காதல் சன்யாசி 19

முறிந்து போன உயிர் காதலின் வலி ஒருபுறம்! மனைவியின் விளங்கி கொள்ள முடியாத மனநிலை மறுபுறம்!
என இந்த சூழ்நிலையை சமாளிப்பது ராகுலுக்கு கடினமான போராட்டமாகவே இருந்தது.

அவனின் மன தைரியம் ஏதோவொரு முனையில் தகர்ந்து கொண்டிருப்பதைப் போல் உணர்ந்தான்.

மனம் கலங்கிய குட்டையாக மாற, நேராக உடைமாற்றும் அறைக்குள் நுழைந்து கொண்டான்.

உடை அணிந்து அவன் வெளியே வர, அவள் தான் அணிந்திருந்த நகைகளை கழற்றி வைத்து கொண்டிருந்தாள்.

“என்ன செய்ற தமிழ்?” கேட்ட ராகுலின் குரல் இப்போது வெறுமையாய் ஒலிக்க, தமிழ் திடமாகவே பேசினாள்.

“நீ கொடுத்த துணி, நகைகளை போட்டுட்டு உன் வீட்டிலேயே தங்கி இருக்குறதால தான, என்மேல உனக்கு வேற எண்ணமெல்லாம் தோணுது, இது எதுவுமே எனக்கு வேணாம்”

“தமிழ்…” அவன் குரல் இறங்கியது.

“என்னை‌ ஃப்ரண்ட்னு சொல்லி இங்க கூட்டிட்டு வந்த, அந்த வார்த்தையை நீ காப்பாத்தில.”

ராகுல் நெற்றியை பிடித்து கொண்டான்.

“எனக்கு வேலை வாங்கி தரேன்னு நீ சொன்னது கூட உன் ஞாபகத்தில இல்லாம போச்சு.”

“…”

“நான் போறேன். இனிமே என்னால உன்னோட இருக்க முடியாது” அவள் முடிவாய் சொல்ல,

“நீ எங்க போவ தமிழ்?” அவளை சமாதானம் செய்ய வழி தோன்றாமல் திண்டாடினான் அவன்.

“என்னை போல அனாதைகளுக்கும் இந்த ஊர்ல இடம் இருக்கு!”

“நான் இருக்கும் போது நீ எப்படி டீ அனாதையாவ?” அவனும் சினந்தவனாக கேட்டான்.

அவளின் துண்டிக்கும் பேச்சுக்கள் அவன் சினத்தை தூண்டத்தான் செய்தன.

ஆத்திரத்தில் துணிந்தவளாய் தன் மாங்கல்யத்தையும் அவள் கழற்ற, ராகுல் அவள் கையை பிடித்து தடுத்து,

“என்ன டீ செய்ற நீ?”

“இந்த மஞ்ச கயிறு என் கழுத்தில் இருக்குறதால தான, நீ என்னை உரிமை கொண்டாடுற. விடு இது எனக்கு வேண்டாம்” இதயம் கனத்தவளாக பேசி தன் கையை விலக்க முயல, அவன் பிடி மேலும் இறுகியது.

“என் உடம்புல உயிர் இருக்கிற வரைக்கும் இந்த மாங்கல்யம் உன் கழுத்தில தான் இருக்கும்… இருக்கணும்” அழுத்தமாய் அவன் சொன்ன வார்த்தைகளின் ஆழத்தில் இவள் மிரண்டு தான் போனாள்.

அவனை திடுக்கிட்டு வெறித்த அவளின் உலர்ந்த விழிகளில் கண்ணீர் தேங்கி கசிந்தன.

“ஏன் என்னை புரிஞ்சிக்க மாட்டேங்கிற, என்னால எப்படி டா உன்னோட வாழ முடியும்?” அவள் தலைக்கவிழ்ந்து முகம் பொத்தி தேம்பினாள்.

தன் ஆண்மையை மறந்து அழுதுவிட வேண்டும் போல தோன்றியது அவனுக்கும்!

என்னால் உனை விட முடியாதடி!
உன் கலக்கம் தீர
என் தோளில் சாய்ந்து கொள்ளடி!
என் கவலை தீர
உன் மடியில் இடம் தந்திடடி!
நானும் கொஞ்சம்
அழுது விடுகிறேன்!

அவன் அருகில் அமர்ந்து கொள்ள, “என்னால உன்கூட வாழ முடியாது டா!” என்று மறுபடியும் தேம்பலுடன் பிதற்றினாள் அவள்.

“அதான், ஏன் முடியாது?” ராகுல் இப்போது நிதானமாகவே வினவ,

நிமிர்ந்தவள், “இது எல்லாத்துக்கும் நீதான் காரணம், என் கழுத்தில தாலி கட்டறதுக்கு முன்னால, ஒரு வார்த்தை என் சம்மதத்தை கேட்டிருக்கலாம் இல்ல” அவள் கண்ணீரோடு ஆதங்கமாக கேட்டாள்.

“நீ நிச்சயமா சம்மதிக்க மாட்டேன்னு எனக்கு தெரிஞ்சதுக்கு அப்புறமும், ஏன் கேட்கணும்னு தான் நான் கேட்கல!” அவன் பதில் வெறுமையாக வந்தது.

“தாலி கட்டிட்டா, வேற வழி இல்லாம உன்னோட சேர்த்து வாழ சம்மதிச்சிடுவேன்னு நினச்சியா?” என்று அவள் உதடுகள் துடிக்க கேட்க,

“அந்த சமயத்தில நம்ம மேல பூசப்பட்ட கலங்கத்தை போக்கணும்றதை தவிர, வேற எதுவும் எனக்கு தோணல” அவன் தன் பக்க நியாயத்தை எடுத்து சொன்னான்.

அன்றைய நிலை தமிழின் மனக் கண்ணில் காட்சியாக, அவள் உடல் இப்போதும் நடுக்கம் கொண்டது.

வெறிகொண்ட காட்டு ஓநாய்கள் கூட்டத்தின் நடுவே சிக்கிக் கொண்ட சிறு முயலாய், அன்று அவள் பயந்து நடுங்கி, ஒடுங்கி நின்றிருந்தாள்.

அன்று அவள் மேல் தூற்றப்பட்ட ஒவ்வொரு வார்த்தைகளையும் நினைக்க… இப்போதும் அவள் உடல் முழுதும் தீப்பற்றி எரிவதாய்.

“அத்தனை பேருக்கு முன்னால, எனக்கு ஏற்பட்ட அவமானம், என் உடம்பு தீயில எரியும் போது கூட மறக்காது!”

தமிழ் கலங்கி மொழிய, இவன் பதில் வார்த்தை தேடி கிடைக்காமல் மௌனமானான்.

“நான் தான் தப்பு பண்ணிட்டேன். நீ வந்து கூப்பிட்டதும் நான் உன்கூட வந்திருக்க கூடாது. வந்திருக்கவே கூடாது” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவள்,

“நான் உனக்கு வேணா டா, ப்ளீஸ், என்னை விடு நான் எங்கேயாவது போயிறேன்” என்று ஆற்றாமையோடு அவனிடம் கெஞ்சினாள்.

ராகுல் முகம் சுருங்கி போனது. “நீ என்ன பச்ச குழந்தையா தமிழ்? அறிவில்லாம அடம்பிடிக்கிற.”

தமிழ் தலை கவிழ்ந்தாள். அவனுக்கு புரியவைக்க அவளுக்கு தெரியவில்லை.

வாசலில் அழைப்பு மணி ஒலிக்கும் சத்தம் கேட்டது.

“எனக்கு நீ வேணும் தமிழ். நேத்து வரைக்கும் நல்ல தோழியா, நாளைக்கு என் குழந்தைக்கு அம்மாவா!” ராகுல் வெளிப்படையாகவே பேச,அவளின் சப்த நாடியும் அடங்கி போனது.

நிமிர்ந்த அவள் முகத்தில் அப்பட்டமாக பயரேகைகள் படிய, மறுப்பாய் தலையசைத்து பின்னோக்கி நகர்ந்தாள்.

“நிதர்சனத்தை புரிஞ்சிக்க தமிழ், உன் மனசுக்குள்ள எதையோ போட்டு குழம்பிக்கிற, எதுவா இருந்தாலும் என்னோட பேசு, என்மேல கோபம் இருந்தா சண்டை போடு, என்னை பிரிஞ்சு போகணும்னு மட்டும் நினைக்காத, இனி நமக்குள்ள பிரிவு இல்ல. புரியுதா?”

விடுபட இயலாத சிலந்தி வலையில் மாட்டி கொண்டதை போன்ற பயவுணர்வு அவளுக்குள்!

இப்போது அழைப்பு மணி தொடர்ந்து ஒலிக்க, ராகுல், வாசல் கதவை நோக்கி சென்றான்.

கதவை திறந்து வெளியே நின்றவர்களை பார்த்ததும், அவன் நெற்றி சுருங்கியது.

“இங்க தமிழ்செல்வின்னு?” அந்த பெரியவர் தயங்கி கேட்க,

“ஆமா உள்ள வாங்க!” என்று அழைத்தான் ராகுல் யோசனையுடன்.

தன் பேரை கேட்டு, கண்களை துடைத்துக் கொண்டு வெளியே வந்த தமிழ், உள்ளே வந்தவர்களை பார்த்து, அதிர்ச்சியில் விதிர்த்து நின்றாள்.

கலவரமாய் ராகுலை பார்க்க, அவன் அவளை பார்த்து கேள்வியாக புருவத்தை உயர்த்தினான்.

ஏதோ பெரும் சுழலில் சிக்கி கொள்வதை போன்ற உணர்வு அவளுக்குள்.

இன்றைய நாள் தன்னை ஏன் இந்த பாடு படுத்துகிறது என்று நொந்தபடியே அவர்களை நோக்கி வந்தாள்.

அவள் எதிரில் நின்ற மூவரும் தமிழ்ச்செல்வியை ஏதோ அதிசயம் போல மேலும் கீழும் பார்த்தனர்.

வயதான கணவன், மனைவி, ஒரு கர்ப்பிணி பெண். யாரிவர்கள்?

ராகுலுக்கு அவர்களை எங்கோ பார்த்த ஞாபகம். ஆனால், சட்டென நினைவு வரவில்லை.

“எப்படி இருக்க செல்வி?” அந்த பெண்மணி வாஞ்சையாக விசாரிக்க,
தமிழ் முயற்சித்து புன்னகைத்து வைத்தாள்.

அவர்களின் திடீர் வரவு எத்தகைய விபரீதத்தை உண்டாக்குமோ என்ற பயம் பரவியது உள்ளுக்குள்.

“ஏன் அண்ணி, நாங்க வந்தது உங்களுக்கு பிடிக்கலையா?” கர்ப்பிணி பெண் வாட்டமாக கேட்க,

“அப்படி ஒண்ணும் இல்ல சுமதி, உள்ள வாங்க!” என்று அனைவரையும் சோஃபாவில் அமர வைத்தாள்.

ராகுலுக்கு அவர்கள் யாரென்று ஞாபகம் வந்து விட்டது! ‘ஆனா, இவங்க ஏன் இங்க வரணும்?’ என்று யோசித்து குழம்பியவனாக தமிழை பார்க்க, அவளும் அதே குழப்பத்துடன் தவித்து நின்றிருந்தாள்.

தோட்டத்தில் பரித்த பூக்களோடு உள்ளே வந்த பார்வதி அவர்களை கவனித்து, “யார் வந்திருக்காங்க தமிழு?” என இயல்பாக விசாரிக்க, அவர்களை எப்படி அறிமுகம் செய்வது என்று புரியாமல், தமிழ் சங்கடமாக நின்றாள்.

அவளின் சஞ்சலம் புரிந்து ராகுல், “அம்மா, இவங்க சேகரோட அம்மா, அப்பா, தங்கச்சி” என்று முன்வந்து அறிமுகம் செய்ய, பார்வதி புரிந்தவராய் சங்கடத்துடன் வணக்கம் வைத்து அவர்கள் எதிரில் அமர்ந்தார்.

சில நிமிடங்கள் அந்த இடம் பேரமைதியாக இருந்தது. ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்தபடி, என்ன பேசுவது என்று புரியாமல் விழித்து கொண்டிருந்தனர்.

பெரியவர், “உங்க சங்கடம் எங்களுக்கு புரியுது. செல்வி எங்களுக்கு மருமகளா மட்டும் இருந்து இருந்தா, நாங்க வந்திருக்க மாட்டோம். அவ எங்க மகளாவும் நினைச்சு தான் மனசார வாழ்த்த வந்தோம்” என்று கனிவாய் சொல்ல, பார்வதியின் முகம் மலர்ந்தது.

“உங்க பெருந்தன்மைய நினைச்சா, உண்மையில எங்களுக்கு ஆச்சரியமா இருக்குங்க ஐயா” பார்வதி வியந்து சொன்னார்.

“அப்படி பெருசா ஒண்ணுமில்லங்க, செல்விக்கு நாங்க நிறைய நன்றிக்கடன் பட்டிருக்கோம். என் மகன் போன பிறகு நாங்க நிர்கதியா ஆயிட்டோம். அந்த சமயத்தில எங்களை தாங்கி புடிச்சது செல்வி தான். நிச்சயத்தோட நின்னுபோன என் மகளோட கல்யாணத்தை நடத்தி வச்சு, அடமானத்தில மூழ்கி போக இருந்த எங்க வீட்ட மீட்டெடுத்து, நொடிஞ்சி போயிருந்த எங்க வியாபாரத்தை தூக்கி நிறுத்த உதவி செஞ்சு, இப்ப, நாங்க எந்த குறையும் இல்லாம வாழோறோம்னா செல்விதாங்க காரணம். நாங்க மாத்தி சொன்னா எங்க நாக்கு அழுகி போயிடும்” என்று சுமதியின் அம்மா உருக்கமாக பேசினார்.

பார்வதியும், ராகுலும், தமிழை மெச்சுதலாக பார்க்க, அவள் மௌனமாக அனைவருக்கும் தேநீர் பரிமாறினாள்.

ஏனோ அவள் இதயம் வழக்கத்தை விட வேகமாக தடதடத்துக் கொண்டிருந்தது.

பெரியவர் மேலும் உணர்ச்சி வசப்பட்டு, “நாங்க பார்த்த வரைக்கும் செல்விக்கு தங்கமான மனசு. வேற ஒருத்தியா இருந்திருந்தா, அவன் செஞ்ச கொடுமைக்கு எங்களை திரும்பி கூட பார்த்திருக்க மாட்டா!” முன்பின் யோசிக்காமல் அவர் வார்த்தையை விட,
தமிழ் திடுக்கிட்டு வேண்டாம் என்பது போல தலையாட்ட, பெரியவர் கப்பென்று வாயை மூடிக் கொண்டார்.
ராகுலின் நெற்றி சுருங்கியது.

“வயத்துகுள்ள பாப்பா என்ன சொல்றா சுமதி. தவறாம செக்கப் எல்லாம் போற இல்ல?” தமிழ் அந்த சூழ்நிலையை சமாளிக்க சுமதியிடம் பேச்சு கொடுக்க,

“ம்ம் போறேன் அண்ணி. நீங்க தான் மாச கணக்கா எங்களுக்கு ஃபோன் கூட செய்யல. அதைப்பத்தி உங்க வீட்ல விசாரிச்சப்ப தான் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொன்னாங்க. எதை பத்தியும் யோசிக்காம உடனே கிளம்பி வந்துட்டோம். இந்த வீட்டு அட்ரஸ் தேடிவர தான் நேரமாயிடுச்சு. உங்கள இப்படி பார்க்க மனசுக்கு நிறைவா இருக்கு அண்ணி” சுமதியும் தடையின்றி பேசினாள்.

ராகுலுக்கும் பார்வதிக்கும் ஏதோ நெருடலாக தோன்றியது.

“வந்தவங்களுக்கு சாப்பாடு எடுத்து வை தமிழ்” பார்வதி உத்தரவிட, அவள் தயக்கமாய் சமையல் அறைக்கு சென்றாள்.

சற்று தாமதித்து, “ஏதோ கொடுமைய பத்தி சொன்னீங்க?” என்று பார்வதி அவர்கள் வாயை கிளற,

“ச்சே ச்சே அப்படி எதுவுமே இல்லைங்க” பெரியவர் அவசரமாக மறுத்து சொன்னார்.

“என் மனைவிய பத்தி நான் தெரிஞ்சிக்க தான் கேட்கிறேன். சொல்லுங்க” ராகுல் பெரியவரிடம் கேட்க, அவர் தயக்கமாக தலை கவிழ்ந்தார்.

“செல்வி… எங்க வீட்ல ஒருநாள் கூட நிம்மதியா வாழல…” சுமதியின் அம்மா தன் மன உறுத்தலையும் மீறி சொல்ல தொடங்கினாள்.

அனைவரின் பார்வையும் அவர் மீது விழ, தமிழ்செல்வியின் இருண்ட நாட்கள் அவள் கண்முன் விரிந்தன.

“எங்க பையன் அவ்வளவு மோசமா நடந்துப்பான்னு நாங்க நினைக்கல. முரடனா, ஊதாரி தனமா இருக்கானே அவனுக்கு பொறுப்பு வரணும்னு கல்யாணம் செஞ்சு வச்சோம். ஆனா, அவன்‌ மாறவே இல்ல. சின்ன விசயத்துக்கெல்லாம் கோபபடுவான். குடி பழக்கம் வேற!”

“நாங்க கண்டிச்சா அதை மருந்துக்கு கூட கேட்டது கிடையாது. அவனோட எல்லா கோபமும் அவன கட்டி வந்தவ மேல தான் விடியும். அவனுக்கு வாய் பேச்சுக்கு முன்ன கை தான் அதிகமா பேசும். ஒத்த புள்ள ஆச்சே, எங்களாலயும் வேற எதுவும் செய்ய முடியல.”

“மூணு மாசம் கழிச்சு செல்வி முகத்தில அப்ப தான் நாங்க சந்தோசத்தை பார்த்தோம்! அவ தாயாக போறதை நினச்சு எங்களுக்கும் சந்தோசம் தான். ஆனா, அவன் போதையில மிருகத்தனமா செல்விய உதைச்சு மாடி படியில தள்ளி விட்டுட்டான். அங்க உடைஞ்சு கிடந்த கண்ணாடி துண்டுங்க வயத்துல குத்திடுமோன்னு உடம்பை குறுகிகிட்டு விழுந்திருக்கா, உடம்பெல்லாம் காயத்தோட நாங்க தான் அவளை ஹாஸ்பிடல் தூக்கிட்டு ஓடினோம். அவளை மட்டும் தான் காப்பாத்த முடிஞ்சது. அவளுக்குள்ளே இருந்த உயிரை காப்பாத்த முடியல.”

“கொஞ்ச நாள் பிரச்சனைய ஆர போடணும்னு நினைச்சு, செல்விய அவ பொறந்த வீட்டுலயே தங்க வச்சோம். பொண்டாட்டி அருமை புரிஞ்சு. அவன் போய் செல்விய அழைச்சிட்டு வருவான்னு நினச்சோம். அது கடைசிவரைக்கும் நடக்கவே இல்ல” மகனை பற்றி சொல்லி விட்டு அவர் வேதனையாக நிறுத்தினார்.

பெரியவர், “இந்த பொண்ணுக்கு அவன் செஞ்ச பாவந்தான் போதையில வண்டி ஓட்டும் போது லாரில மோதி… அங்கேயே!” பெற்றவர்கள் இருவரும் கலங்கி விட்டனர்.

மீண்டும் அந்த இடத்தில் அமைதி சூழ்ந்தது. பெற்றவளின் சிறிய விசும்பல் மட்டுமே கேட்டது.

‘ச்சே சத்தமா பேசினாலும் அதிர்ந்து போற இந்த பொண்ண, இவ்வளவு கொடுமை செய்ய அந்த மிருகத்துக்கு எப்படி தான் மனசு வந்ததோ?’ என்று பார்வதியின் மனதில் கழிவிரக்கம் உண்டானது.

சமையலறையில், தமிழின் கண்கள் கலங்க, அவள் இதயம் கருங்கல்லாய் பாரமாகி கனத்தது.

வெறுமையான அவள் கருவறையில் ஊமை வலி தெறிக்க, தன் வயிற்றை அழுத்தி பிடித்து கொண்டாள்.

இதையெல்லாம் கேட்ட பிறகு ராகுலின் மனநிலை என்னவாயிருக்கும் என்று எண்ணி அவள் மனம் மேலும் கலக்கம் உற்றது.

‘தமிழ் தன்னிடம் எதையோ மறைக்கிறாள்’ என்று ராகுல் குழம்பி தவித்தான் தான். ஆனால், ‘அவளின் கொடுமையான வாழ்க்கையை முழுமையாக தன்னிடம் மறைத்து இருக்கிறாள்’ என்று எண்ணும் போது அவனுள்ளும் வலிப்பதாய்.

“ஏதோ ஆதங்கத்தில பழைய கதையெல்லாம் பேசிட்டோம். தப்பா நினைக்காதிங்க” சுமதியின் அம்மா தயக்கமாய் சொல்ல,

“விடு ம்மா. வீணா பழைய குப்பைய கிளரிகிட்டு. அண்ணி சந்தோசத்தை பார்க்க வந்தியா? இல்ல, வேண்டாததை பேசி புலம்ப வந்தியா?” சுமதி நேராகவே கண்டிக்க, அவர் அமைதியானார்.

தமிழ் தயக்கமாக வந்து அனைவரையும் சாப்பிட அழைக்க, அனைவரின் பார்வையும் அவள் மீது பதிந்தது.

ஒருவித பதட்டத்துடனே தமிழ், ராகுலை ஏறிட்டாள்.

வெடிக்க இருக்கும் எரிமலையாய் அவன் இறுகி அமர்ந்திருந்தான்.

அவன் கத்திப் பார்வை அவள் விழிகளில் நுழைந்து, அவள் நெஞ்சின் ஆழத்திற்குள் ஊடுருவ… தலைக்கவிழ்ந்து கொண்டாள்.

“நான் உங்களை அண்ணானு கூப்பிடலாமில்ல” சுமதி பிரியமாய் கேட்க, ராகுல் தயக்கத்தோடு ஆமோதித்து தலையசைத்தான்.

“எனக்கும் தங்கை இல்ல, தாராளமா கூப்பிடு ம்மா” என்று சொல்ல, சுமதி மகிழ்ந்து தூர நின்ற தமிழ்செல்வியை ராகுலின் அருகில் நிற்க அழைத்தாள்.

சற்று முன், அவனை வேண்டாமென்று வாதாடி வெளியேற துணிந்தவள், இப்போது தர்ம சங்கடமாக அவன் அருகில் வந்து நிற்க,

“உங்க கல்யாணத்தை தான் எங்களால பார்க்க வர முடியல. எங்க வீட்டு பொண்ணுக்கு செய்ற முறை வாங்கிகிங்க” என்று மங்கள தாம்பூலம் வைத்து, சுமதியின் பெற்றோர் அவர்களிடம் நீட்ட, தமிழ் தயங்கி ராகுலை பார்த்தாள்.

அவன் ஆமோதித்து தலையசைக்க, நிறைந்த தாம்பூலத்தை இருவரும் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் ஆசி பெற்றனர்.

“அண்ணி என் கல்யாணத்தில, நீங்க எனக்கு ஆசீர்வாதம் பண்ண கூடாதுன்னு சொல்லிட்டிங்க இல்ல! இப்ப நீங்க ரெண்டு பேரும் என்னையும், என் குழந்தையையும் ஆசீர்வாதம் பண்ணுங்க” என்று சுமதி அவர்கள் காலில் விழ, தமிழ் நெகிழ்ந்து அவளை தூக்கி விட்டாள்.

“நீயும் பாப்பாவும் எந்த குறையும் இல்லாம நல்லா இருப்பீங்க” என்று வாழ்த்த,

புன்னகைத்த சுமதி, “ஏன் அண்ணி இன்னும் மெட்டி போடாம இருக்கீங்க? உங்க காலுக்கு மெட்டி போட்டா ரொம்ப எடுப்பா இருக்கும்” என்று துடுக்குதனமாக வினவ,

“…?”

“அதைவிடு சுமதி, நேரமாச்சு பாப்பாக்கும் பசிக்குமில்ல. வாங்க சாப்பிடலாம்” என்று பேச்சை மாற்றி அனைவருக்கும் உணவு பறிமாறினாள்.

ராகுல் அவர்களுடன் உண்ணாமல் அறைக்கு வந்து அவசரமாய் தயாரானான். அவனுக்கு வங்கி செல்ல நேரம் கடந்திருந்தது.

தமிழ் தவிப்புடன் அவனிடம் வந்து நின்றாள்.

“தெரியாம தான் கேக்கறேன், இதுவரைக்கும் ஒரு சின்ன விசயத்தையாவது நான் உன்கிட்ட சொல்லாம மறைச்சிருக்கேனா? ஆனா நீ… உன் வாழ்க்கைய மொத்தமா என்கிட்ட மறைச்சிட்ட இல்ல” என்று அவன் வருத்தமும் கோபமுமாக கேட்க,

“இதெல்லாம் எப்படி? நான் உன்கிட்ட சொல்றதுன்னு எனக்கு தெரியில” அவள் குரல் தழுதழுத்தது.

“போதும், உன்னோட பேச்சை வளர்த்து இன்னும் என் நேரத்தை வீணாக்க விரும்பல” அவன் வேகமாய் வெறுத்து பேச, தமிழ் பதறினாள். ராகுல் இத்தனை வெறுப்பை அவளிடம் இதுவரை காட்டியதில்லை.

“அவங்க இப்படி திடீர்னு வருவாங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல” அவள் கலக்கமாக சொல்ல,

“ஒருவேளை, அவங்க யாரும் வரலைன்னா, எனக்கு எந்த உண்மையும் தெரியாமலேயே போயிருக்கும் இல்ல” என்று காரமாய் கேட்டவன், தன் பையை எடுத்து தோளின் குறுக்கே மாட்டியபடி வேகமாக சென்று விட்டான்.

ராகுலின் வெறுப்பும் கோபமும் இவளை சஞ்சலபடுத்தியது. அவனை விட்டு விலக நினைப்பவள், அவன் வெறுப்பை எண்ணி மகிழ தானே வேண்டும்? இருந்தும், தன் மனம் எதற்காக கலங்குகிறது என்ற காரணம் புரியாமல் தமிழ் துவண்டு போனாள்.

சிறிது நேரம் கழித்து, சுமதியும் அவள் பெற்றோரும் கூட விடைபெற்று கிளம்பினர்.

சுமதி உர்ரென்ற முகத்துடன் நடந்து வந்தாள்.

“ஏன் இப்படி முகத்தை தூக்கி வச்சிருக்க இப்போ?” அவள் அம்மா கேட்க,

“அண்ணிய பார்க்க வாங்கன்னு நான் கூப்பிட்டேனா உங்கள? நான் போறேன்னு சொன்னதுக்கு நீங்க ரெண்டு பேரும் தான எகிற போட்டுட்டு வந்தீங்க. அப்ப கூட அமைதியா அண்ணிய மட்டும் பார்த்துட்டு வரணும்னு சொல்லிதான உங்கள கூட்டிட்டு வந்தேன்.”

“நாங்க என்ன பண்ணோம்னு இப்படி குதிக்கறவ?”

“ஆமா உன் உத்தம புத்திரனோட வண்ட வாலத்தை அங்க சொல்லணும்னு என்ன அவசியமா?”

“அது என்னமோ மனசு கேட்கல. நம்ம செல்விய வேற ஒருத்தன் கூட பார்க்க என்னமோ போல இருந்துச்சு. அதான் ஏதோ சொல்லிட்டேன் விடேன்”

“ச்சே உன்ன எல்லா திருத்தவே முடியாது ம்மா. நீ சொன்னதும் ராகுல் அண்ணா முகம் எப்படி மாறி போச்சு தெரியுமா. உங்கள போய் கூட்டிட்டு வந்தேன் பாரு, என் புத்திய செருப்பால அடிச்சிக்கணும்” என்று ஆதங்கமாக தலையில் அடித்து கொண்டு வேகமாக முன்னேறி நடந்தாள்.

“ஏய் வயித்தில புள்ளைய வச்சிகிட்டு என்னடி இப்படி நடக்கறவ, பொறுமையா நட சுமதி…” என்று அவர்கள் அவள் பின்னோடு ஓடினர்.

# # #
காதல்காரன் வருவான்…

error: Content is protected !!