NPG-17
NPG-17
கீதாஞ்சலி – 17
பிரெஞ்சு நாட்டின் தென்கிழக்கே அமைந்துள்ள ‘ஈஸ்’ என்னும் மலைப்பாங்கான கிராமத்திற்கு வந்திருந்தார்கள் திரைப்படக் குழுவினர். மிகவும் அழகான இடைக்கால மலைக் கிராமம் அது. தேனிலவிற்கு மிகவும் பிரசித்திப் பெற்ற இடம். அந்த இடத்திற்குத் தான் இவர்கள் திரைப்பட ஆலோசனைக்கென ஒரு குழுவாகச் சென்றிருந்தார்கள்.
ஹோட்டலில் தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் சென்றவுடன் கட்டிலில் சரிந்தான் ராகுல். இவ்விடம் வந்து சேர்வதற்கு சென்னையிலிருந்து துபாய், பாரீஸ், நீஸ் என்று மாறி மாறி வந்தது கொஞ்சம் களைப்பைக் கொடுத்திருந்தது.
ஆனால் அந்தக் களைப்பை எல்லாம் கபளீகரம் செய்துவிட்டது அந்த இடத்தின் இயற்கை அழகு. ஒரு குட்டித் தூக்கத்திற்குப் பிறகு, ஹோட்டல் அறையிலிருந்தத் திரைச்சீலையை நீக்கி ஜன்னல் வழி எட்டிப் பார்த்த பொழுது கீழே தெரிந்த மத்திய திரைக்கடல், நீலமும் பச்சையும் கலந்த டர்கொய்ஸ் கலரில் தெளிந்த நீரோடு மனதைக் கொள்ளை கொண்டது. அதுவும் மலை மீதிருந்துப் பார்க்கும் பொழுது ஒட்டு மொத்த நகரின் அழகையும் கடலின் அழகையும் காணக் கண்கள் இரண்டும் போதவில்லை.
தலைக்கு மேல் நீல வானமும், கால்களுக்குக் கீழே நீல வண்ணக் கடலுமாக சொர்க்கமே இது தானோ என்று எண்ணத் தோன்றியது. இயற்கை தன் வேலையை அழகாகச் செய்து முடித்திருந்தது.
இப்பொழுது மெல்லிசைக்காரனின் மனம் அமிர்தாவிற்காக ஏங்கத் தொடங்கியது. நேற்றைக்கு அவளும் இதே நிறத்தில் தானே புடவை அணிந்திருந்தாள். அவளையே நினைத்தபடிக் கடலைப் பார்த்து நின்றிருந்தான் உதட்டில் உறைந்த மந்தகாசப் புன்னகையோடு.
முதல்நாள் காஞ்சிபுரம் சென்று வந்தபொழுது அத்துனை மகிழ்ச்சியாக இருந்தவளின் முகம் மறுநாள் காலையிலேயே சோகத்தை அப்பிக் கொண்டது ராகுலின் பயணத்தை எண்ணி.
ஏதோ இது தான் அவன் முதல் முறை கடல் கடந்துப் பயணிப்பதைப் போல ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து அவனுக்காகச் செய்து முடித்தாள்.
அந்நாட்டில் நிலவும் பருவநிலையை அறிந்து கொண்டு அதற்கேற்ப அவனுக்கு உடைகள் எடுத்து வைத்தாள். கூகுள் மூலம் அருகிலிருக்கும் சுற்றிப் பார்க்கக் கூடிய இடங்களைப் பற்றிக் குறிப்பெழுதிப் பெட்டியில் வைத்தாள்.
ராகுல் பயன்படுத்தும் ஒவ்வொருப் பொருளும் அதன் பிராண்ட் பார்த்துப் புதிதாக வாங்கிப் பெட்டியில் அடுக்கினாள். இவ்வளவு வேலைக்கும் முகம் என்னவோ வாடித்தான் கிடந்தது. அவள் முகவாட்டம் பொறுக்காமல் தான் அவளைச் சீண்டிக் கொண்டிருந்தான் மெல்லிசைக்காரன்.
“ஓய் சோனி, இதெல்லாம் எப்போதும் நான் தான் பண்ணிப்பேன். நான் என்ன சின்னக் குழந்தையா? எனக்கு டிரெஸ் எடுத்து வைக்க எனக்குத் தெரியாதா?” அவள் கையிலிருந்து அவனுடைய உடைகளைப் பிடுங்கியவாறே கேட்டான்.
“முன்னாடி எப்படியோ, இப்போ இதெல்லாம் நான் பண்ணினாத்தான் எனக்குத் திருப்தியா இருக்கும் ரவி”
“அதுக்கில்ல சோனி, அங்கப் பொண்ணுங்க எல்லாம் ரொம்ம்ம்ப்ப்ப அழகா இருப்பாங்க. அதுக்கேத்த மாதிரி ஐயாவோட டிரெஸ்சிங் இருக்கணுமில்ல” கண்ணடித்துக் கேட்டான் ராகுல்.
“மூவி டிஸ்கஷனுக்குத்தானே சார் போறீங்க? இல்ல வேற எதுவும் பிளான் வைச்சிருக்கீங்களா?”
“அஃப்கோர்ஸ் மூவி டிஸ்கஷனுக்குத்தான் போறோம். அதுக்காக எந்நேரமும் ரூமுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்க முடியுமா என்ன? நீ வேற சுத்திப் பார்த்துட்டு வரச் சொல்லி நிறைய பிளேசஸ் சொல்லி இருக்க. அங்க எல்லாம் தனியாவா போக முடியும். பேச்சுத் துணைக்கு ஆள் இருந்தா தானே நல்லா இருக்கும்.”
“பேச்சுத் துணைக்குத் தானே, நல்லா வயசான ஒரு ஆம்பளை கைட் நானே இங்கிருந்து ஏற்பாடு பண்ணித் தந்துட்டா போச்சு.”
“நான் அப்படி ஒதுங்கிப் போகத்தான் நினைப்பேன். பட், வாட் டு டூ? சாரோட ஸ்டைல் அன்ட் சார்ம் அந்த மாதிரி. எங்க போனாலும் பொண்ணுங்க என்னையவே சுத்தி சுத்தி வர்றாங்களே சோனி.”
“ஹையடா… நினைப்புத்தான். இந்தத் தாடிக்காரரைப் பார்க்கத்தான் எல்லாரும் க்யூவில நிக்கிறாங்க. காமெடிப் பண்ணாதீங்க ரவி.” அலட்டிக் கொள்ளாமல் பதில் கொடுத்துவிட்டு அவள் வேலையைப் பார்க்க,
அப்பொழுதே சென்று தாடியை முழுதாக ட்ரிம் பண்ணிக் கொண்டு அவள் முன் வந்து நின்றான் ராகுல். வெறும் இரண்டு நாள் ஷேவ் பண்ணாததைப் போல லேசான தாடி அவனை இன்னும் அழகனாகக் காட்ட நொந்து போனாள் அமிர்தா.
வெறும் புருவத்தை மட்டுமே அசைத்து ‘எப்படி?’ எனக் கேட்க, அவள் முகம் போன போக்கைப் பார்த்து வெடித்துச் சிரித்தான் மெல்லிசைக்காரன். இப்படியே அன்றைய பகற்பொழுது கரைய,
இரவு ஏர்போர்ட்டுக்குக் கிளம்பும் நேரத்தில் அம்மாவும் மகளுமாக முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டுதான் நின்றார்கள். சந்தோஷுக்கு ஏற்கனவே தந்தையின் இது போன்றப் பயணங்கள் பழகிய ஒன்று தான் என்றாலும் அவனுமே இவர்களோடு இணைந்து கொண்டான்.
“சந்தோஷ், அப்பா இல்லாத போது நீங்க தான் அம்மாவையும் நிலாவையும் பத்திரமா பார்த்துக்கணும். சரியா? என் சந்தோஷ் குட்டி இப்போ தான் பிக் பாய் ஆகிட்டாங்களே. கமான்… மை பாய். இந்த ஒரு தடவை அப்பா மட்டும் போயிட்டு வந்திடுவேனாம். அப்புறம் உங்களுக்கு சம்மர் ஹாலிடேஸ் வரும் போது நாம எல்லாரும் சேர்ந்து போவோம் சரியா?” ராகுல் கேட்க,
“ப்ராமிஸ் ப்பா” என்று கையை நீட்டினான் சந்தோஷ்.
“ப்ராமிஸ் டா கண்ணா” என்று சொல்லி ராகுலும் அவன் கையின் மீதுத் தன் கையை வைத்து நெற்றியில் முத்தம் கொடுக்க சந்தோஷை சமாதானப்படுத்துவதற்கு அதுவே போதுமானதாக இருந்தது.
ஆனால் நிரஞ்ஜலாவைச் சமாளிக்கக் கொஞ்சம் திணறித் தான் போனான் ராகுல்.
“குட்டிம்மா, சமர்த்தா இருக்கணும். நைட் ஒழுங்கா தூங்கணும். சரியா? அப்பா டென் டேஸ்ல திரும்ப வந்துடுவேன். வரும் போது பாப்பாவுக்கு நிறைய சாக்லேட்ஸ் அப்புறம் டாய்ஸ் எல்லாம் வாங்கிட்டு வரேன்” மகளைத் தூக்கி வைத்துக் கொண்டு சமாதானம் பேச,
“டென் டேஸ்னா?” என்று சந்தேகம் கேட்டாள் மகள்.
“டென் டேஸ்னா…ஹ்ம்ம்ம்… நீங்க நாளைக்குக் காலையில தூங்கி முழிச்சதும் ஒன் சொல்லுங்க, அடுத்த நாள் டூ சொல்லுங்க, நீங்க என்னைக்கு டென் சொல்றீங்களோ அன்னைக்கு அப்பா வந்துடுவேன்.
“நான் நாளைக்கே தென் சொல்லிதேன் ப்பா. நீ நாளைக்கே வந்துது” அழகாக நாட்களைக் குறைத்தாள் மகள்.
“ஓ.கே நீங்க கவுன்ட் பண்ணிக்கிட்டே இருங்க. அப்பா ஓடி வந்துடுவேன். என் சமத்துக்குட்டி” மகளின் சாமர்த்தியத்தில் வியந்தாலும் சமாளித்துக் கொண்டு அவள் கன்னத்தில் முத்தம் கொடுக்க அவளும் அப்பாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டுக் கன்னத்தில் முத்தம் வைத்தாள்.
அதற்குள் அவர்களுடைய ‘கௌ அங்கிள்’ எதற்கோ அழைக்கக் குழந்தைகள் இருவரும் அங்கு ஓடிப் போனார்கள். கடைசியாக அமிர்தாவிடம் வந்தான் ராகுல்.
“ஹேய் சோனி, எதுக்கு இப்போ இப்படி முகத்தைத் தூக்கி வைச்சுக்கிட்டு இருக்குற?” கேட்டுக் கொண்டே ராகுல் அருகே வர சட்டென்று முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டாள் அமிர்தா கலங்கிய கண்களை அவனுக்குக் காட்டாமல் மறைக்கும் பொருட்டு.
அவள் கைகளைப் பற்றிக் கொண்டவன், “என்னாச்சுடா?” ஆழ்ந்த குரலில் அவள் பால் கொண்ட நேசத்தை எல்லாம் குரலில் குழைத்து வினவ, அதற்கு மேல் அவள் தாங்காமல் அவள் கண்ணீர் உடைப்பெடுத்தது.
“ஹேய் அழறியா என்ன? உன் கிட்ட கேட்டுத் தானே டா இந்த ஆஃபருக்கு ஒத்துக்கிட்டேன். நீ இவ்வளவு ஃபீல் பண்றதா இருந்தா ஒத்துக்கிட்டே இருந்திருக்க மாட்டேன்” ராகுல் சொல்லவும் வேகமாகக் கண்களைத் துடைத்துக் கொண்டாள் அமிர்தா.
“அப்படி எல்லாம் இல்ல ரவி. இப்போ மேரேஜுக்கு அப்புறம் ஃபர்ஸ்ட் டைம் உங்களைப் பிரியிறேன் இல்லயா… அதான்…”
“என்னைப் பிரியிறது உன்னை அஃபெக்ட் பண்ணுதா சோனி?”
“உங்களை இந்தப் பிரிவு பாதிக்கலையா ரவி?” இதைக் கேட்கும் பொழுது அந்தக் கண்கள் இரண்டும் அவன் முகத்தையே ஏக்கமாகப் பார்த்தது.
“ரொம்ப… ரொம்பப் பாதிக்குது. உள்ளுக்குள்ள அப்படியே என்னவோ மனசைப் போட்டுப் பிசையுது. நான் உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லவா அமிர்தா.” அவள் பார்வை தந்தப் பாதிப்பில் உடனடியாகப் பதிலளித்திருந்தான் ராகுல்ரவிவர்மன்.
இப்பொழுதும் பார்வையை மாற்றாமல் அவனையே பார்த்தபடி நின்றிருந்தாள் அமிர்தவர்ஷினி.
“எனக்கு உன் கூட திகட்டத் திகட்ட ஒரு வாழ்க்கை வாழணும். கடைசி மூச்சு இருக்குற வரைக்கும் உன் கையைப் புடிச்சுக்கிட்டே இந்த உலகம் முழுக்க சுத்தி வரணும். உன் கூட சிரிக்கணும். உன்னைச் சீண்டனும். சண்டை போடணும். அப்புறம் நானே உன்னைக் கெஞ்சிக் கொஞ்சி சமாதானப்படுத்தணும். இந்தக் கண்கள்ல எனக்கானத் தேடலை, காதலை நான் பார்க்கணும்.
இன்னும் இப்படி என்னென்னவோ ஆசையெல்லாம் வருது. உனக்குக் கேட்க சின்னப்புள்ளத் தனமா இருக்குல்ல? எனக்கே அப்படித்தான் இருக்கு. இது நான் தானான்னு சந்தேகமா இருக்கு. எப்படி எப்படியோ இருந்த என்னை முழுசா மாத்திட்ட அமிர்தா நீ.” சொல்லிக் கொண்டே பிடித்திருந்த அவள் கைகளை எடுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டவன் மேலும் தொடர்ந்தான்.
“இதையெல்லாம் நான் வெறும் நண்பனா மட்டும் செய்ய ஆசைப்படலை. உன் கணவனா செய்ய ஆசைப்படுறேன். நீயும் இதே மாதிரி முழுசா என் மனைவியா வாழ ஆசைப்பட்டா எனக்கு ஒரே ஒரு போன் கால் மட்டும் பண்ணு. அது வரைக்கும், அதாவது நீயா கூப்பிடுற வரைக்கும் நான் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.
இந்தப் பத்து நாள் நல்லா யோசி. இப்பவும் உன்னை நான் எந்த விதத்திலும் கம்பெல் பண்ண விரும்பலை. நாம ஃப்ரெண்ட்ஸ்சாவே இருக்கலாம்னு ஆசைப்பட்டா அதையும் நான் ஏத்துக்குறேன். உன் மனசு முழுசா என்னை ஏத்துக்குற வரைக்கும் வெயிட் பண்றேன்.
ஆனா, ரொம்ப நாள் என்னை வெயிட் பண்ண வைக்காதடா. நான் உன் போன் காலுக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பேன்.”
கடைசி இரண்டு வரிகளைச் சொல்லும் போது மட்டும் குரல் சற்றுக் கரகரப்பாக வெளி வந்தது. கைகளைப் பற்றியிருந்தவன் இப்பொழுது அவள் கன்னம் பற்றி நெற்றியில் முத்தம் வைத்தான். விலக மனமில்லாமல் அவள் கன்னங்களை வருடியபடியே இருந்தது அவன் இரண்டு கைப் பெருவிரல்களும்.
பின் ஒரு பெருமூச்சுடன் அறையை விட்டு வெளியேறிவிட்டான். நினைத்துப் பார்க்கையில் இப்பொழுதும் ஒரு பெருமூச்சு தான் கிளம்பியது ராகுலிடமிருந்து.
நேரம் மாலையை நெருங்கிக் கொண்டிருக்க வெளியே சென்று விட்டு வரலாம் எனக் கருதிக் குளித்து விட்டு வந்தான். பெட்டியைத் திறந்துப் பார்க்க அவன் தினப்படி உபயோகத்திற்கு ஏற்றவாறுத் துணிகள் அடுக்கப்பட்டிருந்தன.
மேலாக இருந்தவற்றை எடுத்து அணிந்து கொண்டவன், சட்டையைக் கைகளால் தடவ ஷர்ட் பாக்கெட்டில் ஏதோ தட்டுப்பட்டது. வேகமாக எடுத்துப் பார்த்தான்.
அன்று புடவை எடுக்கச் சென்ற பொழுது அமிர்தா தனை மறந்து வெட்கச் சிரிப்போடு இவன் தோளைச் சரணடைந்தத் தருணத்தை அழகாக யாரோ புகைப்படமாக்கி இருந்தார்கள். எல்லாம் தீப்தியின் வேலையாகத் தான் இருக்கும் என்றெண்ணிக் கொண்டான்.
‘சரி, இது எப்படி என் ஷர்ட் பாக்கெட்ல?’ எண்ணிக் கொண்டே அந்தப் புகைபடத்தைத் திருப்பிப் பார்க்க,
‘உனக்காக வாழ நினைக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்’
முத்து முத்தானக் கையெழுத்தில் அழகாக எழுதி இருந்தாள் அமிர்தா. அது அமிர்தாவின் கையெழுத்துத் தான். அது அவனுக்கு நிச்சயமாகத் தெரியும்.
‘இதற்காகத்தான் பேக்கிங்கை அவளே செய்தாளா? நானும் கூடவே இருந்தேனே எப்பொழுது வைத்தாள்? நான் அவளிடம் மனம் திறந்த பின்னா அல்லது அதற்கு முன்பாகவேவா?’ மனம் அதன் போக்கில் சிந்திக்கக் கைகள் அவசரமாக அடுத்த ஷர்ட்டை எடுத்து ஆராய்ந்தது.
அவன் எண்ணத்தைப் பொய்யாக்காமல் அதிலும் ஒரு புகைப்படம் இருந்தது. அமிர்தா கண்களைச் சுருக்கி முறைத்துப் பார்த்து, சுட்டு விரல் நீட்டி இவனைப் பார்த்துப் பத்திரம் காண்பிப்பது போல ஒரு ஃபோட்டோ. அதற்குப் பின்புறம்,
‘ஒரு நாளைக்கு ஒரு ஃபோட்டோதான். அவசரப்பட்டு எல்லா டிரெஸ்சையும் கலைச்சு வைச்சீங்க…’ என்று எழுதப்பட்டிருந்தது.
வாய் விட்டுச் சிரித்தான் மெல்லிசைக்காரன். ஆக அடுக்கப்பட்டிருக்கும் அத்தனை ஷர்ட்டிலும் ஒரு புகைப்படம் இருக்கும். முன்கூட்டியே திட்டமிட்டுத்தான் ஒவ்வொன்றையும் செய்திருக்கிறாள். தான் பேசுவதற்கு முன்பே அவள் இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறாள் என்றால், தனக்கு முன்பே அவள் தன் மனதை சூசகமாகத் தெரிவித்து விட்டது இப்பொழுது தெள்ளத் தெளிவாகப் புரிந்தது.
இப்பொழுது இந்தியாவில் நேரம் நள்ளிரவை நெருங்கி இருக்குமே என்ற சிறு தயக்கம் இருந்த போதும், மனதிலிருந்த பேருவகை அந்தத் தயக்கத்தை உடைத்துவிட உடனடியாக அமிர்தாவை அழைத்துவிட்டான்.
அமிர்தாவும் இங்கு உறங்காமல் அந்தப் பால்கனியைத் தான் சரணடைந்திருந்தாள் ராகுலுடன் ஒன்றாகப் பேசிச் சிரித்தத் தருணங்களை அசை போட்டபடி. அந்நேரத்தில் ராகுல் அழைக்கவுமே அவளுக்குப் புரிந்து போனது. புகைப்படத்தைப் பார்த்துவிட்டுத் தான் அழைக்கிறானென்று.
ஒவ்வொரு சட்டையிலும் ஒவ்வொரு புகைப்படம் வைத்துப் பொருத்தமானப் பாடல் எழுதி வைக்கும் பொழுது வராத வெட்கம் இப்பொழுது வந்து தொலைத்தது. தயக்கம் பாதி வெட்கம் மீதியென தத்தளிக்கும் மனதை ஒருவாறு சமன் செய்து கொண்டு,
அலைபேசியைக் காதுக்குக் கொடுத்து “ஹலோ” என்று தனக்கே கேட்காத குரலில் அமிர்தா பேச,
“இதுக்கு என்ன அர்த்தம் வர்ஷூ?” கையிலிருந்த புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டே கேள்வியை அவளிடம் கேட்டான் ராகுல். சோனி இப்பொழுது வர்ஷூயாக மாறியிருந்தது.
“எதுக்கு?” தெரியாததைப் போலக் கேட்டாள் அமிர்தா.
“இந்த ஃபோட்டோக்கு, அதுக்குப் பின்னால எழுதியிருக்குற வரிகளுக்கு.”
“ஏன் இசையமைப்பாளருக்குத் தமிழ் மறந்து போச்சோ?”
“ஹான்… இதைப் பார்த்தப்புறம் எனக்கு உலகமே மறந்து போன மாதிரி தான் இருக்கு.”
வெட்கச் சிரிப்பு மட்டுமே பதிலாகக் கிடைத்தது.
“வர்ஷூ எனக்கு உன் வாயால கேட்கணும். ப்ளீஸ் சொல்லேன்.”
“உனக்காக வாழ நினைக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்” மீண்டும் பாட்டாகவே பாடிக் காண்பித்தாள்.
“நிஜமாவா சோனி… சோனி… சோனி… சோனி…” மனம் முழுக்க அவளே நிறைந்திருக்க வாயிலும் அவள் பெயர் மட்டுமே வந்தது.
“இதை நான் அங்க இருக்கும் போதே சொல்லி இருக்கலாமில்ல? எனக்கு இப்போவே இந்த நிமிஷமே உன்னைப் பார்க்கணும் போல இருக்கு. இப்ப நான் என்ன பண்ண? நீயே சொல்லு”
“ஒரே ஒரு முத்தத்தைக் கொடுத்துட்டு ஒரு மாசத்துக்கு ஓடி ஒளிஞ்ச ஆள் தானே நீங்க? உங்ககிட்ட எப்படி நேர்ல சொல்றதாம்? அதான்… இப்படிப் பண்ணி…” எப்படி முடிக்கவெனத் தெரியாமல் தடுமாறி நின்றாள் அமிர்தா.
“அது நான் அன்னைக்கு உன்னைக் கஷ்டப்படுத்திட்டேனோன்னு நினைச்சு…”
“உங்களால எப்பவுமே யாரையுமே கஷ்டப்படுத்த முடியாது ரவி.”
“அவ்வளவு நம்பிக்கையா என் மேல? எனக்கு இப்போ எப்படி இருக்குத் தெரியுமா சோனி? இந்த உலகத்துலயே நான் தான் சந்தோஷமான ஆளுன்னு இந்த மலை மேல ஏறி நின்னு எல்லாருக்கும் கத்தி சொல்லணும் போல இருக்கு.”
இருவருமே வெகுவாக உணர்ச்சிவசப்பட்டிருக்க, அங்குப் பேச்சற்ற மௌனம் சூழ்ந்து கொண்டது. முதலில் மௌனத்தைக் கலைத்தது அமிர்தா தான்.
“பாஷை தெரியாத ஊர்ல போய் அப்படி எல்லாம் கத்தி வைச்சிடாதீங்க இசையமைப்பாளரே. பார்க்குறவங்க தப்பா நினைக்கப் போறாங்க.”
“இவ்வளவு தூரம் தள்ளி இருக்கோங்குற தைரியத்துல பேசுற… ஹ்ம்ம்… எல்லாம் என் நேரம் டி.”
“டி சொல்லாதீங்க ரவி. அப்புறம் எனக்குக் கோபம் வந்துடும்.”
“டி சொல்லாதீங்க, சோனி சொல்லாதீங்க. எத்தனைக் கண்டிஷன் போடுற நீ?”
“நான் சொல்றதை அப்படியே நீங்க கேட்குற மாதிரி தான். இப்ப வரைக்கும் சோனின்னு தானே கூப்பிடுறீங்க. அப்புறம் என்னவாம்?” சற்று நேரத்துக்கு முன் அவன் ‘வர்ஷூ’ என்று உருகிக் கரைந்ததெல்லாம் தெரியாததைப் போலவே பேசிக் கொண்டிருந்தாள் அமிர்தா.
“அப்படித் தான்டி கூப்பிடுவேன் என் பொண்டாட்டி. என்னடி பண்ணுவ?” அவளை வெறுப்பேற்றினால் அவனுக்குப் பிடித்தமானது கிடைக்குமே, அதற்காகவே அவளைச் சீண்டிக் கொண்டிருந்தான்.
“போடா” அவன் விரும்பியது கிடைத்துவிட அட்டகாசமாகச் சிரித்தான் மெல்லிசைக்காரன்.
அதன் பிறகும் பேசினார்கள், பேசினார்கள், இருவரும் பேசிக் கொண்டே இருந்தார்கள். திருமணத்திற்கு முன் பேச வேண்டிய ‘ஸ்வீட் நத்திங்க்ஸ்’சை இப்பொழுது பேசிக் கொண்டிருந்தார்கள் இருவரும்.
அந்தப் பத்து நாட்களும் ராகுல் போனும் கையுமாகவே சுற்றிக் கொண்டிருந்ததைப் பார்த்து உடன் வந்தவர்கள் அனைவரும் கேலி பேசும் அளவுக்குப் போயிருந்தது. போதாக் குறைக்கு அவன் இருந்த மகிழ்ச்சியான மனநிலைக்கு, ராஜேந்திர பிரசாத் திரைப்படத்தின் கதையை விளக்கிச் சொல்லும் பொழுதே அழகான ஒரு காதல் காட்சி வர அதற்கு நொடிப் பொழுதில் ஒரு ட்யூனை ஸ்வரமாகப் பாடிக் காட்ட அது அங்கிருந்த அனைவருக்குமே மிகவும் பிடித்து வேறு போனது.
“யோவ், கோலிவுட் முழுக்க ஒரு அனௌன்ஸ்மென்ட் பண்ணுங்கய்யா. ‘ஆர்.வீ’யை ஈஸ் கூட்டிட்டு வந்தா இசை அருவி மாதிரி கொட்டுதுன்னு.” என்று ராஜேந்திர பிரசாத்தே கேலிப் பேசி இருந்தார்.
“அது அப்படி இல்ல சார். இதையே நீங்க சென்னையிலேயே முடிச்சிருந்தீங்கன்னு வைங்க, இன்னும் பிரமாதமான ட்யூனே சிக்கி இருக்கும். நானே என் வொய்ஃபை பிரிஞ்ச சோகத்துல இருக்கேன்.” என்று வெட்கமே இல்லாமல் அதற்கும் வேறு பதில் கொடுத்து இருந்தான் ராகுல்.
‘ஆர்.வீ யா இது?’ என்று மொத்த ஆட்களுமே மூக்கின் மீது விரல் வைக்காத குறையாக வியந்து போனார்கள். பத்து நாட்களும் நொடியில் கடந்து போக, ராகுல் ஊர் திரும்பும் நாளும் வந்து சேர்ந்தது. மற்றவர்கள் வேறு சில பயண ஏற்பாடுகளோடு வந்திருக்க ராகுல் இதை மட்டும் முடித்துக் கொண்டு விமானமேறினான்.
ராகுலின் வரவை முன்னிட்டு இங்கு வீட்டையே இரண்டாக்கிக் கொண்டிருந்தாள் அமிர்தா. இரவு வரப் போகும் கணவருக்காக மதியத்திலிருந்தே சமையல் தடபுடலாகத் தயாராகிக் கொண்டிருந்தது.
“அமிர்தா ம்மா என்ன செய்யணும்னு சொன்னா நான் செய்ய மாட்டேனா?” என்று சாந்தி வந்து நிற்க,
“அதெல்லாம் உங்களுக்கு செய்யத் தெரியாது சாந்திக்கா” முகத்தைக் கூடப் பார்க்காமல் பதில் கொடுத்தாள் அமிர்தா.
“ஆமாமா சாந்திக்காவது சமைக்கத் தெரியிறதாவது? இத்தனை நாளா இந்த வீட்ல சமையல் வேலை நீயா பார்த்த சாந்தி? போ, போய் வேற வேலை எதாவது பாரு” சத்யவதியின் பொய்யான அதட்டலில் சிரித்துக் கொண்டே சமையலறையில் இருந்து வெளியேறினார் சாந்தி.
சத்யவதியின் கிண்டல் புரிந்து “அத்தை” என்று அமிர்தா இடுப்பில் கை வைத்து முறைக்க,
“ஏம்மா சாப்பாடாவது எங்க எல்லாருக்கும் உண்டா? இல்ல அதுவும் உன் புருஷனுக்கு மட்டுந்தானா?” சத்யவதி கேட்ட முறையில் அமிர்தாவும் சேர்ந்தே சிரித்துவிட்டாள்.
“இப்படி உன்னை சந்தோஷமா பார்க்குறது எவ்வளவு நல்லா இருக்கு. இந்தச் சிரிப்பு எப்போதும் உன் முகத்துல நிலைச்சு இருக்கணும்” இன்னும் சற்று நேரத்தில அந்தச் சிரிப்பு மறையப் போவதைப் பற்றி அறியாமல் மனதார வாழ்த்திக் கொண்டிருந்தார் சத்யவதி.
அப்பொழுது சாந்தி அங்கு வந்து, “அமிர்தா ம்மா உங்களுக்கு எதோ ரிஜிஸ்டர் தபால் வந்திருக்காம். நீங்க தான் வந்து கையெழுத்துப் போட்டு வாங்கணுமாம். வெயிட் பண்றாங்க. வாங்கம்மா” என்று அழைத்துக் கொண்டு வந்து நின்றார்.
“எனக்கா? ரிஜிஸ்டர் போஸ்டா? யாரா இருக்கும்? இதைக் கொஞ்சம் பார்த்துக்கோங்க சாந்திக்கா” என்று சமையலை அவர் வசம் ஒப்படைத்துவிட்டு கையைக் கழுவிக் கொண்டு வாசலுக்கு விரைந்தாள் அமிர்தா.
அங்குக் காத்துக் கொண்டிருந்த நபரிடம், அவர் நீட்டிய காகிதத்தில் கையெழுத்திட்டு தபாலை வாங்கிக் கொண்டு வந்து சிட் அவுட்டில் நின்றபடியே படித்துப் பார்க்க, அமிர்தாவின் கால்களுக்குக் கீழ் பூமி நழுவியது.
ஜீவாவின் தந்தை, குழந்தை நிரஞ்ஜலா மீது உரிமை கோரி வழக்குத் தொடர்ந்திருப்பதாகத் தெரிவித்தது அந்த நோட்டீஸ். அமிர்தா நேரடியான ரத்த சம்பந்தம் இல்லாததாலும், தான் யாருமற்றுத் தனிமையில் தவிப்பதாலும் குழந்தை நிரஞ்ஜலாவை வளர்க்கும் பொறுப்பைத் தனக்கே தர வேண்டுமென்றும், குழந்தையைக் கண்ணில் கூடக் காட்டாமல் அமிர்தா மறைத்து வைத்திருப்பதாகவும் இந்த நோட்டீஸ் கண்ட ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்குமாறும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அமிர்தா செய்வதறியாமல் திகைத்து நிற்க அந்நேரம் சரியாக தீப்தி தன் பெற்றோருடன் அங்கு வந்து சேர்ந்தாள். அதிர்ச்சியில் உறைந்திருந்தவள் ஒருவாறுத் தன்னை சமாளித்துக் கொண்டு அவர்களை வரவேற்று அவர்களோடு சேர்ந்துத் தானும் வீட்டிற்குள் சென்றாள்.
அவர்கள் பின்னோடு வந்து சோபாவில் அமர்ந்த கௌஷிக்கின் இறுகிய முகமே சொன்னது எதுவோ ஒன்று சரியில்லை என்று. அமிர்தா தீப்தியைப் பார்த்து, “என்ன” என்று கேட்க,
அவள் அங்கிருந்த ரிமோட்டை எடுத்துத் தொலைக்காட்சியை உயிர்ப்பித்தாள். அதில், பாரிஸ்சில் இருந்து துபாய் சென்ற விமானம் தீவிரவாதக் கும்பலால் கடத்தப்பட்டு விட்டதாக செய்தி வாசிப்பாளர் ஒருவர் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருந்தார்.
இம்முறை கால்களின் கீழ் நழுவிய பூமி மொத்தமாகத் தன்னை விழுங்கிய உணர்வில் மயங்கிச் சரிந்தாள் அமிர்தவர்ஷினி.