Rainbow kanavugal-15
Rainbow kanavugal-15
15
காவல் நிலையம்.
சரவணனுக்கு நேர்ந்த அதே பரிதாபகரமான நிலைமை அவன் கைப்பேசிக்கும் நேர்ந்தது.
சாரங்கபாணி மதுவிடம் தன் வன்மத்தையும் கோபத்தையும் இறக்கி வைத்த மறுகணமே அந்த செல்பேசியை கீழே போட்டு உடைத்திருந்தார். அதன் பாகங்கள் யாவும் துண்டு துண்டாக தரையில் சிதறின.
மறுகணமே ஜெயாவை பார்த்தவர், “நீ கிளம்பலையா?” என்று கேட்க, “இல்ல சார்… அந்த பொண்ணு கஸ்டடில இருக்கும் போது” என்று தயங்கினாள்.
“அதான் சுமதி இருக்கு இல்ல” என்று அங்கிருந்த பெண்கான்ஸ்டபிளை காண்பித்து சொல்லவும், “இல்ல சார்… நானும் இருக்கேன்… பரவாயில்ல” என்றாள். சாரங்கபாணி இந்தளவு குடித்திருக்கும் போது இந்துமதியே தனியே விட்டு போக மனம் வரவில்லை அவளுக்கு!
தான் இருக்கும் வரைதான் இந்துமதிக்கு பாதுக்காப்பு என்று ஜெயாவிற்கு தெரியும். கண்டிப்பாக அவளிருக்கும் வரை சாரங்கபாணி இந்துமதியிடம் எல்லை மீற மாட்டார்.
சாரங்கபாணி ஜெயாவை மேலும் கீழுமாக ஒரு அலட்சிய பார்வை பார்த்து சிரித்தவர், “எத்தனை நாளைக்குன்னு நானும் பார்க்கிறேன்?” என்றார். அவள் எண்ணம் அவருக்கு நன்றாகவே புரிந்திருந்தது.
அதேநேரம் தான் நினைத்ததை எப்படியாவது அடைந்துவிடுவேன் என்ற உறுதி அவர் விழிகளிலும் தெரிந்தது. அதன் பின் அவர் அங்கே இருக்காமல் காவல் நிலையம் விட்டு வெளியேறிவிட நீண்ட பெருமூச்சொன்றை வெளியேற்றிய ஜெயா,
“அந்த ஃபோன் பீஸஸ் எல்லாம் எடுங்க சுமதி” என்றாள்.
சுமதி எல்லாவற்றையும் எடுத்து ஜெயாவிடம் கொடுக்க அதனை மேஜை மீது வைத்து அனைத்து பாகங்களையும் ஒன்றிணைத்தவள் அதனை இயக்கி பார்த்தாள்.
நல்ல வேளையாக அது வேலை செய்ய, அதிலிருந்து மதுவின் எண்ணிற்கு அழைத்தாள்.
மதுவோ தாளமுடியா துயரில் உடலும் மனமும் கலங்கி நின்றிருந்தாள். யாரிடம் உதவி கேட்பது. காவல் நிலையத்தில் என்ன நடந்திருக்கும். சரவணன் இப்போது என்ன நிலைமையில்… எங்கே இருப்பான்?
இப்படி பல்வேறு கேள்விகள் அவள் மனதை குடைய, ரீங்காரமிட்ட அவளின் கைபேசி அவளின் சிந்தனைகளை கலைத்தது.
அதில் சரோ என்று ஒளிர, ‘அதே ஆளா இருக்குமோ? இருந்தாலும் பரவாயில்ல… அவன்கிட்ட பேசி சரவணன் எங்கே இருக்கானு தெரிஞ்சிப்போம்” என்று நினைத்து அவள் அழைப்பை ஏற்க அவள் எதிர்பார்ப்பிற்கு நேர்மாறாக,
“ஹெலோ” என்று ஒரு பெண்ணின் குரல் ஒலித்தது.
மது குழப்பத்தோடு, “யாரு?” என்று கேட்க,
“நான் யாருங்கிறது எல்லாம் இப்போ முக்கியமில்ல… சரவணன் இப்போ எங்க இருக்காருங்கிறதுதான் முக்கியம்” என்றாள்.
மது விழிகள் ஆச்சரியமாக விரிந்தன. அவள் மௌனமாக கேட்டு கொண்டிருக்க, ஜெயா சரவணன் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை விவரங்களை தெரிவித்துவிட்டு அழைப்பை துண்டித்திருந்தாள்.
அதனை கேட்ட மதுவின் மனதில் நிம்மதி படர்ந்தது. விரைவாக தன் அறையை விட்டு வெளியே வந்தவள் பெற்றோரின் அறை கதவை தட்டி, “தாமு தாமு” என்று உயிரே போகுமளவுக்கு கத்தினாள்.
அவர்கள் கதவை திறந்த மறுகணமே, “தாமு வா… ஹாஸ்பெட்டில் போலாம்” என்றவள் தன் தந்தையிடம் சொல்ல, அவரோ மகளுக்கு என்னவோ ஏதோ என்று பதறி போனார்.
நந்தினியோ குழப்பமாக, “இது ஏழா மாசம்தானே… பேறுகால வலியெல்லாம் இதுக்குள்ள வராதே” என்க,
“அப்படியெல்லாம் சொல்ல முடியாது… இரட்டை புள்ள இல்ல வந்து கூட இருக்கலாம்” என்று தாமு சொல்ல இருவரையும் விசித்திரமாக பார்த்தவள்,
“ஐயோ! எனக்கு ஒன்னும் இல்ல… சரோதான் ஹாஸ்பெட்டில இருக்கான்” என்று அவர்களிடம் அவள் காவல் நிலையம் சென்றதிலிருந்து அனைத்து விவரத்தையும் துரிதமாக உரைத்தாள்.
நந்தினி அதிர்ச்சியோடு, “அந்த இந்தமதி பொண்ணா அனன்யா வீட்டுகாரனை கொலை பண்ணுச்சு” என்று வினவ,
“இப்போ அது முக்கியமில்ல நந்து… சரோவுக்கு அடிப்பட்டு ஹாஸ்பெட்டில இருக்கான்… அவனுக்கு எதுவும் ஆக கூடாது” என்றாள்.
மகள் சொன்ன அனைத்தையும் நிதானமாக கேட்டு கொண்டிருந்த தாமு, “நான் ஹாஸ்பெட்டில் போய் பார்க்கிறேன்… நீ இந்த மாதிரி நேரத்தில என் கூட வர வேண்டாம்… வீட்டில இரு… நான் போய் பார்த்துட்டு உனக்கு என்ன எதுன்னு ஃபோன் பண்ணி சொல்றேன்” என்றார் தெளிவாக!
“ஐயோ! என்னால இங்க நிம்மதியா இருக்க முடியாது… நானும் வரேன்” என்று மது அடம்பிடிக்க,
“புரிஞ்சிகோடா… ஊரெல்லாம் மழை பெஞ்சி ரோடெல்லாம் நாஸ்தியா இருக்கு” என்றார்.
“ஆமா ஆமா… அப்புறம் அதுக்கு வேற உன் புருஷன் இங்க வந்து சாமியாடிடுவாரு… வேண்டவே வேண்டாம்… நீ இரு… அப்பா போயிட்டு வரட்டும்” என்று சொன்ன தன் அம்மாவை எரிச்சலாக பார்த்த மதுவிற்கு அந்த நொடி அவளின் கோபமெல்லாம் தான் சுமக்கும் குழந்தைகள் மீதும் அஜயின் மீதும் திரும்பியது.
இதுவே தான் முன்பு போல் இருந்திருந்தால் யாருடைய உதவியையும் தேவையையும் நாடியிருக்கவே அவசியம் இருந்திருக்காது.
ஆபத்திலிருக்கும் நண்பனுக்கு உதவ கூட முடியாத நிலையில் தான் இருப்பதை எண்ணி அவள் உள்ளம் குமுறி கொண்டிருக்க, தாமு துரிதமாக சட்டையை அணிந்து கிளம்பியிருந்தார்.
நந்தினி அப்போது, “சரோ வீட்டில சொல்லி யாரையாச்சு அழைச்சிட்டு போறீங்களா?” என்று கேட்க,
“இல்ல வேண்டாம்… நான் முதல போய் பார்த்துட்டு வரேன்” என்று தாமு புறப்பட்டிருந்தார்.
மதுவோ ஓர் ஆழ்ந்த மௌனத்தோடு சோபாவில் அமர்ந்து கொண்டு வெறித்து பார்த்திருந்தாள். தன்னுடைய இயலாமையை எண்ணி மனதிற்குள் நொந்து கொண்டிருந்தாள்.
கணவனை வழியனுப்பிவிட்டு வந்த நந்தினி…
மகள் அருகில் அமர்ந்து, “மதும்மா… சரோவுக்கு ஒன்னும் ஆகாது… அதான் அப்பா போயிருக்காரு இல்ல… அவர் பார்த்துப்பாரு” என்று சமாதானம் சொல்ல, அந்த வார்த்தைகளை எதுவும் அவள் செவிகளை எட்டவில்லை.
அவள் மனதை எதுவோ ஒன்று ஆழமாக குத்தி துளையிட்டது. யாரும் உணர முடியாத வலி அது!
தன் அம்மாவின் முகம் பார்த்தவள் என்ன நினைத்தாளோ? அப்படியே அவர் மடி சாய்ந்து வெடித்தழ தொடங்கியிருந்தாள்.
“மது அழாதே… சரோவுக்கு ஒன்னும் ஆகாதுடா” என்று அவள் கண்ணீரை நந்தினி துடைத்துவிட, “அவனுக்கு ஒன்னும் ஆக கூடாது” என்று சொல்லி கொண்டே அவள் மேலும் அவர் மடியில் முகம் புதைத்தபடி அழுதிருந்தாள்.
அந்த அழுகை சரவணுக்கானது மட்டுமல்ல. அவளுக்கானதும் கூட. எல்லையின்றி வானில் பறந்திருந்த ஒரு பறவை வலையில் சிக்கி சிறகொடிந்த கூண்டுக்குள் அடைப்பட்டிற்கும் வலி. இனி எப்போதாவது அந்த வானவீதியை பார்ப்போமா… பறப்போமா என்ற ஆதங்கத்தின்பால் உண்டான வலி அது.
மகளின் அழுகையை எந்த வார்த்தை சொல்லி தேற்றுவது என்று தெரியாமல் தவித்த நந்தினி, “உன் புருஷனுக்கு மட்டும் நீ இப்படி அழுதிட்டிருக்கிறது தெரிஞ்சுது” என்று சொன்ன மறுகணமே சரலென்று நிமிர்ந்து அமர்ந்தவள்,
“அவனுக்கு தெரிஞ்சா இப்போ என்ன… ஏன்?… எனக்கு அழ கூட சுதந்திரம் இல்லையா? நான் என்ன அவனுக்கு அடிமையா? எனக்குன்னு எந்த உணர்ச்சியும் இல்லையா? அவன் வா ன்னா வரணும்… போன்னா போகனுமா… என்ன மனுஷின்னு நினைச்சான்னா இல்ல பொம்மைன்னு நினைச்சானா?!” என்று அவள் பாட்டுக்கு தன் கோபத்தை கொட்ட ஆரம்பித்தாள்.
அவள் மனதில் அந்த எட்டு மாதங்களாக அவள் அடக்கி வைத்திருந்த உணர்வுகளெல்லாம் எரிமலையென மேலெழும்பி வெடிக்க தயாராகி கொண்டிருந்தது.
நந்தினி அதிர்ந்து போய் மகளையே பார்த்திருக்க,
“இதுக்கு மேல என்னால தாங்க முடியாது… முடியவே முடியாது” என்று தலையை பிடித்து கொண்டு வெறிபிடித்தவள் போல் கத்தவும்,
“குழந்தையை வயத்துல வைச்சிகிட்டு இப்படி கத்த கூடாது மது” என்று மகளை அரவணைத்து கொண்டார். தன் அம்மாவின் கரத்தை உதறிவிட்டு எழுந்து நின்றவள்,
“நான் இப்படித்தான் கத்துவேன்… சத்தமா கத்துவேன்… என்ன ஆயிடும்… ஆகட்டும்… என்ன வேணா ஆகட்டும்” என்று அவர் சொன்னதை கேட்காமல் பிடிவாதமாக குரலையுயர்த்தி கத்தினாள்.
“என்னாச்சு மது உனக்கு… ஏன் டி இப்படி கத்துற?” என்று மகளின் நிலையை பார்த்து அவர் மிரட்சியடைய,
“இனிமே எனக்கு என்ன ஆகணும்… அதான் என் வாழ்க்கையே முடிஞ்சு போச்சே… என் சந்தோசம் என் துக்கம் என் அழுகை என் கோபம்… இப்படி எதவுமே என்கிட்ட இல்லையே… மொத்ததில நான் நானவே இல்லையே” என்று தரையில் சரிந்து முகத்தை மூடி தீவிரமாக அழ
மகளின் இந்த மனநிலையை பார்த்து குழம்பி நின்ற நந்தினிக்கு என்ன பேசுவதென்றே புரியவில்லை. அவளருகில் அமர்ந்து கொண்டு, “என்னடா ஆச்சு உனக்கு?” என்று மகளை தன் தோள் மீது சாய்த்து கொள்ள மெல்ல மெல்ல அவள் அழுகை குறைந்தது.
அவள் அமைதியடையவும் நந்தினி, “அஜய் உன்னை சந்தோஷமா வைச்சு இல்லையா? இல்ல உங்க ரெண்டு பேருக்குள்ள ஏதாவது பிரச்சனையா?” என்று மெதுவாக கேட்க தன் அம்மாவின் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள்,
“இல்ல நந்து… எங்க ரெண்டு பேருக்குள்ள எந்த பிரச்சனையும் இல்ல… அவன் என்னை சந்தோஷமாதான் வைச்சிருக்கான்… இன்னும் கேட்டா கணவன் மனைவியா நாங்க சந்தோஷமாதான் இருக்கோம்… ஆனா” என்று நிறுத்தியவள் கண்ணீர் ததும்ப,
“தனிப்பட்ட முறையில மதுங்கிற நான் சந்தோஷமா இல்ல” என்றாள்.
“என்னடி குழப்புற?”
தன் அம்மாவை பார்த்து விரக்தியாக புன்னகை செய்தவள், “எனக்கு அஜயை ரொம்ப பிடிக்கும் நந்து… அவனுக்கும் என்னை ரொம்ப பிடிக்கும்… இன்னும் கேட்டா அவன் என்னை நேசிக்கிற அளவுக்கு இல்ல பார்த்துக்கிற அளவுக்கு நீ கூட என்னை பார்த்துக்க முடியாது” என்க,
“அப்புறம் என்னடி உனக்கு பிரச்சனை?” நந்தினி புரியாமல் மகளை பார்க்க,
“அதானே என் பிரச்சனையே” என்று துவண்ட மகளை பார்த்து திருதிருவென்று விழித்த நந்தினி,
“எனக்கு நீ சொல் வர்றது சுத்தமா புரியல… கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லு மது” என்றார்.
“அவன் என்னை பைத்தியம் மாதிரி லவ் பண்றான்… அவனை தவிர வேறெதுவும் எனக்கு சந்தோஷத்தை குடுக்க கூடாதுன்னு நினைக்கிறேன்… ஏன்? உங்க இடத்தை கூட அவனே பூர்த்தி செய்யணும்னு நினைக்கிறான்… எனக்கு அவன் மட்டும்தான் எல்லாமுமா இருக்கணும்னு நினைக்கிறான்… என்னோட அன்பு காதல் நட்பு பாசம்… ஏன் கோபம் கூட அவனுக்கு மட்டுமேதான் கிடைக்கணும்னு நினைக்கிறான்” என்று மது சொன்னதை கேட்டு நந்தினி அதிர்ந்தபடி பார்த்திருந்தாள்.
“நான் அவனுக்கு எதிரா ஒரே ஒரு வார்த்தை பேசுனாலும் அப்படியே உடைஞ்சி போயிடுறான்… இப்படிதான் தெரியாம ஒரு தடவை அவன்கிட்ட எனக்கு வேலைதான் முக்கியம் நீ முக்கியம் இல்லன்னு சொல்லிட்டேன்…
சாகிறேன்னு சொல்லி எங்கேயோ போய்… என்னை போட்டு படுத்தி எடுத்திட்டான்… பயந்தே போயிட்டேன் தெரியுமா? அந்த நிமிஷத்தில இருந்து அவனை ஹார்ட் பண்ணிட கூடாதுன்னு நினைச்சு நினைச்சு நான் என்னை தொலைச்சிக்கிட்டேன்
ஒவ்வொரு முறையும் அவன் ஹார்ட் ஆக கூடாதுங்கிற ஒரே காரணத்துக்காக என்னை நானே ஹார்ட் பண்ணிக்கிட்டேன்” என்று முகத்தை மூடி அழுத மகளை பரிதாபமாக பார்த்தாள்.
மதுவா இது? என்று தன் மகளை தானே நம்ப முடியாமல் அதிசயித்து பார்த்திருந்தார். திருமணம் என்ற ஒன்று ஒரு பெண்ணை இப்படி தலைகீழாக மாற்றி விட முடியுமா? நந்தினிக்கு தன் மகளின் இந்த நிலைமை அதிர்ச்சியாக இருந்தது.
மதுவோ அழுது கொண்டே,
“இதுக்கு மேல என்னால முடியல நந்து… எனக்கு வலிக்குது…. நான் நானா இருக்கணும்னு ஆசை படுறேன்… எனக்கு நான் வேணும்” என்று சொல்ல, மகளின் அந்த வார்த்தைகள் அவரை சுக்குநூறாக உடைத்தது.
“வேண்டாம் மது… அழாதே” என்று மகளை ஆதரவாக அணைத்து கொண்டவர், “என் பொண்ணு இப்படியெல்லாம் அழ மாட்டா…” என்று சொல்லி அவள் முகத்தை நிமிர்த்தி பிடித்து அவள் கண்ணீரை தன் புடவை முந்தானை கொண்டு அழுந்த துடைத்துவிட்டார்.
“என்னவோ உன்கிட்ட சரியில்லன்னு உங்க அப்பா என்கிட்ட சொன்னாரு… நான்தான் கல்யாணத்துக்கு அப்புறம் பொண்ணுங்க கிட்ட வர இயல்பான மாற்றம்தான்னு சொன்னேன்… கடைசில அவர் கணிப்பு சரியா போச்சு” என்று பெருமூச்செறிந்தவர்,
“ஆமா இதை பத்தியெல்லாம் ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லல மது” என்று வினவினார்.
“சொன்னா அஜயை நீங்க தப்பா நினைச்சுப்பீங்களோனு பயமா இருந்துச்சு… அதுவுமில்லாம நான் உங்ககிட்ட இதெல்லாம் சொல்லி நீங்க அவன்கிட்ட கேட்டு வைச்சுட்டா… அவன் ரொம்ப ஹார்ட்டாகிடுவான்” என்று கணவனுக்காக யோசிக்கும் மகளை ஆழ்ந்து பார்த்தவர்,
“இல்ல மது… காதலோட அடித்தளமே புரிதலும் விட்டுகொடுத்தலும்தான்… ஆனா அஜய் எந்த இடத்திலையும் உன்னை புரிஞ்சிகிட்ட மாதிரியும் தெரியல… விட்டு கொடுத்த மாதிரியும் தெரியல” என்றார்.
“சேச்சே… அப்படியெல்லாம் சொல்ல முடியாது நந்து… அவன் எனக்காக எவ்வளவோ செஞ்சிருக்கான்… விட்டுகொடுத்திருக்கான்… இன்னும் கேட்டா அவன் எனக்கு எந்த பிரச்சனையும் வந்திட கூடாதுன்னுதான் யோசிக்கிறான்” என்று அவசரமாக அவர் கூற்றை மறுத்து கணவனுக்காக பரிந்து பேசிய மகளை பார்த்து புன்னகைத்தார்.
கணவனையும் விட்டு கொடுக்க முடியாமல் தன் சுயத்தையும் விட்டு கொடுக்க முடியாமல் இருதலைகொள்ளி எறும்பாக தவிக்கும் தன் மகளின் மனநிலை அவருக்கு நன்றாகவே புரிந்தது.
“நான் உன் புருஷனை விட்டு கொடுத்துடுன்னு சொல்லல… அப்படி சொல்லவும் மாட்டேன்… ஆனா நீ ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சிக்கணும்… உன் அடையாளமே உன் தைரியம் தான்… அதையே நீ தொலைசிக்கிட்டு நிற்குற…
அதான் எனக்கு கஷ்டமா இருக்கு… உனக்கு என்ன பிரச்சனை வந்தாலும் உன் கூட உனக்காக துணையா உன் பக்கத்தில நிற்குறதுக்கு பேர்தான் காதல்… உன் சந்தோஷத்தையும் விருப்பத்தையும் பறிச்சிக்கிட்டு உனக்கு எந்த பிரச்சனையும் வராம பாத்துக்கிறேன் சொல்றதுக்கு பேர் காதலே இல்ல… அடிமைத்தனம் மது…
என் பொண்ணு அடிமையா இருக்க கூடாது… உங்க தாத்தா ஒரு சுதந்திர போராட்ட வீரர்… உங்க அப்பா இன்னைக்கும் உரிமைக்காக குரல் கொடுக்கிறவர்… அப்படிப்பட்டவங்க சந்ததி நீ அடிமையா இருக்க கூடாது…
அப்படி நீயே இருக்க நினைச்சாலும் உன்னால அது முடியாது… அதோட வெளிபாடுதான் இந்த கோபம் பிரஸ்ட்ரேஷன் எல்லாம்” என்றார்.
அவர் சொன்னதை ஆழ்ந்த மௌனத்தோடு கேட்டு கொண்டிருந்த மதுவிற்கு ஓரளவு தெளிவு பிறந்தது.
“யாரை பத்தியும் எதை பத்தியும் பயப்படாம நினைச்சதை தைரியமா செய்ற மது எங்க போனா?” என்ற நந்தினியின் கேள்விக்கு மதுவிடம் பதிலில்லை. அவள் சிலையென அமர்ந்திருந்தாள்.
“அந்த மதுவை தேடி கண்டுபிடி… உன் பிரச்சனைக்கு அதுதான் தீர்வு… காதலுக்காக எதை வேணா விட்டு கொடுக்கலாம்… ஆனா எந்த காரணத்தை கொண்டும் நம்ம சுயத்தையும் அடையாளத்தையும் விட்டு கொடுக்க கூடாது” என்று சொன்ன தன் அன்னையை இறுக அணைத்து கொண்ட மது,
“நீ இப்படி பேசறதை கேட்க எனக்கு ஏதோ புதுசா பிறந்த மாதிரி ரொம்ப எனர்ஜிடிக்கா பீல் ஆகுது…” என்று சொல்ல அவள் தலையை தடவி கொடுத்து,
“நீ என்ன செய்யணும்னு நினைக்குறியோ அதை தைரியமா செய் மது… அம்மாவும் அப்பாவும் உன் கூட எப்பவும் இருப்போம் டா” என்றார்.
“தேங்க்ஸ் நந்து… தேங்க்ஸ் அ லாட்” என்று கண்ணீர் தளும்ப உரைத்தவள் மனபாரம் சற்றே இறங்கி பெற்றவளாக அவர் மடியில் சாய்ந்தாள்.
நந்தினி அவள் முகத்தை துடைத்துவிட்டு, “நீ கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்கு” என்க, மறுப்பாக தலையசைத்தவள்,
“முதல தாமு ஃபோன் பண்ணி சரோ நல்லா இருக்கானு சொல்லட்டும்… அப்புறமா தூங்குறேன்” என்று சொன்ன மகளின் வார்த்தையை நந்தினியும் ஏற்றபடி ஆமோதித்தார்.