1

சென்னை அண்ணா விமான நிலையம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. டொமஸ்டிக் டெர்மினலிலிருந்து தனது சிறிய ஹேண்ட் லக்கேஜோடு வெளியே வந்தான் ஷ்யாமள பிரசாத், சுருக்கமாக ஷ்யாம்.

அதீத உயரமில்லை, அதே சமயத்தில் அளவான உயரமுமில்லை. ஆண்களில் அவன் நல்ல உயரம். அவனை நிமிர்ந்து தான் பார்க்கும்படி இருக்கும்.

லீவைஸ் ஜீன்… மடக்கி விடப்பட்ட முழுக்கை கேசுவல் ஷர்ட்… ரேசர் பார்வை… அந்தக் கண்களை மறைத்த ரேபான்… ஜெல் தடவி அடக்கிய சிகை… சிவந்த தேகம்… ஆரோக்கியமான கைகள்… இடது கையில் ஒன்னரை லகரங்களை விழுங்கிய ஒரிஸ் டைவர்ஸ்… எப்போதும் இரண்டு நாள் மழிக்காதது போன்ற தாடி. அதனிடையே மறைந்திருக்கும் இறுக்கமான முகம். அதில் அவ்வப்போது நெளியும் சிறு புன்னகை… அவனது புன்னகை அலாதியானது. பார்ப்பவர்களை ஈர்க்கும் அந்தப் புன்னகைக்கு ஈடு கூற முடியாது.

அவன் புன்னகைப்பான்… கண்டிப்பாகப் புன்னகைப்பான்… அவனுக்குத் தேவையென்றால் கண்டிப்பாகப் புன்னகைப்பான்… காரியமாக வேண்டும் என்றால் மட்டும் புன்னகைப்பான். அது ரேஷன் புன்னகை. சிக்கனமாக, தேவையான அளவு மட்டும். அதுவும் தேவைப்படும் இடங்களில் மட்டுமே!

ஆனால் அவனது புன்னகையில் விழுந்தவர் எழுந்ததாக சரித்திரமும் இல்லை, பூகோளமும் இல்லை.

அவன் கேட்பதற்கு முன்பாகவே கொடுத்துவிட்டு சென்று விடுவதும் நடக்கும். இவனென்ன மாயாவியா அல்லது யட்சனா என்ற கேள்வி தோன்றலாம். அந்த வசீகரம் அவனது ஸ்பெஷாலிட்டி.

ஷ்யாம் கற்றது, கேட்டது, செய்வது, சுவாசிப்பது, வாசிப்பது, நேசிப்பது எல்லாம் அவனது தொழிலை மட்டுமே!

‘இந்தத் தொழிலதிபருங்க தொல்லை தாங்க முடியலடா… புண்ணாக்கு விக்கிறவன், குண்டூசி விக்கிறவனெல்லாம் தொழிலதிபருங்கன்றான்’ என்ற கவுண்டர் வாய்ஸ் நமக்கும் கேட்கத்தான் செய்கிறது

ஆனாலும் என்ன செய்ய? அவன் தொழிலதிபன் என்று நாம் பிக்ஸ் செய்துவிட்டோமே!

வேறு வழியில்லை… இங்கும் இந்தத் தொழிலதிபனின் தொல்லையை வாசகர்களாகிய நீங்கள் தாங்கித் தானாக வேண்டும்.

பொழுதுபோக்கு ஸ்கூபா டைவிங், ஸ்கை டைவிங், ராலி ரேசிங் என்று அத்தனை ஆபத்தான விளையாட்டுக்களும். மது, மாது மற்றும் சூதோடு! அலட்டிக்கொள்ளாமல் சம்பாதிப்பான்… அலட்டிக்கொள்ளாமல் செலவும் செய்வான். அட்வென்ச்சர் வேண்டும் என்பதற்காக எவ்வளவு தூரமும் ரிஸ்க் எடுப்பான்.

அவனுக்குப் பிடித்தது வாழ்க்கையில் ரிஸ்க் எடுப்பது…

இதுதான் ஷ்யாமள பிரசாத்… ஷ்யாம்!

சுற்றிலும் பார்த்துக்கொண்டே வந்தான் ஷ்யாம். ஒரு தோளில் பேக்பேக்… இன்னொரு கையில் கைப்பேசி… யாருக்கோ அழைப்பை விடுத்துக் கொண்டு அந்த ஹெல்ப் டெஸ்க்கின் பக்கமாக நின்றான்.

டெஸ்கில் அமர்ந்திருந்த பெண்ணை அளவெடுத்தது அவனது பார்வை… அதெல்லாம் ஆட்டோமேட்டட் சிஸ்டம்… பெண்களைக் கண்டால் தானாக அளவுகளைக் குறிக்க ஆரம்பித்துவிடும் அவனது மூளை.

34-28-36

அவ்வளவு அழகாக, சீராகச் சேலை உடுத்தி முகத்திற்கு மேக் அப்போடு நிரந்தரமாகப் புன்னகையை ஒட்டவைத்து அமர்ந்திருந்த அந்தப் பெண்ணைப் பார்த்து ‘ச்சே செம்ம பிகர்’ என்று நினைத்துக் கொண்டவன், அடுத்து அமர்ந்திருந்த பெண்ணைப் பார்த்தான். அவள் இன்னும் தூக்கலாக இருந்தாள். முன்னவள் அமலா பால் என்றால் இவள் ஆவின் பால். ஹன்சிகாவின் ஜாடை. அவளது முன்னழகைப் பார்க்கும் போதே, மனதுக்குள் ஏதேதோ எண்ணங்கள்.

குப்பையாய் சேகரித்து வைத்திருந்த கணக்கீடுகள் எல்லாம் சட்டென உயிர் பெற்று எழுந்தன.

அவனையும் அறியாமல் வாயைக் குவித்து ‘உப்ப்ப்’ என்றான். அப்போதுதான் கவனித்தான் அவளது கழுத்தை!

திருமணமானவள் அவள்!

சட்டெனப் பார்வையைத் திருப்பிக் கொண்டான் ஷ்யாம். அவனிடத்தில் இதுவொரு நல்ல பழக்கம். திருமணமான பெண் என்றால் எண்ணத்தால் கூட அவர்களை நெருங்கமாட்டான்.

ஆனால் அப்படியொன்றும் நல்லவனுமில்லை. சரியாகச் சொன்னால் நல்லவனே இல்லை.

அதிலும் இவனது தொழிலில், இவனைத் தேடி அத்தனையும் வரும். கிடைத்ததை அனுபவிக்கவும் செய்வான். கிடைக்காததைக் கிடைக்கவும் செய்வான்.

இருப்பது ஹைதராபாத், பஞ்சாரா ஹில்ஸ், இந்தியாவின் பணக்கார பின்கோட். தமிழன் தான், ஆனால் அங்குச் செட்டிலாகிவிட்ட தமிழர்கள். வேண்டுமென்றால் பாதித் தமிழன், பாதித் தெலுங்கன் என்றும் கூறலாம்.

தொழில், திரைத்துறையினருக்குப் பைனான்ஸ் செய்வதோடு இன்னும் சில. தாத்தா காலம் தொட்டே, அதற்கும் முன்னர் இருந்தே பைனான்ஸ் தொழில் தான். அதையே தந்தை செய்தார். அதைப் பின்பற்றி ஷ்யாமும் அப்படியே.

நல்லவனுக்கு நல்லவன். பண விஷயத்தில் ஏமாற்ற நினைத்தாலோ, பணத்தைத் தராமல் இழுத்தடித்தாலோ, இவனது மற்றொரு முகத்தைக் காணலாம்.

அது மிகவும் கோரமான முகம். அந்த முகத்திற்குத் தயை தாட்சணியம் கிடையாது. எந்த நிலைக்கும் செல்ல அந்த முகம் தயங்காது. அத்தனை பாவங்களின் ஊற்று அந்த முகம். அத்தனை சூதுகளின் பிம்பம் அந்த முகம்.

கண்டவர் விண்டிலர்… விண்டவர் கண்டிலர்.

ஆயினும் வாழ்க்கையை அனுபவித்து வாழ்வது எப்படி என்று ஷ்யாமிடம் கற்றுக்கொள்ள வேண்டும். காடாறு மாதம் நாடாறு மாதம் என்பது போல, உழைக்கும் பொது உழைத்துக்கொள்… அதை அனுபவிக்கவும் கற்றுக் கொள் என்பதுதான் அவனது கொள்கை.

அந்த அளவிற்குத் தெளிவானவன். அன்பானவன், அசராதவன், அடங்காதவன். ஷப்பா போதும்மா… ஹீரோவை ரொம்ப அதிகமாவே வர்ணிச்சுட்ட… கதைக்குள்ள போம்மான்னு நீங்கக் கழுவி ஊத்தறது தெரியுது… சோ இப்போதைக்கு எஸ்கேப்…

“பாஸ்…” சற்று தூரத்திலிருந்து விஜய் அழைப்பது கேட்டது.

விஜய் அவனது சென்னை பிரதிநிதி. அவனது வலது கை, இடது கை என்று அனைத்தும் அவனே. இண்டு இடுக்கு விடாமல் ஷ்யாமின் சென்னை வியாபார தொடர்புகளைப் பற்றியும், அவனது தொழிலைப் பற்றியும் அறிந்து வைத்திருப்பவன்.

ஷ்யாம் ஒரு பங்கு செய்யச் சொன்னானென்றால், அவனிடம் நல்ல பெயர் வாங்க வேண்டுமென்று பத்து பங்காகச் செய்து வைப்பவன். எத்தனையோ பேரின் சாபத்தை இவனும் பெற்று, ஷ்யாமுக்கும் பெற்றுத் தந்து இருப்பவன்.

குரல் வந்த திசையை நோக்கித் திரும்பினான்.

பிரகாசமான முகத்தோடு அவனை நோக்கிக் கையாட்டிக் கொண்டிருந்தான் விஜய். ஹெல்ப் டெஸ்க்கில் அமர்ந்திருந்த அமலா பாலை முழுவதுமாகக் கண்களில் நிரப்பிக்கொண்டான் ஷ்யாம்.

அவனது பார்வை போகும் திக்கை விஜய் பார்த்துக் குறித்துக் கொண்டான். அவன் தான் இடது கையுமாயிற்றே, ஷ்யாமின் மனம் புரியாதா?ஆனால் அவள் படிந்து வருவாளா என்பது தான் தெரியவில்லை. படிவது சிரமம் தான்… ஆனாலும் முயற்சித்துப் பார்க்கலாம், தவறில்லை என்று தோன்றியது.

நெல்லுக்குப் பாயும் நீர் அவ்வப்போது புல்லுக்கும் பாயுமாயிற்றே!

பாயவில்லை என்றாலும் ஷ்யாமின் பெயரும், அவனது பணமும் பாதாளம் வரை பாயும் ஒன்றென்பதால், இதுவரை அவனுக்கு எந்தச் சிரமமும் இருந்ததில்லை. பார்க்கலாம், இவளை வளைப்பது எப்படியெனத் தனியாக ஒரு ப்ராஜக்ட் செய்து விட்டால் முடிந்தது என்று முடிவெடுத்துக் கொண்டவன்,

“பாஸ்… இங்க…” என்று மீண்டும் கைகாட்ட, ஓட்ட வைத்த பெரிய புன்னகையோடு அவனை நோக்கிப் போனான்.

“என்ன விஜி? பார்வையெல்லாம் பலமா இருக்கு?” விஜயனை கண்டுகொண்டதன் அடையாளமாகத் தோள்மேல் கைபோட்டுக் கொண்டவனை, பார்த்துச் சிரித்தான்.

“பாம்பின் கால் பாம்பறியும் பாஸ்…” என்று அவன் புன்னகையோடு கூற,

“அப்படீன்னா என்னை நீ பாம்புன்னு சொல்ற?” கிண்டலாக அவன் கேட்க,

“பாஸ்… உங்களைப் போய்ச் அப்படிச் சொல்வேனா?”

“அப்ப நீதான் பாம்பா?” விடுவேனா என்று விஜயனுக்குக் கிடுக்கிப் பிடி போட,

“ஒரு வார்த்தைக்குச் சொன்னேன் பாஸ்… ப்ளீஸ் விட்டுடுங்க… வரும்போதே இந்தச் சின்னப் பையனை ராகிங் பண்ற மூடோட வந்திருப்பீங்க போல…” என்று சிரிக்க,

“உங்களைச் சின்னப் பையன்னு சொன்னா உங்க கேர்ள்ப்ரெண்ட்ஸ் எல்லாம் என்னை உதைக்க வருவாங்க ஜீ…” என்று சிரித்தவன், டெர்மினலின் கார் பார்க்கிங்கை நோக்கிச் சென்றான்.

“ஓகே பாஸ்… இப்ப நீங்க செம பார்ம்ல இருக்கீங்க… நான் பேசவே முடியாது… கொஞ்சம் நீங்க டவுனாகும் போதுதான் நம்ம வேலைய காட்ட முடியும்…” என்று அவனும் கிண்டலாகக் கூறினான்.

விஜயன் ஷ்யாமிடம் வேலை செய்பவன் தான். ஆனாலும் அவன் தான் இங்கு நெருங்கிய நண்பன். இருவருக்கும் இடையில் பெரிதாகக் கருத்து வேற்றுமைகள் இருக்காது. ஏனென்றால் ஷ்யாமின் எண்ணத்தை அப்படியே தனது செயலில் காட்டுவதில் விஜய் சமர்த்தன். அவ்வளவு தெளிவாக அவனது நாடியைப் பிடித்து வைத்திருந்தான்.

“அப்படீன்னா டவுனானா உன் வேலையைக் காட்டுவன்னு சொல்ற?” கேட்கும் கேள்விகள் என்னவோ கோக்குமாக்கான கேள்விகள் தான், ஆனால் கிண்டல் தொனி சற்றும் மாறவில்லை. விஜய்யை திட்ட வேண்டி வந்தால் கூட, ஷ்யாமின் தொனி இப்படித்தான் இருக்கும்.

விஜய்யை மட்டுமல்ல… யாராக இருந்தாலும் இப்படித்தான். ‘மீனுக்கு வாலைக் காட்டு, பாம்புக்குத் தலையைக் காட்டு’ என்ற பழமொழிக்கு உதாரணம் ஒன்று ஷ்யாம். உதாரணம் இரண்டு விஜய். அதனால் தானோ என்னவோ இருவருக்கும் அப்படி ஒத்துப் போனது. ஷ்யாமும் மாதமொருமுறை அல்லது இரண்டு முறை மட்டுமே சென்னை வந்து தொழிலைக் கவனித்தால் போதுமென்று இருந்தது. மற்ற அனைத்துக்கும் ஆட்கள் இருந்தனர்!

தொழில் என்பது பெரிய பெயர்தானே தவிர, ஷ்யாம் ஒரு மிகப் பெரிய வட்டிக்கடைக்காரன் அவ்வளவே! அதிலும் கந்து வட்டிக்கடைக்காரன். வட்டிக்கடை என்றால் சிறிய அளவில் கொடுக்கல் வாங்கல் இருக்கும். இவனிடத்தில் பெரிய அளவில் இருக்கும். அது மட்டும் தான் வேற்றுமை!

அவன் டீல் செய்வது அனைத்தும் திரைப்படங்களின் பெரிய பட்ஜக்ட் என்பதால் வியாபாரம் கோடிகளில் இருக்கும். பணத்தைச் சரியாகக் கொடுக்கும் வரை விஜய் மரியாதை தருவான், அதாவது ஷ்யாம்! சரியாக வரவில்லை என்றால் அதோடு அந்தத் தயாரிப்பாளர் அவ்வளவுதான்!

அதற்கெனவே இருக்கும் குண்டர்களோடு சென்று அவர்களை ஒருவழியாக்கிவிட்டுத்தான் விஜய் ஓய்வான். அதன் பின் அந்தத் தயாரிப்பாளர் என்னவோ பதறியடித்துக் கொண்டு வட்டியைத் தந்து விடுவார் என்பது வேறு கதை.

ஷ்யாமை பொறுத்தவரை வட்டி சரியாக வருகிறதா என்பதை ஹைதராபாத்தில், பஞ்சாரா ஹில்ஸில் இருக்கும் தனது அலுவலகத்தில் அமர்ந்து சரி பார்ப்பதுதான் வேலை.

வட்டியை சரியாகக் கொடுக்கும் வரை அவனைப் போல ஒரு நல்லவனைப் பார்க்க முடியாது… ஆனால் கொடுக்க இயலாமல் போனாலோ, அவனைப் போல ஒரு மோசமானவனைப் பார்க்கவே முடியாது. விஜய் அவனது இந்தப் பிம்பத்தைச் சரியாக எடுத்துச் செல்வதால், அவனை என்றுமே இவன் விட்டுக்கொடுத்ததில்லை. இனியும் விட்டுக்கொடுக்கமாட்டான். அதுபோல இவனிடம் கிடைக்கும் மரியாதையும், இவனிடம் இருப்பதால் கிடைக்கும் மரியாதையும் வேறெங்கும் கிடைக்காது என்பதை விஜயும் அறிவான். அதோடு பணப்புழக்கம்!

‘பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சவுக்கியமா?!’

சிவன் கழுத்தில் இருக்கும் வரை தான் அந்த நாகத்திற்கு மரியாதை… அதைச் சிவன் எடுத்துக் கீழே போட்டாலோ, அதுவாக இறங்கி விட்டாலோ கருடன் அவனைக் குத்திக் கிழித்து விடுவான் என்பதை முழுக்க முழுக்க உணர்ந்தவன் விஜய். அதனால் எந்தக் காலத்திலும் அவனாக அந்தத் தவறை செய்து விடவே மாட்டான்.

ஆனால் அந்த நிலை வந்தால்?

“பாஸ்… அப்படி நீங்க நினைக்கற மாதிரி ஒரு நிலைமை வந்தா நான் உயிரைக் கூட விட்டுடுவேன்… உங்களுக்குத் துரோகம் நினைக்கவே மாட்டேன்…” சற்று இறங்கிவிட்ட குரலில் கூறியவனைப் பார்த்து முறைத்த ஷ்யாம்,

“விஜி… உன்னைப் பற்றி எனக்கு நல்லா தெரியும்… சோ நோ இமோஷனல் டிராமாஸ்…” வெகு இயல்பாகக் கூறிவிட்டு நகர்ந்தவனைச் சிறு புன்னகையோடு தொடர்ந்தான்.

ஷ்யாம் என்ன சொன்னாலும் சரி, செய்தாலும் சரி, அவன் செய்வது சரியே என்பது விஜயனின் வாதம்! அவன் அப்படித்தான் வாதம் செய்வான் என்பதை ஷ்யாமும் அறிவான்.

“விஜி… கிவ் மீ தி கீ…” என்று சாவிக்காக ஷ்யாம் கையை நீட்ட, சற்று தயக்கத்தோடு தான் அவனிடம் சாவியைக் கொடுத்தான். ஏனென்றால் அவன் ஓட்டுவது அப்படி. கண் மண் தெரியாத வேகம்… வேகம்… வேகம் மட்டுமே!

அது நடையாக இருந்தாலும் சரி, அவனது வேகத்துக்கு ஈடு கொடுக்க யாராலும் முடியாது… டிரைவிங்காக இருந்தாலும் அப்படியே!

கண்டிப்பாகக் கண்ட்ரோல் இருக்கும் என்பதற்காக உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அமர முடியாதே… ஆனாலும் விஜயன் அமர்வான்… எதுவும் கூறாமல்! ஆனால் கண்கள் ஷ்யாமை கண்காணித்துக் கொண்டே இருக்கும்… சற்று நிலை தடுமாறினாலும் இவன் சமாளித்து விடுவான்.

“பாஸ்… பார்த்து டிரைவ் பண்ணுங்க… உங்க கிட்ட காரை கொடுக்கக் கூடாதுன்னு அம்மா ஸ்ட்ரிக்ட்டா சொல்லிருக்காங்க…” தயங்கியபடியே அவன் கூற,

“அன்ட்டே… அம்மா சொன்னதைப் பாலோ பண்ணிருக்கணும்… இனிமே உன்னை யார் வந்து காப்பாத்தறான்னு பார்க்கறேன்…” என்று விளையாட்டாக அவன் சிரிக்க, “பாஸ்ஸ்ஸ்ஸ்…” என்று இழுத்தான் விஜய்.

“ஹேய் கூல் மேன்…” என்றவன் விஜய்யை பின்னால் பார்த்தபடி அதே வேகத்தோடு காரை நோக்கிப் போக, எதன் மேலோ மோதினான் ஷ்யாம்.

“ஓ ஷிட்…” எரிச்சலாகப் பொறிந்தது ஒரு குரல்! ஐஸ்க்ரீமில் மிளகாய்யை கலந்தபடி இருக்கிறதே என்று தோன்றியது அவனுக்கு! என்ன காம்பினேஷன் இது ‘மிர்ச்சி ஐஸ்க்ரீம்’?!… ம்ம்ம் இல்லை அதைவிடப் பொருத்தமாக ‘மிர்ச்சி குல்பி’

புன்னகையோடு நிமிர்ந்து பார்த்தான்!

அந்த மிர்ச்சி குல்பி, ஷ்யாம் இடித்த வலி தாங்க முடியாமல் எரிச்சலாக நின்று கொண்டிருந்தது. வலுவாக இடித்ததில் அவளது ஹைஹீல் செருப்பு வேறு தடுக்கி விட்டு அவளது காலும் சேர்ந்து மடங்கியது.

‘இவனுக்கு மட்டும் எப்படித்தான் இப்படியெல்லாம் வந்து சேர்கிறதோ… சுக்கிரன் கன்னாபின்னாவென உச்சமாகி இருப்பான் போல…’ என்று பின்னால் நின்றிருந்த விஜய் நமுட்டுச் சிரிப்பு சிரிக்க,

“டோன்ட் யூ ஹேவ் எனி மேனர்ஸ்?” ஷ்யாமை பார்த்து எரிச்சலாக அவள் கேட்டாள்.

“மேம்… டூ யூ நீட் இட்? சாரி ஸ்டாக் லேதண்டி…” கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் அவன் கூற, அவனை இன்னமும் முறைத்தவள்,

“ஸ்கவுண்ட்ரல்…” என்று முனகிக் கொண்டு நகர்ந்தாள் அவள். ‘திருந்தாத ஜென்மங்கள்’ என்று நினைத்துக் கொண்டு நகர்ந்தவளை பார்த்து விஜய் கோபமாக நெருங்க, அவனைத் தடுத்து தானே அவளுக்கு முன் கை வைத்துத் தடுத்தான்.

“நான் உங்களைப் பார்த்து இடிக்கலை… இட் வாஸ் ஜஸ்ட் அன் ஆக்சிடென்ட்… அதை ஜஸ்ட் லைக் தட் எடுத்துட்டுப் போயிருக்கலாம்… அதுக்கு ஏன் இவ்வளவு பெரிய வார்த்தை சொல்றீங்க?” என்று கோபமாகக் கேட்டவன், “நீங்க சாரி கேட்கனும்…” என்று முடிக்க, அவனது கையைக் கோபமாகத் தட்டிவிட்டவள், எதுவும் கூறாமல் நகரப் பார்க்க,

“சாரி மேம்… யூ கான்ட் மூவ்…” என்று அவளுக்கு முன் சென்று நின்றான். உண்மையிலேயே அவனுக்குக் கோபமாக இருந்தது. ‘இந்தப் பெண் எப்படி இந்த வார்த்தையைக் கூறலாம்? அதிலும் தானென்ன தெரு ரவுடியா? அல்லது வேண்டுமென்றே இடிக்கும் இடிமன்னனா?’ என்ற கோபம்.

“முதல்ல நீங்க இடிச்சதுக்குச் சாரி கேட்டீங்களா?” என்று அவள் பதில் கேள்வி கேட்க,

“அதைத் தான் நான் தெளிவுப்படுத்திட்டேனே… இட் வாஸ் நாட் இன்டன்ஷனல்… ஜஸ்ட் ஆன் ஆக்சிடென்ட்…” என்று அவளுக்கு விவரிக்க முயன்றான். அவன் முகத்திற்கு முன் கையைக் காட்டி நிறுத்த கூறியவள்,

“இதுக்குப் பேர் சாரி கேட்கறதா?”

“இதுக்கு மேல என்ன சொல்ல முடியும்?”

“அப்படீன்னா நான் மட்டும் என்ன சொல்ல முடியும்?”

“அப்ப சாரி கேட்க மாட்டீங்க?”

“ஒய் ஷுட் ஐ?”

“யூ ஷுட்… பப்ளிக் பிளேஸ்ல அந்த வார்த்தையை யூஸ் பண்ணுவாங்களா? ஹவ் சிக் யூ ஆர்?”

“யூ ஆர் சிக்… பப்ளிக் பிளேஸ்ல இடிக்கறதுக்காகவே சில கேவலமான பிறவிகள் வரும்போது, கண்டிப்பா இந்த வார்த்தையை யூஸ் பண்ணலாம்…” அலட்டிக்கொள்ளாமல் அவள் கூற,

“மறுபடியும் என்னை நீங்க தப்பா பேசறீங்க! இது ரொம்பத் தப்பு! ப்ளைட்ல இருந்து இறங்கி வந்தவன், நேரா உங்களை இடிக்கத்தான் வருவேனா?”

“ப்ளைட்ல இருந்து இறங்கி வந்தா, கேள்வி கேட்கக் கூடாதா? உங்களுக்கென்ன கொம்பா முளைச்சு இருக்கு?” விடாமல் அவளும் கடுப்பில் சண்டையிட, அதுவரை மெளனமாக இருவரையும் மாற்றி மாற்றிப் பார்த்துக்கொண்டிருந்த அவளது தோழி, அந்தப் பெண்ணை இழுக்க ஆரம்பித்தாள்.

“ப்ளைட்க்கு லேட்டாகுது…” என்று அந்தப் பெண் தவிக்க,

“இரு பிருந்தா… யாரும் கேட்கமாட்டாங்கங்கற திமிர்ல தான் இந்த மாதிரி ஆளுங்க இருக்காங்க… “

“என்ன ஆளா?” கடுப்பாகக் கேட்டவன், “அப்படியென்ன நீங்க என்ன ரொம்பப் பெரிய அழகியா? பப்ளிமாஸ் மாதிரி இருந்துகிட்டு, இத்தனை அலட்டல் ஆகாதும்மா… கொஞ்சம் அடக்கமா இருங்க…” என்று கடுப்பில் கூறிவிட,

“வாட்… பப்ளிமாஸ்… அடக்கமாவா?” மாற்றி மாற்றிக் கேட்டுக் கொண்டவள், “என்னைப் பற்றி விமர்சனம் பண்ண நீங்க யாருங்க? ஹவ் டேர் யூ ஆர்?” என்று அவள் எகிற ஆரம்பிக்க,

“ப்ச்… ஒரு சாரி சொல்லிட்டு போய்ட்டா வேலை முடிஞ்சது… அதுக்குப் பதிலா இத்தனை வார்த்தையா?” என்று கடுப்பாக அவன் கேட்க,

“எவ்வளவு வார்த்தை பேசினாலும், நான் சாரி கேட்க முடியாது… நீங்க தான் கேட்கணும்…” மிகவும் தீர்மானமாக அவள் கூற,

“நான் எதுக்காகக் கேட்கணும்? நான் க்ளியரா சொல்லிட்டேன்… இட் வாஸ் நாட் இன்டன்ஷனல்… ஆனா தெரிஞ்சே வார்த்தையை விட்டது நீங்க…”

“பப்ளிக் பிளேஸ்ல பொண்ணுங்களை இடிக்கவே வர்றவனை எங்க ஊர்ல எல்லாம் இப்படித்தான் திட்டுவாங்க…” என்று கூறிவிட்டு அவனை வலுகட்டாயமாகத் தாண்டிப் போக முயன்றாள்.

இவளை இப்படியே விட்டுவிட்டால் அவன் ஷ்யாம் இல்லையே!

“அப்ப ப்ரைவேட் பிளேஸ்ல இடிக்கலாமா மிர்ச்சி?” கண்ணைச் சிமிட்டி கிண்டலாக அவன் கேட்க, ஹீட்டிங் ஸ்டேஜிலிருந்து பாய்லிங்க் ஸ்டேஜுக்கு போனாள் அந்த மிரப்பக்காய்!

“யூ… ஸ்டுபிட்… கூஸ்… நீயெல்லாம் ஒரு ஆள்ன்னு பேசிட்டு இருக்கேன் பாரு… எனக்குச் செப்பல்ஷாட் தான் வேணும்…” என்றவள், முறைத்துக் கொண்டே வாயில் திட்டு வார்த்தைகளை முனுமுனுத்தபடி செல்ல, ஷ்யாம் குறும்பாகப் புன்னகைத்துக் கொண்டான்.

“ஹேய் மிர்ச்சி குல்பி…” என்று பின்னாலிருந்து இவன் அழைக்க, முறைத்தபடி திரும்பிப் பார்த்தாள்.

“ஆல் தி பெஸ்ட் ஃபார் தி செப்பல்ஷாட்…” என்று புன்னகையோடு கண்ணைச் சிமிட்டியவனைப் பார்த்தபோது அவள் கொதிநிலை கடந்து இன்னும் அதிகமாகி ஆவியாகிக் கொண்டிருந்தாள்.

“போடாப் பொறுக்கி…” கோபம் கொதிக்க, அதைக் குறைக்கும் வழி அறியாமல் அவள் திட்ட, இப்போது உண்மையிலேயே அவனுக்குக் கோபம் வந்தது. இது வரைக்குமே அவன் விளையாட்டாகத்தான் அவன் பேசிக்கொண்டிருந்தது. ஆனால் அவளது ‘பொறுக்கி’ என்ற வார்த்தை அவனைத் தைத்தது. பதிலுக்கு அவன் பேசுவதற்குள் அந்த மிரப்பக்காயின் அருகிலிருந்தவள்,

“மஹா… ஒழுங்கா வா… ப்ளைட்க்கு நேரமாகுது…” என்று இழுத்துக்கொண்டு போனாள், அந்த மஹாவும் ஷ்யாமை முறைத்தபடி டொமெஸ்டிக் டெர்மினலுக்குள் சென்றாள்.

அதுவரை ஷ்யாமையும் அந்தப் பெண்ணையும் புன்னகையோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த விஜய்,

“பாஸ்…” என்று அழைக்க, அவள் போன திக்கை முறைத்தபடி நின்றிருந்தவன், எதுவும் பேசாமல் காரில் ஏறினான்.

அவனது கோபமெல்லாம் வேகமாக மாற, தன்னுடைய உத்தண்டி பார்ம் ஹவுஸை நோக்கி ஜாகுவாரில் பறந்தான்.