நேச தொற்று-8a

நேச தொற்று-8a

தன் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டு இருந்த அந்த சப்தத்தை கேட்க சகியாமல் காதுகளை அழுத்தமாக மூடிக் கொண்டு
கோபமாக வெளியே வந்தாள் ஆருஷா.

சப்தம் வந்த திசையை நோக்கி அவள் திரும்ப அங்கே ஆதியோ தட்டின் மீது ஜல்லிக்கரண்டியை வைத்து அடித்தபடி ஒலி எழுப்பிக் கொண்டு இருந்தான்.

போதாத குறைக்கு கூடவே ஆ என்று கத்தி கொண்டும் இருந்தான்.

அவனை  முறைத்தபடி வந்து நின்றவள்
“ஸ்டாப் இட் ” என்று  கத்த,

“எவள் அவள்? ” என்று கேட்டபடியே திரும்பி பார்த்தான்.

“என்ன டா பண்ணிட்டு இருக்கே?”

“நம்ம ஜி சொன்னாருல அதுபடி டாக்டர்ஸ் அயும் நர்ஸ் அயும் appreciate பண்ணிட்டு இருக்கேன் “

“அது அவர் இன்னைக்கு பண்ண  சொல்லைல. கொஞ்சம் நாளுக்கு முன்னாடி பண்ண சொன்னாரு. “

“பரவாயில்லை எனக்கு அன்னைக்கு மீட்டிங் இருந்தது. Appreciate  பண்ண முடியல. அதான் இன்னைக்கு appreciate பண்ணிட்டு இருக்கேன்” என்று சொல்லிவிட்டு மீண்டும் தட்டில் ஜல்லிக்கரண்டியை வைத்து அடிக்க தொடங்கினான்.

“டேய் சத்தம் போடாதே டா. இல்லை முதுகுல டின் கட்டிடுவேன். ” என கத்தியபடியே அவனைப் பிடிக்க முயல, அவளிடம் அகப்படாமல் தட்டில் அடித்தவாறே “go back corona… go back corona.” என்று கத்திக் கொண்டே ஓடினான்.

கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த 
நிவியும் தர்ஷியும்  முதலில் அவன் செய்கையை புரியாதுப் பார்த்து நின்றனர்.

பிறகு அவர்களும் ஆதியின் பின்னே “go back corona.  go back corona” என்று கத்திக் கொண்டே ஓடத் துவங்கிவிட்டனர்.

அந்த சமயம் பார்த்து ஆதவ்வும் ஆரு கொடுத்து விட்ட பாத்திரங்களை திரும்பிக் கொடுக்க உள்ளே வந்தான்.

இங்கே நடப்பதைப் பார்த்து ஒன்றும் புரியாமல் முதலில் திகைத்து நின்ற ஆதவ்   அவர்களோடு சேர்ந்து கொண்டான்.

கையில் வைத்து இருந்த பாத்திரத்தை தட்டியபடியே “go back corona go back corona.” என்று அந்த train இல் இன்னொரு compartment ஆக இணைந்து கொண்டு ஆதவ் அவர்களின் பின்னே ஓடத் துவங்க ஆருஷா முழிப்பிதுங்கி பார்த்தாள்.

“ஐயையோ பைத்தியக்கார ஆஸ்பத்திரியில இருக்க வேண்டியதுங்களாம் இங்கே இப்படி சுத்துதுங்களே. ” என்று தலையில் கைவைத்தபடி அமர்ந்தவள் பின்பு என்ன நினைத்தாளோ அவளும் அவர்களின் பின்னே “go back corona… go back corona ” என்று சொல்லி ஓட ஆரம்பித்தாள்.

இவர்களது ட்ரெயின் பல முறை சுற்றிவிட்டு பிறகு engine off ஆகி ஓரிடத்தில் தேங்கி  நின்றுவிட்டது.

முதலில் ஓடிய ஆதி அதற்கு மேலே ஓட தெம்பு இல்லாமல் நின்று விட பின்னே வந்த அனைவரும் மூச்சு வாங்கியபடி நின்றனர்.

“டயர்ட் ஆகிடுச்சு. எனர்ஜி ட்ரிங்க் குடிச்சுட்டு நம்ம கொரானாவை துரத்தலாம். இப்போ ஓட தெம்பு இல்லைடா யப்பா.”என சொல்லியவாறே சோபாவின் மீது பொத்தென்று அமர்ந்தவனின் அருகே நிவி வந்து நின்றாள்.

“ஆதி அங்கிள் நம்ம கத்துனது கொரானவுக்கு கேட்டு இருக்கோம்ல. நம்மளை விட்டு போயிடும்ல. ”  ஏக்கமாக கேட்ட நிவியை புன்முறுவலோடுப் பார்த்தான்.

“போயிடும் டா நிவி கண்ணா. நம்ம அதிகமா வெளியே போகாம வீட்டுக்குள்ளேயே பத்திரமா இருந்தா கண்டிப்பா வராது” என்றான் நம்பிக்கை தரும் விதமாக.

“ஆனால் வீட்டுக்குள்ளேயே இருந்த போராடிக்கும்ல அங்கிள்.”

“அப்படி போராடிச்சுடுச்சுனா நேரா அங்கிள் கிட்டே வந்துடு. நம்ம எல்லாரும் ஜாலியா விளையாடலாம். போர் ஓடியே போயிடும் “

“அட என்ன அங்கிள்…  நீங்க தான் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாதுனு சொன்னீங்க. ஆனால் போர் அடிச்சா இங்கே வானு இப்போ சொல்றீங்க. நல்லா குழப்புறீங்களே என்னை.”

“நீ குழம்பவே இல்லை நிவி. தெளிவா தான் கேள்வி கேட்கிற. நானு தர்ஷி அக்கா, ஆதவ் அங்கிள், ஆரு அக்கா எல்லாரும் கொரானா அதிகமா பரவ ஆரம்பிச்ச அந்த நேரத்திலே இருந்து வெளியவே போகல. சோ கொரானா வர சேன்ஸ் ரொம்ப கம்மி. டெய்லி வெளியிலே போயிட்டு வராங்களே அவங்களுக்கு தான் அதிகமா கொரானா வரும். அதனாலே தான் தைரியமா அங்கிள் வீட்டுக்கு வானு சொன்னேன். இப்போ புரிஞ்சுதா நிவிக்குட்டிக்கு?”

“நல்லா புரிஞ்சுடுச்சு அங்கிள். “

“குட் கேர்ள். அப்புறம் ஆரு அக்கா இன்னைக்கு கபசூர குடிநீர் உங்களுக்கு எல்லாம் ரெடி பண்ணி இருக்காங்க.. நம்ம எல்லோரும் அதை குடிச்சுட்டா கொரானா ஓடியே போயிடும்…. ”  என ஆதி சொல்லிக் கொண்டு இருந்த நேரம் ஆதவ்வும் தர்ஷியும் யாருக்கும் தெரியாமல் நைஸ்சாக வெளியே செல்ல முயன்றனர்.

யாராவது பார்க்கிறார்களா என பதுங்கி பதுங்கி பின்னே திரும்பி பார்த்துக் கொண்டு கதவை நோக்கி நடந்த இருவரும் ஒருவரின் மீது ஒருவர் முட்டிக் கொண்டு ஆவென சத்தத்தோடு திரும்பி பார்த்தனர்.

“ஏன்டா பனைமரம் என்னை எதுக்கு இடிச்ச?”

“நீ தான் டி வந்து என்னை இடிச்ச குள்ளக்கத்திரிக்கா”

“ஆமாம் இவர் அப்படியே அம்மி இடிச்சு பார்க்க. போடா பரட்டைத்தலை. “

“என்னை நீ பரட்டைத்தலை பனைமரம்னு கூப்பிட்டு ரொம்ப டேமேஜ் பண்ணிட்டு இருக்க டி.”

“ஏற்கனவே டேம்ஜ் ஆகி தானேடா கிடக்கிற வெண்ணெய். இதுல நான் வேற புதுசா உன்னை டேமஜ் பண்ணனுமாக்கும். “

“சே க்ரேட் இன்சல்ட்.. “

“அட அந்த இன்சல்ட்டைலாம் துடைச்சு போட்டுக்கோ. முதலிலே அந்த கபசூர குடிநீர்ல இருந்து தப்பிக்கிற வழியைப் பார்ப்போம். வா யாரும் பார்க்காத முன்னாடி எஸ் ஆகிடலாம்” என்று கதவுப் பக்கம் திரும்ப அங்கே அபியும் நிவியும் கதவின் அருகே சாய்ந்தபடி நின்று  இவர்களை குறு குறுவென்று பார்த்துக் கொண்டு இருந்தனர்.

“ஏன் இரண்டு பேரும் வெளியே ஓட பார்க்குறீங்க. ஆரு அக்கா நமக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த ஜீஸை செஞ்சு இருக்காங்க. அது குடிக்காம போனா ஆரு அக்கா மனசு கஷ்டப்படும் இல்லையா?” என்றாள் நிவி ஆதங்கமாக.

“என்னது கபசூர குடிநீர், ஜூஸ்ஸா… ரைட்டுடா. அம்மா நிவி அந்த ஜூஸ் எப்படி இருக்கும்னு தெரியுமா ” என்று ஆதவ் கேட்க

“தெரியுமே…  bovonta மாதிரி இருக்கும்னு ஆதி அங்கிள் சொன்னாங்க “

“விளங்கிடும்.” என்று முணுமுணுத்துக் கொண்டவர்கள் இதற்கு மேல் தப்பிக்கமுடியாது என்று புரிந்துவிட மீண்டும் சோபாவில்  வந்து அமர்ந்தனர்.

ஆரு இருவரின் கைகளிலும் கபசூர குடிநீரைக் கொடுக்க இருவரும் விஷத்தைப் பார்ப்பதைப் போல அதை வாங்கியவர்கள் மூக்கை மூடிக் கொண்டு ஒரே கல்ப்பாக அடித்துவிட்டு சமையலறை நோக்கி ஓடினார்கள் சக்கரை டப்பாவைத் தேடுவதற்காக.

“உவாக் உவாக் ” என்று சொல்லிக் கொண்டே தர்ஷி அந்த கிச்சனையே கபளீகரம் செய்துக் கொண்டிருந்தாள்.

” ஐயையோ இந்த ஆரு சக்கரை டப்பாவை எங்க வைச்சானு தெரியலையே. வாய் வேற இப்படி கசக்குதே. அடேய் பனைமரம் நீ மட்டும் குறுக்க வராம இருந்து இருந்தா  நான் அப்பவே அலேக்கா தப்பிச்சு ஓடிப் போய் இருப்பேன் டா. நீ தான்டா எல்லாத்தையும் கெடுத்துட்டே…  ஐயையோ கசப்பை தாங்க முடியலையே என்னாலே” என்று தர்ஷியின் வாய் விடாமல் புலம்பிக்   கொண்டு இருந்தது.

ஏற்கெனவே கசப்பு ஒரு பக்கம் இப்போது இவள் கத்தல் மறுபக்கம் என இருபுறமும் சேர்ந்து திகைத்து நின்ற ஆதவ் அடுத்து என்ன செய்வது என்று அறியாது பட்டென்று அவள் இதழ்களை இழுத்து தன் இதழ்களோடு பொருத்திக் கொண்டான்.

ஸ்தம்பித்து போய் அப்படியே நின்றாள் தர்ஷி.

வாய்க்கசப்பு சட்டென மறைந்து போனாற் போல தோன்றியது அவளுக்கு.

அவனின் முத்தம் அவளுக்குள் ஏதோ ஒரு மாற்றத்தை கொண்டு வந்த நேரம் அறைக்கு வெளியே கேட்ட தடாலடி சப்தம் அவர்களை இவ்வுலகத்துக்கு கொண்டு வந்து நிறுத்தியது.

இருவர் மனதிலும் ஒரே விகிதத்தில் சங்கடமும் தயக்கமும்.

சட்டென விலகியவர்கள் ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்க்காமல் கிச்சனை விட்டு வேக வேகமாக வந்தனர்.

“டேய் அபியும் நிவியுமே அந்த கசப்பை பொறுத்துக்கிட்டு எப்படியோ குடிச்சுட்டாங்க. நீ என்ன டா சின்னக்குழந்தை மாதிரி இப்படி அடம்பிடிக்கிற. ஒழுங்கா குடி டா. ” என்று ஆதியை அதட்டிக் கொண்டு இருந்தாள் ஆரு.

“ஏன் ஆரு, என் கிட்டே bovonta மாதிரி இருக்கும்னு பொய் சொன்னே.  நான் கூட ஏதோ நல்ல குடிநீர்னு தானே நினைச்சேன். ஆனால் இதுக் குடிக்கவே முடியாத நீரா இருக்கே. ஒரு வாய் வெச்சதுக்கே இந்த கசப்பு கசக்குது. முழுசா குடிச்சா நான் உசுரோட இருப்பேனு நீ நினைக்கிறீயா. இதைக் குடிச்சுட்டு சாவுறதுக்கு பதிலா நான் கொரானா வந்தே சாவுறேன். ” என சொல்லி அடம்பிடித்தவனை முறைத்தபடி நின்று கொண்டு இருந்தாள் ஆரு.

“மவனே இப்படிலாம் பொறுமையா சொன்னாலாம் சரிப்பட்டு வர மாட்டே… ” என்று சொல்லிக் கொண்டே டைனிங் டேபிளில் இருந்து fork ஐ எடுத்து அவன் முகத்தருகே கொண்டே வந்தாள்.

வில்லச்சிரிப்பு அவள் இதழ்களில்.

“இதை மட்டும் நீ குடிக்கல. முகத்துலே பூரான் விட்டுடுவேன் ஒழுங்கா குடி டா.” என்று அவள் மிரட்ட அவன் திகிலோடு பார்த்தான்.

இவள் செய்தாலும் செய்வாள்!

அடித்து மிதித்து துவைத்தவளுக்கு fork ஆல் குத்துவது ஒன்னும் கடினமாக காரியம் இல்லையே…

அவன் முகம் பயத்தையும் கெஞ்சலையும் ஒரு சேர பூசிக் கொண்டது.

“ஆரு மா. நான் பாவம்ல. இந்த வாட்டி விட்டுடேன். அடுத்த தடவை கண்டிப்பா குடிச்சுடுறேன். ப்ளீஸ். ” என அவன் கெஞ்ச முகத்தருகே அந்த fork ஐ வேகமாக கொண்டு வந்த அடுத்த நொடியே பட்டென மொத்த கபசூரகுடிநீரையும் ஒரே மடக்கில் விழுங்கியவன் வேக வேகமாக கிச்சனுக்குள் ஓடினான்.

ஆருவும் அவன் பின்னாலேயே ஓடி வந்தாள்.

“எங்கே ஆரு மா இந்த சக்கரை டப்பாவை வெச்சு இருக்கே. கசப்பு தாங்கல.” என அவன் உதடுகளை கசப்பால் குவித்து வைத்தபடி கேட்டுக் கொண்டே திரும்பிய நேரம் ஆருவும் திரும்பினாள்.

இருவரது உதடுகளுக்கும் இடையே இரண்டு சென்டிமீட்டர் மட்டுமே இடைவெளி இருந்த நேரம் சட்டென ஆதியின் இதழ்கள் மூடிக் கொண்டது.

அவன் உதடுகள் எல்லாம் இனிப்பாய் இனித்தது.

ஆரு சர்க்கரையை அள்ளி அவன் உதடுகளில் திணித்த காரணத்தினால்.

“இப்போ கசப்பு போயிடுச்சா ஆதி? இல்லை இன்னும் கொஞ்சம் சக்கரை போடட்டுமா?” 

“இல்லை ஆரு மா கசப்பு போகல. அந்த சக்கரை டப்பாவை கொண்டா.. ” என சொல்லியபடியே அவள் கைகளில் இருந்த  டப்பாவை வாங்கி தன் கைகளில் வைத்துக் கொண்டு சர்க்கரையை அள்ளி வாயில் போட்டுக் கொண்டு இருந்தவனையே கண்விலகாமல் பார்த்து கொண்டிருந்தாள் ஆரு.

இங்கே நிகழ்ந்த கலவரங்களைக் கண்ட
நிவி அபியை நோக்கி, ” டேய் இங்கே நாம சின்னப்புள்ளைங்களா இல்லை இவங்க சின்ன புள்ளைங்களானே தெரியல… ஒரே confusion ஆ இருக்கு டா. ” என சொல்லியபடி விட்டத்தை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அங்கே இருந்த பல்லியும்  இவள் கூற்றை ஆமோதிப்பதைப் போல உச்சுக் கொட்டி அடங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!