jeevanathiyaaga_nee-5

JN_pic-3e227d05
Akila Kannan

ஜீவநதியாக நீ…

அத்தியாயம் – 5

“சஷ்டியை நோக்கச் சரவண பவனார்

சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்

பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை

கீதம் பாடக் கிண்கிணி யாட”

 வடபழனி முருகன் கோவில் அருகே இருந்த தேநீர் கடையில் கந்தஷஷ்டி கவசம் சத்தமாக ஒலித்து கொண்டிருந்தது. சோர்வாக கோவிலை நோக்கி நடந்தார் தாரிணியின் தாயார் புஷ்பவல்லி.

 அங்கிருந்த முருகனை கையெடுத்து கும்பிட்டு, கோவில் பிரகாரத்தை சுற்றினார். அதன் பின் அங்கிருந்த தூணில் சாய்ந்து அமர்ந்தார்.

அவர் கண்களில் கண்ணீர் தாரைதாரையாக வடிந்து கொண்டிருந்தது.

 அவர் அதை துடைக்க முற்படவே இல்லை. இனி, அதை துடைத்து பயனில்லை. இந்த கண்ணீர் காலம் முழுக்க நிற்க போவதுமில்லை என்றறிந்தவர் போல் வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தார்.

 “அம்மா…” அவர் அருகே வந்து அமர்ந்தான் ரவி.

“அம்மா, இங்க என்ன பண்ணறீங்க? அப்பாவும், நானும் உங்களை எவ்வளவு நேரமா தேடுறோம் தெரியுமா?” என்று கேட்டான் ரவி.

“என் மக எங்க டா?” அவர் தன் மகனின் சட்டையை பிடித்திருந்தார்.

அப்பொழுது, அங்கு வந்தார் ஷண்முகம். “புஷ்பா, ரவியை திட்டி என்ன ஆக போகுது?” அவர் கடிந்து கொள்ள,

“நான் யாரை திட்டறது? என் கோபத்தை எங்கன்னு சொல்றது?” அவர் முகத்தில் அடித்து கொண்டு அழுதார்.

அதிகாலை நேரம் என்பதால் கோவிலில் பெரிதாக கூட்டம் இல்லை. இருந்தாலும் அங்கிருந்த ஓரிருவர் இவர்களை திரும்பி பார்த்துவிட்டு சென்றனர்.

“எல்லாரும் திரும்பி பார்க்குறாங்க அம்மா.” ரவி தன்மையாக கூற,

“எல்லாரும் பார்த்தால் மானம் மரியாதை போகுமா? நம்மளை விட்டுட்டு போறதுக்கு மானம் மரியாதை இன்னும் இருக்கா என்ன?” அவர் விரக்தியாக கேட்டார்.

தன் மனைவியின் அருகே அமர்ந்தார் ஷண்முகம். “அந்த ஜீவா பையன் ஒரு விளங்காதவன். வேலை வெட்டிக்கு சரியா போக மாட்டான். வேதாந்தம் பேசிட்டு அலைவான். அந்த பையன் கிட்ட என்ன பிடிச்சிருக்குனு போனா நம்ம பொண்ணு?” அவர் நொந்து கொள்ள,

“நீங்க அவளுக்கு கொடுக்காத மரியாதை, சுதந்திரம் இப்படி ஏதோவொன்னு அவன் கொடுத்திருக்கணும்” புஷ்பவல்லி கோபத்தில் வெடித்தார்.

“தாரிணி இப்படி பண்ணதுக்கு நான் தான் காரணமுன்னு சொல்றியா?” ஷண்முகம் சீற, “நீங்களும் ஒரு காரணம்.” வழக்கமாக தன் கணவனை எதிர்த்து பேசாத மனைவி, இன்று தன் மகளை தவறவிட்ட பரிதவிப்பில் அழுத்தமாக கூறினார்.

“உன் பேச்சு முட்டாள் தனமா இருக்கு. அப்பன் கண்டித்தால், பொண்ணு ஓடி போவாளா?” அவர் சீற, “அப்பா…” தன் தந்தையை இடைமறித்தான் ரவி.

“தாரிணி காணாமல் போய், இரண்டு நாள் ஆச்சு. அவங்க மெட்ராஸுக்கு தான் போயிருப்பாங்கன்னு அவளை தேடி நீங்களும் ரவியும் இங்க வந்தீங்க. ஊரு காரங்க பேச்சு தாங்காமல் நானும் வந்துட்டேன். ஜீவா வீட்டலையும், ஊருகாரங்க கேள்விக்கு பயந்து அவங்க மகனை தேடி குடும்பத்தோட சென்னைக்கு தான் வந்திருக்காங்க.” புஷ்பவல்லி நிறுத்த,

“அம்மா, ஜீவா தாரிணி ரெண்டு பேரும் சென்னைக்கு வரலை. இடையில் எங்கையோ இறங்கி இருக்கனும். அவங்களை தேடணும்.” ரவி கூற,

“வேண்டாம்” அழுத்தமாக கூறினார் ஷண்முகம்.

“அப்பா…” ரவி அதிர்ந்து பார்க்க, “ஜீவாவுக்கும் தாரிணிக்கும் இந்நேரம் கல்யாணம் முடிந்திருக்கும் இனி தாரிணியை கூட்டிட்டு வந்து ஒரு பிரயோஜனமுமில்லை. போலீஸ் கேஸ் ஆகும். அவங்களும், அவளுக்கு சாதகமா தான் இருப்பாங்க” அவர் கூற,

“ஐயோ… என் பொண்ணு வாழ்க்கை.” புஷ்பவல்லி தலையில் அடித்து கொண்டு கதற, அங்கு மௌனம்.

“அப்பா, ஜீவா வீட்லையும் விசாரிச்சாச்சு. ஒரு தகவலையும் இல்லை.” ரவி கூற, “அவங்க வீட்டில் எல்லாரும் அப்பாவி. அவங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.” ஷண்முகம் முகத்தை சுளித்தார்.

“அந்த ஜீவா ஒரு முன் கோபி. போற இடத்தில எல்லாம் பிரச்சனை வளர்ப்பான். யார் சொல்றதையும் கேட்க மாட்டான். அடங்க மாட்டான்.” ரவி அடுக்கி கொண்டே போக,

“அன்புக்கு கட்டுப்படுவான்” ஷண்முகம் நிதானமாக பேசினார்.

ரவி தன் தந்தையை பார்க்க, “ஜீவாவின் பலவீனம், அவன் அம்மா, அவன் தங்கை. அவன் அப்பாவுக்கும் அவனுக்கும் ஆகாது” அவர் முகத்தில் சிந்தனை ரேகைகள்.

“எத்தனை நாள் அவங்க ஓடி ஒளிய முடியும்? ஒரு நாள் அவங்க வெளிய வந்து தானே ஆகணும். அவங்க வெளிய வரும் பொழுது ஜீவாவின் பிடி நம்ம கையில் இருக்கனும்.” ஷண்முகம் பேசி கொண்டே போக, புஷ்பவல்லியும், ரவியும் அவரை புரியாமல் பார்த்தனர்.

ஷண்முகம் விரக்தியாக சிரித்தார்.

“பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லுன்னு சும்மாவா சொல்லிருக்காங்க. நாம எப்படி போனால் என்னனு தாரிணி கவலைப்படலை. ஆனா, நாம அப்படி இருக்க முடியாதில்லையா?” அவர் கண்களில் கண்ணீர்.

“ஜீவாவின் பிடி நம்ம கிட்ட இருந்தால், அவன் தாரிணியை ஆயுசுக்கும் நல்லா வச்சிப்பானில்லை?” அவர் குலுங்கி அழ, “அப்பா…” ரவி தன் தந்தையின் தோள்களை ஆறுதலாக பற்றிக்கொண்டான்.

“ஜீவா தங்கையை ரவிக்கு பேசி முடிச்சிருவோம்” அவர் கூற, ரவியும், புஷ்பவல்லியும் அதிர்ந்து நின்றனர்.

“ஜீவாவுக்கு தங்கை மேல பாசம் அதிகம். அவன் என்னைக்கும் நம்ம பிடியில் இருக்கனும். இருப்பான்” ஷண்முகம் கர்ஜிக்க, “வேண்டாம்ங்க. பெண் பாவம் பொல்லாதது. என்னைக்கு நாம பண்ண பாவத்துக்கு இன்னைக்கு தண்டனை அனுபவிக்கறோமுன்னு தெரியலை. இதுல அந்த பொண்ணு வாழ்க்கையை வேற அழிக்கணுமா?” என்று புஷ்பவல்லி மறுப்பு தெரிவித்தார்.

ரவி அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.

“நான் என்ன அந்த பெண்ணை கொடுமையா படுத்த சொல்றேன். அந்த பொண்ணோட தகுதிக்கு, நம்ம வீட்டுக்கு மருமகளா வர கொடுத்து வச்சிருக்கணும். அவ நம்ம வீட்டில் சந்தோஷமா இருக்கட்டும். ஆனால், அவ நம்ம வீட்டில் இருக்கா அப்படிங்கிறதே ஜீவாவுக்கு பயத்தை கொடுக்கும்.” ஷண்முகம் பேச,

‘கீதா! அவளை நான் திரும்பியும் பார்க்க மாட்டேன்.’ ரவி வைராக்கியத்தோடு எண்ணினான்.

“எனக்கு என்னவோ இது சரிபடுமுன்னு தோணலைங்க” புஷ்பவல்லி கூற,

“எல்லாம் சரியா வரும். அவன் தங்கையை ரவிக்கு பேசி முடித்தால், நாம அந்தஸ்த்து பேதம் பார்க்காம இந்த இடத்தை முடிச்சிருக்கோமுன்னு நமக்கு ஊரில் நல்ல பெயர். “அவர் நிறுத்தி நிதானமா கூறினார்.

“ஜீவா ஒரு வம்பு பிடிச்சவன், அதனால் தான் நாம இவங்க காதலுக்கு சம்மதம் சொல்லலை. ஜீவா தான் இப்படி குழப்பம் பண்ணிட்டான்னு மொத்த பழியும் ஜீவா மேல திரும்பும்.” அவர் குரலில் கோபம்.

“நாம அவன் குடும்பத்துக்கு நல்லது தான் பண்றோம். ஜீவாவை தான் பழி தீர்க்க போறோம். அவனுக்கும், அவன் தங்கைக்கும் இருக்கிற உறவை வைத்து, அவனை நம்ம காலில் விழ வைக்க போறோம்” ஷண்முகம் வன்மத்தோடு கூறினார்.

“இல்லை அப்பா. வேண்டாம். இப்ப இருக்கிற சூழ்நிலையில் எனக்கு கல்யாணம் வேண்டாம். அதுவும் பழி தீர்க்க எல்லாம் கல்யாணம் வேண்டாம் அப்பா.” ரவி மறுப்பு தெரிவித்தான்.

“உன் தங்கை என் பேச்சை கேட்கலை. நீயும் கேட்க கூடாதுனு இருக்கியா?” அவர் கேட்க, “அப்பா…” ரவி தடுமாறினான்.

“நான் வீட்டுக்கு போறேன். நீ ஒரு முடிவெடுத்திட்டு வீட்டுக்கு வா. புஷ்பா கிளம்பு. இனி நீ அழ கூடாது. அழுது எதுவும் ஆக போறதில்லை. அடுத்து நடக்க வேண்டியதை பார்ப்போம்” தன் மனைவியை அழைத்து கொண்டு, வடபழனி கோவில் அருகே தான் தற்பொழுது தங்கி இருக்கும் வீட்டை நோக்கி சென்றார் ஷண்முகம்.

வடபழனி கோவிலுக்கு அருகே இருந்த மருத்துவமனையில் தான் ஜீவாவின் தந்தை அனுமதிக்க பட்டிருந்தார். கீதா தன் தந்தையின் உடல்நலத்தை மனதில் கொண்டு கோவிலுக்கு வந்திருந்தாள்.

ரவி கோவில் தூணில் சாய்ந்து அமர்ந்திருந்தான். அவன் கண்களை மூட, அதில் கீதா நிறைந்திருந்தாள். ‘எனக்கு கீதாவை பிடிக்கும். அழகானவள். நான் அவள் செய்கைகளை ஒரு வருடமாக பார்த்து கொண்டு தான் இருக்கிறேன். புத்திசாலி, அதே நேரம் தைரியமானவள். அவள் மேல் காதலா?’ ரவி சிந்தித்தான்.

‘ஒரு வருடமாக அவளை கண்காணிக்கிறேன். அவளிடம் பேச துடித்தேன். இந்த செய்கை எல்லாம் காதல் என்றால், நான் கீதாவின் மேல் கொண்டது காதல் தான்.’ அவன் மனம் முடிவெடுத்து கொண்டது.

‘ஆனால், என்னை அயோக்கியன்னு சொல்லி திமிரா பேசும் ஒரு பெண் எப்படி எனக்கு மனைவியாக வர முடியும்’ ரவி சலிப்பாக உணர்ந்தான்.

அவன் கண்களை திறக்க, கீதா அங்கிருந்த முருகன் சன்னிதியில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள்.

ரவி, ஒரு நொடி… அவளை கண்ட அந்த ஒரு நொடி மயங்கி நின்றான். அதன் பின் அவள் பேசிய பேச்சுக்கள் நினைவு வர, ரவி அவளை வெறுப்பாக பார்த்தான்.

கீதா ஒவ்வொரு சன்னிதியின் பிராகாரத்தையும் சுற்றினாள். அப்பொழுது அவள் பிராகாரத்தை வேகமாக சுற்ற, அங்கு எரிந்து கொண்டிருந்த விளக்கை தீண்டிய அவள் துப்பட்டாவில் தீ பிடிக்க, அத்தனை ஆள் அரவம் இல்லாததால் யாரும் அவளை கவனிக்கவில்லை.

வேண்டா வெறுப்பாக என்றாலும் அவளையே பார்த்து கொண்டிருந்த ரவி அவள் துப்பட்டாவோடு எரிந்து கொண்டிருந்த தீயை பார்த்து நடுங்கிவிட்டான்.

வேகமாக சென்று அவளை இடையோடு பிடித்து துப்பட்டாவை தூக்கி எறிந்தான். அவள் முழுதாக அவன் அணைப்பில் இருந்தாள். அவள் தோள் வரை உயரத்தில் இருந்த கீதா, அவன் அணைப்புக்குள் அடங்கி இருந்தாள்.

அவன் கட்டுமஸ்தான பிடிமானத்தில், அவள் மேனி பாந்தமாக பொருந்த காதல் கொண்ட அவன் மனம் அவள் இதய துடிப்பை ரசிக்க விழைந்தது.

அவன் கண்களோ எரிந்து கொண்டிருந்த தீயில் இருக்க, என்ன நடந்தது என்று அறியாத கீதா எதிர்பாராமல் அரங்கேறிய நிகழ்வில் அவனது பிடியை நொடியில் புரிந்து கொண்டு சரேலென்று விலகினாள்.

தீயின் ஜுவாலையை விட, அவள் கண்கள் கோபத்தில் தகிக்க, “ப்ளாடி ராஸ்கல்” என்று கூறிக்கொண்டு, ‘பளார்…’ என்று அவளை அறைந்தாள்.

அவளின் இந்த செய்கையில் ரவியின் கோபம் ஏற, வேகமாக சென்று எரிந்து கொண்டிருந்த துப்பட்டாவை கொண்டு வந்து அவள் கைகளில் திணித்தான்.

கீதா அப்பொழுது தான் தீ பிடித்திருந்த தன் துப்பட்டாவை பார்த்தாள்.

“அம்மா…” சூடு தாங்காமல் அலறிக்கொண்டு தன் துப்பட்டாவை தூக்கி எறிந்தாள்.

“முட்டாள், நான் பார்கலைனா, உன் உடம்பு முழுக்க இப்படி பத்திக்கிட்டு எரிஞ்சுருக்கும். இந்த சூட்டுக்கே அலறுற?” அவன் கர்ஜித்தான்.

 ” அடிச்சா வாங்கிட்டு போறத்துக்கு என்னை என்ன சொம்பைன்னு நினைச்சியா? யாரை கை நீட்டி அடிக்கிற?” பளார் என்று அவன் கன்னத்தில் அறைந்தான்.

“என்ன சொன்ன? ப்ளடி ராஸ்கல்! என்னை என்ன உங்க அண்ணன் மாதிரி பொம்பளை பொறுக்கின்னு நினைச்சியா?” அவன் எகிற,

அத்தனை நேரம் பொறுமையாக இருந்தவள், “போதும் நிறுத்து, என்னை நீ பிடிச்சதும், நான் பதட்டத்தில் அவசர போட்டுட்டேன். நான் உன்னை அடிச்சிட்டேன். நீயும் என்னை அடிச்சிட்ட. அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு. ஆனால், என் அண்ணன் பண்ணது தப்பாவே இருந்தாலும், அவனை பத்தி பேசுற யோக்கியதை உனக்கு கிடையாது.” கீதா கர்ஜித்தாள்.

“உனக்கு வேணுமின்னா உன் தங்கையை திட்டிக்கோ. எங்க அண்ணனுக்கு என்ன ஆச்சோன்னு நாங்களும் பதட்டமா தான் இருக்கோம்” கீதா தன் முகத்தை திருப்பி கொண்டாள்.

“என்ன நேத்து உங்க அண்ணன் பத்தி சவால் எல்லாம் விட்ட மாதிரி இருந்தது. ஒரு நாளில் உன் முகத்தில் ஒரு பயம் தெரியுதே.” ரவியின் முகத்தில் ஏளன புன்னகை.

“எங்க அண்ணனுக்கு நேரில் மோதுறவங்களை சமாளிக்க தெரியும். முதுகில் குத்துறவைகளை, நரி தந்திரம் பண்றவங்களை எல்லாம் சமாளிக்க தெரியும்மான்னு தான் எனக்கு பயம்.” கூறிக்கொண்டே மடமடவென்று கோவிலை விட்டு வெளியேறினாள் கீதா.

‘இவ, என்னை பற்றி என்ன நினைத்து கொண்டிருக்கிறாள்?’ அவனுள் சினம் கிளம்பியது.

***

மேல்மருவத்தூர் ஜீவா தாரிணி தங்கி இருக்கும் வீட்டில் காலை பொழுது.

தாரிணி, சிரமப்பட்டு கிணற்றில் தண்ணீரை இரைத்து கொண்டிருந்தாள்.

“தாரிணி, என்னை கூப்பிட மாட்டியா?” ஜீவா அவளை கண்டித்தான். அவனின் கடினமான குரலில் அவள் முகம் வாடியது.

அவன் அவள் முகத்தை ஒற்றை ஆள் காட்டி விரலால் தூக்கினான். “என்ன முகம் சுருங்குது?” அவன் புருவம் உயர்த்தினான்.

“என்னை திட்டுற ஜீவா?” அவள் சுணங்கி கொண்டாள்.

“அக்கறையில் தான் சொல்றேன் தாரிணி” அவன் குழைய, “அப்ப கூட திட்ட கூடாது” அவள் கொஞ்சினாள்.

“சரி… திட்டலை. என்னை நம்பி வந்திருக்கும் பெண்ணை திட்டுவேனா?” அவன் அவள் தலையை செல்லமாக ஆட்டினான்.

“அது…” அவள் அவனை செல்லமாக மிரட்டினாள்.

“தண்ணீர் இரைத்து தாரேன். குளி” அவன் கூற, அவள் தலை அசைத்து கொண்டாள்.

அவள் குளித்து முடித்து உடை மாற்ற, அவன் வெளியே காத்திருந்தான்.

திடிரென்று, “ஜீவா… ஜீவா…” என்று அலறினாள் தாரிணி.

“என்ன ஆச்சு?” அவன் பதறிக்கொண்டு உள்ளே ஓட, “க… க… க… க…” அவள் இதழ்கள் தந்தியடித்தன.

அவள் நின்ற கோலத்தில், அவன் தன் முகத்தை திருப்பிக் கொண்டான்.

“என்ன கரப்பான் பூச்சியா?” அவன் நக்கலாக கேட்க, “இல்லை ஜீவா. க… க… க…” என்று அவள் திரும்பவும் தொடங்க,

“என்ன தாரிணி?” அவன் கோபமாக சத்தமாக கேட்க, “ஜீவா…” அவன் போட்ட சத்தத்தில் அவள் அவனை பின்னோடு இறுக்கி கொண்டாள்.

“ஜீவா… க… க… க…” அவள் மீண்டும் தொடங்க, அவளின் உடல் நடுக்கம் அவனுக்கு புரிந்தது. அவளை முன்னே நிறுத்தி, “என்ன தாரிணி?” அவன் தன்மையாக கேட்டான்.

அவன் காட்டிய நிதானத்தில், “கம்பளி பூச்சி” அவள் கண்கள் பயத்தில் துடிக்க, அவன் பெருங்குரலில் சிரித்தான்.

அவன் சிரித்ததும், அவள் கோபத்தில் விலகி செல்ல அவன், “க… க… க…” என்று கூற அவள் அலறியடித்து கொண்டு அவன் பின்னே நின்றாள்.

“நீ போட்ட சத்தத்தில் அது ஓடி போயிருக்கும்” அவன் கேலியாக கூறி கொண்டே திரும்ப, அவன் கண்கள் அவளை இப்பொழுது முழுமையாக பார்க்க, சட்டென்று தான் கைகளில் அறையும் குறையுமாக கட்டி கொண்டிருந்த சேலையை இறுக பற்ற அவன் பாதங்கள் அவளை நோக்கி முன்னேறின.

தலைக்கு குளித்திருந்தாள். அவள் தலை முடி சுருள்சுருளாக வளைந்து நீர் சொட்டை தாங்கி கொண்டு ஆடியது.

அவன் மென்மையாக ஊத அந்த நீர் சொட்டு அவள் நெற்றியில் விழ, அவன் அவளை நெருங்கி அந்த நீர் சொட்டை மீண்டும் ஊத அது மெலிதாக நகர்ந்து அவள் புருவம் பக்கம் நகர்ந்தது.

அவன் அருகாமையில், அவள் இதயம் தடக் தடக்கென்று துடிக்க, அவன் இதயம் தன் காதலியின் துடிப்பை ரசித்து காதலிசையில் மையல் கொண்டது.

அவள் தேகத்தில் உருளும் நீர் துளியோ, அவன் சுவாச காற்றுக்கு ஏங்கி அசையாமல் நிற்க, அவன் அவளை இன்னும் நெருங்க, அவன் சுவாச காற்றில் அந்த நீர் துளி அவள் இமைகளை தொட, அவள் நாணம் கொண்டு தன் இமைகளை மூட, “தாரிணி…” அவன் மென்மையிலும் மென்மையாக அழைத்தான்.

“ம்…” அவள் குரல் மேலே எழும்பாமல் சங்கீதமாய் ராகம் பாடியது.

“கண்ணை திற தாரிணி” அவன் கூற, “ம்… கூம்…” அவள் மீண்டும் ராகம் பாடினாள்.

“தாரிணி பேசு” அவன் குரலில் கட்டளை இருக்க, “லவ் யூ ஜீவா” கண்களை திறக்காமல் அவள் பதில் கூற, அவன் அவள் இமைகளில் இதழ் பதிக்க, அவள் இமைகளில் நின்ற நீர் துளி உருண்டோடி அவள் அதரங்களில் அடைக்கலம் கொண்டது.

அவன் அருகாமையில் அவள் இதயம் வேகமெடுத்து, விலகி விட மனமில்லாமல், “ஜீவா… ஜீவா…. ஜீவா…” என்று அவன் பெயரை மட்டுமே உதிர்க்க, “வேற எதுவும் பேச மாட்டியா தாரிணி?” அவன் குரல் அவளிடம் கொஞ்சியது. இல்லை கெஞ்சியது.

 

அவன் கெஞ்சலில், அவன் கொஞ்சலில் மனமிறங்கி அவள் அதரங்கள், “லவ் யூ ஜீவா…” மீண்டும் அவள் கூற, “இதை நீ இப்ப சொல்ல வேண்டாம்” அவன் இதழ் கொண்டு அவள் செவ்விதழுக்கு தடை விதிக்க, அவள் நாணம் கொண்டு மூடி இருந்த இமைகளை அதிர்ச்சியில் விரித்து பார்க்க, அவன் விழிகள் அவளை காதலோடு பார்க்க… அவன் கண்கள் தேக்கி கொண்டிருந்த காதலில், அவள் விழிகள் மயங்க எத்தனிக்க…

“தம்… தம்…” என்று கதவை வேகமாக தட்டும் சத்தம் கேட்க, இருவரும் ஸ்தம்பித்து நின்றனர்.

நதி பாயும்…