vav-19

vav-19

வா… அருகே வா! –  19

           பூங்கோதை அப்படி என்ன கேட்கப் போகிறாள் என்று திலக் அவளை ஆர்வமாகப் பார்க்க, அங்கிருந்த ஜன்னல் அருகே சென்று அந்த இருளை வெறுமையாக பார்த்தப்படி, “இந்த வேலை வேணாம்.” என்று ஆழமான குரலில் கூறினாள் பூங்கோதை.

           பூங்கோதை கூறியதை முதலில் திலக் புரிந்து கொள்ளவில்லை. ‘எந்த வேலை?’ என்று அவள் கூறியதை மீண்டும் அசை போட்டவன் நம்ப முடியாமல் பூங்கோதையை பார்த்தான்.

     பூங்கோதை அவனை கவனிக்கவில்லை. பூங்கோதையின் நினைவுகள், டால் லேக் அருகே நின்று கொண்டிருந்த அந்த சூழ்நிலையை வட்டமடித்தது.

              அவள் மனதில் தோன்றிய அச்சம் மீண்டும் அவளைச் சூழ, அங்கிருந்த ஜன்னல் கம்பிகளை அழுத்தமாகப் பிடித்தாள்.

     பூங்கோதையின் குரலிலிருந்த அழுத்தத்தில், அவள் கூறியதன் அர்த்தம் புரிந்தவன்… “ஏய்!” என்று அலறினான்.

            பூங்கோதை அவன் குரலையோ, அவன் கோபத்தையோ, அவன் முக பாவனையோ கவனிக்கும் மன நிலையில் இல்லை. தன்னுள் உழன்றவளாக, அவள் போக்கில் பேசினாள்.

     “யாரோ.. யாரையோ சுட்டா நமக்கென?” என்று பதட்டமாகக் கேட்டாள் பூங்கோதை.

                “நமக்கு வேணாம்… இது நமக்கு வேணாம்.” என்று மறுப்பாகத் தலை அசைத்தாள்.

            பூங்கோதை, திலக்கின் முகம் பார்த்துப் பேசவில்லை. பேசுவதற்குத் தயக்கம் அல்லது பயம் எதுவென்று பூங்கோதைக்கு புரியவில்லை.

   ‘யாரோ… யாரையோவா? என்ன பேசுதா இவ…’ என்ற எண்ணத்தோடு திலக் அவனை மௌனமாகப் பார்த்தான்.

     ‘இந்த வேலை இல்லைனா நான் என்ன ஆவேன்? இந்த வேலை தான் என் உயிர் மூச்சு. நான் மிலிட்டரி இல்லையா? என் சேவை இந்த நாட்டுக்கு தானே? இதெல்லாம் இவளுக்கு புரியலையா?’ என்று பல கேள்விகள் தோன்ற, என்ன பேசுவதென்று தெரியாமல் பூங்கோதையை யோசனையாகப் பார்த்தான் திலக்.

    பூங்கோதையோ ஜன்னல் வழியாக, வெறித்துப் பார்த்தபடி,   “இந்த குளிரில், உங்கள் உயிரைப் பணயம் வைத்துதேன் உங்க தேச பக்தியை காட்டணுமா?” என்று நிதானமாகக் கேட்டாள் பூங்கோதை.

     “நாம் ஊரிலிருந்து, ஊருக்கு நல்லது செஞ்சி கூட உங்க தேச பக்தியைக்  காட்டலாம்.” என்று பூங்கோதை அழுத்தமாகக் கூறினாள்.

          திலக் பூங்கோதையை, தன் எண்ணப் போக்கிலிருந்து மாறுபட்டுச் சிந்திக்கும் மனைவியை விலகல் தன்மையோடு பார்த்து, “அப்படி எல்லாரும் நினைச்சிட்டா?” என்று கோபமாகவே கேட்டான்.

           பூங்கோதை அவனை இப்பொழுதும் திரும்பிப் பார்க்கும் எண்ணம் இல்லாமல், வானத்தை வெறித்துப் பார்த்த படி, “எனக்கு இதெல்லாம் தெரியாது. என் புருஷனை நான் யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன். அது நாட்டுக்கா  இருந்தாலும் சரி.” என்று கூறினாள் பூங்கோதை.

     “உன் புருஷன் இப்ப தான்… அதுக்கு முன்னமே இருந்து நான் ராணுவ வீரன்.” என்று கம்பீரமாக, அழுத்தமாக, பிடிவாதமாகக் கூறினான் திலக். 

இந்த வாக்குவாதத்தில், அவர்கள் மிலிட்டரி, பியூட்டி என்ற அழைப்பு காணாமல் போயிருந்தது.

              “இந்த ஒரு ராணுவ வீரனை இழந்தா நாட்டுக்கு எந்த சேதமும் இல்லை. ஆனால், என் புருஷனை நான் இழந்தால்…” என்று அந்த வாக்கியத்தை முடிக்க முடியாமல் திணறினாள் பூங்கோதை.

     திலக்கின் கோபம் கட்டுக்கடங்காமல் எகிறியது.

                “லூசா நீ… நீ எல்லாம் நல்லாவே யோசிக்க மாட்டியா? எப்பப்பாரு அபசகுனமா தான் யோசிப்பியா?” என்று திலக் எகிற, “அதெல்லாம் எனக்கு தெரியாது.” என்று அவன் முகம் பார்க்காமல் கூறினாள் பூங்கோதை.

     “உனக்கு என்னதென் தெரியும்?” என்று அவன் சலித்துக்கொள்ள, “எனக்கும் தெரியும்… எல்லாம் தெரியும்….” என்று அலறினாள் பூங்கோதை.

    “உங்க அப்பா இறந்து, அதை தாங்க முடியாம உங்க அம்மாவும் இறந்துட்டாங்க. ஆனால், உங்களை வளர்க்க ஆச்சியாவது இருந்தாக. ஆனால், உங்களுக்கு எதாவது ஒன்னு ஆகிருச்சுனா, அதை கேட்டு, அதை பார்த்துட்டு நான் உயிரோட இருக்க மாட்டேன். அப்படி ஆகிருச்சுனா, நம்ம குழந்தைங்க நடுத்தெருவில் தான் நிக்கணும். இந்த நாடு காப்பாத்துமா? இந்த நாடு அவங்களுக்கு படிப்பு கொடுக்குமா?” என்று பூங்கோதை அடுக்கி கொண்டே போக, திலக்கின் கைகள் அவள் கன்னத்தைப் பதம் பார்த்தது.

பூங்கோதை அவனைப் பரிதாபமாகப் பார்த்தாள். 

         “நான் செய்றது வேலை இல்லை விட்டுட்டு வரதுக்கு. கடமை, அதை என் உயிர் உள்ளவரை விட முடியாது. இது வேலை இல்லை, பிரதி பலன் எதிர் பார்க்க… இது பக்தி. தேச பக்தி! என் நாட்டுக்கு ஒன்னுனா, என் இதயம் துடிக்கும்… நான் நாட்டுக்காக எதுமே பண்ணலைனா, என் இதய துடிப்பு நின்றும்.” என்று அழுத்தமாகக் கூறினான் திலக்.

    “நான் மிலிட்டரி… மிலிட்டரி மட்டும்தென். அது இல்லைனா, நான்… நான்…’ என்று அதை நினைத்தும் பார்க்க முடியாமல், பேசவும் முடியாமல் தடுமாறினான் திலக்.

             அந்த தடுமாற்றத்தில், பூங்கோதை ‘உங்களுக்கு எதாவது ஒன்னு ஆகிருச்சுனா, அதை கேட்டு, அதை பார்த்துட்டு நான் உயிரோட இருக்க மாட்டேன்.’ என்று கூறியது நினைவு வர, “எனக்கு ஒருநாளும்  எதுவும் ஆகாது. நான் சொல்றதை நீ நம்ப மாட்டா… இன்னைக்கி இல்லை ஒரு நாளும் நம்ப மாட்டா… உன் கேள்விக்கு நான் இப்ப  பதில் சொல்லுதேன். எனக்கு என்னவானாலும், நீ வாழனும். என் குழந்தையை என்னை மாதிரி வளர்க்கணும்.” என்று அதிகாரமாக கூறினான் திலக் .

       திலக் அடித்ததில் பூங்கோதையின் எண்ண ஓட்டம் திசை திரும்பி இருந்தது. பூங்கோதை எதுவும் பேசவில்லை. 

                          ‘நான் தப்பா பேசினா, இவுக என்னை அடிப்பாகளா? என்னதென் நினைச்சிட்டு இருக்காக?’ என்று கேள்வியோடு, அந்த அறையின் பால்கனியில் அமர்ந்து கொண்டாள் பூங்கோதை.

     ‘பேச்சை பாரு… பேச்சை… புத்தி போகுது பாரு… இவுகளுக்கு எதாவது ஆகிட்டாலும்ன்னு… இதுல என்னை வைதாக… நானா அபசகுனமா பேசுதேன்? அவுக தான் பேசுதாக…’ என்று திலக்கை மனதில் திட்டிக் கொண்டு குளிர் தாங்க முடியாமல் அங்கிருந்த போர்வையை எடுத்துப் போர்த்திக்கொண்டாள் பூங்கோதை.

       திலக்கின் கோபம் சிறிதளவும் மட்டுப்படவில்லை. மெத்தையில் படுத்துக்கொண்டான். “நான் இவளை சமாதானம் செய்ய மாட்டேன்.” என்று வைராக்கியத்தோடு முணுமுணுத்தான் திலக்.

           அவனால் அந்த வைராக்கியத்தை சில நிமிடங்கள் கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை.

      அவன் கண்கள் பால்கனி வாசல் வழியாக அவளை நோட்டமிட்டது.

               ‘குளிருமே? தாங்குவாளா?’ என்ற எண்ணத்தோடு அவளைப் பார்த்தான். சொச்ச மிச்சமாகக் கொஞ்சம் கோபத்தோடும் தான்!

நிமிடங்கள் கடக்க, அந்த சொச்ச மிச்ச கோபமும் காணாமல் போயிருந்தது.

        ‘நான் பியூட்டியை அடித்திருக்க கூடாது.’ என்று எண்ணம் எழ, விழுக்கென்று எழுந்து அமர்ந்தான் திலக். அவன் தவற்றை உணர்ந்ததும்  பியூட்டி அவன் மனதில் சட்டமாக மீண்டும் அமர்ந்து கொண்டாள்.

     அவன் கால்கள் பால்கனிக்கு அவன் கட்டளையின்றி சென்றது.

      “நீ பேசினது தப்பு.” என்று பொறுமையாகக் கூறினான் திலக்.

                பூங்கோதை சிறு குழந்தை அதன் கோபத்தை வெளிப்படுத்துவது  போல் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். 

    திலக்கின் முகத்தில் மெல்லிய புன்னகை எட்டி பார்த்தது. “பியூட்டி… என்ன இது குழந்தை மாதிரி?” என்று அவள் முகத்தை தன் பக்கம் திருப்பினான் திலக் மெதுவாக… மென்மையாக…

     “இந்த பொறுமை அப்ப எங்க போச்சு?” பூங்கோதை அதிகாரமாகக் கேட்டாள்.

     “பியூட்டி… இப்பத்தேன் நீ பழைய மாதிரி… நம்ம கல்யாணத்துக்கு முன்ன பேசுற மாதிரி பேசுத.” என்று திலக் கூற, “இந்த சாமாதானம் செய்யுற வேலை எல்லாம் என்கிட்டே வேணாம். நான் கோபமா இருக்கேன். நீங்க போங்க.” என்று கடுப்பாகக் கூறினாள் பூங்கோதை. அவள் மிலிட்டரி என்ற அழைப்பு காணாமல் போயிருந்தது.

      “தப்புதேன்… நான் வேணா தோப்புக்கரணம் போடட்டுமா?” என்று அவன் சமரசத்துக்கு இறங்கினான்.

       “தோப்புக்கரணம் போட்டா, அடிச்சது இல்லைனு ஆகிருமா?” என்று பூங்கோதை கேட்க, “அப்ப தோப்புக்கரணம் எல்லாம் போடா வேண்டாமுன்னு சொல்ல மாட்டியா?” என்று திலக் பரிதாபமாகக் கேட்டான்.

       “ஆயிரம் தோப்புக்கரணம் போட்டாலும், சமாதானம் ஆக மாட்டேன்.” என்று தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள் பூங்கோதை.

         அதற்கு மேல் கெஞ்சப் பிடிக்காமல், திலக் அறைக்குள் சென்றுவிட்டான்.

மெத்தையில் படுத்துக்கொண்டு, யோசனையில் ஆழ்ந்தான். ‘இத்தனை அழகாக ஆரம்பித்த இந்த நாள் இப்படி முடிந்திருக்க வேண்டாம்.’ என்ற எண்ணத்தோடு புரண்டு படுத்தான் திலக்.

தன் மனைவி குளிரில் நடுங்கிக் கொண்டிருக்க, தூக்கம் அவனைத் தழுவவில்லை.

             நேரம் செல்ல செல்ல அவன் மீண்டும் பால்கனிக்கு சென்றான். பூங்கோதை தூங்கி இருந்தாள்.

     அவளை கைகளில் ஏந்திக் கொண்டு மெத்தையில் படுக்க வைத்தான் திலக். 

                      அவள் கைகள் நடுக்கத்தோடு, அவனை உடும்பு பிடியாகப் பிடித்துக் கொண்டது.

    “பியூட்டி… என்னை மன்னிச்சிரு. அடிச்சது தப்புதேன்.” என்று அவன் குரல் கெஞ்சியது. 

                            “தப்பா பேசினா அடிப்பீகளா? பொறுமையாய் சொல்ல மாட்டீகளா?” அவள் குரல் தூக்கத்தில் நியாயம் பேச, அவள் தலை கோதி, “இனி பொறுமையா பேசுதேன்.” அவனும், அவளுக்கு இசைவாகப் பதில் கொடுத்தான்.

     “பொஞ்சாதி தப்பா பேசினா, புருஷன் அறையுத மாதிரி, இனி புருஷன் தப்பா பேசினாலும் பொஞ்சாதி அறையனும்.” என்று முணுமுணுத்தபடி அவள்  தூங்கினாலும்,  அவள் பெண்ணியம் விழித்திருந்தது.

    பூங்கோதை பேசிய சட்டத்தில், அவள் நியாயத்தில் அவன் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

      “எனக்கு இந்த பியூட்டியைத்தேன் பிடிக்கும். எங்க நம்ம கல்யாணத்தில் அந்த பியூட்டியை தொலைச்சிட்டேனேனோ நினச்சேன். இல்லை… நீ பார்த்துப்ப பியூட்டி… எல்லாத்தயும் பார்த்துப்ப…” என்று சந்தோஷமாகக் கூறிவிட்டு, அவள் அருகே படுத்துக்கொண்டான் திலக்.

           அதன்  பின் பல சமாதானங்களோடும், கெஞ்சல்களோடும், கொஞ்சல்களோடும் அழகாக நகர்ந்தது.

    பூங்கோதை, திலக்கின் நாட்கள் மட்டுமில்லை. கதிரேசன், வள்ளியின் நாட்களும்…

               கதிரேசனின் திருமண நாளும் வந்தது. அவர்கள் திருமணம் சிறப்பாக அரங்கேறியது.

            பூங்கோதை மிலிட்டரி மனைவி என்ற அடையாளத்தோடு கம்பீரமாக, சந்தோஷமாக வளைய வந்தாள். கதிரேசனின் தாயார் செல்லம்மாவின்  முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. அனைத்திற்கும் பூங்கோதையை அழைத்துக் கொண்டார்.

                     திலக் பூங்கோதையின் திருமணத்திற்குப் பின் பூங்கோதை செல்லம்மாவிற்க்கான உறவு சுமுகமாக இருந்தது.

                    திருமணத்தில் திலக் கேலி பேச, கதிரேசன் கேலி பேச்சுக்களை அவன் பக்கமே திருப்பினான்.

திலக்கிடம் பலரும் நற்செய்தி கேட்க, திலக் பூங்கோதையை பார்த்து புருவம் உயர்த்தினான். பூங்கோதையின் முகத்தில் வெட்கம் படர்ந்தது.

பார்வதி ஆச்சியும், முத்தமா ஆச்சியும் அவர்களை ஆனந்தக் கண்ணீரோடு பார்த்தனர். 

        திலக் பணிக்குத் திரும்பும் நாளும் வந்தது. பூங்கோதை மனதில் சில வருத்தங்கள் இருந்தாலும், சில எதிர்பார்ப்புகள் இருந்தாலும்  அதை திலக்கின் ஆசைக்காக, அவன் லட்சியத்திற்காக தன் மனதிற்குள் புதைத்துக் கொண்டாள்.

      திலக்கும் பலவிதமாகப் பக்குவமாகப் பேசி அவளுக்குப் புரிய வைத்திருந்தான், சில சத்தியங்களோடு,

                    திலக் கிளம்புகையில், பூங்கோதை முகத்தில் அத்தனை உணர்ச்சிகள். அதை மறைத்துக்கொண்டு புன்னகையோடு தன் கணவனை வழி அனுப்பினாள். தனக்காக, தன்னை மாற்றிக்கொண்ட தன் எதிர்பார்ப்புகளைத் தவிர்த்துக் கொண்ட மனைவியை அவனுக்கு இன்னும் இன்னும் பிடித்து போனது.

        தன் மனைவியின் நெற்றியில் இதழ் பதித்தான் திலக். 

            அவள் தன் இமைகளை மூடிக்கொண்டாள். அவள் மறைக்க நினைத்த கண்ணீர், அவன் பாதம் தொட்டுச் சென்றது, எதோ யாசிப்பது போல்.

                                   திலக் திரும்பிப் பார்க்காமல் ரயில் ஏறிச் சென்றான்.

   வழக்கம் போல், அவர்கள் அலைபேசியில் பேசிக் கொண்டனர். 

                      பூங்கோதை கருவுற்றிருந்தாள். அலைபேசி அவர்கள் இன்பத்தை செவ்வனே அலையாக்கியது.

                                பூங்கோதையிடம் என்ன வேண்டும் என்று அவன் கேட்க, பூங்கோதை மௌனத்தை மட்டுமே பதிலாகத் தந்தாள்.

       ‘உன் அருகாமை…’ என்று எப்படி சொல்லுவேன் என்று பூங்கோதையின் மனம் தவித்தது. அவள் வளைகாப்பு நாளும் வந்தது.

ஏழாம் மாதம் வளைகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர். 

     “நான் வளைகாப்புக்கு வந்துருவேன் பியூட்டி… என்ன வேணும்ன்னு சொல்லு.” என்று கெஞ்சினான் திலக்.

                               பல கெஞ்சுதலுக்கு பின், “அந்த மணி வாங்கிட்டு வாங்க. உங்க குழந்தை வந்த பிறகு பத்தலை.” என்று வெட்கத்தோடு கூறினாள் பூங்கோதை.

     திலக் குறுஞ் சிரிப்போடு தலை அசைத்தான்.

         வளைகாப்பு ஏற்பாடு செய்த நாளும் நெருங்கியது. அவர்கள் ஊரில் பலத்த மழை. மழையின் காரணமாக மின்சாரம் இல்லை. அலைபேசி, தொலைப்பேசி அனைத்தும் அதன் பணியை நிறுத்திக் கொண்டது.

              வளைகாப்பு நாளை மாற்ற வேண்டாம் என்று முடிவு செய்தனர். திலக் அன்று காலை வருவதாக இருந்தது. ஆனால், அவன் வரவில்லை.

  பூங்கோதையின் மனதில் பயம் படர ஆரம்பித்தது.  முதலில் மழையால் ரயில் பயணம் தாமதமாகிருக்கும் என்று நினைத்தனர். ஆனால், நேரம் செல்ல செல்ல அனைவரின் மனதிலும் அச்சம் சூழ்ந்தது.

   வளைகாப்பு விழாவிற்கான நேரம் நெருங்கியது. திலக் வரவில்லை. சடலமே வந்தது. அவன் பொருட்களும். அதில் பூங்கோதை கேட்ட மணிகளும்!

வா அருகே வா வரும்….

அன்பான வாசகர்களே,

             நாட்டிற்காக, தன் கணவனை இழந்து நிற்கிறாள் பூங்கோதை.

                   அவளை இந்த சமுதாயம் எப்படிப் பார்க்கும்? ஓர் சுமங்கலிப் பெண்ணிற்குக் கொடுக்கும் அதே அங்கீகாரத்தை இந்த சமுதாயம் அவளுக்குக் கொடுக்குமா?

  அவளைச் சுப காரியங்களில் ஏற்றுக் கொள்ளுமா? இன்று நாம், நம் குடும்பத்தோடு சுபமாக வாழ்வதற்கு, ஒவ்வொரு பெண்ணும் சுமங்கலியாக வாழ,  பூங்கோதை அவள் தன் உயிருக்கும் மேலான கணவனை இழந்திருக்கிறாள்.

          பூங்கோதையின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று  நீங்கள்  நினைக்கிறீர்கள்? 

                 இந்த சமுதாயம் அவளுக்கு என்ன மரியாதை கொடுக்கும் என்று நினைக்கிறீர்கள்? என்பதை அறிந்து கொள்ளும் ஆவலுடன் நீங்கள் என் பதிவிற்காகக் காத்திருப்பது போல், நான் உங்கள் பதிலுக்காகக் காத்திருக்கிறேன்.

  மனைவியை இழந்த கணவனுக்கு இல்லாத சட்ட திட்டங்கள் ஒரு கணவனை இழந்த மனைவிக்கு மட்டும் எதற்கு?

     கணவன் இழந்துவிட்டால், அவளை இந்த சமுதாயம் வேறு கண்ணோட்டத்தோடு பார்க்குமென்றால், இறைவன் ஏன் மனைவியின் உயிரை  முதலில் பறிப்பதில்லை?  தவறியது இறைவனா? மனிதனா? 

                          “ஏன்? எதற்கு?” என்று என் மனதை உறுத்திய கேள்வியே கதையின் கருவைத் தீர்மானித்தது. 

        உங்கள் விமர்சனத்திற்கும், கருத்துக்களுக்கும் என்னுடன் பூங்கோதையும் காத்திருக்கிறாள்.

error: Content is protected !!