Vaanavil – 17

7f95805c0f40d33ebb38bd5786543fe8-03c00864

அத்தியாயம் – 17

இந்த சிறுவயதில் அவள் அனுபவித்த கஷ்டங்களை நினைத்து அவனின் உள்ளம் ஊமையாய் அழுதது. ஒவ்வொரு முறை அவள் அனுபவிக்கும் கஷ்டங்கள் நினைக்கும்போது, அவன் மனம் வலித்தது. அவள் ஆழ்மனதில் ஏதோவொரு பிம்பத்தை உருவாக்கிக் கொண்டு அதையே நித்தமும் நேசித்ததை தடுத்து, இதோ இன்று அவளை கரம்பிடித்து இருக்கிறான்.

இனிவரும் நாட்களில் அவளை எந்தவிதமாக துன்பமும் தீண்டாமல் பாதுகாப்பது தன்னுடைய கடமை என்று மனதிற்குள் உறுதி எடுத்துக்கொண்டு, அங்கிருந்து எழுந்து வெளியே வந்தான்.

செண்பகம் பேரனை முறைத்தபடி அமர்ந்திருக்க, தர்மசீலன் வாய் பேச முடியாத சூழலில் அமைதியாக இருந்தார். இதுநாள்வரை சிறுபிள்ளையாக கண்ணுக்கு தெரிந்த மகன் இன்று  வளர்ந்து விட்டான் என்று பூரணி நினைத்தார். ஆனால் சத்தியசீலன் தன்னுடைய தாயை எதிர்த்து இந்த வீட்டில் அந்த பெண்ணை வாழ வைத்து விடுவானா? என்ற கவலையுடன் மகனை ஏறிட்டார்.

அங்கே பலத்த அமைதி நிலவிட, “அண்ணா நீ இப்படி செய்வேன்னு நினைக்கவே இல்ல” என்றான் மேகவேந்தன்.

சட்டென்று தம்பியின் பக்கம் திரும்பிய தமையனோ, “எப்படி செய்வேன்னு எதிர்பார்க்கல” என்று அவன் கேள்வியைத் திரும்பிப் படிக்க, கார்குழலி மனதிற்குள் சிரித்துக் கொண்டாள்.

“இல்ல நீ அவங்க கழுத்தில் தாலி கட்டுவேன்னு நினைக்கல. ஊரே அவுங்களை பைத்தியம்னு சொல்லுது. அப்படியிருந்தும் நீ எதைபற்றியும் யோசிக்காமல் இப்படியொரு முடிவெடுத்து இருக்கிற?” என்றான் வருத்தத்துடன்.

“ஊரே உங்க அண்ணனை கொன்றது கார்குழலி என்று தெரிந்தும், அவதான் வேணும்னு நீ  பிடிவாதமாக கரம்பிடிச்சு இருக்கிற. அந்த பெண்ணுக்கு வாழ்க்கைத் தர கைபிடிச்சியோ இல்ல அண்ணனை கொன்ற இவளை பழி வாங்கணும் என்ற என்ற எண்ணத்தில் தாலி கட்டினாயோ எனக்கு தெரியாது” என்று இடைவெளிவிட்டு மீண்டும் தொடர்ந்தான்.

“ஆனால் நான் உயிராக நேசித்த பெண்ணை ஊரே பார்க்க  அவமானப்படுத்தினால் அதைப் பார்த்துட்டு இருக்க என்னால முடியாது. அதுதான் துணிந்து இதை செய்தேன். அதே நேரத்தில் இங்கே இருக்கும் யாருக்கும் அவளை பிடிக்கல என்றால் இப்பவே சொல்லிடுங்க. நான் வீட்டைவிட்டு போய்விடுகிறேன்” சத்தமின்றி குண்டைத்தூக்கி போட, வீட்டினர் அதிர்ச்சியுடன் அவனை நிமிர்ந்து பார்த்தனர்.

பாட்டனோ, “என்னடா மனசில் நினைச்சிட்டு இருக்கிற. இவ்வளவு நடந்தது போதாது என்று இப்போ வீட்டைவிட்டு போறேன்னு சொல்லும் அளவுக்கு ஆளாகிட்டியாலோ?” என்றார் கோபத்துடன்.

அதுக்கெல்லாம் அசராமல், “மும்பையில் கொடிகட்டி பறந்த பிஸ்னஸ்மேன். இன்னைக்கு நடந்த பிரச்சனைகளை இப்படியே விடாமல் அவளை என்கிட்ட இருந்து பிரிக்க மறைமுகமாக பல சதி நடக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும். அதுக்கு நான் வழிவகுத்து கொடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கேன்” என்றவனின் பார்வை செண்பகத்தின் மீது படிந்து மீண்டது.

அவன் பார்வை அவரின் கோபத்திற்கு தூபம் போட, “இன்னைக்கு வந்தவளுக்காக அப்பா – அம்மா யாரும் வேணாம்னு சொல்லும் அளவுக்கு வந்துட்டியாலே! அப்படி என்ன சொக்குப்பொடி போட்டாலோ அந்த சிறுக்கி மவ.. இவ இம்பூட்டு ஆட்டம் போடுறான்” என்றார் செண்பகம்.

“ஆமா அப்படித்தான் சொல்வேன்.  இங்கே இருக்கும் யாரை நம்பியும் அவ இந்த வீட்டுக்குள் வரல. என்னை நம்பி வந்தவளை கண்கலங்காமல் வாழ வைப்பது புருசனான என்னோட கடமை. அப்புறம் அவ எனக்கு சொக்குப்பொடி போடல பாட்டி. நான்தான் கொஞ்சூண்டு அவளுக்கு சொக்குப்பொடி போட்டேன்” என்று கண்ணடித்துவிட்டு தன் பைக் சாவியை எடுத்துக்கொண்டு வெளியேறும் முன்பு கார்குழலி அருகே வந்தான்.

“அவ தூங்கிட்டு இருக்கிறா. இப்போதைக்கு அவளை யாரும் தொந்தரவு பண்ணாமல் பார்த்துக்கோ. நான் கொஞ்சநேரத்தில் வந்துவிடுகிறேன்” என்று தம்பியின் மனைவியிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.

“என் பெரிய பேரன் போனதில் இருந்து எல்லாமே தலைகீழா நடக்குது. நான் எங்கே போயி யாரிட்ட சொல்லி அழுவேன். ஆத்தா மகமாயி உனக்கு கண்ணு இல்லையா?” என்று அவர் புலம்ப தொடங்க, பூரணி சத்தமின்றி அங்கிருந்து எழுந்து செல்ல, சத்தியசீலன் மனைவியைப் பின்தொடர்ந்தார்.

தர்மசீலன் மனைவியைத் தன்னுடைய அறைக்கு அழைத்துச் செல்ல, தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குச் செல்ல திரும்பிய கார்குழலியைத் தடுத்தது மேகவேந்தனின் குரல்.

“ஒரு நிமிஷம்” என்ற குரல்கேட்டு அவள் திரும்பிப் பார்க்க, “உனக்கு இன்னும் நெஞ்சழுத்தம் குறையல இல்ல. எங்க அண்ணனை கொன்னுட்டு குற்றஉணர்வு இல்லாமல் இருக்கிற. இனிவரும் நாட்களில் இந்த மேகவேந்தனோட இன்னொரு முகத்தை நீ பார்ப்பே” என்றவன் விருவிருவென்று படியேறி அவனது அறைக்குள் சென்ரூ மறைந்தான்.

சின்ன வயதில் இருந்தே கஷ்டப்பட்டே பழகிய அவளுக்கு கணவனின் இந்த பேச்சு சிரிப்பை வரவழைத்தது. இதுவரை தான் அனுபவித்த கஷ்டத்தைவிட இவன் அதிகமாக கொடுமைப்படுத்த போறானா என்று சாதாரணமாக நினைத்தவள் அங்கிருந்து நகர்ந்தாள்.

மாலை நேரம் நெருங்கும்போது வீட்டிற்கு வந்த செழியனின் கைகள் இரண்டிலும் ஜவுளிக்கடை பைகள்  இருப்பதைக் கண்டு, “பெரியத்தான் நீங்க நிஜமாவே ரொம்ப பெரிய ஆள்தான். இப்பவே அவளுக்கு தேவையானது எல்லாம் வாங்கிட்டு வந்துட்டீங்க போல” என்று சொல்ல, அவனும் ஒப்புதலாக தலையசைத்தான்.

“அவள் இன்னும் எழுந்திரிக்கவில்லையா?” என்று கேட்க, “இல்ல” என்றாள்.

“ரொம்ப நன்றிம்மா” என்றவன் சொல்ல சரியென்று தலையசைத்துவிட்டு அவள் அறைக்குச் செல்ல, தனது அறைக்குள் சென்றவன் படுக்கையில் படுத்தவளைப் பார்த்துவிட்டு கையோடு கொண்டு வந்த பையை ஓரமாக வைத்தான்.

மெல்ல நிமிர்ந்து கடிகாரத்தைப் பார்க்கும் மணி ஏழை நெருங்கி கொண்டிருக்க, அவனும் அவளருகே படுத்து களைப்பில் விழி மூடினான். ஏற்கனவே தம்பி கல்யாணத்திற்கு அலைந்தில் தொடங்கி மகிழ்வதனி பெற்றோர் இழப்பு எல்லாம் அவனை உடல் மற்றும் மனதளவில் சோர்வடைய செய்திருந்தது.

படுக்கையில் படுத்திருந்த மனைவியை அணைத்துக்கொண்டு அவன் நித்திரையில் ஆழ்ந்தான். அவன் ஸ்பரிசத்தில் கண்விழித்த மகிழ்வதனி தன்னவனின் கைவளைவில் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற எண்ணத்தில் மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்தாள்.

பாவம் இந்த பாதுகாப்பு இன்னும் சிறிதுகாலம் மட்டுமே என்பது அவளுக்கு அப்போது தெரியவில்லை. மற்றொரு பக்கம் வேந்தனின் முதலிரவு ஏற்பாடுகள் தடையின்றி நடந்தேறியது. கார்குழலியை அலங்கரித்து மகனின் அறைக்கு அனுப்பிவிட்டு வரும்போதுதான் செழியனின் அறைகதவு திறந்து இருப்பதைக் கவனித்தார்.

அவர் வாசலில் இருந்து எட்டிப்பார்த்தபோது இருவரும் தங்களை மறந்து ஒருவரையொருவர் அணைத்துக்கொண்டு உறங்கும் அழகைக் கண்டு, ‘இந்த பிள்ளைகள் நெஞ்சில் கள்ளகபடம் இல்லன்னு இந்த ஒரு விஷயத்தில் இருந்தே தெரியுது. பாவம் இவளை அத்தை என்னவெல்லாம் பேசிட்டாங்க’ என்று மனதிற்குள் வருந்தியபடி அறையின் கதவை சாத்திவிட்டு தன்னுடைய அறைக்கு விரைந்தாள்.   

 அங்கே அறைக்குள் சத்தியசீலன்  சிந்தனையுடன் இருப்பதைக் கண்டு, “என்னங்க இன்னும் தூங்காமல் உட்கார்ந்து இருக்கீக?” என்றாள் பூரணி.

மெல்ல மனைவியின் பக்கம் திரும்பியவர், “இன்னைக்கு செழியன் செய்த விஷயம் என்னை ரொம்பவே காயப்படுத்திடுச்சு. அந்த பொண்ணுக்கு ஒரு அவமானம்  என்றவுடன், நம்மள பற்றிய கவலை இல்லாமல் அவ கழுத்தில் தாலிகட்டியத்தை நினைக்கும்போது மனசுக்கு சந்தோசமாக இருக்கு. ஆனால் அம்மாவை எதிர்த்து இப்படியொரு காரியத்தை செய்து இருக்கான் அதுதான் புள்ள கொஞ்சம் யோசனையா இருக்கு” என்று சொல்ல, தன்னுடைய இடத்தில் சென்று படுத்தார் பூரணி.

“அவனோட வாழ்க்கையை அவன் தெரிந்து எடுக்க உரிமை இல்லையாங்க. உங்க அம்மா அவ்வளவு பேசல என்றால் அவனும் இப்படி செய்யும் ஆளில்லையே” என்ற கருத்தை அவரும் ஒப்புக் கொண்டார்.

இதோ இன்று பாட்டி திட்டிவிட்டார் என்ற காரணத்திற்காக மகன் செய்த செயல் அந்த பெண்ணின் மனதிற்கு எப்படியொரு அமைதியைக் கொடுத்து இருக்கும் என்று யோசிக்கும்போது ஒரு விஷயம் மனதை அழுத்தியது.

மெல்ல மனைவியின் பக்கம் திரும்பி, “பூரணி இன்னைக்கு நம்ம மகன் செய்த மாதிரி நானும் அம்மாவை எதிர்த்து பேசி இருந்தால், நீயும் அவ்வளவு கஷ்டபடாமல் இருந்திருப்பே இல்ல” என்றார் ஏதோ நினைவில்.

“உங்க மகனுக்கு இருக்கும் துணிச்சல் உங்களுக்கு வராதுங்க. அதனால் தேவை இல்லாத விஷயத்தை யோசித்து தூக்கத்தை கெடுக்காமல் அமைதியாகப் படுங்க” என்று சொல்லிவிட்டு மறுப்பக்கம் திரும்பி படுத்துக் கொண்டார் பூரணி. 

அவர் சொல்வதில் இருந்த உண்மை சத்தியசீலனைச் சுட்டது. பூரணிக்கு வரிசையாக மூன்று ஆண் வாரிசுகள் பிறந்த பிறகுதான் செண்பகம் மருமகளை கொண்டாட தொடங்கியது. அதுக்கு முன்பு அவர் அனுபவித்த கஷ்டத்தை மற்றவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அம்மாவிடம் அத்தனை பேச்சு வாங்கும் மனைவிக்கு ஆதரவாக சத்தியசீலன் ஒருநாள்கூட பேசியது இல்லை.

இதோ இன்று செழியன் மூச்சுக்கு முன்னூறு முறை என் மனைவி என்னை நம்பி வந்தவள். அவளுக்கு யாரும் துன்பம் தராமல் காப்பது என் கடமை என்று பேசும் செழியன் வார்த்தைகளில் இருந்த உண்மை அவரைத் தலைகுனிய செய்தது.

ஒரு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டிய நொடியில் இருந்து அவளை பாதுகாக்க துடிக்கும் பூரணியின் வளர்ப்பிற்கும், தாய் என்ன சொன்னாலும் நீ கேட்டுதான் ஆக வேண்டும் என்று நடந்து கொண்ட தன் வளர்ப்பிற்கு இடையே மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருப்பதை உணர்ந்தார்.

மற்றொரு பக்கம் வேந்தனின் படுக்கை அறையைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்த கார்குழலியின் மீது பார்வையைப் படரவிட்டான் மேகவேந்தன். அளவான அலங்காரத்தில் தேவதை போல மிளிர்ந்த அவளை இமைக்காமல் நோக்கினான்.

ஏனோ அந்த நிமிடம் மணிவண்ணன் இறக்காமல் இருந்து இந்த திருமணம் நடந்திருந்தால் எப்படி இருக்கும் என்று யோசிக்கும்போது நெஞ்சம் எங்கும் ஒருவிதமான வலி பரவியது. உடன்பிறந்தவனை பறிகொடுக்க காரணமானவளை வதைக்க நினைத்தும் முடியாமல் தடுமாறும் தன் மீது அவனுக்கு கோபம் வந்தது.

அவள் கொண்டு வந்து பாலை கொடுக்க அதை மறுக்காமல் வாங்கிப் பருகினான். தன் மீது கோபத்தைக் காட்டும் கணவனா இது என்ற சிந்தனையில் அவனை ஏறிட்டாள்.

அடுத்த நிமிடமே கார்குழலி விரலை அவன் சுண்டி இழுக்க தடுமாறி தன்மீது விழுந்தவளோடு படுக்கையில் சரிந்தான் வேந்தன். ஒருவிதமான வேகத்துடன் அவன் முகமெங்கும் இதழ்பதித்து அவளின் கழுத்தில் முகம் புதைக்க, அவள் உடலெங்கும் மின்சாரம் பாய்ந்து ஓடியது.

அவனது வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அவள் தடுமாறும் போது, “எங்க அண்ணன் சாகாமல் இருந்து இந்த கல்யாணம் நடந்திருந்தால் காதலோடு உன்னோடு கலந்து இருப்பேன். ஆனால் இப்போ என்னால முடியலடி. நெஞ்செல்லாம் ஒருவிதமான வலி வின் வின்னு இருக்கு. இதுக்கெல்லாம் காரணமான உன்னை நெருங்குவதை நினைக்கும்போது உடலெல்லாம் எரியுது” என்று அவளின் காதோரம் கூறியவன் சட்டென்று அவளைவிட்டு விலகினான். அவன் தீண்டலில் சூடான தேகம் சட்டென்று இயல்புக்கு திரும்பியது.

அவனது பேச்சுகள் அவளை வதைக்க, ‘என்னால் ஒரு உயிர் போனதுக்கு இது எனக்கு தேவைதான்’ என்று மனதிற்குள் நினைத்தவளின் மீது சில்லென்ற தண்ணீரை கொண்டு வந்து ஊற்றிவிட்டு, ஏசியின் அளவை அதிகரித்துவிட்டு, “இப்படியே விடியும் வரை இருக்கணும்” என்று சொல்லிவிட்டு அறையைவிட்டு வெளியேறினான்.

வேந்தனின் இந்த திடீர் செயலில் திடுகிட்டபோதும் உள்ளம் முழுக்க ஒரு வகை அமைதி பரவியது. மற்ற ஆண்களைப்போல படுக்கையில் பெண்களை வீழ்த்தும் ரகம் தன் கணவன் இல்லை என்ற உண்மையறிந்து அந்த தண்டனையை விரும்பி ஏற்றாள்.

நொடிகள் நிமிடமாய் கடக்க அவள் உடல் குளிரில் மெல்ல விறைக்க தொடங்கிய சமயம் அறையின் கதவை திறந்துகொண்டு உள்ளே நுழைந்த வேந்தன் ஏசியின் அளவை குறைத்துவிட்டு, அவளின் அருகே வந்தான்.

கார்குழலி உதடுகள் நடுங்க அவனை நிமிர்ந்து பார்க்க, “உன்னை பழிவாங்க நினைச்சு இப்படி எல்லாம் செய்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் அது எனக்குதான் வலிக்குதுடி. முதலில் போய் இந்த உடையை மாற்றிவிட்டு வந்து படுத்து தூங்கு” என்றான்.               

அவள் அசையாமல் அமர்ந்து இருப்பதைக் கண்டு, “என்ன இன்னும் அசையாமல் அப்படியே உட்கார்ந்து இருக்கிற” என்று அவளிடம் எரிந்து விழுந்தான்.

சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்த கார்குழலி, “உங்களுக்கு என்ன அக்கறை. நீங்க போய் தூங்குங்க” என்று உதடுகள் நடுங்க சொல்லிவிட்டு, மீண்டும் அப்படியே அமர்ந்திருந்தாள்.

அப்போதுதான் அவளால் அங்கிருந்து அசைய முடியாத அளவிற்கு உடல் விறைத்து இருப்பதை உணர்ந்தவன், “ஏதோ கோபத்தில்..” என்றவன் தொடங்க, “உங்க விளக்கம் மற்றும் உதவி இரண்டுமே எனக்கு வேண்டாம். நீங்க போய் தூங்குங்க” என்றாள் வீம்பாக. அவன் கட்டிலின் மறுப்பக்கம் சென்று படுத்துவிட, அவளோ வெகுநேரம் அசைய முடியாமல் கண்களில் கண்ணீர் வழிய அமர்ந்து இருந்தாள்.

மெல்ல உடல்  இயல்பான நிலைக்குத் திரும்ப, கையில் வைத்திருந்த தைலத்தை உள்ளங்கையில் தேய்த்து உடல் சூட்டை அதிகரிக்க செய்தாள். பின்னர் காலில் தைலத்தை தேய்த்துவிட்டு பக்கத்தில் கிடந்த போர்வையை உடலோடு சேர்த்து போர்த்திகொண்டு படுக்கையில் சரிந்தாள்.

தன்னை மறந்து அவள் உறங்கியபிறகு திரும்பிப் படுத்து கார்குழலியின் முகத்தை பார்த்தான். அவளின் கன்னத்தில் கண்ணீர் கோடுகள். சற்றுமுன் தான் செய்த காரியத்தில் அவளின் உயிரே போயிருக்கும். ஆனால் அப்போதுகூட தன்னிடம் அவள் நெருங்கவில்லை. அதே நேரத்தில் உன் உதவி எனக்கு தேவை இல்லை என்ற வாக்கியம் அவன் மனதை அசைத்துப் பார்த்தது.

அண்ணன் இழப்பில் எங்கோ தவறு நிகழ்ந்து இருக்கிறது என்று உணர்ந்தவன், அது எங்கே என்று சிந்திக்க தொடங்கினான். அவன் அந்த உண்மையை அறியும்போது கார்குழலி அவனைவிட்டு வெகுதூரம் சென்றுவிடுவாள் என்ற உண்மை அப்போது அவனுக்கு தெரிந்திருக்கவில்லை.