Vaanavil – 21

அத்தியாயம் – 21

ஏதோ அவசரத்தில் தவறாகப் புரிந்துகொண்டு பேசியிருந்தாலும், அவனது இறப்பை அவள் எதிர்பார்க்கவே இல்லை. அவ்வளவு தூரம் சொல்லியும் மரணத்தை தேடிச் சென்றது மணிவண்ணன் தான். அவனுடைய அவசர முடிவிற்கு கார்குழலி எந்தவிதத்திலும் காரணம் இல்லையே!

தன்னுடைய தம்பி விரும்பியதை உயிரைக் கொடுத்து வாங்கி தர வேண்டும் என நினைத்தது அவருடைய முட்டாள்தனம். இதை வேந்தனிடம் நேரடியாக உண்மையைச் சொல்லி இருந்தால், அவன் வந்து அவளுக்குப் புரிய வைத்திருப்பான். அவர்களின் வாழ்க்கையும் நன்றாக இருந்திருக்கும் என்றே நினைக்கத் தோன்றியது.

“அண்ணி இந்த சூழ்நிலையில் தவறான முடிவைத் தேர்ந்தெடுத்து மணி அண்ணாதான். அது தெரியாமல் நானும் அவளை ரொம்பவே காயப்படுத்திட்டேனே!” வேந்தனின் குரல் வருத்தத்துடன் ஒலிக்க, அதுவரை அமைதியாக இருந்த செழியன் எழுந்து தம்பியின் அருகே சென்றான்.

சட்டென்று அண்ணனின் வயிற்றில் முகம் புதைத்தவன், “மணி அண்ணா ஏன் இப்படியொரு முடிவேடுத்துச்சு. அவ ஒண்ணும் கடையில் விற்கும் பொம்மை இல்லையே, கேட்டதும் வாங்கிக் கொடுக்க… அதையும் மீறி அவளை இப்படியொரு நிர்பந்தத்தில் தள்ளியது அண்ணன்தானே!” கண்ணீரோடு கூற, அவனது முதுகை ஆறுதலாக வருடிவிட்டான்.

“அன்னைக்கு என்ன நடந்ததுன்னு தெரியாமல், நம்மள ஒரு பெண்ணைத் தவறாக நினைக்கக்கூடாதுன்னு உனக்கு எவ்வளவு தூரம் சொன்னேன்லே! இப்போ பாரு அவசர முடிவெடுத்தது நம்ம அண்ணன், அதுக்கு தினமும் உன்னிடம் அவதிப்பட்டது அந்தப் பொண்ணு” செழியன் சொன்ன விஷயம் மனதைப் பாதிக்க, அவளது பூமுகம் மனதினுள் தோன்றி மறைந்தது.

அண்ணன் – தம்பி இருவரின் பாசப்பிணைப்பை கண்டு மனம் நெகிழ நின்றிருந்த மகிழ்வதனி, “இந்த உண்மையை இவ்வளவு சீக்கிரம் நீங்க தெரிஞ்சிகிட்டதே பெரிய சந்தோசம். ஒவ்வொரு முறை அவளுக்காக வந்து நிக்கும் என்மேல நீனு எவ்வளவோ தூரம் கோபபட்டு திட்டி இருக்கீய…” என்றவளின் குரல்கேட்டு சட்டென்று நிமிர்ந்துப் பார்த்தான்.

அவனது பார்வைக்கான அர்த்தம் புரிய, “அவ பாவம்! சின்ன வயதில் இருந்தே சந்தோசத்தை பார்த்ததே இல்லை. இனிமேலாவது நீங்க அவளை நல்லபடியாக வச்சிருக்கணும்” கண்ணில் கனிவு மின்ன கூறிய அண்ணியின் கரம்பிடித்து அழுத்தினான் வேந்தன்.

இருவருக்கும் நடுவே ஏற்பட்ட அந்த புரிதல் செழியனுக்கு நிம்மதி தர, “ரொம்ப நன்றி அண்ணி! அன்னைக்கு சூழ்நிலையில் நீங்க கொடுத்த வாக்கை எவ்வளவு இக்கட்டுக்கு நடுவே நிறைவேற்றி இருக்கீங்க. உங்களுக்கு ஆறுதலாக இருக்கக்கூட, நான் விடலையே” என்றான்.

அவனின் பக்கம் இருந்து யோசிக்கும்போது கோபம் கூட நியாயமானதாக பட, “இப்போதான் எல்லாம் சரியாகிடுச்சே! பொறவு என்ன? நீங்க முதலில் போய் அவளைப் பாருங்க” என்றாள் புன்னகையுடன்.

சட்டென்று தமையனை விட்டு விலகி, “எனக்கு இப்போ அவளைப் பார்க்கணும் போல தோணுது… நான் இப்போவே கிளம்புதேன். அன்னைக்கு கோபத்தில் அவ தம்பி, தங்கச்சியை வேற வூட்டுக்கு வர கூடாதுன்னு சொல்லிட்டேன்” வருத்தப்பட, தம்பியின் தோளைத் தட்டினான்.

“எல்லாமே சீக்கிரம் சரியாகும்டா… நீ முதலில் குழலியைப் பாரு” என்று கூற, அவனும் சரியென்று தலையசைத்து அறையைவிட்டு வெளியேறினான்.

வெகு நாட்களுக்குப் பிறகு அவன் முகம் தெளிவாக இருப்பதைக் கண்ட செழியன், தன்னருகே நின்றிருந்த மனைவியின் கரம்பிடித்து இழுத்தான். அவனது திடீர் தாக்குதலில் மார்பில் சென்று விழுந்த மகிழ்வதனி படபடப்புடன் நிமிர்ந்து கணவனைப் பார்த்தாள்.

“ஒரே பார்வையில் மற்றவர்களின் மனதைப் புரிந்துகொள்ள தெரிந்தவளுக்கு, என் மனசு எப்போ புரியும்” மெல்லிய குரலில் கேட்க, அவளின் நெஞ்சம் படபடவென்று அடித்துக் கொண்டது.

“வேந்தனோட இந்த மாற்றம் நான் எதிர்பார்த்த ஒன்னுதான்” நெற்றியில் முத்தமிட, அவளின் உடல் சிலிர்த்து அடங்குவதை அவனால் உணர முடிந்தது.

அவளின் கன்னத்தில் இதழ்பதித்து விலகிய செழியன், “நான் ஆபீஸ் கிளம்பறேன்” சிரிப்புடன் அறையைவிட்டு வெளியேற, அவனைப் பார்த்தபடி சிலையாகி நின்றிருந்தாள் மகிழ்வதனி.

எவ்வளவு நேரம் தன்னிலை மறந்து சிலையாகி நின்றிருந்தாளோ அவளுக்கே தெரியவில்லை. அவளது செல்போன் சிணுங்கி கவனத்தை ஈர்க்க, திரையில் தெரிந்த கணவனின் இலக்கத்தைக் கண்டு போனை எடுத்து, “ஹலோ” என்றாள்.

“………………..” மறுபக்கம் சொன்ன தகவலைக் கேட்டு, அவளது காலடியில் பூமி நழுவியது. அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் மூளை வேலை நிறுத்தம் செய்தது.

“அவரோட உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லையே!” திணறலோடு கேட்கும்போதே, கண்களில் கண்ணீர் அருவியாக பெருகியது.

“…………………” என்றவர் பதில் சொல்ல, “நான் உடனே கிளம்பி வர்றேன்” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்துவிட்டு திரும்ப, அவள் போனில் பேசிய விஷயத்தை அரைகுறையாகக் கேட்டுவிட்டசெண்பகம் – பூரணி இருவரும் அறைக்குள் நுழைந்தனர்.

***

திருமணம் முடிந்தபிறகு முதல் முறையாக பிறந்த வீட்டிற்கு செல்லும் கார்குழலி மனம் அமைதியாக இருந்தது. சூரியன் உச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்க, சாலையின் இருப்புறமும் வானுயர வளர்ந்து நின்ற மரங்கள் நிழல் தந்தன. இயற்கையின் அழகை ரசிக்க மனமின்றி, அவள் மனம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தது.

ஒவ்வொரு முறை பிரச்சனையின் போதும், தனக்கு பக்கபலமாக வந்து நிற்கும் தோழியை முகம் நினைவிற்கு வந்தது. தமையனின் இறப்பிற்கு காரணமானவள் என்ற எண்ணத்தில் தினமும் வதைக்கும் கணவனின் முகமும் வந்து போனது.

இதற்கிடையே செண்பகம் பாட்டியின் குணம் தெரிந்ததும், ‘இத்தனை நாளாக இவங்களோட இன்னொரு முகம் தெரியாமல் இருந்துவிட்டோமே! ஒவ்வொரு முறையும் தோழி வந்து காப்பாற்றுவது நடக்காத காரியம். அதுக்காக தம்பி மற்றும் தங்கையை அப்படியே விட்டுவிட முடியாது’ தீவிர யோசனையுடன் நடந்த கார்குழலியின் காதில் வேந்தனின் அழைப்பு கேட்கவில்லை.

‘நான் இவ்வளவு தூரம் கூப்பிடுதேன் காதிலேயே வாங்காமல் போறாளே… அந்த அளவுக்கு தம்பி, தங்கைங்க முக்கியமாக போயிட்டாங்க’ மனதிற்குள் செல்லமாக திட்டித் தீர்த்தபடி அவளைப் பின்தொடர்ந்து சென்றான்.

வீட்டை அடைந்தும் சிந்தனைகளை ஓரம்கட்டிவிட்டு, “வீட்டில் யாருலே?” என்ற தமக்கையின் குரல்கேட்டு, மூவரும் சட்டென்று திரும்பி வாசலை பார்த்தனர்.

பாதி சாப்பாட்டில் சட்டென்று எழுந்த சரவணனின் முகம் பிரகாசமாக மாற, “வா அக்கா ஏன் அங்கனயே நின்னுட்டே!” என்றபடி வாசலுக்கு விரைந்தான். 

அதற்குள் கண்களில் கண்ணீர் திரையிட ஓடிவந்து தமக்கையைக் கட்டிக்கொண்டு, “அக்கா” கதறிய தங்கை இருவரையும் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்ட கார்குழலி விழிகளும் லேசாக கலங்கியது.

தான் பெரியவன் என்பதை மறந்து சரவணனும் சிறுவன்போல அழுகவே, “ஏலே அதுகதான் சின்ன பிள்ளைகள் அழுகுது” தம்பியின் கண்ணீரைத் துடைத்துவிட, நால்வரும் தங்களின் உலகத்தில் சஞ்சரித்து இருந்தனர்.

அதே நேரத்தில் வீட்டின் முன்பு வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி வந்த வேந்தனும் அந்த காட்சியைக் கண்டு சிலையாகி நின்றுவிட்டான்.

சட்டென்று தன்னை மீட்டுக் கொண்ட கார்குழலி, “இன்னைக்கு என்னவே சாப்பாடு?” என்று கேட்க, மற்ற மூவரும் தங்களுக்குள் பார்வையைப் பரிமாறிக் கொண்டனர்.

தன் தங்கைகளின் மீது பார்வையைப் படரவிட்டு, “நீனு போனதில் இருந்து இவிய இருவரும் ஒழுங்காவே சாப்படல அக்கா… அதுதான் ஆத்துக்கு போனபோ, மீனு பிடிச்சிட்டு வந்து சமைச்சேன். பழைய சோறு இருந்ததால் அதை அப்படியே விட்டுட்டோம்” தம்பி மெல்லிய குரலில் கூற, அவளின் முகம் பூப்போல மலர்ந்தது.

“அந்த வீட்டில் மூணு நேரமும் வயிறார சாப்பிட்டாலும், உங்க நெனப்பில் சோறே இறங்காதுலே…” அவளும் அவர்களோடு சாப்பிட அமர, தன்னருகே நிழலாட கண்டு சட்டென்று திரும்பிப் பார்த்தாள்.

அதுவரை அவர்களது பாசப்பிணைப்பைக் கண்டு தன்னிலை மறந்து சிலையாகி நின்றிருந்த கணவனைக் கண்டவுடன், “வாங்க” அவளது குரல்கேட்டு தன்னிலைக்கு மீண்டவன் வேந்தன், ஒற்றைத் தலையசைப்புடன் வீட்டிற்குள் நுழைந்தான்.

அதே நேரத்தில் தன் தமக்கையை விட்டு இரண்டடி நகர்ந்து நின்றவர்களின் மீது அவனது பார்வைப் படிய, “உங்ககிட்ட சொல்லாமல் அக்கா இங்கன வந்துடுச்சுன்னு நினைக்கேன், இனி அந்த மாதிரி தவறு நடக்காது, நீங்க அவள உங்களோட அழச்சிட்டு போங்க” சரவணன் மெல்லிய குரலில் கூற, அந்த வார்த்தை கார்குழலியை வெகுவாக பாதித்தது.

‘இந்த கண்ணாலத்தை ஏன்தான் செய்தேனோ? சொந்த வீட்டு உறவுகளையே மூன்றாம் நபர்போல மாறிவிடுமோ?!’ என்ற எண்ணம் தோன்றி அவளை நிம்மதி இழக்க செய்ய, மற்றொரு பக்கம் திடீரென்று வந்து நிற்கும் கணவன் என்ன பூகம்பத்தை உருவாக்க போகிறான் என உள்ளம் பதைபதைத்தது.  

அன்று யோசிக்காமல் பேசிய வார்த்தைகள் சிறியவர்களின் மனதை எவ்வளவு தூரம் காயப்படுத்தி இருக்கிறதென்று உணர்ந்தவன், “ஸாரி! அன்னைக்கு இருந்த கோபத்தில் யோசிக்காமல் பேசிட்டேன், உங்க அக்கா இனிமேல் காடுக்கரைத் தோட்டத்தை எல்லாம் பார்த்துக்குவா… நீ தொடர்ந்து வேலைக்கு போ சரவணா!” சூழ்நிலைப் புரிந்துகொண்ட பேசிய கணவனை வெடுக்கென்று நிமிர்ந்து பார்த்தான்.

அவனது பேச்சில் மற்ற மூவரின் மூவரின் முகமும் மலர்ந்து விகாசிக்க, “தேங்க்ஸ் மாமா! அம்மா இறந்த பிறகு எங்களுக்கு எல்லாமே அக்காதான். அவியல பாக்காமல், பேசாமல் நெதமும் அழுகையாக வரும். இன்னைக்கு வர அக்கா எங்களுக்காக தான் அதிகம் யோசிச்சிருக்கிற, அவளை நீங்க பத்திரமா பாத்துக்கோங்க” அனிதா கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டு கூற, தன்னவளின் மீதான காதலோடு சரியென்று தலையசைத்தான்.

“இன்னைக்கு என்ன சமையல்? நானும் சாப்பிட வரலாமா?” வேந்தன் எதார்த்தமாக கேட்க, அவர்கள் மூவரின் முகமும் சட்டென்று களையிழந்து போனது.

“மாமா பழைய சோறுதான் இருக்கு… நீங்க இங்கேயே இருங்க, நான் கடையில் போய் சாப்பாடு வாங்கிட்டு வாறேன்” கையைக் கழுவிக்கொண்டு திரும்பி சரவணன், “காயு அந்த பைக் சாவியை எடு” என்றான் பரபரப்புடன்.

“அதெல்லாம் வேண்டாம் சரவணா!” அவனைத் தடுத்தா வேந்தனும் பாகுபாடுப் பார்க்காமல் அவர்களோடு சாப்பிட அமர, தன் மாமனை கவலையுடன் ஏறிட்டாள் சின்னவள்.

“மாமா நானும் அக்காவும் சமைக்குதோம். பொறவு கூட எல்லோரும் சேர்ந்து சாப்பிடலாம். இது பழைய சோறு மாமா… அது உங்களுக்கு வேணாம்” என்ற சின்னவளைப் புன்னகையுடன் நோக்கினான் வேந்தன்.

தன் கணவனின் பேச்சு மற்றும் செயலில் வித்தியாசத்தை உணர்ந்த கார்குழலி சிலையாகி நின்றிருக்க, “நீனு என்ன வேடிக்கைப் பார்த்துட்டு நிக்குத?” உரிமையுடன் அதட்டிய கணவனின் அருகே அமர்ந்து பழையச் சோறு கரைக்க, மற்ற மூவரும் மறுபேச்சின்றி அமைதியாக அமர்ந்தனர்.

அவள் எல்லோரும் சோறு ஊற்றிக் கொடுக்க, “வாவ் மீனா எனக்கு ரொம்ப பிடிக்குமே!” அதையும் ரசித்து உண்ட அக்காவின் கணவனை வியப்புடன் நோக்கிய மூவரும் தயக்கத்துடன் சாப்பிட்டனர்.

அதே நேரத்தில் அவர்களின் முகத்தில் தெரிந்த சந்தோசத்தைக் கவனித்த வேந்தன், ‘இத்தனை நாளாக அவர்களின் வாழ்க்கைச் சக்கரம் சுழல காரணமாக இருந்தவளைக் கல்யாணம் கட்டிட்டு, தாய் – தகப்பன் இல்லாத பிள்ளைகளை கண்டுக்காமல் விட்டுட்டேனே!’ அவன் மனம் குற்ற உணர்வில் குறுகுறுத்தது.

ஒரு தாய் ஸ்தானத்தில் இருந்து மனைவி அந்த குடும்பத்தைத் தாங்கி இருப்பது புரிய, ‘இனிமேல் தந்தை இடத்தில் இருந்து இவர்களின் தேவைகளை கவனிக்கணும்’ மனதில் உறுதி எடுத்த வேந்தனின் பார்வை கார்குழலி மீது படிந்து மீண்டது.

சிறிதுநேரம் அவர்களோடு பேசிவிட்டு கிளம்பிய கணவனிடம், “என்னைய முன்னே போக சொல்லிட்டு, நீங்க ஏன் பின்னாடியே வந்தீக?” என்றாள்.

“உன்னை ரொம்ப தவறாகப் புரிஞ்சி வைச்சிருந்தேன், அதுக்காக ஒரு ஸாரி சொல்லணும்னு தோணுச்சு” என்றவன் கண்ணில் தெரிந்த காதல், அவள் மனதை என்னவோ செய்தது.

“சரி நான் கிளம்பறேன்” விடைபெற்றுக் கிளம்பிய கணவனைப் பார்த்தபடி வாசலில் நின்றவள், பிறகு வழக்கம்போலவே வேலையைக் கவனிக்க தொடங்கினாள்.

பெரிய வீட்டிற்கு திருமணமாகி சென்றவள், மீண்டும் சொந்த நிலத்தில் வந்து விவசாயம் செய்வதைப் பார்த்து சிலர் பெருமையாக பேச, ஒருசில தர்மசீலனின் குடும்பத்தை கேவலமாக பேச தொடங்கினர். அதை எல்லாம் காதிலேயே வாங்காமல் கார்குழலி கடமையில் மட்டும் கண்ணாக இருந்தாள்.

அன்றைய பொழுதைப் பிறந்த வீட்டில் தம்பி மற்றும் தங்கைகளோடு கழித்துவிட்டு, “சரவணா நான் வீட்டுக்கு கிளம்புதேன். நீங்க மூவரும் பத்திரமாக இருங்க” என்று சொல்லிவிட்டு புன்னகையுடன் விடைபெற, அவளை வாசல்வரை வந்து வழியனுப்பி வைத்தனர்.

கார்குழலி மனம் கணவனைச் சுற்றி வட்டமிட, ‘அவருக்கு ஏதோ விஷயம் தெரிஞ்சிருக்கு, அதுதான் என்னைத் தேடி இவ்வளவு தூரம் வந்திருக்கிறாரு!’ என்று நினைக்கும்போது மகில்வதனியின் பூமுகம் மனக்கண்ணில் தோன்றி மறைந்தது.

“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு” என்ற குறளுக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் தோழிக்கு எந்தவழியில் கைமாறு செய்ய போகிறோம் என்ற எண்ணத்துடன் வீட்டை அடைய, வழக்கத்திற்கு மாறாக அந்த இடமே கலவர பூமிபோல காட்சியளித்தது.

‘யாருக்கு என்னாச்சு?’ என்ற பதட்டத்துடன் வீட்டிற்குள் நுழைய, தன் கால்வலியைக் கூட பொறுத்துக் கொண்டு நின்றவனின் தோற்றமே மனதிற்குள் பயத்தை ஏற்படுத்தியது.

அவன் கண்ணில் தெரியும் கனிவு காணாமல் போயிருக்க, விழிகளில் கோபம் என்னும் கனல் வீசியது. அதைக் கவனித்த கார்குழலி வேகமாக மகிழ்வதனியைப் பார்வையால் தேட, அவளின் தேடல் பூஜ்யத்தில் முடிந்தது.

எந்தவிதமான எதிர்பார்ப்புகளும் இன்றி உதவிகளை வாரிக்கொடுத்த வள்ளலாய் திகழ்ந்தவள், தன்னால் மற்றவர்கள் பிரச்சனைக்கு ஆளாக வேண்டமென்ற முடிவில் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியேறி இருந்தாள்.

அவள் செல்ல காரணமான செண்பகம் தான் எடுத்த சபதத்தில் ஜெய்த்துவிட்டதாக கர்வம் கொண்டார். தன் பேரனின் வாழ்க்கையைத் தெரிந்தே கேள்விக்குறியாக மாற்றிவிட்டோம் என்று தெரியாமல், இதே வேகத்துடன் அவனுக்குத் திருமணத்தை முடித்துவிட நினைத்தார்.