Vaanavil – 22

How-Heart-broken-status-Good-for-mind-6a169d3a

Vaanavil – 22

அத்தியாயம் – 22

அனைவரும் அமைதியாக நின்றிருக்க கண்டு கார்குழலி மனம் பதைபதைக்க, யாரிடம் என்னவென்று கேட்பது என்று புரியாமல் நின்றாள்.

அங்கிருந்த அமைதியைக் கலைக்கும் விதமாக, “நீ அவ கழுத்தில் தாலி கட்டிய நேரமே சரியில்லப்பா. அதுதான் இப்படி அபசகுணமாக நடக்குது” செண்பகம் தன்போக்கில் பேசிக்கொண்டே செல்ல, அவனின் பொறுமைக் காற்றில் பறந்தது.

“போதும் நிறுத்துங்க” அவரைக் கைநீட்டித் தடுத்த செழியன் தொடர்ந்து,

“நீங்க செய்த கீழ்த்தனமான வேலைக்கு நேரத்தையும், காலத்தையும் காரணம் காட்டாதிய… எவனோ ஒருத்தன் குடிபோதையில் வேணும்னே வண்டியைக் கொண்டு வந்து விட்டதுக்கு அவ எப்படி காரணமாக முடியும்?” அவன் கேள்வியில் நியாயம் இருக்க, மற்றவர்களின் பார்வை செண்பகம் பாட்டியின் மீது படிந்தது.

அவர் பேச வாய் திறக்கும் முன்பே, “ஏற்கனவே ஒருத்தனை இழந்ததை தாங்க முடியாம நடைபிணமாகவே வாழுதேன். உன்னையும் பழி கொடுத்துட்டு போக சொல்லுதியா?” இடையில் புகுந்த பூரணி, மகனை நிற்க வைத்து கேள்வி கேட்டாள்.

அதுவரை மகிழ்வதனி வீட்டைவிட்டுச் சென்றதற்கு பாட்டி மட்டுமே காரணமென்று நினைத்திருந்த செழியனுக்கு உண்மை புரிந்துபோக, “அம்மா நீங்களும் இதுக்கு உடந்தையா?” எனக் கேட்கும்போதே அவன் குரல் உடைந்தது.

செழியனின் மனம் தவிக்கும் தவிப்பை உணராமல், “ஆமாலே! ஏற்கனவே என்ன ஜாதகமோ அப்பனையும், ஆத்தாளையும் முழுங்கிட்டு வீட்டுக்குள் அடியெடுத்து வச்ச மகராசி. இன்னைக்கு நீ அடிப்பட்டு ஹாஸ்பிட்டலில் இருக்கும் சேதிகேட்டு, என் பெத்த வயிறு பதறிப் போச்சு” கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு மேலும் தொடர்ந்தார்.

“நான் பெத்த ஒண்ணை பழி கொடுத்துட்டு நான் தவிக்கும் தவிப்பு போதும்னு, நான்தான் அவளை கழுத்தைப் பிடிச்சு வெளிய தள்ளினேன்” பூரணி கோபத்துடன் கூற, செழியன் கண்களில் கண்ணீர் திரையிட்டது.

அவர்கள் பேசுவதைக் கேட்டு, கார்குழலியின் காலடியில் பூமி நழுவியது. ‘பிரிவு’ என்ற வார்த்தை, தெளிந்த மனதில் கல் வீசியதைப் போல இருந்தது.

‘இவிய என்ன சொல்லுறாக… மகிழ்வதனி எங்கே போனா?’ அடுத்தடுத்து ஆயிரம் கேள்விகள் மனதில் அணிவகுத்து நிற்க, அதுவரைக் கலங்கிப் போய் நின்றவள் மூளை வேகமாக செயல்படத் துவங்கியது.

மற்றவர்கள் பேசும் பேச்சைக் கேட்டு, பயந்து ஓடிப்போகும் பெண் அவள் கிடையாது. அப்படியிருக்கும் போது திடீரென்று அவள் கிளம்பிச் செல்ல, இது மட்டுமே காரணமாக இருக்க முடியாது என்பதை மட்டும் உறுதியாக நம்பினாள் கார்குழலி.

“எனக்கு நல்லது செய்யறேன்னு என் உயிரானவளைப் பிரித்து நடைபிணமாகவே மாற்றிட்டீங்க இல்ல.” வெறுப்பின் உச்சத்தில் நின்று பேசியவனின் கண்ணில் வலி மட்டுமே!

“மாமா எனக்கு ஒண்ணுமே புரியல. ஆமா மகிழ் எங்கே?” என்ற கேள்விக்கு உதட்டைப் பிதுக்கி மறுப்பாக தலையசைக்க, அவளது கண்களில் கண்ணீர் அருவியாகப் பெருகியது.

அதுவரை ஆட்டிய ஆடுபுலி ஆட்டத்தில் தான் ஜெய்த்துவிட்ட இறுமாப்பில் இருந்த செண்பகம், “அந்த ஓடுகாலியின் நினைவை மறந்துவிட்டு, சீக்கிரமே நான் பாத்து வக்கிற பெண்ணை கண்ணாலம் செய்யப் பாருலே” என்றார் அதிகாரமாக.

அதுவரை அடக்கி வைத்திருந்த கோபம் எரிமலைப் போல வெடிக்க, “உன்னோட அதிகாரம் எல்லாம் உம் புருஷன், மகன் – மருமகளிடம் வச்சுக்கோ. என்னட்ட உம்மோட அதிகாரம் சொல்லுப்படியாது” அவன் கோபத்துடன் கர்ஜிக்க, தன் பேரனின் அதட்டலில் ஆணிவேரும் ஆடிப் போக பயந்துப் போய் நின்றார் தர்மசீலன்.

சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்பதற்கு உதாரணமாக நின்ற மகனைப் பார்த்து, ‘நாமும் இவனைப் போல இல்லாமல் போயிட்டோமே…’ என்ற நினைத்த சத்தியசீலனுக்கு வருத்தம் மேலோங்கியது.  

“வீட்டுக்குப் பெரியவங்க என்றால், அவங்க குடும்பத்தை வழிநடத்திச் செல்லணும். அதை விட்டுட்டு மகன் – பேரன் என்று மொத்த வம்சாவளியை அடக்கி ஆளும் உரிமையை உனக்கு யாரு குடுத்தது” என்றவன் பேச்சினில் மரியாதைக் காற்றோடு பறக்க, செண்பகம் பேரனை எரிப்பதுபோல பார்த்தார்.

அவனது பேச்சைக் கேட்டு கோபம் வரவே, “ஏய் என்னோட வம்சம் தழைக்க, நான் சொல்வதை தான்லே நீனு கேட்கணும்” அதிகாரமாகச் சொல்ல, செழியன் எரிப்பதுபோல பார்த்தான்.

“நான் தர்மசீலன் வம்சாவளி. எங்க தாத்தனும், அப்பனும் வெனா நீ போடும் சட்டதிட்டத்திற்கு கட்டுப்பட்டு நிக்கலாம். என்னை அந்த வட்டத்திற்குள் உன்னால் நிக்க வைக்க முடியாது!” அவரை எச்சரிக்க, பேரனின் பேச்சில் உடல் சிலிர்க்க நின்றிருந்தார் தர்மசீலன்.

தலைக்குமேல் வெள்ளம் போனபிறகு ஜான் போனால் என்ன? முழம் போனால் என்ன என்பதுபோல இருந்தது செழியனின் பேச்சு. அதுவரை தமையன் கோபபட்டுப் பார்த்திராத வேந்தனே திகைத்துப் போய் நின்றிருக்க, ‘இவியளுக்கு இம்பூட்டு கோபம் வருமா?’ அதிர்ச்சியுடன் செழியனை ஏறிட்டாள் கார்குழலி.

மற்றொரு பக்கம் செண்பகம் எது வந்தாலும் ஒரு கை பார்க்கலாம் என்ற எண்ணத்துடன், “என்னாலே செய்வே?” என்றான்.

“என் வாழ்க்கையை அந்தரத்தில் தொங்கவிட்ட உன்னை எண்ணி பத்து நிமிசத்தில் லாக்கப்பில் வைப்பேன் பாக்குதியா? வரதட்சணைக் கேட்டு என் மனைவியை கொடுமைப் படுத்து வீட்டைவிட்டே அனுப்பிட்டேன்னு சொல்வேன்” அவன் சொன்னதைக் கேட்டு சர்வமும் நடுங்கிப் போக, ஆடிப் போய் நின்றார் செண்பகம்.

பூரணி, “அவிய உன் பாட்டிலே” என்றார் அதட்டலாக.

அவரைப் பார்வையால் எரித்த செழியனோ, “நீங்க என்னோடு பேசாதிய? அப்புறம் மரியாதை கெட்டுட்டும்” விரல்நீட்டி எச்சரிக்க, வாயடைத்துப் போய் நின்றார்.

“நீ இம்பூட்டு துணிச்சலாகக் கண்ணாலம் செய்து வைக்க ரெடியாகுற. அப்போ மகிழ்வதனி வீட்டைவிட்டுப் போக வேற ஏதோ பெரிய காரணம் இருக்கு” நிறுத்தி நிதானமாகக் கூறியவன் பார்வையில் மனதளவில் திடுக்கிட்டுப் போனார் செண்பகம்.

அதே சமயம் பூரணி அதிர்ந்து போய் நிற்க, “இன்னைக்கு சொல்லுதேன் நல்லா கேட்டுக்கோங்க. என்னோட உடலில் உயிர் இருக்கும் வரை, அவளோட நினைவுகள் என் நெஞ்சில் இருக்கும். அதை யாருமே அழிக்க முடியாது. எனக்கு அவதான் உலகம். அவளைத் தவிர இன்னொரு பெண்ணை சிந்தையில் கூட நினைக்க மாட்டேன்” அழுத்தம் திருத்தமாக தன் காதலைக் கூறியவனின் கண்ணில் மின்னல் மின்னியது.

“அவ இல்லாத வீட்டில் என்னால் ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது” அவன் திட்டவட்டமாக அறிவிக்க, அதைக்கேட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் சிலையாகி நின்றனர்.

அவனது இந்த பேச்சைக் கேட்டு கோபத்தில் உள்ளம் கொந்தளிக்க, “அந்த பைத்தியக்காரி என்ன மாயமந்திரம் போட்டாலோ, இவன் இந்த குதி குதிக்குதான். அவ எல்லாம் நல்லாவே இருக்க மாட்டா…” என்று மனசார சாபம் கொடுத்தார் பூரணி.

“வினை விதைத்தவன் வினை அறுப்பான், திணை விதைத்தவன் திணை அறுப்பான். அதையெல்லாம் அறுவடை செய்யும் காலமும் வரும்” என்றவன் பொங்கி வந்த கண்ணீரை இடதுபக்கத் தோளில் துடைத்துக் கொண்டு, மீண்டும் தொடர்ந்தான்.

“அவளோட காதலை மட்டுமே பெருசாக நினைத்து, என்னை விட்டு நிரந்தரமாக விலகிப் போனவள் நிஜமாகவே பைத்தியக்காரி தான். மத்தவங்களைப் பற்றி யோசித்தவள், அவள் இல்லாமல் நான் எப்படி இருப்பேன்னு நினைக்கல இல்ல” என்றவன் மனம் வலியில் துடிக்க, கார்குழலிக்கு மனோகரின் நினைவு வந்தது.

அதுவரை கலங்கி நின்றவளின் மனதில் புதிய தைரியம் தோன்ற, “மாமா மகிழ்வதனி ஊரைவிட்டுப் போக வாய்ப்பே இல்ல. நம்ம நேராக ஹாஸ்பிட்டல் போய் பார்க்கலாம், அவ அங்கே இருக்க நிறைய வாய்ப்பு இருக்கு” என்றாள்.

அதே சிந்தனையுடன் நின்றிருந்த வேந்தனும், “எனக்கும் அதுதான் தோணுது” என்றான்.

செழியனின் முகம் சட்டென்று பிரகாசமாக, ‘கடைசி வாய்ப்பாக தன் மனைவி மருத்துவமனையில் இருக்க வேண்டும்’ கடவுளுக்கு மனு போட்டுவிட, அதை உடனே நிராகரித்தார்.

அதை அறியாமல் மூவரும் மருத்துவமனைக்குக் கிளம்பிச் செல்ல, “அவ மறுபடியும் எப்படி வீட்டுக்குள் வாரான்னு நானும் பாக்குதேன்” சபதம் எடுத்த செண்பகம், தன் மருமகளை அழைத்துக்கொண்டு அங்கிருந்து நகர நினைத்தார்.

அதற்குள், “அம்மா ஒரு நிமிஷம்” என்று அவரைத் தடுத்தார் சத்தியசீலன்.

“என்னடா?” என்றவர் தோரணையுடன் கேட்க, “இவளுக்கு கிட்டத்தட்ட மூணு வருஷம் குழந்தையே இல்லன்னு, பூரணியை வார்த்தைகளால் அத்தனை வார்த்தை பேசி ஊரறிய அத்துக் கழிக்க எல்லாம் ஏற்பாடு பண்ணுனீங்க. அதெல்லாம் ஏன் என்று கேட்காமல் அம்மா பேச்சு சரியாக இருக்கும்னு தலையாட்டினேன்” என்றவர் உதடுகள் விரக்தியில் புன்னகைத்தன.

பூரணி வந்த  கண்ணீரை அடக்கிக் கொண்டு பதுமையாக நிற்க, “என்னைவிட்டு பிரிய முடியாமல், கண்டிப்பாக தனக்கு குழந்தை பிறக்கும்னு நம்பிக்கையாக சொல்லி முத்து முத்தாக மூன்று ஆண் வாரிசை பெற்றெடுத்த பிறகுதான், உங்களுக்கு இவமேல் இருந்த கோபம் போச்சு” என்று சொல்லும்போது, செண்பகம் ஒரு புருவத்தை தூக்கி மகனைக் கேள்வியாக நோக்கினார்.

“அதுக்கு என்னாலே இப்போ?” அவர் அதே குரலில் கேட்க,

“அவ பெத்த ஒண்ணை பறிகொடுத்தது விதி. மத்த இரண்டு பெரும் அவங்க விருப்பப்படியே வாழ்க்கையை அமைத்துக் கொள்வது அவங்க உரிமைன்னு நானும் அமைதியாக இருந்தேன்” என்றவர் இடைவெளிவிட, தர்மசீலன் பார்வை கூர்மையுடன் மகனின் மீது படிந்தது.

“நீ பெத்ததும் ஆண் வாரிசு, உம் மருமகளுக்கு பிறந்ததும் ஆண் வாரிசு என்ற கர்வத்தில் இருக்கிற இல்ல. தவறுன்னு தெரிந்தே ஒரு பெண்ணோட வாழ்க்கையில் விளையாடுறீங்க இல்ல. இதுக்கான தண்டனையை உங்களுக்கு கடவுள் தருவார் என்ற நம்பிக்கை எனக்கு இல்ல” என்றவர் பார்வை மனைவியின் மீது அழுத்தம் திருத்தமாக படிந்தது.

“உங்க அத்தை செய்த கொடுமையைவிட, நீ அந்த பெண்ணுக்கு பாதகம் செஞ்சிருக்கிற பூரணி. செழியன் இவ்வளவு தூரம் அந்த பெண்ணை உயிராக விரும்பகிறான்னா, அதுக்குப் பின்னாடி ஏதோவொரு காரணம் இருக்கும்” என்றவர் மறந்தும் செண்பகத்தை தாயென்று அழைக்காமல் மறுக்க, அது அவரை மனதளவில் பாதித்தது.

தன் கணவனின் பார்வையில் இருந்த தீவிரம் பூரணி, “அதுக்காக என்னங்க செய்ய போறீங்க” பயத்துடன் கேட்டவளின் குரல் உடைய தயாரானது.

தன் மகனின் வாழ்க்கையில் பிரிவினையைக் கொண்டு வந்த தாய்க்கு, அதன் வலியை உணர்த்த நினைத்தார் சத்தியசீலன். அத்துடன் செண்பகத்துடன் இன்னும் கொஞ்சநாள் தன் மனைவி இருந்தால், அவளும் இன்னொரு செண்பகமாக மாற வாய்ப்பு அதிகம் என்று உணர்ந்து உடனே அந்த முடிவை எடுத்தார்.

“கூட்டுக் குடும்பமாக இருந்ததால் தானே, உறவுகளோட அருமை உங்க இருவருக்கும் புரியாமல் போயிடுச்சு. எனக்கு என் மகன்களோட வாழ்க்கைதான் ரொம்ப முக்கியம். இன்னைக்கே நம்ம தனிக்குடித்தனம் போகிறோம்” சத்தியசீலன் தன் முடிவைத் தெளிவாக கூற, அதைக் கேட்டு நெஞ்சம் பதற மகனை ஏறிட்டார் செண்பகம்.

திருமணமான நாளில் இருந்து தாயின் கையில் பொம்மையாக இருந்த மகனின் தெளிவான பேச்சினில் உள்ளம் நெகிழ்ந்து போக, “நம்ம பண்ணை வீட்டை இப்போவே தயார் பண்ண சொல்லுதேன் சத்தியா” என்ற தர்மசீலன், அங்கிருந்தபடியே வேலையாளை அழைத்து விவரம் கூற, சரியென்று தலையசைத்துவிட்டு வெளியே சென்றான்.

“மருமகளே! நீனு போய் ஆகவேண்டிய ஏற்பாடுகளை கவனி” பூரணியை அங்கிருந்து அனுப்பிட, அதில் உடன்பாடு இல்லை என்றபதால் சிலையாகி நின்றார்.

“பூரணி நான் சொன்னதை கேட்டால், மீதம் இருக்கும் காலம் முழுக்க உன் வாழ்க்கையை என்னோடு வாழலாம். இல்லன்னா இன்னைக்கே பஞ்சாயத்தைக் கூட்டி அத்து கழிச்சிட்டு போயிட்டே இரு” அவர் அடுத்த குண்டைத் தூக்கிப் போட, அவளது கட்டளையையும் மீறி அத்தையின் கையை உதறிவிட்டு அறைக்கு விரைந்தார்.

தன் மகனின் இந்த முடிவைக் கேட்டு ஆடிப்போன செண்பகம், “என்னாலே பேசுதே” என்று அவரிடம் சண்டைக்கு வர, அதை அவர் காதிலேயே வாங்காமல் கையமர்த்தி தடுத்துவிட்டு மேலும் தொடர்ந்தார்.

“இன்னைக்கு நீங்க பேசிய ஒவ்வொரு வார்த்தையும், ஒரு விதைக்கு சமம்.  அவளோட மனசில் நீங்க விதைத்த விதைகள் நாளை வளர்ந்து விருச்சமாகலாம். அன்னைக்கு ஏன் அவளை அப்படி பேசினோம்னு நீங்க யோசிப்பீங்க” என்றவர் சொன்ன மகனின் வார்த்தைகளில் இருந்த உண்மையை உணர்ந்த தர்மசீலன் மனம் மகிழ்ச்சியடைந்தது.

“தவறு செய்த நீங்கதான் உங்களைத் திருத்திக்கணும். அதுக்காகத்தான் இந்த தண்டனையை உங்களுக்கு கொடுக்கிறேன்” என்று சொல்லும்போது மனைவி உடமைகளோடு வெளியே வர, அங்கே நின்றிருந்த தந்தையின் காலில் விழுந்து வணங்கினார்.

“இந்த முடிவு உனக்கு நன்மையைக் கொடுக்கணும் கண்ணா! நீ இன்னைக்கு எடுத்த முடிவில் எல்லாமே மாறும்னு நான் மனதார நம்புகிறேன். நீங்க இருவரும் அங்கே போய் இருங்க, நான் நேரம் கிடைக்கும் போது அந்தப்பக்கம் வந்தால் வருகிறேன்” என்று ஆசீர்வாதம் செய்து வாசல் வரை சென்று அவர்களை வழியனுப்பி வைத்தார்.

அதுவரை உலகத்தையே வென்றுவிட்டதாக நினைத்த செண்பகம், ‘ஐயோ என் மகன் போறானே!’ என்று அழுகையுடன் இடிந்துப்போய் அமர, அதைக் கண்ட தர்மசீலன் மனம் வலித்தது.

“பெண்களுக்கு பூமாதேவியைப் போல பொறுமை வேணும்!  இப்படி ஒரு நாள் வாழ்க்கையில் கண்டிப்பாக வரும்னு தான் அமைதியாக, நீ இத்தனை நாளாக ஆட்டிய ஆட்டத்தை நின்று வேடிக்கைப் பார்த்தேன். என்னைக்குமே மத்தவங்களை அடக்கி ஆளணும்னு நினைக்காதே!” அறிவுரை சொல்லிவிட்டு அறைக்குள் சென்று மறைந்தார்.

இங்கே நடந்த எதுவும் அறியாத இளஞ்செழியன், மேகவேந்தன் – கார்குழலி மூவரும் மருத்துவமனையில் சென்று விசாரிக்க, “அவருக்கு வீட்டில் வைத்தே ட்ரீட்மெண்ட் கொடுப்பதாக சொல்லி, அவங்க மகள் வந்து காலையே டிஸ்ஜார்ஜ் செய்து கூட்டிட்டு போயிட்டாங்க” என்ற தகவல் மட்டுமே கிடைத்தது.

கடைசியாக இருந்த ஒரு கதவும் மூடப்பட்டுவிட, அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் அதிர்ச்சியடைந்தான் இளஞ்செழியன். தன்னவள் எடுத்த முடிவில், அவன் மனம் காயம்பட்டுப் போனது.

அவள் இல்லாத ஒரு வாழ்க்கையை யோசிக்க முடியாமல், “என் காதலை கடைசி வரை புரிஞ்சிக்காமல் இருந்துட்ட இல்ல” என்றவன் நெஞ்சம் இரண்டாகப் பிளக்க, காரில் ஏறி அமர்ந்த செழியன் வாய்விட்டுக் கதறி அழுதான்.

முதல் பாகம் முடிவுற்றது….

error: Content is protected !!