வா… அருகே வா! – 23
திலக் பதட்டத்தோடு கைகளை விலக்க எத்தனிக்க, பூங்கோதை அவன் கைகளைப் பிடித்து தன் வயிற்றின் மீது வைத்தாள். தன் தந்தையின் வரவை உணர்ந்தது போல் அவர்கள் சிசு நெளிந்தது. திலக்கின் கண்கள் கலங்கியது. குழந்தையின் அசைவை உணர்ந்தவன், ஆனந்தத்தில் தன் மனைவியைப் பிரமிப்பாகப் பார்த்தான்.
பூங்கோதை அவனைப் பார்க்கவில்லை. அவள் கண்கள் மூடி இருந்தது.
‘பூங்கோதை என்னை தவிர்க்கிறாளோ?’ என்று மெலிதாக இருந்த சந்தேகம் அவன் மனதில் விஸ்வரூபம் எடுத்தது.
கலங்கிய கண்களில் அவனால் பூங்கோதையை சரியாகப் பார்க்க முடியவில்லை. தன் கண்களைத் துடைத்துக் கொண்டான். பூங்கோதை எதுவும் அறியாதது போல் உறங்கிக் கொண்டிருந்தாள்.
‘தூங்குபவர்களை எழுப்ப முடியும். தூங்குவது போல் பாசாங்கு செய்பவர்களை?’ என்று கேள்வியோடு தன் தோள்களைக் குலுக்கிக் கொண்டான்.
பூங்கோதை அருகே சாய்ந்து அமர்வதே அவனுக்குச் சொர்க்கமாக இருந்தது. அவளுக்கும் அப்படி தான்!
அவன் அவளை நெருங்கிச் சாய்ந்து அமர்ந்து கொண்டான். அவளும் அவன் அறியாத வண்ணம் அவளை அவனோடு நெருக்கிக் கொண்டாள்.
அதைக் கண்டுகொண்ட திலக்கின் முகத்தில் மெல்லிய புன்னகை எட்டிப் பார்த்தது.
ரசனையோடு பூங்கோதையின் செயல்களை உள்வாங்கிக் கொண்டான் திலக்.
வார்த்தைகள் பேச முடியாத பல விஷயங்களை அந்த நெருக்கம் அந்த மௌனம் சம்பாஷித்தது.
. திலக்கிற்கு அவர்கள் ஊரில் பலத்த வரவேற்பு. ஊர் மக்கள் முழுவதும் அவன் புகழ் பாடினர். செல்லமா திலக், பூங்கோதை இருவருக்கும் ஆரத்தி எடுக்க, முத்தம்மா ஆச்சி, பார்வதி ஆச்சி கண்ணீரோடும், சந்தோஷத்தோடும் அவனை வரவேற்றனர்.
பூங்கோதையின் ராசி மீண்டும் வேறு கோணத்தில் அலசப்பட்டது. அவள் ராசியே அவனை மீட்டுக் கொண்டு வந்தது என்ற கோணத்தில் அவர்கள் பேச்சு தொடர்ந்தது.
நிலை இல்லாமல் பேசும் அவர்கள் நாக்கை நினைத்து பூங்கோதை முகத்தில் ஏளன புன்னகை தோன்றியது.
‘என் ராசி தான் இவுகளை மீட்டுக் கொண்டு வந்ததா? இதை இந்திய அரசாங்கம் கேட்கணும்.’ என்ற எண்ணம் தோன்ற பூங்கோதையின் ஏளன புன்னகை விரிந்தது.
திலக்கோடு பலரும் பேசிக்கொண்டிருந்தாலும், அவன் கண்கள் பூங்கோதையை அளவிட்டுக் கொண்டிருந்தது.
பூங்கோதையின் செயல் இத்தனை நாள் பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுக்க அவளைக் கண்காணித்துக் கொண்டிருந்தனர். ஆனால், திலக்கின் வருகைக்குப் பின்னர் பூங்கோதையை யாரும் கவனிக்கவில்லை. கயல், வள்ளி உட்பட அனைவரும் நிம்மதி அடைந்தனர்.
பூங்கோதையின் மனதில் மண்டிக்கிடந்த அழுத்தம் அவள் முகத்தில் இருப்பதை திலக் புரிந்து கொண்டான். ‘பியூட்டி… பியூட்டி… பேசு பியூட்டி…’ அவன் மனம் கெஞ்சியது.
பூங்கோதை அவள் வேலையில் மும்முரமாக இருந்தாள்.
திலக், கதிரேசனிடம் இத்தனை நாள் நிலவரத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டான். பூங்கோதையின் நடவடிக்கை உட்பட.
அனைவரும் பேசிவிட்டு, உணவை முடித்துக் கொண்டு கிளம்ப இரவாகிவிட்டது.
பூங்கோதை சோர்வாக இருக்கிறது என்று காரணத்தைக் கூறிக்கொண்டு அவர்கள் அறைக்குள் நுழைந்து விட்டாள்.
திலக் அவர்கள் அறைக்குள் நுழைய, பூங்கோதை தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.
திலக் அந்த அறையை நோட்டமிட்டான். அறை முழுவதும் அவன் பொருட்கள். அவன் கடிதங்கள். அவன் வாசமே. அவன் இருப்பை உணர்த்துவது போல் அவளின் செய்கைகள்.
பூங்கோதையின் ஏக்கம் புரிந்து திலக்கின் கண்கள் கலங்கியது. அவள் நம்பிக்கையின் அளவில் அவனுக்கு மெய் சிலிர்த்தது.
‘என் பியூட்டி….’ தன் நெஞ்சை நீவிக்கொண்டு, அவள் அருகே படுத்துக் கொண்டான் திலக்.
அவள் கூந்தலை ஒதுக்கி காதோரம், “பியூட்டி…” மென்மையாக அழைத்தான்.
‘பூங்கோதை அழுதிராத… அழாத… அழுது தொலைச்சிராத…’ என்று தனக்கு தானே உருப்போட்டுக் கொண்டு அமைதியாகப் படுத்திருந்தாள்.
திலக்கின் கைகள் அவன் அனுப்பிய மணியை உரிமையோடு தடவியது.
பூங்கோதை தன்னை இழந்து கொண்டிருந்தாள். “பியூட்டி… நன்றி… சந்தோஷமா இருக்கேன் பியூட்டி… நன்றி… நன்றி…” என்று கூறிக்கொண்டே திலக் அவள் கைகளில் சாய, “எதுக்கு?” என்று ஒற்றை வார்த்தையாகக் கேட்டாள் பூங்கோதை.
“தெரியலை பியூட்டி…” என்று கூறிக்கொண்டே அவள் கேள்விக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தான் திலக்.
பூங்கோதை அவன் பக்கம் திரும்பவில்லை. சுவரை பார்த்தபடியே படுத்திருந்தாள்.
“உன் நம்பிக்கை. உன் தைரியம். உன் நிமிர்வு…” என்று திலக் அடுக்கிக் கொண்டே போனான்.
“எல்லார் முன்னாடியும் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிருவியோன்னு நினச்சேன் பியூட்டி.” என்று திலக் தயங்கி கொண்டே கூற, “அது எப்படி அழுவேன்? நான் இந்த சமுதாயத்தில் ஒரு ராணுவ வீரனின் மனைவி இல்லையா?” என்று கர்வமாகக் கூறினாள் பூங்கோதை.
‘ராணுவ வீரனின் மனைவி.’ என்ற சொல்லை உச்சரிக்கும் பொழுது, அவள் முகத்தில் ஓர் கம்பீரமும், அவள் குரலில் ஒரு ஆளுமையும் ஒட்டிக் கொண்டது.
அவளை ஆழமாகக் கவனித்துக் கொண்டிருந்த திலக்கிற்கு அவள் குரலில் ஒரு அழுத்தமும், காணாமல் போன ‘மிலிட்டரி.’ என்ற அழைப்பும் பிடிபட்டது.
“பியூட்டி…” என்று அவளை ஆழமான, அன்பான குரலில் அழைத்தான் திலக்.
அந்த அழைப்பு, அழைப்பு மட்டுமில்லை. அவன் உயிர் துடிப்பின் வெளிப்பாடு. திலக்கின் மொத்த அன்பையும் தேக்கிக் கொண்டு வந்த அழைப்பில் பூங்கோதை குலுங்கி அழ ஆரம்பித்தாள்.
பூங்கோதையின் அழுகையை எதிர்பார்த்திருந்தாலும், அதைத் தாங்க முடியாமல், அதை ஏற்க முடியாமல் தவித்தான் திலக்.
“பியூட்டி… பியூட்டி… பியூட்டி….” என்று அழைப்பு மட்டுமே திலக்கிடமிருந்து வெளிவந்தது.
பூங்கோதை மேடிட்ட வயிற்றோடு திரும்ப முடியாமல் தவிக்க, எழுந்து அமர்ந்தாள்.
அவள் முன் அமர்ந்து கொண்டு திலக் தன் இரு கைகளையும் விரிக்க, அவன் மார்பில் சாய்ந்து கொண்டு கதறினாள் பூங்கோதை.
இதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீரை அவள் வடிக்க, அவள் தலை கோதினான் திலக்.
“பியூட்டி… எதுக்கு அழுத? நான் பிழைச்சி வந்துட்டனேன்னு அழுதியா?” என்று திலக் அந்த நேரத்திலும் கேலி போல் சமாதானம் செய்ய, “மிலிட்டரி… மிலிட்டரி… மிலிட்டரி…” என்று விசும்பினாள் பூங்கோதை.
“பியூட்டி பேசு.” என்று அவன் கண்டிப்போடு உத்தரவிட, “நான் ஒரு ராணுவ வீரனோடு மனைவியா ஜெயிச்சிட்டேன். தைரியமா… நம்பிக்கையா… ஆனால், என் மிலிட்டரியோட மனைவியா… மனைவியா செத்துட்டேன் செத்துட்டேன்….” என்று கதறினாள் பூங்கோதை.
அவள் கதறலுக்கு தோள் கொடுத்து, அவள் தலை கொதி அவளைச் சமாதானம் செய்தான் திலக்.
“ராணுவ வீரன் வேற, மிலிட்டரி வேறயா?” என்று திலக் பூங்கோதையின் முகம் உயர்த்தி அவள் கண்களைத் துடைத்த படி கேட்டான்.
“ம்… ம்… ம்…” என்று ஏங்கி ஏங்கி விசும்பினாள் பூங்கோதை.
“உன்னை எல்லாரும் தைரியசாலி…. கெட்டிக்காரி… அப்படி இப்படின்னு பாராட்டுதாக. உன்னை பார்த்தா…” என்று அவன் இழுக்க, “அதெல்லாம் ஊருக்கு… உங்க முன்னாடி ஒன்னும் கிடையாது.” என்று பூங்கோதை தன் கழுத்தை நொடித்தாள் பூங்கோதை.
பூங்கோதை கண்கள் மீண்டும் கண்ணீரை சொரிய, அவள் கண்களை மீண்டும் துடைத்து அவளுக்குத் தண்ணீர் கொடுத்தான்.
“அழாத பியூட்டி… ராணுவ வீரன் வேற? மிலிட்டரி வேறயா?” என்று பூங்கோதையின் கவனத்தைத் திசை திருப்பினான் திலக்.
“ராணுவ வீரன் ஊருக்கு. மிலிட்டரி எனக்கு. நீங்க எனக்கு பாதுகாப்பு இல்லையா? என் சந்தோசம், என் அழுகை எல்லாத்துக்கும் நீங்கத் தானே பாதுகாப்பு. அந்த மிலிட்டரிங்கிற அழைப்பு…” என்று பூங்கோதை ராகம் பாடியபடி வெட்கப்பட்டாள்.
“பியூட்டி…” என்று அவனும் இழுக்க, பூங்கோதை புன்னகையோடு அவனைப் பார்த்தாள்.
“மாடிக்கு போய் பேசுவோமா?” என்று அவன் இழுக்க, “ம்… கூம்…” என்று பூங்கோதை மறுப்பு தெரிவிக்க, “என்ன பொஞ்சாதிக்கு என் பிடிவாதம் மறந்து போச்சா?” என்று கண்சிமிட்டிக் கேட்டான் திலக்.
“மிலிட்டரி, என்ன பண்ணுவீக?” என்று அவள் உதட்டை சுழிக்க,”அப்படியே அலேக்கா தூக்கிருவோம்.” என்று கூற, “நாங்க இப்ப இரெண்டு பெரு…” என்று தலை அசைத்துச் சிரித்தாள் பூங்கோதை.
“அதுக்கென்ன? என்னால முடியாதா?” என்று திலக் சவால் விட்டான்.
“மிலிட்டரி… வம்பே வேணாம். நான் மாடிக்கு வரேன்.” என்று அவனைத் தொடர்ந்து படி ஏறினாள்.
பூங்கோதை வயிற்றைத் தள்ளிக் கொண்டு சிரமப்பட்டுப் படியேற, “பியூட்டி… கஷ்டமா இருக்கா?” என்று அவளை தன்னோடு சேர்த்துக் கொண்டான்.
“இருந்துச்சு… இப்ப இல்லை…” என்று அவள் உதட்டை மடித்து கண் சிமிட்ட, திலக் அவள் கூற வருவது புரிந்து தன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
இருள் கவ்விய வானம். பாய் விரித்திருந்தான் திலக். பூங்கோதை அந்த இடத்தை ரசித்து பார்த்தாள். பரந்து விரிந்த வானம் அவள் சுதந்திரத்தின் அளவை கூறியது. சில்லென்ற காற்றில் தன் உடலைச் சிலிர்த்தாள் பூங்கோதை. தன் மேல் இருந்த துவாலையை அவள் மேல் போர்த்தினான் திலக்.
“குளிருதா பியூட்டி?” என்று திலக் கேட்க, மறுப்பாகத் தலை அசைத்தாள் பூங்கோதை.
அவள் கண்கள் அருகே இருந்த மரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தது.
அவள் அங்கு ஒளிந்து விளையாடியதும், திலக்கின் எல்லை மீறலும் நினைவு வந்தது. அத்தோடு அவன் சொற்களும்!
‘நம்ம கல்யாணம் நடக்கும்… உனக்கு என்னைப் பிடிக்கும்….’ என்று திலக் ஆணித்தரமாகக் கூறியது நினைவு வர, “மிலிட்டரி… எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்.” என்று கண்கலங்கினாள் பூங்கோதை.
பூங்கோதையின் சொல்லில், அவளை ஆழமாகப் பார்த்தான் திலக். அவனுக்குப் பேச நா எழவில்லை.
அவன் மனம், சொல் என சர்வமும் அவள் ஆட்கொண்டாள். இப்பொழுது பேச்சிலும்.
“என்னன்னவோ நடந்திருச்சுல?” என்று அவள் கேட்க, பதில் கூற வழி இல்லாமல் அவன் தலை அசைத்தான்.
“நான் யார் சொன்னதையும் நம்பலை மிலிட்டரி. உன் சொல்லதென் நம்பினேன்.” என்று பூங்கோதை குழந்தையாகக் கூறிக்கொண்டே அவன் தோள் சாய, அவன் உடல் சிலிர்த்தது.
திலக்கின் காயங்களை வருடியபடி, “ரொம்ப வலிக்குதா?” என்று பூங்கோதை கேட்க, “அப்ப வலிச்சுது. இப்ப வலிக்கலை,” என்று அவளைப் போலவே அவன் கூற அவன் மேல் உரிமையோடு சாய்ந்து கொண்டாள் பூங்கோதை. அவர்களுக்கு இடையே அவர்கள் குழந்தை, ‘நான்!’ என்பது போல் அசைந்தது.
“பொண்ணு என்ன சொல்றா?” என்று அந்த அசைவை உணர்ந்தபடி அவன் கேட்க, சரேலென்று கோபமாக விலகினாள் பூங்கோதை.
“பையன், உங்களை மாதிரி.” என்று பூங்கோதை கூற, “பொண்ணு, பியூட்டியை மாதிரி.” என்று புருவம் உயர்த்தி புன்சிரிப்போடு கூறினான் திலக்.
“பையன்… உங்களை மாதிரி ராணுவ வீரனா.” என்று உறுதியாக பூங்கோதை கூற, தன் மனைவியைப் பெருமையாக, பிரமிப்பாகப் பார்த்தான் திலக்.
“பியூட்டி…” என்று ஆழமான குரலில் அவன் அழைக்க, அவனை நிமிர்வாகப் பார்த்தாள் பூங்கோதை. அவன் முன் அழுது கரைந்தாலும், தன் மனைவியின் பார்வையில் நிமிர்வையும், நம்பிக்கையும் கண்டுகொண்டான் திலக்.
தன் மனைவியிடம் கேட்க நினைத்த கேள்வி அவனை இம்சித்தது. ‘நான் போன முறை விட்டு சென்ற பூங்கோதை இல்லை.’ என்று அவன் மனம் அரற்றியது.
‘பூங்கோதை எப்பொழுதும் தைரியசாலி தான். ஆனால், இப்பொழுது முன்னை விட தன்னம்பிக்கையும், அழுத்தமும், நிமிர்வும் கூடி இருக்கிறதோ?’ என்று எண்ணினான் திலக்.
‘வலி தாங்கும் கற்கள் சிலையாவது போல். வலி தாங்கும் பெண்கள் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி விடுகிறார்கள்.’ என்று யோசித்துக்கொண்டே, தட்டுத்தடுமாறி தயக்கத்தோடு அவன் எண்ணத்தைக் கேள்வியாக நிறுத்திவிட்டான் திலக்.
பூங்கோதை கூறிய பதிலில், அவளை இறுக அணைத்துக்கொண்டு, “பியூட்டி… பியூட்டி… பியூட்டி….” என்று அவள் முகமெங்கும் இதழ் பதித்தான் திலக்.
அந்த நிலவு அவர்கள் பேச்சுக்குச் சாட்சியாக! ஆனால், நேரம் காலமும்… என்னவென்று சொல்வது?
வா அருகே வா வரும்…