VAV-25 Pre Final

வா… அருகே வா! – 25 (Pre final)

ஒரு அடி விலகிச் சென்ற பூங்கோதையை பார்த்தபடி  திலக் தன்னை நிதானப்படுத்திக் கொண்டிருந்தான். பூங்கோதை அவனை அச்சம் ஏமாற்றம் கலந்த கண்களோடு பார்த்தாள்.

பூங்கோதையின் பார்வையில் அவன் நிதானம் அதிகரித்தது. ‘அச்சோ… நான் என்ன பண்ணிட்டு இருக்கேன்?’ என்ற கேள்வி எழ, பூங்கோதையின் கைகளைப் பிடிக்க முயன்று தோற்றுப் போனான் திலக்.

பூங்கோதை சரேல் என்று உள்ளே செல்ல, அவளை ஏமாற்றத்தோடு பார்த்து நின்றான் திலக்.

பூங்கோதை தண்ணீர் சொம்போடு திரும்பி வந்தாள். எதுவும் பேசவில்லை. எதுவும் கேட்கவில்லை.

திலக் தண்ணீரை மடக் மடக்கென்று குடித்தான். அவன் சிந்தனை பூங்கோதையை விடுத்து, வந்த அழைப்பைச் சுற்றியது.

‘எதுவும் கேட்கக் கூடாது… எதுவும் பேசக் கூடாது…’ என்று பூங்கோதையை கோபம் கனலாகச் சுழன்றாலும், அவள் மனம் அவன் பால் கட்டுப்பாடின்றி பறந்து கொண்டு நின்றது.

‘மிலிட்டரி…’ என்று அழைக்காமல், “என்ன ஆச்சு?” என்று அக்கறையாகக் கேட்டாள் பூங்கோதை.

‘ஒண்ணுமில்லை…’ என்பது போல் அவன் தலை அசைக்க, பூங்கோதையின் கோபம் விர்ரென்று ஏறியது.

எதுவும் பேசாமல் அவள் திரும்ப எத்தனிக்க, “தலையில் எதோ காயம், அது தான் கொஞ்சம் தலை வலி.” என்று திலக் தடுமாற, பூங்கோதை அனைத்தையும் மறந்து, “என்ன ஆச்சு? மருத்துவரை பார்க்க போவோமா?” என்று பூங்கோதை அவன் தலை முடியைக் கோதியபடி கண்கலங்கினாள்.

“பூங்கோதை  எதுக்கு அழுத?” என்று திலக் கண்டித்தான்.

பூங்கோதைக்கு அவள் அழுகையின் காரணம் தெரியவில்லை. எத்தனையோ விஷயங்களைத் தைரியமாகச் சந்தித்தவள் தான். ஆனால், ‘மிலிட்டரி…’ என்று அழைக்க கூடாது என்று அவன் சொன்ன சொல்லில் அவள் உடைந்திருந்தாள். காரணமும் தெரியவில்லை. அவனிடம் கோபித்துக் கொள்ளச் சூழ்நிலையும் ஒத்துழைக்கவில்லை.

அனைத்தும் சேர்ந்து அவள் கண்களில் கண்ணீராக வடிந்தது.

பூங்கோதையின் கண்ணீரில் அவன் ஏமாற்றங்கள் கரைந்து போனது.

“பியூட்டி…” என்ற அழைப்போடு அவளை தன் மேல் சாய்த்துக் கொண்டான்.

அவனிடமிருந்து, திமிறிக் கொண்டு விலகினாள் பூங்கோதை.

“உங்களுக்கு என்ன ஆச்சு? ஏதோ இருக்கு என்கிட்டே மறைக்குதீக…” என்று பூங்கோதை பிடிவாதமாக நின்றாள்.

“நேத்தும் உங்களுக்கு தலை சுத்துச்சு… இப்பவும்… வாங்க மருத்துவர் கிட்ட போவோம்.” என்று அவள் முந்தானையை மேடிட்ட வயிற்றை சுற்றிக்கொண்டு பூங்கோதை  அவன் கைகளைப் பிடித்து இழுக்க, அவன் தன் கைகளை உருவிக் கொண்டான்.

“ஒன்னும் ஆகலை… நான் சாகுற அளவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. வேலைக்கு தான் போக முடியாது. ஏதேதோ டெஸ்ட் எடுக்கணுமாம். நான் மிலிட்டரியில் திரும்ப சேர, பல ட்ரீட்மெண்ட் போகணுமாம். போதுமா?” என்று கடுப்பாகக் கூறினான் திலக்.

“ஓ….” என்று வருத்தத்தோடு கூறினாள் பூங்கோதை. திலக்கிற்கு பயப்படும்படி எதுவும் இல்லை என்ற செய்தி அவளுக்கு நிம்மதியை கொடுத்தது.

பூங்கோதையால் அவன் வருத்தத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது. ‘இதனால் தான் இப்படி கோபப்படுதாகளா?’ என்ற கேள்வியோடு, ‘இதை எப்படி சரி செய்வது?’ என்ற எண்ணத்தோடு அவனை யோசனையாகப் பார்த்தாள் பூங்கோதை.

“அதனால…” என்று பூங்கோதை எதோ பேச ஆரம்பிக்க, “நானே செம்ம எரிச்சலில்  இருக்கேன். எதுக்கு பிழைச்சி வந்தேன்? வந்து என்ன சாதிக்க போறேன்னு? நீ வேற நைநைன்னு எதாவது சொல்லாத.” என்று திலக் கடுப்பாகக் கூற, அவன் சட்டையைக் கொத்தாகப் பிடித்தாள் பூங்கோதை.

“உங்களுக்கு நம்ம நாடு, உங்க வேலை முக்கியமுன்னு எனக்கு தெரியும். ஆனால், நான்… என் மேல கொஞ்சம் கூட அக்கறையே இல்லையா? எதுக்கு பிழைச்சி வந்தேன்னு கேட்கறீக? இதுக்கு என்ன அர்த்தம்? நான், நம்ம குழந்தை எல்லாம் அனாதையா நிக்கணுமா?” என்று பூங்கோதை அவனைக் கிடுக்கு  பிடியாக பிடித்தாள்.

‘நான் ஒன்னு சொன்னா, இவ ஒன்னு புரிஞ்சிக்குதா. நான் இவ வேண்டாமுன்னா சொன்னேன். இவளுக்காகத்தானே வந்தேன்.’ என்று எண்ணத்தோடு அவன் சிந்திக்க, பூங்கோதையின் கேள்வி அவன் மனநிலையில் அவனுக்கு எரிச்சலைத் தர, அவள் கைகளை உதறிவிட்டு உள்ளே சென்றான் திலக்.

‘மிலிட்டரி….’ என்று கதற வேண்டும் போல் அவளுக்கு இருந்தது. பூங்கோதையின் உதடுகள், “மி….” என்று உச்சரிக்கத் தொடங்க, ‘அப்படி கூப்பிடாத…’ என்று அவன் கூறியது நினைவு வர, பூங்கோதை எதுவும் பேசாமல் அங்கிருந்த திண்ணையில் அமர்ந்தாள்.

பூங்கோதையின் மனதில் குழப்பம் மேலோங்கியது.

‘வேலை இல்லைனா அவுக என்ன ஆவாக? நான் அவுகளை எப்படி சரி செய்ய போறேன்?’ என்று பல கேள்விகள் அவள் மனதில் எழ, அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.

அனைத்து கேள்விகளுக்கும் அவளே பதிலாகப்போவது தெரியாமல்!

கண்ணீரில் கரைந்து பூங்கோதை திண்ணையில் கண் அயர்ந்துவிட்டாள்.

திலக்கால் இந்த ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. உடைந்துவிட்டான் என்று கூற முடியாது. ஆனால், அவன் பிடிவாதமும், கோபமும் முந்திக் கொண்டு நின்றது.

‘ஏன் இப்படி ஆனது? ஏன்? ஏன்? ஏன்?’ என்ற கேள்வி அவனுள் மலையாக எழுந்து  நின்றது.

மதியவேளை கடந்து இருவரும் சாப்பிட வராததால், வீட்டிற்குள் பூங்கோதையை தேடிவிட்டு திலக்கின்  அறையைத் தட்டினார் பார்வதி ஆச்சி.

“சாப்பிட வாங்க…” என்று பார்வதி ஆச்சி அழைக்க, “எனக்கு பசிக்கல… நீங்க சாப்பிடுங்க.” என்று ஜன்னலை வெறித்துப் பார்த்தபடி கூறினான் திலக்.

“நீ சாப்பிட வராம, உம் பொஞ்சாதி சாப்பிடுவாளா?” என்று பார்வதி ஆச்சி நிலைமை அறியாமல் அவர் போக்கில் கூற, “அவளை சாப்பிட சொல்லுங்க ஆச்சி.” என்று கடுப்பாகக் கூறினான் திலக்.

திலக்கின் பதிலில், அவன் கடுப்பை அவர் கவனிக்கவில்லை.   “பூங்கோதை இங்கன இல்லையா?” என்று பார்வதி ஆச்சி வினவ, திலக் அவரை அதிர்ச்சியாகப் பார்த்தான்.

“என்ன கேட்குதீக?” என்று திலக்  கேட்க, “அவ வீட்டுக்குள்ள இல்லையே பா. இந்த வெயிலில் வெளியவா உட்காந்திருப்பா?” என்று பார்வதி ஆச்சி சந்தேகமாகக் கேட்டார்.

‘நான் உள்ள வந்துட்டேன். அவ வரலியா? இவ்விளவு நேரம் அங்கன தனியா என்ன பண்ணிக்கிட்டு இருப்பா?’ என்ற எண்ணம் தோன்ற, அவசரமாக வெளியே சென்றான் திலக்.

திண்ணையில் அவள் உறங்குவதை பார்த்துட்டு, “அசதி போல… உறங்கிட்டா… மெதுவா எழுப்பி கூட்டிட்டு வா.” என்று கூறிவிட்டு பார்வதி ஆச்சி உள்ளே சென்றுவிட்டார்.

தலை முடி கலைந்து வெறும் தரையில், சோர்வாகப் படுத்திருந்த மனைவியைப் பார்த்தான்.

அவள் கண்களில் கண்ணீரின் ரேகைகள்.

‘ஐயோ… நான் இவளிடம் ஏன் கோபப் பட்டேன்?’ என்ற எண்ணத்தோடு அவள் தலை முடியை ஒதுக்கினான்.

‘என்ன சொல்லி தொலைச்சேன்ன்னு கூட சரியா ஞாபகம் இல்லையே?’ என்று திலக்கின் மனம் பரிதவித்தது.

“பியூட்டி…” என்று அவள் கன்னம் தொட்டு  மென்மையாக அழைத்தான்.

‘வயிற்றில் பிள்ளை இருக்கும் பொழுது, குழந்தையும் தூங்கும் எழுப்ப கூடாதுன்னு சொல்லுவாகளே?’ என்ற சந்தேகம் எழ பூங்கோதையை மேலிருந்து கீழ் வரை பார்த்தான் திலக்.

கால்களை மடக்கிக் கொண்டு, தன் கைகளால் கண்ணீரை மறைத்துக் கொள்வது போல் அவள் படுத்திருந்த தோற்றம் அவனை உலுக்கியது.

‘எத்தனை நாள் பியூட்டி, எனக்காக இப்படி அழுதிருப்பா? இன்னமும் அழணுமா?’ என்ற எண்ணம் தோன்ற, ‘நான் இவளுக்காக, எல்லாத்தயும் தாண்டி வரணும்.’ என்று தனக்கு தானே கூறிக்கொண்டான் திலக்.

“பியூட்டி…” என்று அவளை மீண்டும் மென்மையாக எழுப்ப, தூக்கம் கலைந்து கண்களை விழித்தவள், தன்னையும் மறந்து அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு, புன்னகையோடு எழும்பி, “மி…” என்று அவள் அழைக்க எத்தனிக்கும் பொழுது திலக் பேசியது நினைவு வர, அவள் கைகளை உருவிக்கொண்டாள் பூங்கோதை.

“என்னை எதுக்கு கூப்பிடுதீக?” என்று பூங்கோதை முறுக்கி கொள்ள, “பியூட்டி…” என்று அவன் சமாதானம் செய்தான்.

“நீங்க என்னை பியூட்டின்னு கூப்பிட வேண்டாம்.” என்று பூங்கோதை உறுதியாக கூற, “அதை சொல்ல நீ யார்?” என்று கோபமாகக் கேட்டான் திலக்.

‘அம்மா, அப்பா ரெண்டு பேருக்கும்  வேற வேலையே இல்லையா? எப்பப்பாரு இப்படி சின்ன புள்ளைத்தனமா சண்டை போட்டுக்கிட்டு.’ என்ற எண்ணத்தோடு பூங்கோதையின் வயிற்றில் உள்ள சிசு நெளிந்தது.

‘இந்த பேச்செல்லாம் நல்லா வக்கணையா தான் இருக்கு.’ என்ற எண்ணத்தோடு, “எதுக்கு பிழைச்சி வந்தோமுன்னு நினைக்குறவக எல்லாம் இப்படி கூப்பிட வேண்டாம்.” என்று கண்கலங்கினாள் பூங்கோதை.

“பியூட்டி… மன்னிச்சிரு… எதோ கோபத்தில் சொல்லிட்டேன். நான் அப்படி உணர்ந்து சொல்வேனா?” என்று பூங்கோதையின் முகத்தை கைகளில் ஏந்தி கரகரப்பான குரலில் கேட்டான் திலக்.

பூங்கோதையின் கண்களை கண்ணீர் திரையிட, “நீங்க கோபத்தில் கேட்டதால் தான், நான் உயிரோடு…. உணர்ந்து கேட்டிருந்தீக?” என்று பூங்கோதை கண்ணீரோடு மேலே அவனை மிரட்ட முடியாமல் தடுமாற, அவள் உதடுகளை தன் கைகளால் மூடினான் திலக்.

அவன் கைகளை ஒதுக்கி விட்டு, “நான் மிலிட்டரின்னு கூப்பிட கூடாதா? நீ என் மிலிட்டரி இல்லையா?” என்று பூங்கோதை கேட்க, மிலிட்டரி என்ற சொல் திலக்கின் மனதைத் தைக்க அவன் முகம் சுருங்கியது.

‘ஐயோ… அப்பா முகம் சுருங்குதே. கோபப்படுவாகளோ?’ என்ற எண்ணத்தோடு, தன் தாயை எட்டி உதைத்து அவர்கள் குழந்தை.

பூங்கோதைக்கு இப்பொழுது வலி தெரியவில்லை. அவள் கவனம் முழுவதும் திலக்கின் பக்கமே இருந்தது.

திலக் பதில் கூறவில்லை.

“மிலிட்டரி… நீயே சொன்னாலும் நான் கேட்க மாட்டேன்.” பூங்கோதை சில மணி நேரத்தில் தன்னை சுதாரித்துக் கொண்டாள்.

“ஏன் திரும்ப ராணுவத்துக்குப் போக மாட்டோமுன்னு நினைக்கறீக? டிரீட்மென்ட் போனா எல்லாம் சரியாகிடும் மிலிட்டரி.” என்று நிதானமாகக் கூறினாள் பூங்கோதை.

“ம்…” தலை அசைத்துக் கொண்டான் திலக்.

“ஏதோ ஏமாற்றம், கோபம்…” என்று அவன் தடுமாற, மறுப்பாகத் தலை அசைத்தாள் பூங்கோதை.

“என்னால புரிஞ்சிக்க முடியாதா?” என்று பூங்கோதை கேட்க, அவள் மடியில் தலை சாய்த்தான் திலக்.

“எனக்கு அம்மா இல்லாத குறையை நீ நிவர்த்தி பண்ணிட்ட பியூட்டி.” என்று அவன் கூற, “எனக்கு யாருமே இல்லைங்கிற குறையை நீங்க சரி செய்யும் பொழுது, நான் இதை கூட செய்யலைனா எப்படி?” என்று அவன் கைகளுக்குள் அவள் கைகளைப் புதைத்துக் கொண்டு காதல் வழியக் கேட்டாள் பூங்கோதை.

தலை உயர்த்தி, அவள் முகம் பார்த்துச் சிரித்துக் கொண்டான் திலக்.

“நாட்டுக்கு சேவை செஞ்சது போதும். கொஞ்சம் நாள், பொஞ்சாதியையும், வீட்டையும் கவனிங்கன்னு சொல்லிருக்காக.” என்று பக்குவமாகப் பேசி, நிதர்சனத்தை உணர்த்த முயர்ச்சித்தாள் பூங்கோதை.

திலகின் மனதில் வலி சுருக்கென்று தைத்தாலும், தன் பதிலுக்காகக் காத்திருக்கும் மனைவிக்காக அவள் மனம் கோணக் கூடாதென்று ஆமோதிப்பாகத் தலை அசைத்தான் திலக்.

பூங்கோதை மேலும் பேசுமுன், “சாப்பிடுவோம்  பியூட்டி… குழந்தைக்கு பசிக்கும்…” என்று திலக் கூற, பூங்கோதை அவனோடு உள்ளே சென்றாள்.

அவர்கள் நாட்கள் மெல்ல மெல்ல நகர்ந்தது. திலக்கின் சிகிச்சையும் துவங்கியது.

திலக் சற்று உற்சாகம் குறைந்தாலும், பூங்கோதை அவனைத் தளராமல் பார்த்துக் கொண்டாள். திலக்கின் வலி, ஏமாற்றம் அனைத்திற்கும், “பியூட்டி…” என்ற சொல்லே மருந்தாகிப் போனது.

எத்தனை கோபக்காரனோ? எத்தனை பிடிவாதக்காரனோ, திலக் அத்தனை உறுதியானவன் அல்லவா? அவன் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டுக் கொண்டிருந்தான்.

பூங்கோதையின் வளைகாப்பு நாளும் வந்தது.

பட்டு சரிகை சேலையோடு, நகையாடும் பூங்கோதை நடுக்கூடத்தில் அமர்ந்திருந்தாள்.

வள்ளி முன்னே நின்று கொண்டு அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருந்தாள். வள்ளியின் தாயார் அவளைக் கோபித்துக் கொண்டே இருந்தார்.  வள்ளி எதையும் கேட்கும் நிலையில் இல்லை.

வள்ளியின் அழிச்சாட்டியத்தை கதிரேசன் ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான். செல்லம்மா பூங்கோதையை தன் மகள் போல் பாவித்து கட்டுகளைச் செய்து கொண்டிருந்தார். திலக்கிற்கு இதை எல்லாம் பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருந்தது.

தன் கணவனைப் பார்த்த பூங்கோதை, ‘என்ன?’ என்பது போல் புருவம் உயர்த்தினாள்.

திலக் கண்மூடி கண் திறந்தான். எதுவோ புரிந்து கொண்டது போல் பூங்கோதை புன்னகைத்துக் கொண்டாள்.

கயல் தன் ஒரு வயது பெண்  குழந்தையோடு தன் தோழியைச் சுற்றிச் சுற்றி வந்தாள். தன் வாழ்வே சீரோடும், சிறப்போடும் அமைந்தது போல் கயலின் முகத்தில் அத்தனை சந்தோசம்.

“ஆண் குழந்தையா? பெண் குழந்தையா?” என்ற விவாதம் தூள் பறந்தது. “என்ன குழந்தையாக இருந்தால் என்ன? நன் ஒழுக்கத்தோடு, நல்ல படிப்போடு வளர வேண்டும்.” என்று பெரியவர் கூற, பலரும் ஆமோதிப்பாகத் தலை அசைத்தனர்.

குழந்தைக்கு வளையல் அணிவிக்கும் பொருட்டு, கயலின் குழந்தைக்கே முதல் வளையல் அணிவிக்கப்பட்டது.

கயல் தன் தோழியைக் கட்டிக் கொண்டு ஆனந்தக் கண்ணீரோடு அவள் கன்னத்தில் சந்தனம் தடவி வளையல் அணிவித்தாள்.

திலக் தன் மனைவியை வைத்த கண் வாங்காமல் சுவரில் சாய்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்தான்.

‘பியூட்டி… என்ற சொல்லுக்குப் பொருத்தமானவள், அழகிலும், மனதிலும், அன்பு செலுத்துவதிலும்.’ என்ற எண்ணத்தோடு!

திலக்கின் மனதில், எண்ணத்தில்  அவன் வலிகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு, பூங்கோதை அவள் அன்பால், அவள் பேச்சால் முன்னுக்கு வந்துவிட்டாள்.

விழா முடிந்து அனைவரும் அவர்கள் வீட்டுக்குச் சென்று விட்டனர்.

சாஸ்திரம் கருதி, பூங்கோதையும் முத்தமா ஆச்சி வீட்டுக்கு வந்திருந்தாள்.

திலக்கிடம் எந்த சாஸ்திரமும் செல்லுபடியாகவில்லை. அவனும் பூங்கோதையோடு முத்தமா ஆச்சி வீட்டிற்கு வந்துவிட்டான்.

பூங்கோதையின் ஒன்பதாவது மாதம். வளைகாப்பு விழா முடிந்து சோர்வாக அமர்ந்திருந்தாள்.

அறைக்குள் வந்த திலக், காற்று வரும்படி ஜன்னல்களைத் திறந்தான்.

“பியூட்டி…  எங்கயும் நோகல தானே? ரொம்ப சோர்வா தெரியுற?” என்று திலக் அக்கறையோடு கேட்க, “நல்லாருக்கேன்.” என்று புன்னகைத்தாள் பூங்கோதை.

அவளுக்கு சில விஷங்களை திலக்கிடம் பேச வேண்டும், ஆனால், எப்படிப் பேசுவது என்று தெரியாமல் தடுமாறினாள்.

திலக் இன்று நடந்த விழாவின் சந்தோஷத்திலிருந்தான்.

“பியூட்டி… எல்லாரும் ஏதேதோ குடுத்தாக… நான் உனக்கு எதுமே தரலியே… உனக்கு என்ன வேணாலும் கேளு தரேன்.” என்று திலக் தன் மனைவியின் அருகில் அமர்ந்து கொண்டு ஆசுவாசமாக கேட்டான்.

‘இது தான் சமயம்.’ என்று பூங்கோதைக்கு தோன்றியது. ஆனால், கேட்டால் கோபப்படுவானோ, என்ற அச்சம் எழுந்து அவளுள் ஒரு படபடப்பு சூழ்ந்தது.

தைரியத்தைத் திரட்டி, பூங்கோதை கேட்டுவிட்டாள்.

பூங்கோதை கேட்டதில் திலக்கின் உடல் கோபத்தில்  இறுகியது. ‘இதற்கு என்ன அர்த்தம்?’ என்ற கேள்வியும் அவன் மனதில் தோன்றியது.

திலக் அவளைக் கனல் கக்கும் பார்வை பார்த்தான்.

‘அப்பா கோபப்படுதாகளே… என்ன அம்மா இப்படி சொல்லிட்டாக?’ என்ற பதட்டத்தோடு, அவள் குழந்தை அவளை எட்டி உதைக்க, அவள் அம்மா என்று அலறவில்லை.

“மி… லி…ட்…ட…ரி…” என்றே அலறினாள் பூங்கோதை.

“மிலிட்டரி… மிலிட்டரி…. மிலிட்டரி…” என்ற அழைப்பு மட்டுமே அந்த வீட்டை நிரப்பியது. அவன் செவிகளையும்!

பூங்கோதையின் மேல் எழுந்த கோபம் அவள் அழைப்பில் பஸ்பமாகிக்  கொண்டிருந்தது.

அவள் வலியைத் தனதாக்கி, அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான் திலக்.

பியூட்டியின் அலறல் அவன் செவிகளைத் தீண்ட,  ‘பியூட்டி… பியூட்டி… பியூட்டி…’ என்ற நினைப்போடு, அவள் கேட்டுக் கொண்டதும் அவன் மனதை வாட்டியது

வா அருகே வா வரும்…

 

error: Content is protected !!