? ”

‘இந்த கர்மம் பிடுச்சவனுக்கு கர்ம வீரன்னு பேரு. கலரை பாரு தார் ரோடு மாதிரி. அர்னால்டுக்கு அக்கா மகன் மாதிரி உடம்ப தேத்தி வச்சிருக்கான். ஒரு ஊது ஊதுனான்னா என் தங்கச்சி ஊட்டில தான் போய் விழுவா. தூக்க சொன்னா ரோஜா தூக்கிருவாதான், இருந்தாலும் என் தங்கச்சி, புருசன்னு சொல்லிட்டாளே. இனிமே நான் என்ன செய்ய முடியும்?’ என்னவோ தான் சேட்டு வீட்டு பிள்ளை கணக்காய் கலராக இருப்பது போல் கர்ம வீரனை கடுப்படித்தான் மனதில்.

“என்னம்மா மருமகளே, தூக்கிறவா போட்டுறவான்னு கேட்டுக்கிட்டு. நடந்தது நடந்து போச்சு இனிமே சோப்பு சொக்கா தான், ஐயோ தப்பு தப்பு வீரா தம்பி தான் நம்ப மாப்பிள்ளை. படிப்பு என்னம்மா படிப்பு, நல்ல குணம் இருந்தா போதாதா? இந்த தம்பி கஸ்டடியில எத்தனை நாளு இருந்துருக்கேன். சொந்த அம்மா மாதிரி பாத்துகுச்சு. அனுக்குட்டிய நல்லா பார்த்துக்குவாருன்னு எனக்கு முழு நம்பிக்கை இருக்கும்மா” என பச்சைக் கொடி காட்டினார் இந்து.

“அம்மாவே சொல்லிட்டாங்க. அப்புறம் என்ன வேந்தா? அவர் கிட்ட பேசி சுமுகமா போ. என்ன இருந்தாலும் நம்ப அனுக்கு தாலி வரம் கொடுத்த தெய்வம்” தான் தப்பித்து விட்டதில் பெருமகிழ்ச்சி கார்த்திக்குக்கு. திரும்பி பாசமாக லட்டுவைப் பார்க்க, எரிமலை குழம்புகள் அவள் கண்களில் இருந்து பறந்து வந்தது.

‘செத்தான்டா சேகரு. இந்த மேடம் என்னை இப்படி வச்சி செய்வாங்கன்னு தெரியாம போச்சே’ உள்ளுக்குள் புலம்ப மட்டும் தான் முடிந்தது.

இந்துதான் ஆரம்பித்தார்.

“தம்பி, உங்களுக்கு சொந்தம் பந்தம்னு யாரும் இல்லையா? பேசி கல்யாணத்தை ரிஜிஸ்டர் பண்ணதான் கேக்குறேன்”

“அம்மோ! எனக்குன்னு யாரும் இல்ல. குப்பத்துல பொறந்து வளந்தேன். நைனா தண்ணி கேசு. எங்காத்தா அவன் டாச்சர் தாங்காம எவனையோ இஸ்துக்குனு ஓடிருச்சாம். குடிகார நைனா கூடயே எப்படியே அந்த கலிஜில வளந்தேன். சத்துணவுக்குக்காக ஸ்கூலுக்கு போனேன். பத்து வயசுல நைனாவும் குடிச்சே புட்டுக்கிச்சு. அப்பாலே அனாதை ஆஸ்ரமத்துல சேர்த்து போட்டாங்க. அங்கத்தான் மாஸ்டரு கிட்ட இந்த அடிதடி பைட் எல்லாம் கத்துகிட்டேன். நல்ல  சுத்தமான தமிழும் பேசுவேன். ஆனா உணர்ச்சி வச பட்டா என் பொறந்த மொழி இப்படிக்கா வந்துருது. மன்னிச்சிருங்க அம்மா”

வாயடைத்துப் போயினர் எல்லாரும். தேவிக்கு தெரியும் அவன் பின்புலம். வேலையில் சேரும் முன் எல்லாரையும் செக் செய்து தான் வேலைக்கு சேர்ப்பாள். கார்த்திக்குக்கும் ஓரளது தெரியும் தான். இருந்தாலும் அவன் இப்படி இறங்கி பேசுவான் என்பது இன்றைக்கு தான் தெரியும்.

‘இப்பத்தான் இத்தாலி கத்துக்க பிளான் பண்ணேன். அதுக்குள்ள மெட்ராஸ் பாசை கத்துக்க வேண்டி வந்துருச்சே.’ வேறு யார் புலம்புவது, எல்லாம் நம் இந்து தான்.

மெல்ல லட்டுவிடம் குசுகுசுவென,

“லட்டும்மா வீட்டுக்கு போன உடனெ நம்ப சிவா தப்பி படத்துல வருமே

கருத்தவன்லாம் கலிஜா

கிளப்பி விட்டாங்க

அந்த கருத்த மாத்து கொய்யால

தக்காளி”

அந்த பாட்ட என் போனுல கீழ இறக்கி குடுமா. பாட்டை மனப்பாடம் பண்ணி அப்பப்பா மாப்பிள்ளை முன்னுக்கு பாடனும்”

“கீழ இறக்கி குடுக்கவா?”

“அது தான்டி அந்த டவுன்லோடு. இனிமே நான் பேசறப்பல்லாம் அடிக்கடி தக்காளிய சேர்த்துக்குவேன். அப்பத்தான் நம்ப மாப்பிள்ளைக்கு கப்போர்ட் டேபளா இருக்கும்”

“கப்போர்ட் டேபளா?”

“ஐயோ, அது தான் வசதியா இருக்கும்னு சொல்ல வந்தேன்”

“ஓ, கம்பர்டபளா? என்னால உன் இங்லீச ட்ரான்ஸ்லேட் பண்ணவே முடில மா”

“அதுக்கு தனி அறிவு வேணும்டி. லட்டும்மா, எனக்கொரு சந்தேகம். தக்காளிய மட்டும் ஏன் மெட்ராஸ் பாசைல அடிக்கடி சேர்த்துக்கறாங்க? இந்த கத்திரிக்காய், வெண்டைக்காய்லாம் என்ன பாவம் பண்ணுச்சு? அதையும் சேர்த்துக்க வேண்டி தானே.”

“நீ ப்ரீயா வுடும்மா. அடுத்த தபா அவங்க எல்லாம் கமிட்டி மீட்டிங் வைக்க சொல்ல, உன்னை இட்டுக்கின்னு போறேன். நீயே சொல்லிரு”

லட்டு பேசிய மொழியில் வாயடைத்துப் போனார் இந்து. அம்மாவின் வாயை அடைத்தவள் மற்றவர்கள் பேசிக் கொண்டிருந்ததை மீண்டும் கவனிக்கலானாள்.

“அம்மா எங்க கூட இருந்தப்போ அனுவைப் பத்தி அடிக்கடி பேசுவாங்க. எம் மக நான் இல்லாம சாப்பிட மாட்டா, தூங்க மாட்டா அப்படி இப்படின்னு. எப்பவுமே அனு புராணம் தான். அப்பவே அனு மேல ஒரு பீலிங்கு. அப்புறம் மேடம் கல்யாணத்துல அனுவ பாத்தவுடனே மெர்சலாயிட்டேன். மேடம் வீட்டுக்கே வேலைக்கு போக சொன்னப்போ எனக்கு இந்த தேவதை பொண்ண டாவடிக்கறது எல்லாம் தப்பா பட்டுச்சு. இருந்தாலும் அவங்க மட்டும் தான் சிவப்பு சொக்கான்னு கூப்பிடாம, என் பேரு என்னன்னு கேட்டு வீரான்னு கூப்பிடுவாங்க. பார்க்கறப்ப எல்லாம் சாப்பிட்டயான்னு அன்பா கேப்பாங்க. அப்போ முடிவு பண்ணேன், இனிமே ஜகா வாங்கக்கூடாதுன்னு. கட்டுனா அனுதான்னு. இன்னிக்கு சான்ஸ் கிடைக்கவும் தாலியைக் கட்டிட்டேன். என்னால அனுவ ராணி மாதிரி பாத்துக்க முடியும். எங்கள யாரும் பிரிச்சிறாதீங்க” கெஞ்சினான் வீரா.

“அனு, நீ என்ன சொல்லுற?” கேட்டாள் தேவி.

“எங்க அண்ணன் சொல்லறதுக்கு நான் கட்டுப்படறேன். அண்ணா வேணான்னு சொன்னா, நான் கேட்டுக்குவேன். ஆனா வேற யாரையும் இதுக்கு மேல கட்டிக்க மாட்டேன்”

“அப்படி சொல்லுடி என் தக்காளி” மகளை உச்சி முகர்ந்தார் இந்து.

“நான் யோசிக்கனும்.” முறுக்கினான் வேந்தன்.

“அதெல்லாம் ஒன்னும் வேணாம். வீரா, இனிமே எப்பொழுதும் போல அவங்க கூடவே இரு. ஆனா வேலைக்காரனா இல்ல, வீட்டு மருமகனா” முடித்து விட்டாள் தேவி.

வேந்தனுக்கு மனம் ஆறவில்லை.

“அதெப்படி நீ முடிவெடுக்கலாம்? இது என் தங்கச்சி வாழ்க்கை.”

அவன் சொன்ன வார்த்தை சுருக்கென தைத்தது தேவியை. ஒரு நிமிடம் அவனை ஆழப்பார்த்தாள். அப்பொழுதுதான் வேந்தனுக்கு உரைத்தது தாம் என்ன சொன்னோமென. மனசாட்சி உறுத்த,

“மன்னிச்சுரு ரோஜா. உணர்ச்சிவசத்துல அறியாம பேசிட்டேன்” என மன்னிப்பு கேட்டான்.

இந்து தான் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார்.

“டேய் வேந்தா, பேசிப்புட்டு அப்புறம் என்னடா சாரி பூரி, கக்குஸ்காரி? அவ நம்ம வீட்டு மருமக. முத மருமகளுக எப்பவும் புருஷன் குடும்பத்தை தாங்க வந்த குலசாமிங்க. என் குலசாமிய பட்டுன்னு பிரிச்சு பேசிப்புட்டீயே. அவ மன்னிச்சாலும் நான் உன்னை மன்னிக்க மாட்டேன்டா. படவா”

இப்படி இந்து எப்பவும் வேந்தனை திட்டியது இல்லை. மனசு வேதனையானது அவனுக்கு. ரோஜாவோ பார்க்க எப்பொழுதும் போல் தான் இருந்தாள். ஆனாலும் இத்தனை நாள் அவள் அருகில் இருந்த வேந்தனுக்கு அவள் முக மாற்றத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது. குற்ற உணர்ச்சியில் நடப்பது நடக்கட்டும் என அமைதியாகிவிட்டான்.

“மலர், எனக்கா எந்த உரிமையும் இல்ல? கண்டிஷன் நம்பர் டூவ மறந்துட்டீயா? உன் குடும்பத்துல என்ன நடக்கனும் என்ன நடக்க கூடாதுன்னு முடிவு எடுக்க எல்லா உரிமையும் எனக்கு இருக்கு? வக்கீல் கிட்ட பேசுறீயா?” அமைதியாக அவனிடம் பேசியவள், கிளம்பிவிட்டாள்.

“வீரா, டிஸ்சார்ஜ் பண்ணவுடனே வீட்டுக்கு கிளம்பிருங்க. ரிஜிஸ்டர் வேலை எல்லாம் கார்த்திக் ஏற்பாடு பண்ணுவான். அப்புறமா பெருசா இரு ரிசப்சன் குடுத்தறலாம். “

“அத்தை, எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு. கண்டிப்பா போகனும். கிளம்பறேன்.” வேந்தனிடம் ஒன்றும் சொல்லிக் கொள்ளவில்லை, கதவு வரை சென்றவள், திரும்பி பார்த்து,

“லாவண்யா! கொஞ்சம் வெளிய வா” என அழைத்தாள்.

லாவண்யா வரும்வரை ரூமின் சற்று தூரத்தில் தேவியும் கார்த்திக்கும் காத்திருந்தார்கள்.

“அப்புறம் லட்டு, உங்கண்ணனையும் என்னையும் பிரிக்கற மிஷன் எந்த அளவுள இருக்கு?” எகத்தாளமாக கேட்டாள் தேவி.

லாவண்யாவுக்கு முகமெங்கும் வேர்த்துவிட்டது.

“எப்படி தெரியும்னு பார்க்கறியா? உங்க அண்ணன் சும்மா சவுண்டு விடுவானே தவிர, பேசிக்கலி அவன் ஒரு அப்பாவி. பின்னால கண்டிப்பா யாராவது முடுக்கி விடாட்டி, இப்படி என்னை ஹர்ட் பண்ணுற அளவுக்கு போக மாட்டான். இந்த வீட்டுல உன்னை தவிர மத்தவங்க எல்லாம் என் பிடியில. அப்புறம் உன் வேலைதான்னு என்னால கண்டுபிடிக்க முடியாதா?”

“அது வந்து!!!” என நெற்றியில் பூத்த வேர்வையைத் துடைத்துக் கொண்டே திக்கினாள் அவள். கார்த்திக்குக்கு பார்க்கவே பாவமாக இருந்தது. இப்பொழுது அவன் உள் நுழைந்தாள், தேவி இன்னும் ஆவேசமாவாள் என வாயை மூடிக் கொண்டு வேடிக்கைப் பார்த்தான்.

“என்ன வந்து போயி? நீ எனக்கு குடுத்த மருந்த உனக்கே திருப்பி குடுத்தேன் பார்த்தீயா? கார்த்திக்க தாலி கட்ட சொல்லவும் அப்படியே கண்ணு கிண்ணெல்லாம் கலங்கி போச்சு. உனக்கு நடந்தா ரத்தம், எங்களுக்கு நடந்தா தக்காளி சட்னியா? இனிமே இந்த மாதிரி, அது என்ன வோர்ட் கார்த்திக்?”

‘ஐயோ என்னை ஏன் மாட்டி விடுறாங்க? ஏற்கனவே அவ கொலைவெறில இருக்கா. இவங்க பண்ணுறத பார்த்தா என் கல்யாணம் கானல் நீரா போயிரும் போலவே’

“தில்லாலங்கடி மேடம்”

“ஆமா, தில்லாலங்கடி வேலையெல்லாம் எங்க லைப்ல வச்சிக்கிட்ட, இன்னிக்கு காட்டுனது சாம்பிள் தான். அப்புறம் மேயின் பிட்சர் காட்ட வேண்டி வரும். புரிஞ்சு நடந்துக்கம்மா”

தலை தானாக ஆடியது லாவண்யாவுக்கு. கண்கள் மட்டும் கார்த்திக்கை விட்டு அகலவில்லை.

“என்ன அவன முறைக்கிற? சரி தெரியாம தான் கேக்குறேன். உங்க வீட்டுல மத்தவங்க தான், அது என்ன வோர்ட் கார்த்திக்?”

‘ஐய்யய்யோ திரும்பவுமா?’

“முட்டாளுங்களா மேடம்?” தேவியும் லாயண்யாவும் சேர்ந்து அவனை முறைத்தார்கள்.

“ஹிஹிஹி, நாக்கு ஸ்லிப் ஆயிருச்சு. வெள்ளந்தி, மேடம்”

“யா, யா வெள்ளந்தி. நீ தான் டகில் பாச்சா ஆளாச்சே, வீராவ வீட்டுக்குள்ள ஏன் தைரியமா விட்டேன்னு உனக்கு கூடவா புரியலை? வாட் அ ஷேம். உங்கக்காவுக்கு நான் பார்த்த மாப்பிள்ளை அவன்தான். ஒரே கல்லுல ரெண்டு மேங்கோவ எப்படி தட்டுனேன் பார்த்தியா? உன்னையும் அடக்கி வச்சிட்டேன், உங்க அக்காவையும் செட்டிலாக்கிட்டேன். இதனால நான் என்ன சொல்ல வரேன்னா, உன் வாலை சுருட்டி வச்சிக்கிட்டு அடக்க ஒடுக்கமா இரு. என் கிட்ட மோதி பாக்கனும்னு நினைக்காதே! இந்த விஷயம் உங்கண்ணா காதுக்கு போச்சு, ஹ்ம்ம்ம் அப்புறம் நடக்கறதுக்கு நான் பொறுப்பு இல்லை. வரட்டா” விடுவிடுவென நடந்துவிட்டாள் தேவி.

கண்கலங்க நின்றிருந்த லாவண்யாவைப் பார்க்க கார்த்திக்கிக்கு மனம் தாளவில்லை.

“லட்டும்மா!”

“போடாங்!” வார்த்தை வரவில்லை. திரும்பி நடக்க தொடங்கியவளை கைப்பிடித்து தடுத்தான் கார்த்திக். கையை உதறியவள், பளாரென ஒரு அறைவிட்டாள்.

“முடிஞ்சிருச்சுடா நமக்குள்ள. இனி நீ யாரோ, நான் யாரோ. குட் பாய்!” தவித்துப் போனான் கார்த்திக்.

“கார்த்திக்” தேவிதான் அழைத்தாள் வாசலில் இருந்து. அழுது கொண்டு செல்லும் லாவண்யாவையும், தேவியையும் பார்த்தவன் மனம் வலிக்க வலிக்க தேவியை நோக்கி தன் எட்டுக்களை எடுத்து வைத்தான்.

 

உயிரை வாங்குவாள்…