12

“மஹா…” அவன் சப்தமாக அழைக்க, அவளோ அவனைச் சற்றும் கண்டுகொள்ளாமல் போய்க்கொண்டிருக்க, அது அவனை உசுப்பி விட்டார் போல ஆனது.

“மகா வேங்கட லக்ஷ்மி… ஒழுங்கா நின்னுடு…”

அவள் நிற்காமல் போய்க்கொண்டிருந்தாள். அவனுக்குச் சுறுசுறுவெனக் கோபம் ஏறியது. திரும்பிக் கூடப் பார்க்காமல் செல்லுமளவு திமிரா என்ற கடுப்பில்,

“ஏய்… இங்க பாருடி… உன்னோட செல்போனை தண்ணில போடப் போறேன்…” என்று அவன் கத்தவும், அவளது நடை நின்றது.

திரும்பி அவனிடம் வந்தவள்,

“ஏய் என்னடா நினைச்சுட்டு இருக்க? என்ன மிரட்டுறியா?” என்று மிரட்டலாகக் கேட்டவளை உதட்டோர புன்னகையோடு பார்த்தவன்,

“ஆனாலும் உனக்கு இருக்கக் கொழுப்பும் தைரியமும் யாருக்குமே இருக்காதுடி…” நக்கலாகக் கூறியவனைப் பார்த்து முறைத்தாள்.

“உனக்கு இருக்கறதை விடவா? இன்னொரு தடவை டி போட்ட… உன் மண்டைய உடைச்சுடுவேன்…” கடுப்பாக அவள் கூற, அவன் வாய்விட்டுச் சிரித்தான். தான் தானா இந்த நேரத்தில் கொஞ்சமே அறிமுகமானவனோடு, அதுவும் தன்னைக் கடத்தி கொண்டு வந்தவனோடு, அதிலும் சற்றும் குணம் பொருந்தாதவனுடன் இயல்பாகப் பேசிக்கொண்டிருப்பது என்ற சந்தேகம் அவளுக்கு அந்த நேரத்தில் வந்தது.

“நீ என் மண்டையை உடை… நான் உன்னோட செல்போனை உடைக்கறேன்… வெரி சீப் போன்…” என்று அவன் தண்ணீரில் போடப் போக, அவள் பதறினாள்.

“டேய் பாவி… போட்டுடாதே… அது என்னோட உயிர்டா…” என்றவளை,

“அப்படீன்னா போட வேண்டியதுதான்…” என்று மீண்டும் பயம் காட்ட,

“வேண்டாம் ஷ்யாம்…” எச்சரிக்கையாக அவனைப் பார்த்தவாறு கூற,

“உனக்குப் பாய்ப்ரெண்ட்ஸ் இல்லையா மிர்ச்சி?” என்று அவன் சம்பந்தம் இல்லாமல் கேட்க, அவனது கேள்வி எதற்கு எனப் புரியாமல் அவனைப் பார்த்து,

“ஏன் கேட்கற?”

“இருக்கானா இல்லையா? அதைச் சொல்லு…” அவள் முன் அந்தச் செல்பேசியை ஆட்டியபடி அவன் கேட்க,

“இருந்தா உனக்கென்ன? இல்லாட்டி உனக்கென்ன?”

“எனக்கொண்ணும் இல்ல பப்ளிமாஸ்… உனக்கு அவன் ஐபோன் ஸ்பான்சர் பண்ணிருப்பான்… இப்படிக் கேவலமான போனையெல்லாம் நீ வெச்சுட்டு இருக்க வேண்டிய அவசியம் இல்ல பார்…” என்று கிண்டலாக அவன் கூற,

“இன்னொருத்தன் வாங்கிக் கொடுத்துதான் நாங்க யூஸ் பண்ணும்ன்னு கிடையாது… நான் சம்பாரிச்சு நான் வாங்குவேன்… இது என் அண்ணா வாங்கித் தந்தது… எனக்கு இந்தப் போன் போதும்ன்னு அவன் நினைச்சான்… அது தப்புக் கிடையாது… நீ உன்னோட வேலைய மட்டும் பார்…”

முகத்துக்கு நேராக அவள் கூறிய பதிலில் உள்ளுக்குள் வியந்து கொண்டான் ஷ்யாம். இது நிமிர்வென்று அவனது உள்மனது கூறினாலும், இவளுக்கு இவ்வளவு திமிர் ஆகாதென அவனது இன்னொரு மனது முரண்டியது.

அவளை மேலிருந்து கீழாகப் பார்த்தவன்,

“உடம்புல மட்டும் இல்ல… மண்டைலையும் கணம் ஜாஸ்தி தான் போல…” என்று சிரிக்க, அவள் முறைத்தாள்.

“அதைப் பற்றி நீ கவலைப்பட வேண்டிய அவசியம் இல்ல…” என்று அவள் முகத்தைத் திருப்பிக் கொள்ள,

“கொஞ்ச நேரம் உன்கிட்ட பேசிட்டு இருந்தா போதும்… பொழுது நல்லா போகுது மிர்ச்சி…” என்று அவன் கிண்டலாகக் கூற,

“என்னை என்னதான் நினைச்சுட்டு இருக்க?” கோபமாக அவள் கேட்க,

“ம்ம்ம்… நீயொரு லூசுன்னு நினைச்சுட்டு இருக்கேன்… ஓவர் வாய் மட்டும் தான்… ஆனா சரியான மொக்கை பீஸ் நீ… போதுமா?!” மிகவும் சீரியசாகச் சொல்வது போலவே சொல்ல,

“அட ச்சீ போடா…” என்று மீண்டும் திரும்பி நடக்க,

“சரிதான் போடி… உன்னோட போன் இப்ப குளிக்கப் போகுது…” என்று நீரின் மேல் ஆட்டியபடி அவன் காட்ட, திரும்பிப் பார்த்த அவளுக்குத் தவிப்பாக இருந்தது. காண்டாக்ட்ஸ் இருக்கிறதுதான் அதைக் காட்டிலும் அது அவளது தமையன் வாங்கிக் கொடுத்த பேசி. பைரவியிடம் சண்டை போட்டுத் தக்க வைத்துக் கொண்ட பேசி.

பைரவி இவளை செல்பேசி உபயோகப்படுத்தவே விட்டதில்லை. வெளியில் செல்லும்போது தொடர்பு கொள்ளத் தேவையான ஒன்று என்று கூறினாலும், “அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை… ஒரு ருபாய் காயின் பூத்ல இருந்து பேசு… இல்லைன்னா வீட்டுக்கு வந்து பேசு… படிக்கற பிள்ளைக்கு எதுக்கு செல்போன்னுங்கறேன்…” என்று நீட்டி முழக்கி மறுத்து விடுவார்.

எந்த விஷயமாக இருந்தாலும் பைரவியின் கடுமையான தரக் கட்டுப்பாட்டு விதிகளைத் தாண்டித்தான் உள்ளே நுழையவே முடியும். அப்படி இருக்கும்போது கார்த்தியாக இவள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து ஒரு வருடம் கழித்துப் பிறந்த நாளுக்கென வாங்கித் தருவேனென அடம் பிடித்து வாங்கித் தந்தது. அதிலும் இருப்பதிலேயே எளிமையாகத்தான் வாங்க வேண்டுமெனப் பைரவியின் கூடுதல் ஷரத்து வேறு.

அத்தனை கட்டுப்பாட்டையும் தாண்டி அவளது கையில், அந்தச் செல்பேசி வந்தபோது அவளடைந்த உவகைக்கு அளவே இல்லை.

அவளது முதல் பேசி. அவளுக்காகவே!

பிருந்தா கூடத் திட்டியிருக்கிறாள். “வாங்கினது தான் வாங்கினாங்க… ஒரு நல்ல போனா வாங்கிக் கொடுக்கலாம்ல… என்னடி இதுல பிரண்ட் கேமரா கூட இல்ல…” என்று மூக்கால் அழுதபோது கூட,

“அதனால என்ன செல்லோ… எனக்குன்னு ஒரு நம்பர் இருக்கு பார்… அது எனக்கு எவ்ளோ கிரேட் பீலிங் கொடுக்குது தெரியுமா?”

“ஏய் சும்மா போடி… வாய்ல நல்லா வந்துட போகுது…”

“அட செல்லோ… அம்மா என்ன என்னைக் கெடுக்கவா சொல்வாங்க? நல்லதுக்குத் தானே? நான் சம்பாரிச்சு சூப்பர் போன் வாங்கினாலும், இது என்னோட அண்ணா கொடுத்த என்னோட முதல் போன் டி…” என்று அந்தப் போனை அவ்வளவு ஆசையாக வைத்திருந்தாள்.

அந்தப் போனை தான் ஷ்யாம் தண்ணீரில் தூக்கி போட்டு விடுவதாகப் பயம் காட்டிக் கொண்டிருக்க, வேறு வழி இல்லாமல்,

“ஷ்யாம்… ப்ளீஸ்…” அவளது பிடிவாதத்தைக் கைவிட்டு இறங்கி வந்தாள்.

“ஷப்பா… இப்பதான் காதுக்குக் குளிர்ச்சியா இருக்கு…”

“ப்ளீஸ்… போனை குடுத்துடு ஷ்யாம்…”

“சாரி மிர்ச்சி… இந்தப் போன் எனக்குப் பிடிக்கவே இல்ல… ரொம்பப் பழைய மாடல்… ரொம்பக் கேவலமா இருக்கு…” வேண்டுமென்றே கிண்டலாக அவன் கூற,

“அது எவ்வளவு கேவலமா இருந்தாலும் என்னோடது! இட்ஸ் மையின்… என்னோட எந்தப் பொருளையும் நான் விட்டுக் கொடுக்கவே மாட்டேன்… என்னோடதுன்னா என்னோடது மட்டும் தான்…” அவ்வளவு உறுதி அவளது குரலில். இவள் மிகவும் பொசெசிவ் என்று உணர்ந்தான்.

“ஆஹா… அப்படியா?” என்று சிரித்தவன்,

“உனக்கு நான் லேட்டஸ்ட் ஐபோன் வாங்கித் தரேன் மிர்ச்சி…” என்று கண்ணடிக்க, அதன் அர்த்தத்தை உணர்ந்து கடுப்பாக அவனைப் பார்த்தவள்,

“ஆணியே புடுங்க வேண்டாம் போடா…” என்றவள், அவன் எதையோ செய்து கொள்ளட்டும் என்று திரும்பி நடக்க, அவசரமாக எழுந்தவன்,

“நான் ஐபோன் வாங்கித் தருவேனான்னு எத்தனை பேர் வெய்ட் பன்றாளுங்க தெரியுமா? என்னோட ஒர்த் உனக்குத் தெரியலடி…” என்று அவளோடு நடந்து கொண்டே அவன் வழக்கடிக்க, திரும்பி நின்று முறைத்தவள்,

“அந்த ஒர்த் தெரிஞ்சவங்களுக்குப் போய் நீ வாங்கிக்கொடு… ஈன்னு இளிச்சுட்டு உன் பின்னாடி வருவாங்க…” என்று கடுப்படிக்கவும், அவனுக்கு அந்த விளையாட்டு வெகுசுவாரசியமாக இருந்தது.

“அவங்க என் பின்னாடி வர்றதுக்கு நான் எதையுமே ஸ்பென்ட் பண்ணதில்லை டார்லிங்… என் கூட இருந்ததையே பெரிய விஷயமா நினைச்சு தான் வந்திருக்காங்க… நான் அவங்களுக்காக டைம் ஒதுக்குவேனான்னு காத்துட்டு இருந்திருக்காங்க… தெரியுமா?!” என்று இயல்பாகக் கூறிவிட, மிகவும் கசப்பான, அருவருப்பான ஒன்றை ஜீரணம் செய்ய முடியாமல் அவள் தவிப்பதை அவளது முகம் காட்டிக் கொடுத்தது.

“ச்சே…” என்று முகத்தை வெறுப்பாகத் திருப்பிக் கொண்டவள், அவனிடம் பதில் கூறாமல் போக முயல, அவளது கையை இறுக்கமாகப் பற்றி நிறுத்தினான்.

“இப்படிப் பார்க்காதேன்னு நான் முன்னாடியே சொல்லிருக்கேன்…” அவனது வார்த்தைகளில் எப்போது இவ்வளவு கடினம் வந்து சேர்ந்தது என்பதை அவளால் உணர முடியவில்லை. இந்நேரம் வரை விளையாட்டாகப் பேசியவன் இவனா என்று நினைக்க வைத்தான்.

அவனது கையை வலுகட்டாயமாகப் பிரித்து விட்டு, அவனது கோபத்தைச் சற்றும் கண்டுக்கொள்ளாமல் அவள் வீட்டிற்குள் செல்ல முயல, அவளோடு உள்ளே வந்தவன், கதவை மூடித் தாளிட்டான்.

“மஹா…” என்று அவன் அழைக்க, அவள் அவனைத் திரும்பிப் பார்க்கவில்லை. பார்க்கப் பிடிக்கவில்லை. அவன் கூறிய செய்தியில் உள்ளுக்குள் அவமானமாக இருந்தது. அந்தப் பெண்களைப் போல என்னையும் இவன் நினைக்கிறானா என்ற அவமானம். அதனால் அவனைப் பார்க்கவும் பிடிக்காமல் மேலே அறைக்குச் செல்ல முயன்றாள்.

மாடிப்படி ஏறப் போனவளை கையை நீட்டித் தடுத்து நிறுத்தப் புருவத்தை நெரித்துக் கொண்டு எரிச்சலாகப் பார்த்தாள்.

“ஏன் திடீர்ன்னு ஒரு மாதிரி பிஹேவ் பண்ற மிர்ச்சி?” அவனுக்குப் புரியவில்லை. அதுவரை வார்த்தைக்கு வார்த்தை வழக்கடித்துக் கொண்டு வந்தவள் தானே, ஏன் திடீரென இப்படி முகத்தைத் திருப்ப வேண்டும் என்பது புரியவில்லை.

“அது என் இஷ்டம் ஷ்யாம்… ஒவ்வொண்ணுத்துக்கும் உன்கிட்ட விளக்கம் சொல்லனும்ன்னு எனக்கு என்ன அவசியம் இருக்கு?”

“சொல்லணும்… எனக்குச் சொல்லித்தான் ஆகணும்…”

“நோ வே… அதுக்கு நான் ஆளில்லை…” என்று முறைத்தவள், அவனைத் தாண்டிச் செல்ல முயல, அவளை மேலும் வம்பிழுத்துப் பார்த்தால் என்னவெனத் தோன்றியது அவனுக்கு. அவனது அப்போதைய தேவை, அவள் அழ வேண்டும்.

“ஏய்… உனக்குப் பயமே வராதா?” என்று அர்த்தமறியா புன்னகையோடு அவன் கேட்க, கண்களை மூடித் திறந்தவள், கைகளைக் கட்டிக் கொண்டு,

“எதுக்கு வரணும்? ஏன் வரணும்?” என்று தெளிவாகக் கேட்கவும், அவனது புன்னகை விரிந்தது.

அவளது கண்களை ஆழமாகப் பார்த்தவன், அவளைப் பார்த்தவாறே நெருங்கி வர, அவள் அனிச்சையாகப் பின்னே நகர்ந்தாள்.

நகர்ந்தவளை சுவர் இடிக்க, அதற்கு மேல் நகர முடியாமல் நின்றாள். மனம் படபடவென அடித்துக் கொண்டாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமலிருக்க வெகுவாகப் பிரயத்தனப்பட்டாள். கண்டிப்பாக அவளைப் பயமுறுத்திப் பார்ப்பதுதான் அவனது குறிக்கோள் என்பதைப் புரிந்து வைத்திருந்தாள். எந்தச் சூழ்நிலையிலும் தன்னுடைய நடுக்கத்தை வெளியில் காட்டிக்கொள்ளவே கூடாது என்று உறுதியாகவும் இருந்தாள்.

அவள் சுவரை ஒட்டி நிற்க, அவளுக்கு நெருக்கமாக அவன் நின்றாலும், இருவருக்கும் இடையில் நல்ல இடைவெளி இருக்க, கைகள் இரண்டையும் அவளுக்கு இரண்டு புறமாகவும் சுவற்றில் அழுத்திப் பிடித்தவன்,

“யாருமே இல்லாத இடம்… நீயும் நானும் தான்… செம சிச்சுவேஷன்… உனக்குக் கொஞ்சம் கூடப் பயம் இல்லையா?” என்று கிசுகிசுப்பான குரலில் கேட்க, அவனை அத்தனை அருகில் பார்ப்பது ஒன்று தான் சங்கடமாக இருந்தது.

“அதைக் கொஞ்சம் தள்ளி நின்னு கேளேன் ஷ்யாம்…” அவளும் சிறிய குரலில் கூற, “ம்ஹூம்… முடியாது… நீ தான் எதுக்குமே பயப்படாத வீராங்கனையாச்சே… பதில் சொல்லு மிர்ச்சி…” புன்னகை மாறாத முகத்தோடு அவன் கேட்க, கண்களை இறுக்கமாக மூடித் திறந்தவள், கைகளைக் கட்டிக் கொண்டாள்.

அது அவளுக்குப் பாதுகாப்புணர்வை கொடுத்தது.

“ஷ்யாம்… என்னோட ஃபர்ஸ்ட் இயர்ல சீனியர்ஸ் எனக்கொரு டாஸ்க் கொடுத்தாங்க…” என்று அவள் இடைவெளி விட, அவன் அவளது முகத்தையே ஊன்றிக் கவனித்துக் கொண்டிருந்தான், புன்னகையோடு!

“ம்ம்ம்…”

“கெடாவர்ஸோட ஒரு நாள் நைட் முழுக்க ஸ்டே பண்ணனும்ன்னு… ஆக்சுவலி அது மார்ச்சுவரி…” என்று அவள் கூறவும் அவனது புருவம் உயர்ந்தது.

“நைட் முழுக்கத் திடீர் திடீர்ன்னு ஏதாவது சத்தம் வரும்… அப்படி இப்படின்னு நிறைய உண்டு… சீனியர்ஸ் என்ன பண்ணாங்கன்னா, என்னைப் பயமுறுத்த அந்தக் கெடாவர்ல ஒருத்தனா என்னோட சீனியரை படுக்க வெச்சுட்டாங்க… அவன் திடீர்ன்னு நைட் எந்திருச்சு உட்க்கார்ந்துட்டான்…” என்று சிறு புன்னகையோடு அவள் நிறுத்த, அவனது புன்னகை விரிந்து சிரிப்பானது… வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தான்.

“ஒரு செக்கன்ட் தான் எனக்குப் பக்குன்னு இருந்துது… உடனே சுதாரிச்சுட்டேன்…” என்று அவள் இடைவெளி விட்டவள், அவனைத் தீர்க்கமாகப் பார்த்து,

“அப்படிப் பிணத்துக்குப் பக்கத்துல கூடப் பயமே இல்லாம இருந்திருக்கேன் ஷ்யாம்…” என்று முடிக்க, சிரித்துக் கொண்டே அவளைப் பார்த்தவன்,

“பிணத்துக்குப் பக்கத்துல இருந்திருக்கலாம் டார்லிங்… அது ஒண்ணுமே பண்ணாது… ஆனா இந்த ஷ்யாம் அப்படி இல்லையே…” என்றவன் அவளை இன்னமும் நெருங்கினான்.

“ஷ்யாம்… தள்ளி நில்லு…” எச்சரிக்கும் குரலில் அவள் கூற,

“ம்ஹூம்… முடியாது… நான் கேட்டதுக்கு ரீசன் சொல்லு…” என்றவன், அவளை இன்னமும் நெருங்கி அவளது காதில் கிசுகிசுப்பாகக் கூற, அவளுக்கு உள்ளுக்குள் சர்வாங்கமும் நடுங்கியது. அவன் செவிக்கருகில் கிசுகிசுத்ததால் உடல் சிலிர்த்தது. அவனது மூச்சுக் காற்றுத் தீண்டியதில் பிடறியோரம் மெல்லிய வெம்மை படர்ந்தது.

“நீ தள்ளி நின்னு கேளு…” என்றவள், அவனைத் தள்ளி நிறுத்த முயன்று தோற்றாள்.

“நான் சொல்றதை கேட்கலைன்னா என்ன பண்ணுவேன்னு ஒரு சாம்பிள் தெரிஞ்சுக்க மிர்ச்சி… இப்ப நீ ரீசனை சொல்லு…” ஹஸ்கி வாய்ஸில் அவளிடம் கிசுகிசுத்தவனை எரிச்சலாகப் பார்த்தாள்.

“உன்னைப் பொறுத்தவரைக்கும் பொண்ணுங்கன்னா கிள்ளுக்கீரை தான் இல்லையா? உனக்குப் பாதபூஜை பண்ண ஆள் இருக்குன்னா அது உன்னோட… பார்க்கற பொண்ணுங்க எல்லாம் அப்படியே உனக்குப் பூஜை பண்ணனும்ன்னு நினைக்காதே… உன்னைத் தேடி வந்தாங்கன்னா, காரணம் பணம். அது இல்லைன்னா நீ சீரோ ஷ்யாம்! அந்தப் பணம் இல்லாம ஒரு நாள் இருந்து பார்… யார் உன்னைத் தேடி வராங்கன்னு நானும் தான் பார்க்கறேனே…” என்று கடுகடுத்து விட, அவளது அந்தக் கோபத்திற்கான பிரதிபலிப்பே இல்லாமல் அதே புன்னகையோடு தள்ளி நின்று கைகளைக் கட்டிக் கொண்டான்.

“பணத்தைக் காட்டி வரவைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை மிர்ச்சி… பணத்தை விட அதிகமான குவாலிபிகேஷன் என்கிட்டே இருக்கு… அதைப் பற்றின அறிவு கண்டிப்பா உனக்கு இருக்காதுன்னு நம்பறேன்…” என்று சிரித்தவன், “தெரிஞ்சுக்கனும்ன்னா சொல்லு… சொல்லித் தரலாமான்னு யோசிக்கறேன்…”

புன்னகை மாறாமல் அவன் கூறிய வார்த்தைகள் அவளுக்குள் பயங்கரமான எரிச்சலைக் கிளப்பி விட,

“நான் பிணத்துக்குப் பக்கத்துல கூடப் பயமில்லாம இருந்திருக்கேன் ஷ்யாம்…” என்றவள், “என்னைப் பொறுத்தவரை அது வேற, நீ வேறல்ல…” என்று கூறிவிட்டு சரசரவென மாடிப்படியில் ஏறிச் சென்றாள்.

அவள் சென்றதை உணர்வுகளற்ற முகத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான் ஷ்யாம்!