Uyirodu Vilaiyadu – 4
Uyirodu Vilaiyadu – 4
(Revenge killings/ பழிவாங்கும் கொலைகள் அல்லது கும்பல் போர்கள்/ gang war என்று ஒரு கும்பல் இன்னொரு கும்பலைத் தாக்கிக் கொலை செய்வதை சொல்வார்கள்.
இது செயின் ரியாக்ஷன் போன்றது. ஒரு உயிர் போனால் அதற்கு எதிரொலியாய் இரு பக்கமும் தொடர்ந்து பல கொலைகள் நிகழும்.இரு புறமும் பலத்த உயிரிழப்பு இருந்தாலும், இதனால் அப்பாவி பொது மக்களின் உயிரும் போகும்.
தமிழகத்தில் 2013 ஆம் ஆண்டின் முற்பகுதியில் 27 கொலைகள் நடந்தன. 2002 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட, ‘கேங்க்ஸ்டர் எதிர்ப்புக் குழு/gangster anti task force புத்துயிர் பெற்றது.
உள்ளூர் காவல்துறையினருடன் இணைந்து பணியாற்றும், இந்த உயரடுக்கு அணி, வட சென்னையில், செயல்படும் பல முக்கிய கும்பல் தலைவர்களையும், ஏராளமான சிறிய ரவுடிகளையும் சுற்றி வளைத்தது.-based on life of true dons of Chennai and police case files )
அத்தியாயம் -4
சம்யுக்தா அங்கே கோயிலில் திருமண கோலத்தில் காத்து நிற்க, அதை நிறுத்த வல்லவர்களின் கார் முகப்பேரின் இன்னொரு பகுதியில் வந்து நின்றது.
அதிலிருந்து இறங்கினார்கள் ஐவர் எந்தப் பக்கம் செல்வது என்று தெரியாதவர்களாய்.
அந்தத் திருமணம் நடக்க கூடாத ஒன்று என்பதாலோ, இல்லை அப்படியே நடந்தாலும் நிலைக்க முடியாத ஒன்று என்பதாலோஎன்னவோ, போலீஸ் கெடுபிடியால் முதல் முகூர்த்தம் தவறி இருக்க, அடுத்த முகூர்த்தம் தவறி போகும் விதமாய் ஈஸ்வர் இன்னும் வந்து சேர்ந்திருக்கவில்லை.
அதோடுஅந்த அந்த ஐவர் வந்த கார் ரோட்டில் நின்றது.
ஒரு சிலரை பார்த்தால் நாமளே அறியாமல், இவர்கள் நம் நம்பிக்கைக்கு உரியவர்கள் என்ற எண்ணம் எழும். இன்னும் சிலரை கண்டவுடன் பயந்து விலகிச் சென்று விடுவோம்.
ஆழ் மனம், ‘ இவர்கள் ஆபத்தானவர்கள்’ என்பதை முன்னரே உணர்வது ஒரு காரணம்.
அப்படியொரு பயத்தை, தங்களை பார்ப்பவர்களுக்கு ஏற்படுத்தியவாறு இறங்கி நின்றார்கள் அவர்கள்.
அந்த ஐவரும் நின்ற விதம், முகத்தில் இருந்த இறுக்கம், உடல் மொழி அவர்களிடமிருந்து வெளிப்பட்ட ஏதோ ஒன்று, ‘கிட்டே நெருங்காதே!.. உயிர்க்கு உத்திரவாதம் இல்லை…’ என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டு இருக்க, அந்தக் காரின் அருகே நடந்து சென்றவர்கள், தங்கள் நடையை துரிதபடுத்தி விலகிச் சென்றார்கள்.
சைக்கிள், பைக்கில் வந்தவர்கள் தங்கள் வண்டியின் வேகத்தை அதிகப்படுத்தினார்கள். இதற்கும் அவர்கள் இறங்கி தான் நின்றார்கள். அதற்கே மக்களின் மத்தியில், ஒரு அசௌகரியம், பதட்டம் உருவாகி இருந்தது.
அதை மேலும் கூட்டும் வகையில் தான், அந்தக் காரிலிருந்து இறங்கிய ஐந்து பேருக்குத், தலைவன் மாதிரி இருந்தவனின் அடுத்த நடவடிக்கை இருந்தது .
மீதம் இருந்த நான்கு பேரும், அந்தத் தலைவனை விட்டு விலகி நின்று இருந்தார்கள். அவர்களுக்கு, அவன்மேல் இருந்த பயம், மரியாதை அப்பட்டமாய் தெரிந்தது.
அதைவிட முகத்தில், ‘அச்சம், கப்பல் நங்கூரம் மாதிரி’ நிரந்தமாய் போடப்பட்டு இருந்தது.
அந்தக் காரில் வந்தவர்களின் தலைவன் போலிருந்தவன், கமல் நடித்த நாயகன் படத்தில் வரும், ‘பிரதீப் சக்தி’ மாதிரியே உருவ அமைப்பில் இருந்தான்.
அவன் பெயர் ஜெவியர்.
சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு இருந்தவனின் முகத்தில் அடக்கப்பட்ட கோபம் ஜொலித்தது.
அவன் பார்வை விலகி நின்று கொண்டிருந்த நால்வரில், அந்தக் காரை ஒட்டி வந்தவனின் மீது நிலைக்க, மீதம் இருந்தவர்கள் அந்தக் காரை ஒட்டியவனை விட்டு, ஒரு அடிபின் வைத்தார்கள்.
ஜெவியர் ஆள் காட்டி விரலைத் தூக்கி, கார் ஓட்டியை தன் அருகில் வரும் படி சைகை செய்ய, மிடறு விழுங்கியவனாய், கண்களில் மரண பயத்தை தேக்கி, ‘அடி பிரதசனம்’ செய்வது போல் மெல்ல நடந்தான்.
ரோடு என்று கூடப் பாராமல், கார் ஒட்டி வந்தவனை இழுத்து வைத்து, நாலு அரை கொடுத்தான் ஜெவியர்.
ஜெவியர் கொடுத்த அறையின் வீச்சுக்கு, டிரைவரின் மூன்று பற்கள் வெளியே தெறித்து விழுந்தது. ஓங்கி அடிக்காமலேயே, நாலு டன் வெயிட் இருக்கும் போலிருந்தது அந்த அடி.
ஜெவியர் அடித்த அடிக்குக் கண்கள் இருட்டி கொண்டு வர, வாய் வெத்திலை போட்டது போல், பற்கள் தெரித்ததால், கொட்டும் ரத்தத்தில் சிவந்து விட, தரையில் சுருண்டு விழுந்தான் காரை ஒட்டி வந்தவன்.
‘இனி அவன் கண் விழிப்பானா?…
காது சரியாய் கேட்குமா?….
உயிர் இருக்கா?… போய்டுச்சா?…’ என்ற கேள்விகள் தான், தூரத்தில் நின்ற மற்றவர்களின் எண்ணமாய் இருந்தது.
கோபம் அப்பொழுதும் அடங்காமல், ஜெவியர் நிற்க, ஜெவியர் தம்பி, தாமஸ் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, ஜெவியரிடம் சென்றவன்,
“அண்ணே!…. தெரிஞ்சு யாருமே பண்ணலை அண்ணே!… போலீஸ் செக்கிங்கில் மாட்டிட்டோம்…. அந்தக் கார் பின்னாடியே தானே வந்தோம்… மேடம் தன் டாக்டர் id காட்டியதும் போலீஸ் அனுப்பிட்டாங்க…
நம்மளை பார்த்தா தான், ரௌடின்னு எழுதி ஒட்டி வச்சி இருக்கே!… அதான் இறக்கி சோதனை செய்தாங்க… அந்தச் சமயத்தில் மேடம் கார் மிஸ் பண்ணிட்டோம்.” என்றான் மெதுவாக.
அடுத்த நொடி அவன் கன்னத்திலும், அரை விழ, அவன் தரையில் போய்ச் சுருண்டு விழுந்தான். ரோட்டில் போவோர் வருவோர் எல்லாம், அவசர அவசரமாய் அவர்கள் இருந்த இடத்தை விட்டுச் சென்றால் போதும் என்று விலகிப் போனார்கள்.
“இதைத் தைரியமாய் விக்ரம்ஜி கிட்டே, சொல்லத் தில்லு இருக்கா உனக்கு?… ‘போலீஸ் காரில் வரவங்களை செக் செய்யறாங்க என்று தூரத்தில் தெரியும் போதே, நம்மில் ஒருவன் இறங்கி நடந்து முன்னால் சென்று, எந்தப் பக்கம் கார் போகுதுன்னு பார்க்கணும் என்ற அறிவு துளி கூடவா கிடையாதுன்னு?…’ வாய்க்குள் துப்பாக்கி வச்சி கேப்பார்.
‘அப்படி கார் திரும்பற பக்கம், நம்ம ஆளுங்க வேறு யாராவது இருந்தா, உடனே கார் நம்பரை சொல்லிப் பின்னாடி போகச் சொல்லக் கற்று கொடுக்கணுமா?…’ என்று ஆசிட் பராலில்/acid barrel நம்மை உள்ளே தள்ளும்போது கேப்பார்.
அந்தப் பக்கம் எவனாவது பைக்கில் வந்தால், அவனை அடிச்சு கீழே தள்ளிட்டு, அவன் பைக்கை திருடிக் கொண்டு பின்னால் போக முடியாதா?….’ என்று கட்டையை வைத்து விளாசும்போது கேப்பார்.
ஆனா, அவர் கேக்கும் கேள்விக்குப் பதில் சொல்ல, உன் உடம்பில் தான் உயிர் இருக்காது. என்ன போய்த் தைரியமாய் விக்ரம்ஜி கிட்டே பேசறியா?… அது தான் உனக்குக் கடைசி நாளாய் இருக்கும்.
கூடவே இருக்கணும் என்பது தானே கட்டளை… சூரியன் மறைந்தாலும், மறையாத நிழல் போல், மேடமை அவங்களே அறியாமல் பின் தொடர்வது தான் நம் பணி… இப்படி நொண்டிச் சாக்கு சொல்றது இல்லை.
இப்போ மேடமை தொலைச்சிட்டோம் என்று விக்ரம்ஜிக்கு சொல்ல உனக்குத் துணிவு இருக்கா?… உயிரோடு எரிச்சுடுவார். தெரியும் தானே!… ஐயோ!…. இப்போ போன் செய்வாரே!… என்ன சொல்வேன்…” என்று தலையில் கைவைத்து நின்றான் ஜேவியர்.
ஜெவியரின் குரலில் அவன் சொன்ன அனைத்தும் நடப்பது போன்ற எண்ணம் தோன்ற, மிடறு விழுங்கினான். அவன் மட்டுமல்ல ஜெவியர் சொன்னதை கற்பனையில் நினைத்துப் பார்த்த மற்றவர்களுக்கு அவர்களின் மரணம் அவர்கள் கண் முன்னே தெரிய, பயத்தில் உறைந்து நின்றார்கள்
ஜெவியரே ஒரு அரக்கன். அந்த அரக்கனே, ‘விக்ரம்ஜி!…’ என்று அழைப்பவனுக்கு, அந்த அளவிற்கு பயப்படுகிறான் என்றால், அந்த விக்ரம், எத்தனை பெரிய ராட்சஷனாய் இருக்க வேண்டும்!…
கார்மீது சாய்ந்து நின்ற ஜெவியர், தன் தலையை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டான்.அவர்கள் சம்யுக்தா அறியாமல், அவளுக்குப் பின்னால் வரும் அவளின் பாதுக்காப்பு படை.
சம்யுக்தாவை வெறும் ஐந்து, பத்து கண் பார்வையிலிருந்து தொலைத்ததற்கே , அவர்களை எரிக்க, துப்பாக்கியை வாய்க்குள் சொருக, ஆசிட் பாராலில் முக்கி எடுக்க ஒருவன் இருக்கிறான்.
இது வெறும் பாதுக்காப்பு ஏற்பாடு தானா?… இல்லை, ‘விக்ரம்’ என்று அழைக்கப்பட்டவனுக்கு, சம்யுக்தாவின் மேல் இருக்கும் ஈடுபாட்டின் விளைவா?… வெறும் ஈடுபாடு மட்டும் தானா இல்லை அதையும் தாண்டிய ஒன்றா?
கண் பார்வையிலிருந்து சில பல வினாடிகள் சம்யுக்தா மறைந்ததற்கே இப்படியொரு தண்டனை என்றால், என்னும்போது, சம்யுக்தாவின் காதல், இந்தத் திருமணம் தெரிய வந்தால்!….
ஈஸ்வர் என்ற ஒருவன் இல்லாமல் போவதற்கும், காலம் முழுக்க சம்யு இனி ஓடிக் கொண்டே இருக்க போவதற்கும் விதி ஆவண செய்து கொண்டிருந்தது.
இரு பெரும் அரக்க கூட்டம் மோதும்போது, நடுவே சிக்கி கொள்ளும் இந்தப் புள்ளிமானின் உயிர் நிலைக்குமா?… நன்மைக்கும், தீமைக்கும் நடுவே நடக்கும் போரானது, ஆதி காலம் முதற்கொண்டே நடப்பது தான் என்றாலும், இன்றைய நவீன உலகில் எது நன்மை, எது தீமை என்று வரையறுப்பது என்பது முடியாத காரியம். முள்ளை முள்ளால் தான் எடுக்க முடியும். துப்பாக்கிக்குத் துப்பாக்கியே பதில் சொல்ல முடியும். அப்படியொரு சூழ்நிலையை நோக்கித் தான் சம்யுக்தாவின் பயணம் ஆரம்பமாகி இருந்தது ‘ என்ற உண்மையை அறிந்த விதி, மௌனமாய் நடப்பதற்கு சாட்சியாய் மட்டுமே இருந்தது.
நிழல் உலகம், சம்யுக்தாவை உயிரோடு விழுங்கத், தன் லட்சம் கரங்களால், அவளைச் சுற்றி வளைக்க ஆவண செய்து கொண்டிருந்தது. இந்த நிஜ ரத்தம் ஓடும், யுத்த களத்தில் அடுத்த பலி யாருடையது?
ஜெவியர் பயந்தது போலவே, அவன் மொபைல் மரண சங்கை ஊத ஆரம்பித்தது. போன் எடுத்து, டிஸ்பிலே பார்த்தவன், அதில் இருந்த காலர் ஐ.டி , ‘விக்ரம்ஜி காலிங்’ என்று புகைப்படத்துடன் டிஸ்பிலே ஆக, ஜெவியருக்கு வியர்த்துக் கொட்டியது.
மிடறு விழுங்கியவன், அழைப்பை ஏற்க,
“யுக்தா எங்கே?…” முதல் கேள்வியே, பீரங்கி குண்டுபோல் முழங்கியது.
“ஜி!… ஜி!… மேடம் ஷாப்பிங்க்ல இருக்காங்க ஜி…. கூடவே தான் இருக்கோம் ஜி…” என்று தந்தி அடித்தான்.
“ஓஹோ!… எனக்குத் தெரியாம முகப்பேரில் உள்ள அந்த xxxx ஸ்கூல் ஜங்க்சன் அருகே, யாரு புதிதாய் ஷாப்பிங் மால் கட்டியது ஜெவியர்?….
நீங்க ரோடு ஓரத்தில் நிற்கும்போது, யுக்தா என்ன ரோட்டின் நடுவே, அத்தனை ட்ராபிக்கில் தான் ஷாப்பிங் செய்யறாளா என்ன?… எல்லோரும் கடைக்குள் தானே, ஷாப்பிங் செய்வாங்க ஜெவியர்!… நடு ரோட்டில் கூடச் செய்ய முடியுமா என்ன?…” என்று கேட்டவனின் குரலில், நக்கல் டன் கணக்கில் வழிந்தது.
“ஜி!… ஜி!…” என்று வெளிப்படையாகவே, நடுங்க ஆரம்பித்தான் ஜெவியர்.
விக்ரம் இருப்பது வெளிநாட்டில், இவர்கள் சம்யுக்தாவை, போலீஸ் கெடுபிடியால், தங்கள் கண் பார்வையிலிருந்து தொலைத்துவிட்டார்கள் என்று தெரிந்தது என்றால், தொலைத்து விடுவான் என்பதால், அப்போதைக்கு சமாளிப்பது போல், வாய்க்கு வந்த பொய்யை அவிழ்த்து விட்டிருந்தான் ஜெவியர், அந்த விக்ரம் எமகாதகன் என்பதை மறந்து….
விளைவு பொறியில் சிக்கிய எலியாய், பதற ஆரம்பித்தான்.
நேரில் நின்று நடப்பதை பார்ப்பது போல், விக்ரம் வெளிநாட்டிலிருந்து சொல்ல, சென்னையில் முகப்பேரில் ஜெவியர் நடுங்கி கொண்டு இருந்தான்.
‘இவர் வெளிநாட்டில் தானே இருந்தார்!…. இங்கே இருந்து நடப்பதை பார்ப்பது போல் சொல்லிட்டு இருக்கார்…’ என்று உள்ளுக்குள் உதற ஆரம்பித்தது.
“என்ன ஜெவியர்!…. வாயில் இருந்து பொய் சரளமாய் வருது… பொய் பேசுவது எப்படி என்று கத்துக்க, எங்காவது டியூசன் போறியா என்ன?… ரொம்ப ரொம்ப தப்பாச்சே!… இன்னைக்கு பொய்… நாளைக்கு என்ன!.. கொலை செய்ய ட்ரைனிங் எடுக்கப் போறியா?” என்றவனின் கேள்வியில், ஜெவியர் இதயம், ஒரு நொடி நின்ற பிறகே துடித்தது.
“ஜி!… ஜி!… மேடம் மிஸ் செய்துட்டோம் ஜி… நீங்க ஏதாவது செய்துடுவீங்க என்று… உயிர் பயத்தில் …” என்று தந்தி அடித்தான்.
“அப்போ நீ, இனி யூஸ் இல்லையே ஜெவியர்!…” என்றவனின் வார்த்தையில்,
“ஜி!…” உட்சபட்சமாய் அலறினான் ஜெவியர்.
“நம்ம வாழ்க்கையில், உயிர் பயம் என்ற பேச்சுக்கே இடம் இல்லையே!… உயிர்மேல் பயம் இருக்கிறவன், எதுக்காக இங்கே இருக்கே?…. நாளைக்கு வேறு யாராவது, உயிர் பயம் காட்டினால், எங்களை அழிக்கத் தயங்க மாட்டே அதானே!… போற போக்கே சரியில்லையே!… அங்கே வரணும் போலிருக்கே!…
உங்களை நம்பி, அங்கே ஆளாளுக்கு வேலை கொடுத்துட்டு, அதைச் செய்யுங்கடான்னு விட்டுட்டு வெளிநாட்டிற்கு வந்தால்… ஒருத்தன் என்ன என்றால், ஒட்டுமொத்த தமிழக காவல்துறை பின்னாடி, பேடி மாதிரி ஒளிஞ்சுட்டு இருக்கான்.
நேத்து இரவு மட்டும், முன்னூறு கோடி காலி… அந்தத் தேஜ், ஹோமம் வளர்க்கும் வரை, அவன் பூப்பறிச்சுட்டு இருந்திருக்கான். பணத்திற்கு பணமும் போச்சு…பொருளும் போச்சு…
எவ்வளவு பெரிய தேனீ கூட்டிற்குள் அந்த தேஜ் கல் எரிந்து இருக்கிறான் தெரியுமா?… அதுவும் ‘பாய்’ விஷ தேனீ. சில பல மாதங்களில் கோடிக்கணக்கில் லாஸ்… அதைக் கூடச் சொல்ல வேண்டும் என்று அந்த xxx பரணிக்கு தெரியலை. இங்கே நாங்க பிசியா இருந்ததில் தமிழ்நாடு பக்கம் எங்க கவனத்தை வைக்கலை.
எத்தனை தடவை வார்னிங் கொடுத்து இருக்கோம்… எப்பொழுதுமே எதிராளியை குறைச்சி எடை போடக் கூடாதுன்னு…எவனாவது கேக்கறீங்களா?… பாய் ஆளுங்க கிட்டேயிருந்து போன் வருது…என்ன கழட்டிட்டு இருக்கீங்க என்று… ஒரு மணி நேரத்திற்கு பச்சை பச்சையாய் திட்டறானுங்க.
உங்களையெல்லாம் நம்பி ஒரு ஆணியும் புடுங்க முடியாது. நீ என்னவென்றால், உனக்குக் கொடுத்த ஒரே வேலை, யுக்தா பின்னாடி, அவளுக்கே தெரியாமல், அவளைப் பின் தொடரணும் என்பது மட்டும் தான்.
மூச்சு விடத் தெரியுது இல்லை… அந்த மூச்சு இருக்கணும் என்றால், கொடுக்கும் வேலையை ஒழுங்கா செய்யணும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லையென்றால், உனக்கெல்லாம் எதுக்கு ஒரு இதயம் துடிச்சுட்டு இருக்கு ஜெவியர்?.
இருக்கும் கோபத்திற்கு, நீ மட்டும் எதிரே இருந்தேன்னு வச்சுக்கோ, துடிக்கிற அந்த இதயத்தை, அப்படியே பிடுங்கி எடுத்து, உன் கையில் கொடுத்து, பத்திரமாய் வைச்சுக்கோன்னு சொல்லுவேன்… உன் இதயத்தை, உன் கையில் பார்க்க ஆசையா ஜெவியர்?…” என்றான் விக்ரம் வெகு நிதானமாக.
“ஜி!… ஜி!… மன்னிச்சுடுங்கஜி!… தெரியாம…. ஒரு சான்ஸ் கொடுங்க ஜி…” என்று அவன் கெஞ்ச, சற்று நேரம் எதிர் பக்கம் இருந்து, எந்தச் சத்தமும் இல்லை.
ஜி!…” என்று அழாத குறையாய், ஜெவியர் அழைக்க,
“யுக்தா முகப்பேர் சந்தன கோபால கிருஷ்ணர் கோயிலில் இருக்கா… முகப்பேரின் ஒரு மூலை… அவ இருப்பது இன்னொரு மூலை… நீங்கப் போய்ச் சேரும் வரை யுக்தாவிற்கு எதுவும் ஆகக் கூடாதுன்னு வேண்டிக்கோங்கோ… அப்படி ஏதாவது ஆகி இருந்தா… அது தான் நீங்கச் சுவாசிப்பது கடைசியாய் இருக்கும்.
போலீஸ் கிட்டே சிக்கி கொள்ளாமல், நாலு காரராய் எடுத்துப் பிரிந்து போங்க. போலீஸ் கெடுபிடி இருக்கும்போது தான், மாரியம்மன் கோயிலுக்குக் கூழ் ஊத்த போறவனுங்க மாதிரி, கும்பலா ஒரே காரில் போவீங்களாடா?… அறிவே கிடையாதா?…” என்றான் விக்ரம்.
‘இங்கே இருக்கும் நமக்கே, மேடம் எங்கே, எந்தப் பக்கம் போனாங்கன்னு தெரிலை… வெளிநாட்டில் இருப்பவர், அங்கிருந்தே எப்படி மேடம் இருக்கும் இடத்தைச் சொல்றார்?…’ என்று மண்டை காய்ந்து போய் நின்றான் ஜெவியர்.
“ஹ்ம்ம்!… வெத்திலையில் மைப்போட்டுப் பார்த்தேன்…” என்றான் விக்ரம், அந்தப் பக்கம் இருந்து.
“ஜி!…” என்றவன் திகைத்து நின்றான்.
‘என்ன இவருக்கு, மாய மந்திரம் எல்லாம் தெரியுமா என்ன?… இங்கே நினைப்பதை கூட அங்கிருந்தே சொல்றார்.’
“டேய்!… ரோட்டில் நின்னுட்டு, கனவு கண்டுட்டு, எனக்குக் கோயில் எல்லாம் பிறகு கட்டு… இப்போ யுக்தா பாதுகாப்பிற்கு செல்… ஜெவியர்!… நிலைமை சரியில்லை… ஊரே எப்போ வேண்டும் என்றாலும் பத்திட்டு எரியும்… யுக்தாவுக்கு எதுவும் ஆகக் கூடாது… நீ எவன் உயிரை எடுப்பியோ, எவனைக் கொல்வியோ எனக்குத் தெரியாது…
யுக்தா மேல் ஒரு கீறல் விழுந்தா கூட உன்னோடு சேர்த்து, உன் கூட இருபவன்களையும், உங்க எல்லோர் குடும்பத்தையும் கொளுத்திடுவேன்… அந்த ஏரியாவில் இருக்கும் நம்ம ஆளுங்க கிட்டே சொல்லிட்டேன்… கோயில் அருகே, நீங்கப் போகும்போது, உங்களுக்குத் தேவையான ஆயுதம் வந்து சேரும்…
தேவையென்றால் மட்டுமே சம்யு அருகே போங்க… இல்லையென்றால் வழக்கம்போல் தூரமாகவே இருக்கணும்… போ…” என்றவன் அந்தப் பக்கம் அழைப்பைத் துண்டிக்க, இந்தப் பக்கம், அடுத்த நொடி காரில் பாய்ந்து ஏறினான் ஜெவியர்.
சோதனையில் ஈடுபட்டு இருக்கும் காவல் துறைக்கு, சந்தேகம் வரக்கூடாதே என்று மூன்று குழுவாய் அவர்கள் பிரிந்து, சம்யுவை நோக்கி வந்து கொண்டு இருந்தார்கள்.
தன்னை சுற்றி இருந்த வளையத்தை அறியாத சம்யுக்தா, தன்னை தேடி, ‘விக்ரம்’ என்று அழைக்கப்பட்டவனின் ஆட்கள், நாலா பக்கமும் பைத்தியம் மாதிரி, அலைந்து கொண்டு இருக்கிறார்கள் என்ற விவரம் அறியாதவளாய், கோயிலில் தன் திருமணத்திற்காகத் தயாராகி நின்றாள்.
‘தான் ஒரு கூண்டு கிளி’ என்ற விவரம் அறியாமல், ஈஸ்வருக்காகக் காத்து நின்றவள், நேற்று இரவிலிருந்து சென்னை, தன் இயல்பான வாழ்க்கை முறையை இழந்து நிற்பதை கண்டு எரிச்சல்பட்டுக் கொண்டிருந்தாள்.
இவள் வாழ்க்கையே, அந்தரத்தில் ஊசல் ஆடிக் கொண்டு இருக்கும்போது, தமிழகத்தில் அன்றைய காலைப் பொழுதுக்கான சூழ்நிலைபற்றி யோசித்து,கடுப்பாகி இருந்தவளின் வருங்காலம், கண் முன்னே விரிய விதி, தன்னை தானே நொந்து கொண்டது.
தன் எண்ணத்தில் உழன்று கொண்டிருந்த சம்யுக்தாவை, கலைத்தது மணியின் குரல்.
“அந்தப் பரணி சென்னைக்காரன் தான். ‘லயன்’ என்பது அரசாங்கமோ, பொது மக்களோ இவனுக்குக் கொடுத்த பட்டம் எல்லாம் இல்லை… அவனுக்கு அவனே வைத்துக் கொண்டது. அதுக்கு வேற பட்டம் அளிப்பு விழா என்று கொண்டாட, மக்கள் கிட்டே இருந்து பணத்தை வசூலித்த உயர்ந்த உள்ளம் கொண்டவன்.”
என்றார் மணி கடுப்புடன்.
“அட கெரகம் பிடிச்சவனே… இப்படி கூடவா அல்பத்தனமாய் இருப்பாங்க. மத்தவங்க காசில் அது என்ன பட்டம் கொடுத்துக் கொள்வது? மதிப்பு, மரியாதை எல்லாம் மத்தவங்க தானாய் கொடுக்கணும். இப்படி காசு கொடுத்துத் தானா வாங்குவாங்க?” என்றாள் ஹேமா கடுப்புடன்.
“இவனுங்களை ஆளுங்க இதையும் செய்வாங்க. இதுக்கு மேலேயும் போவாங்க ஹேமா. இதெல்லாம் பண விளையாட்டு. எங்களுக்கும் கூட ஆளுங்க இருக்காங்க என்று பலத்தை காட்டுவது. பைரவா படத்துல அந்தக் கசாப்பு கடைக்காரன் எப்படி, ‘கல்வி தந்தை, கல்வி வள்ளல்’ என்று தனக்கு தானே ஸெல்ப் டப்பா அடிச்சுப்பானோ அப்படி தான் இதெல்லாம்.
வாரி வாரிக் கொடுப்பதில் கர்ணணுக்கு இணையில்லை என்று சொல்வார்கள்… அதற்கு எதிர்பதமாய் மக்களிடமிருந்து, பிடுங்கி கொள்வதில் அரசியல்வாதிகளையும், அரசாங்க அதிகாரிகளையும் மிஞ்சும் அளவுக்கு ஒருத்தன் இருக்கிறான் என்றால் அது இந்தப் பரணி தான்.
ரொம்ப நல்லவன்… எந்த அளவுக்கு என்றால் அவனுக்குப் பிடித்தது, நம்ம வீட்டில் எது இருந்தாலும், அதை வீடு புகுந்து தூக்கும் அளவிற்கு… அது பெண்ணோ, பொருளோ எதுவாய் இருந்தாலும் அவன் ஆசைப்பட்டது அவனுக்குக் கிடைக்க வேண்டும்.
ஆரம்பத்தில் சின்ன சின்ன அடிதடி, கட்டப் பஞ்சாயத்து எல்லாம் செய்துட்டு இருந்தவன். சட்டென்று, சென்னை துறைமுகத்தைத் தன் கைவசம் கொண்டு வந்துட்டான்.அதற்குப் பணம் முதலீடு எங்கிருந்து வந்தது என்றெல்லாம் யாருக்கும் தெரியாது. பரணியை பினாமியாக வைத்துப் பின்னால் இருந்து யார் ஆட்டுவிக்கிறார்கள் என்பதெல்லாம் மூடு மந்திரம்.
எந்தச் சரக்கு உள்ளே வருவது, போவதுஎன்றாலும் இவன் அனுமதி வேண்டும் என்ற நிலை.
அதுமட்டுமில்லை, ‘logistics services’ எல்லாமே இவன் கையில். logistics service/ தளவாடங்களின் மேலாண்மை பற்றிக் கேள்விபட்டு இருக்கியா சம்யுக்தா?” என்றவர், சம்யு, ‘இல்லை’ என்ற விதமாய் தலை அசைக்க,
“மிகவும் லாபம் ஈட்டும் தொழில். ஏற்றுமதி, இறக்குமதி ஆகும் பொருட்கள், அதன் இலக்கை அடைய இவை தான் உதவும்.
உள்வரும் போக்குவரத்து, வெளிச்செல்லும் போக்குவரத்து, வணிக கப்பல்கள் பராமரிப்பு, பொருள் சேமிப்பு கிடங்குகள், குளிர் சாதன ஸ்டோரேஜ் யூனிட்கள், பொருட்கள் கையாளுதல், ஆர்டர்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யத் தேவைப்படும் கூலிகளை நியமித்தல், சரக்கு மேலாண்மை, கூட்ஸ் லாரிகள் என்று அடங்கும்.
இந்தத் தொழில் ஸ்தம்பித்தால், சென்னைக்குள் இருந்து பொருள் ஏற்றுமதியோ, இறக்குமதியோ ஆகவே முடியாது. மக்களின் வாழ்வே ஸ்தம்பித்து விடும் அபாயம், தொழில்கள் முடங்கும் அபாயம் கூட இருக்கிறது.
இது தவிர கட்டப்பஞ்சாயத்து, பணத்துக்காக ஆள் கடத்தல், ‘சுப்பரி கொலைகள்/supari murders’ என்று அடைமொழி வைத்து அழைக்கப்படும், ‘கான்ட்ராக்ட் கில்லிங்/contract murders’, சூதாட்டம், தங்க , வைரம் கடத்தல் எல்லாத்தையும் செய்பவன்.
போன வாரம், அந்த xxxxx யூனிவர்சிட்டி வைஸ் சான்சிலர்/vice chancellor கொல்லப்பட்டதற்கு, இவனுங்க தான் காரணம்… இந்தக் கொலைகளுக்குக் கோடிக்கணக்கில் பணம் கை மாறுகிறது.
ரொம்ப மோசமானவனுங்க. இவன் பின்னாடி யார் இருக்காங்க என்று யாருக்கும் தெரியாது. ஆனால், இவன் தலைவனுக்கு நாட்டின் மிக மோசமான மற்றும் சக்திவாய்ந்த குற்றவியல் அமைப்பு, ‘தி மாஃபியா ஆப் இந்தியா’ என்ற கூட்டத்தோடு தொடர்பு உண்டுன்னு பேச்சு இருக்கு… அந்தக் கூட்டம் தான், xxx நடந்த குண்டு வெடிப்புக்குக் காரணமாம்.” என்றார் மணி.
“என்ன அப்பா இது!… ரொம்ப சினிமா, கதை எல்லாம் கரைச்சி குடிச்சா மாதிரி பேசறீங்க. … என்னவோ நாயகன், பிசினெஸ்மேன், நாயக், பில்லா, டான் படத்தை ஒட்டிக் காண்பிச்சுட்டு இருப்பது போல் தான் எனக்குத் தோணுது. இதெல்லாம் சினிமா, கதைகளில் ஹைப் செய்யும் விஷயம் அப்பா. படைப்பாளர்களின் கற்பனை.” என்றாள் சம்யுக்தா சிரிப்புடன்.
ஹேமாவிற்கும் அதே எண்ணம் என்பதால், சம்யுவின் கிண்டலை அவள் முகம் பிரதிபலித்தது.
“நிலைமையோட சீரியஸ்னெஸ் தெரியமா விளையாடாதீங்க பொண்ணுங்களா… ஒரு வாரமாய், சென்னையில் அதிக போலீஸ் நடமாட்டம் இருந்ததை நீங்கப் பார்த்தீங்களா?” என்றார் மணி.
அவர் கேட்டவுடன் தான், வழக்கத்தைவிட அதிக போலீஸ் கண்ணில் தென்பட்டதையும், அதிகளவு போலீஸ் வாகனம் பேட்ரோல்/patrol ஈடுபட்டு இருந்ததையும், நகரின் முக்கிய இடங்களில், ‘போலீஸ் ட்ரைனிங் ட்ரில்’ என்ற பெயரில் போலீஸ் அணிவகுப்பு காலை, மாலை நடந்து கொண்டிருப்பது அவர்கள் இருவருக்கும் நினைவுக்கு வந்தது.
“அட அமாமில்லை…. கொஞ்சம் பரபரப்பா தான் இருக்கு…” என்றாள் ஹேமா யோசனையுடன்.
“ஹ்ம்ம்… நம்ம ஹாஸ்பிடல் டீன் கிட்டே கூட, ஏதோ வந்து பேசினாங்க இல்லை…” என்றாள் சம்யு.
“ஹ்ம்ம்… கரெக்ட் ஹாஸ்பிடல் சர்குலர் கூட, அடி தடி, கத்தி குத்து, அரிவாள் வெட்டு, துப்பாக்கி குண்டு பாய்ந்த என்று வரும் கேஸ் பற்றியெல்லாம் உடனடியாகப் போலீசுக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று சொல்லியிருந்தாங்க. ” என்றாள் ஹேமா.
“அதே தான்… நீங்க இருக்கும் உலகம் வேறுமா.. நீங்க நல்லதை மட்டுமே பார்த்து வளர்ந்த பொண்ணுங்க. ஆனால் பரபரப்பான, இந்த ‘நகர வாழ்க்கைக்குள், வெளி தெரியாத, நரகம் ஒன்று உறங்காமல் இயங்கி கொண்டு இருக்கிறது.
உங்க மருத்துவ தொழிலில், மக்கள் எந்த அளவுக்கு வேண்டும் என்றாலும் தரம் இறங்க கூடியவர்கள் என்ற நிதர்சனம், உங்களின் கண் முன்னே இருக்கும் போதே, இப்படி கிண்டல் அடித்தால் எப்படிம்மா?
இப்படி எத்தனை கேஸ்களுக்கு, நீங்களே டிரீட்மென்ட் கொடுத்து இருப்பீங்க… யோசிங்க. நொடி நேர கோபத்தில், ஒருத்தரை கொள்வதற்கும், கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் என்பதை தொழிலாகவே செய்து கொண்டு இருப்பதற்கும், நிறைய வித்தியாசம் உண்டு மா.
நான் சொல்வதெல்லாம் கதை மாதிரி இருக்கலாம் . உன்னைப் போல் நானும் நேத்து வரை இப்படி தான் நினைச்சிட்டு இருந்தேன். நேத்து நைட், என் மச்சான் எங்க வீட்டில் தான் சாப்பிட வந்தான். அவன் இன்ஸ்பெக்டர். கிரைம் பிரான்ச்… வீட்டுக்குக் கூட அவனால் போக முடியலை.
சரி, அவ்வளவு தூரம் தான் போக முடியாது… எங்க வீட்டில் வந்து, வயிறார சாப்பிட்டு, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு போகட்டுமே என்று கூப்பிட்டோம். ரொம்ப டென்ஷனாய் இருந்தான். நான் வாயை வச்சிட்டு சும்மா இருக்காம, ‘என்னவோ தேஜ், பரணி, தாதா, டான் என்று புலம்பிட்டு இருக்கே!… இதையெல்லாம் நாங்க பில்லா, நாயகனிலேயே பார்த்துட்டோம்…’ என்று கலாய்ச்சேன்.
ரெண்டு மணி நேரத்திற்கு, உட்கார வைத்துக் கிளாஸ் எடுத்தான் பாருங்க… நொந்து நூடுல்ஸ் ஆகிட்டேன். இங்கே சொல்லப்படும் தாதா, டான், ரௌடி எல்லாம் நிஜம். கதை, சினிமாவில் காட்டுவது எல்லாம் மிகைப்படுத்தப்பட்ட பதிவு அவ்வளவு தான்.
அப்போ தான் புரிந்தது படத்தில், கதைகளில் வருவது எல்லாம் ரொம்ப கம்மி என்று. ‘தாதா, டான், ரவுடி, கேங்ஸ்டர்’ என்றால் ஒரு அழகான ஹீரோ, கோட் சூட் போட்டுட்டு, கருப்பு கண்ணாடி, ஜெல் தடவி படிய வாரிய தலை, பிளாஷ்பாக் இருக்கும், துப்பாக்கியுடன் ஸ்டைலா நிற்பான்.
பின்னாடி தீம் மியூசிக் உடன், நாலு மலை மாடுங்க வரும்… எதிரி யாராவது வந்தால், டப் டப்புன்னு சுட்டுட்டு, ஒரு குண்டு கூட மேல் படாமல், சூப்பர் மேன் மாதிரி, பறந்து பறந்து கைக்கால் வெட்டுவது, பன்ச் டயலொக் எல்லாம் விடுவதில்லை.
நாலு அழகான வெளிநாட்டு பெண்கள் கூடவே இருப்பாங்க… நாலு ஐட்டம் சாங்… நாலு தடவை சுட்டுட்டு, ஓடுறது எல்லாம் இல்லை… நிஜ நிழல் உலகம் வேறு. இங்கே இருப்பவனுங்க பார்க்கச் சினிமா ஹீரோவை விட அழகாய், கெத்தாய், இன்னும் சொல்லப் போனால், நம் அண்ணா, அப்பா மாதிரி பாவப்பட்ட முகத்தை வச்சிட்டு இருக்காங்க.
முகத்தில் அக்மார்க் அப்பாவி, பச்சை மண்ணு என்று லேபிள் இருக்கு. இன்னைக்கும் இப்படிபட்ட தாதாகள், ரௌடிகள் இருந்துட்டு தான் இருக்காங்க.
அவங்க கொலை செய்தாலோ, என்கவுன்ட்டர் செய்யப்பட்டாலோ, மட்டும் தான், ‘ஓஹ்!… இப்படி ஒரு ஆள் இருந்தானா?…’ என்று கேட்டுப்போம். அவனுங்க உயிரோடு இருக்கும் வரை, அவங்க பாதையும், நம்ம வாழ்க்கையும் ஒரே கோட்டில், சந்திக்காத வரை தான், நம்ம வாழ்க்கை நம்ம கையில்…
அவனுங்க வளையத்திற்குள் போய்ட்டோம் அதுக்கு பிறகு, அவனுங்க கிட்டே சிக்கியவர்கள் வாழ்க்கை, ‘கூண்டு பறவை’ போன்றது தான். வாழ்க்கை மட்டுமல்ல, நம் மரணம் கூட அவனுங்க மனது வைத்தால் தான், நமக்குக் கிடைக்கும்.” என்றார் மணி.
“நம்ம சென்னையில் இப்படி ஆளுங்க இருக்காங்களா என்ன?… நம்பவே முடியவில்லையே!… அமைதி பூங்கா என்று தானே தமிழகத்திற்கு பெயர்?…” என்றாள் சம்யுக்தா.
“எல்லா ஊரிலும், எல்லா இடத்திலும் மனுசங்க தான் சம்யு இருப்பாங்க. அதில் சிலருக்கு பேராசை, வெறி, பதவி மோகம் இருக்க தான் செய்கிறது. உலகத்தில் மனுஷனை பாவம் செய்யத் தூண்டுபவை பொன்னாசை, பெண்ணாசை, மண்ணாசை… இந்த மூன்றுக்காக அந்தக் காலம் தொட்டு இந்தக் காலம்வரை, உலக நாடுகளே அடித்துக் கொண்டு தான் இருக்கின்றன.
இதன் மீது ஆசை இருக்கும் வரை யாருக்கும் அதனால் எந்தப் பிரச்னையும் வருதில்லை… இதுவே பேராசையாக மாறும்போது, இன்னொரு உயிரை அழிக்கத் தயங்குவதும் இல்லை… அரசியல்வாதிகளுக்கும், பெரும் கோடீஸ்வரர்களுக்கும், சினிமா துறைக்கும் கூட இந்த நிழல் உலகத்தோடு தொடர்பு உண்டு என்பது எல்லோருக்கும் தெரிந்தும், தெரியாத உண்மை .
2001 மற்றும் 2003க்கு இடையில், கிட்டத்தட்ட 1,000 ரவுடிகளைப் போலீஸ், டிடைன்/detain செய்து வைத்தாங்க. அதுவும் சென்னையில் அது தெரியுமா உனக்கு?
பாக்ஸர் வடிவேலு, அயோத்தி குப்பம் வீரமணி, ஆசை தம்பி, வெள்ளை ரவி, பங்க் குமார், ஆகியோர் ஒரு காலத்தில் ரௌடிகளாய் இருந்தவர்கள்.
1940-80களில் ஹாஜி மஸ்தான், வரதராஜன் முதலியார் மற்றும் கரீம் லாலா ஆகிய மூவர் தான், மும்பையை ஆண்டார்கள் என்பதெல்லாம் உண்மை சம்யு.
இதுல பனிரெண்டு பெண்கள் வேறு தாதாகளாய் இருந்திருக்கிறார்களாம்.
கூகுளை சர்ச் செய்து பாரு. ஒவ்வொரு மாநிலத்திற்கும் குறைந்தது பத்து பேர் டான்களாக இருந்ததை, இருப்பதை காட்டும். இதுல லோக்கல், நேஷனல், இன்டர்நேஷனல் லெவல் எல்லாம் இருக்காம். இவனுங்க கொன்றவனுங்க லிஸ்ட், அனுமார் வால் மாதிரி, நீளமாய் போய்ட்டு இருக்கு.ஒவ்வொருத்தன் பின்னணி, அவனுங்க கேஸ் ஹிஸட்ரி, அவங்க இன்வால்வ் ஆகி இருக்கும் தொழில்கள் எல்லாம் படிச்சி பார்த்து, தலை சுத்தி போச்சு.
ஹவாலா, வரி ஏய்ப்பு, நில அபகரிப்பு, எக்ஸ்டர்ஸான்/ extortion, கள்ள நோட்டு, பிராட், போர்ஜெரி, கள்ள கடத்தல், அரசியல் கொலைகள், ஆட்சி கவிழ்ப்பு கலவரம் செய்யக் கூலி படை என்று தனி தனி துறையே வச்சி, பில்லியன் கணக்கான, கணக்குக்கு வராத, கள்ள பணம் புழங்குது.
இது ஒட்டுமொத்த இந்திய மக்களிடம், இந்திய அரசாங்கத்திடம் உள்ள பண புழக்கத்தை விட அதிகம்.
அதனால் தான் நிழல் உலகை, ‘parallel economy/ இணையான பொருளாதாரம்’ என்கிறார்கள். (thanks to economic offences win and anti terrorist squad for the information)
இப்படி தமிழகத்திலும், இந்தியாவிலும் உள்ள நிழல் உலகின் அரக்கன் ஒருவனின் பினாமி தான் பரணி. அவன் தலைவன், இன்வோல்வ் ஆகி இருக்கும், ‘தி மாபியா ஆப் இந்தியா’ குழு.
ஒரு நாட்டில் குண்டு வெடிக்கணும் என்றாலோ, ஒன்றும் இல்லா காரணத்திற்காகக் கலவரம், ஆட்சி கவிழ்ப்பு நடக்கணும் என்றாலோ, மக்களை டைவர்ட் செய்ய வேண்டும் என்றாலோ, அதற்கு இந்தப் பணம் தான் பயன்படுத்தப்படுகிறது.
ஒரே நாளில் ஒருவனை ஆட்சிக்குக் கொண்டு வர, ஸ்டார் ஆக்குவதோ, இல்லை மொத்தமாய், அவன் அரசியலுக்கு உள்ளவே நுழையக் கூடாது என்று, அவன் இமேஜ் காலி செய்யவும் இந்தப் பணம் தான் பேசுகிறது.
நிறைய சினிமா, புத்தக பப்பிளிகேஷன், ஊடகத்துறை, கலை துறை, ரியல் எஸ்டேட் பின்னணியில் கூட, இது போன்ற நிழல் உலகத்தின் கரம் நீண்டு இருக்கும். தவறான முறையில் அதாவது போதை மருந்து, மனித விற்பனை, தீவிரவாதம், ஹவாலா போன்ற வழிகளில் வரும் கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவது இப்படி போன்ற துறைகளில் தான்.
திறமை என்பதே சுத்தமாய் இல்லாதவர்கள் எல்லாம் தலைமை பதவியில் அமர வைப்பது, அவர்களை எல்லாம், ‘தலைவனே, எழுத்தின் வைரமே, புண்ணாகே, துடைப்ப கட்டையே!..’ என்று பில்ட் அப் கொடுப்பதும் இவனுங்க தான்.
இவர்களின் கடவுள் பணம்.
மார்க்கம் லாபம்.
கொள்கை தாங்கள் மட்டும் நன்றாக வாழ்ந்தால் போதும் என்பது மட்டுமே.
ஏதோ எங்கேயோ இருக்கும் தாத்தா, ரவுடி கும்பல், கேங்ஸ்டர், மாபியா என்று தான் நினைக்கிறோம். ஆனால், இவங்க எல்லாம் நம் வாழ்க்கையில், நாமே அறியாமல் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
தங்கள் வாழ்விலும் அந்தத் தாக்கம் இனி மேல் இருக்க போகிறது என்பதை அறியாத அந்தப் பெண்கள் இருவரும், மணி தன் மொபைலில் காட்டிய தமிழகம், இந்தியாவை சேர்ந்த டான்களை பற்றி வியந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
அந்த வியப்பு கூடிய விரைவில், மரண பயமாய், உயிரைக் காக்க ஓடும் ஓட்டமாய், வாழ்நாள் கைதியாய் நான்கு சுவற்றுக்குள் இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப் படப் போகிறோம் என்ற உண்மை அந்தப் பெண்கள் இருவருக்கும் தெரிய வாய்ப்பில்லை.
ரத்த வெறி பிடித்த வல்லூறுகளின் கையில் சிக்க போகும் இந்த ரெண்டு பெண் புறாக்களின் கதி என்ன?
ஆட்டம் தொடரும்…