VAV-26 Final

வா… அருகே வா! – 26 (Final)

பூங்கோதை வலியால் துடித்துக் கொண்டிருந்தாள். முத்தமா ஆச்சி, பார்வதி ஆச்சி வெளியே காத்துக் கொண்டிருந்தனர். கதிரேசன், திலக்குடன் காத்துக்கொண்டிருந்தான்.

செல்லம்மா வள்ளியுடன் வீட்டில் துணை இருந்தார்.

கதிரேசன் எதுவும் பேசவில்லை. திலக்கிற்கு ஆறுதல் போல் அருகில் அமர்ந்திருந்தான்.

பூங்கோதை கேட்டுக் கொண்டது அவன் செவிகளில் மீண்டும் மீண்டும் ஒலித்தது.

‘ராணுவத்திலிருந்து அழைப்பு வரும் பொழுது வரட்டும். நீங்க போறதும், போகாததும் உங்க விருப்பம். ஆனால், இங்க எதாவது பண்ணுங்களேன்? அது வரைக்கும் ஏன் சும்மா இருக்கணும்?’

‘பூங்கோதை கேட்டதெல்லாம் சரி தான். ஆனால், ராணுவத்திலிருந்து எனக்கு அழைப்பு வராதா? போறதும்… போகாததும் என்றால்…’ என்ற கேள்வி அவனுள் எழுந்தது.

‘இதை சொன்னதும் வலி வந்திருச்சே… என் கோபத்தை கண்டுகொண்டாளோ? பயத்தில் தான் வலி வந்திருக்குமோ? இத்தனை நாள் பியூட்டி என்னைப் பற்றிய அழுத்தத்தில் தான் இருந்திருப்பாளோ?’ என்ற எண்ணம் தோன்ற தன்னை மறந்து பூங்கோதையை பற்றிய அச்சமும், கவலையும் அவனை ஆட்கொண்டது.

மருத்துவர் பரபரப்பாக, பூங்கோதையின் அறைக்குள் நுழைய, திலக்கின் பயம் இன்னும் அதிகரித்தது. ‘ஏதோ அழுத்தத்தில் தான் சீக்கிரம் வலி வந்திருச்சோ… இன்னும் சொன்ன நாள் கூட வரலையே.’ என்ற எண்ணத்தோடு தன் பொறுமையின்மையை நொந்து கொண்டான் திலக்.

‘அவ சொல்றதிலயும் நியாயம் இருக்கே… வருமோ… வராதோன்னு யோசிக்குற விசயத்துக்கு எத்தனை நாள் காத்திருக்க முடியும்? நீ சொன்னது சரி தான்… என் பார்வையில் என் கோபத்தை புரிஞ்சிருப்பா. எனக்கு எந்த கோபமும் இல்லைன்னு சொல்லிட்டா போதுமே…’ என்ற பரிதவிப்போடு தன் மனைவியை பார்க்க முடியுமா என்று பூங்கோதை இருக்கும் அறையை ஏக்கமாக பார்த்தான் திலக்.

சில மணி நேரம் போராட்டத்திற்குப் பின், அழகிய பெண் குழந்தையோடு செவிலியர் வர முத்தமா ஆச்சி குழந்தையைக் கையில் வாங்கிக் கொண்டார்.

திலக்கும் , கதிரேசனும் குழந்தையை ஆர்வமாகப் பார்த்தனர்.

பூங்கோதையை பார்க்கும் ஏக்கத்துடன், திலக்கின் கண்கள் சுழல, அனுமதி கிடைத்ததும் தன் மனைவியை நோக்கிச் சென்றான் திலக்.

திலக்கை பார்த்தும், “குழந்தை எப்படி இருக்கு?” என்று பூங்கோதை கேட்க, “உன்னை மாதிரி…” என்று கூறி  திலக் அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.

திலக் எதுவும் பேசவில்லை. அவளைப் பார்த்துவிட்டு, அவன் விலகிச் செல்ல, அவன் கைகளைப் பிடித்தாள் பூங்கோதை.

“மிலிட்டரி கோபமா?” என்று அவள் கேட்க, மறுப்பாகத் தலை அசைத்தான் திலக்.

பூங்கோதை கண்களில் கண்ணீர் பெருக, “இப்ப அழ கூடாது. எதுக்கு அழுத? நீ என்ன சொன்னாலும் செய்திடலாம்.” என்று திலக் கூறினான்.

பூங்கோதைஅவனை நம்பாமல் பார்க்க, “உண்மைத்தேன் பியூட்டி… இவ்விளவு கஷ்டப்பட்டு இப்படி ஒரு குழந்தையைக் கொடுத்திருக்க. இதைக் கூட நான் செய்யலைன்னா எப்படி?” என்று அவன் கேலி பேச, “எனக்காக இல்லை… உங்க குழந்தைக்காகத் தானா ?” என்று பூங்கோதை அவனிடம் சண்டைக்குத் தயாரானாள்.

‘ஆரம்பிச்சிடீகளா?’ என்பது போல், குழந்தை “வீல்…” என்று அலறியது.

திலக், பூங்கோதை இருவரின் கவனமும் குழந்தையின் பக்கம் திரும்பியது. திலக் சற்று பயத்தோடு  குழந்தையை கையில் ஏந்திக் கொண்டான். குழந்தை அழுகையை நிறுத்தாமல் இன்னும் அலற, “அம்மா… பிள்ளை ரெண்டு பேரும் நான் சொல்றதை கேட்க மாட்டீக போல…” என்று திலக் ஆனந்தமாக  கூற, “இதை சொல்றதுல இவ்விளவு சந்தோஷமா?” என்று பார்வதி ஆச்சி சந்தேகமாகக் கேட்டார்.

“பொஞ்சாதி சொல்றதை கேட்கறதில் ஒரு தனி சுகம்தேன்” என்று கதிரேசன் திலக்கை கேலி செய்ய, “அனுபவம்…” என்று திலக் கூற அங்குச் சிரிப்பலை பரவியது.

சில வருடங்களுக்குப் பின்…

பள்ளி ஆண்டு விழா.

திலக், பூங்கோதையின் தலைமையில் அந்த பள்ளிக்கூடம் இயங்கிக் கொண்டிருந்தது.

மாணவர்களிடம் ஒழுக்கம் மேலோங்கி இருந்தது. திலக் அவர்களிடம் பொறுமையாக, அதே நேரம் கண்டிப்போடும் பேசிக் கொண்டிருந்தான். பூங்கோதை, சிரித்த முகமாக தன் வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள். குழந்தைகள் அவர்கள் திறமையை வெளிப்படுத்த தயாராகக் காத்துக் கொண்டிருந்தனர்.

கதிரேசன் வள்ளியின் குழந்தையும், கயலின்  குழந்தையும் இன்று நிகழ்ச்சியில் பங்கு கொள்கிறார்கள்

முத்தமா ஆச்சி, பார்வதி ஆச்சி, கதிரேசன், வள்ளி, செல்லமா, கைலாசம், கயல், அவள் கணவன் என  அனைவரும் நிகழ்ச்சியைக் காண ஆர்வமாகக் காத்துக் கொண்டிருந்தனர்.

பூங்கோதையை அனைவரும் மரியாதையோடு பார்த்தனர். அவள் ராசியை அலசிய பலரும் இதில் அடக்கம். அவள் ராசி கருதி, அவளை ஒதுக்கிய அதே மக்கள் அவளைத் தனி மரியாதையோடு பார்த்தனர்.

செல்லம்மாவின் கண்களும் பூங்கோதையை தொடர்ந்தது. அவளுக்கென்று ஊரில் ஏற்பட்ட மரியாதையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

‘கதிரேசன் வள்ளியின்  வாழ்விலும் ஏற்றங்களும், இறக்கங்களும் இருக்கத்தான் செய்கின்றன. நான் ராசியைக் காரணம் காட்டி, பூங்கோதையை எத்தனை முறை காயப்படுத்திருப்பேன்?’ என்று அவர் மனதிலிருந்த வருத்தம் இப்பொழுதும் எழுந்தது.

‘காலத்தின் சுழற்சி… வாழ்ந்தோர் வீழ்வதும், வீழ்ந்தோர் வாழ்வதும் இயற்கை தானே? இதில் ராசி, சகுனம் என்று மனிதர்களைக் காயப்படுத்துவது எத்தகைய  பேதமை?’ என்ற எண்ணம் தோன்ற தன் அறியாமையை நினைத்துத் தானே புன்னகைத்துக் கொண்டார்.

விழா தொடங்கியது. பாட்டு, நடனம், மாறுவேடம் எனக் குழந்தைகள் அரங்கைப் பிரமாத படுத்திக் கொண்டிருந்தனர்.

திலக், பூங்கோதையின் பெண் குழந்தை ராணுவ உடை அணிந்து வர, அவள் எதோ பேசுவாள் என்று அனைவரும் அவளைக் கூர்மையாகக் கவனித்தனர்.

திலக்கிற்கும் தெரியாமல் பூங்கோதை தன் மகளைத் தயார் செய்திருந்தாள்.

அவர்கள் பெண்ணோ இனிமையாகப் பாட ஆரம்பித்தாள்.

“ல்லாஹ்வே  எங்களின்  தாய் பூமி பூவாசம் பொங்கியதால் ஏரி                                         பூவனம் பொற்காலம் ஆனதேனோ பனிவிழும்                                                      மலைகளில் பலிகள் ஏனோ அல்லா என்  காஷ்மீர் அழகாய் மாறாதா?                        அல்லா என் காஷ்மீர் அமைதி காணாதா?”

திலக்கின் கண்முன் அவன் கண்ட  மரணங்கள் தோன்றியது.

“உம்மை நானும் கேட்பது மீண்டும் எங்கள் காஷ்மீர்                                           அழகாய் மாறாதா? அல்லா என் காஷ்மீர் அமைதி காணாதா? ”

‘ஒவ்வொருவரின் எண்ணமும் அதுதானே?’ என்ற எண்ணத்தோடு அனைவரும் குழந்தை பாடும் பாடலை ரசித்து கேட்டுக் கொண்டிருந்தனர்.

“ஒ .. அந்த ஆப்பிள் தோட்டம் இங்கே கல்லறை தோட்டம் ஆனதே…                பள்ளத்தாக்கின் பசுமை இங்கே ரத்த கோலம் பூண்டதே…”

இயற்கையை ரசிக்க முடியாமல், அங்கு நிலவும் குழப்பங்களைப் பற்றி திலக் கூறுவது பூங்கோதைக்கு நினைவு வந்தது.

“வாழ்கையே இங்குதான் வலிகளாய் போனதே                                                     எங்கள் பெண்கள் முகங்கள் சிவந்ததெல்லாம்                                                          நாணம் கொண்டு அன்று மரணம் கண்டு இன்று…”

தானே அந்த நிலைமையில் நின்றது நினைவு வர, பூங்கோதையின் உடல் நடுங்கியது. அவள் திலக் அருகே சென்று நின்று கொண்டாள்.

“ஒ எங்கள் காஷ்மீரின் ரோஜா பூ விதவைகள் பார்த்து  அழத்தானா?                            ஒ எங்கள் காஷ்மீரின் வாரிசுகள் மரணத்தின் கையில் விழத்தானா?”

பூங்கோதையின் உடல் நடுங்க, அவளைத் தோளோடு செத்துக் கொண்டான் திலக்.

“சாலையில் சென்று வர இன்று ஒ .. சாவை வென்று வர வேண்டும்                          இந்த நிலையை தந்தாரோ புரியவில்லை கண்களை மூடியும் தூக்கம் இல்லை மேகம்கூட கண்ணீரை சோகமாய் சிந்துதே…”

என்று குழந்தை உருகிப் பாட, அனைவரின் கண்களும் கலங்கியது.

“என் காஷ்மீர்… என் நாடு… என் பாரதம்… ஜெய் ஹிந்த்…” என்று அவள் வீர முழக்கமிட அனைவரின் உடலும் சிலிர்த்தது.

விழா முடிந்ததும் அனைவரும் திலக் பூங்கோதையை பாராட்டினார். அனைவரின் பாராட்டையும் பெற்றுக்கொண்டு, தன் விருப்பத்திற்காக பள்ளி தொடங்கி தனக்குத் துணையாக இருக்கும் கணவனைப் பெருமை பொங்கப் பார்த்தாள் பூங்கோதை.

தன் மனைவியின் எண்ணத்தைக் கண்டுகொண்டு, திலக் புருவம் உயர்த்த பூங்கோதை வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள். விழா முடிந்து அனைவரும் வீடு திரும்பினர்.

பூங்கோதையை தனியே பிடிப்பதற்குள், திலக்கிற்கு போதும் போதும் என்றாகிவிட்டது.

“பியூட்டி…” என்று அவளை கதவோடு சாய்த்தான். “மிலிட்டரி… யாரவது வந்திரப்போறாக.” என்று பூங்கோதை சிணுங்க, “உன் பொண்ணு தானே… இப்பத்தேன் கஷ்ட்டப்பட்டு ஆச்சி கிட்ட அனுப்பினேன்… இப்பதைக்கு வர மாட்டா…” என்று அவன் கூற, “இப்ப என்ன வேணும்?” என்று கறாராகக் கேட்டாள் பூங்கோதை.

“கேட்டா குடுப்பியா பியூட்டி?” என்று திலக்கின் கைகள் அவள் இடை  மணியைத் தீண்டிக் கொண்டே  குரலில்  ஆசையைத் தேக்கி நின்றது.

“ம்…” பூங்கோதை தடுமாற, “ராணுவம் உன் யோசனை தானா?” என்று திலக் கேட்க, “உங்களுக்கு பிடிக்கும்ன்னு…” என்று மென்மையாகக் கூறினாள்.

“உங்களுக்கு அழைப்பு வரும். நீங்க சீக்கிரம் ராணுவத்தில் சேர்ந்திருவீக.” என்று பூங்கோதை நம்பிக்கையோடு கூறினாள்.

‘எப்பவோ அழைப்பு வந்திருச்சு பியூட்டி… நான் தான் போகலை. உன் விருப்பம் பள்ளி கூடத்தில்  இருந்துச்சு. எந்த ஊர் உன்னை அவமானமா பார்த்துச்சோ அந்த ஊர் உன்னை தலை மேல தூக்கி வச்சி கொண்டாடுறதை பார்க்க எனக்கு சந்தோஷமா இருக்கு பியூட்டி… எனக்கு இதுவும் பிடிச்சிருக்கு பியூட்டி. நாட்டுக்காக சேவை பண்ணேன்… இப்ப ஊருக்காக… இதுவும் எனக்கு நிம்மதியை தருது பியூட்டி… உன் சந்தோஷத்தில் கூடுதல் நிம்மதி.’ என்று சிந்தித்த படி

அவளை அமைதியாகப் பார்த்தான் திலக்.

அவன் தோள்களில் கை போட்டுக் கொண்டு, “மிலிட்டரி என்ன யோசனை?” என்று பூங்கோதை கேட்க, “வரப்ப வரட்டும் பியூட்டி… எனக்கு இப்ப இருக்கிறதே பிடிச்சிருக்கு.” என்று அவன் கூற, தலை அசைத்துக் கேட்டுக்கொண்டாள் பூங்கோதை.

தனிமையில் எல்லை மீறல்களும், பேச்சுகளும் தொடர்ந்து கொண்டே இருந்தது. அதில் அவர்கள் நேசமும், அன்பும் வழிந்தோடியது.

தன் மனைவிக்காக அவன் விட்டுக் கொடுத்திருந்தாலும், அவளிடம் அதைச் சொல்ல அவன் விரும்ப வில்லை. அவளுக்காக அவன் எதையும் விட்டுக்கொடுப்பதை பூங்கோதை விரும்பமாட்டாள் என்று திலக்கிற்கு தெரியும்.

அவனும், அவள் தனக்காக எதையும் விட்டுக்கொடுப்பதை விரும்பவில்லை.  நல் எண்ணமும், அன்பும் மட்டுமே அவர்கள் இல்லறத்திற்கு அரணாக அமைந்தது.

பியூட்டி, மிலிட்டரியின் நல் எண்ணத்தில், அன்பில் துன்பமும், பிரச்சனைகளும் அவர்களிடம் போராடித் தோற்று அவர்களை நெருங்க முடியாமல் விலகி ஓடியது.

நேரம், காலம், ராசி, இவை மனிதனை என்ன செய்திட முடியும்? ஏற்ற இறக்கத்தைக் கொண்டு வர முடியுமா? ஆனால், நம்மை நெருங்க முடியாது. நம் மனதின் எண்ணங்களே, நம் வாழ்வின் நிகழ்வுகளை நம் அருகே கொண்டு வருகிறது என்று திலக்கும், பூங்கோதையும் நமக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார்கள்

நல்லதே நினைப்போம்… நல்லதே நம் அருகில் வரும்…

அமைதியே வா… அருகே வா..                                                                             இன்பமே வா… அருகே வா….                                                                             வெற்றியே வா… அருகே வா….

அனைத்து நலன்களும் அருகில் வர வாழ்த்தி விடை பெறுவது

அகிலா கண்ணன்

 

 

 

 

 

 

 

 

error: Content is protected !!