Varunukku
Varunukku
வருணுக்கு கோபம் வந்தது
“டே மச்சான்…பார்த்து பேசுடா…. அப்ரெய்சல் முக்கியம்…. நீ பாட்டுக்கு கோவமா கத்தீறாத” என்று நண்பனின் காதில் கிசுகிசுத்தான் சூர்யா.
“நான் பார்த்துக்கறேண்டா…நீ டென்ஷன் படுத்தாத…” என்று இயல்பாக இருக்க முயன்ற வருணுக்கு நெஞ்சம் படபடவென அடித்துக் கொண்டது. வியர்வையால் நனைந்து போன கழுத்தை கைகுட்டை கொண்டு துடைத்தான்.
வெய்.டி.ஆர் என்று பெயர் பலகை மின்ன, குளிரூட்டப்பட்ட அறைக்குள் மெதுவாக தட்டைவிட்டு உள்ளே நுழைந்தான். அறையில் அவனது ப்ராஜெக்ட் மேனேஜர் வெய்.டி.ஆர் சுழலும் நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவர் அருகில் மற்றோரு இருக்கிய்யில் அவனது நேரடி மேலதிகாரியான டீம் லீடர் இந்திரஜித் அமர்ந்திருந்தார்.
“கம் இன் வருண்…ப்ளீஸ் பீ சீட்டெட்” என்று இருக்கையைக் காட்டினார்.
“சோ….. ஷேல் வீ டிஸ்கஸ் யுவர் பர்ஃபார்மென்ஸ் தீஸ் இயர்” என்று கணிணியைத் தட்டி உயிர்பித்து வருணின் ரிப்போர்ட்டை எடுத்துக் கொண்டார்.
“நீங்க சொல்லுங்க வருண்…இந்த வருஷம் எப்படி பர்ஃபார்ம் பண்ணீங்கன்னு…”
“சார்…அது வந்து…”
“கமார் வருண்….ஹரி அப்….ஐ டோண்ட் ஹேவ் ஆல் டே….”
“சார்…என்னோட டார்கெட்ஸ் 60% கம்பிளீட் பண்ணியிருக்கேன்… சூர்யாவோட ப்ராஜெக்ட் ஸ்கெடியூல் பண்ணினதுனால…”
“சீ வருண்…ப்ளீஸ் கொஞ்சம் மெசூர்டா பேசுங்க…. டோண்ட் ப்ளேம் அதர்ஸ் ..”
“ஸார்…நிஜமாவே சூர்யாவோட ப்ராஜெக்ட் நால தான் என்னோட ப்ராஜெக்டை சீக்கரமா முடிக்க வேண்டியதா போயிருச்சு….”
“அகேன் யூ ஆர் ப்ளேமிங் ஹிம்….. உங்க ப்ராஜெக்ட் டைம் எவ்வளவு நாள்?”
“டு மந்தஸ் சார்…”
“எல்லா நாளும் ஆபீஸ்க்கு வந்தீங்களா?”
“சார் அது வந்து” என்று வருண் திணறலுடன் தன் மேலதிகாரி இந்திரஜித்தைப் பார்த்தான். இந்திரஜித்தும் கொஞ்சம் பறிதாபப்பட்டு வருணிற்காக பேசினார்.
“வெய்.டி…. தட் வாஸ் மை மிஸ்டேக் ஆல்ஸோ…. நான் தான் சூர்யாவோட ப்ராஜெக்ட் முக்கியமா முடிக்கனும்னு வருணை கொஞ்சம் போஸ்ட்பாண்ட் பண்ண சொன்னேன்….”
“சீ இந்தர்…ப்ளீஸ் கீப் அவுட் ஆஃப் தீஸ்…..” என்று ஒற்றை வார்த்தையால் இந்தரஜித்தை அடக்கினார் வெய்.டி.
“இத பாருங்க வருண்….இந்த கம்பெனிக்கு டார்கெட்ஸ் எவ்வளவு முக்கியம்னு உங்களுக்கு தெரியும்…. இந்த வருஷம் நீங்க டார்கெட் ரீச் பண்ணாததால எவ்வளவு சிக்கல் தெரியுமா? கேஷுவாலிடீஸ் ரொம்ப ஜாஸ்தி வருண்…”
“அதில்லை சார்…மேனேஜர் தான் சூர்யா ப்ராஜெக்டுக்காக….” என்று வருண் இழுப்பதற்குள் வெய்.டி சூடானார்.
“திரும்பவும் அடுத்தவங்களை குறை சொல்லாதீங்க…சூர்யாவோட ரிப்போர்ட்ஸ் பார்கறீங்களா? ம்ம்ம்ம்ம்? ரெண்டு மாச டார்கெட்டை ஒரே மாசத்தில அச்சீவ் பண்ணியிருக்காரு… இன்ஃபாக்ட் எம்பிளாயி ஆஃப் த இயர் அவார்ட் சூர்யாவுக்கு தான்”
“சார்…. ப்ளீஸ் லெட் மீ எக்ஸ்பெளெயின்…”என்று இடைபுகுந்த இந்திரஜித்தை வெய்.டி மதிக்கவேயில்லை. வருணை கரித்துக் கொட்டுவதிலேயே குறியாக இருந்தார்.
“சீ..வருண்…க்ளையண்ட் இஸ் நாட் ஹேப்பி…. அவங்க மனசு சரியில்லியன்னா நமக்கு எவ்வள்ளோ சிக்கல் தெரியுமா? வேளாவேளைக்கு சோறு கூட கிடைக்காது… க்ளையண்ட் சாடிஸ்ஃபேக்ஷன் இஸ் மோர் இம்பார்டண்ட்…..”
“சார்…தெரியும் சார்…. என்னோட ரீசன்ஸ் என்னன்னு நீங்க இன்னும் கேட்கவேயில்லை சார்…. அதுக்குள்ள டிசைட் பண்ணாதீங்க….கிவ் மீ எ சான்ஸ்…”
“ஓ.கே..ஓ.கே கோ அஹெட்…என்ன ரீசன்ஸ் சொல்லுங்க…. அதை பேஸ் பண்ணி தான் உங்க அப்ரைசெல்….”
“சார் என் டீமில மிஸஸ்.பூமா உடம்பு சரியில்லைன்னு லீவுல போயிட்டாங்க…. சூர்யாவோட ப்ராஜெட்டை சீக்கரமா ஸ்டார்ட் பண்ணீட்டீங்க…. நடுவுல க்ளியண்ட்ஸ் கேட்டாகன்னு இன்னைக்கு நாளைக்குன்னு என் ப்ராஜெட் டேட்ஸை குறைச்சுட்டீங்க…. “
“ஆல் திஸ் இஸ் வெரி சில்லி…. லாஸ்ட் இயர் உங்க வர்க்கிங்க டேஸ் எவ்வளவு தெரியுமா? முழுசா ஒரு மாசம் கூட இல்லை…இப்படி ரெஸ்பாண்ஸிபிளிட்டியே இல்லாம இருந்தீங்கன்னா யார் வருண் ஆன்ஸர் பண்ணறது….?”
“ஸார்…ப்ளீஸ் கிவ் மீ ஒன் மந்த் டைம்….அதுக்குள்ள என் டார்கெட்டை அச்சீவ் பண்ணி காமிக்கறேன்….”
“தினமும் திட்டி நூறு க்ளையண்ட் மெயில் வருது வருண்…ப்ளீஸ் டு சம்திங்”
“ஸார்…எனக்கு ஒரு மாசம் டைம் மட்டும் குடுங்க….ஐ வில் ஸ்யூர்லி அச்சீவ் மை டார்கெட்….” என்று வேகமாக சூளுரைத்த வருண் அந்த அறையை விட்டு வெளியே வந்தான்.
வருணின் அவேசமான வருகையை வெளியே நின்றிருந்த சூர்யா எதிர்பார்க்கவில்லை. எரிச்சலுடன் அறையிலி இருந்து வந்த நண்பனை பிந்தொடர்ந்தான்.
“டே வருண்…என்னடா ஆச்சு…சொல்லுடா…வெய்.டி என்ன சொன்னாரு…எவ்வளோ ஹைக்….?”
“டே…கடுப்புல இருக்கேன்…பேசாம போயிரு….”
“என்னடா செம ஹைக் போல…அதான் வாயே திறக்கமாட்டேகறியா?” எண்று சிரிப்புடன் கேட்ட சூர்யாவை எரித்துவிடுவது போலப் பார்த்தான் வருண்.
“உன்னால தான் டா என் டார்கெட்டை அச்சீவ் பண்ண முடியலை….உன்னிய யாரு உன் ப்ராஜெக்டை சீக்கரம் ஆரம்பிக்க சொன்னா….இதுல போதாக் குறைக்கு அந்த பூமா மேடம் வேற….எனக்கு என்னனு லீவ் போட்டுட்டு போயிருச்சு….”
“டே இப்போ எதுக்கு இவ்வளோ டென்ஷன் ஆகற மாப்ள…. உனக்கு இருக்கற திறமைக்கு ஒரே நாள்ல உன் டார்கெட்டை முடிச்சிறமாட்டா….”
“ஏண்டா சொல்ல மாட்டா…. காட்டறேன்….இந்த வருண் யாருன்னு உங்க எல்லாத்துக்கும் காட்டறேன்…ஒரு மாசம் என்னடா? ஒரே வாரத்தில் இந்த வருஷ டார்கெட் முழுக்க முடிக்கறேன்…. அப்போ தெரியும் நான் யார்ன்னு…” என்று ஆவேசமாக பேசிய வருணை சூர்யா முதற்கொண்டு அந்த அறையில் நின்றிருந்த அனைவருமே விசித்திரமாகப் பார்த்தனர்.
“நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணறேன் வருண்…வாங்க..ஆக வேண்டிய வேலையைப் பார்ப்போம்” என்று தன்னருகில் வந்து நின்ற இந்திரஜித்தைப் பார்த்தும் வருணுக்கு கோபம் மறையவில்லை.
அதே சமயம், பூமியில், சென்னை என்னும் ஊரில், ஒரு வீட்டினுள்,
“மழை என்ன விடாம இப்படி அடிச்சு கொட்டறது? இதே ரீதியில் ஒரு வாரம் பேஞ்சா ஊரே மூழ்கிடும் போல இருக்கே… இந்த வருண பகவானுக்கு யார் மேல என்ன கோபமோ போ….” என்று அடித்து நொறுக்கிக் கொண்டிருந்த மழையை வேடிக்கப்பார்த்துக் கொண்டிருந்த குரல் கூறியது மழையின் சத்தத்தில் யார் காதிலும் விழவில்லை.
- இந்தக் கதையை இப்போது முதலில் இருந்து படித்துப்பாருங்கள்… வருணுக்கு கோபம் ஏன் வந்ததென்று புரியும்.