Vaanavil – 16

ranibow-1265ab68

அத்தியாயம் – 16

அந்த ஊருக்குள் தர்மசீலன் குடும்பம் என்று சொன்னாலே மதிப்பும், மரியாதையும் தானாக வரும். அப்படி வாழ்கின்ற குடும்பத்தில் நடக்கும் பிரச்சனையை ஊரே நின்று வேடிக்கைப் பார்க்க, “உன் குடும்பத்தை இழந்து ஒருநாள் தனியாக இருக்க முடியல. பெத்தவளை இழந்த ஒரே நாளில் ஆம்பள தேடும் நீயெல்லாம் என்னடி ரகம்” என்று செண்பகம் வாய்க்கு வந்ததைப் பேச, தன்னுடைய பாட்டியின் சுயரூபம் கண்டு அதிர்ந்தான் இளஞ்செழியன்.

அவனுக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து புன்னகையுடன் வலம்வரும் பாட்டியின் வாயில் இருந்தும் வரும் வார்த்தைகள் அவனை வெகுவாக பாதித்தது. தன்னுடைய வீட்டில் எதிர்ப்பு வரும் என்று தெரிந்திருந்தாலும், அது இந்தளவுக்கு என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை.  அவன் பார்வை தன்னவளின் மீது கவலையுடன் படிந்து மீண்டது.

அவளோ ‘இப்போதே பூமியில் புதையுண்டு போக மாட்டோமா’ என்ற சிந்தனையுடன் கண்களில் கண்ணீர் வழிய நின்றிருந்தாள். ஏற்கனவே தாயையும், தந்தையும் இழந்த தன்னவளை இப்படியொரு சூழ்நிலையில் கொண்டு வந்து நிறுத்திய தன்னுடைய மடத்தனத்தை எண்ணி மனதில் நொந்து போனான்.

அவன் மனவேதனை உணராத செண்பகமோ, “சொந்தமாக தொழில் செய்யறன்னு கேள்விபட்டேனே… அதில் எவனிடமாவது ஏமாந்து வயிற்றில் வாங்கிட்டு வந்துட்டியா? அதை மறக்கத்தான் இப்போ என் பேரனோடு கிளம்பி வந்திருக்கிறாயா?” என்றவர் நெஞ்சில் கொஞ்சமும் ஈரமில்லாமல் பேச, “பாட்டி” என்று கத்தினான் இளஞ்செழியன்.

அவர் பேசிய வார்த்தைகளைக் கேட்ட கார்குழலி, சரவணா, அனிதா மற்றும் காயத்ரி அதிர்ச்சியில் சிலையாகி நின்றிருக்க, இளஞ்செழியன் வீட்டினர் செண்பகத்தின் மறுமுகம் எங்களுக்கு பரீட்சயமான ஒன்று என்பது போல அசையாமல் நின்றிருந்தனர்.

அடுத்த நிமிடமே அங்கிருந்த அனைவரையும் கையெடுத்து கும்பிட்ட மகிழ்வதனி, “என்னை இவ்வளவு கீழ்த்தரமாக நினைப்பீங்கன்னு நான் நினைக்கல. உங்க பேரனை என்னுடைய சுயநலத்திற்காக பயன்படுத்திக்கணும் என்று நான் நினைச்சதே இல்ல. ஒருத்தனோடு படுத்து பிள்ளையை வாங்கிட்டு வரும் அளவுக்கு நான் ஒழுக்கம் கெட்டவளும் இல்ல. இதுவரை நீங்க பேசிய பேச்சுப் போதும்” என்று அழுகையுடன் கூறியவள் அங்கிருந்து செல்ல நினைத்தாள்.

அவளின் கரம்பிடித்து தடுத்த செழியனை நிமிர்ந்து பார்த்தவள், ‘அன்னைக்கே நான் சொன்னேனே, நீ ஒரு வார்த்தை என் பேச்சு கேட்டியா?’ என்று பார்வையால் அவனிடம் வினாவியவள், “நான் இவ்வளவு பேச்சும் வாங்க நீங்கதான் காரணம் செழியன். ப்ளீஸ் கையை விடுங்க, நான் போகணும்” என்று கத்திய அவளை ஊரே நின்று வேடிக்கைப் பார்த்தது.

அந்த பேச்சு இன்னும் அவரின் கோபத்தை கிளறிவிட, “என் பேரனை வளைக்க பார்க்கிறாயா? பெரிய பணக்கார வீட்டு வாரிசு. அவனை கல்யாணம் பண்ணிக்கொண்டால் கடைசிவரை சந்தோசமாக செல்வசெழிப்பாக வாழலாம்னு கனவு காண்கிறாயோ?” என்று மேலும் அவர் பேச சட்டென்று அவனின் கையை உதறிவிட்டு திரும்பினாள்.

அவள் மனம் கடல்போல கொந்தளிக்க,  “வீட்டுக்கு பெரியவங்கன்னு கொஞ்சம் மரியாதை தந்து அமைதியாகப் போனால் என்னன்னா பேசறிய? ஒத்த புள்ளய இருந்தாலும் நானே என் சொந்தக்காலில் நிக்குதேன். எனக்கு யாரைக்கண்டும் பயமில்ல, அதே சமயத்துல நான் யாருக்கும் தலைவணங்கி போகணும்னு அவசியமில்ல. இன்னொரு முறை என்னைய இப்படி பேசினிய அம்புட்டுதான்” என்று விரல்நீட்டி எச்சரித்தவள், தன் கையைப் பிடித்திருந்த செழியனின் கையை உதறிவிட்டு நடந்தாள்.

அந்த நடையில் இருந்த நிமிர்வு அவன் இதயத்தை அசைத்துப் பார்க்க,  அடுத்த நிமிடமே அவள் பின்னே செல்ல நினைத்தவனை செண்பகம் குரல் தடுத்தது.

“ஏலே செழியா உன்ன இப்படியாவே வளத்தேன். வீட்டுக்குக் கூட்டிட்டு வர இந்த பைத்தியக்காரிதான் கிடைச்சாளா? ஒருத்தன் அண்ணனைக் கொன்ன பெண்ணுதான் வேணும்னு கட்டிகிட்டான். நீயும் இப்போ இப்படி செய்தால் என்ன அர்த்தம்” என்று அவனிடம் நேரடியாக கேட்க, ஊரில் இருந்த மற்றவர்களும் அவளது நடத்தையைக் கீழ்த்தரமாக பேசினார்.

“மனோகர் மக இப்படின்னு தெரியாம போச்சே” என்று சிலர் சொல்ல,

“பெத்தவ இறந்த சோகம் கொஞ்சமும் இல்லாமல் இவனோடு கிளம்பி வந்திருக்காளே! இவ எல்லாம் பொண்ணா?” என்றனர் இன்னும் சிலர்.

“கொஞ்சம் பார்க்க கண்ணுக்கு அழகாக இருப்பதால் ஆடுறா? நல்ல ரத்தம் சுண்டி போகும்போது ஆட்டம் அடங்கும்” என அவன் காதுபடவே பேசினார்.

மொத்தத்தில் ஆண்கள் என்ன செய்தாலும் அது தவறு இல்லை. அதே ஒரு பெண் செய்தால் அனைத்தும் தவறும் என்ற நிலையில் அனைவரும் அவளின் மீதே பழியை சுமத்த, இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நினைத்தவன் மனதில் சட்டென்று அந்த எண்ணம் உதயமானது.

அதற்குள் அவள் கொஞ்சதூரம் சென்றிருக்க, பாட்டியின் பேச்சை அசட்டை செய்துவிட்டு அவளின் பின்னோடு சென்றவனைகே கண்டு கோபம் இன்னும் அதிகரிக்க, “ஏலே செழியா நான் பேசுவதைக் காதில் வாங்காமல் அவ பின்னாடி போனால் என்னாலே அர்த்தம்” என்றபடி பேரனை பின் தொடர்ந்தார்.

அதுவரை நடந்ததை ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்த்த வீட்டினர் மற்றும் ஊர் பெரியவர்களும் பதட்டத்துடன் அவன் பின்னே செல்ல, “ஏட்டி வதனி நான் சொல்லுதேன் இல்ல கொஞ்சம் நில்லு” என்று அவளின் கரம்பிடித்து நிறுத்துவிட்டு, நிமிர்ந்து பார்க்க கோவிலின் வாசலில் நிற்பதை உணர்ந்தான்.

“இன்னும் எனக்கு என்னன்னே பட்டம் வாங்கித்தர நேனைக்குதீய? இனியும் நீங்க என் பின்னால வந்தா பெரிய பாழும் கிணறுமா பார்த்து விழுந்துடுவேன்” என்றவள் ஆவேசத்துடன் கத்த, அதை காதில் வாங்காமல் அவளின் கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு கோவிலுக்குள் நுழைந்தான்.

மற்ற எதைப்பற்றியும் யோசிக்காமல் தெய்வ சன்னிதானம் முன்பு அவளைக்கொண்டு போய் நிறுத்தியதும், அனைவரும் அங்கே வந்து சேர சரியாக இருந்தது. தன்னை நோக்கி வந்தவர்களை பார்த்த செழியன் கண்ணில் கோவில் மரத்தின் அருகே இருந்த வேல் ஒன்றில் இருந்த மஞ்சளால்  கட்டபட்ட தாலி சரடுகள் கண்ணில் விழுந்தது.

அடுத்த நொடியே எதைபற்றியும் யோசிக்காமல் அவளின் கையைவிட்டு அங்கே சென்றவன் அதில் இருந்து ஒரு கயிற்றை எடுத்துகொண்டு அவளை நெருங்கிய செழியனைப் பார்த்தவள், “இங்கே பாருங்க கோபத்தில் செய்யற எந்த காரியமும் சரின்னு சொல்லிட முடியாது” என்றாள் கண்ணில் பயத்துடன்.

ஆம் பயம்தான். செண்பகம் பேசிய வார்த்தைகள் நெஞ்சில் நெருஞ்சி முள்ளாய் குத்திக் கொண்டிருக்க, இப்போது பேரன் செய்யப்போகும் செயலுக்கு அவர் பேசும் கீழ்த்தரமான வார்த்தைகளை நினைத்து உள்ளம் பதறியது.

அவள் அதை யோசித்து கொண்டிருக்கும் போதே,  அவளின் கழுத்தில் மூன்று முடிச்சுப்போட்டு, பக்கத்தில் இருந்த குங்குமத்தை எடுத்து அவளின் நெற்றி வகிட்டில் வைத்துவிட, அவன் விரல் ஸ்பரிசத்தில் தன்னிலைக்கு மீண்டவள் தன் கழுத்தில் கிடந்த தாலியைக் கையில் தொட்டுப் பார்த்தவள், “செழியா” என்றவளின் கண்களில் கண்ணீர் ஊற்றேடுத்தது.

“இந்தமாதிரி சமயத்தில் உன் கழுத்தில் தாலி கட்டியது தவறுதான். ஆனால் இதைவிட்டால் எனக்கும் வேற வழி தெரியல. இப்போ இந்த நிமிஷத்தில் இருந்து நீ என்னுடைய மனைவி. அதைமட்டும் மனசில் வைத்துகொண்டு என்பக்கம் நில்லு. மத்த பிரச்சனைகளை நான் பார்த்துக்கிறேன்” என்று அவளிடம் கூறியவன், அவளின் கரம்பிடித்து இழுத்துக்கொண்டு கோவிலைவிட்டு வெளியே வந்தான்.

வதனியின் கழுத்தில் இருந்த தாலியைக் கண்டு கார்குழலி, சரவணா, அனிதா மற்றும் காயத்ரி நால்வரும் சந்தோஷத்தில் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.  நெஞ்சில் கொஞ்சம் கூட ஈரமில்லாமல் பாட்டி பேசிய வார்த்தைக்கு தக்க பதிலடி என்று நினைத்தாள் வதனியின் உயிர் தோழி.

அவனுக்கு வேறு வழி தெரியவில்லை. இரு வீட்டினர் ஆசிர்வாதத்துடன் கெட்டிமேளம் முழங்க ஊரார் முன்னிலையில் அவளை தன்னவளாக மாற்ற நினைத்த ஆசை கனவாகவே மாறிப்போனது.

அவளை தனித்துவிட மனமின்றி எதைபற்றியும் யோசிக்காமல் அழைத்து வந்ததால் ஊரார் முன்பு அவள்பட்ட அவமானம் அவன் மனதை வலிக்க செய்தது. தன் கண்முன்னே ஆதரவின்றி அழுது கரையும் தன்னவளைத் தவிர மற்ற எதுவுமே அவன் கண்ணுக்குப் பெரிதாக தெரியவில்லை.

பரிமளம் புகைப்படத்தின் மனக்கண்ணில் முன்பு கொண்டு வந்து நிறுத்தி, ‘அத்தை எங்க திருமணம் இப்படிதான் நடக்கணும்னு எழுதியிருக்கு. இதோ அவளை தவறாக பேசிய அத்தனைபேர் முன்னிலையில் அவ கழுத்தில் தாலிகட்டிடேன். இனி நீங்க தெய்வமாக இருந்து எங்களை வழிநடத்தணும்’ மனதினுள் வேண்டிக்கொண்டு அடுத்து பேச வேண்டியதை சிந்தித்தான்.

அதே நேரத்தில் வீட்டினர்கள் அனைவரும் அதிர்ச்சியில் வாயடைத்துப் போயிருக்க நேராக பாட்டியின் முன்பு வந்து நின்றவன், “அவளாக என்னைத் தேடி வரல பாட்டி நான்தான் அவளோட அழகில் மயங்கி மும்பையில் இருந்து குற்றாலம் வந்தேன். அப்புறம் அவள் பின்னாடியே சுத்தி மனதை மயக்கியதும் நான்தான். எனக்கு வாரிசு என்று ஒன்று பிறந்தால் அதுவும் இவளோட வயிற்றில்தான் வரும்” என்றவன் ஆணித்தரமாக கூறிவிட்டு சுற்றி நின்ற ஊர் மக்களைப் பார்த்தான்.

“ஒரு பொட்டபுள்ள குடும்பத்தை இழந்து நிர்கதியாக நிற்பதைப் பார்த்து, நான் செய்த செயலை உங்க பசங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்தால் இப்படிதான் பேசுவீங்களா? இத்தனைபேர் இருந்தும் அவளுக்காக ஒருவார்த்தை பேச உங்களுக்கு எல்லாம் துப்பில்லை. இந்த லட்சணத்தில் ஊருக்குள் பெரிய மனுசன்னு வேற சொல்லிக்கிறீங்க. இன்னொரு முறை என் மனைவியை யாராவது தப்பாக பேசியது காதில் விழுந்தது அவ்வளவுதான்” விரல்நீட்டி எச்சரித்த கையுடன் தன்னவளை இழுத்துக்கொண்டு வீடு நோக்கி நடந்தான்.

அவன் குரல்கேட்டு தன்னிலைக்கு மீண்ட செண்பகம், “ஏலே நான் கொஞ்சநேரத்திற்கு முன்பு பேசியதை உண்மைன்னு நிரூபிக்கிறது போல இருக்குலே உன் செயல்” என்றவரின் குரல் அவனைத் தடுத்தது.

சட்டென்று அவர் பக்கம் திரும்பிய செழியன், “நீங்க சொல்வதில் எள்ளளவும் உண்மை இல்லன்னு நிரூபிச்சேன். இன்னைக்கு உங்க பேச்சைக்கேட்டு நான் மெளனமாக இருந்தால், அது நான் என் காதலுக்கும், என் மனைவியின் பெண்மைக்கும் செய்யும் துரோகம்” என்று இடைவெளிவிட்டு மீண்டும் தொடர்ந்தான்.

“நீங்க கீழ்த்தரமாக பேசிய இதே மகிழோட வயிற்றில் தான் என் முதல் வாரிசு பிறக்கும். அவளை பைத்தியம்னு சொன்ன இதே குடும்பத்திற்குள் அவளை ராணி மாதிரி நான் வாழ வைப்பேன். அதுதான் நான் உங்களுக்கு எல்லாம் கொடுக்கும் பதிலடி” என்றவன் தன்னவளின் தோளோடு கைபோட்டு அழைத்துக்கொண்டு வீடு நோக்கி நடந்தான்.

அவன் பேசிய வார்த்தைகள் அவள் மனதிற்கு ஆறுதலாய் அமைந்தது. தான் அவமானத்தில் தலைகுனிந்த இடத்திலேயே, தன்னை தலை நிமிர வைத்த கணவன் மீது அன்பு ஊற்றெடுத்தது. அவனருகே இருக்கும் வரை துன்பம் என்ற ஒன்று தன்னைத் தீண்டாது என்று உணர்ந்து கண்கள் கலங்க அவனை ஏறிட்டாள்.

சட்டென்று திரும்பி அவள் பார்வையை சந்தித்த செழியனோ, “எனக்கு நீயும் முக்கியம்தான். நீ தனியாக தவித்து நிற்பதை என்னால் பார்க்க முடியாது. இன்னைக்கு மட்டும் இல்ல என்னைக்கும் நான் உன் பக்கத்தில் இருப்பேன்” என்று அவள் மனதைப் படித்தவன் போல பேசியபடி நடக்க, அவள் கண்களில் இருந்த கண்ணீர் கன்னத்தில் வழிந்து ஓடியது.

அதை மெல்ல துடைத்துவிட்டு, “இனிமேல் நீ அழுகவே கூடாது” என்றபோது அவர்கள் இருவரும் வீடு வந்து சேர்ந்து இருந்தனர். இனி தான் வாழபோகும் வீட்டை ஒருமுறை நிமிர்ந்து பார்த்தாள்.

அதற்குள் அங்கே ஓடிவந்த கார்குழலி, “நீங்க மட்டும் இப்போ இந்த முடிவை எடுக்காமல் இருந்திருந்தால், இவ ஊர்வாயில் விழுந்து உம்மியும், தவுடுமாக ஆகிருப்பா. அதில் இருந்து இவளை காப்பாத்திட்டீங்க, ரொம்ப நன்றி” என்று அவனைக் கையெடுத்து கும்பிட, அவனுக்கே மனசு வருத்தமாக இருந்தது.

தன்னுடைய தோழியின் தோள் சாய்ந்து கதறி அழுத கார்குழலி, “என்னை மன்னிச்சிடு வதனி. நீ இப்படியொரு இக்கட்டான சூழலில் மாட்டி இருக்கிற என்று தெரிஞ்சிருந்தால் நான் மணமேடைக்கே போயிருக்க மாட்டேன். கடைசியில் எனக்கு நல்லது நினைத்த இருவருக்கும் இப்படியொரு தண்டனையா? அந்த ஆண்டவனுக்கு சில நேரங்களில் கண்ணே இல்லடி” என்று சிறுபிள்ளையாய் மாறி அழுத தோழியை அரவணைத்துக் கொண்டாள் மகிழ்வதனி.

அவளுக்குள் இருக்கும் தாய்மை உணர்வை அந்த கண்ணீர் தட்டி எழுப்ப, “இது எல்லாம் நடந்தால்தான் நம்ம கழுத்தில் தாலி ஏறும்னு இருந்திருக்குவே. அதுக்காக என்ன செய்ய சொல்லுதே. விடு எல்லாம் சீக்கிரம் சரியாகும்” என்று ஆறுதல் சொன்னவளை வியப்புடன் நோக்கினான் செழியன்.

இதுதான் மகிழ்வதனி. தனக்கு எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும், அதை தானே சமாளித்து மீண்டு வரும் குணம் உடையவள். அந்த தன்னம்பிக்கை மற்றும் நிமிர்வுதான் அவனை அவள் பக்கமாக ஈர்த்தது.

அதற்குள் காயத்ரி மற்றும் அனிதா இருவரும் அவளின் இடையைக் கட்டிக்கொண்டு அழுகவே, “இதுவரை நடந்ததை நினைத்து அழுது எதுவும் ஆகப்போவதில்லை. அதனால மத்த வேலையைக் கவனிங்க” என்ற செழியன் குரல் அவர்களை நடப்பிற்கு இழுத்து வந்தது.

அப்போதுதான் கணவன் – மனைவி இருவரும் வாசலில் நிற்பதை உணர்ந்து, “இந்தமாதிரி சமயத்தில் ஆரத்தி எடுக்கக்கூடாது என்று சொல்வாங்க. நமக்கு நல்ல மனசு இருக்கும்போது இந்த சாங்கியம், சம்பிரதாயம் எல்லாம் வேண்டாம். இருவரும் வலது காலெடுத்து வைத்து உள்ளே போங்க” என்று சொல்லிவிட்டு விலகி நின்றாள் கார்குழலி.

அவள் சொன்னபடி இருவரும் வலதுகால் எடுத்து வைத்து வீட்டிற்குள் நுழைந்தனர். அவளின் பின்னோடு வந்த குடும்பம் எதுவும் பேச வழியின்றி வீட்டிற்குள் நுழைய, வேந்தனுக்கு கோபம் தலைக்கு ஏறியது.

கார்குழலி தன் சொல்பேச்சு கேட்டு நடந்து கொள்ளாதது அவனது ஆணென்ற கர்வத்தை சீண்டிப் பார்க்க, ‘உன்னை என்ன செய்யுதேன்னு பாருடி’ என்று மனதிற்குள் கருவினான்.

நேராக வீட்டிற்குள் நுழைந்த செழியன் தன்னவளை இழுத்துச் சென்று டைனிங் டேபிளில் அமர வைத்துவிட்டு சாப்பாடு போட்டு எடுத்து வந்து அவளுக்கு ஊட்டிவிட, “எனக்கு சாப்பாடு வேண்டாம்” என்றாள் மகிழ்வதனி.

அப்போது வீட்டிற்குள் நுழைந்தவர்களைப் பார்த்த செழியனோ, “இனிமேல்தான் நீ நிறைய சாப்பிட்டு தைரியமாக இருக்கணும். இங்கே இருக்கும் மற்றவர்களை சமாளிக்க உடம்பில் தெம்பு வேணும்” என்று சொல்லிவிட்டு தன்னவளுக்கு சாப்பாட்டை ஊட்டிவிட்டு, அவளை தன் அறைக்கு அழைத்துச் சென்று படுக்க வைத்தான்.

அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளின் தாக்கத்துடன் இருந்தவளுக்கு இப்போது ஒய்வு தேவை என்பதால், பாலோடு கலந்து கொடுத்த தூக்கமாத்திரையின் பலனால் தன்னை மறந்து உறங்கியவளின் அருகே அமர்ந்தான்.