vav5
vav5
வா… அருகே வா! – 5
குவளை உருண்டோடி மோர் கீழே சரிய, திலக்கின் முகம் இறுகி இருந்தது. கதிரேசன் மோரை குடிக்காமல், “அவசர வேலை…” என்று கூறிவிட்டு, முத்தமா ஆச்சி வீட்டை நோக்கி நடந்தான்.
‘கல்யாண விஷயம் தானே சொன்னேன். ஏன் இவக முகரை இஞ்சி தின்னக் குரங்கு மாதிரி இருக்கு?’ என்று நக்கல் தொனித்த குரலில் பார்வதி ஆச்சி கேட்க, பார்வதி ஆச்சியின் கேலியைக் கேட்க, கதிரேசன் அங்கு இல்லை. அதை ரசிக்கும் மனநிலையில் திலக் இல்லை.
“இந்த காலத்து புள்ளைங்க என்ன நினைக்கி, என்ன செய்யுதுனே தெரியல…” என்று புலம்பிக் கொண்ட, தார்சாவைத் (வாசலை ஒட்டி இருக்கும் அறை) தாண்டி, பட்டாளைக்குள் (பட்டாளை – ஹால்) நுழைந்தார் பார்வதி ஆச்சி.
முத்தமா ஆச்சி வீட்டில், கதிரேசன் கோபமாக நுழைய, பூங்கோதை அவனைப் பதட்டமாகப் பார்த்தாள்.
“பூங்கோதை! அத்தான் கிட்ட சொல்லணுமுன்னு உனக்கு தோணலை?” என்று கதிரேசன் கடிந்து கொள்ள, “அத்தான்… அத்தான்…” என்று தடுமாறினாள் பூங்கோதை.
“படிப்பு கூட இன்னும் முடியலை.” என்று கோபமாக கதிரேசன் கூற, “நான் சொல்லணுமுன்னுதேன் சொன்னேன் அத்தான். ஆச்சிதென்…” என்று கதிரேசனின் சுடுசொல்லில் பூங்கோதை கண்கலங்க, மறுப்பாகத் தலை அசைத்தான் கதிரேசன்.
“விடு பூங்கோதை… நான் பாத்துக்கறேன்.” என்று பூங்கோதையின் கலங்கிய கண்களைக் காணச் சகிக்காமல் அவளைச் சமாதானப்படுத்தினான் கதிரேசன்.
அப்பொழுது முத்தமா ஆச்சி அவர்கள் இருக்கும் இடத்திற்கு வர, “ஆச்சி! இப்ப என்ன அவசரம்? எதுக்கு இந்த கல்யாண விஷயத்தை இப்படி முடுக்குதீக? பூங்கோதை இன்னும் படிப்பையே முடிக்கல…” என்று ஆச்சியின் வயதின் காரணமாக, மரியாதை நிமித்தமாக தன் கோபத்தை அடக்கி தன்மையாகக் கேட்டான் கதிரேசன்.
“ஏளா! அதை ஏன் என்கிட்டே கேட்குத? உங்க அம்மை கிட்ட கேளு. நீ ஊர்ல இல்லாத சமயம் பார்த்து, உனக்கு அசல்ல பொண்ணு பார்க்க கிளம்பிட்டா. அந்தானைக்கு நான் சும்மா விடுவேனா? அதுதென் கல்யாணம் பேசி உங்க அம்மாவை முடுக்கிட்டேன். உங்க அம்மைக்கு நான் மாமியா.” என்று முத்தமா ஆச்சி கம்பீரமாகக் கூறினார்.
கதிரேசன், தன் நெற்றியைத் தடவிக் கொண்டு, அவன் வீட்டை நோக்கி நடந்தான்.
கதிரேசன் வீட்டுக்குள் நுழைய, செல்லமா கண்ணீரோடு தன் மகனை வரவேற்றார்.
“கதிரேசா! உங்க ஆச்சி பண்ணிருக்க வேலைய பார்த்தியா? நீ இல்லாத நேரத்துல, உனக்கு கல்யாணம் பேசி முடிச்சிட்டாக!” என்று குற்ற பத்திரிக்கை படிக்க, “அம்மா! நீங்க ஏன் என்கிட்டே கேட்காம பொண்ணு பார்க்க போனீக?” என்று நேரடியாகக் கேட்டான் கதிரேசன்.
“ஆச்சியை பார்த்தியா?” என்று செல்லமா கழுத்தை நொடிக்க, “என்னை கேட்காம ஏன் தேவை இல்லாத வேலை பார்க்கறீக?” என்று கதிரேசன் காட்டமாகக் கேட்க, “டேய்… எது தேவை இல்லாத வேலை?” என்று எகிறினார் செல்லமா.
கதிரேசன் கண்களை சுருக்கி பார்க்க, “எல்லாரும் சேர்ந்து நினைச்சதை முடிச்சிட்டிகள்ல? ராசி கெட்டவ… அவ வந்தா வீடு விளங்குமா? அவ…” என்று செல்லமா புலம்ப ஆரம்பிக்க, தன் தாயின் பேச்சில் வெறுப்பாக உள்ளே நுழைந்தான் கதிரேசன்.
‘நடக்குறதை தடுக்குற சக்தி என்கிட்டே இல்லை… நெல்லையப்பா காப்பாத்து…’ என்று மனதார திருநெல்வேலி நெல்லையப்பரை வேண்டிக் கொண்டு பட்டாளையில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான் கதிரேசன்.
‘இவுக எப்படி இந்த கல்யாணத்தை நடத்துறாகன்னு பாக்குறேன். இவுக, தங்கச்சி, அம்மான்னு உருகுவாக… அந்த மகராசி நிம்மதியா போய் சேர்ந்துட்டா… அந்த மனுஷன் உனக்கு வந்த விதிக்கு நான் என்ன பண்ணுவேன்னு, வேற கல்யாணம் பண்ணிக்கிட்டு போய்ட்டாரு… காலம் முழுக்க தங்கச்சி பிள்ளையை பார்த்தாச்சு… இன்னும் கல்யாணம் பண்ணி, இங்க கூட்டிட்டு வந்து அழணுமா? ஒரு கட்டு பண்ண கூட வழி கிடையாது. சொத்து இருந்தா போதுமா? தீபாவளி கட்டு, பொங்கல் கட்டுன்னு மதிப்பா குடுக்க ஒரு ஆள் கிடையாது. அப்பனும், பிள்ளையும் அவளை தாங்கிட்டு அலையுதாக… என் உயிரை கொடுத்தாவது, இந்த கல்யாணத்தை நிறுத்திப்புடுதேன்.’ என்று தன் மனதில் சூளுரைத்துக் கொண்டார் செல்லமா.
மாலை நேரம், பூங்கோதை ஊஞ்சலில் யோசனையாக அமர்ந்திருந்தாள். ‘படிப்பு கூட இன்னும் முடியல? என்னை வேலைக்கு அனுப்ப மாட்டாக… ஆனால், டிகிரி கூட இல்லாமல், இந்த காலத்தில் எப்படி?’ என்ற கேள்வியோடு ஊஞ்சலில் அவள் மெல்லமாக ஆட, அவள் அருகில் அமர்ந்தாள் கயல்.
“என்ன பூங்கோதை! கல்யாண கனவா?” என்று கயல் நக்கலாகக் கேட்க, மழுப்பலாகச் சிரித்து தலை அசைத்தாள் பூங்கோதை.
“ஏண்டி! என் கிட்ட பொய் சொல்ற? பயம் உன் கண்ணில் தெரியுது. படிப்பு கூட முடியல… இப்ப கல்யாணம் ஒரு கேடா?” என்று கயல் காட்டமாகக் கேட்க, “அப்படி எல்லாம் இல்லை கயல்…” என்று பூங்கோதை தடுமாற, “அந்தானைக்கு மழுப்பாத…” என்று கயல் கழுத்தை நொடித்தாள்.
“கயல்… இப்ப என்னை என்ன பண்ண சொல்லுத? ஆச்சி, கல்யாணம்… கல்யாணமுன்னு என் உசிரே எடுக்கு… ஆச்சி சொல்றதும் நியாயதேன்… வயசாகுதுன்னு சொல்றாக… வெளிய குடுக்க பயப்படுறாக…” என்று பூங்கோதை பெருமூச்சு விட, “கல்யாணம் வேண்டாம் பூங்கோதை. படி… நீ நல்லா படிக்குற. காசுக்குப் பஞ்சம் இல்லை. உந்த அத்தை நிச்சயம் இந்த கல்யாணத்துக்கு இடைஞ்சல் பண்ணும். நீயே வேண்டாமுன்னு சொல்லிரு பூங்கோதை.” என்று கயல் படபடப்பாக கூற, அவளை மேலும் கீழும் பார்த்தாள் பூங்கோதை.
“நீ படிச்சி, பெரிய ஆளா வா… இந்த ராசின்னு பேசுற ஊர் மக்கள் உன்னை வாழ்த்தணும்.” என்று கயல் உரையாற்ற, “நேத்து சூரியவம்சம் படம் பார்த்தியா? கனவு கண்டுக்கிட்டு… நடக்குற காரியத்தை பாரு. கனவு காணவும் தகுதி வேணும். அது நிறைவேறவும் ஒரு குடுப்பின்னை வேணும். எல்லாருக்கும் இருக்கிற சராசரி குடும்ப அமைப்புக்கே இங்க நமக்கு வக்கில்லை. வீட்ல உள்ளவங்க ஏத்துகிறதே பெரிய விஷயமா இருக்கு. இதுல ஊர் புகழணுமா? அடிப்போடி… எனக்கு அத்தானைப் பிடிக்கும். அத்தானுக்கும் என்னைப் பிடிக்கும். அவ்வுளவுதென்… வாழ்க்கை அதன் போக்கில் போகட்டும்.” என்று பூங்கோதை அவள் பேச்சை முடிக்க, அவர்களை நோக்கி சிறுவர்கள் கூட்டம் ஓடி வந்தது.
“அக்கா, ஐஸ் பால் விளையாடலாமா?” என்று பாவாடை சட்டை அணிந்த சிறுமி கேட்க, கயல் பூங்கோதை அவர்களோடு ஐக்கியமாகினர்.
திலக் அவர்கள் வீட்டு மாடியில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான். கீழே இவர்கள் எழுப்பிய சத்தம் அவன் சிந்தனையைக் கலைக்கவில்லை.
‘பூங்கோதை எனக்கு இல்லையா? அவ சின்ன பொண்ணுன்னு நான் அமைதியா இருந்தது தப்போ? கதிரேசன் கிட்ட பேசிருக்கணுமோ? நான் அவளைப் பார்த்த பார்வைகள்…’ அவன் மனம் நெருடியது.
‘கதிரேசனுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இருக்கிற மாதிரி தெரியலியே.’ அவன் கண்கள் பூங்கோதையை தேடியது.
‘பூங்கோதையை நான் பார்க்க கூடாது. அவள் தன் நண்பனுக்கு நிச்சியக்கப்பட்டவள்.’ அவன் அறிவு உணர்த்த, “திலக், அண்ணா.. பூங்கோதை அக்கா அங்க இருக்காகளா?” என்று ஒரு சிறுமி கேட்க, மாமரத்திற்கு பின்னால் அவள் தாவணி தென்பட, “இல்லை… பூங்கோதை அக்கா இங்க இல்லை…” என்று சத்தமாக கூறினான் திலக்.
சிறுமி, மற்ற அனைவரும் தலை அசைத்து செல்ல, திலக் மரத்திற்குப் பின்னே தெரியும் அவள் விரல்களைப் பார்த்தான்.
திலக் அறிவு கூறிய வார்த்தைகள் காற்றோடு பறந்தது.
அவன் மனம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. திலக் அவள் அருகே செல்ல அந்த அசைவில் மாமரத்திற்குப் பின் இருந்து வெளியே வர எத்தனித்தாள் பூங்கோதை.
இருபக்கமும் கை ஊன்றி அவளை தன் வளைவுக்குள் நிற்க வைத்தான் திலக். மரத்தின் மீது சாய்ந்து நின்ற பூங்கோதையின் முகத்தில் அச்சமில்லை. கர்வ புன்னகை.
“நான் உங்க நண்பனின் வருங்கால மனைவி.” எகத்தாளமாகக் கூறினாள் பூங்கோதை.
பூங்கோதையின் எகத்தாளம் அவனை சீண்டியது.
“அது நடக்காது.” திலக்கின் குரல் மெதுவாக அவள் காதருகில் ஒலித்தது. “என்ன உளறல்?” என்று பூங்கோதை, அவன் நெருக்கத்தில் சிடுசிடுப்பாகக் கேட்டாள்.
“என் வீட்டு தட்டடியில் உனக்கு என்ன வேலை?” என்று திலக் கேட்க, “நான் சின்ன வயசிலிருந்து இங்கன விளையாடுதேன்.” என்று கழுத்தை நொடிக்க, “உங்க கதிரேசன் அத்தான் வீட்டில் விளையாட வேண்டியது தானே?” என்று திலக் கேட்க, “அத்தை வையும்…” என்று இயல்பாக கூறினாள் பூங்கோதை.
“விளையா கூட போக முடியாத வீட்டுக்கு வாழ போக முடியுமா?” என்று திலக் மென்மையாகக் கேட்க, ‘தன் பதிலுக்கு இப்படி ஒரு குதர்க்கமா?’ என்று அவனை யோசனையாக பார்த்தாள் பூங்கோதை.
“பியூட்டி… நீ ரொம்ப அழகு டீ…” என்று அவள் முகத்தை தீண்ட பூங்கோதையின் பதட்டம் அதிகரித்தது.
“நீங்க பண்றது தப்பு.” என்று அவள் உதடுகள் தந்தியடிக்க, அவள் உதடுகளை நீவியபடி, கண்சிமிட்ட அவனை அறைய கையோங்கினாள் பூங்கோதை.
அவள் கைகளை பிடித்து, பின்பக்கமாக, தன் இடது கைகளால் பிடித்துக் கொண்டான் திலக். அந்த நெருக்கம் பூங்கோதைக்கு அச்சத்தைத் தர, “நான் கத்துவேன்.” என்று பூங்கோதை கூற, “ம்… கத்து… எனக்கும் அது தான் வேணும். நான் என் காதலை ஊருக்கு சொல்றேன். இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாம். மாங்காய் சாப்பிடலாம். நாம கண்ணாம்பூச்சி விளையாடலாம்.” என்று ரசனையோடு கூறினான் திலக்.
“கோட்டி… கோட்டிக்கார பையனா நீ? அத்தான்…” என்று பூங்கோதை ஆரம்பிக்க, “உங்க அத்தான், ஒரு நாளாவது உன் பக்கத்தில் இப்படி நின்றுபானா?” என்று திலக் கண்சிமிட்டி கேட்க, “அத்தான் இங்கிதம் தெரிந்தவக… இப்படி எல்லாம் பண்ண மாட்டாக…” என்று பூங்கோதை அவனிடமிருந்து விடுபடப் போராடியபடி கூறினாள்.
‘அவளுக்கு வலிக்கும்.’ என்ற எண்ணத்தோடு மெதுவாகப் பிடியைத் தளர்த்தி, ஆனால் பிடிமானத்தைத் தளர்த்தாமல், “காதலுக்கு எதுக்கு இங்கிதம் ராட்சசி…” என்று கேட்டு, அவள் தலைமுடியை ஒதுக்கி விட்டு, அவள் காதில் “பியூட்டி…” என்று கிசுகிசுத்தான் திலக்.
“உன் அத்தான் என்னைக்காவது, உன்னைப் பார்த்து அழகா இருக்கன்னு சொல்லிருக்கானா?” என்று பூங்கோதையை தொடாமல், அவள் மேனி அருகே மெல்லமாக விரல் அசைக்க, ‘எங்கு தொட்டுவிடுவானோ…’ என்ற அச்சத்தில் அவள் உடல் சிலிர்த்தாள்.
“நல்லாருக்கேன்னு சொல்லிருக்காக…” என்று பூங்கோதை பிடிவாதம் பிடிக்க, “அப்ப, உன் அத்தானுக்கு, எனக்கும் வித்தியாசமில்லை?” என்று கேட்டுக்கொண்டே அவளை நெருங்கினான் திலக்.
“எல்லாரும் என்னைத் தேடி வருவாக.” என்று பூங்கோதை கெஞ்சினாள்.
“பியூட்டி… நான் இருகன்னு தெரிஞ்சும் நீ இங்கன வந்து ஒளிஞ்ச… நீ இல்லைன்னு நான் சொல்லி அனுப்பிட்டேன். யாரும் வர மாட்டாக பியூட்டி…” என்று பூங்கோதைக்கு விளக்கம் கூறி, “சரி சொல்லு… உங்க அத்தானுக்கும், எனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை?” என்று அவன் கேள்வியாக நிறுத்தினான் திலக்.
“நிறைய இருக்கு. எங்க அத்தான் நல்லவக… நீ கெட்டவன். மிலிட்டரி. வழிய விடு.” என்று அழுத்தமாக கூறி, அவள் கைகளை உருவிக்கொண்டு வேகமாக செல்ல எத்தனிக்க, அவளை வேகமாக மரத்தின் மேல் சாய்த்தான் திலக்.
மரத்தின், பகுதி அவள் முதுகைத் தீண்டி வலி கொடுக்க, பூங்கோதை முகத்தைச் சுழித்தாள்.
தன் கைகளை அவள் முதுகிற்கு அண்டை கொடுத்து, அந்த வலியைத் தான் ஏற்றுக்கொண்டு அவளை மரத்தின் சாய்த்து, அவள் வெற்றிடையை அணைத்து அவள் முகம் பார்த்தான்.
அவள் கண்கள் பயம், பதட்டம் இரண்டையும் வெளிப்படுத்த, “நான் கெட்டவன் இல்லை. உன் காதலன். உன் அத்தானுக்கு உன் மேல் அக்கறை இருக்கலாம். உன் அத்தானுக்கு உன்னைப் பிடிக்கும். ஆனால், காதல் கிடையாது. அவன் உன்னை கடமைக்காக தான் கல்யாணம் பன்றான். கடமைக்காக உன் அத்தான் வாழ்க்கையை கெடுபியா? என்னை பார்த்து ஏன் பயப்படுற? உன் வாழ்க்கையின் வலி எனக்கு தெரியாதா? இல்லை என்னை பத்தி உனக்கு தெரியாதா? நான் யார்கிட்டயாவது இப்படி நடந்திருக்கேனா?” என்று திலக் கேட்க, “யாருக்கு தெரியும்…” என்று பூங்கோதை திமிராக கூற, அவள் இதழ்களை தன் இதழ்களால் மூடினான்.
அவன் இதழ் ஸ்பரிசத்தில் அதிர்ச்சி மேலோங்கி அவள் தன் விழிகளை பெரிதாக விரிக்க, அவளைப் பார்த்துக் கண்ணடித்தான் திலக்.
“மிலிட்டரிகாரனுக்கு பொறுமை கம்மி. உனக்கு வாயும், கையும் ரொம்ப நீளம். வாய் ரொம்ப பேசுச்சு. இனி இது தான் தண்டனை. கை நீளுச்சுனா, இதை விட ஸ்வீட் பனிஷ்மென்ட் இருக்கு பியூட்டி.” என்று அவன் பேசிக்கொண்டே போக, பூங்கோதை சிரமப்பட்டு மூச்சு விட்டாள்.
அவள் கண்கள் கலங்க, அதை விழி மூடி மறைத்துக் கொண்டாள் பூங்கோதை.
“நான் கெட்டவன் தான் பியூட்டி… உன்கிட்ட மட்டும். உன் கல்யாண விஷயம் தெரிஞ்சி ஒதுங்கணுமுணுத்தேன் நினச்சேன். நீ தான் இங்கன வந்து ஒளிஞ்ச… உன்னை பார்த்ததும், என் மனசு, மூளை எல்லாம் நீதென் என் பொண்டாட்டின்னு சொல்லுதே.” என்று அவன் சீட்டியடிக்க, “நான் வீட்டுக்கு போகணும். வழி விடு மிலிட்டரி.” என்று பூங்கோதை அவன் முகத்தைப் பார்க்கச் சங்கடப்பட்டு விழி தாழ்த்த, “என்னை பிடிச்சிருக்குனு சொல்லு… விடுதேன்.” என்று திலக் அவளைக் கேலியாக மிரட்டினான்.
“நீ நினைக்கறது ஒரு நாளும் நடக்காது. இதுக்கெல்லாம் நீ ஒரு நாள் வருத்தப்படுவ.” என்று பூங்கோதை சீற, “ராட்சசி…” என்று திலக் பல்லைக் கடிக்க, பூங்கோதை ஏளனமாகச் சிரித்தாள்.
“ஏய்… நீ தான் எனக்கு மனைவி… அதை நான் நடத்துவேன்.” என்று திலக் கூற, “அப்படி நடந்தா, பூங்கோதை செத்துட்டா…” என்று மேலும் பேச, அவள் இதழ்களை மீண்டும் தன்வசமாக்கி, “ரொம்ப பேசக் கூடாது பியூட்டி… மிலிட்டரிக்கு பிடிக்காது. அப்புறம் துப்பாக்கிதென்…” என்று அவள் இடை, இதழ், கண், நெற்றி என்று விரல்களால் துப்பாக்கி போல் வைத்து செய்கை காட்டி, “உன் கிட்ட மட்டும் வேற மாதிரி சுடும் பியூட்டி…” என்று முணுமுணுத்து வழிவிட்டான் திலக்.
பூங்கோதை கோபமாக, அவனை முறைத்துவிட்டுப் படி இறங்க, “மிலிட்டரி காதலில் தீவிரவாதம் அதிகமா இருக்கும்…” என்று கூறிக்கொண்டே அவளைத் தொடர, “பார்த்து ஊர் மக்கள் சுட்டற போறாக…” என்று கடுப்பாகக் கூறிவிட்டு, கண்கலங்க நடந்தாள் பூங்கோதை.
“நீ நான்தேன் வேணும்ன்னு சொல்லுவ… உங்க அத்தான் நம்ம கல்யாணத்தை நடத்தி வைப்பான் பாரு…” என்று திலக் சவால் விட்டுக் கொண்டே வாசலை நெருங்க, இருவரும் ஊர் மக்கள் கூறிய செய்தியில் கதிரேசன் வீட்டை நோக்கி ஓடினர்.
நினைத்தது நடந்தாலும், சில நேரங்களில் காத்திருக்கும் மனவலிகளை என்னவென்று சொல்வது?
வா… அருகே வா! வரும்….