UYS 24

UYS 24
அத்தியாயம் 24
இருவாரங்கள் கடந்திருந்தது பிரெஷ்ஷர்ஸ் டே கொண்டாட்டம் முடிந்து.
செகண்ட் பீரியடில் போர்ட்டில் ஆசிரியர் எழுதிக் கொண்டிருப்பதை காப்பி செய்து கொண்டிருந்தனர் மூன்றாம் வருட மாணவர்கள்.
சிலர், ‘நீ இப்போ எழுது. நான் அத பாத்து எழுதிக்கறேன்.’ எனக் கூறி எழுதுவது போல பாவ்லா செய்து பேசிக் கொண்டிருக்க, மற்றவர்கள் எழுதிக் கொண்டிருந்தனர்.
பரத், சூர்யா அளவு இல்லாவிட்டாலும் நன்றாகவே படிப்பான். ஆனால் கொஞ்சம் சேட்டையும் உண்டு. அமைதியும், சேட்டையும் சேர்த்து செய்த கலவை அவன்.
அன்று ஜீவா, நந்து கல்லூரிக்கு மட்டம் போட்டிருக்க… பரத், சூர்யா இருவரும் கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருந்தனர்.
என்னதான் நால்வரும் நெருங்கிய நண்பர்கள் என்றாலும், சூர்யாவும் பரத்தும், ஜீவாவும் நந்துவும் இன்னும் குளோஸ்.
எழுதிக் கொண்டே இருந்த பரத்தின் பார்வை அடிக்கடி பக்கவாட்டிற்கு செல்ல, அனுவோ அவன் பார்வையை உணர்ந்தாலும் கண்டுக்காது கருமமே கண்ணாக எழுதிக் கொண்டிருந்தாள்.
அதில் காண்டானவனோ, “பாத்தியாடா… கண்டுக்கவே மாட்டுறா.” என தோழனிடம் மெல்லிய குரலில் புகார் படிக்க, அவனுக்கோ அவர்களின் சிறுபிள்ளைத் தனமான சண்டையில் சிரிப்புதான் வந்தது.
நான்கு நாட்களுக்கு முன் அவளிடம் போனில் பேசும்போது அவள் விளையாட்டாக எதோ சண்டை போட்டுவிட, அவன் கோபத்தில் இருந்ததால் அவளை கண்டபடி திட்டியவன் போனையும் கட் செய்துவிட்டான்.
‘எப்போவும் இப்படி சொன்னா கொஞ்சுவான். இப்போ என்ன வந்தது இவனுக்கு?’ என அனுவிற்குத் தோன்றினாலும் பொறுத்தவள்,
மீண்டும் மீண்டும் அழைக்க, அழைப்பு ஏற்கப்படாமல் போனதோடு, அவளிடமும் இரண்டு நாட்களாக கல்லூரியிலும் முகம் கொடுத்து பேசாமல் போக, அவள் மலையேறிவிட்டாள்.
எதோ டென்ஷனில் இருந்தவன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு நேற்றிலிருந்து அவள் பின் சுற்றியும் அனு கண்டு கொள்வதாக இல்லை. அதனால்தான் இந்த புலம்பல்.
இதையெல்லாம் கண்டு அந்நேர காதல் அனுபவம் இல்லாத சூர்யாவோ, “என்னடா எப்போ பாரு சண்டை போட்டுட்டு. அதும் உப்பு சப்பில்லாத காரணத்துக்கு. என்ன லவ்வோ…” என அலுத்துக் கொள்ள,
அவனை உற்றுப் பார்த்தவன், “நீ எதுக்குடா இவ்ளோ அலுத்துக்கற?” எனக் கேட்டான்.
குரலைச் செருமியவன், “இல்ல… நான் தெரியாமதான் கேக்குறேன். ரெண்டு பேரும் ரொம்ப சீனிசியரா லவ் பண்றீங்க ரைட்டா?” எனக் கேட்க,
“ஆப்கோர்ஸ்டா… சொல்லணுமா என்ன?” என்றான்.
“ம்ம்…” என்ற சூர்யாவோ, “அப்பறோம் ஏன்டா இப்படி அடிக்கடி சண்டை?” என்றான் புரியாதவனாக.
“மச்சி… லவ் பண்ணுமோது சண்டை எப்படிடா வராம இருக்கும். சண்டை வரும்போது கஷ்டமா இருந்தாலும், சமாதானமான பின்ன சரியாகிடும்டா. அதும் சண்டை இல்லாம லவ் பண்ணா போர் அடிக்கும்.” அனுபவஸ்தனாக அவன் சொல்ல,
“ஓஹோ… சண்டை இல்லாம போர் அடிக்கும். அதான் சண்டை போட்டியா? சொல்லவா அனுகிட்ட?” என புருவங்களை உயர்த்தவும்,
அவன் கைகளைப் பிடித்தவன், “அடேய்… ஏன் இப்படி? நான் என்ன பண்ண உன்ன? இதை சொன்னினா, என்ன துணி மாறி துவைச்சு காயப் போட்ருவா.” என பரிதாபமாக சொல்ல, சிரித்துவிட்டான்.
அதில் கடுப்பான பரத், “என்னைய கிண்டல் பண்றலடா, ஒருநாள்… ஞாபகம் வச்சிக்கோ… ஒருநாள் நீ லவ்வுனு ஒன்னு பண்ணின… அந்த பொண்ணு எப்போவும் உங்கிட்ட சண்டை போட, நீ அத சமாளிக்க படாத பாடு படுவ.” என சாபம் விட, சூர்யாவிற்க்கு இன்னுமே சிரிப்பு அதிகமானது.
‘நானாவது லவ்வாவது.’ என நினைத்தாலும், நொடியில் ஏனென்றே தெரியாமல் மனதில் மகா உருவம் வந்துபோக, திடுகிட்டவன் தலையை உலுக்கிக் கொண்டு,
“பெரிய ஞானி… சாபம் விடுறான் எனக்கு. அது பளிச்சிடும் பாரு! ஒழுங்கா போர்ட்ல இருக்கறத எழுதுடா வெண்ண.” எனத் திட்டியவன் எழுத ஆரம்பிக்க,
பரத் உள்ளுக்குள், ‘எனக்கு கருநாக்குடா சாபம் பலிக்காம விடாது.’ என சொல்லிக்கொண்டே எழுதுவதில் கவனம் செலுத்தினான்.
நண்பன் சாபம் அச்சுபிசிறாமல் பலிக்கப் போவது அறியாது போனானே!
அத்தனை நேரம் அவர்கள் வாயடித்ததை எழுதிக் கொண்டிருந்ததால் கவனிக்காத மேம், அதன்பிறகு பரத் எதோ சூர்யாவிடம் கரும்பலகையிலிருந்தது பற்றி சந்தேகம் கேட்கும்போது கவனித்துவிட்டார்.
“சூர்யா… கிளாஸ் நடக்கும்போது என்ன பேச்சு?உன்ன எத்தனைவாட்டி லாஸ்ட் பென்ச் போகாதனு சொல்றது. கம் டு பர்ஸ்ட் பென்ச். அவங்களோட சேர்ந்து கெட்டுப் போகாத.” எனத் திட்ட ஆரம்பிக்க, சூர்யாவும் வேறுவழியின்றி பென் நோட்டை எடுத்துக் கொண்டு எழுந்தான். இல்லாவிட்டால் இன்னுமே இருவரையும் திட்டித் தீர்த்துவிடுவார்.
கண்டான பரத்தோ, “ம்ம்… போடா நல்லவனே. பர்ஸ்ட் பெஞ்ச்ல ப்ரிட்ஜ் இருக்கு, அங்க போய் உட்காரு, கெட்டு போகாம பிரெஷ்ஷா இருப்ப.” எனக் கடுப்பாக சொல்ல, நண்பனின் பேச்சில் எழுந்த சிரிப்பை கடினப்பட்டு அடக்கியவன், கண்களால் கெஞ்சியவாரு அங்கு நகர்ந்தான்.
உடன்படிக்கும் சகாக்களிடம் வாயடிக்கும் சூர்யா, ஆசிரியரென வந்துவிட்டால் அமைதியின் ஸ்வரூபமாகிவிடுவான். நண்பர்களும் அவன் இயல்பு அதுதானென விட்டுவிடுவார்.
அங்கேச் சென்று திரும்பி திரும்பி ஏக்கமாக கடைசி பென்ச்சை பார்த்தவனைக் கண்டு தலையில் அடித்துக் கொண்ட பரத், ‘விடுடா…பாரு…’ என்பதுபோல கையசைக்கவுமே பெருமூச்சோடு எழுத ஆரம்பித்தான்.
பெல் அடிக்கவும் கடைசி பெஞ்ச்சிற்கு சூர்யா வர, கடைசியாக எல்லாரும் சென்ற பிறகு அனுவிடம் பேசவேண்டுமென சொல்ல, சூர்யாவும் அமர்ந்து கொண்டான்.
அவன் இதுபோல அவளிடம் ஓரிரு வார்த்தை பேசும்போது மூவரில் யாரும் துணையாக கிளாஸின் மூலையில் அல்லது வெளியில் இருப்பர்.
பேச்சு கேட்காத தூரத்தில் அதேசமயம் துணையாக!
இவனும் இரண்டு நிமிடங்கள் கூட பேசமாட்டான் உடனே கிளம்பிவிடுவான்.
என்னதான் காதல் என்றாலும் அதில் அவர்கள் இருவருக்குமிடையே ஒரு கண்ணியம் இருக்கும். அது சூர்யாவிற்கு மிகப் பிடிக்கும்.
எட்டி நின்று எல்லையில்லா காதல் செய்து, அளவில்லா சண்டை போடுவது அழகுதானே!
அவன் வெளியே செல்லாததை உணர்ந்தே பேச காத்திருக்கிறான் என அவளும் ஒரு தோழியுடம் மட்டும் உட்கார்ந்திருக்க, பரத் முகத்தில் ஒரு அழகிய புன்னகை வந்தது.
இதையெல்லாம் கவனித்த சூர்யாவிற்கு, நடப்பது ஒன்றுமே விளங்கவில்லைதான். ஆனால் ஏனோ அவர்கள் காதலை மனம் ரசிக்கவும் செய்தது.
அப்போது பார்த்து மகா உள்ளே வர, அதிர்ந்த பரத் சூர்யாவை திரும்பி அழுவது போல பார்த்தான்.
அவனுக்கு இருப்பதே சில நிமிடங்கள்தானே! அவன் கவலை அவனுக்கு.
“இருடா… அழுவாத. அந்த பொண்ணு உடனே கிளம்பிடும்.” எனச் சொன்னவன், அவளை ஒரு நொடி கூர்ந்து நோக்கிவிட்டு வேறுபுறம் திரும்பிக் கொண்டான்.
அவளும் அவர்கள் இருப்பதைக் கண்டு, அனுவிடம் இருவார்த்தை பேசியவள் உடனே கிளம்பிவிட்டாள்.
அதன்பிறகு சூர்யா அறையின் மூலைக்கு சென்றுவிட, அனுவுடன் இருக்கும் பெண்ணும் கடைசி பெஞ்ச் சென்றுவிட்டாள்.
அவளிடம் அப்போதும், “சாரிடி… கோச்சிக்காத. வீட்ல ஒரு பிரச்சனை, அந்த டென்ஷன் உங்கிட்ட காட்டிட்டேன்.” என மன்னிப்பு வேண்ட, அவனை புரிந்து கொண்டவள் கோபத்தை விடுத்தாலும் போனால் போகிறதென மன்னித்தது போல பிலிம் காட்டியவள்,
அவள் லஞ்ச் பாக்ஸை பரத்திடம் கொடுக்க… அவனுக்காக அவள் செய்த வெஜிடபிள் பிரியாணி இருந்தது அதில்.
அனைத்து பற்களும் தெரியும் படி சிரித்தவன், கைகளுக்கு பின் வைத்திருந்த அவன் லன்ச் பாக்ஸை கொடுக்க, அதில் அவளுக்கு பிடித்தமான பூரிக்கிழங்கு இருந்தது.
இருவரும் ஒரு புன்னகையோடு சமாதானமாகிவிட,
“வாடா… கிளம்பலாம்.” என சூர்யாவை அழைத்தவன்,
“இப்போல்லாம் பர்ஸ்ட் இயர் பொண்ணு கூட ரொம்ப பிரண்ட்டா இருக்கப் போல.” எனக் கேட்டான்.
இந்த இருவரங்களாக மகா அனுவிடம் அடிக்கடி பேசி பார்த்திருந்தான். எனவே இயல்பாக கேட்க,
“அதுவா… ஆமா… என் ஜூனியர் பிரண்ட். எல்லாம் சூர்யா உபயம்.” என்றாள் நண்பனை பார்த்து.
அவர்கள் பேசுவது கேட்டுக்கொண்டு வந்தவன், “நீ பிரண்ட் ஆகுறதுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்?” புரியாமல் கேட்க,
“நீதான என்ன அவளுக்கு ஹெல்ப் பண்ண அனுப்பின. அதான் அவளுக்கு என்ன ரொம்ப பிடிச்சு போச்சு சூர்யா. அப்போ நீதான காரணம்.” என்றாள்.
“என்ன ஹெல்ப்?” என்று கேட்ட பரத்தை பார்வையால் கேட்காதே என லுக்குவிட, தோளைக் குலுக்கிக் கொண்டவன் நண்பனைப் பார்த்தான்.
அவனோ, “ஓஹ்…” என்று மட்டும் சொன்னவன்,
“நீதான் ஹெல்ப் பண்ண சொன்னேன்னு சொல்லிடவா?” என்ற அவள் கேள்விக்கு,
“இல்ல… அதுலாம் சொல்லாத.” என்றான் வேகமாக.
“ஏன்?” என்றவளுக்கு,
“நல்லாருக்காது அனு. சங்கடமா பீல் பண்ண போகுது. சொல்லாத.” என்றான் இயல்பாக.
அவனின் முக ரியாக்ஷன் எல்லாவற்றையும் அனு கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்.
ஒரு நண்பனாக சூர்யாவை அவளுக்குப் பிடிக்கும். அதுவும் அவனின் இதுபோன்ற குணம்தான் மற்றவர்களை அவன்பால் மேலும் ஈர்க்கும்.
அன்று எதேச்சையாக சூர்யா மகாவை இமைக்காமல் பார்ப்பதை பார்த்தாள். ஏன் இப்போது கூட ஒரு நொடி அவன் பார்வை அவளை கூர்ந்து நோக்கியதே!
அதனால் கிண்டல் செய்யவே இப்படிக் கேட்டாள்.
நண்பனின் வேகமான மறுப்பில் புன்னகையாக, “சரி சரி அவகிட்ட எதும் சொல்லல. உங்கிட்ட விளையாட்டுக்கு சொல்லவானு கேட்டேன்.” என்றவள் முதலில் தோழியுடன் வெளியே கிளம்பிவிட, இப்போது பரத் நண்பனை உற்றுப் பார்த்தான்.
அதை உணர்ந்து, “என்னடா?” என்று வினவியவனை,
“அந்த பொண்ணுகிட்ட நீதான் ஹெல்ப் பண்ணனு சொல்லக்கூடாதா? சொல்லாமலே உதவி. என் நண்பன் இவ்ளோ நல்லவன்னு தெரியாம போச்சேடா.” என்று போலியாக வியந்தவன் தலையிலேயே ஒன்று போட்டவன், சிரித்துக் கொண்டே,
“நான் அப்படி ஒன்னும் பெரிய ஹெல்ப்லாம் பண்ணலடா. அந்த பேச்சை விடு.” என்றவன்,
“கேன்டீன் போலாம் வா.” என அழைக்க, அந்தப் பேச்சைத் தவிர்கிறான் என புரிந்துகொண்டவன்,
“ஓகே…” என்றுவிட்டு அனு கொடுத்த கப்பை அவன் பெஞ்ச்சில் வைத்துவிட்டு, சூர்யாவுடன் கேன்டீன் கிளம்பினான்.
பர்ஸ்ட் இயர் கிளாஸை தாண்டும்போது சூர்யா என்ன முயன்றும் இயலாமல் ஒரு நொடி அவன் பார்வை வகுப்பினுள் செல்ல, மகாவும் அவனை பார்த்துக் கொண்டுதான் அமர்ந்திருந்தாள்.
அதில் லேசாக அதிர்ந்தவன் சட்டென பார்வையை திருப்பிக் கொள்ள, பரத் இதை கவனித்தாலும் கவனிக்காதது போல இருந்து கொண்டான்.
விஷயம் என்னவென்று ஒருநாள் தெரியத்தானே வேண்டுமென்று நினைத்து.
»»»»
அன்று கல்லூரி முடிந்து மகா வீட்டிற்கு சென்ற பிறகும் கூட அவள் மனம் சூர்யாவையே சுற்றி வந்தது.
ஏனென்றே தெரியாமல் கல்லூரி முதல்நாள் புன்னகை முகமாக அவனைக் கண்டது அவ்வப்போது அவளுக்கு ஞாபகம் வரும். அதை அவள் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை.
ஆனாலும் அதன் பிறகு அவனைப் பற்றி கேள்விப்பட்டதை மனம் குறித்துக் கொண்டது.
அவன் பர்ஸ்ட் இயரைத் தாண்டி செல்வதால், ஒருநாளில் ஒருமுறையேனும் அவள் கண்களில் பட்டுவிடுவான்.
அதுவும் பிரெஷ்ஷர்ஸ் டே அன்று சூர்யா அவளை பார்ப்பதை மகா உணர்ந்துதான் இருந்தாள்.
ஒரு பெண்ணிற்கு தெரியாதா ஒருவர் தன்னை பார்ப்பது!
உள்ளே பதற்றமாக இருந்தும் அவனை நோக்காமல் இயல்பாக இருப்பது போல காட்டிக் கொண்டாள்.
ஆனால் அவன் உற்சாகமாக சிரித்துக் கொண்டு டான்ஸ் ஆடியது அவள் கண்களுக்கு தனித்து தெரிய, தன்னை மறந்து அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
பாட்டு முடிந்த பிறகு அவன் பார்வை அவளிடம் வரும்போதே, அவள் செயல் உரைக்க, தன்னையே கடிந்து கொண்டு வேறு புறம் திரும்பிக் கொண்டாள்.
என்னதான் வெளியே காட்டிக் கொள்ளாவிட்டாலும் என்னவோ ஒரு குட்டி சலனம் மனதில். சரியா தவறா என்று தெரியாத எண்ணங்கள்.
ஆனாலும் அனைத்தையும் தாண்டி வீடு, படிப்பு, பிரண்ட்ஸ் என முடிந்தளவு இயல்பாகவே இருந்தாள்.
இன்றைய நிகழ்வுக்குப் பின் இது போலவே அவனை அத்தனை கண்டுகொள்ளாது இருக்க முடியுமா?
இன்டெர்வலில் மீண்டும் அனுவிடம் பேச வந்தவள், அவர்கள் பேசுவதை கேட்டுவிட்டிருந்தாள்.
அதன்பிறகு ஏற்கனவே கொஞ்சம் குழப்பமாக இருந்த மனநிலை முற்றிலும் குழம்பிப் போனது.
சூர்யாதான் உதவி செய்ய அனுவை அனுப்பி உள்ளானென அதிலேயே அவளுக்கு புரிந்திருந்தது.
அவன் செய்த உதவியை, ‘சொன்னால் சங்கடப்படுவாள். சொல்லாதே.’ என்கிறான்.
அதுவும் அவன் உதவி செய்த விதம் அவளைக் கவர்ந்ததென்றால், அவனின் அந்த பண்பு… அவனை மிகவும் உயர்வாக எண்ண வைத்தது.
‘நல்ல பையனா இருக்காரு.’ என மனதில் சொல்லியவள் இதழோரம் ஒரு அழகிய புன்னகை.
அவனால்… அவனுக்காக… விளைந்த முதல் புன்னகை.
இதுபோன்ற புன்னகைகள் தொடருமா?
பொறுத்திருந்து பார்ப்போம்.
தொடரும்…